திருப்புன்கூர்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , முனிவன் ஒருவன் உன்னை அடைக் கலமாக அடைய , அவனைக் காத்தல் நிமித்தமாக , அவன் மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான் , உனது அவ்வாற்றலையறிந்து , என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின் , என்தந்தையாகிய நீ , ` இவன் என் அடியான் ; இவனைத் துன்புறுத்தாதீர் ` என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

` என்னை ஏன்றுகொண்டருள் ` என்பது குறிப்பெச்சம் . ` உன்னை ` என இரண்டனுருபும் , ` அடைக்கலமாக ` என ஆக்கமும் வரு விக்க . ` ஆருயிர் ` என்றது , கூற்றுவனது நிலைக்கு இரங்கிய இரக்கம் பற்றி வந்தது . ` வவ்வினாய்க்கு அடியேன் ` எனக்கூட்டுக . ` வவ்வினாய்க்கு ` என்றதனால் , வன்மை , அங்ஙனம் வவ்விய தனையே குறித்ததாயிற்று , ` வண்மை ` எனப் பாடம் ஓதுவாரும் உளர் . மற்று , அசைநிலை . ` நலியாதீர் ` என்பது இசையெச்சம் . எண்ணுதற் கருவியாகிய சிந்தையை எண்ணப்படுதலையுடைய காரியமாகிய விலக்குதலாக ஒற்றுமைப்படுத்தோதினார் . இது , மார்க்கண்டேய முனிவருக்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , இவ்வூரிலுள்ளவர் , ` உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று ; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம் ; எங்களை உய்யக்கொள்க ` என்று வேண்ட , ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை , அந் நிலைமாறி , எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெரு வெள்ளத்தை நீக்கி , அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

சொற்சுருக்கங்கருதி இவ்வாறோதினாரேனும் , எங்கும் மாமழை பெய்து பெருவெள்ளம் தோன்றியும் விடாதாக , இம் மழையைத் தவிர்ப்பின் மற்றும் பன்னிரு வேலி தருவோம் என்று வேண்ட ` அங்ஙனமே தவிர்த்து , இரண்டு பன்னிரு வேலிகளைக் கொண்டருளும் , என்றலே பொருளாதலுணர்க . ` பரந்த ` என்னும் வினைப் பெயரின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . அப்பெயர் , ` பெய்யும் ` என்னும் பயனிலை கொண்டது . இஃது இத்தலத்தில் உள்ளார்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது . இப்பெருமானை இவ்வாறு வேண்டித் திருவருள் பெற்று , தாம் நேர்ந்தவாறே இரண்டு பன்னிரு வேலிகளை இறைவற்குக் கொடுத்தவர்களில் முதல்வர் , ` ஏயர்கோன் கலிக்காம நாயனார் ` என்பதனை வருகின்ற திருப்பாடலால் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோன்உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்த சண்டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

பூதகணங்கட்குத் தலைவனே , அழகிய சோலை களையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நீ , நல்ல நிலங்கள் பன்னிருவேலி கொடுத்த ஏயர்கோன் அடைந்த , துன்பத்தைச் செய்யும் பெரிய நோயை இப்பொழுது தீர்த்ததனையும் , முன்பு பசுக்களது மடியில் நிறைந்திருந்த பாலைக் கறந்து ஆட்ட அதனைப் பொறாது அங்ஙனம் ஆட்டப்பட்ட அழகிய வெண் மணலாலாகிய பெருமான்மேற் சென்ற தந்தையது பாதங்கள் துணி பட்டு விழுமாறு வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு உனது முடியின் மேற் சூடியுள்ள கொன்றைமாலையை எடுத்துச் சூட்டியருளியதையும் அறிந்து வந்து , அடியேன் , உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

` உற்ற ஏத இரும்பிணி ` எனவும் சென்றதாள் எனவும் இயையும் . மேலைத் திருப்பாடலில் , எல்லாம் இனிது விளங்க அருளி னாராகலின் , ஈண்டு , ` ஈரறு வேலி ` என்றே அருளிப் போயினார் . ` வேலி ஏயர்கோன் ` என்றது , ` வேலியைக் கொடுத்த ஏயர்கோன் ` என விரியும் . வரலாறு கூறுதலின் , ` சிவன் ` என்று வேறாக அருளினார் . ஆளி - ஆளுதலையுடையவன் . இது , சண்டேசுர நாயனார்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானும்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

