திருக்கேதாரம்


பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

வாழ்வாவது மாயம்மிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின் , இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; அதன் பொருட்டு , நீவிர் நீட்டியாது விரைந்து அறத்தைச் செய்ம்மின்கள் ; பெரிய கண்களையுடையவனாகிய திருமாலும் , மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும் , வானின்மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

முதற்கண் வந்த , ` ஆவது ` என்பது , எழுவாய்ப்பொருள் தருவதோர் இடைச்சொல் . ` போவது ` என்றது , ` போகவேண்டுவது ` எனப் பொருள் தந்தது . பறி - பை ; அது பை போல்வதாகிய உடம்பைக் குறித்தது . அதனை வருகின்ற திருப்பாடலிலுங்காண்க . ` பறிதான் வாழ்வாவது ` என மேலே கூட்டுக . ` தான் ` என்பது , அசைநிலை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

பறியேசுமந் துழல்வீர்பறி
நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளு
நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல
நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

வேறொன்றும் செய்யாது உடம்பைச் சுமந்தே திரிகின்றவர்களே , இவ்வுடம்பு நரிகளால் கிழித்து உண்ணப்படுவ தாதலை அறிகின்றிலீர் ; குறித்த நாளில் உம்மை அழைத்தற்குக் கூற்று வன் நினைக்கின்ற நாளில் உமக்கு அறங்கள் உளவாகுமோ ? ஆகா வாகலின் , இப்பொழுதே , அறிய வேண்டுவனவற்றை அறியும் வானுலகத்தவரினும் மேலான அறிவுடன் , நல்ல நறுமணத்தையுடைய நீரையும் , சோற்றையும் விருந்தினருக்கு , இன்சொற் பேசி இடுகின்றவர் கள் வணங்குகின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

` கூவிய ` என்றது , ` செய்யிய ` என்னும் வினையெச்சம் . அது , ` கொளும் ` என்றதனோடு முடிந்தது , கொள்ளுதல் - மனத்துட் கொள்ளுதல் . ` நாளால் ` என்றது , வேற்றுமை மயக்கம் . ` உளவே ` என்ற ஏகாரம் , வினா . வானின் உள்ளாரை , ` வான் ` என்று அருளினார் . அவர் அறிவது , துறக்க இன்பத்தையேயாகலின் , அதனை விரும்பாது , வீட்டின்பத்தை விரும்புவாரை , அவரினும் மேலாய அறிவுடைய வராக அருளினார் . இனி , ` அறிவானிலும் அறிவான் ` என்றதற்கு , ` அறிகின்ற உயிரின்கண்ணும் அறிவாய் இருந்து அறிபவன் ` என . இறைவற்கு ஆக்கி உரைப்பாரும் உளர் . விலாமிச்சை வேர் முதலியன இடப்படுதலின் , நீர் , நறுமணம் , உடையதாயிற்று . ` கிறி ` என்றது , மகிழ்வுரைகளை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

கொம்பைப்பிடித் தொருக்காலர்க
ளிருக்கான்மலர் தூவி
நம்பன்நமை யாள்வான்என்று
நடுநாளையும் பகலும்
கம்பக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , யோகதண்டத்தை ஊன்றி , ஒருவழிப் படுத்துகின்ற உயிர்ப்பினை உடைய யோகிகள் , ` இவனே நம்மை ஆள்பவன் ` என்று , நள்ளிரவிலும் , பகலிலும் மந்திர ஒலியோடு மலர்களைத் தூவி விரும்பப்படுகின்ற இறைவனது , அசைதலை யுடைய ஆண் யானையின் கூட்டம் தொடர்ந்துவந்து நின்று , பல சுனை களின் நீரை இறைத்து , செம்பொன்னினது பொடியை உதிர்க்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

