திருச்சுழியல்


பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

ஊனாய்உயிர் புகலாய்அக
லிடமாய்முகில் பொழியும்
வானாய்வரு மதியாய்விதி
வருவானிடம் பொழிலின்
தேனாதரித் திசைவண்டினம்
மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை
நலியார்நமன் தமரே

பொழிப்புரை :

உடம்புகளாகியும் , அவைகளில் புகுதலை யுடைய உயிர்களாகியும் , அகன்ற நிலமாகியும் , மேகங்கள் நின்று மழையைப் பொழியும் வானமாகியும் , வினைப்பயன் வருதற்கு வழியாகிய உள்ள மாகியும் நிற்பவனாகிய இறைவனது இடம் , சோலைகளில் தேனை விரும்பி வண்டுக் கூட்டம் இசைபாடுகின்ற திருச்சுழியலாகும் . அதனைப் பல்லாற்றானும் நினைபவர்களை , கூற்றுவன் ஏவலர்கள் துன்புறுத்தமாட்டார்கள் .

குறிப்புரை :

` புகல் உயிராய் ` எனவும் , ` விதிவரு மதியாய் ` எனவும் மாற்றி யுரைக்க . நிலத்தையும் , வானையும் அருளியது , ` உயிர்கள் வாழும் இடங்களாய் ` என்றவாறு . ` மதி ` என்றது , புத்தி தத்துவத்தை . ` புண்ணிய பாவங்கட்குப் பற்றுக்கோடாவது புத்தி தத்துவமே ` என்பதை மெய்ந் நூல்களிற் கண்டுகொள்க . ` மதி ` என்றதற்கு , இவ்வாறன்றி , சந்திரன் என்று உரைத்தலும் ஈண்டுச் சிறவாமை யறிக . இதனானும் , ` விதியாய் ` என ஆக்கச்சொல் வேண்டுதலானும் , ` அதன் மதியாய் ` என்னும் பாடமும் சிறவாதென்க . ` வருவான் ` என்றது , ` நிற்பான் ` என்பது போல , பொருட்டன்மை குறித்ததாம் . பல்லாற்றான் நினைத்தல் , நின்றும் , இருந்தும் , கிடந்தும் , நடந்தும் , வாழ்த்தியும் , வணங்கியும் நினைதல் முதலியவற்றை என்க . நமன் தமர் நலியாமை , வினைகள் பற்றறக் கழிந்தவழியாதலின் , அந்நிலை உளதாம் என்றவாறு .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

தண்டேர்மழுப் படையான்மழ
விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை
வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றான்அவன்
உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர்
நல்லார்துயர் இலரே

பொழிப்புரை :

தண்டுபோல மழுப்படையை ஏந்தியவனும் , இளமையான இடபத்தை யுடையவனும் , தேவர்கள் பொருட்டு , கடலில் எழுந்த நஞ்சினையுண்டு , திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் திண்ணிய தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலிற் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள் , இன்பம் உடையவரும் , துன்பம் இல்லாதவரும் ஆவர் .

குறிப்புரை :

` ஏர் ` உவம உருபு . ` மழுப்படையைத் தண்டு போல உடையான் ` என்றது , ` நெருப்பாய் நிற்கும் அஃது , அவனையாதும் துன்புறுத்தமாட்டாமையைக் குறித்தருளியபடியாம் . ` கடல் எழு நஞ்சு ` என மாற்றிக் கொள்க . ` வளைத்தான் ` என்றது முற்றெச்சம் . ` அவன் ` பகுதிப் பொருள் விகுதி . நன்மை - இன்பமாகலின் , ` நல்லார் ` என்றது , ` இன்பம் உடையவர் ` என்றதாயிற்று .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

கவ்வைக்கடல் கதறிக்கொணர்
முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந்
தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய்
தெழுவார்அடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர்
அலராள் பிரியாளே

பொழிப்புரை :

ஓசையையுடைய கடல் , முழக்கம்செய்து , தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க , அங்கு , கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாயையுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்ற வரது திருவடிகளை வணங்குவோர் , தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர் ; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள் அவர் களை விட்டு நீங்காள் .

