திருமறைக்காடு


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

யாழைப்பழித் தன்னமொழி
மங்கைஒரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்
குண்ணும்மறைக் காடே

பொழிப்புரை :

யாழின் இசையைப் பழித்த அத்தன்மையையுடைய சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும் , பேழை போலும் சடைமுடியில் பிறையைச் சூடினவனும் ஆகிய இறைவனது இடத்தை அறிந்து வழிபடவேண்டின் , அது , எளிய குரங்குகள் தாழம் புதரூடே புகுந்து , சிறிய புழைகளில் நுழைந்து , வாழைப்பழத்தைப் பறித்து உண்கின்ற திருமறைக்காடேயாகும் .

குறிப்புரை :

` பழித்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . பல பொருள்கள் , கிடத்தலின் , இறைவனது சடைமுடியை , பேழைபோல் வதாக அருளிச்செய்தார் . தாழையையும் , வாழையையும் ஒருங்கோதி யருளியது , ` நெய்தலும் , மருதமும் மயங்கிய நிலம் ` என்பது உணர்த்து தற்கு . இவ்வாறே மேலும் மயங்குநிலமாக அருளப்படுவன அறிந்து கொள்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

சிகரத்திடை இளவெண்பிறை
வைத்தான்இடந் தெரியில்
முகரத்திடை முத்தின்னொளி
பவளத்திர ளோதத்
தகரத்திடை தாழைத்திரள்
ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே

பொழிப்புரை :

தலையில் இளமையான பிறையைச் சூடின இறைவனது இடத்தை அறிய வேண்டின் , சங்கினிடத்தில் தோன்றிய முத்துக்களினிடையே மறைகின்ற பவளக்கூட்டத்தை உடைய அலைகள் , தகர மரங்களின் அடியிலும் , தாழைமரம் , குங்கும மரம் இவைகளின் நிழலிலும் மகர மீனையும் , சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காடேயாகும் .

குறிப்புரை :

முகரம் - ஒலி ; அஃது , ஆகுபெயராய் , சங்கினைக் குறித்தது . ` ஓதத் தகரத்திடை ` என்பது பாடம் அன்று . ` கழை , கரும்பு `, ` சுரும்பு , வண்டு ` என்பனபோல் , ` மகரம் , சுறா ` என்புழி , மகரம் , சுறாவின் வகையாம் என்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

அங்கங்களும் மறைநான்குடன்
விரித்தான்இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
பழம்வீழ்மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும்
வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு
வணங்கும்மறைக் காடே

பொழிப்புரை :

வேதங்கள் நான்கினோடு , அவற்றின் அங்கங்களை யும் விரித்தவனாகிய இறைவனது இடத்தை யாம் அறிந்தோம் ; அஃது எதுவெனின் , தென்னை மரங்களும் , நீண்ட பனை மரங்களும் தம் தம் பழங்கள் விழநிற்கின்ற மணலையுடைய தோட்டத்தில் , சங்குகளும் , விளங்குகின்ற இப்பிகளும் , வலம்புரிச் சங்குகளும் அலைகளால் எறியப் பட , மரக்கலங்களும் உயர்ந்த பாய்மரங்களாகிய கூப்பிய கைகளுடன் வந்து வணங்குகின்ற திருமறைக்காடேயாகும் .

குறிப்புரை :

` நான்குடன் ` என்ற , ` உடன் ` என்பது , உயர் பின் வழித் தாய் வரும் ஒருவினை ஒடு உருபின் பொருளது . ` தெங்கங்கள் ` என் புழி நின்ற , ` அம் ` என்பது விகுதிப் புணர்ச்சிக்கண் வந்த சாரியை . ` தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ் ` என , சினைவினை முதலொடு சார்த்தப்பட்டது . ` இடறி ` என்றதனை , ` இடற ` எனத் திரிக்க . இடறுதல் , இங்கு எறிதல் மேற்று ` கூம்பொடு ` என்றதன்பின் , ` வந்து ` என்பது வருவிக்க . ` வணங்கும் ` என்றது , தற்குறிப்பேற்றத் தொடு வந்து குறிப்புருவகமாதலின் , அதற்கு இதுவே பொருளாதல் அறிக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நரைவிரவிய மயிர்தன்னொடு
பஞ்சவ்வடி மார்பன்
உரைவிரவிய உத்தமன்னிடம்
உணரல்லுறு மனமே
குரைவிரவிய குலைசேகரக்
கொண்டற்றலை விண்ட
வரைபுரைவன திரைபொருதிழிந்
தெற்றும்மறைக் காடே

