திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை

பொழிப்புரை :

மின்னலை உண்டாக்குகின்ற கரிய மேகங்கள் மழையைப் பொழிந்தபின் , அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற , அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது , அகன்ற கரையின்கண் பலவிடத்தும் எழுந்தருளியிருப்பவரும் , திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் , வீற்றிருப்பவராகிய தலைவரும் , தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும் , என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது !

குறிப்புரை :

` பொழிந்தபின் ` என்பது , ` பொழிந்து ` எனத் திரிந்து நின்றது . ` அருவி ` என்றவிடத்து , ஆக்கம் வருவித்து , அருவியாய் வெடிபட இழிந்து என மாற்றியுரைக்க . ` அருவியாய் இழிந்து ` என்ற தனால் , ` மேகங்கள் பொழிந்தது மலையின்கண் ` என்பது பெற்றாம் . ` எற்றுவிக்கும் ` என்பது , ` எற்றும் ` எனத் தொகுத்தல் பெற்றது . ` அறிவார் ` என்றது , அதன் காரியம் தோன்ற நின்றது . துருத்தி , ஆற்றிடைக்குறையாகலின் , இத் திருப்பதிக முழுதும் காவிரி யாற்றைப் பெரிதும் அணிந்தோதியருளினார் என்க . ` எவன் ` என்னும் வினாப் பெயரது மரூஉ வாகிய , ` என்னை ` என்பது இன்மை குறித்தது . ` கற்ற தனாலாய பயன் என் ` ( குறள் -2) என்பதிற்போல , ` பெருமான் , இடர் கெடுத்தான் ` என்றன பன்மை யொருமை மயக்கங்கள் . இவை இவ்வாறு பின்னும் வருதல் அறிக . இத் திருப்பதிகத்தில் உள்ள திருப் பாடல்கள் பலவும் , இரண்டனுருபால் முடிந்தமையின் , இவை அகப் பாட்டு வண்ணமாம் ; எவ்வாறெனின் , ` அகப்பாட்டு வண்ணம் , முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே ` என்பது இலக்கணமாதலின் ( தொல் . பொருள் -525).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
பழவினை யுள்ளன பற்றறுத் தானை

பொழிப்புரை :

கூடத் தக்கனவாய் உள்ள யாறுகளோடு கூடியும் , அவை வேறு காணப்படாதவாறு கோத்தும் , கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும் , மலைநெற் கதிர்களை யும் சிதறியும் , இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முரித்தும் , கரைகளை மலை தகர்ந்தாற் போலத் தகருமாறு இடித்தும் ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தி யிலும் , திருவேள்விக்குடியிலும் உள்ளவராகிய தலைவரும் , எனது பழவினைகளாய் உள்ளவற்றை அடியோடு தொலைத்தவரும் ஆகிய எம்பெருமானை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் , பாடும் வகையை அறிகின்றிலேன் !

குறிப்புரை :

கூடுதல் , அளவாய் நிற்றலையும் , கோத்தல் , மிகப் பெருகுதலையும் குறித்தன . வினையிடத்து வரும் எண்ணும்மை களைப் பின்னரும் விரிக்க . ` புனலேனல் ` என்பது பாடம் அன்று . குலை - கரை . மறித்தல் - தகர்தல் , துருத்தியாதலின் , ` கரை ` என்னாது , ` காவிரி ` என்றலும் பொருந்துவதேயாம் . பாடுமாறு அறியாமை , பாட்டினுள் அடங்காமை பற்றி . இதனை ` விரிப்பின் அகலும் தொகுப் பின் எஞ்சும் ` என்றாற்போலக் கொள்க . ( புறம் -53)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்
புல்கியுந் தாழ்ந்தும்போந் துதவஞ் செய்யும்
போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்
தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை

பொழிப்புரை :

கொல்லுகின்ற பெரிய யானையின் தந்தங்களை யும் , மணம் பொருந்திய கொழுமையான கனிகளாகிய வளவிய பயனையும் வாரிக்கொண்டு , அவற்றின் தொகுதியைப் பொருந்தி வந்து வலம் செய்தும் , வணங்கியும் தவம் புரிகின்ற உலகியலாளரும் , வீட்டுநெறியாளரும் விடியற்காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற பெரிய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னைத் தொடர்ந்து வருத்திய மிக்க பிணியினது தொடர்பை அறுத்தவரும் ஆகிய எம்பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலுங் கடை யேனும் ஆகிய யான் புகழுமாற்றை அறிகின்றிலேன் !

