திருவலிவலம்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

ஊனங் கத்துயிர்ப் பாய்உல கெல்லாம்
ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
வானங் கைத்தவர்க் கும்அளப் பரிய
வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத்
தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந்
தேச னைத்திளைத் தற்கினி யானை
மானங் கைத்தலத் தேந்தவல் லானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

புலால் வடிவாகிய உடம்பில் இருந்து உயிர்ப்பன வாகிய உயிர்களாய் நின்று அவைகட்கு உணர்வை உண்டாக்கி நிற்பவனும் , விண்ணுலக இன்பத்தையும் வெறுத்துத் தவம் செய்வார் கட்கும் அளத்தற்கரிய வள்ளலாய் உள்ளவனும் , தன் அடியவர்களது உள்ளத்தினுள்ளே , தேனும் கைப்ப , அமுதம் ஊற்றெழுவதுபோல எழுகின்ற ஒளிவடிவினனும் , அழுந்துந்தோறும் இனிமை பயக்கின்ற வனும் , மானை அகங்கையிடத்து ஏந்த வல்லவனும் ஆகிய பெரு மானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்தமையாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனம் காண்பேன் !

குறிப்புரை :

` உயிர்ப்பு ` என்பது அதனையுடைய உயிர்களைக் குறித்தது . ` உலகு ` என்றது உயிர்களையேயாதலின் , ` அவ்வுலகிற் கெல்லாம் ` எனச் சுட்டு வருவித்து , உருபு விரித்துரைக்க . ஓங்கார மாவது , பொருளுணர்வை எழுப்பும் வாக்காதலின் , ` ஓங்காரத்துரு வாகி நின்றானை ` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக . ` வானம் ` ஆகுபெயர் . கைத்தல் இரண்டனுள் , முன்னது வெறுப்பினையும் , பின்னது கைப்புச் சுவையினையும் குறித்தன . விண்ணுலகத்தை வெறுத் தவர் , வீடுபேறு வேண்டுவோர் ; என்றது . பிற சமயிகளை . அவர்தாம் சிவபிரானை உணரமாட்டாராகலின் , ` அவரால் அளத்தற்கரியவன் ` என்று அருளினார் . ` உள்ளத்துள் ` என இயைக்க . ` தேன் ` என்பது , எதுகை நோக்கி , ஈற்றில் அம்முப் பெற்றது ; அதனானே , ` தேனும் ` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . ` கைத்து ` என்றதனை , ` கைப்ப ` எனத்திரிக்க . ` அமுதாகி ` என்றதில் உள்ள ஆக்கம் , உவமை குறித்து நின்றது . அமுதம் , இனிமை பற்றி வந்த உவமை . ` வந்து ` என்ற விதப்பினால் , அஃது இவ்வாறு , ` ஈந்து புகழ் பெற்றான் ` என்றல் போல , காரணப் பொருட்டாய் நிற்றல் பெறப்பட்டது ; அதனானே , ` வாராவிடில் எங்ஙனங் காண்பேன் ` என்ற மறுதலைப் பொருளும் தோன்றுவதாயிற்று . ` வானங்கத்தவர் ` என்பதும் பாடம் . ஊனங்கைத் தவர் , தேனங்கத்து ` என்பன பாடம் அல்ல .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
பாடிஆ டும்பத்தர்க் கன்புடை யானைச்
செல்லடி யேநெருங் கித்திறம் பாது
சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை
நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை
நான்உறு குறைஅறிந் தருள்புரி வானை
வல்லடி யார்மனத் திச்சையு ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

பலதிறப்பட்ட அடியவரது தொண்டுகட்கும் இரங்கு பவனும் , இசையோடு பாடி , அதனோடு ஆடலையும் செய்கின்ற சீரடியார்களைத் தன் தமர்களாகக் கொண்டு தொடர்புடையவனாகின்ற வனும் , தன்னை நோக்கிச் செல்லுகின்ற வழியிலே மாறுபடாது சென்று அணுகித் தன்னைப் பெற்றவர்கட்கே சித்தியையும் முத்தியையும் தருபவனும் , நல்ல அடியார்களது மனத்தில் , எய்ப்பிற்கு என்று வைத்துள்ள நிதியின் நினைவுபோல நின்று அமைதியைத் தருபவனும் , நான் அடைந்தனவும் அடையற்பாலனவுமாகிய குறைகளைத் தானே அறிந்து , அவற்றைக் களைந்தும் , வாராது தடுத்தும் அருள்புரிபவனும் , கற்றுவல்ல அடியார்களது உள்ளத்தில் தங்குவதற்கு விருப்பம் உடைய வனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

