திருவாழ்கொளிபுத்தூர்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

தலைக்க லன்தலை மேல்தரித் தானைத்
தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்
கொலைக்கையா னையுரி போர்த்துகந் தானைக்
கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை
அலைத்தசெங் கண்விடை ஏறவல் லானை
ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

தலையாகிய அணிகலனைத் தலையில் அணிந்த வனும் , தன்னை எனக்கு நினைக்குமாறு தருபவனும் , கொலைத் தொழிலையும் , கையையும் உடைய யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனும் , கூற்றுவனை உதைத்த , ஒலித்தல் பொருந்திய கழலை யணிந்த திருவடியை உடையவனும் , எதிர்த்தவரை வருத்தும் சிவந்த கண்களையுடைய இடபத்தை ஊர வல்லவனும் ஆகிய , பயிர்கள் தம் தலைமேற்கொண்ட செந்நெற்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , அவன் ஆணை வழியே அவனுக்கு அடிமையானேனாகிய அடிநாய் போன்ற யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` எனக்கு ` எனற்பாலது , ` என்னை ` என உருபு மயக்க மாய் வந்தது . ` குரை ` முதனிலைத் தொழிற்பெயர் . சிவபெருமானுக்கு விடை , அறக்கடவுளும் , திருமாலும் ஆதலின் , தீயவரை அலைத்தல் இருவழியும் ஏற்றல் அறிக . இவற்றைச் செலுத்துதல் பிறரால் ஆகாமை யறிக . ` ஆணை யால் ` என்ற மூன்றாவது ` அடியேன் ` என்ற இறந்த கால வினைக் குறிப்புப் பெயரைக் கொண்டது . அடி நாய் - அடிக்கீழ்க் கிடக்கும் நாய் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

படைகளுள் சூலத்தைப் பழக வல்லவனும் , தன்னை நினைவாரது உள்ளத்தில் பரவி அகப்படுத்துக் கொள் பவனும் , வாயில்களில் நின்று ஏற்கும் பிச்சைக்கு விரும்புதலைச் செய்பவனும் , காமனது உடலை அமைப்பு அழியச் செய்தவனும் , கங்கையைச் சடையில் தங்கும்படி வைத்தவனும் , தண்ணிய நீரையுடைய மண்ணியாற்றின் கரையில் இருப்பவனும் , எல்லாத் தகுதிகளையும் உடையவனும் ஆகிய , நீர்மடைகளில் நீலோற்பல மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` படைக்கண் ` என்ற கண்ணுருபு , ` உள் ` என்னும் பொருளதாய் வந்தது . சூலம் முத்தலை வேலாதலின் , ஏனைய படைகளிலும் சிறந்தது என்க . ` பாவிக்கொள்ளுதல் ` என்பது , மூடிக்கொள்ளுதல் , சுற்றிக் கொள்ளுதல் முதலியன போல்வது . ` இச்சை காதலித்தான் ` என்றது , ` அணியலும் அணிந்தன்று ` ( புறம் - கடவுள் வாழ்த்து ) என்றாற்போல நின்றது . தாழ்தல் - தங்குதல் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

வெந்த நீறுமெய் பூசவல் லானை
வேத மால்விடை ஏறவல் லானை
அந்தமா திஅறி தற்கரி யானை
ஆறலைத் தசடை யானைஅம் மானைச்
சிந்தை என்தடு மாற்றறுப் பானைத்
தேவ தேவன்என் சொல்முனி யாதே
வந்தென்உள் ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

வெந்த சாம்பலை உடம்பிற் பூச வல்லவனும் , வேத மாகிய சிறந்த விடையை ஊர வல்லவனும் , முடிவும் முதலும் அறிதற்கு அரியவனும் , ஆற்றுநீர் மோதுகின்ற சடையை உடையவனும் , பெரி யோனும் , எனது மனக் கலக்கத்தைக் களைபவனும் , தேவர்களுக்குத் தேவனும் , யான் இகழ்ந்து சொல்லிய சொல்லை வெறாமல் வந்து என் உள்ளத்திலே புகுந்து நிற்பவனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

