திருவையாறு


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

பரவும் பரிசொன் றறியேன்நான்
பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும்
எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத்
தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

கரவின்றி வருகின்ற நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க , தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும் பாலைகளின் ஓசையோடே கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் , யான் உம்மைத் துதிக்கும் முறையை இயற்கையில் சிறிதும் அறியாதேன் ஆகலின் , முன்னமே உம்பால் வந்து வழிபடாதொழிந்தேன் ; இரவும் பகலும் உம்மையே நினைவேன் ; என்றாலும் , அழுந்த நினையமாட்டேன் ; ஓலம் !

குறிப்புரை :

` நம்மைச் சொற்றமிழ் பாடுக ` என்றும் ( தி .12 தடுத் . புரா .70.). ` இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு ` என்றும் ( தி .12 தடுத் . புரா .76.). ` ஆரூரில் வருக நம்பால் ` என்றும் ( தி .12 தடுத் . புரா . 108). ` மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ ` என்றும் ( தி .12 ஏ . கோ . புரா .72.). ` கூடலை யாற்றூர் ஏறச் சென்றது இவ்வழிதான் ` என்றும் ( தி .12 ஏ . கோ . புரா . 102.) பலவாறு நீர் பாடுவிக்கவே ஆங்காங்கும் வந்து பாடினேன் என்பார் , ` பரவும் பரிசொன்றறியேன் ` என்றும் , ` என்னையே துணையாகப் பற்றிநிற்கும் சேரமான் பெருமாளை வேறோராற்றால் முன்பே உம்மை வழிபடு வியாது ஒழிந்தேன் ` என்பார் ` பண்டே உம்மைப் பயிலா தேன் ` என்றும் , ` எய்த நினையமாட்டேன் ` என்றும் அருளிச் செய்தார் . முன்பு தாம் தனித்துச் சென்று வழிபட்டாராகலின் , ( தி .12 ஏ . கோ . புரா .71.) சேரமான் பெருமாளோடு மீளச் செல்லாமையை , ` பயிலாதேன் ` என்றார் என்க . கரவின்மை , பொய்யாமை . அருவி யால் ஆயது , ` அருவி ` எனப்பட்டது . ` உண்ண ` என்ற குறிப்பால் , ` கமுகு ` என்றது , அதன் குலையையாயிற்று . கமுகங் குலை உண்ணப் பட்டது போல , தென்னங்குலை உண்ணப்பட்டிலது என்றற்கு , ` தெங்கங் குலைக்கீழ் ` என்று அருளினார் . ` அரவத் திரை ` என்பது மெலிந்து நின்றது . ` திரைக் கோடு ` என இயையும் , திரையை எடுத் தோதினமையால் , அதற்கு இவ்வாறு உரைத்தலே திருவுள்ளமாதல் அறிக . ஒற்றிரட்டிய , ` கோடு ` என்னும் குற்றியலுகரம் அத்துப்பெற்றது , ` வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான் ` என்றல்போல . ஓலமிடுவாரைத் தாங்குவார் கொடுக்கும் எதிர்மொழியும் , ` ஓலம் ` என்பதேயாகலின் இத் திருப்பதிகத்தைக் கேட்டருளிய இறைவனும் , ` ஓலம் ` என்றான் என்க . ஓகாரம் , முறையீட்டின்கண் வந்ததாகலின் , அதற்கு இவ்வாறு பொருள் கொள்ளப்படும் . அதனால் , ஈண்டும் , திருத்தொண்டர் புராணத்தும் , ` அடிகளோ ` என ஓதும் பாடம் சிறவாமையறிக . சீர் நிலைகளும் அன்னவாதல் நோக்குக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

எங்கே போவே னாயிடினும்
அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை யொன்று மின்றியே
தலைநாள் கடைநா ளொக்கவே
கங்கை சடைமேற் கரந்தானே
கலைமான் மறியுங் கனல்மழுவும்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

அடியேன் எங்கே செல்வேனாயினும் , முதல் நாளும் இறுதி நாளும் ஒரு பெற்றியவாக , சிறிதும் ஐயம் இன்றி , அங்கே வந்து என் மனத்தில் இருப்பீராய் , சடைமேற் கங்கையும் , கையில் மானின் ஆண் கன்றும் , சுடுகின்ற மழுவுமாய்த் தங்குகின்ற , அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக் கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் ஓலம் !

