திருவாவடுதுறை


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

கங்கையைத் தாங்கிய நீண்ட சடையை உடையவனே , பூத கணங்கட்குத் தலைவனே , காலனுக்குக் காலனே , காமன் உடலுக்கு நெருப்பாகியவனே , அலை மிகுகின்ற பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உடைய கண்டத்தை உடையவனே , உயிர்கட்கு முதல்வனே , அறவடிவினனே , தூயோனே , சிவந்த கண்களை யுடைய திருமாலாகிய இடபத்தை யுடையவனே , தெளிந்த தேன் போல்பவனே , கடவுளே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற கருணையாளனே , அடியேனுக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

` அமரர்கட்குத் தலைவனே ` என , வாளா அருளாது , ` அமரர்கள் ஏறே ` என , உருவகித்து அருளினார் , அவனது முதன்மை யின் சிறப்புத் தோன்றுதற்கு . அமரர்கள் ஏறு , ஏகதேச உருவகம் . இது , வலிமை நிலனாக வந்தது . ` ஏறு ` என்ற உருவகம் , ஏனைய பெயர் களோடு இயைந்தது . திணைவழுவமைதி .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற்
கருத்த ழிந்துனக் கேபொறை யானேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

நிலவுலகின்கண் மானுட வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கக் கடவேனாகிய என்முன் நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொண்டவனே , தெளிவாகிய நிலவொளியை வீசுகின்ற சடையை உடையவனே , இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக் கின்ற அண்ணலே , தேவர்களாகிய , விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , யான் கண் இல்லேனாயினேன் ; அதன்மேலும் , உடம்பில் வந்து பற்றி வருத்துகின்ற நோயினால் மனம் வருந்தினமையால் , உனக்குத்தான் சுமையாய் விட்டேன் ; எனக்கு உறவாவார் உன்னை யன்றி வேறு யாவர் உளர் ! ஆதலின் , என்னை ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள்செய்யாய் .

குறிப்புரை :

` என்னை வலிய வந்து ` என்றதில் , என்னை , உருபு மயக்கம் . ` உடம்பில்லடு நோய் ` என்ற லகர ஒற்று , விரித்தல் . சுவாமிகள் கண்ணின்றி இருந்ததோடு , உடம்பிற் பிணியுற்று இருந் தமையையும் நினைக்க . ` கருத்தழிந் துனக்கே பொறை யானேன் ` என்றதை , ` கடை முறை உனக்கே பொறையானேன் ` ( தி .7 ப .60 பா .5) என்றதனோடு வைத்துக் காண்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

ஒப்பி லாமுலை யாள்ஒரு பாகா
உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே
மூவ ருக்கருள் செய்ய வல்லானே
செப்ப ஆல்நிழற் கீழ்இருந் தருளுஞ்
செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

நிகரற்ற தனங்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடையவனே , மேலானவனே , ஊமத்தம் பூப் பொருந்திய சடையை உடையவனே , முப்புரங்களைத் தீவளையச் செய்து , அப்பொழுதே அவற்றில் இருந்தவர்களுள் மூவருக்கு மட்டில் அருள் செய்ய வல்லவனே , அறத்தைச் சொல்லுதற்கு ஆல் நிழலில் அமர்ந் தருளிய செல்வனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் அப்பனே ! தேவர்களாகிய விலங்குகளுக்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாருளர் ! என்னை ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

திருவாவடுதுறையில் உள்ள அம்மைக்கு , ` ஒப்பிலா முலையாள் ` என்பது பெயராய் வழங்குதல் நினைக்கத் தக்கது . ` தீ வளைத்து ` என்றதனை , ` தீயாய் வளைத்து ` என விரித்தலுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

கொதியி னால்வரு காளிதன் கோபங்
குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயான்
மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழு தேத்தும்
விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

சீற்றத்தொடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தை யுடையவனே , மாணிக்கம் போல்பவனே , மணவாளக் கோலத்தினனே , தேவர்கள் , முறைப்படி வணங்கித் துதிக்கின்ற இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , தேவர்களாய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , அறிவில்லேனாகிய யான் உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால் , செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன் ! எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

சிவபிரான் காளியோடு நடனப் போர் செய்து , அவளது செருக்கை அடக்கிய புராண வரலாற்றினை , ` ஓடிய தார கன்ற னுடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய ஆடிய மாந டத்தெ மனலாடி பாத மவையாம் நமக்கொர் சரணே ` ( தி .4 ப .14 பா .4) எனத் திருநாவுக்கரசரும் , தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடி தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ ( தி .8 திருச்சாழல் - 14) என மாணிக்கவாசகரும் அருளிச்செய்தமை காண்க . விகிர்தன் - உலகியல்பின் வேறுபட்டவன் ; கடவுட் பொருள் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

வந்த வாள்அரக் கன்வலி தொலைத்து
வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
வெந்த வெண்பொடிப் பூசவல் லானே
வேட னாய்விச யற்கருள் புரிந்த
இந்து சேகர னேஇமை யோர்சீர்
ஈச னேதிரு வாவடு துறையுள்
அந்த ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