` ஒருக்கு காலர்கள் ` என்பது , குறைந்து நின்றது . கால் - காற்று ; உயிர்ப்பு . ` தூவி ` என்ற வினையெச்சம் , ` நம்பன் ` என்ற வினைக் குறிப்புப் பெயர் கொண்டது . இனி , ` தூவி ` என்றதனை , ` தூவ ` எனத் திரித்து , ` சிந்தும் ` என்றதனோடு முடித்தலுமாம் . ஆதல் - தொடர்ந்து வருதல் . இவ்வாறன்றி , ` களிறு ` என்பது , விரித்தலாயிற்று எனலுமாம் . சுனைகளது பன்மையை , நீர்மேல் ஏற்றி அருளினார் . பொன்வண்ணமான மலையில் சுனை நீர்களை வலிமைப்பட இறைத்த லால் , பொற்பொடிகள் உதிர்வவாயின என்க . இத் திருப்பாடலுள் ` யோகிகள் தாமும் இரவும் பகலும் வணங்குவாராக , நீவிர் வாளா பொழுது கழிக்கின்றீர் ; இது பொருந்துவதோ ` என்று அருளியவாறு .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத்
திழப்பார்களுஞ் சிலர்கள்
வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர்
மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு
தவமாவது செயன்மின்
கிழக்கேசல மிடுவார்தொழு
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

அறிவை அழித்துக்கொண்ட மாந்தர்களே , பொருளைத்தேடி , உழக்கரிசியை அட்டு உண்ணுதல் ஒன்றைச் செய்து விட்டு , எஞ்சியவற்றைத் தொகுத்துவைத்துப் பின் இழந்து போவாரும் சிலர் இவ்வுலகில் உளர் ; அவர்கள் , ` அறம் ` என்றாலோ , ` அஃது எமக்கு வேண்டா ; யாம் உண்டு உயிர் வாழ்வேம் ` என்று போவர் . வஞ்சனையால் தம் வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொள்கின்ற அவர் களோடு கூடி , அவர்களது நோன்பாகிய அச்செயலை நீவிர் செய்யன் மின் ; விடியற்காலையில் பகலவன் வருகையை எதிர்நோக்கி நின்று , மந்திர நீரை இறைத்துக் காலைச் சந்தியை முடிக்கின்றவர்கள் வணங்கு கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

உழக்கு , நாழியின் நாற்கூற்றில் ஒருகூறு . ` உண்பது நாழி ` என்றும் , ` நாழி யரிசிக்கே நாம் ` என்றும் ( நல்வழி ) மக்கள்தம் உணவளவு கூறப்படுமாகலின் , ` உழக்கு ` என்றது அவர் தம் உண்ணுதற் செயலின் இழிபு தோற்றிற்று என்க . ஏகாரம் , செயற்பாலன வாய பிற செயல்களின் நின்று பிரித்தலின் , பிரிநிலை . ` படைத்து ` என்றதனை முதற்கண் வைத்து உரைக்க . படைத்தல் - உளவாக்குதல் . ` வழக்கு ` என்பது , ` அறிந்தார்க்கு உரிய முறைமை ` என்னும் பொருள தாய் , அறத்தைக் குறித்தது . மாந்துதல் - குடித்தல் ; ` அறிவைக் குடித்த ` என்றது , பான்மை வழக்கு , ` மாந்தர் ` என்றது விளி . ` சழக்கு ` என்றது , இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லிக் கரத்தலை . ` பிழைக்கே யென்பர் ` என்பதும் பாடம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

வாளோடிய தடங்கண்ணியர்
வலையில்லழுந் தாதே
நாளோடிய நமனார்தமர்
நணுகாமுனம் நணுகி
ஆளாயுய்ம்மின் அடிகட்கிட
மதுவேயெனில் இதுவே
கீளோடர வசைத்தானிடங்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , நாட்கள் ஓடிவிட்டன ; ஆதலின் , இயமன் தூதுவர் வருதற்கு முன்பு , வாள்போல இருபக்கமும் ஓடுகின்ற , அகன்ற கண்களையுடைய மகளிரது ஆசையாகிய வலையிற் சிக்காமல் , இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழை மின்கள் ; அங்ஙனம் பிழைத்தற்கு அவனுக்கு இடமாவதுதான் யாது எனில் , இங்குச் சொல்லப்பட்டு வரும் இத்திருக்கேதாரமே . அரையில் கீளுடன் பாம்பைக் கட்டியுள்ள அவனது இடம் ; ஆதலின் , இதனைத் துதிமின்கள் .