குறிப்புரை :

வம்பு - நறுமணம் ; பழுத்த பழம் , நறுமணம் உடைய தாதல் அறிக . புல்குதல் - பொருந்துதல் ; இங்கு , சூழ்தலைக் குறித்தது . புகழுமாறு அறியாமைக்கும் , மேல்பாடுமாறு அறியாமைக்கு உரைத்தவாறு உரைக்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
அருவினை யுள்ளன ஆசறுத் தானை

பொழிப்புரை :

அருவிகள் , பொரிந்த சந்தனக் கட்டைகளையும் , அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொணர்ந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள , பின்பு , கரிக்கப்படும் சிறந்த மிளகுகளையும் , வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் பொருந்தச் சேர்ப்பதையே கருதிக்கொண்டு , தன் இரு மருங்கிலும் சென்று அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையின்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனது அரிய வினைகளாய் உள்ள குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனுமாகிய யான் அறியும் வகையை அறிகிலேன் !

குறிப்புரை :

பொரியும் , கரிக்கும் என்பன - எதுகை நோக்கித் திரிந்தன . ` அருவிகள் கவர ` என்றதன்பின் , ` அதன்பின் ` என்பது வரு விக்க . ` அருவிகள் கவர ` என வேறுபோல அருளினாராயினும் , ` அருவிகளாய்க் கவர்ந்து ` என்பதே திருவுள்ளம் என்க . ` கருதி ` என்றது பான்மை வழக்கு . கை - பக்கம் . அறியாமை - அவனது பெருமையாலும் , தமது சிறுமையாலுமாம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்
பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி
எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
உற்றநோய் இற்றையே உறவொழித் தானை

பொழிப்புரை :

பொழியப்பட்டுப் பாய்கின்ற மும்மதங்களை யுடைய யானையது தந்தங்களையும் , பொன்னைப்போல மலர்கின்ற , வேங்கை மரத்தினது நல்ல மலர்களையும் தள்ளிக்கொண்டு அருவிகள் பலவும் வீழ்தலால் மிக்க நீர் நிரம்பி , எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து முழுகுமாறு , இவ்விடத்தில் சுழித்துக்கொண்டு பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திரு வேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னைப் பற்றிய நோயை இன்றே முற்றும் நீக்கியவரும் ஆகிய எம் பெரு மானாரை , குற்றமுடையேனும் , நாய் போலும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன் .

குறிப்புரை :

` இழிந்திழிந்து ` என்ற அடுக்கு , பன்மை குறித்து நின்றது . ` வந்து ஆட ` என மாற்றுக . பலபடியாலும் இடைவிடாது போற்றுதலை , ` பிதற்றுதல் ` என்று அருளினார் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை

பொழிப்புரை :

புகழப்படுகின்ற சிறந்த சந்தனக் கட்டைகளையும் , அகிற் கட்டைகளையும் , பொன்னும் மணியுமாகிய இவைகளையும் வாரிக்கொண்டும் , நல்ல மலர்களைத் தள்ளிக்கொண்டும் , தன்னால் அகழப்படுகின்ற , பெரிய , அரிய கரைகள் செல்வம்படுமாறு பெருகி , முழுகுகின்றவர்களது பாவத்தைப் போக்கி , கண்ணில் தீட்டிய மைகளைக் கழுவி நிற்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றம் உடை யேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் , இகழுமாற்றை நினையமாட்டேன் !

குறிப்புரை :

` வரன்றியும் ` என்ற உம்மையை ` பொன்மணி ` என்ற உம்மைத் தொகையின் பின்னர் இயைக்க . ` கரை வளம்பட ` என , இடத்து நிகழ்பொருளின் தொழில் , இடத்தின்மேல் ஏற்றப்பட்டது . மையைக் கழுவுதலும் , பாவத்தைத் தீர்ப்பதன் குறிப்பேயாகும் . ஆணவ மலத்திற்கும் , ` அஞ்சனம் ` என்னும் பெயர் உண்மையை நினைக்க . ` ஒலித்தல் ` என்னும் பொருளைத் தருவதாகிய ` அலம்புதல் ` என்பது பின்னர் , ஒலியுண்டாகக் கழுவுதலையும் குறிப்பதாயிற்று . பெருநோய் உடையார் , உலகத்தவரால் இழிக்கப்படுதல் உணர்க . அறிதல் , இங்கு நினைதலின் மேற்று .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும்
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
உலகறி பழவினை அறவொழித் தானை

