திருத்தினைநகர்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்ற மில்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
கரிய சோதியை வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , நீ , திருநீற்றை அணிந்துள்ள அழகிய நெற்றியையுடையவனும் , அந்நெற்றியில் ஒரு கண்ணை உடைய வனும் , வரிசைப்பட்ட வளைகளையணிந்த உமையவளைத் தனது ஒரு கூற்றில் வைத்த செய்கையை யுடையவனும் , குற்றம் சிறிதும் இல்லாத வனும் , கற்றையாகிய அழகிய சடையின் கண் நீரைக் கட்டியுள்ள அழகனும் , தேவர்களுக்கு அரிய ஒளியாய் உள்ளவனும் ஆகிய , வரியையுடைய வரால் மீன்கள் துள்ளுகின்ற , சேற்றையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` தாங்கிய ` என்றன பலவற்றுள் ` ஆறுதாங்கிய ` என்றது ஒன்றொழித்து , ஏனைய , பான்மை வழக்கால் வந்தன . கொள்கை - கருத்து ; விருப்பம் ; அஃது அதன் காரியமாகிய செயலைக் குறித்தது . சிவம் - மங்கலம் ; நன்மை . அமங்கலமாகிய தீமைக்கு யாதும் இயைபின்றி , நன்மையே வடிவாய் உள்ளவன் இறைவன் ஒருவனே யாகலின் , ` சிவன் ` என்பது அவனுக்கே பெயராயிற்று . ` சிவன்எனும் நாமம் தனக்கே யுடையசெம் மேனிஎம்மான் ` என்ற திருமொழி ( தி .4 ப .112 பா .9) யுங்காண்க . இவ்வாறு நிரம்பிய மங்கலம் உடையனாதலைக் குறிக்கவே , அவனை , ` சிவக் கொழுந்து ` என்றும் அருளிச்செய்வர் ஆசிரியர் என்க . ` கொழுந்து ` என்றது , உருவகம் . இத்தலத்து இறைவன் பெயர் ` சிவக்கொழுந்தீசன் ` எனப்படுகின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

பிணிகொளாக்கை பிறப்பிறப் பென்னு
மிதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்
துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ
அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதில்மூன்
றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும்
ஐயன் வையகம் பரவிநின் றேத்தும்
திணியும் வார்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , நீ , நோயுடைய உடம்புகளிற் பிறத்தலும் , பின்பு அவற்றினின்று இறத்தலும் ஆகிய இவ்வல்லலை ஒழித்து இறைவன் திருவடியிணைக்கு ஆளாதலைத் துணிந்து நிற்க விரும் பினால் , அதற்கு வழிசொல்லுவேன் ; கேள் ; வஞ்சனையை இயல்பாக உடைய அசுரர்கள் வாழ்ந்த மூன்று ஊர்களை , அழகிய , கொடிய வில்லால் அழியுமாறு வெகுண்ட தலைவனாகிய , செறிந்த , நீண்ட சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , உலகமெல்லாம் , முன்னிலையாகவும் , படர்க்கையாகவும் நின்று துதிக் கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக ; மனமே , அஞ்சாதி .

குறிப்புரை :