பொன்போலும் , திரளாகிய அழகிய தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளி யிருப்பவனே , ` நல்ல தமிழைப் பாட வல்ல ஞானசம்பந்தனும் , நாவுக் கரையனும் , நாளைப்போவானும் , சூதாடுதலை நன்கு கற்ற மூர்க் கனும் , நல்ல சாக்கியனும் , சிலந்தியும் , கண்ணப்பனும் , கணம் புல்லனும் ` என்ற இவர்கள் குற்றமான செயல்களைச் செய்யவும் , அவைகளைக் குணமான செயலாகவே கருதிய உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து , வந்து , அடியேன் , உனது ஒலிக்கின்ற கழலை யணிந்த திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

` குற்றம் ` என்றது , உலகத்தார் கருத்து வகைபற்றி , அவ்வாற்றால் ஞானசம்பந்தர் செய்தது , பாண்டியன் சமணரைக் கழு வேற்றியதனை விலக்கா திருந்தது . நாவுக்கரசர் செய்தது , சமண சமயம் புக்கு முதல்வன் திருவருளை இகழ்ந்து நின்றது . நாளைப் போவார் செய்தது , தில்லை நகருள்ளும் , திருக்கோயிலுள்ளும் புக முயன்றது . மூர்க்கர் செய்தது , சூதாடியது . சாக்கியர் செய்தது , இலிங்கத் திரு மேனியைக் கல்லால் எறிந்தது , சிலந்தி செய்ததுவாய்நூலால் இலிங்கத் தின்மேற் கூடு வேய்ந்தது . கண்ணப்பர் செய்தவை , செருப்புக் காலை இலிங்கத் திருமேனியின் முடியில் வைத்ததும் , வாய்நீரை அதன்மேல் உமிழ்ந்ததும் , எச்சிற் படுத்த இறைச்சியைப் படைத்ததும் . கணம்புல்லர் செய்தது , திருக்கோயிலில் தம் தலைமயிரை விளக்கென்று எரித்தது . இவர் தாம் இவற்றை , மனத்துக்கண் மாசிலராய் அருள்வழியானும் , அன்புவழியானும் செய்தமையை உலகர் அறிய மாட்டாராக , நீ அறிந்து அருள்செய்தனை என்று அறிந்து உன்னை வந்து அடைந்தேன் என்றவாறு . இதனானே , தாம் இறைவனைப் பரவையார் பால் தூது செல்லுமாறு இரந்தமையும் குற்றமாகாமைக் காரணமும் புலப் படுத்தவாறாயிற்று . மேலைத் திருப்பாடலில் சண்டேசுர நாயனாருக்குச் செய்த திருவருளை நினைந்தருளி , அன்ன வாகப் பிற நாயன்மார்க்குச் செய்த திருவருட்டிறங்களை , இத்திருப் பாடலில் நினைந்து அருளிச் செய்தார் என்க . ` சிலந்தி ` என்றதும் , கோச்செங்கட்சோழ நாய னாரையே யாதல் அறிக . ` என்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று . திணைவிராய் எண்ணப்பட்டன , பன்மை பற்றி , ` இவர்கள் ` என உயர்திணை முடிபு கொண்டது . ` பொன் ` என்னும் உவமை சிறப்புப்பற்றி வந்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை யுண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , தேவர்கள் , அழகிய பெரிய மலையை மத்தாக நாட்டி , கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்து , அதில் அமுதந் தோன்றாது பெருவிடந் தோன்றியதைக் கண்டு அவர்கள் பெரிதும் ஓடிவந்து அடைய அவர்கட்கு உதவுதல் கருதி , கருமை நிறைந்த , அக் கடல் விடத்தை உண்டு , அஃது என்றும் நின்று விளங்குமாறு கண்டத்தே வைத்த பேரருளாளனே , நீ செய்த இந் நல்ல செய்கையையறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந் தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

