திருக்கழுமலம்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்தஎம் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

இவ்வுடம்பின் கால எல்லையில் இதன் கண் நின்று சாதலும் , பின்பு வேறோர் உடம்பிற் பிறத்தலும் என்னும் இரண்டனை யும் விலக்கி , இவ்வொரு பிறப்பிலே என்னைப் படைத்து , அவ்வாற் றானே இதன்கண் வந்து தனது திருவருளை எனக்கு அளித்தருளிய வனும் , மலைமங்கையை நன்கு மதித்துத் தன் திருமேனியின் ஒருகூற்றில் வைத்த மாணிக்கம் போல்பவனும் , வானினின்றும் வந்த வெள்ளத்தைச் சடையிடையில் வைத்தருளினவனும் , அயலதாகிய என் நெஞ்சிற்கு , அயலாகாது , காய்ந்த இரும்பு கவர்ந்த நீர்போல , உள்ளே கலந்து நிற்பவனும் , எட்டுவகைப் பொருளாய் நிற்கும் ஒருவனும் , காதில் வெள்ளிய குழையை அணிந்தவனும் ஆகிய எங்கள் தலைவனை , அடியேன் , அவன் கயிலையில் வீற்றிருந்த வாறே , ஊழிக்காலத்தில் உலகத்தைக் கடல் கொள்ளவும் தான் கொள்ளப்படாது மிதந்து நின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ்வள நகரிடத்திற் கண்டு கொண்டேன் ; அதனால் இனி ஒரு குறையும் இலனா யினேன் .

குறிப்புரை :

ஈற்றில் வருவித்து உரைத்தது குறிப்பெச்சம் . ` இரண்டனையும் ` என்னும் , உம்மை எண்ணின் தொகைச்சொல் , தொகுத்தலாயிற்று . வகுத்தல் - ஆக்குதல் . ` தந்த எம் தலைவனை , வைத்த எம்மானை , ஒருவனாகிய எங்கள் பிரானை ` எனப் பல வாற்றாற் சொல்லி மகிழ்ந்தார் என்க . நன்கு மதித்தலாவது தன்னோடு இணையொத்தவளாக உணர்தல் . அவ்வாறுணர்தற்கு அவள் அவனின் வேறல்லளாயினும் , உயிர்கள் அவளை உணருமாற்றானன்றித் தன்னை யுணரலாகாமை யின் , அவற்றின் பொருட்டுத்தான் அவளை அவ்வாறு வேறுவைத்து உணர்வன் என்க . மனம் அயலதாதலாவது , அவனை எட்டுதற்கு இயைவதாகாமை . அவன் அதனுட்கரந்து நிற்றலாவது , உயிர்வழியாக அதனையுந் தன் வழிப்படுத்துதல் . எண் வகை - அட்ட மூர்த்தம் ; அவை , ` ஐம்பெரும் பூதங் களும் , இரு சுடர்களும் , உயிரும் ` என இவை . இவைதாம் விரியாற் பலவாமாகலின் , ` எண் வகை ` என்று அருளினார் . ` ஒருவனா யிருந்தே இங்ஙனம் பலவாகின்றான் ` என்பார் , ` எண்வகை ஒருவனை ` என்று அருளிச்செய்தார் . கழுமலம் - சீகாழி ; இஃது ஊழி வெள்ளத்தில் தோணி போல மிதந்தமையின் , ` தோணிபுரம் ` எனப் பெயர்பெற்றமை உணர்க . ` கருமை பெற்றகடல் கொள்ள மிதந்ததோர் காலம் மிதுவென்னப் பெருமை பெற்றபிர மாபுரம் ` துயர்இ லங்கும்உல கிற்பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் பெயர்இ லங்குபிர மாபுரம் ` ( தி .1 ப .1 பா .5,8) ` பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின ` ` நிலையும் பெருமையும் நீதியும் சால அழகுடைத்தாய் அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தஇத் தோணிபுரம் ` ` முற்றிக் கிடந்துமுந் நீரின் மிதந்துடன் மொய்த் தமரர் சுற்றிக் கிடந்து தொழப்படுகின்றது ...... கழுமலமே ` ( தி .4 ப .82 பா .1,6,7) எனவும் அருளிச்செய்தனர் , முன்னை அருளாசிரியரும் . கழுமலமே பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களை உடைத்தாதலை , ` பிரமனூர் வேணு புரம்புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி புரம்மன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சைவயம் உள்ளிட்டங் காதி யாய பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம்நாம் பரவும் ஊரே ` ( தி .2 ப .70 பா .1) என்றற் றொடக்கத்துத் திருஞானசம்பந்தர் திருமொழிகளாலும் , ` பிரமபுரம் வேணுபுரம் பெரும்புகலி வெங்குருநீர்ப் பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்முன் வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம் பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் ` ( தி .12 திருஞா . பு .14) என்னும் சேக்கிழார் திருமொழியாலும் உணர்க . ` கழுமல வளநகர் ` என , சேயதுபோலச் செய்யுள் வழக்குப்பற்றி அருளினாராயினும் , ` இந்நகர் ` எனச் சுட்டியுரைத்தலே திருவுள்ளம் . இது திருப்பதிகங்கள் பலவற்றிற்கும் ஒக்கும் . பெற்றுக்கொண்டேன் , ஏற்றுக்கொண்டேன் என்பதுபோல , ` கண்டுகொண்டேன் ` என்பது ஒருசொல் . மேற்காட்டியவை அனைத் தினுள்ளும் , ` கொள் ` என்பது துணைவினையாய் நின்று , முதனிலை யது பொருளை வலியுறுத்து நிற்கும் . ` கண்டுகொண்டேன் ` என்றது , ` கயிலையிலிருந்தவாறே கண்டுகொண்டேன் ` என்னும் குறிப்பினது என்பதை , சேக்கிழார் திருமொழியான் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

