திருவாரூர்


பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினைவந்து சூழும் முன்னே , என் தந்தைக்கும் தலைவராய் உள்ள இறைவரை , அடியேன் , இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் சித்தத்தால் சிந்தித்துக்கொண்டு , அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

`அந்தி ` என்றது இரவையும் , ` நண்பகல் ` என்றது பகலையும் குறிக்கும் குறிப்பு மொழிகளாய் நின்றன . பதம் - சொல் ; அஃது ஆகுபெயராய் , எழுத்தினை உணர்த்திற்று , ` சகரக் கிளவி `, ` வகரக் கிளவி ` ( தொல் . எழுத்து . 62, 81 .) என்றவற்றில் , ` கிளவி ` என்றதுபோல . இனி , ` திருவைந்தெழுத்தில் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும் ` என்றலும் மரபாதல் பற்றி அவற்றை , ` பதம் ` என்று அருளினார் என்றலுமாம் , ` சொல்லிப் பராமரியா ` என்றதனை , ` நடந்து வந்தான் , ஓடி வந்தான் ` என்பன போலக் கொள்க . பராமரித்தல் - ஆராய்தல் . ` வல்வினை ` என்றது , எடுத்த உடம்பிற்குச் செயலறுதியையும் , இறுதியையும் பயப்பவற்றை . சிந்தையால் ` எனவும் , திருவாரூரினுள் எனவும் , உருபும் , உருபின் பொருள்படவரும் இடைச் சொல்லும் விரிக்க . ஏழாவதன் தொகைக் கண்ணும் , வருமொழி வினையாயவிடத்துச் சிறுபான்மை வல்லினம் மிகாமையறிக . இத் திருப்பதிகத்தினுள் , ` என்றுகொல் ` என்பவற்றில் கொல் ஐயப்பொருட்டு . ஐயம் அவா அடியாக நிகழ்ந்தது என்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து
தென்றன் மணங்கமழுந் தென்திரு வாரூர்புக்
கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

செய்யப்பட்டு நிற்கின்ற வினைகளது கொடுமை களெல்லாம் நீங்குமாறு , காலை மாலை இருபொழுதினும் , நெருங்கிய மலர்களைத் தூவி , சுற்றிலும் வலமாக வந்து எனது மனம் குளிர்தற்கு , தென்றற் காற்று நறுமணங் கமழ வருகின்ற அழகிய திருவாரூரினுட் சென்று எந்தை பிரானாரை , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந் நாளோ !

குறிப்புரை :

` எந்தை பிரானாரை ` என்பது , மேலைத் திருப் பாடலினின்றும் வந்து இயைந்தது ,

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

முன்னை முதற்பிறவி மூதறி யாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச்
செந்நெல் வயற்கழனித் தென்திரு வாரூர்புக்
கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொ லெய்துவதே

பொழிப்புரை :

தொன்று தொட்டு வருகின்ற பிறவிகளில் , பெரிய அறியாமை காரணமாக , வருங்காலத்திற் பெற நினைத்த நினைவு களும் , அவற்றால் விளைகின்ற துன்பங்களும் ஒழியுமாறு , செந்நெற் களை விளைவிக்கின்ற , நல்ல வயல்களாகிய கழனிகளையுடைய , அழகிய திருவாரூரினுட் சென்று , எனது உயிருக்கு இனிய அமுதம் போல்பவனை , யான் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` முன்னை முதல் ` என்றது , ` அனாதி தொட்டு ` என்றவாறு , ` வருகின்ற , பெற ` என்பன , சொல்லெச்சங்கள் . ` நினைவு ` என்றது , அவாவை , அவாவே பிறவிக்கு வித்தாகலின் , அதனால் உளதாவது துன்பமாயிற்று , இனி , ` முன்னை முதற் பிறவி ` முதலாக அருளியவை , சுவாமிகள் , தமக்குக் கயிலையில் நிகழ்ந்தவற்றை நினைந்து அருளியது என்றலுமாம் . ` செந்நெல் வயற்கழனி ` என்ற தனை , ` இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் ` ( தொல் . சொல் . 159 ) என்றாற் போலக் கொள்க . இன்னமுது , உருவகம் ,

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித் தென்திரு வாரூர்புக்
கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

நல்ல எண்ணம் நீங்குதலால் , அரிய உயிர்களை அவை உடம்போடு கூடி வாழும் நாட்களிலே கொல்லுதற்கு எண்ணு கின்ற எண்ணங்களும் , மற்றும் பல குற்றங்களும் அடியோடு அகன் றொழியுமாறு , உயர்ந்த நெல்விளைகின்ற வயல்களையுடைய அழகிய திருவாரூரின் எல்லையை மிதித்து , அந்நகரினுட் சென்று , எனது உயிர்க்கு இனிய அமுதம் போல்பவனாகிய இறைவனை , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

