திருநின்றியூர்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

திருவும் வண்மையுந் திண்டிற லரசுஞ்
சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி யடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

பெருகி வருகின்ற காவிரியாற்றின் நீர் , கொணர்ந்து தள்ளிய பல மணிகளை , சிறுமகாரது பல குழுக்கள் , விளையாட்டிற் சென்று எடுத்து , தெருக்களிலும் , திண்ணைகளிலும் , முற்றங்களிலும் குவிக்கின்ற , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , நீ , சிலந்தி செய்த செய்கைத் தொண்டினைக் கண்டு , அதன் மறுபிறப்பாய் வந்த கோச்செங்கட் சோழ நாயனார்க்கு , செல்வத்தையும் , கொடைத் தன்மையையும் , திண்ணிய ஆற்றலை உடைய அரசாட்சியையும் அளித்த செய்தியைக் கேட்டு , அடியேன் உனது மலர் போலும் திரு வடியைப் புகலிடமாக அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

சிவத் தொண்டு செய்யும் உணர்வு பெற்றிருந்தமையின் , ` சிலந்தியார் ` என , உயர்திணையாக அருளிச்செய்தார் . ` சிலந்தியாய் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` நினைக்கும் பணி , சொல்லும் பணி , செய்யும் பணி ` எனப் பணிகள் மூவகைப்படுதலானும் , ` செய்தல் ` என்னும் பொதுவினை , அவைகட்கும் ஏற்குமாதலானும் , ` செய்த செய்பணி ` என்று அருளிச்செய்தார் . கோச்செங்கண் நாயனாரது வரலாற்றின் விரிவை , பெரிய புராணத்துட் காண்க . ` தென்றிரு நின்றியூர் ` என்றதற்கு , ` தென்றிசையில் உள்ள திருநின்றியூர் ` என உரைத்தலுமாம் . இதற்கு , தமிழ் நாட்டின்கண் உள்ள ஊர் என்பது கருத்தாகும் . இது சிலந்திக்கு அருளிய செயலை எடுத்து அருளிச் செய்த வாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

அணிகொ ளாடையம் பூணணி மாலை
யமுது செய்தமு தம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல்
ஈன்ற வன்திரு நாவினுக் கரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
காதல் இன்னருள் ஆதரித் தடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

திணை வரையறையைக் கொண்ட செவ்விய தமிழைப் பசிய கிளிகள் ஆராய்ந்து சொல்லுகின்ற , செல்வத்தை யுடைய , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , உன்பால் , பாலைக் கொணர்ந்து ஆட்டி , அழகினைக் கொண்ட ஆடை , அழகிய அணிகலம் , சூடுகின்ற மாலை , திருவமுது என்னும் இவற்றைப் பெற்ற சண்டேசுர நாயனாரும் , தனக்குத்தானே நிகராய் உள்ள பாடல்கள் நாலாயிரத்துத் தொள்ளாயிரத்தை அருளிச் செய்தவராகிய திருநாவுக் கரசரும் , அம்பைக் கையிலே கொண்ட கண்ணப்ப நாயனாரும் பெற்ற , அன்பின் பயனாகிய இனிய திருவருளை விரும்பி , அடியேன் உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

