திருவாரூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

கரையுங் கடலும் மலையுங்
காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க் கெல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , நிலம் , கடல் , மலை முதலாய எவ் விடத்திலும் , காலை , மாலை முதலிய எப்பொழுதிலும் எம் சொல்லிற் பொருந்தி வருபவனும் , ஒப்பற்றவனும் , உருத்திர லோகத்தை உடைய வனும் , மலையின் இளமையான மகளுக்குக் கணவனும் , தேவர் , அசுரர் முதலிய யாவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் , இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` கரை ` என்றது , ` கடலால் சூழப்பட்டுள்ளது ` என நிலத் திற்குப் பெயராயிற்று . ` எல்லாம் ` என்றதனை இரட்டுற மொழிந்து , ` மலையும் ` என்றதன் பின்னருங்கூட்டுக . ` எம் உரை ` என்பது , ஆற்றலாற்கொள்ளக் கிடந்தது . ` உரை ` என்றது , பாட்டும் , கட்டுரையு மாய இருதிறத்துச் சொற்களையுமாம் . ஆகவே , ` யாம் அவனையே , பேசியும் , பாடியும் நிற்பதல்லது , பிறிதொன்றனை அங்ஙனம் செய் தறியேம் ` என்றவாறு , ` உருத்திரலோகம் ` என்றது , சிவலோகத்தை , மலையரையனை , ` மலை ` என்றே அஃறிணைபோல அருளுகின்றா ராகலின் , ` வரைதன் மடமகள் ` என்னாது , ` வரையின் மடமகள் ` என்று அருளினார் . ` இருப்பதும் ` என்ற உயர்வு சிறப்பும்மையால் , ` என்றும் இருப்பது ` என்பது பெறப்பட்டது . ` என்றும் ` என்றது , எல்லை யறியப் படாத பழைமையைக் குறித்தது . திருவாரூரின் பழைமையை ஆளுடைய அரசுகள் , ` ஒருவனாய் உலகேத்த ` என்னும் திருத் தாண்டகத் திருப்பதிகத்துள் பலபடியாக விதந்தோதியருளிய வாற்றான் அறிக . சுவாமிகள் , திருவெண்ணெய்நல்லூரில் முன்னரே ஆட்கொள்ளப் பெற்றாராயினும் , அதனால் , திருக்கயிலையில் தாம் வேண்டிக்கொண்ட வேண்டுகோட்கு இரங்கிய இரக்கம் அறியப்படுவ தன்றி , தன் சீரடியாருள் ஒருவராகத் தம்மையும் வைத்து விரும்பிக் கொள்ளும் விருப்பம் அறியப்படாமையானும் , அஃது அறியச் செய்தற்குரிய இடம் , திருக்கூட்டம் இருக்கும் திருவாரூரேயாகலானும் , ஆட்கொள்ளப்பெற்றிலார்போல , ` எம்மையும் ஆள்வரோ ` என்றும் , அவரது திருவுள்ளத்தை அணுகியறிதல் , புத்தடியேனாகிய எனக்கு இயல்வதன்றாகலின் , பழவடியீராகிய நீவிர் அது செய்தருளல் வேண்டும் என வேண்டுவார் , ` கேளீர் ` என்றும் அருளிச்செய்தார் . ` ஆட்கொள்ளப் பெறுந் தகுதியுடையேன் ` என்பதனை , ` கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் - உரையில் விரவி வருவான் ` என்றதனால் விளக்கினாராகலின் , ` எம்மை ` எனப் பன்மையாக அருளினார் . அங்ஙனமாகவே , ` எம்மையும் ` என்ற உம்மை , இறந்தது தழுவிய எச்சமாம் . ` அவர் ` என்றதும் , ` ஆள்வரோ ` என்றதும் ஒருமை பன்மை மயக்கம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