இதன்கண் அடியராவார் பல திறத்தினரையும் அருளிச் செய்தவாறு அறிக . பல்லடியார் , விதி மார்க்கம் பத்தி மார்க்கம் என இருதிறத்திலும் பல்வேறு வகைப்பட நிற்பவர் . பாடிஆடுவார் , இசை கூத்துக்களால் வழிபடுவார் ; இவ் வழிபாடு சிறந்ததாகலின் , வேறு வைத்து அருளினார் . திறம்பாது சென்று சேர்ந்தவர் , வாசனா மலத்தின் தாக்குதலுக்குத் தோலாது , இறைவன் திருவடியைப்பற்றி நின்றவர் . ` நெருக்கி ` என்பது பாடம் அன்று . ` சித்தி ` என்றது , அவர்கள் வாயி லாகத் தான் நிகழ்த்தும் அற்புதங்களை . அவை , ஞானசம்பந்தர் , நாவுக் கரசர் முதலிய ஆசிரியன்மாரிடத்து நிகழ்ந்தவை போல்வன . நல்லடி யார் , திருவும் மெய்ப்பொருளும் எல்லாம் இறைவனே என்று இருப் பவர் . அவர் , சுந்தரர் போல்வார் . வல்லடியார் , ஞானநூல்தனை ஓதல் ஓதுவித்தல் முதலிய ஞான பூசையைச் செய்பவர் . வைப்பு , ஆகு பெயர் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை
ஆதிஅந் தம்பணி வார்க்கணி யானைக்
கூழைய ராகிப்பொய் யேகுடி யோம்பிக்
குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்
வாழியர்க் கேவழு வாநெறி காட்டி
மறுபிறப் பென்னை மாசறுத் தானை
மாழையொண் கண்உமை யைமகிழ்ந் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

ஆழ்ந்தவனாகியும் , அகன்றவனாகியும் , உயர்ந் தவனாகியும் உள்ளவனும் , பிறந்தது முதற் சாங்காறும் வழிபடுவார்க்கு அணியனாகின்றவனும் , பணிவுடையவராய் , குடியை , உள்ளத்தில் பற்றின்றிப் புரந்து , மனம் உருகிநின்று , தம்மை மெய்யடியார் கூட்டத்துள் வைத்தெண்ணும் வாழ்க்கையையுடையவர்க்கு அடிமை செய்தலில் தவறாத நெறியை உணர்த்து மாற்றால் , என்னை மறுபிறப் பெடுத்தலாகிய குற்றத்தை அறுத்துத் தூயனாக்கியவனும் , மாவடுப் போலும் கண்களையுடைய உமாதேவியை விரும்பி ஒருபாகத்தில் வைத்தவனும் ஆகிய பெருமானை , அடியேன் , திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

ஆழ்தல் , அகலுதல் , உயர்தல்களுக்கு எல்லை , மாயை யும் , உயிர்களுமாம் . அவற்றிற்கு அப்பாற்பட்டவன் என்பது திருக் குறிப்பு . சிவவழிபாட்டினை இடைக்கண் விட்டொழிவார்க்கு சிவன் , திரிபுரத்தவர்க்கு நின்றாற்போல நிற்பனாகலின் , ` ஆதி அந்தம் பணி வார்க்கு அணியானை ` என்று அருளினார் . இதனானே , சிவவழி பாட்டினை வழங்குவோர் , ` நீவிர் சாங்காறும் இவ்வழிபாட்டினை விடாது செய்தல் வேண்டும் ` என்று விதிப்பதும் , பெறுவோர் , ` யான் சாங்காறும் இதனை விடாது செய்வேன் ; நாள் தோறும் இவ்வழி பாட்டினைச் செய்தன்றி உண்ணேன் ` என்று உறுதிகூறி ஏற்றலும் முறையாயின வென்க . அங்ஙனம் தாம் உடம்பட்டவாறே வழுவாது வழிபடுவார்க்குச் சிவன் , அணியனாய் நின்று அருளுதலையும் , அவரவர்பால் அணுகிநின்று அறியலுறின் அறியப்படுவதே என்பதும் உணர்க . ` பணியார்க்கு ` என்பதும் ஈண்டைக்கியைய உரைக்கற்பாற்றா யினும் , அஃது ஈண்டு ஒவ்வாதென விடுக்க . கூழை . கடை குறைதலாத லின் அது , குறைந்து பின்னிற்றலைக் குறித்தது . குடி - குடும்பம் . புறத்துக் காண்பவர் , குடும்பத்தில் பற்றொடு நிற்கின்றார் எனக் கருத , சிவனடியார் உள்ளத்துப் பற்றின்றியே அதனொடு நிற்றலின் , அந் நிலையை , ` பொய்யே குடியோம்பி ` என்று அருளினார் . குழைதல் , சிவபிரானிடத்தும் , அவன் அடியாரிடத்தும் . ` வாழி ` என்றதில் , இகரம் தொழிற்பெயர் விகுதி . ` வாழியர்க்கு ` என்பதனை , ` வாழிய ரிடத்து ` எனத் திரிக்க . அவரிடத்து வழுவுதல் - அவர்க்கு அடிமை செய்தலில் தவறுதல் . சுந்தரர் அடியார்க்கு அடியராய் , அவர்தம் அடிமைத் திறத்தில் திறம்பாது நின்றமை அறிக . இனி , ` காட்டி ` என்னும் எச்சத்தினை , எண்ணின்கண் வந்ததாகக்கொண்டு , ` வாழி யர்க்கே வழுவா நெறி காட்டுபவனை ` என்று உரைத்தலுமாம் . ` மாசு ` என்றது வினையை . மாசினால் வருவதனை , ` மாசு ` என்றார் . பான்மை வழக்கினால் . ` என்னை மாசறுத்தான் ` என , வினையது நீக்கம் , வினைமுதல்மேல் ஏற்றப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

