திருக்கூடலையாற்றூர்


பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

வடியுடை மழுவேந்தி
மதகரியுரி போர்த்துப்
பொடியணி திருமேனிப்
புரிகுழ லுமையோடும்
கொடியணி நெடுமாடக்
கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

கூர்மையையுடைய மழுப்படையை ஏந்தி , மதத்தை யுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு , பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடும் , கொடிகள் நாட்டிய உயர்ந்த மாடங்களையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , திருநீற்றை யணிந்த பெருமான் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது , குறிப்பெச்சம் . ` வடிவுடை ` என்பது பாடமாகாமை அறிந்துகொள்க . ` ஏந்தி , போர்த்து ` என்ற வினையெச்சங்கள் , ` கூடலையாற்றூரில் `, என்புழி எஞ்சிநின்ற , ` உறையும் ` என்பதனோடு முடியும் . ` திருமேனி அடிகள் ` எனக் கூட்டுக . ` வழிபோந்த ` என , ஏழாவதன் தொகைக்கண் வல்லினம் இயல்பாயிற்று . ` அதிசயம் ` என்றது , காரிய வாகுபெயராய் , அதனைத்தரும் செயலை உணர்த்தி நிற்றலின் , ` போந்த ` என்ற பெயரெச்சம் , தொழிற்பெயர் கொண்டது என்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

வையக முழுதுண்ட
மாலொடு நான்முகனும்
பையிள அரவல்குற்
பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக்
கூடலை யாற்றூரில்
ஐயன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

உலகம் முழுதையும் உண்ட திருமாலோடும் . பிரம தேவனோடும் , அரவப் படம்போலும் அல்குலையுடைய , இளைய , பாவைபோலும் உமாதேவியோடும் உடனாகி , கொய்யப்படுகின்ற அழகிய பூக்களையுடைய சோலைகளையுடைய திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன் , இவ்வழியிடை என் முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

` திருமால் முதலிய மூவரோடும் உடனாகி ` என ஒரு படித்தாகவே அருளிச்செய்தாராயினும் , திருமாலும் பிரமனும் பணிந்து நிற்பவராயும் , உமை இறைவரோடு ஒப்ப அருகு வீற்றிருப்பவளாயும் இருப்பர் என்பது பகுத்துணர்ந்து கொள்ளப்படும் என்க . இனி , திருமாலையும் , பிரமனையும் தனது திருமேனியிடத்துக்கொண்டு நிற்றலையே , ஈண்டு , ` உடனாகி ,` என்று அருளினார் எனக் கொள்ளு தலுமாம் . ` நான்முகன் ` என்பதிலும் ஒடுவுருபு விரிக்க . ` அரவப்பை அல்குல் இளம் பாவை ` என , மாறிக் கூட்டியுரைக்க . ` உடன் ` என்றதன்பின் , ` ஆகி ` என்பது , எஞ்சிநின்றது . அவ் வினையெச்சம் , மேலைத் திருப்பாடலில் உள்ள வினையெச்சங்கள் முடிந்தவாறே முடியும் . இவை வருகின்ற திருப்பாடல்களினும் ஒக்கும் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

ஊர்தொறும் வெண்டலைகொண்
டுண்பலி யிடும்என்று
வார்தரு மென்முலையாள்
மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக்
கூடலை யாற்றூரில்
ஆர்வன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

ஊர்தோறும் சென்று , வெள்ளிய தலையோட்டை ஏந்தி , ` பிச்சை இடுமின் ` என்று இரந்துண்டு . கச்சணிந்த , மெல்லிய தனங்களையுடையவளாகிய உமாதேவியோடும் உடனாய் , கூரிய முனையையுடைய மழுவை ஏந்திக் கொண்டு , திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , பேரன்புடையனாகிய பெருமான் , இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