தனியன்என் றெள்கி யறியேன்
தன்னைப் பெரிதும் உகப்பன்
முனிபவர் தம்மை முனிவன்
முகம்பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக்
காய்க்குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , இனிய பொருள்கள் எல்லாவற்றினும் இனியவனாகிய நம் பெருமானை , யான் , ` தாயும் , தந்தையும் , பிற சுற்றத்தவரும் இல்லாத தனியன் ` என்று இகழ்ந்தறியேன் ; அதற்கு மாறாக அவனையே பெரிதும் விரும்புவேன் ; அவனை வெறுப்பவரை வெறுப்பேன் ; மனத்தோடன்றி முகத்தான் மட்டும் இனிய பல சொற் களைச் சொல்லேன் ; அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் , கனிகள் பலவற்றையுடைய சோலையின்கண் காயையுடைய குலை களை ஈன்ற கமுக மரங்களையுடைய திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` தம்மை ` என்பது பாடம் அன்று . ` முகத்தானே ` என உருபும் , பிரிநிலை ஏகாரமும் விரிக்க . ` பேசி மொழியேன் ` என்றன , ஒரு பொருட் சொற்கள் . ` பேசி யொழியேன் ` என்பதே பாடம் போலும் ! எள்குதல் முதலியவற்றிற்குச் செயப்படு பொருளாகிய ` அவனை ` என்பதை முதற்கண் வருவித்து , செய்யுளாகலின் , சுட்டுப்பெயர் முன் வந்தவாறாகக் கொள்க . ` இனியன் இருப்பதும் ` என்றதனை , ` கனிகள் ` என்றதற்கு முன்னே கூட்டியுரைக்க . இது முதலாக வரும் திருப்பாடல்கள் , முதற்கண் தம் நிலையை மொழிந்து , பின் , ` இப் பெற்றியேமாகிய எம்மை ஆள்வாரோ ` என வினவியவாறாம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்
தொடர்ந்தவர்க் குந்துணை யல்லேன்
கல்லில் வலிய மனத்தேன்
கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான்
அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் யாதேனும் ஒன்று சொல்வதா யின் , எனது பெருமையை யன்றி வேறொன்றைச் சொல்லேன் . அயலவர்க்கேயன்றி , உறவினர்க்கும் உதவுவேனல்லேன் ; அத் துணைக் கல்லினும் வலிய மனத்தை யுடையேன் . கல்வியை நிரம்பக் கற்ற பெரிய புலமை வாழ்க்கை உடையவர்களது துன்பத்தைப் பெரிதும் நீக்குகின்றவனும் , அரிய வேதங்களும் , ஆறு அங்கங்களும் சொல்லும் முடிந்த பொருளானவனும் ஆகிய பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

குலாவுதல் , விளங்குதலாதலின் , குலா , புகழாயிற்று . அநுபவத்தானே , துன்பம் பற்றறக் கழியுமாகலின் , கற்றவர்களுக்குத் ` துன்பத்தைப் பெரிதும் நீக்குவான் ` என்று அருளினார் . ` எல்லை ` என்றதில் ஐகாரத்தைச் சாரியை யாக்கி , ` எல் - ஒளி ` என்பாரும் உளர் . மேல் இரண்டு திருப்பாடல்களில் தமது தகுதியைப் புலப்படுத்து வேண்டினவர் , இத் திருப்பாடலுள் தகுதியின்மையைப் புலப்படுத்து வேண்டினார் ; ஆதலின் , ` எம்மையும் ` என்ற உம்மை இங்கு இழிவு சிறப்பாம் . ஆகவே , பன்மையும் இழிபுணர்த்திற்றாம் . இவ்வாறே இவ்வும்மை , எச்சமாயும் , இழிவு சிறப்பாயும் வருதலை அவ்வவ் விடத்து ஏற்ற பெற்றியாற்கொள்க . இங்கு , ` எம்மை ` என்றது , ஒருமை பன்மை மயக்கம் . தகுதியுடைமை கூறி , அதுபற்றி அருளல் வேண்டும் என வேண்டுதலும் , தகுதி இன்மைகூறி , அவ்வாறாயினும் நின் கருணையால் எமக்கு இரங்கியருளல் வேண்டும் என்று வேண்டுதலும் ஆகிய இரண்டும் , இறைவனிடத்தில் அடியார் செய்வனவே யாகலின் , அவ்விருவகையும் இத்திருப்பதிகத்துள் விரவி வருவன என்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நெறியும் அறிவுஞ் செறிவும்
நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையுந் தறியும் உகப்பன்
வேண்டிற்றுச் செய்து திரிவேன்
பிறையும் அரவும் புனலும்
பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , ஒழுகும் நெறியிலும் , பொருள் களை அறிகின்ற அறிவிலும் , பிறரோடு இணங்குகின்ற இணக்கத் திலும் , சொல்லுகின்ற நீதியிலும் ; மிக்கபொல்லாங்குடையேன் ; பிறரை வருத்துதலையும் , பிரித்தலையும் விரும்புவேன் ; மற்றும் மனம் வேண்டியதனைச் செய்து திரிவேன் ; பிறையையும் , பாம்பையும் , நீரையும் தனது விளக்கமான சிவந்த சடைமேல் வைத்துள்ள இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத்திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திரு வுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