மற்றொரு துணைஇனி மறுமைக்குங் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவ ரறியா
முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை யடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

சூழ்ந்துள்ள சுற்றத்தாரையும் துணையென்று நினையாது , ` இவனே துணை ` என்று தெளிந்து , நாள்தோறும் என்னால் வணங்கப்படுகின்ற , ஒளியையுடைய விளக்குப் போல்பவனும் , வீடா வதும் , ஞானமாவதும் , அவற்றை அடைவிப்பனவாய் அமைந்த , தேவராலும் அறியப்படாத அளவற்ற நெறிகளாவனவும் இவை என்ப தனைப் படிமுறையானே அறிவித்து , மெய்ப்பொருளை எனக்கு உணர்த்தியருளிய கடவுளும் ஆகிய பெருமானை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , ` திருக்கழுமலம் ` என்னும் இவ்வளநகரிற் கண்டு கொண்டேன் ; அதனால் , முன்பு அவனை மறந்து வருந்திய யான் , இனி ஒருபோதும் அவனை மறவாதிருக்கும் திருவருளைப் பெற்றேன் ; ஆகவே , இம்மைக்கேயன்றி மறுமைக்கும் இனி மற்றொரு துணையை நாடேன் .

குறிப்புரை :

` மறுமைக்கும் ` என்ற உம்மை , எச்சத்தொடு சிறப்பு , மறந்து வருந்தியது சித்தவடமடத்தில் என்க . ` தொழப்பட்ட ` என்றது , இருசொல்லாய் நிற்றலின் , ` நான் ` என்றது , ` தொழ ` என்றதனோடு முடிந்தது . ` தொழப்பட்ட ` என்றது , ` தொழப்படுந் தன்மையைப் பெற்ற ` என்றவாறு . தேவர் , உயர்பிறப்பிற்கு உரிய வழியையே அறிதலின் , பிறவி நீங்கும் வழி , அவர்களால் அறியப்படாதாயிற்று . படி முறையானே பலபல நெறிகளையும் சுவாமிகள் கண்டது நெடுங் காலத்திற்கு முன்னர்த்தாயினும் , அவ்வருமையையும் ஈண்டு நினைந்து அருளிச்செய்தார் என்க . ` கற்பனை ` என்றது , ` நினைவு ` என்னும் பொருளதாயினும் , ஈண்டு , ` அறிவு ` என்னும் பொருளதாய் நின்றது ; இது வடசொல் . ` கற்பித்தாய் ` என்றது , ` கற்கச்செய்தாய் ` என்னும் பொருளதாகிய தமிழ்ச்சொல் ; இஃது ` அறிவித்தாய் ` என்னும் பொருட்டு . ` அருங் கற்பனை கற்பித்தாண்டாய் ` ( தி .8 திருவா . கோ . மூ . தி . 7) என்புழியும் இவ்வாறே கொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