செய்யுளாகலின் , ` அவர் ` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது . ` இரிய ` என்றது , அதன் காரியமுந் தோன்ற நின்றது . இது , நஞ்சினைஉண்டு தேவர்களைக் காத்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளிச்செய்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்க மில்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை
யர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

வளவியசோலையையுடைய திருப்புன்கூரில் எழுந் தருளியிருப்பவனே , இயக்கரும் , கின்னரரும் , இயமனும் , வருணனும் . அக்கினியும் , இயங்குகின்ற வாயுவும் , சூரியனும் , சந்திரனும் , வசுக்களும் , ஏனைய தேவர்களும் , அசுரர்களும் , மற்றும் அறியாமை நீங்கின புலி , குரங்கு , பாம்பு முதலியனவும் உனது திருவடியை மறத்தல் சிறிதும் இன்றி வழிபட்டுப் பெற்ற அரிய திருவருளை யறிந்து அடியேனும் , தடுமாற்றம் சிறிதும் இன்றி உன் திருவடியை அடைந் தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

` யமனொடு ` என்பதும் பாடம் . ` இயங்கு ` என்றதனை , ` வளி ` என்றதனோடு கூட்டுக . ` மயக்கமில் ` என்றதனை அஃறிணைக்கே ஓதினார் , அவைகட்கு அவ் வியல்பு வாய்த்தல் அரிதாதல் நோக்கி . ` வானவர் தானவர் ` என்பன , செய்யுள் நோக்கிப் , பின் நின்றன . ` அர்ச்சித்தார் ` என்றது முற்றெச்சம் . பன்மை பற்றி உயர்திணையாற் கூறினார் . இங்குக் கூறப்பட்டோர் பலரும் சிவபெருமானை வழிபட்டுத் தாம்தாம் வேண்டிய பயனைப் பெற்றமை , புராணங்கள் பலவற்றாலும் , தலங்கள் பலவற்று ஐதிகங் களாலும் பலரும் நன்கறிந்தது . இது , வழிபட்டோர் பலர்க்கும் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
பொழில்கொளால் நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்
தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

தூயவனே , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நற்பொருள்களை உள்ளடக்கிய பெரிய செவிகளையுடைய முனிவர்களுக்கு , அன்று சோலைகளைச் சூழக்கொண்ட ஆலமரத்தின் கீழிருந்து அறத்தைச் சொல்லியும் , அருச்சுனனுக்கு அன்று பாசுபதத்தைக் கொடுத்தும் பகீரதன் வேண்டிக்கொள்ள அவன்பொருட்டு , ஆரவாரித்து வீழ்ந்த நீர்வடிவாகிய கங்கையாளை முன்பு உனது சடையில் , அடக்கியும் அருள்செய்தாய் ; அவற்றை யெல்லாம் அறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

` போர்த்த ` என்றது ` பொதிந்த ` என்னும் பொருட்டாய் நின்றது ; அதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது . கேள்வியது பெருமை , செவிகள்மேல் ஏற்றப்பட்டது . ` ஆடையைப் போர்த்து அரு மறையை உபதேசிக்கப்பட்ட செவி ` என்றுமாம் . ` அன்று ` என்ற தனை , ` பார்த்தனுக்கு ` என்றதற்குங் கூட்டுக . ஈண்டுக் கூறப்பட்டவை கட்குக் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது . இது , முனிவர் நால்வர்க்கும் , அருச்சுனனுக்கும் , பகீரதனுக்கும் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவருள் செய்த
தேவ தேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

தேவதேவனே , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நீ , முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக் கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு , மற்றொருவனை , நீ , கரிந்த காடே அரங்கமாக , உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும் படி அருள்செய்ததை யறிந்து வந்து . அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