நாத்தான் தன்திற மேதிறம் பாது
நண்ணிஅண் ணித்தமு தம்பொதிந் தூறும்
ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும்
அளவிறந் தபஃ றேவர்கள் போற்றும்
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்
துருவி மால்பிர மன்னறி யாத
மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

அடியேற்கு , எனது நா , தனது புகழைச் சொல்லு தலில் என்றும் மாறுபடாதவாறு என்னிடத்துப் பொருந்தி , உள்ளே அமுதம் நிறைந்தாற்போல இனித்து ஊற்றெழுகின்ற துணைவனாய் உள்ளவனும் , எண்ணில்லாத பல தேவர்களும் துதித்து வணங்குகின்ற வணக்கத்திற்கு உரியவனும் . ` ஞாயிறு , திங்கள் , தீ ` என்னும் முச்சுடர் களிலும் வேறற நிற்பவனும் , திருமாலும் பிரமனும் தேடி அறியப்படாத பெருமையை உடையவனும் , எனக்குப் பெருமையை அளித்தவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

` உன் திறமே ` என்பது பாடம் அன்று , ` திறம்பாமை ` என்பது , ` திறம்பாது ` எனத் திரிந்துநின்றது . ` பொதிந்து ` என்றது , பொதிந்தாலொப்ப நிற்றலை உணர்த்திற்று . ` ஆத்தன் ` என்பது நீட்ட லாயிற்று . ` அடியேன்றனக்கு ஆத்தன் ` என இயைக்க . ` சோத்தம் ` என்பது , கடைக் குறைந்து நின்றது , ` மகத் ` என்னும் ஆரியச்சொல் , ` மாத்து ` எனத் திரிந்து நின்றது . இறைவன் சுந்தரர்க்கு அளித்த பெருமை , தோழமை .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும் , திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த , தமிழ்ச் சொல்லால் அமைந்த மெய்யுணர்வு மாலையாகிய , முன்பு அவர்களால் சொல்லப்பட்டனவற்றையே பின்னும் பிறர் சொல்லிப் போற்றுதலை விரும்புபவனும் , அடியேனது அறியாமையை அறிந்து , கல்லின் இயல்பைக் கொண்ட எனது மனத்தை உருகப்பண்ணி , கழல் அணிந்த தனது திருவடியைப் பெறுவித்து , எனது குற்றங்களை எல்லாம் அறுத்த வன்மையையுடைய , தேவர் பலரும் வணங்க நிற்கின்ற பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

` நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் ` என்று அருளினமையால் ( தி .7 ப .62 பா .8), ` நல்லி? u2970?` என்றதற்கு இதுவே பொருளாயினும் , அது சிறந்த புகழின் மேலும் நோக்குடைத்தேயாம் . அது ` நாவினுக்கரையன் ` என்றதனோடும் இயைவதே . ` நாவினுக்கரசரும் ` என்பது பாடம் அன்று . ` நன்மாலை ` என இயையும் . நன்மை - ஞானம் ; அதனை , ஞானத்தை , ` சன்மார்க்கம் ` ( சிவஞானசித்தி சூ .8) என வழங்குதல் பற்றி அறிக . இவ்வாறு இருவரது பாடலையும் ஒருபெற்றியவாகவே , உணர்த்தி யருளினமையின் , அவை தம்முள் வேறுபாடின்மை அறிந்துகொள்க . இதனானே , ` பாட்டிற்கு நீயும் அவனும்ஒப் பீர்எப் படியினுமே ` எனப் பின்வந்தோரும் நாவுக்கரசரை நோக்கிக் கூறினார் என்க ( நால்வர் நான்மணிமாலை -2). ` சொல்லிய ` என மறித்துங் கூறியது . ` மாலை ` என்னும் ஒப்புமை வழக்கால் , ` முன்னர் ஒருவர் சாத்திய வற்றையே கொண்டு , பின்னரும் பலர் சாத்துதல் ஆகாது போலும் ` என்று ஐயுறினும் உறுவர் என்னும் திருவுள்ளத்தால் . ` உற்ற குறியழியும் ஓதுங்காற் பாடைகளிற் சற்றும் பொருள்தான் சலியாது ` - உண்மைவிளக்கம் -41 என்றமையின் , சொன்மாலைகள் அன்னவல்ல , என்றுந் தூயனவே யாம் என ஐயம் அறுத்தற் பொருட்டு என்க . இவ்வைய மறுத்தற்கண் ஏகாரம் , தேற்றமாம் , பின்னும் அதுதானே பிரிநிலையுமாய் , ` ஏனை எல்லாவற்றினும் மேலாக , இவற்றையே எம் பெருமான் பெரிதும் விரும்புகின்றான் ` என்பதுணர்த்தும் . இவ்வாறு , அவன் இவற்றைச் சிறப்பாக விரும்புதற்குக் காரணம் , இசைமாலை , ஞானமாலை ` என்பவற்றாற் குறிக்கப்பட்டது . அஃதாவது , இசையும் , ஞானமும் ஒருங்கியைந்த சொன்மாலை யாதல் பற்றியே , இவற்றை இறைவன் ஏனையவற்றினும் மேலாகப் பெரிதும் விரும்புகின்றான் என்றவாறு , வேதங்களுள்ளும் ` சாம வேதத்தை இறைவன் பெரிதும் விரும்புவன் ` என்றல் , இசையொடு கூடிநிற்றல் பற்றியேயாம் . இவற்றை ஓது வார்க்கும் , கேட்பார்க்கும் இசையால் அன்பு தோன்றுதலும் , ஞானத் தால் அது நிலைபெறுதலும் உளவாதல் அறியற்பாற்று . இதுபற்றியே , திருப்பதிகங்கட்குத் திருக்கடைக் காப்பாகப் பயன் அருளிச் செய்யப் பட்டதென்பதும் , நுனித்துணரற் பாலது . இனிச் சுவாமிகள் தமது பாடலையும் அவ்விருவர் பாடல் களோடு ஒப்ப இறைவன் மிக விரும்புதலை வெளிப்பட அருள நினைந் திலராயினும் , முன்னைத் திருப்பாடலில் . ` மாத்தெனக்கு வைத் தானை ` என அருளினமையாலும் , இத் திருப்பாடலிலும் இறைவன் தம்மைக் குற்றம் அறுத்துக் குணஞ் செய்தமையை வகுத்தோதினாராக லானும் , பிறவாற்றானும் அதனைக் குறிப்பான் உணர்த்தியருளினார் எனவே கொள்க . அது திருக்குறிப்பு அன்றாயின் , தம் திருப்பதிகங் களது இறுதியில் , சுவாமிகள் திருக்கடைக்காப்பு அருளுவாரல்லர் என்க . இவ்வாறு இத்திருப்பதிகத்துள் , ஞானசம்பந்தர் , நாவுக்கரசரது திருப்பாடல்களின் பெருமையை உலகறிய எடுத்தோதியருளினமை யின் , சேக்கிழார் , ` நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டுகந்தீர் என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந் தேத்தி அருள்பெற்று ` ( தி .12 ஏ . கோ . புரா .44) என எடுத்தோதி , தம் கடப்பாட்டினை இனிது முற்றுவித்தருளினார் என்க . ` வானவர் வணங்க நின்றானை ` என்றதனை ஒருபெயர்ப் படுத்து . ` வல்லியல் ` என்றதனோடு தொக்க தொகையாக்குக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

பாடுமா பாடிப்ப ணியுமா றறியேன்
பனுவுமாப னுவிப்ப ரவுமா றறியேன்
தேடுமா தேடித்தி ருத்துமா றறியேன்
செல்லுமா செல்லச்செ லுத்துமா றறியேன்
கூடுமா றெங்ஙன மோஎன்று கூறக்
குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
வாடிநீ வாளா வருந்தல்என் பானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

