திருவாவடுதுறை


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

மறைய வன்ஒரு மாணிவந் தடைய
வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மான்என் றெப்போதும்
ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

பொழிப்புரை :

திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , உன்னை , அந்தணனாகிய பிரமசாரி ஒருவன் அன்புடன் வந்து அடைய , அவனது அரிய உயிரைப் போகாது நிறுத்த வேண்டி , உதிரத்தைக்கொண்ட சூலத்தையுடைய இயமனைக் காலால் உதைத்துக்கொன்ற காரணத்தை உணர்ந்து உணர்ந்து , அடியேன் , ` யாவர்க்கும் முதல்வன் ; எமக்குப் பெருமான் ` என்று எப்பொழுதும் துதித்துத் துதித்து , அஞ்சலி கூப்பிநின்று , கழலும் சிலம்பும் ஒலித்தலைக் கொண்ட உனது செவ்விய திருவடியிடத்துக் கொண்ட அன்போடும் வந்து அடைந்தேன் ; என்னை ஏற்றுக் கொண்டருள் .

குறிப்புரை :

` காரணம் ` என்றது , திருவருளை . அடுக்குக்கள் , பன்மை குறித்தன . ` நின்று ` என்றதனை , ` அஞ்சலி செய்து ` என்றதன் பின் கூட்டுக . ` கழலும் சிலம்பும் ` என்பது , ஆற்றலான் வந்தது . ` எங்கள் முதற்கடவுள் ` என்றது , உன்னை முதற்கடவுளாக அறிதல் அனை வர்க்கும் ஆவதன்று என்றபடி . இது , மார்க்கண்டேயருக்குச் செய்த திருவருளை எடுத்தோதி யருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

பொழிப்புரை :

திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று , தனது வாயினின்றும் உண்டாகும் நூலால் அழகிய பந்தரை உறுதிப்பட ஆக்க , அச் சிலந்தியை , சுருண்ட , சிவந்த சடையை உடையையாகிய நீ சோழ னாய்ப் பிறக்கச்செய்த திருவருளை அறிந்து , அடியேன் , எனது எதிர் வினைக்கு அஞ்சித் துணுக்குற்று , உனது அழகிய மலர்போலும் திரு வடியில் விழுந்து புரண்டு , ` போற்றி ! போற்றி !` என்று துதித்து , அன்பினால் அழுது , உன்னை வந்து அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

சிலந்தியது தெருட்சி , அதனது வாய்க்கு ஆக்கப் பட்டது . சோழன் , கோச்செங்கட் சோழ நாயனார் ; இவரது வரலாற்றை , பெரிய புராணத்துள் விளங்க உணர்க . தொடர்ச்சி - தொடர்பு ; அஃது அருளாகிய தொடர்பைக் குறித்தது . ` அரண்டு ` என்பது , ` துணுக்குற்று ` எனப் பொருள் தருவதொரு சொல் . எதிர்வினை , இனிச் செய்யும் வினை ; இஃது ` ஆகாமியம் ` எனப்படும் ; இது , பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய தாகலின் , அதற்கு அஞ்சிய அச்சத்தினையும் , அதுபற்றி இரந்துநின்ற நிலையையும் இத்துணை வகுத்து அருளினார் . இது , சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

திகழும் மாலவன் ஆயிர மலரால்
ஏத்து வான்ஒரு நீள்மலர் குறையப்
புகழி னால்அவன் கண்ணிடந் திடலும்
புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
திகழு நின்திருப் பாதங்கள் பரவித்
தேவ தேவநின் திறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

பொழிப்புரை :

தேவர்கட்குத் தேவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , மிக்க புகழுடையவனாகிய திருமால் நாள்தோறும் ஆயிரந் தாமரைப் பூக்களால் உன்னை அருச்சிக் கின்றவன் , ஒருநாள் ஒரு சிறந்தபூக்குறைய , அவன் அதற்கு மெலி யாது , புகழத்தக்க உறுதிப் பாட்டுடன் , தனது கண்களில் ஒன்றைப் பெயர்த்து உனக்குச் சாத்த , அதனைக்கண்டு மகிழ்ந்து அவனுக்கு நீ சிறந்த சக்கரப்படையை அளித்தமையை உணர்ந்து , அடியேன் , என் நிலைமையைப் பெயர்த்து , நிலையில்லாது உழலச் செய்கின்ற வலிய வினைக்கு அஞ்சி , ஒளிவீசுகின்ற உனது திருவடிகளைத் துதித்து , உனது பெருமைகள் பலவற்றையும் பலகாற் பேசி , உன்னை வந்து அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