` அமுது ` இரண்டனுள் , முன்னையது பால் ; பின்னை யது உண்டி . ` செய்து ` என்றது , ` ஆட்டி ` என்றவாறு . தமக்கு நிவே தனம் செய்த அமுதம் என்பது அது , கறந்து கொணர்ந்து ஆட்டியதைக் குறித்தது . சண்டேசுர நாயனாருக்குச் சிவ பெருமான் , தாம் உடுத்த உடை முதலியவற்றை , அவருக்கு உரியனவாக அளித்தமையை , ` நாம் - உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக ` ( தி .12 பெ . புரா . சண்டே . புரா . 56) என்றது பற்றி அறிந்துகொள்க . ` திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த செய்யுட்கள் நாலா யிரத்துத் தொள்ளாயிரம் ` என்பதனை இங்கு எடுத்தோதி அறிவுறுத் தவாறறிக . ` பனுவல் ` என்பது , பாடலையுங் குறிக்கும் ; பதிகத்தையும் குறிக்கும் ; எனினும் , நம்பியாண்டார் நம்பிகள் , அதனை , ` பதிகம் ` என்றே விளக்குதலை , ` பதிகம் ஏழெழு நூறு பகரு மாகவி யோகி ` - திருவேகாதச மாலை - 7 என்பதனான் அறியலாகும் . சேக்கிழார் , ` நின்றியூர் மேயாரை நேயத்தாற் புக்கிறைஞ்சி ஒன்றியஅன் புள்ளுருகப் பாடுவார் உடையஅரசு என்றும்உல கிடர்நீங்கப் பாடியஏ ழெழுநூறும் அன்றுசிறப் பித்தஞ்சொல் திருப்பதிகம் அருள்செய்தார் ` என்று , ( தி .12 ஏயர் . 150) பொதுவே அருளிப் போயினார் . நம்பியாண்டார் நம்பிகள் , ஓரிடத்து திருஞானசம்பந்தரது திருப்பாடல் பற்றி , ` பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் ` ( தி .11 ஆளுடைய பிள்ளை யார் திருவுலா மாலை - 63,64) என்று , ` பனுவல் ` என அருளிச்செய்தவர் . பிறிதோரிடத்து , ` பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா ` ( தி .11 ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை - 22) என்று , ` பதிகம் ` என்பது பட அருளிச் செய்கின்றார் . இவ்வாற்றால் , ` நாலாயிரத்துத் தொள்ளாயிரம் ` என்பதும் , ` பதினாறாயிரம் ` என் பதும் , பதிகங்கள் என்றே கொள்ளக்கிடக்கின்றன . இனி , பாடலன்றி , பதிகமே நாற்பத்தொன்பதினாயிரம் என்பார்க்குச் சான்று ஏதும் இல்லை என்க . ` ஈன்றவன் ` என்று அருளினார் , பாடலையும் , ` எச்சம் ` என்னும் வழக்குப்பற்றி . ` உயர்திணை , அஃறிணை ` என்னும் சொல் வரையறைகளும் , ` அகத்திணை , புறத்திணை ` என்னும் பொருள் வரையறைகளும் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பியல்பாதல் பற்றி , ` திணைகொள் செந்தமிழ் ` என்று அருளினார் . ` செந்தமிழைப் பைங்கிளி தெரியும் ` என்றது , ஓர் நயம் . கிளிகள் தமிழை ஆராய்தல் , பலரிடத்துக் கேட்கும் பயிற்சி பற்றி என்க . இது , நாயன்மார்கட்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி
மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி
ஓங்கு நின்றியூ ரென்றுனக் களிப்பப்
பத்தி செய்தவப் பரசுரா மற்குப்
பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

சித்தர் , தேவர் , அசுரர் , ஆகியோர் வணங்குகின்ற , செல்வத்தையுடைய , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , உன்னிடத்து அன்பு செய்த பரசுராமன் உனக்கு மிக்க புகழையுடைய முந்நூறு வேதியரோடு , முந்நூற்றறுபது வேலிப் பரப்புள்ள நிலத்தை , என்றும் விளங்கும் ` திருநின்றியூர் ` என்று பெயரிட்டு , ஏற்புடைய , பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க , அவனுக்கு உன் திருவடியை அளித்த முறைமையை அறிந்து , அடியேன் , உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

இஃது இத் தலத்தின் தோற்றம் பற்றிய புராண வரலாறு . ஒத்தல் , தாரை வார்த்தற்கு ஏற்புடையதாதல் . முந்நூறு வேதியரையும் இறைவனுக்கு உரியவராக நீர் வார்த்துக் கொடுத்தற்குப் பல கலசங்கள் வேண்டப்பட்டன என்க . இது , பரசுராமனுக்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தவாறு .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச்
சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந்
தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
பரவி யுள்கிவன் பாசத்தை யறுத்துப்
பரம வந்துநுன் பாதத்தை யடைந்தேன்
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

மேலானவனே , நெற்பயிர்கள் முத்துக்களைப் பரப்பி , அம்முத்துக்களோடு ஒத்து மதிப்புடைய செம்பொன்போலும் நெற்களை அளிக்கின்ற திருநின்றியூரில் உள்ள இறைவனே , உன்னை , பசு ஒன்று , சூரியனது நீண்ட ஒளி தோன்றுவதற்கு முன்பே எழுந்து , தன் மடியாகிய கலசத்தை ஏந்திப் பால் சொரிந்து வழிபட்டு நின் திருவடியை அடைந்த செய்தியை உறுதிப்படக் கேட்டு , அடியேன் , உனது திருவடியை நினைத்துத் துதித்து , பற்றுக்களை எல்லாம் விடுத்து வந்து அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

