திருக்கோலக்கா


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

புற்றில் வாளர வார்த்தபி ரானைப்
பூத நாதனைப் பாதமே தொழுவார்
பற்று வான்துணை எனக்கெளி வந்த
பாவ நாசனை மேவரி யானை
முற்ற லார்திரி புரம்ஒரு மூன்றும்
பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்
கொற்ற வில்அங்கை ஏந்திய கோனைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

புற்றில் வாழும் கொடிய பாம்பைக் கட்டியுள்ள பெருமானும் , பூத கணங்கட்கு முதல்வனும் , தன் திருவடியையே வணங்குவோர் விடாது பற்றுகின்ற சிறந்த துணைவனும் , எனக்கு எளியவனாய் எதிர் வந்தவனும் , அடியவரது பாவங்களைப் போக்கும் தொழிலை உடையவனும் , யாவராலும் அடைதற்கு அரியவனும் , செருக்கு மிக்கவர்களது மூன்று ஊர்கள் அழியுமாறு , திருமால் அம்பாகி நிற்க , வெற்றியைத் தரும் பெரிய மலையாகிய வில்லை அங்கையில் ஏந்திய தலைவனும் ஆகிய இறைவனை , அடியேன் , திருக்கோலக்கா வில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` பூத நாதன் ` என்றது , ` உயிர்கட்கெல்லாம் முதல்வன் ` என்னும் கருத்துடையது . வணங்குகின்றவர் , மேலும் விடாது பற்றி நிற்றல் , அவனது இன்ப நுகர்வினாலாம் . ` துணையை ` என்னும் ஐயுருபு , தொகுத்தலாயிற்று . முற்றல் - முதிர்தல் ; அது , செருக்கு மிகு தலைக் குறித்தல் , வழக்கினுள்ளுங் கண்டுகொள்க . ` வெளிப்பட ` என்பது , ` கண்டுகொண்டேன் ` என வலியுறுத்தோதியதனால் பெறப் பட்டது . ஏகாரம் , தேற்றம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்
ஆய நம்பனை வேய்புரை தோளி
தங்கு மாதிரு வுருவுடை யானைத்
தழல்ம திசடை மேற்புனைந் தானை
வெங்கண் ஆனையின் ஈருரி யானை
விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்
கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

துணை நூல்களாகிய ஆறும் , முதல் நூல்களாகிய வேதம் நான்கும் ஆகி நிற்கின்ற நம்பனும் , மூங்கில் போலும் தோள் களையுடைய உமாதேவி பொருந்தியுள்ள , சிறந்த திருமேனியை யுடையவனும் , ஒளிர்கின்ற பிறையைச் சடையின் மேற் சூடியவனும் , சினத்தால் எரிகின்ற கண்களையுடைய யானையினது உரித்த தோலை யுடையவனும் ஆகிய இறைவனை , அடியேன் , விண்ணில் உள்ளவர் களும் , மண்ணில் உள்ளவர்களும் துதிக்கின்ற , தேன் பொருந்திய சோலையின்கண் குரா மலர்கள் மணங்கமழ்கின்ற திருக்கோலக்கா வினில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` தழல் மதி ` வினைத்தொகை . தழலுதல் - ஒளிர்தல் . ` குரா ` என்பது , செய்யுளாகலின் , குறியதன்கீழ் ஆகாரம் குறுகிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

பாட்ட கத்திசை யாகிநின் றானைப்
பத்தர் சித்தம் பரிவினி யானை
நாட்டகத் தேவர் செய்கையு ளானை
நட்டம் ஆடியை நம்பெரு மானைக்
காட்ட கத்துறு புலியுரி யானைக்
கண்ணொர் மூன்றுடை அண்ணலை அடியேன்
கோட்ட கப்புன லார்செழுங் கழனிக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