` சென்று , இரந்து ` என்பன சொல்லெச்சங்கள் . ` இரந்து ` என்பது , தன் காரியத்தையும் உடன் உணர நின்றது , ` மங்கையொடும் ` என்ற உம்மை சிறப்பு . ` இரந்துண்ணும் வாழ்க்கையை யுடையவன் , மங்கையொருத்தியை மணந்துகொண்டு , இல்வாழ்க்கையைக் கொண் டிருக்கின்றான் ` என்பது நயம் . அருளுடையனாகிய இறைவனை , பான்மை வழக்கால் , ` அன்பன் ` என்றலும் அமையும் என்னும் திரு வுள்ளத்தால் , ` ஆர்வன் ` என்று அருளிச்செய்தார் . ஆர்வம் - பேரன்பு . இனி , ` ஆர்வத்தால் அடையப்படுபவன் ` என்றும் , ` உயிர்களால் அனுபவிக்கப்படுபவன் ` என்றும் உரைப்பினும் அமையும் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

சந்தண வும்புனலுந்
தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள்
பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

பிறை முதலிய பிறவற்றோடு அழகு பொருந்திய நீரையும் தாங்கியிருக்கின்ற , நீண்ட சடைமுடியையுடையவனாய் , பந்தின்கண் பொருந்திய விரலை யுடையாளாகிய , பாவைபோலும் உமையோடும் உடனாகி , பூங்கொத்துக்கள் பொருந்திய சோலை சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற , அழகிய கருணையை யுடையவனாகிய பெருமான் , இவ்வழியிடை என்முன் போந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

` புனலும் ` என்ற உம்மை எச்சத்தொடு சிறப்பு . ` ஏனையபோலத் தங்குதற்றன்மை இல்லாத நீரையும் தங்கியிருக்கச் செய்கின்ற சடை என , அவனது ஆற்றலை வியந்தருளிச்செய்தவாறு . ` நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை ` ( தி .6 ப .43 பா .1) என்று , திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்தலுங் காண்க . கருணைக்கு அழகாவது , பெரியராயினார்க்கு , அப்பெருமையைச் சிறக்கச் செய்தல் . ` சந்தம் ` என்பது , கடைக்குறைந்து நின்றது .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

வேதியர் விண்ணவரும்
மண்ணவ ரும்தொழநற்
சோதிய துருவாகிச்
சுரிகுழ லுமையோடும்
கோதிய வண்டறையுங்
கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

அந்தணரும் , தேவரும் , மக்களும் வணங்கி நிற்க , நல்ல ஒளியுருவமாய் , சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியோடும் , பூக்களில் மகரந்தத்தைக்கிண்டிய வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன் , இவ்வழி யிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

ஒளியுருவம் , இலிங்க வடிவம் . ` வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர் ` - சிவஞானசித்தி - சூ .2.92 ஆதலின் , ` விண்ணவரும் தொழ ` என்று அருளினார் . வேதியர் மண்ணகத் தேவராதலின் , அவரை வேறெடுத்து விண்ணவர்க்கு முன்னே வைத்து அருளிச் செய்தார் . அவர் உண்மையில் மண்ணகத் தேவராவது , சிவபத்தியுடையராய வழியே என்பது ஈண்டு இனிது விளங்கும் . இவரை , ` செம்மை வேதியர் ` என்று அருளிச் செய்வார் , திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ( தி .3 ப .22 பா .2).

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

வித்தக வீணையொடும்
வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல்
மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ்
கூடலை யாற்றூரில்
அத்தன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

தான் வல்லதாகிய வீணையோடும் , வெள்ளிய முப்புரி நூலை அணிந்து , முத்துப்போலும் வெள்ளிய நகையினை யுடைய உமாதேவியோடும் உடனாகி , பூக்கள் கொத்தின்கண் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளி யிருக்கின்ற எந்தை , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்த வாறு !

குறிப்புரை :

` வீணையொடும் , பூண்டு ` என்ற இரண்டும் , மேலைத் திருப்பாடலிற்போலவே , ` உறைகின்ற ` என்பதனோடு முடிதலின் , ` வினையொடும் ` என்றதனை , ` கைப்பொருளொடும் வந்தான் ` என்பதுபோலக் கொள்க .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

மழைநுழை மதியமொடு
வாளர வுஞ்சடைமேல்
இழைநுழை துகிலல்குல்
ஏந்திழை யாளோடும்
குழையணி திகழ்சோலைக்
கூடலை யாற்றூரில்
அழகன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

மேகத்தில் நுழைகின்ற சந்திரனையும் , கொடிய பாம்பையும் சடைக்கண்வைத்து , நுண்ணிய இழைபொருந்திய உயர்ந்த உடையை அணிந்த அல்குலையும் , தாங்கிய அணிகலங் களையும் உடைய உமாதேவியோடும் உடனாகி , தளிர்களது அழகு விளங்குகின்ற சோலைகளையுடைய திருக்கூடலையாற்றூரில் எழுந் தருளியிருக்கின்ற அழகன் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் ஏழைமை இருந்தவாறு !