உணவாய்க் கழிந்தொழியாது , செல்வமாய்ச் சிறந்து நிற்கும் நெல்லென்பார் ,` செல்வம் ` என்றும் , திருவாரூரை அணுக விரும்பும் விருப்ப மிகுதி தோன்ற , ` எல்லை மிதித்து ` என்றும் அருளி னார் , ` என்னுயிர்க் கின்னமுதை ` என மேலைத் திருப்பாடலில் ஓதப் பட்டது , இத் திருப்பாடலினும் வந்து இயைந்தது ,

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய்
அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக்
கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

நஞ்சு போலும் நிறத்தையுடைய மாமரத்தைக் கடலின் நடுவண் அழித்தவனாகிய முருகனுக்குத் தந்தையும் , எல்லா வற்றினும் முன்னதாக , சுடப்பட்ட சாம்பலை உடம்பின்கண் பூசிய ஒளிவடிவினனும் , கொல்லும் தன்மை வாய்ந்த புலியினது தோலாகிய உடையை உடுத்தவனும் , உலகிற்கு முதல்வனும் , வலிய தலை ஓட்டின் கண் , மகளிர் இடுகின்ற பிச்சையை ஏற்பவனும் ஆகிய எம் பெரு மானை , திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` நஞ்சு போலும் நிறம் ` சூரபன்மனுடையது . ` முன் அணிந்தவன் ` என்னாது , ` முன் காய்ந்தவன் ` என , முன்னர் இயைத் துரைப்பினுமாம் . ` அடு புலி `, அடையடுத்த ஆகுபெயர் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம்
வாழுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள்
ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்
கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

பல உயிர்களும் வாழ்கின்ற நிலமும் , தாழ வீழும் நீரும் , ஒளியையுடைய தீயும் , யாண்டும் இயங்கும் காற்றும் , உயர்ந் துள்ள ஆகாயமும் , வெவ்விய கதிர்களை யுடையோனாகிய பகலவ னும் , வளவிய தமிழில் வல்லவர்கள் வகுத்த ஏழிசையாகிய ஏழுநரம் பின் ஓசையும் என்னும் இவை எல்லாமாய் நிற்பவனும் , ஏழுலகமாகிய இவைகளைத் தன் வழிப் படுத்து ஆள்பவனும் ஆகிய எம் பெரு மானை , திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` சூழ் , ஒளி , தாழ் , வாழ் , உயர் ` என்னும் அடை மொழிகள் , கொண்டு கூட்டுவகையான் நில முதலிய ஐந்தனோடும் ஏற்ற பெற்றியின் இயைத்துரைக்குமாறு அருளிச் செய்யப்பட்டன . இஃது அறியாமையின் , ` வாழுயர் ` என்பதனை , ` வானுயர் ` எனப் பாடம் ஓதினார் ; அது பாடம் ஆகாமை சொல்லவேண்டா . குரல் முதலிய ஏழிசைகளும் , இசைத் தமிழ் வல்லார் வரையறுத்த வரையறை யினவாகலானும் , யாழின் நரம்புகள் அவ்வரையறையின் வண்ணமே அமைந்து நின்று அன்ன ஓசையைத் தருமாகலானும் , ` வண்டமிழ் வல்லவர்கள் ஏழிசை ஏழ் நரம்பின் ஓ? u2970?` என்று அருளினார் , இனி , ` ஏழி? u2970?` என்றது , ஆகுபெயரான் . அதனையுடைய பாடலைக் குறித்தது எனினுமாம் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமரர்
செம்பொனை நன்மணியைத் தென்திரு வாரூர்புக்
கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

இளங்கொம்புபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது கூற்றினை யுடையவனும் , திரு நீறாகிய நறுமணப் பூச்சினை அணிந்தவனும் , எல்லா உயிர்கட்கும் சேமநிதிபோல் பவனும் தன்னோடு ஒப்புமையுடைய தேவர்கட்குச் செம்பொன்னும் , நவமணியும் போல்பவனும் எனக்கு உரிய பொன்னும் மணியுமாய் இருப்பவனும் ஆகிய எம் பெருமானை , அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

