திருவிடைமருதூர்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே

பொழிப்புரை :

என் அப்பனே , திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே , கழுதையானது குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால் , அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி , அனைவரும் நகைப்பர் ; அது போல , அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந் தடுமாறி , வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல , இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேனாயினேன் ; ` மனமே , நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய் ` என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும் , ` அங்கணனே , அரனே ` என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு , நீ , மனம் இரங்கி , உய்யும் நெறி யொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` நகைப்பர் ` என்பது , ` கைப்பர் ` என முதற்குறையாய் வந்தது . இனி , ` கைத்தல் , வெறுத்தல் ` என்றுமாம் . ` பாழ்புகக் கைப்பர் ` எனக் கூட்டுக . ` அதுபோல ` என்றது , ` அவ்வாறே பிறர் நகைக்கும் படி ` என்றவாறு . ` நின் தொண்டினை மேற்கொண்டு ` என்றது ஆற்றலான் விளங்கிற்று . ` பழுதாக ` என்னும் ஆக்கச் சொல் தொகுத்தலாயிற்று . ` என ` என்றதனை , ` மனனே ` என்றதனோடுங் கூட்டி , இரு தொடர்ப் படுத்துக . ` எந்தை பிரான் ` என்றது , எந்தைக்குப் பிரான் என்னும் பொருளதாகலின் , அதனாற்போந்த பொருள் இதுவே யாயிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்
அரைத்த மஞ்சள தாவதை யறிந்தேன்
அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
உரைப்பன் நானுன சேவடி சேர
உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
இரைப்ப னேனுக்கொர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , நரையும் மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும் ; அவற்றால் இவ்வுடம்பு , அரைக்கப்பட்ட மஞ்சள் போல அழகிழந் தொழிவதாம் ; இவற்றை அறிந்தேனாயினும் , நன்மை இல்லாத செயல்களையே பற்றாகத் துணிந்துசெய்து இளைத்தேன் . அதனால் , கூற்றுவனுக்கு அஞ்சுதல் உடையனாயினேன் ; ஆகவே , இதுபோழ்து நான் உன் திருவடிகளை அடைய உன்னை வேண்டுவேனாயினேன் ; அறிவது அறிந்து வாழும் வாழ்க்கையைச் சிறிதும் அறியாத , ஆரவாரச் சொற்களையுடையேனாகிய எனக்கு . நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` மூப்பு ` என்பது போல , ` நரைப்பு ` என்பதும் தொழிற் பெயர் . ` இன்னே வரும் ` என்றது ` விரைய வரும் ` என்றவாறாம் . ` நன்றியில் வினையே துணிந்தெய்த்தேன் ` என்றதனை , ` அரைத்த மஞ்சளதாவதை யறிந்தேன் ` என்றதன் பின்னர்க் கூட்டுக . அரைத்து வைக்கப்பட்ட மஞ்சள் , அப்பொழுது அழகிதாய் இருந்து , சிறிது நேரத்திற்குப்பின் வெளுத்துப்போவதாம் , இதனை , ` வெயில் மஞ்சள் போல் ` என்று எடுத்துக்கூறுதல் வழக்கு . அது , பகுதிப்பொருள் விகுதி . ஆவதற்கு , ` உடம்பு ` என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது . ஆக்கம் உவமை குறித்தது . ` உழையாது ` பயன் விரும்புவார்போல , நன்றியில் வினையே செய்து , உன் திருவடிகளை அடைய விரும்பி உன்னை வேண்டுகின்றேன் ` என்றபடி . இரைப்பன் , வெற்றோசை செய்பவன் . தனக்கு இயைபில்லாததனை வேண்டுதலின் , அது வெற்றோசையாயிற்று . ` இவ்வாறாயினும் , நீ கருணையாளனாதலின் , என் விருப்பத்தினை நிரப்புதல் வேண்டும் ` என்று வேண்டினார் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திட ருற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