பொழிப்புரை :

நரைபொருந்திய மயிரால் இயன்ற பஞ்சவடியை அணிந்த மார்பை உடையவனும் , அதனால் , புகழ் பொருந்திய மேலானவனும் ஆகிய சிவபெருமானது இடம் யாது என்று உணரப் புக்க மனமே , அது , ஒலி பொருந்திய கரைக்கண் உள்ள மாமரத்தினது , மேகங்கள் தவழ்கின்ற தலையில் , உடைந்த மலைபோல்வனவாகிய அலைகள்மோதி மீள்கின்ற திருமறைக் காடேயாகும் .

குறிப்புரை :

தேவர்களது நிலையாமைத் தன்மையையும் , தனது நிலைத்த தன்மையையும் உணர்த்துதற் பொருட்டே சிவபெருமான் , தேவர்களது தலைகளையும் , எலும்புகளையும் மாலையாக அணித லும் , அவர்களது தலைமயிரைப் பஞ்சவடியாகப் பூணுதலும் செய் வனாகலின் , அவர்களது நரையை உணர்த்துதற்கு நரைவிரவிய பஞ்சவடியையும் பூண்பன் எனவும் , அவ்வாற்றான் அவனுக்குப் புகழ் உளதாவது எனவும் உணர்க . பஞ்சவடி - மயிரினால் இயன்ற பூணநூல் . கடலில் எழுகின்ற ஓசை , அதன் கரையின்கண்ணும் பரவி நிற்றலின் , ` குரைவிரவிய குலை ` என்று அருளினார் . குலை - கரை . நிலமயக்கம் உணர்த்தல் திருவுள்ளமாதலின் , ` சேகரம் ` என்றதற்கு , ` மாமரம் ` என்பதே பொருளாதல் அறிக . குலசேகரக் கொண்டல் என்பது சுவாமிநாத பண்டிதர் பாடம் . ` குலைச் சேகரம் ` என்னும் சகரமெய் , இசைநோக்கித் தொகுத்தலாயிற்று . அலைகள் மலைபோல் எழுந்து கரைக்கண் வந்து சிதறிப்போதலின் , ` விண்டவரைபுரைவன ` என்று அருளினார் . ` விண்ட ` என்றதனை , துணிவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாயதாக உரைக்க . ` இழிந்து எற்றும் ` என்றதனை , ` எற்றி இழியும் ` என மாற்றிக்கொள்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

சங்கைப்பட நினையாதெழு
நெஞ்சேதொழு தேத்தக்
கங்கைச்சடை முடியுடையவற்
கிடமாவது பரவை
அங்கைக்கடல் அருமாமணி
உந்திக்கரைக் கேற்ற
வங்கத்தொடு சுறவங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே

பொழிப்புரை :

மனமே , ` கங்கையைத் தாங்கிய சடைமுடியை யுடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாவது , கடலினது கைகள் ஆகிய அலைகள் அக்கடலின்கண் உள்ள அரிய , சிறந்த மணிகளைத் தள்ளிக்கொண்டு , கரைக்கு ஏற்புடைய மரக்கலத்தோடு சுறா மீனையும் கொணர்ந்து சேர்க்கின்ற திருமறைக்காடேயாகும் ` அது பற்றி ஐயமாக நினையாது , அங்குச் சென்று அவனை வணங்கித் துதித்தற்கு ஒருப்படு .