குறிப்புரை :

` சடைமேற் கங்கை ` என மாற்றி , உம்மை விரித்து உரைக்க . ` கரந்தானே ` என்றதில் , தானும் ஏயும் அசைநிலைகள் . இவ் வாறன்றி , ` மறைத்தவனே ` என்று உரைப்பின் , இயையாமை அறிக . ` மழுவும் ` என்றதன்பின்னும் ஆக்கம் வருவிக்க . தலைநாள் கடை நாள் ஒத்தலாவது , முதல்நாள் எழுந்த விருப்பம் , எந்நாளும் மாறாது நிற்றல் . ` ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம் பலநாட் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ ` - புறம் -101 எனப் பிறரும் பிறிதோரிடத்துக் கூறினார் . ` எங்கே போவேனா யிடினும் ` என்றது , தாம் மறந்து செல்லுதலையும் , ` அங்கே வந்து என் மனத்தீராய்த் தங்கும் ` என்றது , அவ்விடத்துத் தம்மை இறைவர் நினைப்பித்தலையும் குறித்து . ` இத் தன்மையீராகிய நீர் , உம்மை நினைந்து நிற்கும் நினைவை முடியாதொழியீர் என்று ஓலமிடுகின் றேன் ` என்றபடி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

மருவிப் பிரிய மாட்டேன் நான்
வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரற்
பட்டை கொண்டு பகடாடிக்
குருவி யோப்பிக் கிளிகடிவார்
குழல்மேல் மாலை கொண்டோட்டம்
தரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

நீர் , பரந்து பெருகி தினை விதைக்கப்பட்ட மலைச்சாரலில் பல பிரிவுகளாய்க் காணப்பட்டு , யானைகளைப் புரட்டி , புனங்களில் குருவிகளையும் கிளிகளையும் ஓட்டித் தினையைக் காக்கும் மகளிரது கூந்தல்மேல் அணிந்த மாலைகளை ஈர்த்துக் கொண்டு ஓடுதலைச் செய்தலால் அழகிய அலைகளை உடைத்தாய் நிற்கும் , காவிரிக் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் , யான் , சிலர்போல , உறுவது சீர் தூக்கி , உற்ற வழிக்கூடி , உறாதவழிப் பிரியமாட்டேன் ; என்றும் உம் வழியிலே நின்று விட்டேன் ; இனி ஒருகாலும் இந்நிலையினின்றும் நீங்கேன் ; ஓலம் !

குறிப்புரை :

பயன் கருதி நட்புச் செய்வாரது இழிபினை , ` உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரும் நேர் ` - குறள் -813 என்பதனான் அறிக . ` நின்றொழிந்தேன் ` என்று , ஒருசொல்லாய் , துணிவுப் பொருண்மை உணர்த்திற்று . ` ஒழிகிலேன் ` என எதிர்மறை முகத்தானும் அருளினார் , நன்கு வலியுறுத்தற்கு . ` விச்சிய ` என்றதன் ஈறு தொகுத்தலாயிற்று . விச்சுதல் - வித்துதல் ; இதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

பழகா நின்று பணிசெய்வார்
பெற்ற பயனொன் றறிகிலேன்
இகழா துமக்காட் பட்டோர்க்கு
வேக படமொன் றரைச்சாத்திக்
குழகா வாழைக் குலைதெங்கு
கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

வாழைக் குலைகளையும் , தென்னங் குலைகளை யும் அழகாகக் கொணர்ந்து கரைமேல் எறிதலால் அழகு நிறைந்துள்ள அலைகளையுடைய , காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் , உமக்கு அடிமைப்பட்டவர் முன்னே , நீர் ஒற்றை ஆடையையே அரையில் பொருந்தஉடுத்து நிற்றலால் , உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்பவர் , அதனால்பெற்ற பயன் ஒன்றையும் யான் அறிகின்றிலேன் ; ஓலம் !

