திருக்கானப்பேர்


பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும்
சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்
புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள்
பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமரும்
கொண்ட லெனத்திகழுங் கண்டமு மெண்டோளுங்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

அடியேன் , மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவத்தினனாகிய பெருமானை , அவனது , அடியவர்கள் வணங்கு கின்ற திருவடியையும் , ஒளியையுடைய இளைய பிறைச்சூட்டினையும் , சூதாடு கருவிபோலும் , மெல்லிய தனங்களையுடைய உமையவளது கூறாய் விளங்கும் இடப்பாகத்தையும் , ஒளிவிடுகின்ற செந்தாமரை மலர்போலும் திருமேனியையும் , தேவர்கள் ஓலமிட , அதற்கு இரங்கிக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட நினைவுக்குறி நீங்காதிருக்கின்ற , மேகம்போல விளங்குகின்ற கண்டத்தையும் , எட்டுத்தோள்களையும் , அழகிய நல்ல சடையின்மேல் உள்ள அணிகளையும் கண்குளிரக் கண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

அடித்தொழல் , அடியின்கண் தொழுதல் என்க . ` அடித் தொழலும் ` என்று அருளினாரேனும் , ` தொழுதலையுடைய அடியும் ` என , ஏனையவற்றோடு இயைய உரைத்தலே திருவுள்ளமாதல் அறிக . ` சூது `, ` வண்ணம் ` ஆகுபெயர்கள் . ஆகி வருதல் , மிகுந்து வருதல் . அதற்கு , ` ஒளி ` என்னும் வினைமுதல் வருவிக்க . ` வரும் ` என்றது , ` வருவதுபோலும் ` என்னும் பொருட்டு . சடைமேல் உள்ள அணிகள் , பாம்பு , வெண்டலை முதலியன . கார் - நீர் ; ` மிக்க ` என்றது இசை யெச்சம் . ` கொல் ` என்றதற்கு , மேலைத் திருப்பதிகத்துள் உரைத்த வாறே உரைக்க . ஓகாரம் , இரக்கம் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

கூத லிடுஞ்சடையும் கோளர வும்விரவுங்
கொக்கிற குங்குளிர்மா மத்தமும் ஒத்துனதாள்
ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந்
துள்ளுரு காவிரசும் மோசையைப் பாடலும்நீ
ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன்
அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக்
காத லுறத்தொழுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த ` திருக்கானப் பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவுடைய தலைவனை , அடியேன் , என்பால் உள்ள துன்பங்களெல்லாம் கெடு மாறு , அடியவர் உனது பெருமைகளை நினைந்து மனம் உருகி , செறிந்த இசையைப் பாடுதலும் , அவர் நீயேயாகும் பேற்றைப் பெறுதலை உணர்ந்து , அவரோடு அன்பு மிகுந்து , உனது திருவடியை மனம் பொருந்திப் பாடுமாற்றைக் கற்று , உனது குளிர்மிகுந்த சடை முடியையும் , அதன்கண் பொருந்திய கொடிய பாம்பையும் , கொக் கிறகையும் , குளிர்ந்த ஊமத்த மலரையும் , அன்பு மேலும் மேலும் பெருகுமாறு , அகங்கையிற் சிறந்த மலர்களைக் கொண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

` விரவும் ` என்றதனை , ` கோளரவும் ` என்றதற்கு முன்னே வைத்துரைக்க . ` ஓதலுணர்ந்து ` என்றதில் உணர்தல் , அடியாரிடமிருந்து கற்றல் . ` பெருமைக்கு ` என்றது , உருபு மயக்கம் . ` நீ ஆதல் ` என்றது , ஆன்மாச் சிவமாம் நிலையை . இனிய இசையைப் பாடி அடியவர் சிவமாந் தன்மையைப் பெறுகின்றார் என்க . உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள் . - திருக்குறள் - 1106 என்றாற்போல்வதே இறையனுபவமும் ஆதலின் , தொழுந்தோறும் உயிர் இன்புற , அன்பு பெருகுவதால் அறிக . கனவிற் கண்ட காளை வடி வினனை , நனவிற் படர்க்கையாக அருளிச்செய்து காதலுற்றுச் செல் கின்றவர் பெரிதும் முறுகி எழுந்த காதலால் , இடையே அவனை எதிர் பெய்துகொண்டு , முன்னிலையாக இதன்கண் அருளிச் செய்தார் என்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை
நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்
தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத்
தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை மாசறு சோதியனை
மாருத மும்மனலும் மண்டல மும்மாய
கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

