திருவலம்புரம்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே

பொழிப்புரை :

எனக்கு இனியவனும் , தனக்கு என்னைப்போலும் அன்பராய் உள்ளார்க்கு இனியவனும் , எழுபிறப்பிலும் எங்கள் மனத்துக்கு இனியனாகின்றவனும் ஆகிய இறைவனது இடம் , பனை மரத்தின்கண் பழுத்த பழங்கள் வீழ்கின்ற கடலினது கரைக்கண் உள்ள , ` திருவலம்புரம் ` என்னும் தலமே . இதனை அறிந்தேனாகலின் , எனக் கும் சிறிது புகலிடம் இங்கு உளதாதலை இப்பொழுது யான் அறிந் தேனாயினேன் .

குறிப்புரை :

` தினைத்தனைப் புகலிடம் ` என்பது , ` தினைத் தனையதாகிய புகலிடம் ` என விரிக்கப்படும் . ` தினைத்தனையது ` என்றது . ` சிறிது ` என்னும் பொருளது . ` சிறிது புகலிடம் ` என்றது , தமது பணிவு தோன்ற அருளியது . ` மனத்துக்கு என்பதில் , அத்துச்சாரியை தொகுக்கப்பட்டு நின்றது . ` இடம் வலம் ` என்றது , ஓர் முரண்தொடை நயம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே

பொழிப்புரை :

திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும் , புதியவனும் , மரவுரியையும் புலித்தோலையும் அரை யிற் பொருந்தியவனும் , பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும் இரந்து உண்ண விரும்புபவனும் , இரவின்கண் தீயில் நின்று ஆடுப வனும் ஆகிய இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

` வில்லினன் நவன் ` எனப் பிரிக்க , சிவபிரான் மரவுரி உடுத்தல் , ஈண்டுப் பெறப்படுகின்றது . நிரத்தல் - நிரம்பக் கிடத்தல் ` இரந்தவன் ` என்பது பாடம் அன்று . ` ஆடி ` என்றது போல , ` விரும்பி ` என்றதும் , பெயர் ; எண்ணின்கண் வந்த வினையெச்சமுமாம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு வேந்தியொர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே

பொழிப்புரை :

நீறணிந்த மேனியை யுடையவனும் , சினங் காரண மாகக் கண்களால் நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும் , பிளத்தலைப் பொருந்திய கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும் , நீரை அணிந்த , ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப்பெற்றவனும் ஆகிய , இளமையான வெள்ளிய இடபக் கொடியை உயர்த்துள்ள இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

` நெருப்பு `, ` சினம் ` என்பாரும் உளர் . ` ஏந்திய ` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று ` சடையழல் ` என்னும் உருவகம் , ` வளர் ` என்னும் சிலேடைவினை கொண்டது . ` வளர் அடிகள் ` என இயைத்து , இறந்தகால வினைத்தொகை யாக்குக . ` அணி ` என்றதனால் , ஏறு , கொடியாயிற்று .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்
தெங்கொடு பனைபழம் படும்இடந் தேவர்கள்
தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர
எங்கள தடிகள்நல் லிடம்வலம் புரமே

பொழிப்புரை :

மலர்களில் உள்ள தேனை ஆங்கு வந்த வண்டுகள் உண்ண , நெருங்கிய , குளிர்ந்த , இளைய தென்னை மரங்களும் , பனை மரங்களும் பழம் விளைகின்ற இடமும் , பெரியகடலினது அலைகள் கரையை மோத , தேவர்கள் தங்கியிருக்கும் இடமும் , எங்கள் இறை வனது நல்ல இடமும் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

` பழம் படும் ` என , சினைவினை முதல்மேல் நின்றது . தேவர்கள் தங்குதல் , இறைவனை வணங்குதற்குச் செவ்வி பெறாமை யாலாம் . ` கடல் அலைகளின் குளிரையும் பொறுத்துக் கொண்டு அவர் கள் ஆங்குத் தங்கியிருப்பர் ` என்றபடி . ` எங்கள் அடிகளது ` என உருபைப் பிரித்துக் கூட்டுக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதிள் சிறுமையின் நிரவவல் லவனிடம்
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்
திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே

பொழிப்புரை :

கொடிய மழுவை எடுக்க வல்லவனும் , கொலை பொருந்திய வில்லையுடையவனும் , மூன்று பெரிய மதில்களை ஓர் இமைப்பொழுதில் பொடியாக்க வல்லவனும் ஆகிய இறைவனது இடம் , கடலில் உண்டாகின்ற மாணிக்கங்களையும் , முத்துக்களையும் , பவளங்களையும் மிகுதியாகத் தாங்கி நிற்கின்ற மணல் பொருந்திய கடற்கரையாகிய இடமும் , திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே .

குறிப்புரை :

` மூன்று ` என்பதும் , ` கடல் ` என்பதும் ஆற்றலாற் கொள்ளக் கிடந்தன . ` சிறுமை `, அதனை உடைய காலத்தின்மேல் நின்ற பண்பாகுபெயர் . நிரவுதல் - அழித்தல் . ` சுமந்திடும் ` என்றதில் இடு , துணைவினை . ` சுமந்திடும் கரை ` எனஇயையும் . ` கரையிடம் , வலம்புரம் ` என்றன , ஒருபொருண்மேற் பல பெயர் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்
நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே

பொழிப்புரை :

கரிய மதநீரையுடைய யானைத் தோலையுடைய இறைவனது இடம் , நெருங்கிய , நீண்ட பனைமரங்கள் , கயல் மீன் களோடும் , அடும்பங் கொடிகளோடும் கலந்து நிற்கின்ற இடத்தின்கண் , வலம்புரிச் சங்குகளும் , சலஞ்சலச் சங்குகளும் தம் தம் பெண் சங்குகளோடு மணஞ்செய்து கொள்ளுதலைப் பொருந்தி , பெரிய கடலினின்றும் வருகின்ற கடற்கரையாகிய இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலமே .

குறிப்புரை :

` மருங்கொடு ` என்றதனை , ` மருங்கின்கண் ` எனத் திரிக்க

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

நரிபுரி காடரங் காநட மாடுவர்
வரிபுரி பாடநின் றாடும்எம் மானிடம்
புரிசுரி வரிகுழல் அரிவைஒர் பான்மகிழ்ந்
தெரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே

பொழிப்புரை :

நரிகள் விரும்புகின்ற காடே அரங்கமாக நடனம் ஆடுபவனும் , யாழ் இசையைப்பாட நின்று ஆடுகின்ற எம்பெரு மானும் , பின்னிய , சுரிந்த , கட்டிய கூந்தலையுடைய மங்கையை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்து , எரிகின்ற நெருப்பில் ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

` முதுகாடு ` என்றற்கு , ` நரிபுரி காடு ` என்று அருளினார் . ` ஆடுவர் ` என்றது ஒருமைப் பன்மை மயக்கம் , ஒரு பொருள்மேற் பல பெயர் வருங்கால் அவற்றது முடிபினைப் பெயர் தோறும் கொடுத்தலும் அமைவதாகலின் , ` எம்மான் இடம் ` என முன்னுங்கூறினார் ` வரிபுரி ` என்றதில் புரி , புரிக்கப்பட்ட நரம்பினை உடைய யாழுக்கு ஆகுபெயர் . யாழ் உடையவர் பாடுதலை யாழ் பாடுதலாக அருளியது , பான்மை வழக்கு . இறைவன் ஆடும் வகை யெல்லாம் இதனுள் அருளியவாறு .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

பாறணி முடைதலை கலனென மருவிய
நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய
மாறணி வருதிரை வயலணி பொழிலது
ஏறுடை யடிகள்தம் இடம்வலம் புரமே

பொழிப்புரை :

பருந்தைக்கொண்ட , முடைநாற்றம் பொருந்திய தலையை உண்கலமாகப் பொருந்தியவனும் , நீற்றை அணிந்தவனும் , நீண்ட சடைமுடியை உடையவனும் இடபத்தை உடைய தலைவனும் ஆகிய இறைவனது இடம் , விளங்குகின்ற , மாறிமாறியும் கூட்டமாயும் வருகின்ற அலைகளையுடைய கடலையும் , வயல்களையும் அழகிய சோலைகளையும் உடையதாகிய , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

` முடைத்தலை ` என்னும் தகரவொற்று . இசையின்பம் நோக்கித் தொகுத்தலாயிற்று . ` ஏறுடை அடிகள்தம் இடம் ` என்றதனை , ` முடியினன் ` என்றதன்பின் வைத்து உரைக்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

சடசட விடுபெணை பழம்படும் இடவகை
படவட கத்தொடு பலிகலந் துலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
இடிகரை மணலடை இடம்வலம் புரமே

பொழிப்புரை :

தோல் ஆடையை உடுத்துக்கொண்டும் , சாம்பலைப் பூசிக்கொண்டும் உலாவுகின்றவனும் , இல்லங்களின் வாயில் தோறும் பிச்சைக்குத் திரிகின்ற தலை ஓட்டினை உடையவனும் ஆகிய இறைவனது இடம் , ` சடசட ` என்னும் ஓசையை வெளிப் படுத்துகின்ற பனைமரங்கள் பழம் பழுக்கின்ற இடங்களின் வகை பலவும்மிகுமாறு , இடிகின்ற கரையை மணல்கள் அடைக்கின்ற இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலமே .

குறிப்புரை :

` வடகத்தொடு ` என்றது முதலாக , ` கபாலிதன் இடமது ` என்றது ஈறாக உள்ளவற்றை முதற்கண் வைத்து உரைக்க . ` மணற்குன்றுகள் இடிந்து வீழ்ந்து மணற்பரப்பாகிய இடங்களில் பனைமரங்கள் வளர்ந்து , பழங்களைப் பழுக்கும் ஊர் ` என்றவாறு , இது பற்றியேபோலும் , இத்தலத்திற்கு , ` பெரும்பள்ளம் ` என்ற ஒரு பெயரும் வழங்குகின்றது . ` இப்பெயர் , இலிங்க மூர்த்தியின் தலையில் காணப்படும் பள்ளம்பற்றி வந்தது ` என்பர் . ` படகத்தொடு ` என்பது பாடமாயின் , ` படகம் என்னும் பறையோடு ` என உரைக்க . இதற்கு , ` இடவகை பட ` என்புழிப்பகர ஒற்றுத் தொகுத்தலாம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

குண்டிகைப் படப்பினில் விடக்கினை யொழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே

பொழிப்புரை :

கரகத்தையுடைய உறியை உடையசமணர்களது பொய்ம்மையை நன்குணர்ந்தவர்களும் , உணர்ந்து தனது திருவடியில் வீழ்ந்து வணங்கியவர்களும் , ஒலிக்கின்ற கழலை அணிந்த , தண்டேந்தி நிற்கும் தண்டி முதலிய சிவகணத்தவர்களும் செய்கின்ற , ` அரகர ` என்னும் ஓசையுடன் , எட்டுத் திசைகட்கும் ஒரு விளக்குப் போல்பவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம் , ` திருவலம் புரம் ` என்னும் தலமே .

குறிப்புரை :

படம் - துணி . பின் - பின்னப்பட்டது ; ஆக்கப் பட்டது . இனி , ` படம் ` என்றது , ஆகுபெயரால் , நூற்கயிற்றைக் குறித்தது என்றலுமாம் . விடக்கு - ஊன் . ` விடக்கினை ஒழித்தவர் ` என்றது , ` ஊன் உண்போராகிய புத்தர் போலாதவர் ` என்பது குறித்து நின்றது . ` விடக்கினை ஒழித்தவர் ` என்றது ஆகுபெயராய் அவரது இயல்பை உணர்த்தி நின்றமையின் , இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றாது ( தொல் . எழுத்து 157.) வல்லெழுத்து மிக வேண்டுமிடத்து இயல்பா யிற்று . பொய்யைப் பொய்யென்று உணர்தல்தானே , மெய்யை மெய் யென்று உணர்தலாகிய பயனை எய்துவிக்குமாதலின் , அவர்களையும் வேறோதினார் . ` தண்டி ` என்னும் பெயர்க் காரணம் உணர்த்துவார் , ` தண்டுடைத் தண்டி ` என்று அருளினார் . ` அவன் இனம் ` என்றது , சிவ கணங்களை , ` அர ` என்றது ஒலிக்குறிப்புச் சொல் . அடியவர்களும் , சிவ கணத்தவர்களும் ` அரகர ` என்று சொல்லித் துதிக்க , இறைவன் எழுந்தருளியிருக்கின்றான் என்றபடி . ` தண்டிகுண் டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன் பண்டை யுலகம் படைத்தான் றானும் பாரை அளந்தான்பல் லாண்டி சைப்பத் திண்டி வயிற்றுச் சிறுகட் பூதம் சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான் ` என்ற திருத்தாண்டகத்தைக் காண்க . ( தி .6 ப .93 பா .7) ` சுடர் ` என்றதன்பின் , ` இருக்கும் ` என்பது வருவிக்க . இத்திருப்பாடல் தண்டியடிகள் நாயனாரது வரலாற்றைக் குறிப்பதாக வைத்து உரைப் பாரும் உளர் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்த மிடம்வலம் புரத்தினை
அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே

பொழிப்புரை :

கரிய கடலின்கண் வருகின்ற மரக்கலங்கள் பலவற்றையும் பேணுதலுடைய உயர் குடிப் பிறப்பினரது இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலத்தினை அரிய குலத்தில் தோன்றிய , அரிய தமிழ்ப் பாடலில் வல்ல , வன்றொண்டனாகிய நம்பியாரூரனது சொல்லால் , பெரிய குழாமாகிய அடியவரோடும் கூடிநின்று துதித்தல் , பெருமையைத் தருவதாம் .

குறிப்புரை :

`கருங்கடல் வரும்` என மாற்றியுரைக்க. `இருங்குலம்` என்றது, பெருங்குடி வணிகரை. குலம் - கூட்டம். தவர் - தவத்தை யுடையவர். பெருமையைத் தருவதனை, `பெருமை` என்று அருளி னார். `பெருங்குலத்தவர் கொடு` என்பது பாடமாயின், `குலத்தவர்` என்பதனை ஒரு சொல்லாக வைத்து, `உயர்குலத்தவர் இவற்றைக் கொண்டு துதித்தல், அவர்கட்குப் பெருமை தருவதாகும்` என உரைத்து, `அங்ஙனங் கொள்ளாதொழியின், அக்குலப் பிறப்பாற் பயனில்லை` என்பது அதனாற்போந்த பொருளாக உரைக்க.
சிற்பி