துணிதல் , தன் காரியத்தையும் உடன் தோற்றி நின்றது . வற்புறுத்தற் பொருட்டு , மறித்தும் , ` நெஞ்? u2970?` என்று விளித்து உணர்த்தினார் . அணி , வில்லிற்குரியன பலவுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்
மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
முடியு மாகரு தேல்எரு தேறும்
மூர்த்தி யைமுத லாயபி ரானை
அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்
அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச்
செடிகொள் கான்மலி திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , நீ , மாவடுப்போலும் கண்ணிணை களையுடைய மாதர்பாற் செல்கின்ற மையலைப் பொருந்தி , அம் மையல் காரணமாகத் தோன்றுகின்ற பல , வஞ்சனைகளுக்கும் இடமாய்க் கெட்டொழிய நினையாதி ; மற்று , எருதில் ஏறுகின்ற மூர்த்தி யும் , எப்பொருட்கும் முதலாகிய பெருமானும் , அடியார்கள் , ` எம் அடிகள் ` என்று வணங்கித் துதிக்கும் அப்பனும் , இணையில்லாத பெருமையையுடைய தனங்களையுடைய உமைக்குத் தலைவனும் ஆகிய , புதல்களைக்கொண்ட காடுகள் நிறைந்த திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` அடைந்தால் , என்றும் கேடின்றி வாழ்வாய் ` என்றபடி . ` மடந்தையர் ` எனப் பன்மையாக அருளினமையால் , அது , மனைக் கிழத்தியல்லாத காமக் கிழத்தியரும் பரத்தையரும் ஆகிய பலரைக் குறித்தது . ஆகவே , ` வஞ்சனை ` என்றது , தன் எண்ணங்களை இற்கிழத் திக்கு மறைத்தலும் , அவர் ஒவ்வொருவரோடும் அவரிடத்தன்றிப் பிறர் மாட்டு அன்பில்லையாகக் காட்டுதல் முதலியவற்றால் அவரை அடைய முயலுதலும் போல்வனவற்றையாம் . அபரஞான பரஞானங் களே அம்மையின் தனங்களாதலின் , அவை ஒப்பிலவாதல் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற்
பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக்
காவ வென்றுழந் தயர்ந்துவீ ழாதே
அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி
மாவின் ஈருரி உடைபுனைந் தானை
மணியை மைந்தனை வானவர்க் கமுதைத்
தேவ தேவனைத் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , நீ , அகன்ற நிலப்பரப்பின்கண் தீவினை களையே செய்தும் , பொய்கள் பலவற்றையே பேசியும் திரிந்து , உயிர்வாழ்வதற்கு இவையே ஏற்புடையன என்று கருதித் துன்பமுற்று மெலிந்து அழியாதி ; மற்று , உலகிற்கு முதல்வனாய் உள்ளவனது இயல்புகளை , நல்லாசிரியர்பாற் பெற்ற அறிவினால் சிந்தித்து , புலியினது உரித்த தோலை உடுத்தவனும் , மாணிக்கம்போல்பவனும் , யாவர்க்கும் வலிய சார்பாய் உள்ளவனும் , தேவர்களுக்கு அமுதம் போல்பவனும் , அவர்கள் அனைவர்க்கும் இறைவனும் ஆகிய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` பாவமே புரிந்து ` எனவும் , ` அலமந்து ` எனவும் முன்னும் பின்னும் உள்ள சொற்குறிப்புக்களால் , பகரப்படுவன , பொய் களேயாயின . ` ஆவ ` என்றது , அன்பெறா அகர ஈற்று வினைப்பெயர் . முதற்கண் பொதுப்பட அருளுகின்றாராதலின் , ` அண்ணல் தன்திறம் ` என , வேறொருவன் போல அருளிச்செய்தார் . ` அறிவினால் ` என்றது , கேட்டலையும் , ` கருதி ` என்றது சிந்தித்தலையும் , ` சென்று ` என்றது தெளிதலையும் , ` அடை ` என்றது அழுந்துதலையும் உணர்த்தி நின்ற வாறு அறிந்துகொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்
டுடல் தளர்ந்தரு மாநிதி யியற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானைக்
கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

உளமே , ஒருபொருளல்லாத உயிர் வாழ்க்கையைப் பெரிய பொருளாக நினைந்து , அந் நினைவின் வழியே , ` மெய் வருந்த , அரிய பெரிய பொருட்குவையை ஈட்டி என்றும் இனிது வாழ்தல் எமக்கு இயலும் ` என்று உலகத்தார் பேசுகின்ற இச் செருக்குரைதானும் பொய் என்பதனை நினை ; மனமே , மலைபோலும் தோள்களை உடையவனும் , பல கூத்துக்களை வல்லவனும் ஆகிய உலகில் உள்ளவர் எல்லாம் சென்று பலகாலும் மகிழ்ந்து தங்குகின்ற திருத் தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` தளர்ந்து ` என்றதனை , ` தளர ` எனத் திரித்து , அதனை , ` இயற்றி ` என்றதனோடு முடிக்க . விரும்பிய அளவில் நிதியினை ஈட்டினோரும் , என்றும் வாழ்வோரும் இலராகலின் , அவர்தம் சொற்கள் பொய்யாய் ஒழிதலை , ` உளமே ` என விளித்து அறிவுறுத்தி , பின் , இரந்து வேண்டுவார் , மறித்தும் , ` மனனே ` என்று விளித்தார் என்க . குவலயத்தோர் எல்லாம் பலகாலும் சென்று சென்று மகிழ்ந்து தங்குதல் , அதன் வளப்பத்தால் என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