குறிப்புரை :

` ஓடிய `, பின்னது முற்று , கண்ணோட்டமின்மையைக் குறிக்க , ` நமனார் ` என உயர்த்து அருளிச்செய்தார் . ` அடிகட்கு ` எனப் பின்னர் வருதலின் , வாளா , ` ஆளாய் ` என்றருளினார் . ` அது `, பகுதிப்பொருள் விகுதி . ` அதுவே ` என்ற ஏகாரம் , பிறவற்றினின்றும் பிரித்துக் கோடலின் , பிரிநிலை . ` யாது ` என்பது எஞ்சிநின்றது . செய்யுளாகலின் இதுவே என்னும் சுட்டுப்பெயர் முன் வந்தது . ` இது ` என்றதன்கண் சுட்டு , ` இங்குச் சொல்லப்படுவது ` என்னும் பொருளது .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

தளிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறி லன்றே
குளியீருளங் குருக்கேத்திரங்
கோதாவிரி குமரி
தெளியீர்உளஞ் சீபர்ப்பதம்
தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறியுண்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , தேவகோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது , மக்கள் அவ்விடங்களை அடைந்தாலன்றோ ? இதனை மனத்துட் கொண்மின்கள் ; கொண்டு , தெற்கென்னும் திசை கிடைக்க , ` கோதாவரி , குமரி ` என்னும் தீர்த்தங்களிலும் , வடக் கென்னும் திசைகிடைக்க , அழகிய குருக்கேத்திரத்தில் உள்ள தீர்த்தத் திலும் சென்று முழுகுமின்கள் ; அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும் , வடக்கில் கிளிகள் , பழத்தைக் கீறி உண்ணுகின்ற திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதிமின்கள் .

குறிப்புரை :

` தவச்சாலைகள் ஆவது ` என மாற்றியுரைக்க . ` குளியீர் உள் ` எனவும் , ` அம் குருக்கேத்திரம் ` எனவும் பிரிக்க . ` குளியீர் ` என்ற தனால் , ` குருக்கேத்திரம் ` என்றது , அதன்கண் உள்ள தீர்த்தத்தின் மேலதாயிற்று . ` தெற்கு , வடக்கு ` என்றல் , விந்த மலையை வைத்து என்க . இத் திருப்பாடலுள் , ` குமரி முதல் இமயங்காறும் நன்னெறிச் செலவு சென்று , தீர்த்தங்களின் மூழ்குதலும் , தலங்களை வணங்குதலும் வேண்டும் ` என்று அருளியவாறு . ` சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே ` ( தி .6 ப . 36 பா ,9) என்றும் , ` அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே ` ( தி .6 ப .78 பா .1) என்றும் அருளிச்செய்தார் , ஆளுடைய அரசரும் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

பண்ணின்தமிழ் இசைபாடலின்
பழவேய்முழ வதிரக்
கண்ணின்னொளி கனகச்சுனை
வயிரம்மவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள்
மணிவாரிக்கொண் டெறியக்
கிண்ணென்றிசை முரலுந்திருக்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , பண்ணாகிய , தமிழ்ப்பாடலினது இசையைப் பாடுமிடத்து , அதற்கியையப் பழைதாகிய வேய்ங்குழலும் , மத்தளமும் ஒலித்தலினாலும் , கண்ணுக்கு இனிதாகிய ஒளியையுடைய பொன் வண்ணமான சுனைகள் வயிரங்களை அலைகளால் எடுத்து வீசுதலினாலும் , நிலத்தில் நிற்கின்ற மத யானைகள் , மாணிக்கங்களை வாரி இறைத்தலினாலும் , ` கிண் ` என்கின்ற ஓசை இடையறாது ஒலிக் கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

` பண்ணின் இ? u2970?` என இயையும் . இவ்விடத்து இன் , அல்வழிக்கண் வந்த சாரியையாம் . பழைமை , மரபு . ` வேய் ` ஆகு பெயர் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

