திருவாஞ்சியம்


பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 1

பொருவ னார்புரி நூலர்
புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்
வருவதும் இல்லைநம் மடிகள்
திருவ னார்பணிந் தேத்துந்
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவனார் அடி யாரை
ஊழ்வினை நலியஒட் டாரே

பொழிப்புரை :

நம் இறைவர் , தீயவரோடு மாறுபடுபவர் ; முப்புரி நூலை அணிபவர் ; நெருங்கிய தனங்களையுடைய உமையோடு கூடியிருத்தலை உடையவர் ; தம்மை அடையாதவரிடத்தில் வருவதும் இல்லை ; திருமகளை உடைய திருமால் வணங்கித் துதிக்கின்ற , புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற வராகிய அவர் , தம் அடியவரை ஊழ்வினை வந்து நலிய ஒட்டாது ஒரு தலையாகக் காப்பர் .

குறிப்புரை :

` அவர்களை நினைவதும் இல்லை ` எனப் பொருள் தந்து நிற்றலின் , ` வருவதும் ` என்ற உம்மை , எதிரது தழுவிய எச்சம் . ` திருவன் ` என்பது , ` ஆர் ` என்னும் இடைச்சொற் பெற்று வந்தது . இனி , ` திருவன்னார் ` எனக்கொண்டு , ` திருமகள் போலும் மகளிர் பணிந் தேத்தும் ` என்றலுமாம் . ` உள வினை ` என்பதும் பாடம் . ஏகாரம் , தேற்றம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 2

தொறுவில் ஆன்இள ஏறு
துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்
செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள்
காண்தகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு
பூசுதல் மன்னும்ஒன் றுடைத்தே

பொழிப்புரை :

பசுக் கூட்டத்துள் , இளைய ஆனேறு , கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி , வயல்களில் உள்ள வாளைமீன்கள் ஓடவும் , செவ்வரிகளையுடைய கயல்மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும் , பகையில்லாத மனத்தை உடைய சான்றோர் அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திரு வாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , குற்றமற்ற வெள்ளிய நீற்றைப் பூசுதல் , சிறந்ததொரு கருத்தை உடையது .

குறிப்புரை :

அக் கருத்தாவது , உலகிற்குப் பற்றுக்கோடு தாமே என்பது . இதனை , ` வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாய்இலர் ` ( தி .3 ப .54 பா .3) என்ற திருப்பாசுரத்திற்கு , ` வெந்த சாம்பல் விரைஎன் பதுதம தந்த மில்லொளி யல்லா வொளியெலாம் வந்து வெந்தற மற்றப் பொடியணி சந்த மாக்கொண்ட வண்ணமும் சாற்றினார் ` ` தமக்குத் தந்தையர் தாய்இலர் என்பதும் அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால் எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம் ` ( தி .12 திருஞா . புரா .828-29) எனச் சேக்கிழார் குறிப்பருளியவாற்றான் உணர்க . இக்குறிப்பினுள் , ` அல்லா ஒளி ` என்றது , மாயேயங்களை . திருப்பாசுரத்துள் , ` பூசி ` என வந்த வினையெச்சம் , ` பூசுதலால் ` என்பதன் திரிபாய் , ` தந்தை யாரொடு தாய் இலர் ` என்றதனை விளக்கும் ஏதுவாயிற்று , ` உழுவார் உலகத்தார்க் காணிஅஃ தாற்றா - தெழுவாரை யெல்லாம் பொறுத்து ` ( குறள் -1032 ) என்பதிற்போல . ஆகவே , ` அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால் ` ( தி .12 திருஞா . புரா .828) என்றது , அவ்வேதுவின் பொருளை விரித்தவாறாதல் அறிக . ` இடிகுரல் ` வினைத்தொகை . ` கறுவிலா மனத்தார்கள் ` என்றது , ` அருளுள்ளம் உடையவர்கள் ` எனப் பொருள் தந்தது , காணுதல் , தன் பின்விளைவையும் உடனுணர்த்தி நின்றது . ` மன் , உம் ` அசைநிலைகள் . ` கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண்டற்று ` என்ற திருக்குறளிலும் (1146) ` மன் , உம் ` என்னும் இரண்டும் இணைந்து அசைநிலையாயினவாறு அறிக .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 3