யான் , முன் உள்ள பாடல்களை , அவைகளைப் பாடும் நெறியாற் பாடி இறைவனை வழிபடுமாற்றை அறிந்திலேன் ; புதிய பாடல்களை யாக்கும் நெறியால் யாத்துத் துதிக்கு மாற்றினையும் அறிந்திலேன் ; மனத்தில் உள்ள குற்றங்களை ஆராயும் நெறியால் ஆராய்ந்து கண்டு அதனைத் திருத்தும் வகையை அறிந்திலேன் ; அதனால் , அதனை நன்னெறியிற் செல்லுமாறு செலுத்தும் வழியை அறிந்திலேன் ; இவற்றால் ` இவன் நன்னிலையைப் பெறுதல் எவ்வாறோ !` என்று நல்லோர்கள் இரங்கிக்கூற இருக்கின்ற காலத்து , என்னையே சிறப்பாக யாவர்க்கும் காட்டி , ` இவன் எனக்கு அடிமை ` என்று சொல்லி வெளிக்கொணர்ந்து , தனக்கு ஆளாகக் கொண்டு , ` இனி , நீ , பயனின்றி வாடி வருந்தலை ` என்று தேற்றிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்த தனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

` பன்னல் ` என்பதன் முதனிலையாகிய , ` பன் ` என்பது , ` ஆராய்தல் ` என்னும் பொருளது . அதுவே , பின்னர் , ஆராய்ந்து பன் முறை சொல்லுதலைக் குறிக்கும் . இனி , அம் முதனிலைதானே உகரம் ஏற்று உயிரீறாய் வேறுபட்டு நின்று ஆராய்ந்து நெறிப்படச் செய் தலைக் குறிப்பதாய் , பஞ்சியை நூலாக்குதலையும் , செய்யுள் செய் தலையும் குறிக்கும் . ஆகவே , ` பனுவல் ` என்னும் தொழிற்பெயர் , ஆகு பெயராய் , அதன் செயப்படுபொருளாகிய , பஞ்சி நூலையும் , செய்யுளையும் குறிப்பதாயிற்று . அவ்வாற்றான் , ஈண்டு , ` பனு ` என்னும் முதனிலை பற்றி , ` பனுவுமா பனுவி ` என்று அருளினார் என்க . தேடுதல் , செலுத்துதல் , கூடுதல் , இவற்றிற்குச் செயப்படு பொருள்களும் , கூறுதலுக்கு வினை முதலும் வருவிக்கப்பட்டன . இத் திருப்பாடலின் முதல் இரண்டடிகளையும் , ஏனையவற்றோடொப்ப வகையுளி செய்து சீரறுக்க . அன்றி , இயல்பாகவே வைத்து , ` அடிமயங் கிற்று ` என்றலுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

பந்தித்தவ் வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
சந்தித் ததிற லாற்பணி பூட்டித்
தவத்தை ஈட்டிய தன்னடி யார்க்குச்
சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ்
சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

பிணித்துள்ள வினைத் தொடர்பு அறுதலால் , பிறவியாகிய கடலினது பரப்புச் சுருங்குமாறு செய்பவனும் , தன்னை உணர்ந்த உணர்வின் வலிமையால் , தம் செயல்களைத் தன்னிடத்தே சேர்த்து , அதனால் , செய்யும் செயலெல்லாம் தவமேயாகக் குவித்த தன் அடியவர்கட்குத் தனது திருவடிகள் , நினைத்தற்கு எளியவாய்க் கிடைத்தலானே , தனது சிவலோகத்தின் வாயிலைத் திறந்து , அதன்கண் அவர்களைப் புகச்செய்ய வல்லவனும் , தன்னையே வணங்குகின்ற வர்களது மனத்தில் விளங்குபவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

பிறவி நீங்குமாறும் , சிவலோகத்து ஏறுமாறும் இவை என்பது உணர்த்துதற் பொருட்டு , ` பற்றற ` எனவும் , ` எளிதாய் ` எனவும் ஓதினாரேனும் , ` பற்றறுத்து ` எனவும் , ` எளிதாகத் தந்து ` எனவும் ஓதுதலே திருவுள்ளம் என்க . படுகடல் - ஒலிக்குங்கடல் ; என்றது , அடையொடுவந்த உருவகம் , ` தம்மடியார்க்கு என்பது பாடம் அன்று . ` எளிது ` என ஒருமையால் அருளியது , ` பாதம் ` என்னும் பொதுமை நோக்கி . ` எளிதாய் ` என்ற எச்சம் காரணப்பொருட்டு . ` ஏற்ற ` என்றார் , எல்லாவற்றிற்கும் மேல் உளதாதலின் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

எவ்வெவர் தேவர்இ ருடிகள் மன்னர்
எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
அவ்வவர் வேண்டிய தேயருள் செய்து
அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை
இவ்விவ கருணைஎங் கற்பகக் கடலை
எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
வவ்விஎன் ஆவிம னங்கலந் தானை
வவிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