குறிப்புரை :

` திருச்சுழியலில் சென்று வணங்காது , சென்று வணங்கி வருவோரை வணங்கினும் நலம் பயக்கும் ` என்றபடி . இதனானே , அடியாரது பெருமையும் உணர்த்தியவாறாயிற்று . ` கரைக்கு ` என்றது உருபு மயக்கம் . சிவபிரானை , ` தெய்வம் ` என்றல் பிறர்கோள் பற்றியாம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

மலையான்மகள் மடமாதிட
மாகத்தவண் மற்றுக்
கொலையானையின் உரிபோர்த்தஎம்
பெருமான்திருச் சுழியல்
அலையார்சடை யுடையான்அடி
தொழுவார்பழு துள்ளம்
நிலையார்திகழ் புகழால்நெடு
வானத்துயர் வாரே

பொழிப்புரை :

மலையரையனுக்கு மகளாகிய இளைய மாது தனது திருமேனியின்கண் இடப் பகுதியினளாக , கொலைத் தொழிலை யுடைய யானையின் தோலைப் போர்த்துள்ள எம் பெருமானாகிய , திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற , நீர் பொருந்திய சடையை உடையவனது திருவடியைத் தொழுபவர்கள் , மனத்தில் குற்றம் பொருந்தாதவராவர் ; இவ்வுலகில் விளங்குகின்ற புகழை நாட்டிய மகிழ்வோடு நீண்ட வானுலகத்திற்கும் மேற்செல்வார்கள் .

குறிப்புரை :

` ஆகம் இடத்தவள் ` என மாற்றி , ஆக்கம் வருவித்து உரைக்க . ` மற்று ` அசைநிலை . ` புகழால் ` என்புழி ஆல் உருபு , ஒடு உருபின் பொருளில் வந்தது . ` புகழ் ` ஆகுபெயர் . வானம் - தேவர் உலகு . வீட்டுலகம் , ` வானோர்க்கு உயர்ந்த உலகம் ` ( குறள் -346 ) எனப்படுதல் காண்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

உற்றான்நமக் குயரும்மதிச்
சடையான்புலன் ஐந்தும்
செற்றார்திரு மேனிப்பெரு
மான்ஊர்திருச் சுழியல்
பெற்றான்இனி துறையத்திறம்
பாமைத்திரு நாமம்
கற்றாரவர் கதியுட்செல்வர்
ஏத்தும்மது கடனே

பொழிப்புரை :

நமக்கு உறவாயுள்ளவனும் , மேன்மை தங்கிய சந்திரனை யணிந்த சடையை யுடையவனும் , ஐம்புலன்களையும் வென்று பொருந்திய திருமேனியையுடைய பெருமானும் ஆகிய இறைவனது ஊர் திருச்சுழியலே . அதன்கண் நீங்காது இனிது எழுந் தருளியிருக்கப்பெற்ற அவனது திருநாமத்தைப் பயின்றவர் , உயர் கதியிற் செல்வர் ; ஆதலின் உலகீர் , அவனது திருப்பெயரைப் போற்று மின் ; அதுவே உங்கட்குக் கடமையாவது .

குறிப்புரை :

சந்திரனுக்கு மேன்மை , மறுவின்றி நிற்றல் , எனவே , பிறை என்றதாயிற்று . ` மாயையில் தோன்றிய உடம்பன்று , அருட்டிரு மேனி ` என்பார் , ` புலன் ஐந்தும் செற்று ஆர் திருமேனி ` என்று அருளிச் செய்தார் . சிவபிரானது திருமேனியை , ` பிறவா யாக்கை ` ( சிலப்பதி காரம் . இந்திரவிழ , அடி . 169 ) எனப் பிறருங் குறித்தல் அறியத்தக்கது . ` சுழியல் ` என்றதன்பின் , ` அதன்கண் ` என்று எடுத்துக்கொண்டு , ` திறம்பாமை இனிது உறையப் பெற்றான் ` என மாற்றியுரைக்க . ` உறைய ` என்ற செயவெனெச்சம் தொழிற் பெயர்ப் பொருளையும் , ` பெற்றான் ` என்றது , ` உடையான் ` என்னும் பொருளையும் தந்தன . ` ஏத்தும் ` என்றது , ` ஏத்துமின் ` என்பதன் மரூஉ . இவ்வாறன்றி , ` செய்யும் ` என்னும் வாய்பாட்டு வினைச்சொல் , ஏவற் பன்மைப் பொருளைத் தருதல் பிற்கால வழக்கு என்பர் பலர் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