தூர்த்தர் மூவெயில் எய்து
சுடுநுனைப் பகழிய தொன்றால்
பார்த்த னார்திரள் தோள்மேற்
பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத்
திகழ்திரு வாஞ்சியத் தடிகள்
சாத்து மாமணிக் கச்சங்
கொருதலை பலதலை யுடைத்தே

பொழிப்புரை :

தீர்த்தமாகிய , சிறந்த , பூக்களையுடைய பொய்கைகளையுடைய , புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , நெறி பிறழ்ந்தவரது மூன்று மதில்களை , சுடுகின்ற முனையையுடைய ஓர் அம்பினால் அழித்து , ஒருவனாகிய அருச்சுனனது திரண்ட தோள்மீது பல கூரிய அம்புகளை அழுத்தி , தாம் கட்டுகின்ற பெரிய மாணிக்கத்தை உடைய கச்சு , ஒரு பக்கத்திலே பல தலைகளையுடையதாய் இருக்கின்றது ; இது வியப்பு !

குறிப்புரை :

புத்தன் போதனையால் சிவநெறியை இகழ்ந்தொதுக் கினராகலின் , திரிபுரத்தவரை , ` தூர்த்தர் ` என்று அருளினார் . ` மூன்று ஊர்களை அழித்தற்கு ஓர் அம்பையே விடுத்தவர் , ஒரு தனி மகனை வெல்வதற்குப் பல அம்புகளை விடுத்தமையும் , கச்சில் ஒரு பக்கத்தில் பல தலைகள் இருத்தலும் , மற்றொரு பக்கத்தில் ஒரு தலையேனும் இல்லாமையும் இவையெல்லாம் ஒன்றோடும் பொருந்தாதனவாய் உள்ளன என்றபடி . ` தலை ` இரண்டனுள் முன்னது பக்கத்தையும் பின்னது அழகு சிறக்கக் கைவன்மைபடச் செய்யும் கச்சிற்புனைவை யும் குறித்தன . அப்புனைவு இருபக்கமும் அமைந்து விளங்குவதே கச்சிற்குப் பொருந்துவதாம் . ஐந்தலை நாகமே இறைவர்க்குக் கச்சாக லின் , அஃது ஒரு பக்கம் பல தலைகளையும் , மற்றொரு பக்கம் தலை இன்மையையும் உடைத்தாயிற்று . ` ஒரு தலையிலே பல தலைகளை யுடையது ` என்பது நயம் . ` ஒருதலை , துணிவு ` என்பாரும் உளர் . ` எய்து , பாய்ச்சி ` என , எண்ணின்கண் வந்த வினையெச்சங்கள் . ` சாத்தும் ` என்றதனோடு முடிந்தன . ` பொய்கை திகழ் ` எனப் பாடம் ஓதுதலுமாம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 4

சள்ளை வெள்ளையங் குருகு
தானது வாமெனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி
மறுகிஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்
துறைமல்கு வாஞ்சியத் தடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும்
விகிர்தம்ஒன் றொழிகிலர் தாமே

பொழிப்புரை :

` சள்ளை ` என்னும் மீன் , வள்ளைக் கொடியின் வெண்மையான மலரை , வெண்மையான குருகு என்று கருதி அஞ்சிச் சுழன்று , பின் , வாளைமீனின் வாயிலே சென்று துள்ளுகின்ற , தெளி வாகிய நீரையுடைய பொய்கைத் துறைகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , வெள்ளிய , நுண்ணிய சாம்பலைப் பூசுகின்ற வேறுபாடொன்றனை எஞ்ஞான்றும் ஒழியாதே உடையர் .

குறிப்புரை :

` தானதுவாம் ` என்றதில் தான் அசைநிலை . ` அது ` பகுதிப் பொருள் விகுதி .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 5

மைகொள் கண்டர்எண் தோளர்
மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி
கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு
பாம்புடன் வைப்பது பரிசே

பொழிப்புரை :

கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மலைமகளோடு உடன்உறைகின்ற வாழ்க்கையையும் , பறிக்கப்பட்ட கூவிளை இலையால் ஆகிய மாலை விளங்குகின்ற சடைமுடியையும் உடைய அழகராகிய , நெய்தற் பூக்களையுடைய அழகிய கழனிகளில் , தாழம்பூக்கள் மணம் வீசுகின்ற , புகழையுடைய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர்க்கு , இளைய வெண்பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிவதுதான் இயல்பு .