தேவர்கள் , இருடிகள் , அரசர்கள் முதலாக எண்ணிறந்தவர்களாகிய எவரெவரும் , எவ்விடத்திலும் இருந்து வழிபட , அவ்வெல்லா இடங்களிலும் நின்று அவர்களது வழி பாட்டினை ஏற்று , அவரவர் விரும்பியதை அவர்கட்கு அளித்து , இவ்வாற்றால் , தன்னை அடைந்தவர்க்குப் புகலிடமாய் நிற்பவனும் , இவ்வாறு உள்ள இவை இவையாகிய அருளைத்தருகின்ற எங்கள் கற்பகத் தருவும் கடலும் போல்பவனும் , யான் , ` எம் பெருமானே , எனக்கு அருள்செய் ` என்று வேண்டிக்கொண்ட பின்பு , என் உயிரைத் தன்னுடையதாகக்கொண்டு , என் உள்ளத்திலே எஞ்ஞான்றும் நீங்காது இருப்பவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

` எவ்வெவரும் ` என்னும் முற்றும்மை தொகுத் தலாயிற்று . ` மற்று `, அசை . ` அவ் ` என்பது அடுக்கி , ` அவ் வவ ` என வருதல் போல் , ` இவ் ` என்பது அடுக்கி , ` இவ்விவ ` என , வந்தது . இவைகளில் , ஈற்றில் நிற்கும் அகரம் , சாரியை . ` இவை இவை ` என்பது , அங்கங்கும் நின்று வழிபாட்டினை ஏற்று வேண்டுவோர் வேண்டுவதை அளித்தலும் , பின்னும் புகலிடமாய் நிற்றலும் ஆகிய இவற்றை , ` இவ்விவர் ` என்பது பாடம் அன்று . ` கருணைக் கற்பகம் . கருணைக் கடல் ` என்றவை , இல்பொருள் உவமைகள் . ` கற்பகம் , கடல் `, என்றவை , உவமையாகு பெயர்கள் ` கற்பகக் கடல் ` உம்மைத் தொகை . உம்மைத் தொகைக்கண் நிலைமொழி மகரஈறு கெட , வரு மொழி வல்லெழுத்து மிகுதலை , ` இன்பத் துன்பம் ` ( தி .8 திருக்கோவை யார் -71.) என்றதனானும் அறிக . சுந்தரர் , ` எம்பெருமானே அருளாய் ` என்று வேண்டியது , திருக்கயிலையில் , ` மையல் மானுட மாய்மயங் கும்வழி ஐய னேதடுத் தாண்டருள் செய் ` ( தி .12 பெ . புரா . திருமலை -28.) என்றது . ` என்ற பின்னை ` என்றது , ` என்று வேண்டியதனாலே ` எனக் காரண காரிய நிலைகள் தோன்ற நின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத்
திறல்அ ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்
பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும்
பின்னையாய் முன்ன மேமுளைத் தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவா
தடிப ணிந்தறி தற்கரி யானை
வரையின் பாவைம ணாளன்எம் மானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

வானத்தில் திரிகின்ற முப்புரங்களை அழித்ததும் , குற்றம் செய்த , வலிமையுடைய அரக்கனாகிய இராவணனை ஒறுத்ததும் , ஏனை , பெரிய ஆலகால விடத்தை அமுதமாக உண்டதும் முடிதற்குக் காரணனான பின்னோனாய் , எப்பொருட்கும் முன்னே தோன்றினவனும் , அரிய நான்கு வேதங்களை ஓதுகின்ற அந்தணர்கள் , மனம் மாறுபடாது நின்று அடிபணிந்தும் , அவர்களால் அறிதற்கு அரியவனும் , மலைமகட்குக் கணவனும் ஆகிய எம் பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் , எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