நான் உடைமையாகப் பெற்றுள்ள செல்வம்போல எனக்கு நன்மையைத் தருகின்ற மேலானவனும் , தன்னையே வீடு பேறாக உணர்பவரது சொல்நிலையில் நிறைந்து நிற்கும் மங்கல குணத்தினனும் , தேனிடத்தும் , அதன் தெளிவிடத்தும் உள்ள சுவை போல்பவனும் , தேவர்களுக்குத் தலைவனும் , பூக்கள் உயர்ந்து தோன்றுகின்ற முடியை உடையவனும் , வானத்தில் உள்ள சிறந்த சந்திரனும் , குற்றம் அற்ற ஒளியையுடைய கதிரவனும் , காற்றும் , தீயும் , நிலமும் ஆகி நிற்பவனும் ஆகிய மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற , காளை வடிவத்தினனாகிய பெருமானை , ` காட்டில் சிறந்த நடனம் ஆடுபவன் ` என்று சொல்லித் துதித்துத் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

குறிப்புரை :

சொல் நிலையில் நிறைந்திருத்தல் , அவர்களது உணர்விற்கு அகப்பட்டு விளங்கிச் சொல்லாற் சொல்ல நிற்றலாம் . உணராதார்க்கு உணர வாராமையை , ` அதுபழச் சுவைஎன அமுதென அறிதற் கரிதென எளிதென அமரரும் அறியார் ` என்றும் , உணர்ந்தவர்க்கு உணரவருதலை , ` இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு ` என்றும் அருளிச்செய்தவாற்றால் அறிக . ( தி .8 திருவா - திருப்பள்ளி .7) ` அமுது ` என்றது , ` சுவை ` என்னும் அளவாய் நின்றது . ` தெளிவு ` என்றதும் ஆகுபெயரால் , அதன் சுவையையே என்க . ` சோதி ` என்றது , அதனையுடைய கதிரவனை . பூதங்களின் வேறாதல் தோன்ற , மதியையும் கதிரையும் வேறாகவும் , மாருதம் முதலிய வற்றின்பின் , ` ஆய ` என எச்சமாகவும் ஓதினாரேனும் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது . இனி ,` மாருதம் முதலியவை மாய்ந் தொழிந்தகாலைக் கானிடை நடனம் ஆடும் பெருமான் என்று சொல்லித் துதித்து ` என உரைப்பினும் அமையும் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

செற்றவர் முப்புரமன் றட்ட சிலைத்தொழிலார்
சேவக முந்நினைவார் பாவக முந்நெறியும்
குற்றமில் தன்னடியார் கூறு மிசைப்பரிசும்
கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்
மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை
மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக்
கற்றன வும்பரவிக் கைதொழ லென்று கொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப் பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற , காளை வடிவின னாகிய பெருமானை , அவனது , பகைத்தவரது முப்புரங்களை அன்று அழித்த , வில்தொழில் பொருந்திய வீரத்தையும் தன்னை நினைவாரது நினைவின் வண்ணம் நிற்கும் நிலையையும் , அவர்களை நடத்துகின்ற முறையையும் , குற்றமில்லாத அவனது அடியார்கள் சொல்லுகின்ற புகழின் வகைகளையும் , அரையில் உடுக்கின்ற கோவணமும் , பட்டும் , தோலும் ஆகிய உடைகளையும் , வலிமை விளங்குகின்ற திண்ணிய தோள்களையும் , நீறு செறிந்த மார்பின்கண் , பெருமையையுடைய மலைமகள் தழுவியதனால் உண்டாகிய வடுவினையும் , அடியேன் , புகழ்ந்து பாடக்கற்றன பலவற்றாலும் துதித்துக் கைகூப்பி வணங்குதல் எந்நாளோ !