குறிப்புரை :

` வாழ்க்கைக் குழகர் , சடைமுடிக் குழகர் ` என இயையும் . ` கழனி கைதையைக் கமழும் வாஞ்சியம் ` என்றலுமாம் . பிறையோடு பாம்பைச் சேர்த்து அணிதல் , எல்லாவற்றையும் தம் வண்ணமாக்கி ஏற்றலைக் குறிப்பதாம் . ` பிறையும் , பாம்புமன்றி , வேறு தலைச்சூட்டு இல்லாதவர் ` என்பது நயம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 6

கரந்தை கூவிள மாலை
கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
திகழ்தரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
வல்வினை நலியஒட் டாரே

பொழிப்புரை :

தம் இயல்பு காரணமாக , கரந்தைப் பூவினாலும் , கூவிள இலையாலும் , மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு , மிக்க பூதகணங்கள் புடைசூழ வருபவரும் , நம் இறைவரும் ஆகிய , திருத்தமான மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற , புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் அமுதம் போல்பவர் , தம் அடியாரை , வலிய வினைகள் வந்து துன்புறுத்த ஒட்டாது காப்பவரேயாவர் .

குறிப்புரை :

` மாலை ` என்றதனை , ஏனையவற்றிற்குங் கூட்டுக . ஏகாரம் , தேற்றம் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 7

அருவி பாய்தரு கழனி
அலர்தரு குவளையங் கண்ணார்
குருவி யாய்கிளி சேர்ப்பக்
குருகினம் இரிதரு கிடங்கில்
பருவ ரால்குதி கொள்ளும்
பைம்பொழில் வாஞ்சியத் துறையும்
இருவ ரால்அறி யொண்ணா
இறைவன தறைகழல் சரணே

பொழிப்புரை :

மலர்ந்த குவளைப் பூப்போலும் கண்களையுடைய மகளிர் , நீர்த் திரள் பாய்கின்ற கழனிகளில் கதிர்களை ஆராய்கின்ற குருவிகளையும் , கிளிகளையும் அங்கு நின்றும் நீங்கிச் சென்று சேரப் பண்ணுகையால் , குருகுகளின் கூட்டம் அஞ்சி நீங்குகின்ற கால்வாய் களில் பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற , பசிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் , ` மால் , அயன் ` என்பார்க்கு அறிய ஒண்ணாத இறைவரது , ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளே நமக்குப் புகலிடம் .

குறிப்புரை :

` அருவி ` உவமையாகுபெயர் . ` ஆய் ` என்றது , இடைநிலைத் தீவகம் . கழனிகளில் விளைந்துள்ள நெற்கதிர்களைக் கவர வரும் குருவிகளையும் , கிளிகளையும் மகளிர் ஓட்ட , அவை பறந்து சென்று சேரும் ஓசையைக் கேட்டு , கால்வாய் அருகில் , மீனைக் கவர இருக்கும் குருகுகள் அஞ்சி நீங்கும் என்றவாறு . ` குருவி , கிளி ` என்பவை , மீன் வகைகள் என்பாரும் உளர் . ` இருவர் ` என்றது , தொகைக் குறிப்பு .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 8

களங்க ளார்தரு கழனி
அளிதரக் களிதரு வண்டு
உளங்க ளார்கலிப் பாடல்
உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளால்நிழற் கீழ்நற்
குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
விளங்கு தாமரைப் பாதம்
நினைப்பவர் வினைநலி விலரே

பொழிப்புரை :

ஏர்க்களம் நிறைதற்கு ஏதுவாகிய வயல்கள் அன்பைத் தர , அதனால் மகிழ்வுற்ற வண்டுகள் , கேட்போர் உள்ளம் இன்பம் நிறைதற்குரிய ஆரவாரமான இசை , மேற்சென்று ஒலிக்கின்ற கேள்வியை , குளக்கரைகளில் உள்ள ஆலமரத்தின் கீழ்க்கிளையில் இருந்து நல்ல குயில்கள் பழகுகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி யிருக்கும் இறைவரது , ஒளி வீசுகின்ற , தாமரை மலர்போலும் திருவடி களை நினைப்பவர் வினையால் துன்புறுத்தப்படுதல் இலராவர் .