தேவர்களாலும் தடுத்தற்கு அரியதாய் எங்கும் பரவின மையின் , ` பெரிய நஞ்சு ` என்று அருளினார் . ` அமுது ` என்றதன்பின் , ` ஆக ` என்பது வருவிக்க . ` நஞ்சினை அமுதமாக உண்டான் ` என்றது , ` தேவர்கள் அமுதத்தைப் பகிர்ந்து உண்டதில் தனக்கு உரிய அமுதாகப் பெற்று உண்டது நஞ்சினையே ` என்றபடி . முற்றுதல் - முடிதல் . ` முற்றும் ` என்ற பெயரெச்சம் , ` பின்னை ` என்ற காரணப் பெயரைக் கொண்டது . ` பின்னை ` என்றது , காலவாகுபெயர் . உலகம் தோன்றி நெடுங் காலம் சென்ற பின்னரே , திரிபுரம் எரித்தமை முதலியன நிகழ்ந்தன என்றலே பொருந்துவதாதல் அறிக . யாவும் தோன்றுதற்கு முன்னே இருத்தலை , முளைத்தலாக அருளினார் , பான்மை வழக்கால் . வேதங்களில் அரிய பொருள்கள் உளவாயினும் , அவற்றைச் சிவாகம வழியால் அன்றி உணரலாகாமையின் , வேதம் ஒன்றையே உணரும் அந்தணர்களால் , சிவபெருமான் அறிதற்கு அரியனாயினான் என்க . எனவே , இங்கு , ` நான்மறை அந்தணர் ` என்றது , சிவாகமங்களை , ` வேத பாகியம் ` என்றும் , அதன்கண் சொல்லப்பட்ட தீக்கை முதலிய வற்றை , ` அந்தணர்களுக்கு உரிய அல்ல ` என்றும் இகழ்ந்து , சிவ பிரானையும் ஏனைத் தேவர்களோடு ஒப்பக் கருதுதலும் , ஒரோவழி , மாயோன் முதலியோரைச் சிவபெருமானினும் உயர்ந்தோராகக் கருதுதலும் உடைய வேதியர்களையேயாயிற்று . மீமாஞ்சகர் கடவுளை அடிபணிதல் இன்மையின் , இத்திருமொழி , மீமாஞ்சகரைக் குறித்தது என்றல் கூடாமை அறிக . வேதத்துள் , ஈசானாதி பஞ்சப் பிரம மந்திரங் களும் , உருத்திரனுக்கு ஆவுதி பண்ணும் மந்திரம் ஏனைய தேவர்கட்கு உரிய ( இந்த்ராய ஸ்வாஹா , வருணாய ஸ்வாஹா ) மந்திரங்கள் போலப் பெயரளவில் நில்லாது , முதற்கண் வணக்கம் சொல்லி , பின்னர்ப் பெயரைக்கூறி , அதன் பின் , ` பசுபதி ` எனச் சிறந்தெடுத் தோதுவதும் , ( நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ) பிறவும் சிவபெருமானது தலைமையை உணர்த்தி நிற்பினும் , அவற்றது சிறப்புச் சிவாகமங்களினன்றித் தெற்றென உணரவாராமையின் , சிவாகமங்களைப் போற்றாதார் , சிவபெருமானை யறிதல் அரிதாயிற்று என்க . சிவாகமங்கள் இன்றி , வேதம் ஒன்றாலேயும் சிவபிரானது தலைமையை அறிதல் கூடும் என்பார் உளராயின் , அன்ன உணர்வுடை யார் , சிவாகமங்களை இகழார் என விடுக்க . சிவாகமத்தை இகழ்வார் , சிவபெருமானது முதன்மையை உணராது தமது உணர்வையே சிறந்ததாகக் கூறி நிற்றல் , இன்றும் எங்கும் கண்கூடாய் அறியப் படுவதேயாதல் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மால்உதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச்
சுமந்த மாவிர தத்தகங் காளன்
சான்று காட்டுதற் கரியவன் எளியவன்
றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
மான்று சென்றணை யாதவன் றன்னை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே

பொழிப்புரை :

தன்னொடு மாறுபடுதலை ஏற்ற பிரமனது தலைகளில் ஒன்றை அறுத்து , அதனை நிரப்ப , மாயோனது உதிரத்தை ஏற்றவனும் , யாவருக்கும் காணப்படுகின்ற தோளின் மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தை யுடையவனும் , தன்னைக் காண்பதற்குரிய வழியைக் காட்டுதற்கு அரியவனும் , தன்னிடத்திற் பொருந்திய மனத்தையுடையவர்கட்கு எளியவனும் , அறியாமை வழிச் சென்று அணுக இயலாதவனும் ஆகிய பெருமானை , அடியேன் , ` திருவலிவலம் ` என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன் ; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன் !