பொழிப்புரை :

அளவில்லாத மாம்பழங்களையும் , வாழைப் பழங்களையும் வீழ்த்தியும் , கிளைகளோடு சாய்த்தும் , மராமரத்தை முரித்தும் , கரைகள் அரிக்கப்படுகின்ற கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு , மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து , ஒளி விளங்குகின்ற முத்துக்கள் இருபக்கங்களும் தெறிக்க , விரைய ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத் துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலை வரும் , எனது , உலகறிந்த பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் துதிக்குமாற்றை அறிகின்றிலேன் !

குறிப்புரை :

வருடுதல் - தடவுதல் ; அஃது இங்குப் பறித்தலைக் குறித்தது . கரைதலுக்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது . ` காம்பு ` என்பது கடைக் குறையாய் நின்றது . ` போய் ` என்றது ` போக ` என்பதன் திரிபு . உலகறி பழவினை , கயிலையில் மாதர்மேல் மனம் போக்கியது . அது , திருவெண்ணெய்நல்லூரில் அனைவரும் அறிய வெளிப்படுத்தப்பட்டதாகலின் , உலகறிந்ததாயிற்று . உரைக்குமாறு என்பது , ` உரையுமாறு ` எனத் தொகுத்தலாயிற்று .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்
புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை
அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை

பொழிப்புரை :

அணியவான ஊர்களில் உள்ளவர்களும் , பெரிதாகிய நாடு முழுதும் உள்ளவர்களும் , மனம் விரும்பி நினைக்கு மாறு , பறவைக் கூட்டங்கள் பல மூழ்கி எழுந்து , அழகிய கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக் குடியிலும் திரிய , நீர் நிறைந்த , பெரிய , கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக்கொண்டு கவரி மானினது சிறந்த மயிரைச் சுமந்து , ஒளியையுடைய பளிங்குக் கற்களை உடைத்து , நானிலங்களில் உள்ள பொருள்களையும் கண்டு செல்கின்ற , பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனக்கு வரும் பிறப்பில் வரக் கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே களைந் தொழித்தவரும் ஆகிய எம்பெருமானாரை , குற்றமுடையேனும் , நாய் போலும் கடையேனும் ஆகிய யான் , துய்க்குமாற்றை அறிகின்றிலேன் !

குறிப்புரை :

` ஊரும் , தேசமே ` என்ற உம்மையும் , ஏகாரமும் எண்ணிடைச் சொற்கள் . ` ஊர் , தேசம் ` என்றன , இடத்து நிகழ் பொருளை இடமாக் கூறும் பான்மை வழக்கு . ` ஊர் வந்தது ; தேசம் உய்ந்தது ` என்றல்போல அஃறிணையாக முடிதலின் , இன்னோரன் னவை ஆகுபெயராகா . யாண்டும் உள்ள மக்கள் விரும்பி நினைத்தல் , வளமும் , கடவுட்டன்மையும் பற்றி என்க . ` உள்ளி ` என்றதனை , ` உள்ள ` எனத் திரிக்க . ` நீர் ` என்னும் பொருளைத் தருவதாகிய ` கார் ` என்னும் பெயரடியாக , காரும் என்னும் பெயரெச்சம் வந்தது . தேர்தல் - ஆராய்தல் ; அது கண்டு செல்லுதலைக் குறித்தது . ` வரும்பிறப்பில் வரும் துன்பம் ` என்றது , சூள் பிழைத்த பாவம் தருவதனை . அதனை , இப்பிறப்பிற்றானே கண்ணொளியை இழப்பித்தும் , உடம்பிற் பிணியைக் கூட்டியும் அறுத்தொழித்தமையின் , ` அம்மைநோய் இம்மையே ஆசறுத்தானை ` என்று அருளிச்செய்தார் . இதனால் , இறைவன் தம்மை ஒறுத்த வழியும் , பெரியோர் அதனை வன்கண்மை என்று வெறாது , கருணை என்றே மகிழ்தலை அறிக .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்
பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
இலங்குமா முத்தினோ டினமணி இடறி
இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண் டெற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை
மேலைநோய் இம்மையே வீடுவித் தானை

பொழிப்புரை :