திருத்தினை நகருறை சேந்தனப் பன்னென்
செய்வினை யறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை யல்லதிங் காரையு முணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

திருத்தினை நகரின்கண் எழுந்தருளியிருக்கின்ற , முருகக்கடவுட்குத் தந்தையும் , என்னுடைய முன்னை வினைகளை யெல்லாம் விலக்குகின்ற , செம்பொன்போலும் சிறப்புடையவனும் , அழகிய பொன்போலும் திருமேனியையுடைய ஒப்பற்றவனும் ஆகிய எங்கள் சிவபெருமானையல்லது வேறு யாரையும் யான் இவ்வுலகில் இறைவராக உணரேன் ; யான் உய்யுங் காரணங் கூடினமையால் இத்தகைய உணர்வைப் பெற்றேன் ; ஆயினும் , விருத்தனும் , பாலனும் ஆகிய அவனை , யான் கனவில் என் அருகே கண்டு , நனவில் எங்குங் காணமாட்டாது பிரிந்திருந்தேன் ; இதுபோழ்து , யாவர்க்கும் தலைவ னும் , நடனம் புரிகின்ற திருவடிகளையுடையவனும் ஆகிய அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , கடலை அடுத்துள்ள , ` திருக் கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் ; அதனால் , இனி அப்பிரிவு இலனாயினேன் .

குறிப்புரை :

` செய்வினை ` இறந்தகால வினைத்தொகை . யாவர்க் கும் முன்னே உண்மையின் , ` விருத்தன் ` என்றும் , பின்னேயும் உண்மையின் , ` பாலன் ` என்றும் அருளினார் . சித்தவடமடத்தில் , உறங்குங் காலத்துவந்து சென்னிமேல் திருவடி நீட்டினமையை , கனவாக அருளினார் . அதன்பின் இறைவர் நம்பியாரூரருக்கு விழிப்பின்கண் வந்து காட்சி வழங்கினமை இவ்விடத்தேயாதல் அறிக . வழியில் திருத்தினை நகரையும் , தில்லையில் நிருத்தம் செய்காலையும் வணங்கினமையை நினைக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை
வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப்
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

மழையினால் அரும்புகின்ற கொன்றையினது மலரைச் சூடினவனாகிய எங்கள் பெருமானை என்றும் மறவாது நினைக்கின்ற மனத்தைப் பெற்றேனாதலின் , யான் அவனைப் புறம் போகவொட்டாது என்னிடத்தே பிணித்துக் கொள்ளுதலைப் பொருந்தினேன் ; இனி ஒருபோதும் இந்நிலையினின்றும் தவறி உலகிற் போய்ப் பிறவாத பெருமையைப் பெற்றுவிட்டேன் ; யான் பெற்ற இப்பேற்றினை வேறு யார் பெற வல்லார் ! இவ்வாறாதலின் , அவனை இனியொருகால் இவ்விடத்து யான் நேர்படக் காணாதேயும் , இவ்வுடம்பு நீங்கியபின் அவனை அடையவும் வல்லேன் ; என்றாலும் , அவனைக் காணாது என் நெஞ்சம் அமையாமையின் , காதிற் குழையை யுடைய நீல கண்டனாகிய அவனை மீளக் காணுதல் வேண்டியே பாடி நிற்கின்றேன் ; இந்நிலையில் அவனை , இதுபோழ்து , அவன் கயிலை யில் வீற்றிருந்தவாறே , கழைக் கரும்பும் , வாழையும் பல சோலையுடன் நிறைந்துள்ள , ` திருக்கழுமலம் ` என்னும் இவ்வள நகரிடத்துக் கண்டு கொண்டேன் ; இனியொரு குறையும் இலனாயினேன் .