நெறி முதலிய நான்கிலும் ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தனுருபு விரிக்க . தறி - தறித்தல் ; முதனிலைத் தொழிற்பெயர் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

நீதியில் ஒன்றும் வழுவேன்
நிர்க்கண் டகஞ்செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன்
வெகுண்டவர்க் குந்துணை யாகேன்
சோதியிற் சோதிஎம் மானை
சுண்ணவெண் ணீறணிந் திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , நீதியினின்றும் சிறிதும் வழு வேன் ; அவ்வாறு வழுவுதலை முற்றிலும் களைந்து வாழ்வேன் ; அந்தணர்களை வெறுக்கமாட்டேன் ; வெறுக்கின்றவர்களுக்கும் துணை செய்பவனாகமாட்டேன் . ஒளிக்குள் ஒளியாய் உள்ளவனும் , எங்கட்கு யானை போல்பவனும் , பொடியாகிய வெள்ளிய நீற்றை அணிந்த முதல்வனும் ஆகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

மேல் , ` நீதியும் நான்மிகப் பொல்லேன் ` என்று அருளிச் செய்து , இங்கு , ` நீதியில் ஒன்றும் வழுவேன் ` என்று அருளி யது , ` ஆண்டு கொள்ளப்படாது ஒழிவேன்கொல் ` என ஆற்றாமை யானும் , ` ஆண்டுகொள்ளப்படுதல் கூடும் ` என ஆற்றுதலானுமாம் . இவ்வாறு முரண வருவன பிறவற்றிற்கும் ஈது ஒக்கும் . கண்டகம் - களைதல் . ` நிர் ` என்பது , துணிவுப் பொருண்மை தரும் வடமொழி இடைச்சொல் . ` வேதியர்தம்மை வெகுளேன் ` என்றது , ` புறச்சமயங் களைச் சாரேன் ` என்றபடி . எனவே , வேதநெறியில் உள்ளாருள் தலையாயவரை எடுத் தோதிப் பிறரையும் தழுவிக்கொண்டவாறாம் . ஒளி , உயிரின் அறிவு . அவ்வறிவுக்கு அறிவாய் நிற்றலின் , ` சோதியிற் சோதி ` என்று அருளினார் . ` எம்மானை ` என்றதன்பின் , சகரவொற்று மிகுத் தோதுதல் , பாடம் ஆகாமை யறிக . இறைவனை , ` அடியவர்கட்கு யானை ` என்றல் , அவர்களை எடுத்துச் சுமத்தல்பற்றி . கிடைக்கத் தகுமேநற் கேண்மையாற் கல்லால் எடுத்துச் சுமப்பானை இன்று - திருவருட்பயன் -65 என்பது மெய்ந்நூல் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

அருத்தம் பெரிதும் உகப்பன்
அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்
உற்றவர்க் குந்துணை யல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன்
புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , பொருளையே பெரிதும் விரும்புவேன் ; அதன் பொருட்டு எங்கும் திரிதலையுடையேன் ; துன்புற்றவர் ஒருவர்க்கேனும் உதவியுடையேனல்லேன் ; உறவாயி னார்க்கும் துணைவனல்லேன் ; இன்ன பலவாற்றால் , பொருந்துவதாய பண்பு எனிலோ , ஒன்றேனும் இல்லாதேனாயினேன் . புற்றைப் படைத்து , அதனை இடமாகக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திரு வுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` அலவு ` என்பது அலைதலாகலின் , ` அலவு அலை ` என்றது , ` அலைதலைச் செய்தல் ` என்றதாம் . ` அலந்தார்கள் ` என்றது , விகுதிமேல் விகுதி பெற்ற , உயர்வுப் பன்மைச் சொல் . ` ஒருத்தர்க்கும் ` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . இயல்பாய் இருந்த புற்றினை , எடுத்ததாக , பாற்படுத்தருளிச் செய்தார் . ` எடுத்திட்டு ` என்றதில் , இடு , துணைவினை . ` இட்டு ` என்பது ஓர் அசைநிலை என்பாரும் உளர் . திருவாரூர்த் திருமூலட்டானர் , புற்றிடங் கொண்டு இருத்தலைக் காண்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