குறிப்புரை :

பாவகம் - நினைவு ; அது , நினைக்கப்படுகின்ற உருவத்தைக் குறித்தது . ` பட்டு , அதள் ` என்றனவும் உடைகளையே யாதலின் , கோவணத்தோடு ஒருங்கெண்ணப்படுவவாயின . ` நீறுதுதை மார்பிடை ` என மாற்றியுரைக்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

கொல்லை விடைக்குழகுங் கோல நறுஞ்சடையிற்
கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே
முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால்
மோக மிகுத்திலகுங் கூறுசெ யெப்பரிசும்
தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந்
திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்
கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப் பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானது , முல்லை நிலத்திற்கு உரிய விடையினது அழகையும் , அழகிய நல்ல சடையின் கண் கொத்தாய் உள்ள பூக்களையும் , மார்பில் கொன்றை மலரின் மாலையையும் , அதன் அருகே ஒரு பாகத்தில் , முல்லை அரும்பின் தன்மையைக் கொண்ட நகையினையும் , மெல்லிய இயல்பினையும் உடையவளாகிய உமாதேவி , காதலை மிகுதியாகக்கொண்டு விளங்கு கின்ற அப்பகுதி தருகின்ற எல்லாத் தன்மைகளையும் , தில்லை நகரில் உள்ள சபையிற் பொருந்தி நின்று ஆடுகின்ற புகழையுடைய நடனத்தை யும் , கையில் உள்ள வலிய மழு , மிக்க தீ என்னும் இவற்றையும் , அடியவர் சாத்தும் மணிவடத்தின் அழகையும் காண்பது எந்நாளோ !

குறிப்புரை :

` விடைக் கழகும் ` என்பது பாடம் அன்று . ` தொத்து ` என்றது , செயற்கைப் பிணிப்பாகிய மாலையை உணர்த்திற்று ; அதனை , மார்பிலணியும் தாராகக் கொள்க . உமாதேவி விளங்கும் பகுதி தருகின்ற தன்மைகள் . ` தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் ` ( தி .8 திருவா . கோத் -18) என்பதில் அம்மைக்கு உரியனவாகக் கூறப்பட்டவை காட்டும் அழகுகள் . நடனம் எவ்விடத்தும் செய்யப்படினும் , அதற்குச் சிறப் பிடம் தில்லையாதல் பற்றி , ` தில்லை நகர்ப் பொதுவுற்று ஆடிய சீர்நடம் ` என்று அருளினார் . ` கைமி? u2970?` என்றது , தாப்பிசையாய் முன்னும் சென்று இயையும் . ` காளையை ` என்னும் இரண்டனுருபை , ` யானையைக் கோட்டைக் குறைத்தான் ` என்புழி , ` யானையை ` என்பதில் உள்ள இரண்டனுருபு போலக் கொள்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

பண்ணுத லைப்பயனார் பாடலும் நீடுதலும்
பங்கய மாதனையார் பத்தியு முத்தியளித்
தெண்ணுத லைப்பெருமான் என்றெழு வாரவர்தம்
மேசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி
நண்ணுத லைப்படுமா றெங்ஙன மென்றயலே
நையுறு மென்னைமதித் துய்யும்வ ணம்மருளுங்
கண்ணுத லைக்கனியைக் காண்பது மென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

தாமரை மலரில் உள்ள திருமகளைப் போலும் மகளிரது , யாழை முறைப்படி யமைத்தலைப் பயன்படச் செய்கின்ற பாடலின் சிறப்பையும் , அதன்கண்ணே அவர்கள் நெடிது நிற்றலையும் , அதற்கு ஏதுவாகிய அவர்களது பத்தியையும் , தான் ஒருவனே வீடு பேற்றை அளித்தலால் , அதனை விரும்புவோர் யாவராலும் உள்ளத்து இருத்தப்படுகின்ற முதற்கடவுள் என்று தன்னை நினைந்து துயிலெழுகின்ற மெய்யுணர்வுடையோர் , அதன் பொருட்டு அவன் முன் வாடிநிற்கும் வாட்டத்தினையும் , யாவர்க்கும் இறைவனாகிய என் தந்தையையும் ஒருங்கு காணுதலைப் பொருந்துமாறு எவ்வாறு என்று , சேய்மையில் நின்று வருந்துகின்ற என்னையும் பொருளாக நினைந்து உய்தி பெறும்படி அருள்செய்யும் கண்ணுதற் கடவுளும் , கனிபோல இனிப்பவனும் ஆகிய , மிக்க நீரையுடைய , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற , காளை வடிவினனாகிய பெரு மானை அடியேன் காணப்பெறுவதும் எந்நாளோ !

