திருவாரூர்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

எனக்குப் பொன்னையும் , மெய்யுணர்வையும் , வழங்குபவனும் , அவை வாயிலாக உலகின்பத்தையும் , வீட்டின் பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும் , அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும் , பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும் , இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும் , எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய , அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

` மெய்ப்பொருள் ` என்றது , அதனையுணரும் உணர்வை . உணர்விற்கு , உணர்தல் தன்மையைத் தருதலின் அருமையை நினைகின்றாராதலின் , ` மெய்ப்பொருளும் ` என வேறு போல அருளினார் . ` போகமும் திருவும் ` என்றது , நிரல்நிறை . எனவே , ` திரு ` என்பது வீட்டின்பமாதல் உணர்க . உலகின்பத்தை நுகரும்பொழுது செய்யும் பிழையாவது , இறைவனை மறந்து , முன்னிலைப் பொருள்களையே நினைந்து , விருப்பும் , வெறுப்புங் கொள்ளுதல் . வீட்டின்பத்தை நுகரும்பொழுது செய்யும் பிழையாவது , பாற்கலன்மேற் பூஞை கரப்பருந்த நாடுதல்போல , அப்பேரின் பத்தையே நுகர்ந்திராது , சிற்றின்பத்தை விரும்புதல் , இவை இரண்டும் பண்டைப் பழக்கம் பற்றி நிகழ்வன . இப்பழக்கத்தைத் தன் அடியார்க்கு இறைவன் பலவாற்றால் அறவே நீக்கியருளுவான் என்க . அளவிறந்த தன்மையன் ஆதலின் , ` இன்னதன்மையன் என்றறிவொண்ணா எம் மான் ` என்றும் , அத்தன்மையனாயினும் , தமக்கு எளிதில் பலகாலும் வெளிநின்றமையின் , ` எளிவந்தபிரான் ` என்றும் அருளினார் . ` மறக்கலும் ` என்னும் உம்மை . இழிவு சிறப்பு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

கட்ட மும்பிணி யுங்களை வானைக்
காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
விரவி னால்விடு தற்கரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
வாரா மேதவி ரப்பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

மனத்துன்பத்தையும் உடல்நோயையும் ஒழிக்கின்ற வனும் , கூற்றுவனை அழித்த காலை உடையவனும் , துறக்கப்பட்ட ஆசை மீள வந்து எழுதலாகிய கொடிய துன்பத்தைப் போக்குபவனும் , கூடினால் பின்பு பிரிதற்கு இயலாதவனும் , வந்த பழிச் சொல்லும் , வரக் கடவ பழிச்சொல்லும் வாராது ஒழியும்படி அருள்செய்பவனும் , அட்ட மூர்த்தங்களை யுடையவனும் ஆகிய , மலர்கள் தேனோடு மலர்கின்ற சோலைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

விரவினால் விடுதற்கு அரியனாதல் , பேரின்பவடிவின னாதலால் என்க .` மேவினார் பிரியமாட்டார் விமலனார் ` என்ற தி .12 கண்ணப்பர் புராண (174) த்தையும் நோக்குக . பழிச்சொல் , உண்மை யுணராது கூறுவாரது சொற்கள் , அவை இறைவன் , சுவாமிகளது பெருமையை விளங்கச் செய்யும்பொழுது அவரைப் பற்ற மாட்டாது ஒழியும் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
கலைக்கெ லாம்பொரு ளாய்உடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
பகலுங் கங்குலு மாகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
யுணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னை
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

மேகங்களையுடைய மலைமேல் மழையாய் நின்று பொழிபவனும் , நூல்களுக்கெல்லாம் பொருளாய் அவற்றுட் பொருந்தி நின்று , காணப்படுகின்ற உயிர்களுக்கு இரங்குகின்றவனும் , பகலாகியும் இரவாகியும் இருப்பவனும் , ஒசையைக் கேட்கின்ற செவியாகியும் , சுவையை உணர்கின்ற நாவாகியும் , உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும் , ஒலிக்கின்ற கடலாகியும் , மலையாகியும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