பசு சிவபெருமானை வழிபட்டு முத்தி பெற்ற தலங்கள் , ஆவூர் , ஆனிலை முதலியன . நிரவி அளித்தலுக்கு எழுவாய் எஞ்சி நின்றது . இனி , ` முத்தையும் , பொன்னையும் புலவர் முதலியோர்க்கு மிக அளிக்கும் திருநின்றியூர் ` எனினுமாம் . ` ஒருமடி தானே பல கலசங்களாகக் கொள்ளப்பட்டது ` என்பார் , ` கலசங்கள் ஏந்தி ` என்று அருளினார் . இது , பசுவிற்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்த வாறு . ` பசு , காமதேனு ` என்றும் , ` அஃது இங்கு வழிபட்டு முத்தி பெற்ற வரலாறே இத்திருப்பாடலில் குறிக்கப்பெற்றது ` என்றும் உரைப்பாரும் உளர் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ யாள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

செவ்விய தண்ணிய சிறந்த தாமரை மலரின்கண் இருக்கும் திருமகள் வாழும் , செல்வத்தை யுடைய , அழகிய திருநின்றி யூரில் உள்ள இறைவனே , இந்திரன் ஒருவன் , உன்னிடத்து வந்து உன்னை வழிபட , அதற்கு மகிழ்ந்து , அவனுக்கு , ` நீ , விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய தலைமையையும் , ` காலை , நண் பகல் , மாலை ` என்னும் மூன்று சந்திகளிலும் , இலிங்க உருவத்தை நிறுவி , கலையுருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு , அருவிகள் மணிகளைச் சிதறுகின்ற , அழகிய திருப்பொதியில் மலையில் வீற்றிருக்க அருளிய பெருமையையும் அறிந்து , அடியேன் , உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

இந்திரராய் வருவோர் எண்ணிறந்தவராதலின் , ` ஓர் இந்திரன் ` என்று அருளினார் . ` அருளி ` என்ற எச்சம் எண்ணின்கண் வந்ததாகலின் , அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது . ` சகளம் ` என்பது , ` கலையொடு கூடியது ` எனப் பொருள் தருவது . அதனொடு இகர விகுதி புணர்த்து ` சகளி ` என அருளவே , ` கலைகளை உடைய திரு மேனி ` என்பது பொருளாயிற்று . ` தாபரம் நிறுத்திச் சகளிசெய்து ` எனவே , ` இலிங்கத் திருமேனியில் கலையுருவத்தைப் பாவனையால் அமைத்து ` என்றவாறாயிற்று . சிவ வழிபாட்டிற் கொள்ளப்படும் மந்திரங்கள் பலவற்றுள்ளும் , ` பஞ்சப்பிரம மந்திரங்கள் ` எனப்படும் ஐந்தும் , ` சடங்க மந்திரங்கள் ` எனப்படும் ஆறும் ஆகப் பதினொரு மந்திரங்கள் இன்றியமையாதனவாகும் . இப்பதினொன்றனையும் , ` சங்கிதா மந்திரங்கள் ` என்ப . ` மந்திரம் ` எனச் சிறந்தெடுத்துச் சொல்லப் படுவன , இப்பதினொன்றுமே என்பதனை , ` பந்தமுறு மந்திரங்கள் பதினொன்று மாதலினால் அந்தமுறை நான்கினோடு முறைபதினொன் றாக்கினார் ` திருமுறைகண்ட புராணம் ( பா .28) கூறுவதும் அறிக . பதினொரு மந்திரங்களுள்ளும் ஈசானம் முதலிய பஞ்சப்பிரம மந்திரங்கள் ஐந்தும் முதன்மையானவை . அவை மந்திரோப நிடதத்துள் நீண்ட தொடர்களாய் உள்ளன . அவையே சிவாகமங்களிற் சிறிய தொடர்களாக அவ்வவ்வற்றிற்கு உரிய வித்தெழுத்துக்களுடன் ( பீஜாட்சரங்களுடன் ) சொல்லப்படுகின்றன . சிவ வழிபாட்டினைச் சுருக்கமாகச் செய்யுமிடத்து , ஆகம மந்திரங்களையே முடி முதலிய முதன்மை உறுப்புக்களாக வைத்துச் செய்யப்படும் . விரிவாகச் செய்யுமிடத்து , வேத மந்திரங்களை முப்பத் தெட்டுக் கூறுகளாகச் செய்து எலலா உறுப்புக்களாகவும் வைத்துச் செய்யப்படும் . இம் முப்பத்தெட்டுக் கூறுகளே , ` கலை ` எனப்படும் . சிவனது பல்வேறு வகைப்பட்ட சத்திகளே இக்கலைகளின் வடிவாய் நிற்குமாதலின் , அவை வாயிலாகக் கருதப்படும் சிவபிரானது வடிவம் , சத்தி சமூக வடிவமேயாம் . ஆதலின் , இங்ஙனம் சிவபிரானை முப்பத் தெட்டுக் கலைவடிவினனாக உணர்ந்து வழிபடுதல் சிவநெறியில் சிறந்த வழிபாடாக அமைந்துள்ளது . இவை அனைத்தும் தோன்றவே , சுந்தரர் , ` சகளி செய்து இறைஞ்சு அகத்தியன் ` என்று அருளினார் . ஆகவே , சிவ வழிபாட்டின் முறைகளைக் குறிப்பால் அருளியவாறா யிற்று . ` கடவுள் முப்பத்தெட்டுக் கலைவடிவினன் ` என்பது சைவத்தின் கொள்கையாக மணிமேகலை க் காப்பியமும் குறிப்பிடுகின்றது . ( சமயக் கணக்கர்தந் திறங்கேட்ட காதை - 91) சிவ வழிபாட்டிற் கொள்ளப்படும் முறையே , சிவநெறியினர் தம்மைச் சிவமாகப் பாவித்துச் செய்து கொள்ளும் திருநீற்றுப் புண்டரம் , அங்க நியாசம் , கர நியாசம் முதலியவற்றிலும் கொள்ளப்படுவது . ஆகவே , ` சகளி செய்து ` என்றது அவற்றிற்கும் பொருந்துவதாம் . வைதிக நெறியினர் இவற்றைக் கொள்ளுதல் இல்லை . ` அகத்தியர் தமக்கு ` என்பது , ஓது வோர் , தாம் வேண்டியவாறு ஓதிய பாடம் என்க . இஃது , இந்திரனுக்கும் , அகத்தியருக்கும் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