குறிப்புரை :

` பங்கய மாதனையார் ` என்றதனை , முதற்கண் வைத்து உரைக்க . ` ஆர் பாடல் ` என்றது . பிறவினை வினைத்தொகை . ` அளித்து ` என்னும் எச்சம் , செயப்பாட்டு வினையாய் நின்ற ` எண்ணு ` என்றதனோடு முடிந்தது . ` விரவி ` என்றதனை , ` விரவ ` எனத் திரிக்க . மகளிரும் ஆடவரும் ஆகிய அடியவரோடு இறைவனை யும் ஒருங்குகாணுதல் எங்ஙனம் என்று ஏக்கற்றதனை அருளிச் செய்தவாறு . ` நைகிற என்னை ` எனப் பாடம் ஓதுதல் சிறவாமை யறிக . ` காண்பதும் ` என்ற உம்மை சிறப்பு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

மாவை யுரித்ததள்கொண் டங்க மணிந்தவனை
வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை
மூவ ருருத்தனதாம் மூல முதற்கருவை
மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்
பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப்
பால்நறு நெய்தயிர்ஐந் தாடு பரம்பரனைக்
காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

யானையை உரித்து அத்தோலைப் போர்வையாகக் கொண்டு , எலும்பை மாலையாக அணிந்தவனும் , வஞ்சனை யுடைய வரது மனத்தின்கண் தனது நெஞ்சினாலும் சிறிதும் அணுகாதவனும் , மும்மூர்த்திகளது உருவமும் தன் உருவமே யாகின்ற முதல்முதற் காரணனும் , ` மூசு ` என்னும் ஒலியுண்டாக உயிர்க்கின்ற பெரிய இடபத்தை நடத்துகின்றவனும் , போலியாகவன்றி உண்மையாகவே தன்னை மனத்துட் பொருந்தப் பற்றுகின்ற அவர்கட்கு அமுதம் போல் பவனும் , பால் , நறுநெய் , தயிர் முதலிய ஐந்திலும் மூழ்குகின்றவனும் , மேலோர்க்கெல்லாம் மேலானவனும் ஆகிய மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளி யிருக்கின்ற , காளை வடிவினனாகிய பெருமானை , அடியேன் , எனக்குக் காவலனாகிய தலைவனாகக் கிடைக்கப்பெறுவது எந் நாளோ !

குறிப்புரை :

` நெஞ்சால் ` என உருபு விரிக்க . நெஞ்சால் அணுகல் , அணுக நினைத்தல் . சிவபிரான் , மூவர் உருவமும் தன் னுருவமேயாக நிற்றல் , அவர்களைத் தன் உருவினின்றும் தோற்றுவித்தலாம் என்க . அப் பெருமான் தனது வலப்புறத்தினின்றும் அயனையும் , இடப்புறத்தி னின்றும் அரியையும் , இருதயத்தினின்றும் அரனையும் தோற்றுவிப் பவன் என்பது , சிவாகமங்களுட் காணப்படும் . கரு - காரணம் . ஆடைக்கு நூல்போல இடைநிலை முதற்காரணனாகாது , ஆடைக்குப் பஞ்சிபோல முதல்நிலை முதற்காரணன் என்றதற்கு , ` மூல முதற்கரு ` என்று அருளிச்செய்தார் . இதனானே , பரமசிவன் , மூவருள் ஒருவனாய உருத்திரனாகாது , அவரின் மேலானவன் என்பது விளங்கு தல் காண்க . இப்பகுதியை , சிவஞான போத முதற் சூத்திரக் கருத்துரைப் பாடியத்துள் பாடியம் உடையார் எடுத்துக் காட்டி விளக்கினமை அறிக . ` மூசு ` என்றது , ஒலிக்குறிப்பு . எருது நடத்துபவனை , ` பாகன் ` என்றல் , மரபு வழுவமைதி . பாவகம் , நாடகமாதலின் , அதற்கு இதுவே பொருளாதல் அறிக . ` தயிர் ` என்றதன்பின் , ` முதலிய ` என்பது எஞ்சி நின்றது ` எனக்குக் காவலாகிய இறை ` என மாற்றி யுரைக்க . ` இறைவ னாவான் , காப்பவனே ` என விதந்தவாறு , ` பதி ` என்னும் வடசொற்கும் பொருள் இதுவேயாதல் உணர்க . ` எய்துவது ` என்றது . நினைவள வினன்றிப் பொருளால் கிடைக்கப் பெறுதல் என்றவாறு .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்
சுண்ட தனுக்கிறவா தென்று மிருந்தவனை
ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா
அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும்
ஆதியை மேதகுசீ ரோதியை வானவர்தம்
கண்டனை யன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