குறிப்புரை :

இத் திருப்பதிகத்துள் , ` உடையவர்க்கு ` என வருவன பாடம் அல்ல . ` அம்கை ` என்றது உவமையாகுபெயராய் , அலை களைக் குறித்தது . ` அங்கையால் ` என உருபு விரிக்க . ` அங்கக் கடல் ` என்பது சுவாமிநாத பண்டிதர் பாடம் . கரைக்கு ஏற்ற வங்கம் - உயர்ந்த பொருள்களைக் கொணரும் மரக்கலம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

அடல்விடை யினன்மழுவா
ளினன்நல்ஆர் அணிகொன்றைப்
படருஞ்சடை முடியுடையவற்
கிடமாவது பரவைக்
கடலிடையிடை கழியருகினிற்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே

பொழிப்புரை :

வெற்றியை உடைய இடப ஊர்தியையுடைய வனும் , மழுப்படையை உடையவனும் , நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியை யுடைய சிவபெருமானுக்கு இடமாவது , பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும் , கழியின் அருகிலும் ; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற , நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும் .

குறிப்புரை :

` அலராலணி ` என்பது பாடம் அன்று . ` கொன்றைச் சடை ` என இயையும் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

முளைவளரிள மதியுடையவன்
முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை யாளல்லுறு
கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு
குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடுசலஞ் சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே

பொழிப்புரை :

புதுவதாகத் தோன்றிய , வளர்தற்குரிய , இளமை யான பிறையை உடையவனும் , யான் முன்னே செய்த வலிய வினை களை , களைகளைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது , செந்நெற் கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற , மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும் , ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற் கரைக்கண் அக்கடல் , வளைந்த சங்குகளோடு , சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக் காடேயாகும் .

குறிப்புரை :

` முளை , வளர் , இள ` என்னும் மூன்றினையும் , ` மதி ` என்றதனோடு தனித்தனி இயைக்க .` களை களைந்து ` என்றது , அன்ன தொரு செயலைச் செய்தென்றவாறு . ` வளை வயல் , விளை வயல் ` என்க . ` வார் மணற் குணகடல் வாய் ` என மாறுக . ` கடல் ` என்றது , ஆகுபெயர் . எற்றுதற்கு வினை முதல் , அதனானே கொள்ளக் கிடந்தது . ` வளையொடு ` என்றதில் ` வளை `, ` சங்கு ` என்னுந் துணையாய் , வாளாபெயராய் நின்றது . சலஞ்சலம் உயர்ந்த சங்காதலின் , ` வளை யொடு சலஞ்சலம் கொணர்ந்து ` என்றதனை , ` முனிவர் வந்தனர் ; அகத்தியனும் வந்தான் ` என்றாற்போல , சிறப்புப் பற்றி வேறோதிய வாறாக உரைக்க . ` சலஞ்சலமும் ` என்னும் எச்சவும்மை தொகுத்த லாயிற்று .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

நலம்பெரியன சுரும்பார்ந்தன
நங்கோனிட மறிந்தோம்
கலம்பெரியன சாருங்கடற்
கரைபொருதிழி கங்கைச்
சலம்புரிசடை முடியுடையவற்
கிடமாவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே

பொழிப்புரை :

கங்கை நீரோடு திரித்த சடைமுடியை உடைய வனாகிய சிவபெருமானுக்கு இடமாய் நிற்பது , நற்பொருள்கள் மிக்கனவும் , வண்டுகள் நிறைந்தனவும் , பெரியனவுமாகிய மரக்கலங் கள் பொருந்திய கடலினது கரையைமோதி மீள்கின்ற அலைகள் , வலம்புரிச் சங்குகளையும் , சலஞ்சலச் சங்குகளையும் கொணர்ந்து வீசுகின்ற திருமறைக்காடேயாகும் . இதனை அறிந்தோமாகலின் , நாம் நம் பெருமானது இடத்தை அறிந்தோமாயினோம் .