குறிப்புரை :

` சடைமேல் ` என்பதன்பின் , ` வைத்து ` என்பது , எஞ்சிநின்றது . ` மழை நுழை மதியம் ` என்றது அதனது இனிய பண்பினையும் ` வாளரவம் ` என்றது அதனது கடிய பண்பினையும் எடுத்தோதி , அவ்விரண்டனையும் உடங்கியைந்து வாழவைத்தான் என வியந்தருளியவாறு . ` இழை நுழை துகிலல்குல் ` என்றது , தான் தோலை உடையாகக் கொள்ளுதலையும் , ` ஏந்திழையாள் ` என்றது , தான் பாம்பையே அணிகலங்களாக அணிதலையும் குறிப்பினால் விளக்கி , நகைதோற்றுவித்தன .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

மறைமுதல் வானவரும்
மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும்
பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங்
கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும் , அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும் , பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க , பிறைபோலும் நெற்றியை யுடைய உமாதேவியோடும் , பூதப் படையோடும் , திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான் , இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதேயொழிந்தேன் ; இஃதே என் அறியாமை இருந்தவாறு !

குறிப்புரை :

முதன்மையை , ` முதல் ` என்றே அருளினார் . பொருள்கள் பலவாகலின் அவற்றது முதன்மைகளும் பலவாயின . இம் முதன்மைகளையுடைய தேவரை , ` அதிதெய்வம் ` என்ப . முதன்மைத் தேவர் பொருள்தோறும் உண்மையை , தொல்காப்பியத்து , ` கால முலகம் ` என்பது முதலிய மூன்று சூத்திரங்களானும் உணர்க ( சொல் -57,58,59 ). ` பேய்க்கணம் ` என்றது , உலகத்துப் பேயினை . அவைதாமும் சில பயன்கருதி இறைவனை வழிபடும் என்க . ` குறள் படை ` என , ளகரந்திரியாது நின்றது , இசை நோக்கி .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

வேலையின் நஞ்சுண்டு
விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள்
பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக்
கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த
அதிசயம் அறியேனே

பொழிப்புரை :

கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்டு விடையை ஊர்ந்து , பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு , திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான் , இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை , அடியேன் அறியாதே யொழிந்தேன் ; இஃதே என் அறியாமை இருந்தவாறு !

குறிப்புரை :

` வேலையின் ` என்றதன்பின் ` எழுந்த ` என்பதும் , ` உடன் ` என்றதன்பின் , ` ஆய ` என்பதும் எஞ்சி நின்றன . ` உடன் ஏய் ` கோலம் என ஓதுதல் சிறக்கும் .

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

கூடலை யாற்றூரிற்
கொடியிடை யவளோடும்
ஆட லுகந்தானை
அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால்
நாவல வூரன்சொல்
பாடல்கள் பத்தும்வல்லார்
தம்வினை பற்றறுமே

பொழிப்புரை :

திருக்கூடலையாற்றூரில் , கொடிபோலும் இடையினையுடையவளாகிய உமாதேவியோடும் , அருள் விளை யாட்டை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , ` அவன் செய்த இச்செயல் அதிசயம் ` என்று சொல்லி , ஆராய்ந்த இனிய தமிழால் , திருநாவலூரனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களது வினை , பற்றறக் கெடுதல் திண்ணம் .

குறிப்புரை :

தம்பாற் செய்த திருவிளையாடலை நினைக்கின்றாராத லின், `ஆடல் உகந்தானை` என்று அருளிச்செய்தார். உகத்தல், அதனோடு இருத்தலை உணர்த்திற்று. `என்று சொல் பாடல்கள்` என இயையும்.
சிற்பி