பாட்டின்கண் இசைபோன்று எல்லாப் பொருளிலும் வேறறக் கலந்து நிற்பவனும் , அடியார்களது உள்ளம் அன்பு செய்தற்கு இன்பமாகிய பயனாய் உள்ளவனும் , மண்ணில் வாழும் தேவராகிய அந்தணர்களது வழிபாட்டின் கண் விளங்குகின்றவனும் , நடனம் ஆடு பவனும் , நமக்குத் தலைவனும் , காட்டின்கண் வாழ்கின்ற புலியினது தோலை உடையவனும் , கண்கள் மூன்று உடைய பெருமையுடைய வனும் ஆகிய இறைவனை , அடியேன் , வரம்பகத்து நீர் நிறைந்த செழுமையான வயல்களையுடைய திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` இசையாகி ` என்னும் ஆக்கம் , உவமை குறித்து நின்றது . ` சித்தம் பரிதலுக்கு இனியானை ` என்க . ` பூசுரர் ` என்னும் பெயர்பற்றி , ` நாட்டகத் தேவர் ` என்று அருளினார் . ` நம்பெருமான் ` எனத் தம்மைப் பன்மையாற்குறித்தது , அவனுக்கு ஆளாகிநின்ற சிறப்புப்பற்றி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

ஆத்த மென்றெனை ஆள்உகந் தானை
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார்த்த யங்கிய முலைமட மானை
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத்
தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங்
கூத்த னைக்குரு மாமணி தன்னைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

என்னை ஆளாகக் கொள்ளுதலே தனக்குவாய்மை யாவது என்று கருதி என்னை அவ்வாறே விரும்பி ஆண்டருளின வனும் , தேவர்கட்குத் தலைவனும் , முருகனைப் பெற்ற கச்சின்கண் விளங்குகின்ற தனங்களையுடைய இளைய மான்போலும் தேவியை இடப்பாகத்தில் வைத்து , வானுலகத்தில் உள்ள கங்கையைச் சடையின் கண் மறைத்த தூயவனும் , மங்கலம் உடையவனும் , செழுமையான தேன்போல இனிப்பவனும் , தில்லையம்பலத்துள் நிறைந்து நின்று ஆடுகின்ற கூத்தினை யுடையவனும் , ஒளியையுடைய மாணிக்கம் போல்பவனும் ஆகிய இறைவனை , அடியேன் , திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` திருக்கயிலையில் அருளிச்செய்தபடி தடுத்தாட் கொள்ளுதலே , தான் வாய்மையை யுடையவன் என்பதற்கு இயை வதாம் என்று வந்து ஆண்டானன்றி , என் தகுதி பற்றி வந்து ஆண்டி லன் ` என்றபடி . ` குமரனைப் பயந்த ` என்றது இறைவிக்கு அடை யாயும் , இறைவனுக்கு அடையாயும் இயையும் இருநிலைமையும் உடையது என்க . தில்லையம்பலத்துள் நிறைதலாவது , அவ்விடம் பொலிவுபெற நிற்றல் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

அன்று வந்தெனை அகலிடத் தவர்முன்
ஆள தாகஎன் றாவணங் காட்டி
நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த
நித்தி லத்திரள் தொத்தினை முத்திக்
கொன்றி னான்றனை உம்பர்பி ரானை
உயரும் வல்லர ணங்கெடச் சீறுங்
குன்ற வில்லியை மெல்லிய லுடனே
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

அன்று அந்தணனாய்த் திருநாவலூரில் வந்து , அகன்ற இப்பூமியில் உள்ளார் பலர் முன்பும் , ` நீ எனக்குச் செய்யும் அடிமையைச் செய்க ` என்று சொல்லி ஓலை காட்டி வழக்குப்பேசி நின்று , பின்பு , திருவெண்ணெய்நல்லூரில் சென்று மறைந்த , முத்தினது திரட்சியமைந்த கொத்துப்போல்பவனும் , முத்தியளித்தற்குப் பொருந் தியவனும் , தேவர்கட்குத் தலைவனும் , உயர்ந்த வலிய மதில்கள் அழியுமாறு சினந்த , மலைவில்லைஉடையவனும் ஆகிய இறைவனை , இறைவியுடனே , அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன் .