வேந்த ராய்உல காண்டறம் புரிந்து
வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத்
தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடும்இப்
பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்
பரம னைக்கடற் சூர்தடிந் திட்ட
சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மக்கள் , அரசராய் நின்று உலகத்தை ஆண்டு , செங் கோல் செலுத்திப் பெருமிதத்துடன் அமர்ந்திருந்ததற்கு இடமாய் நின்ற மனித உடம்பாகிய இதனை , இதனொடு கொண்ட தொடர்பு நாள் தோறும் தேயப்பெற்று , பின்பு விட்டு நீங்கி , கொடிய துன்பத்தை நுகர் கின்ற இந்நிலையில்லாத வாழ்வினை , மனமே , சிறிதும் விரும்பாது விடு ; மற்று , மனமே , பாம்பை அகங்கையிற் கொண்டு ஆட்டுதலை விரும்பியவனும் , யாவர்க்கும் மேலானவனும் , கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகப் பெருமானார்க்குத் தந்தையும் ஆகிய , திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

வேந்தராதல் முதலியவற்றிற்கு உரிய எழுவாய் எஞ்சி நின்றது , ` இவ்வுடல் ` என்ற சுட்டு , மக்கட் பிறப்பினைச் சுட்டி நின்றது . ` இது தன்னை இறந்து ` என இயையும் . இறத்தல் - கடத்தல் ; நீங்குதல் . தேய்தலுக்கு வினைமுதல் வருவிக்க . வெந்துயர் , நரகமும் பிற பிறப்புக்களுமாம் . இரண்டினை இரப்பார் , அவ்வவ்விடத்தும் ` மனமே ` என விளித்தார் என்க . ` கடற் சூர் ` என்றதற்கு , ` கடலிடை வாழ்ந்த சூரன் ` என்று உரைத்தலுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை யுடையராகாது , தவத்தொழிலைச் செய்து , பயனில்லாத சொற்களைப் பேசி , பின்னுதல் பொருந்திய சடைகளைச்சேர்த்துக் கட்டிக்கொள்ளு தலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே , மக்கள் , பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது ; ஆதலின் , அந்நிலை நின்னின் வேறாய் நிற்க , நீ , தேவர் கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய , செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக் கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று , இவனே , தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக .

குறிப்புரை :

` தன்னில் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் ; அவரவரது சித்தத்தையும் தனித்தனிக் குறித்தவாறு . ` தவம் ` என்றது , பலவகை நோன்புகளை ; பயனில்லாத சொற்கள் , ` விரதங்களே பயன்தரும் ; முதல்வன் வேண்டா ` என்று கூறுவன . இங்ஙனங் கூறுவோர் மீமாஞ்சகர் ; அவரது நிலையை , ` விரத மேபர மாகவே தியரும் சரத மாகவே சாத்திரங் காட்டினர் ` ( தி .8 திருவா . போற்றி 50,51) எனவும் , ` திசைக்குமிக் குலவு கீர்த்தித் தில்லைக்கூத் துகந்து தீய நசிக்கவெண் ணீற தாடும் நமர்களை நணுகா நாய்கள் அசிக்கஆ ரியங்க ளோதும் ஆதரைப் பேத வாதப் பிசுக்கரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்க ளோடே ` ( தி .9 திருவிசைப்பா 4-5) எனவும் , ` ஆதிமறை ஓதி அதன்பயன்ஒன் றும்மறியா வேதியர்சொல் மெய்யென்று மேவாதே ` - நெஞ்சுவிடுதூது 116-117 எனவும் வந்தனவற்றால் அறிந்துகொள்க . இவர் சிவபிரானுக்குரிய சடைமுடி முதலிய கோலத்தை அணிதலாற் பயன் பெறாமை அறிக . ` இங்ஙனம் வேடமாத்திரத்தால் பெரியையாகக் காட்டுதலை ஒழிக ` என்பார் , ` அதுநிற்க ` என்று அருளினார் . ` முன்னெலாம் ` என்றதன் பின் , ` ஆய ` என்பது வருவிக்க . ` முழுமுதல் என்று அடை ` என இயையும் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
பலருங் கண்டழு தெழஉயிர் உடலைப்
பிரிந்து போம்இது நிச்சயம் அறிந்தாற்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , அன்புள்ள சுற்றத்தாரும் , மற்றும் துணை யாயுள்ளாரும் ஆகிய பலருங் கண்டு , உடல்மேல் விழுந்து அழுது எழும்படி , உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும் ; இது நிச்சயம் . இதனை நீ அறிந்துளை என்றால் , அறியாமையையுடைய வாழ்வாகிய இம் மாறுபட்ட நெறியை நீங்கி , கரிய பெரிய கண்களை யுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும் , உயிர்களில் நிறைந்திருப்பவனும் , காலனுக்குக் காலனும் , எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய , செருந்தி மரங்கள் பொன்போலும் மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை , விரும்பி , அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` துணை ` என்றது , நண்பர் முதலாயினாரை . ` கண்டு அழுதெழ ` என்றது , ` அவர் செய்யலாவது அத்துணையே ; பிறி தில்லை ` என்றவாறு . ` கால காலன் ` என்றது , ` அவனாயின் அந்நிலையை விலக்க வல்லான் ` என்றதாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன்
நன்மை யொன்றிலாத் தேரர்புன் சமணாம்
சமய மாகிய தவத்தினார் அவத்தத்
தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
உமையொர் கூறனை ஏறுகந் தானை
உம்ப ராதியை எம்பெரு மானைச்
சிமய மார்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