உயிர் காணப்படுவதன்றாயினும் , உடல் வழியாக உண்மை புலப்படுதலின் , ` பார்க்கின்ற உயிர் ` என்று அருளினார் . மழையாய்ப் பொழிதல் முதலிய அனைத்தும் உயிர்கட்கு இரங்கும் இரக்கத்தாலே என்றதென்க . எல்லா உயிர்கட்கும் இரங்குகின்ற அவன் , தான் விரும்பி வந்து ஆட்கொண்ட எனக்கு எத்துணை இரங்குவான் என்பது சொல்ல வேண்டுமோ என்றபடி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

செத்த போதினில் முன்னின்று நம்மைச்
சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தையுண் டேமன முண்டே
மதியுண் டேவிதி யின்பய னுண்டே
முத்தன் எங்கள்பி ரானென்று வானோர்
தொழநின் றதிமில் ஏறுடை யானை
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

நாம் செத்தபொழுது சிலர் வந்து கூடி நம்மை இகழ் வதற்கு முன்னே , நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ ! நெஞ்சு உளதன்றோ ! அறிவு உளதன்றோ ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ ! அவற்றால் தேவர்கள் , ` இயல்பாகவே பாசம் இல்லாதவன் ` என்றும் , ` எங்கள் தலைவன் ` என்றும் வணங்க நிற் கின்ற , முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும் , யாவர்க்கும் தந்தையும் , என் தந்தைக்குத் தலைவனும் , எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாது மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

சிந்தையும் ; மனமும் வேறுவேறாதல் அறிந்து கொள்க . ` விதி ` என்றது , விதித்தவாறே செய்த புண்ணியத்தைக் குறித்தது . அதன் பயனாவது மக்கட் பிறப்பும் , அதன் பயனாகிய இறையன்புமாம் . சிந்தை முதலியவற்றைத் தனித்தனியே எடுத்து , ` உளதன்றோ ` என வலியுறுத்தியது , அவனை நினைத்தற்குத் தடையாதும் இன்மையை இனிது விளக்கியவாறு . ` எம் ` என்றது , தம்போல்வாரையும் உளப் படுத்து .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

செறிவுண் டேல்மனத் தால்தெளி வுண்டேல்
தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்
வாணாள் மேற்செல்லும் வஞ்சனை யுண்டேல்
பொறிவண் டியாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை
பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
அறிவுண் டேஉட லத்துயி ருண்டே
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

நன்மையைத்தரும் கல்வியும் , அதன்பயனாகிய உள்ளத்தெளிவும் , அதன்பயனாகிய இறைவன்பற்றும் நமக்கு உள்ளன என்றால் , அவற்றோடே இறப்பும் , மறுபிறப்பும் , வாழ்நாளை இடை முரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால் , இவற்றை யெல்லாம் அறிகின்ற அறிவும் . அவ்வறிவின்வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின் , புள்ளிகளையுடைய வண்டுகள் யாழின் இசைபோல ஒலிக்கின்ற , பொன்போலும் கொன்றை மலர்க் கண்ணியை , பொன்போலும் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

செறிவு - நிறைவு ; அது பொருள்களை நிரம்ப உணரும் கல்வியைக் குறித்தது , ` சிக்கன ` என்பது , இறுகப் பற்றுதல் . பேரறங்களைச் செய்வார்க்கு முதற்கண் விதித்த வாழ்நாள் மிகுதலும் , பெரும்பாவங்களைச் செய்தார்க்கு அது குறைதலும் உளவாதல் பற்றி , ` வாணாள் மேற்செல்லும் வஞ்சனை யுண்டேல் ` என்று அருளினார் . இதனை , ` கொல்லாமை மேற்கொண்டொழுகு வான் வாழ்நாள்மேற் - செல்லா துயிருண்ணுங் கூற்று ` என்னும் திருக்குறளாலும் (326), அதன் உரையாலும் அறிக . வாழ்நாள் இடைமுரிய வருவதனை , ` அவ மிருத்து ` என்ப . ` அறிவு `, ` உயிர் ` என்றவிடத்திலும் , ` உண்டேல் ` எனப் பாடம் ஓதுதலே சிறக்கும் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று
பொருளுஞ் சுற்றமும் போகமு மாகி
மெள்ள நின்றவர் செய்வன வெல்லாம்
வாரா மேதவிர்க் கும்விதி யானை
வள்ளல் எந்தமக் கேதுணை யென்று
நாணா ளும்அம ரர்தொழு தேத்தும்
அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு , செல்வமும் , படைகளும் , இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற , நன்னெறியாய் உள்ளவனாகிய , தேவர்கள் நாள்தோறும் , ` வள்ளல் ` என்றும் , ` எங்களுக்குத் துணை ` என்றும் சொல்லித் துதிக்கின்ற , சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணை யிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