சந்தம் பலஅறுக் கில்லேன்
சார்ந்தவர் தம்மடிச் சாரேன்
முந்திப் பொருவிடை யேறி
மூவுல குந்திரி வானே
கந்தங் கமழ்கொன்றை மாலைக்
கண்ணியன் விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , வண்ணங்கள் பலவற்றை அமைத்துப் பாடுதல் மாட்டேன் ; இறைவனை அடைந்த அடியாரது திருவடிகளை அடையமாட்டேன் ; மணங்கமழ்கின்ற கொன்றை மலரால் ஆகிய மாலையையும் , கண்ணியையும் அணிந்தவனும் , தேவர்களால் துதிக்கப்படுபவனுமாகிய எம் தந்தை , போர் செய்கின்ற விடையை ஏறி மூவுலகிலும் முற்பட்டுத் திரிபவனேயாயினும் , அவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரேயன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது , திரு வுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` திரிவானே ` என்றதன்பின் , ` ஆயினும் ` என்பது வருவிக்க . ` விண்ணவர் ஏத்தும் ` என்றதற்கு , கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

நெண்டிக்கொண் டேயுங்க லாய்ப்பேன்
நிச்சய மேஇது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
மெய்ப்பொரு ளன்றி யுணரேன்
பண்டங் கிலங்கையர் கோனைப்
பருவரைக் கீழடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , மெய்ப்பொருளையன்றிப் பொய்ப்பொருளைப் பொருளாக நினையேன் ; அதனால் , அம்மெய்ப் பொருளை உணரமாட்டாத முருடர்க்கு முருடான சொற்களை யன்றிச் சொல்லமாட்டேன் ; வலியச் சென்றும் அவர்களோடு வாதிடுவேன் ; இஃது எனது துணிபும் , தளர்வில்லாத குணமும் ஆகும் . முன்பு , இலங்கையர் தலைவனாகிய இராவணனைப் பருத்த கயிலாய மலையின்கீழ் இட்டு நெரித்த கடவுள் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

நெண்டுதல் - கிளர்தல் . ` நெண்டிக்கொண்டு ` என்றது ஒருசொல்நீர்மைத்து . ` கணமேயுங் காத்தலரிது ` ` தானேயும் சாலுங் கரி ` ( குறள் -29-1060) என்றாற்போல , ` நெண்டிக்கொண்டேயும் ` என்றதில் ஏகார இடைச்சொல்லும் , உம்மை இடைச்சொல்லும் ஒருங்கு வந்தன . ` பிறிதவண் நிலையலும் ` என்பது இலக்கணமாதலின் ( தொல் - சொல் 251) ஏகாரம் தேற்றமும் , உம்மை சிறப்புமாம் . கலாய்த்தல் , ஈண்டு , உண்மைபற்றி வாதிடுதல் . ` அங்க லாய்த்தல் ` என்ற இழிவழக்கும் , ` அங்குக் கலாய்த்தல் ` என்பதன் சிதைவே யாகலின் , ` கிலாய்ப்பன் ` எனப் பாடம் ஓதி , ` உங்கி லாய்ப்பன் ` என்றொரு சொல்லைக் கொள்ளுதல் சிறவாமை யறிக . இங்கு சுவாமிகள் , தம் தகுதியுடைமையே அருளினார் என்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