குறிப்புரை :

` மழைக்கு என்றது உருபு மயக்கம் . ` மழைக்கு அரும்பும் கொன்றை ` என்றது , ` கார்க்கொன்றை ` என்றவாறு . கழை , கரும்பின் வேறுபாடு . ` கதலி , சோலை ` என்பவற் றிடத்து வேண்டும் சொற்களை விரிக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

குண்டலங் குழைதிகழ் காதனே யென்றுங்
கொடுமழு வாட்படைக் குழகனே யென்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றைய னென்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்
பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை யோதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

யான் , உறக்கத்தில் , ` குண்டலமும் , குழையும் விளங்குகின்ற காதினை உடையவனே ` என்றும் , ` கொடிய மழுவாகிய ஒளியையுடைய படையை உடையவனே ` என்றும் , ` வண்டுகள் ஒலிக் கின்ற கொன்றை மலரைச் சூடியவனே ` என்றும் வாய்பிதற்றி , விழித்த பின் , பழக்கமாய் நமக்கு உள்ள பலவாறான மனத்தை ஒழித்து ஒரு நெறிப்பட்ட மனத்தையுடையேனாய் , அவனது தலங்களை வினாவி அறிந்து , ` அத்தலத்திற் கிடைப்பான் ` என்று எண்ணிப் பல நாளும் சென்று முறைப்படியே வணங்கினேன் ; அவ்வாற்றால் வருமிடத்து , தாழைகளையுடைய கழிக்கரையிடத்துக் கடல் அலைகள் வந்து உலவு கின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்தே அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே கண்டுகொண்டேன் ; இனி , அக் குறையிலேனாயினேன் .

குறிப்புரை :

குண்டலம் , ஆசிரியக் கோலத்தையும் , குழை மண வாளக் கோலத்தையும் காட்டும் என்க . மகளிரை , ` கனங்குழையார் ` என்பவாகலின் , மகளிர்க்கு உரித்தாம் வேறுபாட்டினையுடைய குழை யும் உண்மை பெறப்படுதலால் , இறைவிக்கு உரிய குழையினையே ஈண்டு அருளினார் என்றலுமாம் . முன்னின்றாரை நோக்கியும் அருளிச் செய்கின்றாராகலின் , ` நம் மனம் ` என்று அருளினார் . நினைவின் பன்மையும் , ஒருமையும் , மனத்திற்கு ஆக்கப்பட்டன . ` ஒன்றாய் ` எனச் சினைவினை முதல்மேல் நின்றது . ` பசுபதி ` என்றது , சுட்டுப் பெயரளவாய் நின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

வரும்பெரு வல்வினை யென்றிருந் தெண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
ஐயனை அறவன்என் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

` அளவற்ற வலிய வினைகள்வந்து வருத்துமே ; என் செய்வது ` என்று எண்ணியிருந்து வருந்தினேன் ; அங்ஙனம் வருந்தாத படி எம்பெருமானை மறவாத மனம் வாய்க்கப்பெற்றேன் ; அதனால் , என் மனத்தால் அவனை விரும்பி , மெய்சிலிர்த்து , என்னை இகழா தொழியுமாறு அவனை இரந்து நின்று , முறைப்படியே வணங்கினேன் ; அதனால் , அரும்பும் , பூவும் , அமுதும் , தேனும் , கரும்பும் போல இன்பம் தருபவனும் , யாவர்க்கும் தலைவனும் , அறவடிவினனும் , எனது பிறவியை வேரோடு அறுப்பவனும் ஆகிய அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , மிக்க செந்நெல் நிறைந்த வயல்களை யுடைய , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டு கொண்டேன் .

குறிப்புரை :

` மனத்திடை ` என்றது உருபு மயக்கம் . ` குளிர்ப்பு ` என்பதனை , இக்காலத்தார் , ` குளிர்ச்சி ` என்ப . ` பிறவிவேரறுக்குங் கரும்பினை ` என்றதற்கு , கருத்து நோக்கி , இவ்வாறு உரைக்கப் பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை
மின்னின துருவினை என்னிடைப் பொருளைக்
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