குறிப்புரை :

ஏர்க்களம் நிறைதல் , நெல்லால் என்க . அன்பைத் தருதலாவது , அதனை வெளிப்படுத்துதல் ; அஃதாவது உபசரித்தல் . எனவே , வயல்கள் வண்டுகட்கு வேண்டும் தேனைத் தந்தன என்க . இனி , ` அளி , தேன் ` என்றே உரைப்பினுமாம் . இசையை , ` பாடல் ` என்றதும் , கேள்வியை , ` காட்சி ` என்றதும் பான்மை வழக்கு . ` நிழல் ` என்றது , கீழ்க்கிளையை . ` கீழ் ` என்றது , ஏழனுருபு . பயிலுதல் , அவ்விசையோடு தன் குரல் அளவொத்து அமையுமாறு அமைக்க முயலுதல் . ` நினைபவர் ` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 9

வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையும்
கூழை வானரந் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை யல்லால்
இறையெனக் கருதுதல் இலமே

பொழிப்புரை :

வாழைப் பழங்களையும் , சாறு மிக்கொழுகுகின்ற பலாப் பழத்தின் சுளைகளையும் , ` எனக்கு வைத்த இப் பங்கு சிறிது ` என்று இகழ்ந்து , அறிவு குறைந்த குரங்குகள் தமக்குள் கலாய்த்து , தாழை மட்டையும் , வாழை மட்டையுமாகிய கோல்களால் போர் செய்து செருக்குக் கொள்கின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி யிருக்கும் மங்கை பங்காளனை யல்லது வேறொருவரை , யாம் , ` கடவுள் ` என்று நினைத்தல் இலம் .

குறிப்புரை :

கூறு - பங்கு . ` தாழை , வாழை ` என்றன ஆகு பெயர்கள் . ` தண்டு ` என்றது , பயனால் அதனோடு ஒத்ததனை .

பண் :பியந்தைக் காந்தாரம்

பாடல் எண் : 10

செந்நெ லங்கலங் கழனித்
திகழ்திரு வாஞ்சியத் துறையு
மின்ன லங்கலஞ் சடையெம்
மிறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கல்நன் மாடப்
பொழிலணி நாவல்ஆ ரூரன்
பன்ன லங்கனன் மாலை
பாடுமின் பத்தரு ளீரே

பொழிப்புரை :

செந்நெற்களையுடைய அழகிய மரக்கலம் போலும் கழனிகளையுடைய புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத் தில் எழுந்தருளியிருக்கும் , இனிய மாலைகளை யணிந்த சடையை யுடைய எம் இறைவனது , ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடிகளைத் துதித்த , பொன்னரி மாலைகள் தூக்கப்பட்ட நல்ல மாடங்களையுடைய , சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரனது , பல அழகுகளையுடைய , கற்கத்தகுந்த நல்ல பாமாலையை , அடியராய் உள்ளவர்களே , பாடுமின்கள் .

குறிப்புரை :

`பாடினால் அவனை எளிதிற் பெறுவீர்கள்` என்பது குறிப்பெச்சம். `வயல்களில் செந்நெல் நிறைந்திருப்பது, அந்நெற்களை நிரம்ப ஏற்றிய மரக்கலம்போல் உளது` என்றபடி. `பரவும் மாலை, ஆரூரன் மாலை` எனத் தனித்தனி இயையும். `பொன் அலங்கல்` என்றதற்கு, `மண்மகளுக்கு அணியப்பட்ட பொன்மாலை போலும்` என்று உரைப்பினுமாம். `நலக் கல்` என்பது மெலிந்து நின்றது. `மின் அலங்கல்` எனப் பிரித்தும், மூன்றாம் அடியில், `பொன்னலங்கல நன்மாடம்` எனப் பாடம் ஓதியும், அவற்றிற்கியைய உரைப்பாரும் உளர்.
சிற்பி