வம்பு - வாசனை ` நீறணிந்த வம்பனை ` என்றா ரேனும் , ` நீற்று வம்பு அணிந்தவனை ` என்றலே திருவுள்ளம் என்க . மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர் ; தலைகல னாக உண்டு தனியே திரிந்து தவவாண ராகி முயல்வர் ; விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் ; அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல்நஞ்சம் உண்ட அவரே . ( தி .4 ப .8 பா .9) பாந்தள்பூ ணாரம் ; பரிகலங் கபாலம் ; பட்டவர்த் தனம்எருது ; அன்பர் வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை ; மலைமகள் மகிழ்பெருந் தேவி ; சாந்தமே திருநீறு ; அருமறை கீதம் ; சடைமுடி ; சாட்டியக் குடியார் ஏந்தெழி லிதயம் கோயில் ; மாளிகைஏழ் இருக்கையுள் இருந்தஈ சனுக்கே . ( தி . 9 ப .15 பா .2) ` தவளச் - சாம்பலம் பொடி சாந்தெனத் தைவந்து தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த வெள்ளேற் றுழவன் ` ( தி .11 ப .11 பா .10) எனப் பலவிடத்தும் இறைவற்குத் திருநீறு நறுமணப் பூச்சாக அருளிச் செய்யப்படுதல் காண்க . தேவர்களைச் சிவனோடு ஒப்புமை உடையவர்களாக அருளியது அவனைப் பொது நீக்கியுணர மாட்டாதார் கருத்துப் பற்றியாம் . அவர் அங்ஙனங் கருதுதலை , தேவரின் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர் மூவராய் நின்ற தோரார் ; முதலுருப் பாதி மாதர் ஆவதும் உணரார் ; ஆதி அரியயற் கரிய ஒண்ணா மேவரு நிலையும் ஓரார் ; அவனுரு விளைவும் ஓரார் . - சிவஞானசித்தி . சூ .1.49 என்பதனான் அறிக . ` ஒப்பமராச் செம்பொனை ` என்னும் பாடம் சிறவாமை யறிக .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

ஆறணி நீள்முடிமேல் ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன்
சேறணி தண்கழனித் தென்திரு வாரூர்புக்
கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

கங்கையைத் தாங்கிய நீண்ட சடையின் மேல் , பட மெடுத்து ஆடுகின்ற பாம்பைச் சூடுகின்றவனும் பருந்து சூழும் வெள்ளிய தலை ஓட்டில் பிச்சை ஏற்பவனும் , நஞ்சினையுடைய பாம்பை அணிபவனும் ஆகிய இடபக் கொடியைக் கொண்ட எம் பெரு மானை , சேற்றைக் கொண்ட குளிர்ந்த கழனிகளையுடைய அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` சூடி , கொள் ` என்பவற்றிற்குக் கருத்து நோக்கி , இவ்வாறு உரைக்கப்பட்டது . ` நச்சரவு , மேனியில் உள்ளனவாதலின் ` அதனை ஓதியது மிகையாகாமை யறிக .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்
திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே

பொழிப்புரை :

மண்ணுலகத்தை உண்டு உமிழ்ந்த திருமாலும் , சிறந்த தாமரை மலர்மேல் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அணுகுதற்கரிய இறைவனை , இறைவியோடும் மறவாது நினைக்கு மாறும் கண்டு கண் குளிருமாறும் , திண்ணிய , பெரிய மதில் சூழ்ந்த , அழகிய திருவாரூரினுட் சென்று , அடியேன் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` நீர் ` என்னும் பூதத்திற்குத் தலைவன் மாயோன் என்பது பற்றியும் , ` நிலம் ` என்னும் பூதம் நீரில் ஒடுங்கி நீரில் தோன்றுவது என்பது பற்றியும் , மாயோன் , ` மண்ணினை உண்டு உமிழ்ந்தவன் ` எனக் கூறப்படுவன் என்க . ` எண்ணிய ` என்றது . ` செய்யிய ` என்னும் வினையெச்சம் , ` எண்ணிய , கண்குளிர ` என்னும் வினையெச்சங்கள் , வினைச் செவ்வெண்ணாய் நின்றன .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்
பன்னெடுஞ் சொன்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே

பொழிப்புரை :

மின்னல்போலும் , நீண்ட சிவந்த சடையையுடைய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற திருவாரூரை , திரு நாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பி யாரூரன் , நல்ல , நெடிய பேரன்பினால் , பல , சிறந்த சொற்களாகிய மலர்களால் அணிசெய்து சாத்திய பாமாலைகள் பத்தினையும் அங்ஙனமே சாத்த வல்லவர்கள் புண்ணியம் உடையவர்களாய் , பொன்னை முதற் கருவியாக உடைய விண்ணுலகத்தை அடைவார்கள் .

குறிப்புரை :

காதன்மை இறைவனிடத்ததாயினும், இங்கு அவனைத் திருவாரூரிற் சென்று காண்டலாகிய அதன்கண்ணதாகலின், ஆரூரைப் பாடியதாக அருளினார், `கொண்டு` என்றதன் பின், `அணிந்து` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `புண்ணியர்` என்றதனை, முற்றெச்சமாக்கி, முன்னே கூட்டுக. பெருமித மொழியை, `நெடு மொழி` என்றல்போல. இங்கு, இறைவன் வாழ்த்தாகிய பெரு மொழியை, `நெடுஞ்சொல்` என்று அருளினார்.
சிற்பி