குறிப்புரை :

` கங்கைச் சலம்புரிசடை முடியுடையவற் கிடமாவது ` என்றதனை முதலிலும் , ` நங்கோனிடம் அறிந்தோம் ` என்றதனை ஈற்றிலும் வைத்து உரைக்க . ` நலம் பெரியன , சுரும்பார்ந்தன , கலம் பெரியன ` என்பவை , சிறப்புப்பெயர் பின் வந்த ஒரு பொருண் மேற் பல பெயர் ; சிறப்புப் பெயர் பின் வாராமை , இயற்பெயர்க்குப் பின்னே யாதல் அறிக . வண்டுகள் நிறைதல் , ஏற்றப்பட்டுள்ள நறுமணப் பொருள்கள் பற்றி .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

குண்டாடியுஞ் சமணாடியுங்
குற்றுடுக்கையர் தாமும்
கண்டார்கண்ட காரணம்மவை
கருதாதுகை தொழுமின்
எண்டோளினன் முக்கண்ணினன்
ஏழிசையினன் அறுகால்
வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு
மணிநீர்மறைக் காடே

பொழிப்புரை :

உலகீர் , சிறிய உடையை உடைய சிலர்தாமும் , மூர்க்கத் தன்மை பேசியும் , சமண சமயக் கொள்கைகளை உரைத்தும் சில பொருள்களை , தம் குறையறிவாற் கண்டார் ; எனினும் , அவை களைப் பொருளாக நினையாது , எட்டுத் தோள்களை உடையவனும் , மூன்று கண்களையுடையவனும் , ஏழிசைகளையுடையவனும் ஆகிய சிவபெருமானது , ஆறு கால்களையுடைய வண்டுகள் சூழ்கின்ற குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஓங்கும் நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காட்டைக் கைகூப்பித் தொழுமின்கள் .

குறிப்புரை :

குண்டர் என்பவர் , சமண் சமய ஆசிரியர் ஒருவர் என்றும் , ` அப்பெயர் , ` குந்தர் ` என வழங்குகின்றது ` என்றும் , அவரது கொள்கையே ` குண்டு ` எனப்படுகின்றது எனவும் உரைப்பாரும் உளர் . அது , பொருந்துமேற் கொள்க . ` கண்டார் ` என்றது , கொல்லாமை முதலிய அறங்கள் நலம் பயக்கும் என்பதனை . அவர் அன்னராயினும் , எல்லாவற்றிற்கும் முதல்வனாகிய இறைவன் உண்மையைக் காணாமை மேலும் , அவ்வுண்மையை அழித்துரைத்த லின் , ` நிழல் நீரும் இன்னாத இன்னா ` ( குறள் -881) என்றாற்போல அவரது அறம் தீங்கு பயத்தலின் , ` அவை கருதாது ` என்று அருளிச் செய்தார் . ஏழிசையை விரும்புதலை , அவற்றை உடைமையாக அருளினார் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

பாரூர்பல புடைசூழ்வள
வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை
பங்கன்மறைக் காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள்
பாடும்மடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர்
புகழாகுவர் தாமே

பொழிப்புரை :

கச்சின்மேல் எழுகின்ற அழகிய தனங்களை யுடையவளாகிய உமாதேவி பங்கினனாகிய சிவபெருமானது திரு மறைக்காட்டை , நிலத்தில் உள்ள ஊர்கள் பல சூழ்ந்துள்ளனவாகத் தலைமை பெற்று விளங்கும் , வளவிய வயல்கள் சூழ்ந்த திருநாவலூ ரார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரனது தமிழ்ப்பாடல்களால் பாடு கின்ற , அப்பெருமானது திருவடித் தொண்டர்கள் , நீர் சூழ்ந்த நிலத் தொடு உயர்ந்து விளங்கும் புகழ் மிகப்பெறுவார்கள் .

குறிப்புரை :

` தமிழ் மாலைகளால் ` என உருபு விரிக்க . நிலனோடு உயர்தலாவது , நிலவுலகு உள்ளதுணையும் நிலை பெறுதல் . ` பொன்றுந்துணையும் புகழ் ` ( குறள் -156.) என்றதன் பொருளை நோக்குக .
சிற்பி