என் தந்தையே , திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே , புல்லின் நுனியில் உள்ள பனித்துளி , வெவ்வியவாகிய கிரணங்களையுடைய பகலவனை எதிர்ப்பட்டாற் போல்வதாகிய இம்மானுட வாழ்க்கை ஒரு பொருளாதல் இல்லை ; ஏனெனில் , ` இன்றைக்கு இன்பம் உளதாகும் ; நாளைக்கு இன்பம் உளதாகும் ` என்று நாள்தோறும் நினைந்து ஏமாறினேன் ; இனி மேற்றான் , எனக்கு என்ன உண்டாக இருக்கின்றது ! ஆதலால் , முன்பே உன்னுடைய செவ்விய திருவடியைச் சேர விரும்பாது , கொண்டது விடாத மூர்க்கனான நிலையிலே காலமெல்லாம் போய்விட்டன ; இப்பொழுதே எனக்கு நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` பொருள் ` என்றதன்பின் , ` ஆதல் ` என்பது வருவிக்க . ` இற்றைக்கு ` என்றாற்போலவே , ` நாளைக்கு ` என உரைக்க . ` இடருற்றனன் ` என்றதனால் , எதிர்நோக்கியது இன்பத்தை யாயிற்று . ` இன்று நன்று நாளைநன் றென்று நின்ற இச்சையாற் பொன்று கின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின் ` என்று அருளிச் செய்ததுங் காண்க ( தி .2 ப .99 பா .1) ` முன் ` என்பது , ` முன்னம் ` என வருதல்போல , ` இன் ` என்பது , ` இன்னம் ` என வரும் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவு மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

மாலைக்காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடிய வனே , திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே , என் தந்தையே திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , முற்பிறப்பிற் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலி னால் , அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் போயின ; நன்மை தீமைகளைச் சிந்தித்து , உலகப்பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேனாயினேன் ; உலகியலிலும் , இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு சிறிது ஈதலும் செய்தி லேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` முந்தி ` என்றது , இகர ஈற்றுப் பெயர் , சிந்தித்தற்குச் செயப்படுபொருள்கள் வருவிக்கப்பட்டன . ` சிறுச்சிறிது ` என்றது , ` சிறுமையையுடைய சிறிது ` என நின்று , ` மிகச் சிறிது ` எனப் பொருள் தந்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
ஐவ ரும்புர வாசற ஆண்டு
கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்
கடைமு றைஉனக் கேபொறை யானேன்
விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
வேண்டேன் மானுட வாழ்க்கைஈ தாகில்
இழித்தெ னென்றனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , நன்மைகளையெல்லாம் அழிப்பவராகிய ஓர் ஐவர் என்னை ஆளுதலுடையர் ; அவ் வைவரும் என்னை ஆளுதலை நன்றாகச் செய்து , ` இனி இவனாற் பயனில்லை ` என்று கழித்து , என்னைத் தங்கள் காற்கீழ்ப் போகட்டுப் போய்விட்ட பின்பு . முடிவில் உனக்கே நான் சுமையாயினேன் ; அதன்பின்பே நான் விழிப்படைந்து , உண்மையை உணர்ந்தேன் ; மானுடவாழ்க்கைதான் இத்தன்மையதே யென்றால் , இனி இதனை யான் விரும்பேன் ; இதனை மிக்க இழிவுடை யதாக உணர்ந்துவிட்டேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` ஐவர் ` என்றது , ஐம்பொறிகளை . புரவு - புரத்தல் அஃது அடிமைகொண்டு ஆளுதலைக் குறித்தது . ` அவ் வைவர்கள் ` என எடுத்துக்கொண்டுரைக்க . ` ஆசற ` என்றது , ` அவர்தம் விருப் பத்திற் குறையில்லாதபடி ` என்றவாறு . கழித்துக் காற்பெய்தது , உடல் தளர்ந்தமைபற்றி ; ` கால் ` என்ற விடத்து , ` கீழ் ` என்னும் பொருளுடைய கண்ணுருபு விரிக்க . ` உனக்கே பொறையானேன் ` என்றது , ` பிறராலன்றி உன்னாலே அளிக்கத்தக்கவனாயினேன் ` என்றதாம் . ` கடைமுறை ` என்றது , முன்பே , ` உனக்கு அடைக்கல மாகற்பாலேன் ; அங்ஙனம் ஆகாதொழிந்தேன் ` என்று இரங்கியவாறு . ` விழித்துக்கண்டனன் மெய் ` என்றது , உடல் தளர்ந்தபின் நல்லறிவு எய் திற்று என்றதாம் . நாயனார் தாம் அந் நிலையினரல்லராயினும் , ஞான சம்பந்தரைப்போல இளமையிலே இறைவனை அடையாதொழிந் தமையை நினைந்த வருத்தத்தால் அங்ஙனம் அருளினார் என்க . ` இழித்தேன் ` என்பது குறுகிநின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
கற்றி லேன்கலை கள்பல ஞானங்
கடிய வாயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்எனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , யான் , அழகிய , நுண்ணிய இடையினையுடைய மகளிரோடு கூடி மயங்கி நின்று , தீவினையும் நல்வினையுமாகிய இரு வினைகளை மிகுதியாகச் செய்தும் , மெய்ந்நூல்கள் பலவற்றிற் புகுந்து ஞானத்தை யுணராதும் மிகவுங் கொடுமையான செயல்களைச் செய்தேன் ; அதனால் , பற்றத் தக்கதொரு பற்றுக்கோடு இலனாயி னேன் ; இவ்வாறு பலவாகிய பாவங்களைச் செய்து பாவியாகிய யான் , எதன் பொருட்டு உயிர்வாழ்கின்றேன் ! எனக்கு , நீ , உய்யும் நெறி யொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` குற்றம் , குணம் ` என்பன , அவற்றைத் தரும் செயல்கள் மேல் நின்றன . மயக்கமாவது , ஐம்புல இன்பமே இன்பம் எனக் கொள்ளுதல் . ஐம்புல ஆசை உளதாயவழி , அவ்வாசை அடியாக மயக்கமும் , அம்மயக்கம் அடியாக இருவினைகளும் , அவ்விருவினை அடியாக ஞானநூற் பொருளை உணரமாட்டாமையும் , அம்மாட்டாமை அடியாக உயிர்க்கு இறுதி பயக்கும் செயல்களில் அஞ்சுதல் இன்மை யும் , அவ்வின்மை யடியாகத் துணையின்றி அலமருதலும் உளவாதல் ஒருதலை என்பதனை அருளியவாறு . ஐம்புல ஆசைகளுள் தலையாய மகளிராசையின் கொடுமையை விரித்தபடியாம் . ` பாவங்கள் செய்தேனாய்ப் பாவியேனாகியேன் ` என்றது , மேற்போந்தவாற்றா லெல்லாம் உளதான நிலையைத் தொகுத்து அருளிச்செய்ததாம் . ` எற்றுக்கு ` என உருபு விரிக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்
குற்றஞ் செற்ற மிவைமுத லாக
விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்
வேண்டில் ஐம்புலன் என்வச மல்ல
நடுக்க முற்றதோர் மூப்புவந் தெய்த
நமன்த மர்நர கத்திடல் அஞ்சி
இடுக்க ணுற்றனன் உய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , ஈகை வழியாகப் புகழைத் தரத்தக்க பொருளை , உலோபமும் , பகைமையும் காரணமாகப் பிறருக்குயான் கொடுக்க மாட்டேன் ; ஆசையும் , கோபமும் ஆகிய இவைகளை ஒழிக்க மாட்டேன் ; ஐம்புலன்கள்மேற் செல்கின்ற ஆசைகளை விடநினைத் தால் , யான் அவற்றின் வயத்தேனல்லது , அவை என் வயத்தன அல்ல ; அதனால் , உடல் நடுங்குதல் பொருந்தியதாகிய , ` மூப்பு ` என்பதொன்று வந்து அடைய , அப்போது இயமனது ஏவலர் என்னைக் கொண்டு சென்று நரகத்தில் இடுதலை நினைத்து அஞ்சித் துன்புறுவேனா யினேன் ; எனக்கு , நீ , உய்யும் நெறியொன்றை வழங்கி யருளாய் .