அடியார்களுக்கு எளிய ஒளியுருவினனும் , வேதத்தை ஓதுபவனும் , அத்தூய வேதத்தின் பொருளாய் உள்ள நீதி வடிவினனும் , நீண்ட கடலில் எழுந்த நஞ்சினை உண்டு , அதனால் இறவாது எக்காலத்தும் இருப்பவனும் , பல கற்பங்களில் உலகத்தைப் படைப்பவனாகிய பிரமனும் , அழகிய திருமாலும் அறிய வொண்ணாத தேவனும் , தேவர்களுக்கு ஞானநூலைச் சொல்லிய முதல்வனும் . தேவர்களது கூற்றில் உள்ளவனும் , தனது மேலான தகுதியையுடைய புகழைப் பலரானும் சொல்லப்படுபவனும் ஆகிய , மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளி யிருக்கின்ற , காளை வடிவினனாகிய பெருமானை அடியேன் , அன்போடு சென்று அடையப்பெறுவது எந்நாளோ .

குறிப்புரை :

` இருந்தவன் ` என்றது , ` இருக்கும் தன்மையைப் பெற்ற வன் ` என்றவாறு . இவ்வாறு இயல்பாய் உள்ள தன்மையை , இடையே ஒரு காலத்துப் பெற்றாற்போலக் கூறுதல் , பான்மை வழக்கு , எனவே , ` முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் ` - தொல் - சொல் - 240 என்றது செவ்வன் வழக்கிற்காதலின் , இவ்வாறு இறந்த காலத்தாற் சொல்லப்படுவன . அவ்விலக்கணத்தின் வழுவினவென்றாதல் , வழுவியமைந்தன வென்றாதல் கொள்ளல் கூடாமை யறிக . ` அண்டர் ` என்றது , சிவபெருமானிடம் நேர்நின்றும் , வழிநிலையில் நின்றும் சிவாகமங்களைக் கேட்ட சீவர்களையும் , உருத்திரர்களையும் , பிற தேவர் முதலானவர்களையும் குறிக்கும் . ` ஊழி ` காலவாகு பெயர் ` ஓதியை ` என்றது செயப்பாட்டு வினைப் பெயர் . ` வானவர்தங் கண்டனை ` என்றதனை , ஏனையவற்றோடு இயைய வைத்து உரைக்க . கண்டம் கூறு ; பகுதி . சிவபெருமான் தேவரில் ஒருவன் போலவும் நிற்றலின் , ` வானவர்தம் கண்டன் ` என்று அருளிச் செய்தார் . இனி , கண்டன் - ஒறுப்பவன் எனக் கொண்டு , ` தலைவன் ` எனினுமாம் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

நாதனை நாதமிகுத் தோசைய தானவனை
ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
பற்றுவி டாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை யென்றனையாள் தோழனை நாயகனைத்
தாழ்மக ரக்குழையுந் தோடு மணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே

பொழிப்புரை :