மலந்தாங்கிய பாசப்பிறப்
பறுப்பீர்துறைக் கங்கைச்
சலந்தாங்கிய முடியான்அமர்ந்
திடமாந்திருச் சுழியல்
நிலந்தாங்கிய மலராற்கொழும்
புகையால்நினைந் தேத்தும்
தலந்தாங்கிய புகழான்மிகு
தவமாம்சது ராமே

பொழிப்புரை :

மாசினை உடைய பாசத்தால் வருகின்ற பிறப்பினை அறுக்க விரும்புகின்றவர்களே , துறைகளை உடையதாதற்கு உரிய கங்கையாகிய நீரினைத் தாங்கியுள்ள முடியையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடமாகிய திருச்சுழியலை , நிலம் சுமந்து நிற்கின்ற மலர்களாலும் , செழுமையான நறும்புகைகளாலும் வழி பட்டு , நினைந்து துதிமின்கள் ; உமக்கு இவ்வுலகம் சுமக்கத்தக்க புக ழோடு கூடிய மிக்க தவம் உளதாகும் திறல் உளதாகும் .

குறிப்புரை :

` மலந் தாங்கிய பாசம் ` என்றது , ஆணவத்தை . மாசாவது , அறிவை மூடுதல் . அதனால் அஃது ` இருள் ` என்னும் பெயரைப் பெற்றது . அது காரணமாக வினையும் , வினை காரணமாக உடம்பும் வருதலின் , ` மலந்தாங்கிய பாசப் பிறப்பு ` என்று அருளினார் . ` அமர்ந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . மலரை , ` நிலம் சுமந்தது ` என்றார் , அதனாற் கொள்ளப்படும் பயன் , சிவபிரானுக்கு அணிவித்தலே என்றற்கு . ` புகையால் ` என்பதன் பின் , ` வழிபட்டு ` என்பது வருவிக்க . முப்பொறிகளாலும் தொண்டுபடுதலை அருளிய வாறு காண்க . ` தலம் தாங்கிய புகழ் ` என்றது , ` அதனால் எளிதிற் சுமக்கலாகாத மிகுபுகழ் ` என்றதாம் . ` புகழான் ` என்ற ஆனுருபு , உடனிகழ்ச்சிக்கண் வந்தது . ` புகழாம் ` என்பதும் பாடம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

சைவத்தசெவ் வுருவன்திரு
நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண்
மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய
குழகன்திருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை
தீர்தல்லெளி தன்றே

பொழிப்புரை :

சிவாகமங்களிற் சொல்லப்பட்ட வேடத்தையுடைய சிவந்த திருமேனியை யுடையவனாய்த் திருநீற்றை யணிபவனும் , இடிபோலும் குரலையுடைய இடபத்தை யுடையவனும் , கையின்கண் வைத்த ஒரு வில்லாலே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும் , தெய்வத் தன்மையையுடைய தவத்தோர் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவனது திருச்சுழியலை உள்ளத்துள் வைத்து , அவனது திருவடியை நினைபவரது வினைகள் நீங்குதல் எளிது .

குறிப்புரை :

சைவம் - சிவாகமம் . ` உருவன் ` முற்றெ ச்சம் . ` உருமேறு ` உவமத் தொகை . ` கைவைத்த ` என்பதன் ஈற்று அகரம் , தொகுத்தல் . ` தெய்வ தவர் ` எனப் பிரிக்க . ` தெய்வத்தவர் ` என ஒரு சொல்லாகக் கொண்டு , ` தேவர் ` என உரைத்தலுமாம் . மெய் - உடம்பு ; அஃது அதனுள் இருக்கும் நெஞ்சிற்கு ஆகுபெயராயிற்று . நெஞ்சு உடம்பினுள் உளதாகக் கூறப்படுதலை , ` நெஞ்சந்தன்னுள் நிலவாத புலாலுடம்பே புகுந்து நின்ற - கற்பகமே `, ` ஊனின் உள்ளமே ` ( தி .6 ப .95 பா .4, ப .47 பா .1) என்றாற் போல்வன பற்றியுணர்க . இனி , ` மெய்யாக உணர்ந்து ` என்றலுமாம் . ` அன்றே ` அசைநிலை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