காது பொத்தரைக் கின்னரர் உழுவை
கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
கோல ஆல்நிழற் கீழறம் பகர
வேதஞ் செய்தவர் எய்திய இன்பம்
யானுங் கேட்டுநின் இணையடி யடைந்தேன்
நீதி வேதியர் நிறைபுக ழுலகில்
நிலவு தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

நீதியையுடைய அந்தணர்கள் நிறைந்திருத்தலால் உளதாகிய புகழ் , உலகமுழுதும் விளங்குகின்ற , அழகிய திரு நின்றியூரில் உள்ள இறைவனே , கேள்வியால் துளைக்கப்பட்ட செவி யினையுடைய நால்வர் முனிவர்கள் , ` கின்னரர் , புலி , கடிக்கும் இயல்புடைய பாம்பு , பற்றுதற்கு அரிய சிங்கம் , குற்றம் அற்ற பெரிய தவத்தவர் குழாம் ` என்ற இவருடன் இருந்து கேட்ப , நீ , அழகிய ஆல் நிழலில் இருந்து , அறத்தின் உண்மைகளை எல்லாம் சொல்ல , அவற்றைக் கேட்டுப் பின்பு வேதங்களை இயற்றி அவர்கள் அடைந்த இன்பத்தினைக் கேட்டறிந்து , அடியேனும் , உனது திருவடியிணையை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