உலகமாகிய வழிக்கு முதலானவனே , வெந்த தனால் ஆகிய வெள்ளிய திருநீற்றைப் பூச வல்லவனே , அருச்சுன னுக்கு வேட உருவத்தில் சென்று அருள்செய்த சந்திர சேகரனே , தேவர் களுக்குப் புகழுடைய தலைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற அந்தணனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! அன்று நீ இருக்கும் இடத்தில் செருக்குக் கொண்டு வந்த கொடிய அரக்கனாகிய இராவணனது வலிமையை அழித்து , பின்பு அவனுக்கு வாழ்நாள் கொடுத்து விடுத்தாய் ; இன்று , என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

` இராவணனை முன்பு ஒறுத்ததோடு ஒழியாது , பின்பு , அவனுக்கு அருள்பண்ணியது போல , இன்று அடியேனை ஒறுத் தொழியாது , அருள்பண்ணுதல் வேண்டும் ` என்றபடி . ` அந்தணா ` என்றதும் , ` அழகிய தட்பத்தையுடையவனே ` என , அவனது அருளுடைமையைக் குறித்தவாறாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

குறைவி லாநிறை வேகுணக் குன்றே
கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

` குறை ` எனப்படுவது ஒன்றேனும் இல்லாத நிறைவுடையவனே , இறைமைக் குணங்கள் எல்லாவற்றானும் இயன்ற தொரு மலை எனத் தக்கவனே , கூத்துடையவனே , குழையணிந்த காதினை யுடையவனே , சிறையை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாரூரில் உள்ள , செம்பொன் போல்பவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , அடியேனும் உன்னையன்றி உறவினர் ஒருவரையும் உடையேன் அல்லேன் ; எனக்கு உறவாரும் உன்னையன்றி வேறு யாவர் உளர் ! ஆதலின் , யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால் , உனக்கு வருவதொரு தாழ்வுண்டோ ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள்செய்யாய் .

குறிப்புரை :

எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி , குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றில்லாமையை வலியுறுத்துணர்த்துவார் , ` குறைவிலா நிறைவே ` என , எதிர்மறையானும் , உடம்பாட்டானும் அருளிச் செய்தார் . ` குறைவிலா நிறைவே குணக்குன்றே ` என்ற இதனை , ` குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே ` ( தி .8 கோயில் திருப் .5) என்ற திருவாசகத்தோடும் வைத்துக் காண்க . தமக்குத் துணைசெய்ய வல்லார் பிறரின்மையை வலியுறுத்து வேண்டுவார் , ` உறவிலேன் ` எனத் தம்மேலும் , ` உறவு யார் ` எனப் பிறர் மேலும் வைத்து , இருவாற்றானும் அருளிச்செய்தார் . ` ஒரு பிழை ` என்றது , சூள் பிழைத்தமையை . ` ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே ` என்றது , சுவாமிகளுக்கு இறைவரோடுளதாய உரிமையை இனிது புலப்படுத்து வதாகும் . திருவாரூரை அடையும் ஆர்வத்தினாலே இந்நிலை வந்தது என்பதனை நினைகின்றாராதலின் , ` திருவாரூர்ச் செம்பொனே ` என்று அருளினார் . இத்தலத்தில் இறைவர்க்கு , ` செம்பொற்றியாகர் ` என்னும் பெயர் வழங்குதல் இதுபற்றியே போலும் !

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

வெய்ய மாகரி ஈருரி யானே
வேங்கை யாடையி னாய்விதி முதலே
மெய்ய னேஅட லாழியன் றரிதான்
வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிக ழொளியே
செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

கொடிய , பெரிய யானையினது உரித்த தோலை யுடையவனே , புலித்தோல் ஆடையை உடுத்தவனே , விதிவிலக்குக் களுக்குத் தலைவனே , மெய்ப்பொருளானவனே , அன்று திருமால் வேண்டிக்கொள்ள , வலிமையையுடைய சக்கரத்தை அவனுக்கு அளித்தருளிய இறைவனே , சிவந்த திருமேனியையுடையவனே , ஒளிகள் எல்லாவற்றினும் மேம்பட்டு விளங்குகின்ற ஒளியாய் உள்ளவனே , நெருப்புக்கண்ணை உடையவனே , திருவாவடுதுறை யில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , தேவர்களாகிய விலங்கு கட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவர் உன்னை யன்றி வேறுயாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

` வேங்கை ` என்றது , ஆகுபெயர் . ` விதி ` என்றது , ` ஆணை ` என்னும் பொருளதாய் , விதிவிலக்குகளைக் குறித்தது . ` விதி விலக்குகட்கு முதல்வனானவனே ` என்றதனால் , ` எனது பிழையைப் பொறுப்பினும் , பொறாது ஒறுப்பினும் உன்னையன்றி முதல்வர் வேறு யாருளர் ` என்றவாறாயிற்று . திருமாலுக்குச் சக்கரத்தை அருளினமை யும் , ` வேண்டுவார் வேண்டுவதனை ஈகின்றவன் ` என்பதனைக் குறித்த படியாம் . ` செங்கண் ` என்றது , குறிப்பினால் , ` நெருப்புக் கண் ` என்னும் பொருளைத் தந்தது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