மேகமும் , செல்வமும் போல்பவனும் , பொன் னொளியும் மின்னொளியும் போலும் திருமேனியையுடையவனும் , என்னிடத்துக் கிடைத்த பொருள் போல்பவனும் ஆகிய எங்கள் பெருமானை யான் அடைய நினைந்து , அதன் பொருட்டுச் சேய்மை யில் உள்ளார் அவனைத் துதிக்கவும் , அண்மையில் உள்ளார் அவனை வணங்கவும் , அவற்றுள் ஒன்றையும் செய்யாது , அவனைத் தங்கள் வன்மையால் அடைய முயல்பவர்கள் பின்னே சென்று , ` முயல் அகப் படும் வலையில் யானை அகப்படும் ` என்று சொல்லிய அவர்களது சொல்லைக்கேட்டு , அவ்வழியையே முற்றிலும் கடைப்பிடித்து , அவ னிடத்து அன்புடையாரது தோற்றத்தை மேற்கொண்டிருந்தேன் ; ஆயினும் , எனது முன்னைத் தவத்தால் , அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , கயல் மீன்களும் , சேல்மீன்களும் வயலின்கண் விளையாடுகின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் ; அதனால் எண்ணம் கைகூடப்பெற்றேன் .

குறிப்புரை :

` அயல் ` என்றது , அயலாய இடத்தினையும் , ` அடி ` என்றது , அடி உள்ள இடத்தையும் குறித்தன . சேய்மையில் உள்ளாரா வார் , இறைவனைக் கேள்வியளவால் அறிபவராதலின் , துதிக்கவே வல்லராயினர் . அவர் அன்னராயினும் , நல்லாசிரியர் உணர்த்திய வாறே உணரும் திருவருட்பேறு உடையர் என்க . அடிக்கீழ் உள்ளார் இறைவனைத் தலைப்பட்டுணர்வராகலின் , அவர் வணங்குதற்கு உரியவராயினர் . ` அன்பர்கள் ` என்றது , பல திறத்தாலும் அன்பு செய் கின்றவர்களை . ` சாயல் ` என்பது , ` மென்மை ` எனப்பொருள் படுதல் பண்டை வழக்காயினும் ( தொ . சொல் .325), பிற்காலத்தில் , ` தோற்றம் ` என்னும் பொருளும் தருவதாயிற் றென்க . ` தோற்றம் ` என்றது வேடத்தை . அன்பர்களது செயல்களாகிய பரவல் , தொழுதல் முதலிய வற்றுள் ஒன்றும் செய்யாமைபற்றி , ` வேடமாத்திரமே உடையவனாய் இருந்தேன் ` என்றார் . முயற்சியாவன , தம் முனைப்பால் செய்யப் படும் கருமங்களும் , ஆராய்ந்துணரும் ஆராய்ச்சி உணர்வுகளுமாம் . ஏனைய பொருள்களை அகப்படுத்தும் அவையே , இறைவனையும் அகப்படுத்தும் என்று துணிந்து கூறலின் , அவர் கூற்றினை , ` முயல் வலை யானைபடும் ` என மொழிந்ததாக அருளினார் . எண்ணுதல் , இங்கு துணிந்து கடைப்பிடித்தலை உணர்த்திற்று . சுவாமிகள் , பிறர் போல இறைவனைத் தம் முனைப்பாற் செய்யும் வேள்வி முதலிய வற்றால் அகப்படுத்த நினைந்தார் அல்லராயினும் , சித்தவட மடத்தில் இறைவன் தோன்றி மறைந்தபின் , அவனை அறியாது இகழ்ந்த பிழை பற்றி இரங்கிய இரக்க மிகுதி காரணமாக , அவனை மீளக் காண விரைந்த விரைவோடே பல தலங்களிலும் சென்று வணங்கினமையை அவ்வாறு உணர்ந்து , இங்ஙனம் அருளிச்செய்தார் என்க . இதனானே , காமியச் செயற்கேயாக , நிட்காமியச் செயற்கேயாக , இறைவன் வெளி நின்றருளுதல் , எவ்வாற்றானும் அவனது கருணை காரணமாகவன்றி , அச்செயல்களது ஆற்றல் காரணமாக அன்றென்பது தெற்றென உணர்ந்துகொள்க . ` என்னிடை ` என்றதன்பின் , ` கிடைத்த ` என்பது வருவிக்க . ` பொருள் ` என்றது , புதையற் காட்சி , கிழியீடு போல் வனவற்றை .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
மனைதரு மலைமகள் கணவனை வானோர்
மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
புனைதரு புகழினை எங்கள தொளியை
இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
கனைதரு கருங்கட லோதம்வந் துலவுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