வயல்கள் வளம்படவும் , அதனால் எல்லாக் குற்றங் களும் நீங்கவும் , நீர்பெருகி பொற்கட்டிகளைச் சுமந்துகொண்டு , ஒளி விளங்குகின்ற சிறந்த முத்துக்களையும் , மற்றும் பலவகை மணிகளை யும் எறிந்து , இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முரித்து ஈர்த்துக் கரையைத் தாக்கி , எவ்விடத்தில் உள்ளவர்களும் ஆரவாரம் செய்து ஒலிக்க , கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும் , எனக்கு வரும்பிறப்பில் வரக்கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே நீக்கியவரும் ஆகிய எம்பெரு மானாரை , குற்றமுடையேனும் , நாய்போலும் கடையேனும் ஆகிய யான் நீங்குமாற்றை எண்ணேன் !

குறிப்புரை :

` புலங்களை ` என்ற ஐகாரம் , சாரியை . பொன் , ஆகுபெயர் . யாற்றிடைப் புனல் பெருகிவருங்கால் , பூசல் மிகுதலை , ` விருப்பொன்று பட்டவர் உளம்நிறை உடைத்தென வரைச்சிறை உடைத்ததை வையை : வையைத் திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை : அறைகெனும் உரைச்சிறைப் பறைஎழ ஊரொலித் தன்று ` - பரிபாடல் -6 ` மாதர் மடநல்லார் மணலின் எழுதிய பாவை சிதைத்த தெனஅழ ஒருசார் ; அகவயல் இளநெல் அரிகாற் சூடு தொகுபுனல் பரந்தெனத் துடிபட ஒருசார் , ஓதம் சுற்றிய தூரென ஒருசார் , கார்தூம் பற்றது வானென ஒருசார் , பாடுவார் பாக்கங்கொண்டென , ஆடுவார் சேரிஅடைந்தெனக் , கழனிவந்து கால்கோத்தெனப் , பழனவாளை பாளைஉண்டென , வித்திடுபுலம் மேடாயிற்றென ` - பரிபாடல் -7 என்றாற்போல வகுத்துப் பாடுமாற்றான் அறிக . கலங்குதல் , விரை வாலும் , பலநிலங்களது சார்பாலும் என்க .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி யன்றிமற் றறியான்
அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
தவநெறி சென்றமர் உலகம்ஆள் பவரே

பொழிப்புரை :

மங்கை ஒருத்தியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தும் , இடபத்தை விரும்பி ஊர்ந்தும் நிற்கின்ற , பகைத்தலை யுடையவரது முப்புரங்களை நீறுபட அழித்த அகங்கையை உடைய வனது கழலணிந்த திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாத வனாகியும் , அவன் அடியார்க்கு அடியவனாகியும் அவனுக்கு அடிய வனாகிய நம்பியாரூரன் , கங்கை போலப் பொருந்திய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும் , திருவேள்விக் குடியிலும் வீற்றிருக்கின்ற தலைவருக்குச் சேர்ப்பித்த இப்பாடல்களை , தங்கள் கையால் தொழுது , தங்கள் நாவிற் கொள்பவர்கள் , தவநெறிக் கண் சென்று , பின்னர்ச் சிவலோகத்தை ஆள்பவராதல் திண்ணம் .

குறிப்புரை :

` கூறுகந்து ` ` ஏறி ` என்ற எச்சங்கள் எண்ணின்கண் வந்தன . ` மாறலார் ` என்றது , ` மாறல் ` என்னும் தொழிற்பெயரடியாக வந்த பெயர் . ` மாற்றலார் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` அங்கை யான் ` என்று அருளினார் , மேருவை வில்லாக ஏந்திநின்றமைபற்றி . ` அறியான் , அடியவன் ` என்றவை முற்றெச்சங்கள் ; அவை , ` தொழுவன் ` என்ற , ஆக்கச்சொல் தொக்க வினைக்குறிப்புப் பெய ரொடு முடிந்தன . பாடலை நாவின் மேற் கொள்ளுங்கால் , கையால் தொழுது கோடல் வேண்டும் என்க . இதனால் , திருமொழிகளது பெருமை உணர்த்தியருளப்பட்டது . ` தவநெறி சென்று ஆள்பவர் ` என்றமையால் , அமருலகம் , சிவலோகமாயிற்று . ஏகாரம் , தேற்றம் .
சிற்பி