குறிப்புரை :

` உமக்குப் பணிசெய்வோர் பயன் கருதாதே செய்வர் ; யானும் அவ்வாறே செய்கின்றேன் ` என்றபடி . ` ஏகபடம் ` என்றது , வடநூல் முடிபு . ` ஒன்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` ஒற்றை ஆடை ` என்று , அதுதானும் , தோலாதலை உட்கொண்டு , இனி , மோனை நயமும் , பிறவும் நோக்காது ` வேக படம் ஒன்று ` என்றே பிரித்து , ` சினம் பொருந்திய பாம்பு ஒன்றை என்று உரைப்பாரும் உளர் . ` சாத்தி ` என்றதனை , ` சாத்த ` எனத் திரிக்க . ` சாத்தின் ` எனவும் , ` குழகார் வாழை ` எனவும் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` வாழைக் குலைத் தெங்கு ` எனத் தகரம் மிகுத்து ஓதுதல் பாடம் அன்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

பிழைத்த பிழையொன் றறியேன்நான்
பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட
மலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங்
கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

மழைபோலும் கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட , மலையும் நிலமும் இடம் கொள்ளாத படி பெருகி , மூங்கிலிடத்துப் பொருந்திய தேன் பொருந்தப்பெற்று , வயல்களில் எல்லாம் நிறைந்து , வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய , காவிரி யாற்றங் கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாகிய உடைய அடிகேள் , அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று உளதாக அறிந்திலேன் ; யான் அறியாதவாறு நிகழ்ந்த பிழை உளதாயின் , அது நீங்க அருள்செய் ; ஓலம் !

குறிப்புரை :

தாம் விரும்பியவாறே சென்று வணங்கல் இயலாத வாறு காவிரியில் நீர்ப்பெருக்கை இறைவர் நிகழ்வித்தார் என்று கருதி இவ்வாறு வேண்டினார் . ` ஆட ` என்றது . நிகழ்காலத்தின்கண் வந்தது . ` கொள்ளாமை ` என்றதன்பின் , ` பெருகி ` என ஒருசொல் வருவிக்க . ` கழனி எங்கும் மண்டி ` என மாற்றியுரைக்க . அழைத்தல் - ஒலித்தல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

கார்க்கொள் கொன்றை சடைமேலொன்
றுடையாய் விடையாய் கையினான்
மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய்
முன்நீ பின்நீ முதல்வன்நீ
வார்கொள் அருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

கார்காலத்தைக்கொண்ட கொன்றைமலரின் மாலை யொன்றைச் சடைமேல் உடையவனே , விடையை ஏறுபவனே , அறிவில்லாதவரது ஊர்கள் மூன்றைச் சிரிப்பினால் எரித்தவனே , ஒழுகுதலைக்கொண்ட பல அருவிகள் வாரிக் கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு ஆரவாரிக்கின்ற அலைகளையுடைய , காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவை யாற்றை நினதாக உடைய அடிகேள் , எல்லாவற்றுக்கும் முன்னுள்ள வனும் நீயே ; பின்னுள்ளவனும் நீயே ; எப்பொருட்கும் முதல்வனும் நீயே ; ஓலம் !