குறிப்புரை :

` ஆள் ` என்பது , சொல்லால் அஃறிணையாயும் நிற்கு மாதலின் , ` அது ` என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்றது . ` முத்திக்கு ஒன்றினான் ` என்றது , ` முத்தியை யளிப்பவன் அவன் ஒருவனே ` என்றவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

காற்றுத் தீப்புன லாகிநின் றானைக்
கடவு ளைக்கொடு மால்விடை யானை
நீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை
நிரம்பு பல்கலை யின்பொரு ளாலே
போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப்
போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற்
கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

காற்றும் , தீயும் , நீரும் ஆகி நிற்பவனும் , எல்லாப் பொருள்களையும் கடந்தவனும் , கொடிய பெரிய இடப ஊர்தியை யுடையவனும் , நீற்றைத் தரும் நெருப்புருவாய் ஓங்கி நிற்பவனும் , நிறைந்த பல நூல்களினது பொருள் வழியே துதித்துத் தன் திருவடியை வணங்குகின்ற அவனது உயிரைப் போக்குவோனது உயிர் நீங்கும்படி தனது திருவடியால் கூற்றுவனுக்கு அழிவைச் செய்த , ஒலிக்கின்ற கழலை யணிந்தவனும் ஆகிய இறைவனை , அடியேன் திருக்கோலக்கா வில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

இடைநின்ற பூதங்களை அருளவே , முதலிலும் இறுதி யிலும் உள்ள , ` வான் , நிலம் ` என்னும் பூதங்களும் கொள்ளப்படும் . ` காற்றுத் தீப் புனல் `, உம்மைத்தொகை . ` கொல்லேறு ` என்றல் மர பாதல் பற்றி , ` கொடுவிடை ` என்று அருளினார் . ` நீற்றுத் தீ ` என்றது , தீயினது தன்மையை விதந்தவாறு . ` தொழும் அவன் ` என்றது மார்க் கண்டேயரை . கூற்றுவனை உதைத்த காரணத்தை எடுத்தோதுகின்றா ராதலின் , ` தொழும் அவன் உயிரைப் போக்குவான் உயிர்நீக்கிட ` என , வேறொருவன்போல அருளினார் . ` நீங்கிட ` என்பதும் பாடம் . ` குரை கழல் ` என்றது , உதைத்த திருவடியின் சிறப்பை அருளியபடி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண்
டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத்
துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த
சோதி யைச்சுடர் போல்ஒளி யானை
மின்ற யங்கிய இடைமட மங்கை
மேவும் ஈசனை வாசமா முடிமேற்
கொன்றை அஞ்சடைக் குழகனை அழகார்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

அன்று பிரமனது தலையை அரிந்து அதன்கண் பிச்சை ஏற்றுத் தேவர்கட்குத் தனது திருவருள் நிலையை வெளிப் படுத்தியவனும் , நெருங்கிய பசிய கழலையணிதற்கு உரிய திருவடி யில் சிலம்பையணிந்த ஒளிவடிவினனும் , விளக்குப்போலும் விளக்கம் உடையவனும் , மின்னலினது தன்மை விளங்கிய இடையினையுடைய இளமங்கை விரும்பும் கடவுளும் , மணங்கமழுமாறு தலையின் மேல் கொன்றை மாலையையணிந்த அழகிய சடையை உடைய அழகனும் ஆகிய இறைவனை , அடியேன் , அழகு நிறைந்த திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` பலி ` என்றது , இங்குத் திருமால் முதலிய தேவ ரிடத்துக்கொண்ட இரத்த பிச்சையை . அயன் சிரத்தை அரிந்ததும் , அதில் இரத்த பிச்சை ஏற்றதும் தேவர்களது செருக்கை நீக்கித் தெளிவைத் தருதற்பொருட்டுச் செய்தனவாதலின் , ` அயன்றன் சிரம் அரிந்து அதிற் பலிகொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை ` என்று அருளினார் . ` துன்று பைங்கழல் ` என்றது அடையடுத்த ஆகு பெயர் . ஒரு காலில் கழலை அணிந்து மற்றொரு காலில் சிலம்பை அணிந்தமையின் , இவ்வாறு அருளிச்செய்தார் . சுடர்போல் ஒளியாத லாவது , எப்பொருளையும் விளக்கி நிற்றல் . ` மங்கை மேவும் ` என்ற தனை , ` மங்கையால் மேவப்படும் , மங்கையை மேவும் ` என இரு வகையாகவுங் கொள்க . ` வாசம் ஆக ` என்னும் எச்சம் , ` கொன்றை ` என்றதன்பின் உருபோடு தொக்குநின்ற ` அணிந்த ` என்பதனோடு முடிந்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