கோதி லாஅமு தேஅருள் பெருகு
கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே
பசுப தீபர மாபர மேட்டி
தீதி லாமலை யேதிரு வருள்சேர்
சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

கோதில்லாத அமுதம் போல்பவனே , அருள் வெள்ளம் பெருகுகின்ற தோற்றத்தை உடையவனே , தேவர்கள் வணங்குகின்ற தலைவனே , உடம்பின் ஒருபாதியில் மங்கை ஒருத்தியது ஒருபங்கினை உடையவனே , உயிர்கட்குத் தலைவனே , மேலானவனே , மேலிடத்தில் இருப்பவனே , நன்மையால் இயன்ற மலைபோல்பவனே , சிறப்புடைய அருள் பொருந்திய வீரனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற முதற்பொருளான வனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள்செய்யாய் .

குறிப்புரை :

` கோதிலா அமுதே ` என்ற இதனையும் , மேற்காட்டிய ( தி .8 கோயில் திருப் .) திருவாசகத்திற் காண்க . கோது - சுவையற்றதாய்க் கழிக்கப்படும் பொருள் . ` கோதிலா அமுது ` என்றதனை , ` காழில் கனி ` ( குறள் - 1191) என்றதுபோலக் கொள்க . ` பெருகு ` என்றது , குறிப்புருவகம் . இறைவனது வேடங்கள் அவனது பேரருளைப் பொழிவனவாகலின் , ` அருள்பெருகு கோலமே ` என அருளினார் . ` கோலம் ` ஆகுபெயர் . தீதில்லாமை , அருத்தாபத்தியால் நன்மையைக் குறித்தது . முப்புரம் எரித்தமை முதலிய அனைத்தும் , அருள்காரணமாகவே நிகழ்ந்தன என்றற்கு , ` திருவருள் சேர் சேவகா ` என அருளிச்செய்தார் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாஎயி றாமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

பொழிப்புரை :

ஆகாயமாகிய நாட்டை உடையவனே , செல்லும் வழிக்குத் துணையாகிய அமுதம்போல்பவனே , குற்றமில்லாத மாணிக்கம் போல்பவனே , வேதத்தின் பொருளாய் உள்ளவனே , பன்றியின் பெரிய கொம்பினையும் , ஆமை ஓட்டையும் , எலும்பையும் , இடப்பட்ட அணிகளாகத் தாங்கிய மார்பையுடையவனே , ` தேன் , நெய் , பால் , தயிர் ` இவைகளால் மூழ்குவித்தலை விரும்புகின்றவனே , இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் யானை போல்பவனே , தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

இத்தலத்தில் இறைவனுக்கு , ` மாசிலாமணியீசன் ` எனப் பெயர்வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது . ` எயிறு ` என்ற இடத்தும் , எண்ணும்மை விரிக்க . ` ஆமை ` ஆகுபெயர் . ` ஈடு ` என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகுபெயராய் , இடப்பட்ட அணிகலங்களைக் குறித்தது . ` ஈடாக ` என ஆக்கச்சொல் வருவிக்க . ஆனைந்தில் , நெய் முதலிய சிறப்புடைய மூன்றனையும் எடுத் தோதவே , ஏனைய இரண்டும் உடன்கொள்ளப்படும் . ` ஆனை ` என்றது , வலியும் , காதலும் நிலைக்களனாக வந்த உருவகம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள்
சாத லும்பிறப் பும்மறுப் பாரே

பொழிப்புரை :

வெண்டலையோடு பொருந்தும் பிறையையும் , கொன்றைமலர் மாலையையும் , பாம்பினையும் , தேனையுடைய ஊமத்த மலரையும் ஒருங்கு விரவிச் சூடிக்கொண்ட சிறந்த இண்டை மாலையையுடைய , சிவந்த சடைமுடியையுடையவனும் , முதற் கடவுளும் , திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவலோக வாணனும் ஆகிய இறைவனை , அவனுக்கு அணுக்கனாய் நிற்கின்ற வன்றொண்டனாகிய , சிங்கடிக்குத் தந்தை , மிக்க அன்போடும் பாடிய இத்தண்ணிய தமிழ்மாலைகளாகிய பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்கள் , இறத்தலையும் பிறத்தலையும் ஒழித்து , எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள் .

குறிப்புரை :

வெண்டலை, தாருகாவனத்து முனிவர்கள் விடுத்தது; அதனைச் சிவபெருமான் தன் தலையில் அணிந்து கொண்டமை அறிக. `அறுப்பார்` என்றது, அதன் காரியத்தையும் தோற்றுவித்து நின்றது. எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்தல், இறைவன் திருவடி இன்பத்தில் திளைத்திருத்தலாம்.
சிற்பி