குறிப்புரை :

` கார்க் கொள் , வார்க்கொள் ` என்றவற்றில் , எதுகை நோக்கி , ககரம்மிகுந்தது . ` முன்நீபின்நீ முதல்வன்நீ ` என்றது , ` எல்லா வற்றையும் ஆக்குபவனும் நீ அழிப்பவனும் நீ ; ஆதலால் , நீ , யாம் அங்கு வருதற்குரிய வழியைச் செய்யவல்லாய் `; அவ்வாறு செய்ய ஒட்டாது தடுப்பவரும் இல்லை என்றவாறு . நகையை , ` கை ` என்றது , முதற்குறை . ` வாரிய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப்
பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயில்எய்த
செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் அருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

மலையிடத்துத் தோன்றிய மங்கையை ஒரு பாகத்திற் கொண்டு , உலக முழுவதும் பிச்சைக்குத் திரிபவனே , வில்லிடத்துக்கொண்ட அம்பினால் முப்புரத்தை அழித்த , சிவந்த கண்களையுடைய இடபத்தை யுடையவனே , மலையிடத்துப் பெருகிய பல அருவிகள் வாரிக்கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக் களையும் கைக்கொண்டு இருபக்கங்களையும் அரிக்கின்ற அலைகளை உடைய , காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள் , இறைவனாவான் நீயே ; ஓலம் !

குறிப்புரை :

` ஒருபாலாய் ` என , இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது . ` ஒருபாலா ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` மலைக்கொள் ` என்றதில் , கொள்ளுதல் , ` பெருகுதல் ` என்னும் பொருளது . ` தீர்த்தன் நீ ` என்றது , ` நீயே இறைவனாக , நினக்குமேல் இறைவர் இலராகலின் , யாவும் செய்வாய் ` என்று கூறி , வேண்டிய வாறு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

போழும் மதியும் புனக்கொன்றை
புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ
உன்னைத் தொழுவார் துயர்போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

பகுக்கப்பட்ட சந்திரனும் , புனங்களில் உள்ள கொன்றை மலரும் , நீரும் பொருந்திய முடியையுடைய புண்ணிய வடிவினனே , சுற்றி ஊர்கின்ற பாம்பை அணிந்த , சுடர்களையுடைய ஒளி வடிவினனே , உன்னை வணங்குகின்றவர்களது துன்பம் நீங்கு மாறும் , ஆங்காங்கு வாழ்கின்றவர்கள் விருப்பத்தினால் வைத்த உள்ளங்கள் அவர்களைச் செலுத்தி மூழ்குவிக்குமாறும் , மறித்து வீசுகின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள் , ஓலம் !

குறிப்புரை :

` சிவபிரானது அடியவர்கள் அவனது அருள்வடிவாகக் கொண்டு முழுகித் துன்பம் நீங்குமாறும் , மற்றும் ஆங்காங்கு வாழ்கின்றவர்கள் தீர்த்த நீரின்மேல் வைத்த விருப்பத்தினால் முழுகி மகிழுமாறும் காவிரியின்கண் நீர் பெருகாநின்றது ` என்றவாறு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

கதிர்க்கொள் பசியே யொத்தேநான்
கண்டே னும்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான்
எம்மான் றம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய
வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

என் தந்தை தந்தைக்கும் பெருமானே , மேகங்கள் துளிகளைச்சிதறி மழையைப் பொழிதலால் வெள்ளம் நுரையைச் சிதறிப் பரந்து வருகையினாலே முழங்குகின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , நான் உம்மை , பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டேன் ; அவன் உணவைக் கண்டாற்போலக் காணேனா யினேன் ; நீரின் வேகத்தை எதிர்த்து நீந்தி அக்கரையை அடைய நான் வல்லேனல்லேன் ; ஓலம் !