பூவேந்திய பீடத்தவன்
றானும்மடல் அரியும்
கோவேந்திய வினயத்தொடு
குறுகப்புக லறியார்
சேவேந்திய கொடியானவன்
உறையுந்திருச் சுழியல்
மாவேந்திய கரத்தான்எம
சிரத்தான்றன தடியே

பொழிப்புரை :

எருதினை , ஏந்துகின்ற கொடியாகப் பெற்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் , மானை ஏந்திய கையை யுடையவனும் , எங்கள் தலைகளின்மேல் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளை , தலைமை அமைந்த வணக்கத்தோடு அணுகச்சென்று அடைதலை , மலராகிய , உயர்ந்த இருக்கையில் உள்ளவனாகிய பிரமனும் , வலிமையுடைய திருமாலும் ஆகிய இவர்தாமும் அறியமாட்டார் .

குறிப்புரை :

` ஆதலின் , அது வல்லேமாகிய யாம் தவமுடையேம் ` என்றவாறு . ` அம் மாவேந்திய கரத்தான் எம சிரத்தான் ` எனச் சுட்டு வருவித்து உரைக்க . தம்போலும் அடியவர் பலரையும் உளப்படுத்து , ` எம சிரத்தான் ` என்று அருளினார் . தலைமை - தலையாயதாந் தன்மை .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

கொண்டாடுதல் புரியாவரு
தக்கன்பெரு வேள்வி
செண்டாடுதல் புரிந்தான்திருச்
சுழியற்பெரு மானைக்
குண்டாடிய சமணாதர்கள்
குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அதுசெய்தது
வானால்வரு விதியே

பொழிப்புரை :

தன்னையே மதித்துக் கொள்ளுதலைச் செய்துநின்ற தக்கனது பெருவேள்வியை , பந்தாடுதல்போலத் தகர்த்து வீசி விளையாடினவனாகிய திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை , மூர்க்கத்தன்மை பேசுகின்ற சமணராகிய அறிவிலிகளும் , குடையை உடையவராகிய புத்தர்களும் அறியாமல் , வலிமை பொருந்திய வாதுசெய்து , அதன் வண்ணமே யாவார்களாயின் , அஃது அவர் வினைப்பயனேயாகும் .

குறிப்புரை :

கொண்டாடியது , தன்னையே என்க . சாக்கியரை , ` குடை உடையவர் ` என்றது , சமணர் வெயிலில் நிற்றலும் , சுடுபாறைமேற் கிடத்தலும் செய்வர் என்பதை விளக்கிற்று . ` அது ` என்றது , வாதத்தை . விதி - அறநெறி . அஃது , ஆகுபெயராய் , அதனால் வரும் வினையைக் குறிக்கும் . ஈண்டு , வினையின் பயனை , ` வினை ` என்றருளினார் என்க . ` வரு மதியே ` என்பதும் பாடம் .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

நீருர்தரு நிமலன்திரு
மலையார்க்கயல் அருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம்
நெரித்தான்திருச் சுழியல்
பேரூரென வுறைவானடிப்
பெயர்நாவலர் கோமான்
ஆரூரன தமிழ்மாலைபத்
தறிவார்துய ரிலரே

பொழிப்புரை :

அருவிகள் பாய்கின்ற இறைவனது திருமலையில் எதிரொலி உண்டாக , அதன் அருகில் தனது ஊர்தியைச் செலுத்திய இராவணனது தலையை நெரித்தவனும் , திருச்சுழியலைத் தனது பெரிய ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனது திருவடிப் பெயரைப் புனைந்தவனும் , திருநாவலூரார்க்குத் தலை வனும் ஆகிய நம்பியாரூரனது இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் உணர்கின்றவர் , துன்பம் யாதும் இலராவர் .

குறிப்புரை :

` நிமலன் மலை ` என்றார் , மலமுடைய அவன் அணுகலாகாமையை நினையாமை பற்றி . ` அயல் அருகு ` ஒரு பொருட் பன்மொழி . இறைவனது பெயரை அவனது திருவடிப் பெயராக அருளினார் , தம் பணிவு தோன்ற . ` அடி ` என்றதன்பின் , பகர ஒற்று மிகாமைப் பாடம் ஓதுவாரும் உளர் .
சிற்பி