வெந்த நீற்றை மெய்யிற் பூசுதலாவது உலகத்தின் ஆற்றலைத் தாங்குதலாகலானும் , வேதத்தை ஏறுதலாவது , உயிர் கட்குச் செய்வன தவிர்வனவற்றை அறிந்து அறிவித்தலாகலானும் இவை பிறரால் ஆகாமை அறிந்து கொள்க . வேதம் , சிவபெரு மானுக்குக் குதிரை , சிலம்பு முதலியனவாய் அமைந்தமைபோல , விடையாக அமைந்தமை இவ்விடத்துப் பெறப்படுகின்றது . கலக்க மாவது , உலகியலிடத்தும் , பிற தேவரிடத்தும் செல்லுதல் . ` சொல் ` என்றது , ` பித்தன் ` என்றதனை . ` தேவதேவன் ` என்புழியும் இரண்ட னுருபு விரிக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்
தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்
படங்கொள்நா கம்மரை யார்த்துகந் தானைப்
பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
நடுங்கஆ னையுரி போர்த்துகந் தானை
நஞ்சம்உண் டுகண் டங்கறுத் தானை
மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

பெரிய கைகளால் மலர்களை எடுத்துத் தூவிக் கும்பிடுகின்றவர்கள் , பிறவிடத்துச் செல்லாது , தன் திருவடியிடத்தே செல்லுமாறு செலுத்த வல்லவனும் , படத்தை உடைய பாம்பை அரை யில் விரும்பிக் கட்டியுள்ளவனும் , முன்னர் விளங்கும் பற்களை யுடைய வெள்ளிய தலையில் உண்ணுதல் உடையவனும் , தன் தேவியும் நடுங்கும்படி யானைத் தோலை விரும்பிப் போர்த்துள்ள வனும் , நஞ்சினை உண்டு கண்டம் கரியதாகியவனும் , மாதொரு பாகனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` தடங்கை ` என விதந்தது , அவை தரப்பட்டது . இதன் பொருட்டே யாயினமையை முடித்தற்கு , ` தன்னடிக்கு ` என்றது , உருபு மயக்கம் . ஏகாரம் பிரிநிலை . ` செல்லுமாறு ` என்றதன்பின் , ` செலுத்த ` என்பது வருவிக்க . இனி ` செலுத்துமாறு ` என்னும் வினைதானே , ` செல்லுமாறு ` எனத் தொக்குத் தன்வினையாய் நின்றது எனலுமாம் . ` பல்லின் ` என எடுத்தோதினமையால் , அதன் விளக்கம் பெறப் பட்டது . ` தேவியும் ` என்பது ஆற்றலாற் கொள்ளப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

வளைக்கைமுன் கைமலை மங்கை மணாளன்
மார னாருடல் நீறெழச் செற்றுத்
துளைத்தவங் கத்தொடு தூமலர்க் கொன்றை
தோலும்நூ லும்துதைந் தவரை மார்பன்
திளைக்குந் தெவ்வர் திரிபுர மூன்றும்
அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

வளையை அணிந்த முன் கையையுடைய மலை மகளுக்கு மணாளனும் , மன்மதனது அரிய உடம்பு சாம்பலாய் ஒழியு மாறு அழித்தவனும் , துளைசெய்யப்பட்ட எலும்பும் , தூய கொன்றை மலரும் , தோலும் , நூலும் நெருங்கிய , கீற்றுக்களையுடைய மார்பை யுடையவனும் , வானத்தில் திரிகின்ற மூன்று அரண்களும் , அதன்கண் வாழ்ந்து இன்பம் நுகர்கின்ற பகைவர் மூவரும் , அவரைச் சார்ந்த அசுரரும் , அவர்தம் பெண்டிரும் , பிள்ளைகளும் வெந்தொழியுமாறு வளைத்த வில்லையுடையவனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