பொழிப்புரை :

மனமே , நீ நன்மையை அடையவிரும்பினால் , நன்மை சிறிதும் இல்லாத புத்தமும் சமணமும் ஆகிய சமயங்களைப் பொருந்திய தவத்தினரது பயனில்லாத செயல்களை விட்டொழி ; நம்மைப் பலர் இகழ்ந்து பேசுதற்கு முன்பே , உமையை ஒரு பாகத்தில் உடையவனும் , எருதை விரும்பி ஏறுபவனும் , தேவர்கட்கு முதல் வனும் , எங்கட்குத் தலைவனும் ஆகிய , மலைச்சிகரம் போலப் பொருந்திய சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளி யிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .

குறிப்புரை :

` இகழ்ந்துரைப்பதன்முன் சென்று அடை ` எனவும் , ` நன்மையை வேண்டில் விட்டொழி ` எனவும் இயையும் . ` புன்மை ` என்பதன் மை ஈறு தொகுத்தலாயிற்று . அப்பெயர் , அத்தன்மையை யுடைய சமயத்தைக் குறித்தது . ` தேரர் புன்மையும் சமணுமாம் சமயம் ` என்க . நன்மையொன் றில்லாமையை , அவ்விரண்டற்குங் கொள்க . மலைச்சிகரம் , சோலைக்கு , உயர்ச்சிபற்றி உவமையாயிற்று .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து
நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்
சேடு லாம்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான்
நாட லாம்புகழ் நாவலூ ராளி
நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்
முத்தி யாவது பரகதிப் பயனே

பொழிப்புரை :

எல்லையில்லாத , நிலையற்ற பிறவியை வெறுத்து , அதனினின்றும் நாம் நீங்குதலே பொருந்துவது என்று சொல்லி மனத்தைத் தெளிவித்து , திரட்சி பொருந்திய சோலைகளையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானது திருவடியிணையை நினைத்தற்கு ஆகும் , புகழையுடைய திருநாவலூர்க்குத் தலைவனும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினை யும் பாட வல்லவர் அடையும் இன்ப நிலையாவது , மிக மேலான நிலையாகிய முடிந்த பயனேயாம் .

குறிப்புரை :

` நீடு பிறவி , பொக்கையினையுடைய பிறவி ` என்க . உள்ளீடின்மையைக் குறிக்கும் ` பொக்கு ` என்பது அம்முப் பெற்று , ` பொக்கம் ` என வருதல்போல , ஐ பெற்று , ` பொக்கை ` என வந்தது . ` பொய் ` என்னும் பொருளதாகிய இது , நிலையின்மையை உணர்த் திற்று . ` மனத்தினைத் தெருட்டி , திருவடியிணையை நாடலாம் பாடல் ` என இயைக்க . ` இணைதான் ` என்னும் தான் , அசைநிலை . ` நாடற்கு ஆம் ` என உருபு விரிக்க . ஆதல் - துணையாதல் . ` நாடெலாம் புகழ் ` என்பது , பாடம் அன்று . ` தமிழ்ப் பாடலாம் இவை பத்து ` என மாறிக் கூட்டுக . முற்றும்மை தொகுத்தலாயிற்று . ` முத்தி ` என்றது , ` இன்ப நிலை ` என்னும் பொருளதாய் நின்றது . மிக மேலான நிலையாவது , இறைவனோடு இரண்டறக் கலத்தல் .
சிற்பி