` பொள்ளல் உடல் ` என்றது , அதன் நிலையாமையை உணர்த்தியவாறு . பொருளாய் நிற்பவர் , மக்கள் ; அது ,` தம் பொருள் என்பதம் மக்கள் ` ( குறள் - 63.) என்றதனானும் அறிக . ` சுற்றம் ` என்றது , ` சுற்றி நிற்கும் படை ` எனப் பொருள் தந்தது ; படைபோல்பவர் கிளைஞரும் , நண்பரும் , அவர் படைபோன்று உதவுதல் வெளிப்படை . போகமாய் நிற்பவர் மாதர் , இவர் எல்லோரும் தாமே தாங்குவார் போன்று நின்று தம்மிடத்தே பிணித்துக்கொள்ள முயலுதலின் , அவர் செய்வன மயக்கமாயின . ` அவர் பற்றுவது உடலையே யாதலின் , உடலைப் பொரு ளென்று செய்வன ` என்றார் . ` அள்ளற்கழனி ` என்றது , நீர்வளங் குறை யாதது என்றபடி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

கரியா னைஉரி கொண்டகை யானைக்
கண்ணின் மேல்ஒரு கண்ணுடை யானை
வரியா னைவருத் தம்களை வானை
மறையா னைக்குறை மாமதி சூடற்
குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்
ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்
கரியா னைஅடி யேற்கெளி யானை
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

கையையுடையதாகிய யானையினது தோலை உரித்த கையை உடையவனும் , இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணையுடையவனும் , அழகையுடையவனும் , அடைந் தாரது வருத்தங்களைப் போக்குபவனும் , வேதத்தை உடையவனும் , சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும் , உலகத்தில் உள்ள உயிர்கட் கெல்லாம் விளக்காய் உள்ளவனும் , தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும் , அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

பிறையைச் சூடியது . சார்ந்தாரைக் காக்கும் தன்மையைக் குறிப்பது ஆதலின் , அத்தன்மை அவனுக்கே உளதாதல் பற்றி , ` குறைமாமதி சூடற்கு உரியானை ` என்று அருளினார் . இதனானே , ` பிறை ` என்னாது ` குறைமதி ` என்றருளினார் . ` தக்கன் சாபத்தாற் குறைந்து வந்த மதி ` என்றவாறு . எனவே , ` குறைமதி ` என்றது , இறந்தகால வினைத் தொகையாயிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

வாளா நின்று தொழும்அடி யார்கள்
வானா ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாணா ளும்மல ரிட்டுவ ணங்கார்
நம்மையாள் கின்ற தன்மையை ஓரார்
கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்
கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி
ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ்செல்வத்தைப் பெற்றுவிடுகின்ற செய்தியைக் கேட்டபின்பும் , சிலர் , அவனை நாள் தோறும் மலர் தூவி வணங்குகின்றிலர் . அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றாரிலர் . ஆயினும் , யான் , எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணை யாவான் என்று கருதி , அவனையே உறவாகக் கொண்டு , அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன் ; அன்றியும் , பலரையும் அவனுக்கு ஆளாகு மாறு முன் நின்று அழைக்கின்றேன் ; ஆதலின் , யான் அவனை மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

` வாளா ` என்றது , ` அரிதின் முயன்று செய்வனயாது மில்லாதே ` என்றபடி . முன்னர் , ` கேட்டு ` என்றமையான் , ` நம்மை ஆள்கின்ற தன்மை ` என்றது . காட்சியான் அறியப்படுவதனை என்க . ` பலரை ` என்னும் ஐயுருபு . தொகுத்தலாயிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
கடக்கிலேன்நெறி காணவு மாட்டேன்
கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும்
இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்
டையா னைஉமை யாளையோர் பாகத்
தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

எல்லா நாள்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று , அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்கமாட்டாமலும் , கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும் , பசியால் கண்குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இட மாட்டாமலும் உள்ள யான் , பரத்தலையுடைய அலைகளைக் கொண்ட கங்கையாகிய நீரையுடைய சடையை யுடையவனும் , உமையாளைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கினவனும் ஆகிய , அழகிய தாமரைப் பொய்கைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