ஏனைய திருப்பாடல்களிற்போல , இத்திருப்பாடலி லும் , ` மணாளன் ` முதலிய பெயர்களிலெல்லாம் , இரண்டனுருபு விரிக்க . ` செற்று ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது . கோத்து அணிதற்பொருட்டு , எலும்பு , துளையிடப்படுவதாயிற்று . தோல் , பூணூலில் முடியப்படுவது ; இது , பிரமசாரி யாதலை உணர்த்தும் . ` மூன்றும் ` எனப் பின்னர் வருகின்றமையின் , ` திரிபுரம் ` என்றது வினைத்தொகை . ` திரியும் முப்புரம் ` எனப்பின்னரும் ( தி .7 ப .61 பா .3) வரும் . இவ்விருவகையானும் முப்புரச் செய்தி , திருமுறைகளிற் பயின்று வருதல் அறிந்துகொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

திருவின் நாயக னாகிய மாலுக்
கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவி னானைஒன் றாஅறி வொண்ணா
மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
செருவில் லேந்திஓர் கேழற்பின் சென்று
செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

திருமகளுக்குக் கணவனாகிய திருமாலுக்குப் பல பொழுதுகளிற் பல திருவருள்களைச் செய்த , தேவர் தலைவனும் , உருவம் உடையவனும் , அவ்வுருவம் ஒன்றாக அறியப்படாது , அள வற்றனவாய் அறியப்படுங் கடவுளும் அருச்சுனனுக்கு அருள்செய்தற் பொருட்டு போருக்குரிய வில் ஒன்றை ஏந்திக்கொண்டு , ஒரு பன்றியின்பின்னே , சிவந்த கண்களையுடைய வேடனாய்ச் சென்றவ னும் , என்னிடத்திலும் வந்து பொருந்தியுள்ளவனும் ஆகிய , திரு வாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

திருமாலுக்கு எல்லாப் பிறப்புக்களிலும் , இராம கிருட்டின பிறப்புக்களில் பல பொழுதுகளிலும் பல்வேறு நலங்களை அருள் செய்தமையின் , ` அருள்கள் செய்திடும் தேவர்பிரான் ` என்றார் . அவ்வாறு செய்த திருவருட் செயல்களை எல்லாம் சிவ புராணங்களிலும் , இராமாயண பாரத இதிகாசங்களிலும் இனி துணர்ந்துகொள்க . ஈண்டு விரிக்கிற் பெருகும் . ` உருவினானை ` என்றதன்பின் , ` அவ்வுரு ` என்பது வருவிக்க . ` சென்று ` என்னும் எச்சம் , எண்ணின்கண் வந்தது . ` என்னொடும் ` என்னும் உம்மை , ` அருச்சுனனிடம் சென்றதேயன்றி ` என , இறந்தது தழுவி நின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

எந்தை யைஎந்தை தந்தை பிரானை
ஏதமா யவ்விடர் தீர்க்க வல்லானை
முந்தை யாகிய மூவரின் மிக்க
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைக்
கந்தின்மிக் ககரி யின்மருப் போடு
கார கில்கவ ரிம்மயிர் மண்ணி
வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

என் தந்தையும் , என் தந்தை தந்தைக்கும் தலைவ னும் , துன்பத்திற்கு வழியாகிய இடையூறுகளைப் போக்க வல்லவனும் , யாவர்க்கும் முன்னோராகிய மும்மூர்த்திகளினும் மேலான மூர்த்தியும் , தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய , மண்ணியாறு வழியாக , தறி யிடத்தில் நின்று சினம் மிகுகின்ற யானையின் தந்தங்களும் , கரிய அகிற் கட்டைகளும் , கவரிமானின் மயிர்களும் வந்து வந்து வீழ்கின்ற திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல் பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

` முந்தை ` என்னும் இடைச்சொல் பெயர்த்தன்மைத் தாய் , அதன்கண் தோன்றியவரை உணர்த்திற்று . ` சிவபிரான் , மூவரின் மேலானவன் ` என்பது மேலே காட்டப்பட்டது . ( தி .7 ப .38 பா .4) தோற்றம் இன்மையின் , அஃது அறியப்படாதாயிற்று ; ` மண்ணியால் ` என உருபு விரிக்க . ` மண்ணி - அலங்கரித்து ` என்பாரும் உளர் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