நினைத்து உணரப்படும் கருத்துப் பொருள்களாகிய பாவங்கள் அழிதல் உளவாகும்படி , யான் , மனத்தால் நினைந்தும் , கையால் தொழுதும் எழப்பட்ட , ஒளி பொருந்திய ஞாயிறு போல் பவனும் , தனக்கு மனைவியைத் தர விரும்பிய மலைக்கு மகளாகிய உமைக்குக் கணவனும் , தேவர்களது தலைமணியாகிய மாணிக்கம் போல்பவனும் , வேதத்தின் பொருளாய் உள்ளவனும் , அழகியவாகச் சொல்லப்படுகின்ற புகழை உடையவனும் , எங்கள் விளக்குப் போல் பவனும் , மாலும் அயனும் , ` இன்னன் ` என்று அறிதற்கு அரியவனும் ஆகிய இறைவனை , அடியேன் , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , ஒலிக்கின்ற கரிய கடலினது அலைகள் வந்து உலவுகின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

பாவத்தினது பன்மையால் , அதனது நாசமும் பல வாயின . எழுதல் , செயப்படுபொருள் குன்றிய வினையாயினும் , நினைதல் தொழுதல்களோடு ஒட்டிநின்று , செயப்படுபொருள் குன்றாதாயிற்று . ` எமக்கு , பிறரெல்லாம் காலையில் தொழுதெழுகின்ற ஞாயிறாய் உள்ளவன் ` என்றல் திருவுள்ளமாகலின் , சுடர் , ஞாயிறா யிற்று . ` மலைதரு ` என்பது பாடம் அன்மை , எதுகை இன்மையானே விளங்கும் . அழகியவாதல் மெய்ம்மையவாதல் . ` ஒருவன் ` என்றது , ` வரையறைப்படுத்து உணரப்படுபவன் ` என்றபடி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப
வஞ்சனை செய்தவர் பொய்கையுள் மாயத்
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த
துன்மை யெனுந்தக வின்மையை யோரேன்
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்
பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
கறையணி மிடறுடை யடிகளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

