திருக்கழுக்குன்றம்


பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெரு மானது இடம் , பிடியானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் தண்ணிய திருக்கழுக்குன்றமே ; அதனை , பிற உயிர்களை வருத்து மாற்றாற் செய்த கொடுஞ்செயல்களால் , பலரும் பல இகழுரைகளைச் சொல்லுமாறு இழிவெய்த நின்ற பாவமாகிய வினைகள் பலவும் நீங்குதற்பொருட்டுப் பலகாலும் சென்று வணங்குமின்கள் .

குறிப்புரை :

` கொன்று ` என்னும் வினையெச்சம் , ` ஓடி வந்தான் ` என்பதில் , ` ஓடி ` என்பதுபோல் , ` செய்த ` என்றதற்கு அடையாய் நின்றது . ` கொன்று ` என்றது , கொல்லுதலையேயன்றி , கொன்றாற் போலத் துன்பஞ் செய்தலையுங் குறித்தது . புண்ணியமும் , பாவமும் என வினைகள் இரண்டாகலின் , ` பாவ வினைகள் ` என்று அருளினார் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , விளங்குகின்ற , கொன்றை மாலையை அணிந்த சடையையுடைய எங்கள் பெருமானது இடம் , பல நிறங்களையும் காட்டுகின்ற மணிகளோடு , முத்தினையும் தள்ளிக் கொண்டு பாய்கின்ற , ஒலிக்கும் வெண்மையான அருவிகளையுடைய , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை , தலைவணங்கிச் சென்று , இனிய இசைகளைப் பாடி வழிபடுமின்கள் .

குறிப்புரை :

` இன்னிசை பாடவே ` என்பதும் பாடம் . ` பிறங்கு சடையன் ` என இயையும் . ` நிறம் ` என்ற பொதுமையால் , பல நிறங்க ளும் கொள்ளப்பட்டன . முத்தின் சிறப்புப் பற்றி , அதனை வேறாக ஓதியருளினார் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டு முடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து , முழுதும் ஒழிதற்பொருட்டு , தோள்கள் எட்டினையும் உடைய , சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை யுடையவனாகிய , நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற , குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை , நாள்தோறும் , முறைப்படி , நெடிது நின்று வழிபடுமின்கள் .

குறிப்புரை :

` நம்ம ` என்றதில் மகர ஒற்று , விரித்தல் . ` கண்டத்தில் நஞ்சே யன்றித் தோளும் எட்டு உடையான் ` என்றலின் , ` தோளும் ` என்ற உம்மை , எச்சம் . ` கண்டம் உடையான் ` என்னாது , ` கண்டன் ` என்கின்றாராகலின் , எச்ச உம்மை முன்னர் வந்தது . ` எட்டும் ` என்ற உம்மை , முற்று : ஆடுங்கால் , எட்டுத் திசையிலும் வீசுதற்கு வேண்டும் கைகளை முற்றவுடையன் என்றவாறு .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி யாடியை
முளிறி லங்கு மழுவா ளன்முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , வெம்மை பொருந்திய மழுப்படையை உடைய சிவபெருமான் முற்பட்டு எழுந்தருளியிருக்கின்ற இடம் , பிளிறுகின்ற , மனவலியையும் , பெரிய தும்பிக்கையையும் , பொழி கின்ற மதங்கள் மூன்றையும் உடைய களிற்றி யானைகளோடு , பிடி யானைகள் சூழ்ந்துள்ள , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; ஆதலின் , உங்கள் அறியாமை நீங்குதற்பொருட்டு , அங்குச்சென்று , திருநீற்றில் மூழ்குகின்றவனாகிய அப்பெருமானை வழிபடுமின்கள் .

குறிப்புரை :

` அவ் வெண்பொடி யாடியை ` என , எடுத்துக் கொண்டு உரைக்க . முளிறு - முளி ; வெம்மை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவுக் குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , புல்லிய சடையை உடைய அற வடிவின னும் , இலை வடிவத்தைக்கொண்ட சூலப் படையை உடைய எம் தந்தை யும் , எங்கள் தலைவனும் ஆகிய இறைவனது இடம் , பாலை உண்டு தழுவுதலை உடைய குட்டியோடு பெண் முசுவும் , அதனோடு ஆண் முசுவும் மரக்கிளைகளில் தாவுகின்ற காட்டினையுடைய , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை உங்கள் கீழ்மைகள் எல்லாம் நீங்கும் பொருட்டுச் சென்று வழிபடுமின்கள் .

குறிப்புரை :

` தழுவி ` என்பதே பாடம் எனின் , அதனை , ` தழுவ ` என்பதன் திரிபென்க . ` கலை ` எனப் பின்னர் வருதலின் , ` முசு ` என்றும் , அதுபற்றிப் பின்னர் , ` கலை ` என்றும் போயினார் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

மடமு டைய அடியார் தம்மனத் தேயுற
விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமு டைய அரவன் றான்பயி லும்மிடம்
கடமு டைய புறவிற் றண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

நஞ்சினை உடைய கண்டத்தையுடையவனும் , தேவர்கட்கு மேலானவனும் , படமுடைய பாம்பை யுடையவனும் ஆகிய சிவபெருமான் , தன்னையன்றி வேறொன்றையும் அறியாத அடியவரது மனத்தில் பொருந்தும் வண்ணம் நீங்காது எழுந்தருளி யிருக்கின்ற இடம் , காட்டையுடைய , முல்லை நிலத்தோடு கூடிய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே .

குறிப்புரை :

இது முதலாக உள்ள மூன்று திருப்பாடல்களில் , ` உலகீர் , உங்கள் குறைகளெல்லாம் நீங்குதற் பொருட்டு அதனை வழிபடு மின்கள் ` என்பது குறிப்பெச்சமாக அருளிச்செய்யப்பட்டது . அஃது எவ்வாற்றாற் பெறுதும் எனின் , பின்னரும் ஒரு திருப்பாடலுள் அதனை எடுத்தோதி , இடையே இவற்றை வைத்தருளிய வாற்றாற் பெறுதும் என்க . ஒன்றையே அறிந்து , பிறவற்றை அறியாதொழிதல் ஒப்புமையால் , ` மடம் ` என்று அருளினார் . அடியவர் மனத்தே உறுதலாவது , அவர் அங்ஙனம் வைத்து எண்ணுதல் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடம்
தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடவே
கான மஞ்ஞை உறையுந் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

ஞான வடிவினனும் , நடனம் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான் , குறைபாடு இல்லாத தன் அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணம் , நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம் , தேனும் , வண்டும் தேனை உண்டு இனிய இசையைப்பாட , காட்டில் மயில்கள் அதனைக் கேட்டு இன்புற்றிருக்கின்ற திருக்கழுக்குன்றமே .

குறிப்புரை :

` தேன் ` என்பதும் , வண்டின் வகைகளுள் ஒன்று . ` இன்னிசை பாடியே ` என்பது பாடம் அன்று .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
சந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

அளவற்ற அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணமும் , திருமாலும் நான்முகனும் நாள்தோறும் வந்து வணங்கி வழிபட்ட , மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும் , நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , சந்தன மரம் மணம் வீசுகின்ற , முல்லை நிலத்தோடு கூடிய , குளிர்ந்த திருக் கழுக்குன்றமே .

குறிப்புரை :

` நட்டமாடி நவிலும் இடம் ` என்பது , மேலைத் திருப்பாடலினின்றும் வந்து இயைந்தது . சிந்தை செய்தல் , அதன் காரியத்தை உணர்த்திற்று . ` கந்தம் நாறும் ` என்பதும் பாடம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
கழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே

பொழிப்புரை :

உலகீர் , பின்னிய சடையின்கண் தலைக் கோலங் களையுடையவனும் , ` குழை ` என்னும் அணியை அணிந்த காதினை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , மேகங்கள் மிக முழங்க , மிக உயர்ந்த வேயும் , கழையுமாகிய மூங்கில்கள் முத்துக்களைச் சொரிகின்ற , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை , உங்கள் குற்றங்களெல்லாம் நீங்குதற் பொருட்டு வழிபடு மின்கள் .

குறிப்புரை :

` பின்னு சடை ` என்னும் உகரம் தொகுத்தலாயிற்று . ` வேய் , கழை ` என்பன , மூங்கிலின் வகைகள் . ` புன்சடை `, ` குழைகொள் முத்தம் ` என்பனவும் பாடங்கள் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

பல்லின் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்
கல்லின் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு [ மின்களே

பொழிப்புரை :

உலகீர் , பற்களையுடைய வெண்மையான தலையை உடையவன் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம் , பாறைகளின்மேல் வீழ்கின்ற வெண்மையான அருவிகளையுடைய , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை , வலிமை மிக்க , திரண்ட தோள் களையுடையவனாகிய நம்பியாரூரனது வனப்புடைய பாடல்களால் துதித்து வழிபடுவோரை வழிபடுமின்கள் .

குறிப்புரை :

` மிக்க பயனை அடைவீர்கள் ` என்பது குறிப்பெச்சம் . ` பல்லில் ` என்பது பாடமாயின் , ` பல இல்லங்களில் செல்லுகின்ற ` என உரைக்க . ` கழுக்குன்றமே , அதனை ` என இரண்டாக்கி உரைக்க . ` வனப்பு ` ஈண்டு , ` விருந்து ` என்பது , அஃது ஆகுபெயராய் , அதனையுடைய பாடலைக் குறித்தது . ` சொல்லல் சொல்லி ` என்றதில் , ` சொல்லி ` என்பது ` உண்ணலும் உண்ணேன் ` ( கலி . பாலைக்கலி 22 ) என்பதில் , ` உண்ணேன் ` என்பதுபோல , ` செய்து ` என , பொதுமை யாய் நின்றது . இவ்வாறு வழக்கினுள்ளும் , செய்யுளுள்ளும் வருதல் காண்க .
சிற்பி