எந்நாளும் இனிய இசையால் தமிழ்ப்பாடலை எங்கணும் பரவச்செய்த திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்கு , அவர் தம் கைகளால் ஒற்றறுத்துப் பாடுதலுக்கு இரங்கி , பலருங் காணத் தாளம் ஈந்த கருணையாளனும் , என் உள்ளத்துள் கொள்ளப்படும் பொருளாய் உள்ளவனும் , தன்னால் ஆளப்படும் பூதங்கள் பாடல் களைப்பாட , அவற்றிற்கு ஏற்ப நின்று ஆடுகின்ற அருள் பொருந்திய கண்களையுடையவனும் , பதினெண் கணங்களாலும் வணங்கப் படுபவனும் , திருக்கோளிலியில் உள்ள பெருங்கோயிலில் எழுந்தருளி யிருப்பவனும் ஆகிய இறைவனை அடியேன் , திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

` ஈந்து இரங்கும் தன்மையாளனை ` என்றாரேனும் , ` இரங்கி ஈயும் தன்மையாளனை ` என்றலே திருவுள்ளம் என்பதனை , ` திருஞான சம்பந்தர் திருக்கைக ளால்ஒற்றிப் பெருகார்வத் துடன்பாடப் பிஞ்ஞகனார் கண்டிரங்கி அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் பொருண்மாலைத் திருப்பதிகம் பாடியேபோற்றிசைத்தார் ` ( தி .12 ஏ . கோ . புரா .154) என , இதன் பொருளைச் சேக்கிழார் விளக்கியருளியவாற்றால் உணர்க . பதினெண்கணத்தை , ` எண்கணம் ` என்றது , முதற்குறை . ` இறைஞ்சும் ` என்றதற்கு , கருத்துப்பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது . ஞானசம்பந்தர் பாடலுக்கு இரங்கினமையை நினைந்தவர் , தம் பாடலுக்கும் இரங்கி , ஆளும் பூதங்களை ஆளாக ஈந்து , குண்டை யூரிற்பெற்ற நெல்மலையைத் திருவாரூரில் அட்டித்தரப் பணித் தமையையும் நினைந்து , ` கோளிலிப்பெருங் கோயிலுளானை ` என்று அருளினார்போலும் ! திருக்கோலக்கா , திருஞானசம்பந்தருக்குத் திருத்தாளம் அளித்த தலமும் , திருக்கோளிலி , நாயனாருக்கு நெல்லிட ஆட்கள் அளித்த தலமும் ஆதல் அறிந்துகொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக்
கன்றி ரங்கிய வென்றியி னானைப்
பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள்
பரவி யும்பணி தற்கரி யானைச்
சிரக்கண் வாய்செவி மூக்குயர் காயம்
ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக்
குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே

பொழிப்புரை :

அன்று இராவணனது வலிமையை முதலில் அழித்து , பின்பு அவன் பாடிய இசைக்கு இரங்கி அருள்புரிந்த வெற்றியை யுடையவனும் , விரிந்த உலகத்தைப் படைத்தும் , உண்டும் களித்தவர்கள் துதித்துப் பணிதற்கும் அரியனாய் உள்ளவனும் , தலையில் அமைந்த , ` கண் , வாய் , காது , மூக்கு ` என்பவற்றோடு , நீண்ட உடம்புமாய் நின்று , தீமையைத் தரும் வினையை ஒழித்த எம் பெரு மானும் ஆகிய இறைவனை , அடியேன் , சோலைகளில் குரங்குக் கூட்டம் குதித்துத் திரிகின்ற , வயல் சூழ்ந்த , திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன் .