வேள்வி முதலிய கருமங்களையே மெய்யென்று துணிந்தவர்கள் பற்றுவிடமாட்டாது மனைவாழ்க்கையிலே கட்டுண்டு கிடத்தலும் , முற்றத் துறந்தவர்போலக் காட்டினோரது பொய்யாகிய தவங்கள் ஏனையோரது முயற்சிகளோடொப்பக் கடிதில் அழிந்து போதலும் கண்கூடாய் இருக்க , அவற்றை மேற்கொண்டவர்கள் , தாம் சேற்றில் அழுந்தியிருத்தலை அறியாது , நல்ல நீர்த்துறையிலே நன்கு மூழ்கியிருப்பதாகக் கருதி , பிறரையும் தம் வழியிலே செல்லக் காட்டிய தீநெறியாகிய பொருந்தா நெறியை , யான் பொருட்படுத்தாது வந்து , பிறையை யுடைய சடையை உடையவனும் , எங்கள் தலைவனும் , கருணையை மிக உடையவனும் , ஆகிய சிவபெருமானை அடியேன் , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` வேதவுள்ளுறை , வேதமுடிவு , அருமறை ` முதலியன போலக் கிளந்தோதாதவழி , ` மறை ` என்பது , அதன் கன்ம காண்டத்தைக் குறித்தலே பெரும்பான்மை . கன்ம காண்டத்தின் வழிநிற்போர் , மீமாஞ்சகர் , அவர் , ` காமிய கன்மமே பிறப்பைத்தரும் ; நிட்காமிய கன்மம் வீடுபேற்றைத் தரும் ` எனக் கூறினாராயினும் , காமிய இன்பத்தின் மேலாயதோர் இன்பத்தை யுணராமையின் , நிட் காமியம் செய்யமாட்டாது காமியத்துள்ளே அழுந்தலின் , ` மறை யிடைத்துணிந்தவர் மனையிடையிருப்ப ` எனவும் , சமணரும் , சாக்கியரும் , ` இல்லறம் எவ்வாற்றானும் வீடு பயவாமையின் , துறவறமே மேற்கொள்ளத் தக்கது ` எனக்கொண்டு , துறவையே விரும்பிநிற்பாராயினும் , பற்றற்றான் பற்றினைப் பற்ற மாட்டாமை யின் , எல்லாப் பற்றிற்கு அடியாய தம் முனைப்பு அறாராகலின் , அவரை , போலித் துறவிகளாக வைத்து , ` வஞ்சனை செய்தவர் ` என்றும் , அவர் துறவொழுக்கங்களாகக் கொண்டு ஒழுகுவன வெல்லாம் , இறைவன் திருத்தொண்டின்முன் , பயனால் , கதிர்முன் இருள்போற் கெட்டொழிதலின் , அவற்றை , ` பொய் ` என்றும் , ` கையுள் மாய ` என்றும் அருளினார் . மீமாஞ்சகரது தன்மையை , தாரு காவன முனிவர்கள் வரலாற்றானும் , சமண சாக்கியரது தன்மையை , ஞானசம்பந்தர் நாவுக்கரசரோடு அவரிடை நிகழ்ந்த நிகழ்ச்சிகளானும் நன்குணர்க . கை - சிறுமை ; அஃது அவ்வளவினதாகிய காலத்தை உணர்த்திற்று . ` துன்மை ` என்பது , ` துர் ` என்பது அடியாக ஆக்கப் பட்டதொரு சொல் . ` ஓரேன் ` என்ற முற்றெச்சத்தின்பின் , ` வந்து ` என்பது வருவிக்க . ` காரிருள்போன்ற கறையணி மிடறுடை யடிகள் ` என்றது , சிவபெருமான் என்னும் சிறப்புப்பெயரளவாய் நின்றது . இத் திருப்பாடலின் பொருளைச் சிறிதும் உணரமாட்டாமையால் , பாடத்தைப் பலபட வேறுபடுத்தோதினர் ; அவையெல்லாம் சிறிதும் ஒவ்வாமை அறிந்துகொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
விரவிய சடைமுடி யடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்
அறிவரி தவன்றிரு வடியிணை யிரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமல ரெடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே

பொழிப்புரை :

செழுமையான கொன்றையினது மலரும் , வில்வ இலையாகிய மலரும் கலந்துள்ள சடைமுடியையுடைய தலைவனை நினைந்து , அன்பினால் அழுகின்ற மலர்போலும் கண்ணிணையுடைய அடியார்க்கல்லது அறிதற்கரிய இணையாகிய அவன் திருவடிகள் இரண்டினையும் , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டு , சடையனார்க்கு மகனாகிய நம்பியாரூரன் பாடிய இப் பத்துப் பாடல்களாலும் தொழுகின்ற , மலரைத் தாங்கிய கைகளை யுடைய அடியார்களை , துன்பமும் , இடும்பையும் அணுகமாட்டா .

குறிப்புரை :

கூவிளை . ஆகுபெயராய் அதன் இலையைக் குறித்தது . அவ்விலையை , மலர்கள் பலவற்றினும் சிறந்ததாகச் சிவபிரான் விரும்புதலின் , அதனையே , ` மலர் ` என்று அருளினார் . இணை ஒன்றே யாகலின் , ` அரிது ` என ஒருமையாற் கூறப்பட்டது . ` அரி தாகிய இணையாகிய அவன் அடியிரண்டும் ` என்க . ` பத்தினாலும் தொழும் ` என உருபு விரித்து முடிக்க . ` தொழும் அடியவர் , மலர் எடுத்த கை ` அடியவர் எனத் தனித்தனி இயைக்க . துன்பம் , இன்பத் திற்கு எதிராய நுகர்ச்சி . இடும்பை , அதற்குக் காரணமாவன பலவற்றுள் ஒன்றாய இடையூறு . இடையூறு இல்லை என்றதனால் , எடுத்த செயல் முற்றி இன்புறுவர் என்றவாறாம் .
சிற்பி