குறிப்புரை :

` குற்றம் ` என்றது ஏற்புழிக்கோடலால் உலோபத்தைக் குறித்தது . பகைமை , தாம் வேண்டியதனை முடியாமை பற்றி வருவது . ` காமம் , வெகுளி , மயக்கம் ` என்னும் மூன்றனுள் , சிறப்புடைய இரண்டனை , ` வேட்கையும் சினமும் ` என எடுத்தோதியருளினார் . ` வேண்டில் ` என்றது , ` விடவேண்டில் ` என்றவாறு , ` ஐம் புலன் ` என்றது , அவற்றின்மேற் செல்லும் ஆசையை . ` கிற்றிலேன் ` எனவும் , அல்ல ` எனவும் அருளியன , தம் மாட்டாமையைச் சொல்லி இரந்தவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

ஐவ கைஅரை யர்அவர் ஆகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்
அவ்வ கைஅவர் வேண்டுவ தானால்
அவர வர்வழி யொழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகா
தீவ ணாசிவ னேஎரி யாடீ
எவ்வ கைஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

சிவலோகத்திற்குத் தலைவனே , நெருப்புப் போலும் நிறம் உடையவனே , சிவபெருமானே , தீயோடு நின்று ஆடுபவனே , திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , ஐவர் வேறுபட்ட தன்மையையுடைய அரசராய் என்னை ஆட்சி கொண்டு ஒருகாலும் விட்டு நீங்காதிருக்கின்றனர் . அவ்வாறு அவர் , தாம் தாம் வேறு வேறுவகையில் என்னை ஆள விரும்பினால் , யான் அவர் வழியே அவர் வேண்டுமாற்றிலெல்லாம் சென்று நடந்து , செய்வது இன்னது என்று அறிகின்றிலேன் ; எனக்கு உய்யும் நெறியாவது எந் நெறி ? அதனை வழங்கியருளாய் .