குறிப்புரை :

உலகத்தை அளித்தவன் ( படைத்தவன் ) பிரமன் ; உண்டவன் , திருமால் . ` உகத்தல் `, ஈண்டு , களித்தல் . ` அளித்து , உண்டு ` என்ற சிறப்புச் செய்தென் எச்சங்கள் , ` உகந்தவர் ` என்ற பொது வினைப்பெயரோடு முடிந்தன . ` இவளும் இவனும் , சிற்றில் இழைத்தும் சிறுபறையறைந்தும் விளையாடுப ` என்றல்போல ; எனவே , ` அளித்து ` என்னும் எச்சம் , எண்ணின்கண் வந்ததாம் . ` காயம் ` என்றது , மெய் என்னும் பொறியை , ஐம்பொறிகளை எடுத் தோதவே , ஏனைய கருவிகள் எல்லாம் தழுவப்படும் . இறைவன் , தன்னால் ஆட்கொள்ளப்பட்டவர்களது கருவி கரணங்களைத் தன் கருவி கரணங்களாகவே கொண்டு , அவற்றைத் தன் வழியே செலுத்தி நிற்றலின் , ` கண் முதலிய கருவிகளாகி ` என்றும் , அதனால் , அவன் அடியார்க்கு நுகர்வினையான் வரும் உள்ளத்திரிபும் , அத்திரிபு காரணமாகக் கிளைக்கும் புதுவினையும் இலவாமாகலின் , ` தீவினை தீர்த்த எம்மானை ` என்றும் அருளிச் செய்தார் . ` நற்பதத்தார் நற்பதமே ` என்று எடுத்துக்கொண்டு , ` சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் இதுஉன் தன்மை நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள் நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே ` ( தி .6 ப .95 பா .4) `.................. கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாயுட லகத்தே குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி ` ( தி .8 திருவா - திருவண் -171-173) ` எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான்இதற் கிலனொர்கைம் மாறே ` ( ? . கோயில்திருப் -10) என்றாற்போல , ஆரா அன்பால் அருளிப்போந்த அருட்டிருமொழிகள் பலவும் இப்பொருளை வெளியிடுவனவேயாம் . ` தீவினை ` என்ற தனை , இங்கு , இயைபின்மை நீக்கிய விசேடணம் பெற்றதாகக் கொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக்
கோலக் காவுள்எம் மானைமெய்ம் மானப்
பாட ரங்குடி அடியவர் விரும்பப்
பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்
நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால்
நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
காட ரங்கென நடம்நவின் றான்பாற்
கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே

பொழிப்புரை :

ஆலம் விழுது போலும் சடைகளை யுடையவனும் , கரும்பு போல இனிப்பவனும் ஆகிய , திருக்கோலக்கா வில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை , உண்மையமைந்த பெரிய பாடல்களைப் பாடும் வழிவழி அடியவர் பலரும் விரும்புமாறு , அத்திருத் தொண்டிலே பழகும் , திருநாவலூரில் தோன்றிய , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் , உலகில் உள்ளவர்தாமும் மனம் உருகி அவனை முற்பட உணருமாற்றால் பாடிய பத்துப் பாடல் களாகிய இவைகளைப் பாடிய மாந்தர் , காடே அரங்கமாக நடனம் செய்பவனாகிய சிவ பிரானிடத்து உயர்கதியையும் பெறுவர் ; என்றும் நீடு வாழும் இடமும் அவர்க்கு அக்கதியேயாம் .

குறிப்புரை :

கோடரம் - மரக்கிளை ; அஃது இங்கு , ஆலம் விழுதின் மேற்று . ` பாடல் ` என்பது , எதுகை நோக்கி , ` பாடர் ` எனத் திரிந்து நின்றது . ` குடி அடியவர் ` என்றது , ` வழி வழி அடியவர் ` என்றதனை உணர்த்தற்கு . முன்னர் , ` பாடலை உடைய அடியவர் ` என்றதனால் , வாளா , ` பயிலும் ` என்று போயினார் . நாட்டில் உள்ளவரை , ` நாடு ` என்று அருளினார் . ` கதியும் ` என்னும் உம்மை , முன்னர் அடையற் பாலனவாகிய பலவற்றையும் தழுவிநின்ற எச்சத்தொடு சிறப்பு . ` பதி அவர்க்கு அதுவே ` என்றது , ` மீளப் பிறவார் ` என்றவாறு . ` ஆரூரன் ` என்றது , தம்மைப் பிறர்போல அருளிய வேறுமுடிபாகலின் , ` எம்மானை ` என்றவிடத்து , இடவழுவின்மை யறிக .
சிற்பி