நமர்பிறர் என்ப தறியேன்
நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பேன்
தக்கவா றொன்றுமி லாதேன்
குமரன் திருமால் பிரமன்
கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , யான் , இவர் நம்மவர் என்பதும் , அயல வர் என்பதும் அறியமாட்டேன் ; நான் உண்மை என்று கண்டதையே கண்டு பிறர் சொல்வனவற்றை இகழ்ந்து நிற்பேன் ; ஆரவாரத்தைப் பெரிதும் விரும்புவேன் ; தக்க நெறி ஒன்றேனும் இல்லாதேன் . முருகனும் , திருமாலும் , பிரமனும் ஒருங்கு கூடிய தேவர் பலரும் வணங்கும் தேவன் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டு கொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` நமர் ` என்றது , உயிர்க்கு உறுதியாவாரையும் , ` பிறர் ` என்றது , அதற்குத் தடையாய் நிற்பாரையும் . எனவே , அவர் உயர்ந் தோரும் , பொது மக்களும் என்றதாயிற்று . அறியாமை - பகுத் துணர்ந்து , உயர்ந்தோரைச் சேராமை . ` நான் கண்டதே கண்டு வாழ் வேன் ` என்றது . காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு . - குறள் -849 என்றதனை .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

ஆசை பலஅறுக் கில்லேன்
ஆரையும் அன்றி யுரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன்
பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்

பொழிப்புரை :

தொண்டீர் , எனக்கு உள்ள அவாவோ பல ; அவற்றுள் ஒன்றையும் நீக்கமாட்டேன் ; அவ்வவாவினால் யாவ ரிடத்தும் வெகுளிதோன்றுதலின் , எவரிடத்தும் பகைத்தே பேசுவேன் ; ஒன்று சொல்லின் , பொய்யல்லது சொல்லேன் ; எனினும் புகழை மிக விரும்புவேன் ; இவற்றால் மனத்தாலும் குற்றம் புரிதலுடையேன் . ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்ட பெருமான் என்றும் எழுந்தருளியிருக்கின்ற இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ? அவரது திருவுள்ளத்தைக் கேட்டறிமின் .

குறிப்புரை :

` ஆசை பல ` என்றது ஒரு தொடர் . ` அவற்றை அறுக் கில்லேன் ` என வேறெடுத்து உரைக்க . ` செயலே யன்றி மனந்தன் னாலும் ` என்னும் எச்சவும்மை தொகுத்தலாயிற்று . ` பொருளில் புகழ் ` என்பார் , ` ஓ? u2970?` என்று அருளினார் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

எந்தை இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான்
திருமரு வுந்திரள் தோளன்
மந்த முழவம் இயம்பும்
வளவயல் நாவல்ஆ ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார்
தாம்புகழ் எய்துவர் தாமே

பொழிப்புரை :

வெற்றித் திருப் பொருந்திய திரண்ட தோள்களை யுடையவனும் , மெல்லென ஒலிக்கும் மத்தளம் முழங்குவதும் , வளவிய வயல்களையுடையதும் ஆகிய திருநாவலூரில் தோன்றிய வனும் ஆகிய நம்பியாரூரன் ` எம் தந்தையாகிய இறைவன் என்றும் எழுந்தருளியிருக்கும் இடமும் இத் திருவாரூரே யன்றோ ! ஆதலின் , அவர் எம்மையும் ஆண்டுகொள்வாரோ ` என்று அடியார்களோடு ஆராயும் திறம் வல்லனாய்ப் பாடிய இந்த இசைப் பாடல்களை , அவ்விசையொடும் பாட வல்லவர் புகழ் பெறுவர் .

குறிப்புரை :

` அடியார்களோடு ` என்பது , ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . ` வல்லானாய் ` என எச்சப்படுத்து , ` பாடிய ` என்பது வருவித்து முடிக்க . ` திருமருவும் ` என்றது தொடுத்து , ` ஆரூரன் ` என்றது காறும் உள்ளவற்றை , முதற்கண் வைத்துரைக்க . அரசத் திருவும் உடைமையின் , ` திருமருவும் திரள் தோளன் ` என்று அருளி னார் . ` சந்தம் ` என்றது ஆகுபெயர் . புகழ் , ஈண்டு அடியவர் போற்றும் புகழாதலின் , ` அதனை எய்துவர் ` எனவே , இறைவனுக்கு உரிய வராதல் தானே பெறப்பட்டது .
சிற்பி