தேனை யாடிய கொன்றையி னானைத்
தேவர் கைதொழுந் தேவர் பிரானை
ஊன மாயின தீர்க்கவல் லானை
ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்
கான வானையின் கொம்பினைப் பீழ்ந்த
கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய
வான நாடனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

தேனில் மூழ்கிய கொன்றைமலர் மாலையை உடையவனும் , தேவர்கள் வணங்கும் தலையாய தேவனும் , குறையாயவற்றை எல்லாம் போக்க வல்லவனும் , ஒற்றை எருதை உடையவனும் , நெற்றிக்கண்ணை உடையவனும் , காட்டில் வாழும் யானையின் கொம்பை ஒடித்த கள்ளத்தன்மையுடைய சிறுவனுக்கும் காண அரிதான பொருளாய் உள்ளவனும் , வானுலகத்தில் வாழ் பவனும் ஆகிய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

திருமால் கண்ணனாய் இருந்தபொழுது , தன்னைக் கொல்லும் பொருட்டு , ` கஞ்சன் ` என்னும் மாமன் நிறுத்திவைத்த , ` குவலயாபீடம் ` என்னும் யானையை , அதன் கொம்பைப் பிளந்து அழித்த வரலாற்றைப் பாகவத த்துட் காண்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

காளை யாகி வரையெடுத் தான்றன்
கைக ளிற்றவன் மொய்தலை யெல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

காளைபோன்று கயிலாயத்தைப் பெயர்த்தவனாகிய இராவணனது கைகள் முரிந்து , நெருங்கிய தலைகளினின்றும் மூளை வெளிப்படுமாறு தனது கால்விரல் ஒன்றை ஊன்றிய கடவுளும் , தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய , பாளையையுடைய தென்னை மரத்தினது நெற்றுக்கள் விழ , சிவந்த கண்களையுடைய எருமைகள் , நெருங்கிச் சேறுசெய்ய , எங்கும் வாளை மீன்கள் துள்ளுகின்ற வயல் களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

காளை , சினத்தினால் மண்ணைக் கோட்டினாற் குத்து மாகலின் , கயிலையை எடுத்த இராவணனுக்கு அஃது உவமை யாயிற்று . ` காளையாகி ` என்னும் , ஆக்கம் , உவமை குறித்து நின்றது , ` பாளைத்தெங்கின் ` என்னும் தகரமெய் , தொகுத்தலாயிற்று . ` சேடெறிந்து ` என்றதனை , ` சேடெறிய ` எனத் திரிக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

திருந்த நான்மறை பாடவல் லானைத்
தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்
பொருந்த மால்விடை ஏறவல் லானைப்
பூதிப் பைபுலித் தோலுடை யானை
இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்
ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்
மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் செவ்வனே பாட வல்லவனும் , தேவர்க்கும் அறிதற்கு அரியவனும் , பெரிய விடை யினை ஏற்புடைத்தாமாறு ஏற வல்லவனும் , திருநீற்றுப் பையும் , புலித் தோலுமாகிய இவற்றையுடையவனும் , இருந்து உண்கின்ற சாக்கிய ரும் , நின்று உண்கின்ற சமணரும் இகழ நிற்பவனும் , அரிய உயிர்கட் கெல்லாம் அமுதம் போல்பவனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

நின்று உண்ணுதல் சமணர்க்குரிய நோன்பாயினமை போல , இருந்து உண்ணுதல் சாக்கியர்க்குரிய நோன்பாயிற்றில்லை யாதலின் , ` இருந்துண் ` என்றது , ` உண்டு கிடந்து வாளா மாய்தலே யன்றி , எம் பெருமானை இகழ்ந்து குற்றத்தின் வீழ்ந்தொழிகின்றார் ` என , அவரது உணவின் இழிபு கூறியவாறாம் என்க . உயிர்களை , மலமாகிய நஞ்சின் வேகத்தைக் கெடுத்து உய்யக்கொள்பவனாதலின் , ` ஆருயிர்க்கெல்லாம் மருந்தன்னான் றனை ` என்றும் , ` அவனினும் இனியதொரு பொருளும் உண்டோ ` என்பார் , ` மறந்து என் நினைக்கேன் ` என்றும் அருளிச்செய்தார் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