உலகிற்குத் தலைவனும் , நுண்ணிய எழுத்தோசை யும் , பரியதாகிய இசையோசையுமாயும் , ஞானமாகிய விளக்கினது ஒளியாயும் , உடம்பின்கண் உள்ள உயிரும் ! நிலத்தில் வளரும் பயிரு மாயும் நிற்பவனும் , மாதொரு பாகத்தை உடையவனும் . மேலான தகுதியையுடைய , தன் அடியார்களது உள்ளத்தின்மேல் வைத்துள்ள பற்றினைச் சிறிதும் நீங்காதவனும் , குற்றம் இல்லாத கொள்கையை யுடையவனும் , என்னைத் தன் தொண்டினிடத்து ஆளுகின்ற என் தூதனும் , தோழனும் , தலைவனும் ஆகியவனும் , தாழத் தூங்குகின்ற மகரக் குழையையும் தோட்டையும் அணிந்த அழகிய காதினை யுடையவனும் ஆகிய , மிக்க நீரையுடைய , ` திருக்கானப்பேர் ` என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற , காளை வடிவினனாகிய பெரு மானை , நாய்போலும் அடியேன் தலைக்கூடப்பெறுவது எந்நாளோ !.

குறிப்புரை :

` நாதன் ` என்றதிலும் , இரண்டன் உருபு விரிக்க . ` மிகுத்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` பாதனை ` என்பதே பாடம் போலும் ! ` என்றனை ஆள் ` என்பது , ` தூதன் ` என்றது முதலிய மூன்றனோடும் இயையும் . தலைவனாய் இருப்பவனே தூதனாயும் , தோழனாயும் இருக்கும் வியப்பினைப் புலப்படுத்தும் முகத்தால் , அவனது பேரருட்டிறத்தை நினைந்து உருகியவாறு ; அதனை , ` நாயடியேன் ` என்றதனாலும் உணர்க . குழை அணிதல் அப்பனாதலையும் , தோடணிதல் அம்மையாதலையும் குறிக்கும் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்
பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்
உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும்
ஒண்பொழில் நாவலர்கோ னாகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே

பொழிப்புரை :

கரும்பும் , இனிய அமுதமும் போல்பவனாகிய , மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த , ` திருக்கானப்பேர் ` என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற , காளை வடிவினனாகிய பெரு மானை , ` எய்துவது என்று கொலோ ` என்று நினைந்து மனம் உளைந்து , உளம் உருகி , அழகிய , புகழ் பொருந்திய , தண்ணிய தமிழால் துதிக்க முயன்ற அழகிய சோலைகளையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இவ்விசைப் பாடல்கள் பத்தினை யும் பாட வல்லவர்கள் , சிவனடியார்க்கு உள்ள இயல்புகள் அனைத்தையும் எய்தி , எல்லாத் திசைகளும் புகழ நெடிது வாழ்ந்து , பின்பு ஒருகால் பிறவி எய்துவாராயினும் , மண்ணுலகிற்குத் தலைவ ராய் வாழ்தல் திண்ணம் .

குறிப்புரை :

` மனத்து அயரா ` என்றதனால் , அங்ஙனம் அயரு மாறு , மேலைத் திருப்பாடல்களினின்றும் வருவித்து உரைக்கப்பட்டது . ` இருப்பவர்களாய் ` என , எச்சமாக்குக . ` வான் ` என்றது , வீட்டுலக மாகிய சிவலோகத்தை . ` இழிந்திடினும் ` என்று அருளியதனால் , அதன்கட் செல்லுதல் பெறப்பட்டது . சிவபுண்ணியங் காரணமாகச் சிவலோகத்திற் சென்றார் . பின்னும் அதனான் ஆண்டே சிவஞானம் இனிது விளங்கப்பெற்றுச் சிவனைப் பெறுதலே பெரும்பான்மையாக , மீண்டும் இவ்வுலகில் வந்து பிறத்தல் சிறுபான்மையாதலின் , ` வானின் இழிந்திடினும் ` என எதிர்மறை உம்மை கொடுத்து அருளிச்செய்தார் . இனி , ` தவஞ்செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து பவஞ்செய்து பற்ற றுப்பா ராகத் - தவஞ்செய்த நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலை ` - சிவஞானபோதம் . சூ .8 அதி .1 உடையராகிய அவரை , ` மண்டல நாயகராய் வாழ்வர் ` என்றது , ` வறுமையாம் சிறுமை ` இன்றியும் , ` வாழ்வெனும் மைய ` லுட் படாதும் ( சிவஞானசித்தி - சூ -2.91 ) எளிதிற் சிவஞானத்தை எய்தி , சீவன் முத்தராய் வாழ்வர் என்றவாறாம் .
சிற்பி