குறிப்புரை :

ஏன்று கொள்ளுதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது . மேலைத் திருப்பாடலில் சிவனை அறியமாட்டாத அந்தணரது தன்மையைக் குறித்தபின் , இத் திருப்பாடலில் , அவர்கட்குத் தந்தை யாய் உள்ளவன் சிவபிரானை இகழ்ந்து அடைந்த நிலை இது என உணர்த்துகின்றார் என்பது , பிரமனை , ` அந்தணன் ` என்ற குறிப்பால் விளங்குவதாகும் . அவன் அடைந்த நிலையை அருளுகின்றவர் , அவனுக்கு உண்மையை உணர்த்தாது , தானே முதல்வன் என்று சொல்லி அவன்பால் வெற்றிபெற நினைத்த அவனது தந்தை அடைந்த நிலையையும் உடன் அருளிச் செய்தார் . பிரமதேவன் தானே உலகிற்கு முதல்வன் என்று சொல்ல , திருமால் அதனை மறுத்து , ` நானே முதல்வன் ` என்று சொல்லியதனால் இருவருக்கும் போர் நிகழ்ந்தபொழுது , சிவபிரான் வைரவக் கடவுளைத் தோற்றுவித்து விடுக்க , அவரைக் கண்டு திருமால் அஞ்சி நீங்கியபின்னும் பிரமன் , ` என் மகனே வா ` என்று அழைத்தல் கண்டு , அவனது நடுத்தலையை நகத்தாற் கிள்ளி அவனது செருக்கை அடக்கி , வைகுந்தத்திற் சென்று திருமாலின் நெற்றியைத் தாக்கி அதனினின்றும் பாய்ந்த உதிரத்தை அக்கபாலத்தில் ஏற்றார் என்பது சிவ புராணத்துட் கூறப்படுதல் காண்க . இது , காஞ்சிப் புராணத்து வைரவேசப் படலத்துள்ளும் விரித்துக் கூறப்பட்டது . ` களேபரம் ` என்றது , கங்காளத்தையே ஆதலின் , ` கங்காளன் ` என்றது , வாளா பெயராய் நின்றது . கங்காளத்தைச் சுமந்து நிற்கின்ற செயலை விடாதிருத்தலையே , ` மாவிரதம் ` என்று அருளினார் . எனவே , இதுபோல்வதொரு கோலத்தைக் கொண்டே , ` மாவிரதம் ` என்னும் சமயம் உளதாயிற்றென்க . ` சான்று ` என்றது , ` அறியும் வழி ` என்னும் பொருளதாய் நின்றது . ` குணம் , குறி ` முதலி யவை ஒன்றும் இல்லாமையின் , அதனைக் காட்டுதல் அரிதாயிற்று . ` அரியவன் ` என்புழியும் இரண்டன் உருபு விரிக்க . ` தன்னை ` என வந்த பலவற்றுள்ளும் , ` தன் ` என்பது , சாரியை . மான்று - மயங்கி . அஃது அறியாமையால் வரும் திரிபு உணர்ச்சியைக் குறித்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்
கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
வலிவ லந்தனில் வந்துகண் டடியேன்
மன்னு நாவல்ஆ ரூரன்வன் றொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்போய்
மெலிவில் வானுல கத்தவர் ஏத்த
விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே

பொழிப்புரை :

வறுமையின் வலிமை கெடும்படி அரிய வேள்வித் தீயை வளர்த்தற்கு ஏதுவான , பெரியோர் பலரும் போற்றிக் கற்ற நான்கு வேதங்களின் முடிந்த பொருளாகிய தீப்போலும் உருவின னாகிய சிவபெருமானை , அவனை எஞ்ஞான்றும் தன்னிடத்து நீங்காது கொண்டு நிற்கும் , ` திருவலிவலம் ` என்னும் தலத்தில் வந்து கண்டு , அவன் அடியவனும் , நிலை பெற்ற திருநாவலூரில் தோன்றியவனும் , ` வன்றொண்டன் ` எனப் பெயர்பெற்றவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய , இனிய இசையையுடைய , செவ்விய தமிழால் ஆகிய பத்துப் பாடல்களையும் , மனத்தால் விரும்பிப் பாடவல்லவர்கள் , தேவர்கள் விரும்பிப் போற்ற , துன்பம் இல்லாத வானுலகத்தைப் போய் அடைவர் ; இது திண்ணம் .

குறிப்புரை :

` ஓம்பும் நான்மறை , கற்ற நான்மறை ` எனத் தனித் தனி இயைக்க . ` அனல் ` என்றது உருவகமாய் , அனல்போலும் திரு மேனியை உடைய சிவபிரானைக் குறித்தது . அவன் நான்மறையின் முடிந்த பொருளாதலின் , ` முற்று அனல் ` என்று அருளினார் . ` நான் மறை முற்றனல் ஓம வலிவலந்தனில் ` எனவும் பாடம் ஓதுவர் , ` ஒலி கொள் ` என்றது , இறந்த கால வினைத்தொகையாய் . ` பாடிய ` எனப் பொருள் தந்தது . ` வானுலகு விரும்பி ஏத்த , மெலிவில் விண்ணுலகு போய் எய்துவர் ` எனக் கூட்டுக .
சிற்பி