மெய்யனை மெய்யில் நின்றுணர் வானை
மெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்
பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்
புனித னைப்புலித் தோலுடை யானைச்
செய்ய னைவெளி யதிரு நீற்றில்
திகழு மேனியன் மான்மறி யேந்தும்
மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

பொழிப்புரை :

என்றும் ஓர் அழிவில்லாதவனும் , மெய்ம்மையில் நின்று உணரப்படுபவனும் , அம் மெய்ம்மையை இல்லாதவர்க்கெல் லாம் உணரப்படாதவனும் , முப்புரங்களை எரித்தவனும் , குற்றமில் லாதவனும் , புலித்தோலாகிய உடையை உடையவனும் , சிவந்த நிறம் உடையதாய் , வெள்ளிய திருநீற்றினால் விளங்குகின்ற திருமேனியை உடையவனும் , மான்கன்றை ஏந்துகின்ற , கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடையனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளி யிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

குறிப்புரை :

மெய்ம்மையாவது , அவனை உணர்தலே கருத்தாதல் ; அக்கருத்தினைப் பல்வேறு நிலையவாய் நின்று விலக்குவன மலசத்திகளாதலின் , அவற்றால் அக்கருத்தினை இழந்து வேறுபட் டோரால் அவன் உணரப்படானாயினான் என்க . முப்புரம் எரித்தமை , அம்மல சத்திகளை அழிப்பவனாதலையும் , புனிதனாதல் , அச்சத்தி களால் அணுகப்படாதவனாதலையும் விளக்கும் குறிப்பு மொழிகளாய் நின்றன ; ஏனையவும் அவ்வாறியைந்து நிற்றலை நுண்ணுணர்வான் உணர்ந்து கொள்க . ` செய்யனை ` என்றதற்குக் கருத்து நோக்கி , இவ்வாறு உரைக்கப்பட்டது . ` மேனியன் ` என்றவிடத்தும் , இரண்ட னுருபு விரித்துக்கொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 12

வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேன்என்
றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்
சடையன் காதலன் வனப்பகை யப்பன்
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
நங்கை சிங்கடி தந்தைப யந்த
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேற்
பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே

பொழிப்புரை :

வன்றொண்டனும் , சடையனார் மகனும் , வனப்பகை , சிங்கடி என்னும் நங்கையர்க்குத் தந்தையும் , விளைவு மிகுகின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலை வனும் , இறைவனை உளங்குளிர்ந்து பாடும் தமிழையுடையவனும் ஆகிய நம்பியாரூரன் , ` வளமை மிக்க சோலைகளையுடைய திருவாழ் கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதனை நினைப்பேன் ` என்று சொல்லிப் பாடிய , பயன் மிகுந்த இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களிடத் தினின்றும் , அவர்கள் செய்த பாவங்கள் திண்ணமாகப் பறந்து நீங்கும் .

குறிப்புரை :

` நினைக்கேன் என்று பயந்த உளங்குளிர் தமிழ் , பலங்கிளர் தமிழ் ` எனக்கூட்டித் தனித்தனி இயைத்து முடிக்க . பாடு தலை , ` பயத்தல் ` என்றார் , கவிகளை ` எச்சம் ` எனக் கூறும் வழக்குப் பற்றி . ` கல்வியே கற்புடைப் பெண்டிர் அப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே ஈர்ங்கவியா ` என்ற நீதிநெறிவிளக்கமும் (3) இங்கு நினைக்கற்பாலது . ` வனப்பகை அப்பன் , சிங்கடி தந்தை ` என , பொருட் பின் வருநிலையணியாக , ஒருங்கியைக்க . ` நங்கை ` என்றது , ` வனப் பகை ` என்றதனோடும் இயையும் . ` நலம் ` என்றது , அதனைத் தருவ தாய விளையுளின்மேல் நின்றது . பலம் - பயன் . ` பாடவல்லார் மேனின் றும் ` என , உருபு விரிக்க . ` தான் ` என்றது , தேற்றப் பொருட்டாய் , ` பறையும் ` என்றதனோடு இயைந்தது என்க .
சிற்பி