திருமால் இவ்வாறு சிவபிரானை வழிபட்டு , அப் பெருமான் சலந்தராசுரனை அழித்தற் பொருட்டுத் தோற்றுவித்த சக்கரப் படையைப் பெற்றமையை , ` சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடி நலமுடைய நாரணன்றன் நயனமிடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ ` ( தி .8 திருவா . திருச்சாழல் -18.) ` பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத் தன்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவா றெங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ ` ( தி .8 திருவா . திருத்தோ -10.) என்னும் திருவாசகத் திருப்பாடல்களால் அறிக . ` நாண் மலர் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் , பித்தர்போலப் பலகாற் கூறுதலை , ` பிதற்றி ` என்று அருளினார் . இது , திருமாலுக்குச் செய்த திருவருளை எடுத்தோதி யருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

வீரத் தால்ஒரு வேடுவ னாகி
விசைத்தொர் கேழலைத் துரந்துசென் றணைந்து
போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப்
புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
வாரத் தால்உன நாமங்கள் பரவி
வழிபட் டுன்திற மேநினைந் துருகி
ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

பொழிப்புரை :

திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , நீ , ஒரு வேடுவனாய் உருக்கொண்டு , ஒரு பன்றியை , வீரத்துடன் விரைந்து துரத்திச் சென்று , உன்னை நோக்கித் தவம் செய்துகொண்டிருந்த அருச்சுனனை அடைந்து , அவன்மேல் வைத்த விருப்பத்தால் அவனோடு போர் புரிந்து , பின்பு அவனுக்கு , சிறந்த படையாகிய பாசுபதக் கணையை அளித்தமையை அறிந்து , அடியேன் உனது தன்மைகளை நினைந்து உருகி , உனது திருப்பெயர்களை அன் போடு சொல்லி உன்னை வழிபட்டு , ஆர்வத்தோடு வந்து உன் திருவடி யிணையை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

குறிப்புரை :

` விசைந்து ` என்பது பாடம் அன்று . ` அன்பாய்ப் போரைப் புரிந்து விசயனுக்குப் படை கொடுத்தல் ` என இயையும் , இவ்வாறு அருச்சுனனுக்கு அருளிய வரலாற்றை , பாரதத்துட் காண்க . இஃது , அருச்சுனனுக்குச் செய்த திருவருளை எடுத்தோதி யருளியது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுல காளப்
புகழி னால்அருள் ஈந்தமை யறிந்து
மிக்க நின்கழ லேதொழு தரற்றி
வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மானுனை யடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே

பொழிப்புரை :

வேதம் ஓதுபவனே . உலகிற்கு முதலாய மூர்த்தியே , உன் அரையில் எலும்பை அணிந்த பெருமானே , திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள , எங்கள் முதற்கடவுளே , நீ , மூன்று ஊர்களில் ஓங்கி எரிகின்ற நெருப்பை ஒருசேர எழுப்பியபொழுது , அங்கு உன்னையே நினைத்திருந்த மூவராகிய அவர் மட்டில் உய்ந்து , உன் திருவடியை அடைந்து , மேல்உலகத்தை ஆளும் வண்ணம் , அவர்கட்கு , புகழத்தக்க வகையில் திருவருள் ஈந்தமையை அறிந்து , அடியேன் , மேலான உனது திருவடியையே தொழுது முறையிட்டு , உன்னை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

குறிப்புரை :

` முப்புரத்திலும் ஒக்க எரி தூவ ` என்க . எரியை உண்டாக்கினமையை , தூவியவாறாக அருளினார் . திரிபுரம் எரித்த காலத்தில் , சிவபத்தியிற் பிறழாதிருந்த மூவரைச் சிவபிரான் உய்யக் கொண்டமையை மேலே உரைத்தாம் ( தி .7 பா .55 பா . 8); கண்டு கொள்க . இது , முப்புரம் எரித்தஞான்று மூவர்க்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது . இத் திருப்பதிகத்துள்ளும் , ஏனைய திருப்பாடல்களை நாம் பெறேமாயினேம் . * * * * * * 6, 7, 8, 9, 10 6, 7, 8, 9, 10. * * * * *
சிற்பி