குறிப்புரை :

` அவர் நீங்கார் ` எனப் பின்னர்ப் போந்து அருளினாரா யினும் , ` ஐவர் ஐவகை அரையராகி ` என முன்னர் ஓதுதலே கருத் தாகக் கொள்க . ` ஐவர் நீங்கார் ` என்றே பாடம் ஓதுதலுமாம் . ` அவராகி ` என்றதில் அவர் , பகுதிப்பொருள் விகுதி , ` வந்து ஒழுகி ` எனக் கூட்டுக . ` வந்து ` என்றது , இடவழுவமைதி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

ஏழை மானுட வின்பினை நோக்கி
இளைய வர்வலைப் பட்டிருந் தின்னம்
வாழை தான்பழுக் குந்நமக் கென்று
வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்
கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்
போத மும்பொரு ளொன்றறி யாத
ஏழை யேனுக்கோர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே , அறிவில்லாத , மானுட இன்பத்தைக் கருதி , முன்னர்ப் பழத்தைத் தந்த வாழை , இனியும் நமக்கு அவ்வாறே தரும் என்று கருது வாரைப்போல , இளமையுடையராய் இன்பம் தந்த மகளிர் என்றும் இவ்வாறே இருந்து இன்பம் தருவர் என்று கருதும் மயக்கமாகிய வலையுள் அகப்பட்டு , அதனானே , வஞ்சனையையுடைய வலிய வினையென்னும் வலையிலும் அகப்பட்டு , அறிவு முதிராத பொது மக்கள் செல்லும் வழியிடத்து நின்று , அறிவின் இயல்பையும் , அதற்குப் புலனாய் நிற்கும் பொருளின் இயல்பையும் சிறிதும் அறியாத எளி யேனுக்கு , உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய் .

குறிப்புரை :

வாழை , ஒரு குலைக்குமேல் மறுகுலை ஈனாது கெடுதல் இளமை , விரையக்கெடுதற்கு உவமை என்க . வினைக்கு வஞ்சனை யாவது , தோன்றாது நின்று வருத்துதல் . ` உள்வலை ` என்றதனை ` வலையுள் ` என மாற்றுக . ` பக்கம் ` என்றதன்பின் , ` நின்று ` என்பது வருவிக்க . ` பொருள் ` என்றவிடத்தும் எண்ணும்மை விரிக்க . ` போக மும் பொருள் ` என்பது பாடமாயின் , ` இன்பமும் , அதனைத் தருகின்ற பொருளும் ` என உரைக்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி
ஐவ னஞ்சுமந் தார்ந்திரு பாலும்
இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையு மின்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே

பொழிப்புரை :

அரைக்கப்படுகின்ற சந்தனக் கட்டையையும் , அகிற் கட்டையையும் இருமருங்கும் தள்ளிக்கொண்டு , மலை நெல்லைத் தாளோடு மேல்இட்டுக்கொண்டு , நிறைந்து ஒலிக்கின்ற காவிரியாற்றின் தென்கரைமேல் உள்ள திருவிடைமருதூரில் எழுந் தருளியிருக்கின்ற எம் குலதேவனாகிய பெருமானைப் பாடிய , நம்பி யாரூரனாகிய எனது உணர்வு மிக்க இப்பாடல்களை , மனத்தால் விரும்பிப் பாட வல்லவர்கள் , நரைத்தலும் , மூத்தலும் , இறத்தலும் இன்றி அவ்விறைவனது செவ்விய திருவடிகளை அடைவர் ; இது திண்ணம் .

குறிப்புரை :

` ஊரன் ` என்றது இடவழுவமைதி . நடலை - துன்பம் ; அது , மிக்க துன்பமாகிய இறப்பைக் குறித்தது . ` இறத்தலின் மேலாய துன்பம் இல்லை ` என்பதனை , ` சாதலின் இன்னாததில்லை ` என்னும் திருக்குற ளாலும் உணர்க (230). ` ஆர்த்து ` என்பது , பாடம் அன்று .
சிற்பி