பொத்து - துளை . ` காது பொத்தர் ` என்றதனை , ` பொத்துக் காதர் ` என மாற்றி , ஐயுருபை , குவ்வுருபாகத் திரித்துக் கொள்க . ` காது பொத்தர்க்கு , அவர் குழுவுடன் கேட்பப் பகர ` என்க . கின்னரர் , மாதவர் முதலிய நல்லோரும் , புலி முதலிய கொடிய உயிர் களும் சூழ இருப்ப என்றது , இறைவனது திருமுன்பின் பெருமை யுணர்த்தியவாறு . இடத்தது நன்மையால் , கொடியனவும் அக் கொடுமை நீங்கின என்றபடி . காது பொத்தர் நால்வர் என்பது , ஐதிகத் தான் நன்கறியப்பட்டது . ` காது பொத்தர் - பிறவற்றைக் கேளாது காதைப் பொத்திக் கொண்டவர் ` என்றும் உரைப்பர் . கின்னரர் முதலிய பலரும் சூழ்ந்திருந்தாராயினும் கேட்டோர் அந் நால்வரே யாகலின் , ` குழுவுடன் ` என்ற மூன்றனுருபு , ` தொடியொடு தொல்கவின் வாடிய தோள் ` ( கு றள் -1235) என்புழிப் போல , வேறு வினைப் பொருளதாம் . அறம் முதலிய உறுதிப் பொருள்கள் நான்கும் தொகுத்து நோக்கும்வழி , அறமாகவே அடங்குதலின் , அவை அனைத்தையும் , ` அறம் ` என்றே கூறுதலும் மரபேயாம் . அறம் முதலிய நான்கினையும் நால்வர் முனிவர் கட்கு இறைவன் நுண்ணியவாய்ச் செவியறிவுறுத்த , அவற்றைக் கேட்ட நால்வரும் , நான்கு வேதங்களில் அவற்றை உலகிற்கு இனிது விளங்க விரித்துரைத்தனர் என்பது கூறப்பட்டது . இதுவே , திருமுறைகளில் வேதத்தைப் பற்றிக்கூறும் உண்மை வரலாறு . எனவே , இறைவனே வேதம் , வேதாங்கம் முதலியவற்றை அருளினான் என வருமிடங்கள் எல்லாம் முகமனுரையாய் நின்று , இவ்வுண்மையையே குறிப்பன வாதல் அறிந்துகொள்க . இனி இஞ்ஞான்று வழங்கும் இருக்கு முதலிய வேதங்கள் , இந்நால்வராற் செய்யப்பட்டன என்பது துணியப்படு மாறில்லை . அதனால் , இவற்றிற்கு வரலாறு வேறு கூறுவார் பக்கம் வலியுடைத்து . இன்னோரன்னவை கால வேறுபாட்டால் நிகழ்வன எனப்படும் . வேதம் செய்தவர் எய்திய இன்பமாவது , ` நான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ` ( தி .10 திருமந்திரம் -85) என்று நன்னெறியை உலகிற்கு உணர்த்தி மகிழ்ந்த மகிழ்ச்சி . எனவே , சுவாமிகளுக்கும் அவ் வின்பம் உளதாயினமை யறிக . ஏதம் செய்தவர் இன்பம் எய்துதல் கூடாமையானும் , ` வினை செய்தவர் ` என்பது கூறவேண்டாமை யானும் , ஈண்டு மோனை வேண்டுதல் கூடாமை யறிக . இது , நால்வர் முனிவர்க்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச்செய்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க
நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டுநின் பொற்கழ லடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறு
நிலவு தென்றிரு நின்றியூ ரானே

பொழிப்புரை :

பெண் மயில்கள் போலவும் , இளைய பெண் மான்கள் போலவும் , இளைய கிளிகள் போலவும் , பிறை போலும் நெற்றியையுடைய மகளிர் , உயர்ந்த மாடங்களையுடைய மாளிகை தோறும் விளங்குகின்ற , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , நான்கு கொம்புகளையுடைய யானை , உன்முன் நின்று , தனது உடல் , அன்பினால் நடுங்கத் துதித்தபொழுதே , முன்னை வடிவத்தையும் , விண்ணுலகத்தை அடையும் பெருமையையும் பெற்ற தன்மையைக் கேட்டு அடியேன் , உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

நான்கு கொம்புகளையுடைய யானை , இந்திரனது , ஐராவதம் ; அது , சூரன் மகனால் நான்கு கொம்புகளையும் இழந்து , விண்ணுலகை நீங்கினமையையும் , பின்பு திருவெண்காட்டில் சிவபெருமானை வழிபட்டு , முன்போல நாற்கொம்புகளையும் பெற்று , பின்னர் இந்திரனிடம் சென்றமையையும் , கந்தபுராணத்தான் அறிக . இவ் யானை , மதுரையிலும் சிவபெருமானை வழிபட்டு , துருவாச முனிவரது சாபத்தினின்றும் நீங்கினமையை , திருவிளையாடற் புராணங் கூறும் . ` பீடு ` என்றது , அதனையுடைய உருவத்தைக் குறித்தது . ` பீடும் பெருமையும் பெற்ற ` என்க . ஆண் மயிலே அழகுடையதாயினும் , இவர்கள் ` பெண்மயிலாய் இருந்தே அழகுடையராய் இராநின்றார் ` எனச் சிறப்பிக்கின்றாராதலின் , இல் பொருள் உவமையாக , ` அழகுடைய பேடை மயில் ` என்றல் திரு வுள்ளம் என்க . இஃது , ஐராவதத்திற்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தது . இத்திருப்பதிகத்தின் ஏனைய திருப்பாடல்களை நாம் பெறே மாயினேம் . * * * * * * 8, 9, 10 8, 9, 10. * * * * * *
சிற்பி