` தாரகாக்கன் , கமலாக்கன் , வித்தியுன்மாலி ` என்னும் தலைவர் உட்படத் திரிபுரத்தில் இருந்தவர் அனைவரும் புத்தன் போதனையால் சிவநெறியைக் கைவிடவும் , ` சுதன்மன் , சுசீலன் , சுபுத்தி ` என்னும் மூவர்மட்டும் முன்போலவே சிவநெறியில் மாறாது நின்று சிவபிரானிடத்து அன்புபூண்டு ஒழுகினமையால் , சிவபெருமான் அவர்களைமட்டும் அழியாது காத்து , மேற் சொல்லியவாறு திருவருள் செய்தனன் என்க . இதனை ` மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார் ` ( தி .1 ப .69. பா .1) எனவும் , ` திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த தலையானை ` ( தி .6 ப .60 பா .9) எனவும் , ` உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற ` ( தி .8 திருவா . திருவுந்தி .4) எனவும் ஆசிரியர் அனைவரும் சிறந்தெடுத்தோதிப் போற்றுமாறு காண்க . இவ்வரலாறு , காஞ்சிப் புராணத்து முப்புராரிக் கோட்டப் படலத்துள் விளங்கக் கூறப்படுதல் காண்க . திரிபுரத்தலைவர் , ` தாரகாக்கன் , கமலாக்கன் , வித்தியுன்மாலி ` என்போர் எனவும் , திரிபுரத்தில் உய்ந்த மூவர் , ` சுதன்மன் , சுசீலன் , சுபுத்தி ` என்போர் எனவும் பிரித்தறிந்து கொள்க . சிவபிரான் திருக்கோயில்களில் துவார பாலகர்களாய் நிற்பவர் இவருள் இருவரே என்பது இத் திருப்பாடலால் இனிது விளங்குதல் காண்க . இவ்வரலாறு , ` உலகிற்குத் தீங்குகள் நேரினும் , சிவபிரானைப் பற்றிநிற்பாரை அவை ஒன்றுஞ் செய்யா ` என்பதனை இனிது விளக்கும் . இது , முப்புரத்துள் வாழ்ந்த மூவர்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத்
தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

பொழிப்புரை :

வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நூலறிவினால் மிக்க ஆறுவகைப் பட்ட சமயங்களில் உள்ள அவரவர்க்கும் அச்சமயத்திற்றானே , அரிய திரு வருளைச் செய்தும் , அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை , அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து , பின்பு அவன் பாடிய , உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு , அழகிய வாளோடு , மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

சமயங்களை ` ஆறு ` என்றல் தொன்றுதொட்ட வழக்கு . இவைபற்றிக் கூறப்படுவன பல ; அவற்றை ஆறாந்திருமுறைக் குறிப் பிற் காண்க . ` யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர் ` - சிவஞானசித்தி . சூ .2.25 என்றவாறு , எல்லாச் சமயங்களிலும் இருந்து அருள்பவன் சிவ பெரு மானேயாகலின் , ` அறுவகைச் சமயத்து அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து ` என்றருளினார் . ` அவ்வவர் ` என்றது , ` அவ ரவருக்கு ஏற்ற பெற்றியான் ` என்றவாறு , ` சமயம் அவரவர்க்கு ` என்பது பாடம் அன்று . ` புரிந்து ` என்ற எச்சம் எண்ணுப் பொருட் டாகலின் , இவ்வாறு உரைக்கப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானை
உம்ப ராளியை உமையவள் கோனை
ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன அருந்தமி ழைந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை யிலரே

பொழிப்புரை :

அசைதலையுடைய பெரிய யானையினது தோலை உடையவனும் , காமனை எரித்த ஒரு கண்ணை உடையவனும் , செம் பொன்னே போல்வதாகிய அழகிய மேனியை உடையவனும் , தேவர் களை ஆள்பவனும் , உமையவளுக்குத் தலைவனும் ஆகிய , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் மனத்தால் விரும்பி , அங்ஙனம் விரும்பிய அவ்வன்பானே சொல்லிய அரிய இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர் , நீங்குதற்கரிய வினைகளை இல்லாதவராவர் ; இது திண்ணம் .

குறிப்புரை :

ஈற்றில் நிற்கற்பாலதாய , ` செழும்பொழில் திருப்புன் கூருளானை ` என்பது , செய்யுள் நோக்கி இடைநின்றது . ஏகாரம் , தேற்றம் .
சிற்பி