` ஊனைப் பெருக்கவே முயலுதல் முதலிய குற்றங்களை யுடைய எனக்கு உய்தி வேறு யாதுளது ` என்றவாறு , அக்குற்றங்கள் இல்லாதாரும் அவனை மறத்தல் கூடாதெனின் , யான் அது செய்தல் கூடாமை சொல்ல வேண்டுமோ என்பது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட
உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
பாவிப் பார்மனத் தூறும்அத் தேனைக்
கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக்
காத லாற்கடற் சூர்தடிந் திட்ட
செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ
ஆரூ ரானை மறக்கலு மாமே

பொழிப்புரை :

என்னை . வழக்கிட்டு ஆட்கொண்டு அதன்பின் கோயிலுள் சென்று மறைந்த , நண்பகற் போது போலும் ஒளியுடைய வனும் , நஞ்சையுடைய பாம்பைக் கட்டியுள்ள உடையை உடைய வனும் , பகலாயும் இரவாயும் உள்ளவனும் , தன்னை நினைப்பவரது உள்ளமாகிய தாமரையில் ஊறுகின்ற தேனாய் உள்ளவனும் , கரும்பின் சாறும் அதன்கட்டியும் போல்பவனும் , தேவர்மீது வைத்த அன்பினால் , கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகனுக்குத் தந்தையும் , வேதத்தில் வல்லவனும் ஆகிய , செல்வத்தையுடைய திருவாரூர் இறைவனை , யான் மறத்தலும் இயலுமோ !

குறிப்புரை :

சிறுபொழுதுகளுள் நண்பகல் பேரொளியுடையதாதல் அறிக . ` ஆட்கொண்டு ஒளித்தபின் இனிது வெளிப்பட்டு நின்றமை யின் `,` ஒளித்திட்ட உச்சிப்போதன் ` என்று அருளினார் . இவ் வாறன்றி ,` இந்நிகழ்ச்சி உச்சிப்போதில் நிகழ்ந்தது ` எனக் கொண்டு , ` ஒளித்திட்ட உச்சிப்போதினை உடையவனும் ` என்று உரைத்தலுமாம் . ` உச்சிப்போதன் ` என்பதற்கு , ` தலையில் பூவையணிந்தவன் ` என உரைப்பாரும் உளர் . பட்டி - பட்டினை உடையவன் . ` பட்டு ` என்றது , ` ஆடை ` என்னும் , அளவாய் நின்றது , வேதத்தில் வல்லவரை , ` பட்டர் ` என்றல் அறிக ; ` பட்டராகில் என் சாத்திரங் கேட்கில் என் ` ( தி . 5 ப .99 பா .3.) என்பது திருநாவுக்கரசர் திருமொழி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம்
உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக்
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
முடியன் காரிகை காரண மாக
ஆரூ ரைம்மறத் தற்கரி யானை
அம்மான் றன்திருப் பேர்கொண்ட தொண்டன்
ஆரூ ரன்னடி நாயுரை வல்லார்
அமர லோகத் திருப்பவர் தாமே

பொழிப்புரை :

` பரவை ` என்பவள் முன்னிலையாக , எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத் தக்க ஊராய் , தான் அவளுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கியலாததாய் அமைந்துவிட்ட திருவாரூர் இறைவனை , கார் காலத்தில் பூக்கின்ற , மணங்கமழுங் கொன்றைமாலையை அணிந்த முடியையுடைய வனாகிய அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட . அவன் அடிக் கீழ்க் கிடக்கும் நாய் போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பதிகத்தைப் பாட வல்லவர் , அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம் .

குறிப்புரை :

` ஆரூரை மறவாமைக்குப் பரவை ஒரு வழியாய் அமைந்தாள் ` என்றபடி . ` ஆரூரைமறத்தற்கரியானை ` என்றாரேனும் , ` மறத்தற்கரிய ஆரூரானை ` என்றலே திருவுள்ளம் என்க . ` காரூர் ........ முடியன் ` என்றதனை , ` அரியானை ` என்றதன் பின்னரும் , ` அடி நாய் ` என்றதனை , ` தொண்டன் ` என்றதன் பின்னரும் வைத்துரைக்க . ` அமரலோகம் `, வடமொழித் தொகைச் சொல் .
சிற்பி