குறிப்புரை :

` கதிர்க்கொள் ` என்றதிற் ககர ஒற்று விரித்தல் , கொள்ளுதல் , கைகூடப் பெறுதல் . பசியுடையவனை , ` பசி ` என்றது . பான்மை வழக்கு . ` கதிர்க்கொள் பசியை ஒத்து ` என்று அருளினாரா யினும் , ` கண்டேன் ` என்றதற்கேற்பத் தொழிலுவமமாக மாற்றியுரைத் தலே திருவுள்ளம் என்க . பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டமை , அக்கரைக்கண் கண்டமை எனவும் , உணவைக் கண்டாற்போலக்காணாமை , திருமுன்பு சென்று காணாமை எனவும் , கொள்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கூசி அடியார் இருந்தாலுங்
குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
தேச வேந்தன் திருமாலும்
மலர்மேல் அயனுங் காண்கிலார்
தேசம் எங்கும் தெளிந்தாடத்
தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு , தெளிந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , அடியார் தாம் தம் குறையைச் சொல்ல வெள்கியிருந்தாலும் , நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர் ; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர் ; உம்மை , உலகிற்குத் தலைவனாகிய திருமாலும் , தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும் இவர்தாமும் காண்கிலர் ; பிறர் எங்ஙனங் காண்பார் ! ஓலம் !

குறிப்புரை :

முன்னைத் திருப்பாடல்காறும் இறைவர் யாதும் அருளாமையின் , இத் திருப்பாடலில் நம்பியாரூரர் அவரை இவ்வாறு நெருங்கி வேண்டினார் என்க . காத்தற்றொழில் உடைமைபற்றித் திரு மாலை , ` தேச வேந்தன் ` என்று அருளினார் . ` காண்கிலா ` என்பது பாடம் அன்று . ` பிறர் எங்ஙனங் காண்பார் ` என்பது இசையெச்சம் , அருவிகள் அலைவடிவாயினமையைக் குறிக்க , அவைகளை அலைகள் கொணர்ந்தனவாக அருளினார் . வாசம் - வசித்தல் . அதன்பின் , ` உடைய ` என்பது , தொகுத்தலாயிற்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கூடி அடியார் இருந்தாலும்
குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன்
உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி எங்குங் காண்கிலேன்
திருவா ரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

பொழிப்புரை :

அசைகின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் , அடியார் உம்மைவிட்டு நீங்காது கூடியே இருந்தாலும் நீர் , அவர்க்கு அருள்பண்ணும் குணம் சிறிதும் இல்லீர் , ` அருள் பண்ணுதல் வேண்டும் ` என்னும் எண்ணமும் இல்லீர் ; அது நிற்க , நீர் என்பால் பிணக்குக் கொண்டிருந்தும் , யான் அதனை உணர்ந்திலேன் ; உம் அடியேனும் , ` நம்பியாரூரன் ` என்னும் பெயரினேனும் ஆகிய யான் உம்மை இங்குப் பலவிடத்துந் தேடியும் காண்கின்றிலேன் ; அதனால் , உம்மை யான் நேர்படக்கண்ட திருவாரூரையே நினைப்பேனா யினேன் ; ஓலம் !

குறிப்புரை :

இறுதித் திருப்பாடலையும் திருக்கடைக்காப்பாக அருளாது , முன்னைத் திருப்பாடல்கள் போலவே அருளிச்செய்தார் , அதுகாறும் தம் பாடற் பயனைத் தாம் காணாமையின் . அங்ஙனமா யினும் , ` இது திருக்கடைக் காப்பிற்குரிய திருப்பாடல் ` எனவும் , ` இதன் பின்பும் நீர் அருள் பண்ணுதலும் பண்ணாதொழிதலும் உம் இச்சை வயத்தன ` எனவும் விண்ணப்பிப்பார் , ` தொண்டன் ஊரனேன் ` எனத் தம் பெயரைப் பெய்து அருளிச்செய்தார் . இதன் பின்பு இறைவர் , கன்று தடையுண்டெதிரழைக்கக் கதறிக்கனைக்கும் புனிற்றாப்போல் , சராசரங்கள் எல்லாங்கேட்க , ` ஓலம் ` என எதிர்மொழி கொடுத்து , யாற்று நீரை விலக அருளினாராகலின் , இத் திருப்பதிகமும் ஏனைய திருப்பதிகங்கள்போல , தன்னை ஓதுவார்க்கு எல்லாப் பயனையும் அருளுவதாதல் அறிந்துகொள்க .
சிற்பி