முளைக்கைப்பிடி முகமன்சொலி
முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவி
வளைக்கைப்பொழி மழைகூர்தர
மயில்மான்பிணை நிலத்தைக்
கிளைக்கமணி சிந்துந்திருக்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , சிறிய கையை உடைய பெண்யானைகள் , துளையையுடைய கையையுடைய ஆண் யானைகட்கு உறவாய் நின்று , முகமன்கூறி , பெரிய மூங்கில்களை ஒடித்துக் கொடுத்து , சுனைகளின் நீரைத் தெளித்தலால் , அவற்றின் வளைவையுடைய கையினின்றும் பொழிகின்ற மழை மிகுதியாக , மயிலும் , பெண்மானும் நிலத்தைக் கிண்டுதலால் மாணிக்கங்கள் தெறிக்கின்ற , ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள் .

குறிப்புரை :

` சொல்லி ` என்றது , பான்மை வழக்கு . மூங்கில் இலை கள் யானைக்கு உணவாதல் அறிக . ` தூவி ` என்றது , ` தூவ ` என்பதன் திரிபு . ` மயிலும் மான்பிணையும் நிலத்தைக் கிளைக்கும் ` என்றது , கோழியும் , எருதும் ஆண்டு இல்லை என்பதை விளக்கி நின்றது .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

பொதியேசுமந் துழல்வீர்பொதி
அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று
குழிவீழ்வதும் வினையால்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை
மலங்கவ்வரை யடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங்
கேதாரமெ னீரே

பொழிப்புரை :

உலகீர் , நீவிர் , இறைச்சிப் பொதியாகிய உடம்பைச் சுமந்து திரிதல் ஒன்றையே செய்வீர் ; அப்பொதிதான் பயனற்று ஒழிவதை அறியமாட்டீர் ; அறிவை இழந்த வழியிலே சென்று நீவிர் குழியில் வீழ்வதும் , நும் வினைப்பயனேயாம் . இதனை விடுத்து , முழுதும் கடலாற் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மெலிவடையும் படி அவனை மலையால் முன்பு நெருக்கிப் பின்பு நன்னிலையைப் பெறச்செய்து தான் அம்மலைமேல் இனிதிருந்த வனாகிய சிவ பெருமானது இடம் திருக்கேதாரமே ; அதனைத் துதி மின்கள் .

குறிப்புரை :

` வினையால் ` என்றதில் ஆல் , அசைநிலை . கதி - இடம் . ` கேதாரம் ` என்றதனை இரட்டுற மொழிந்து கொள்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

நாவின்மிசை யரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக்
கடியானடித் தொண்டன்
தேவன்திருக் கேதாரத்தை
ஊரன்னுரை செய்த
பாவின்றமிழ் வல்லார்பர
லோகத்திருப் பாரே

பொழிப்புரை :

தமிழ்ப்பாடலைப் பாடிய திருநாவுக்கரசரும் , திரு ஞானசம்பந்தரும் , மற்றும் எவராயினும் , சிவனடியார்களுக்கு அடிய னாகி , அவர்கட்கு அடித்தொண்டு செய்பவனாகிய நம்பியாரூரன் , இறைவனது திருக்கேதாரத்தைப் பாடிய , இனிய தமிழ்ப் பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லாவற்றிற்கும் மேலுள்ள உலகமாகிய சிவ லோகத்தில் இருப்பவராவர் .

குறிப்புரை :

` மி? u2970?` ஏழனுருபு ; அஃது உருபு மயக்கமாய் , நான்காவதன் பொருளைத் தந்தது . ` தமிழ் ` என்றது தாப்பிசையாய் , முன்னுஞ் சென்றியையும் . ` யாவர் ` என்றதன்பின் , ` ஆயினும் ` என்பது வருவிக்க . ` அடியான் ` என்றது முற்றெச்சமாய் , ` அடித் தொண்டன் ` என்னும் வினைக் குறிப்புப் பெயரைக் கொண்டது . ` பாவாகிய இனிய தமிழ் ` என்க . அன்றி , ` இன் , சாரியை ` எனினுமாம் .
சிற்பி