திரு வன்பார்த்தான் பனங்காட்டூர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

விடையின்மேல் வருவானை
வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை
யாவர்க்கும் அறிவொண்ணா
மடையில்வா ளைகள்பாயும்
வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச்
சாராதார் சார்வென்னே

பொழிப்புரை :

இடபத்தின்மேல் ஏறி வருபவனும் , வேதத்தின் பொருளாய் உள்ளவனும் , தன்னை அடைந்தால் , அங்ஙனம் அடைந் தார்மாட்டு , அன்புடையனாகின்றவனும் ஆகிய , நீர் மடைகளில் வாளை மீன்கள் துள்ளுகின்ற திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற , யாவராலும் அறியவொண்ணாத , சடைமுடி யின்கண் கங்கையைத் தாங்கியுள்ள பெருமானை அடையாதவரது அடைவுதான் என்னே !

குறிப்புரை :

` பிறவற்றை அடையும் அவர்தம் அடைவுகள் , யாதொரு பயனையும் தாரா ` என்றவாறு . சார்தல் , எவற்றையேனும் தமக்குப் பயன்தரும் பொருளாக உணர்ந்து , அவற்றிற் பற்றுச் செய்தல் . சிவபிரானையன்றி ஏனைய பொருள்கள் யாவும் , என்றும் எவ் விடத்தும் நின்று பயன்தருவனவாகாமையே யன்றி , இடரையும் விளைப்பனவாதலையும் , சிவபிரானது நிலைபேற்றினையும் , அவனது பேரின்பத்தினையும் உணரமாட்டாதார் , பிற பிற பொருள் களைத் தமக்குப் பயன் தருவனவாக உணர்ந்து , முன்னர்ச் சிலவற்றைப் பற்றிப் பின்னர் அவற்றை விடுத்து வேறு சிலவற்றைப் பற்றி , இவ் வாறே காலமெல்லாம் அலமந்து போதலை நினைந்து , ` இவர் பற்றும் பற்றுத்தான் என்னே ` என இரங்கி அருளிச்செய்தார் . ` இங்ஙனம் அவர் அலமருதற்குக் காரணம் அவரது அறியாமை யன்றி வேறில்லை ` என்பது திருவுள்ளம் . இவை , வருகின்ற திருப்பாடல்கள் எல்லா வற்றிற்கும் ஒக்கும் . ` சார்பென்னே ` என்பதும் பாடம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

அறையும்பைங் கழலார்ப்ப
அரவாட அனலேந்திப்
பிறையுங்கங் கையுஞ்சூடிப்
பெயர்ந்தாடும் பெருமானார்
பறையுஞ்சங் கொலியோவாப்
படிறன்றன் பனங்காட்டூர்
உறையுமெங் கள்பிரானை
உணராதார் உணர்வென்னே

பொழிப்புரை :

ஒலிக்கின்ற , பசிய பொன்னாலாகிய கழல்கள் கலிப்பவும் , அணியப்பட்ட பாம்புகள் சுழன்று ஆடவும் , கையில் நெருப்பை ஏந்தி , தலையில் பிறையையும் கங்கையையும் அணிந்து கொண்டு , அடிபெயர்ந்து நின்று நடனம் ஆடுகின்ற பெருமானாகிய , யாவராலும் அறியவொண்ணாமையிற் கள்வனாய் , முழங்குகின்ற பறைகளும் , சங்குகளும் ஒலித்தல் ஒழியாத , தனது திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனை உணரா தாரது உணர்வுதான் என்னே !

குறிப்புரை :

` அறையும் பைங்கழல் ஆர்ப்ப ` என்றருளிச் செய்தது போலவே , ` ஆர்பறையும் சங்கு ஒலியோவா ` என்று அருளிச் செய்தார் என்க . ஆர்பறை , ஆர்க்கும் - முழங்கும் பறை . ` பெயர்ந்து ` எனச் சினைவினை முதல்மேல் நின்றது , ஒரு பொருள் மேற் பலபெயர் வருவழிப் பெயர் தோறும் உருபு கொடுத்துக் கூறுதலும் , இறுதிக்கண் மட்டுமே உருபு கொடுத்துக் கூறுதலும் ஆகிய இரண்டனுள் , ஈண்டு , இறுதிக்கண் மட்டுமே உருபு கொடுத்து , ` பெருமான் , படிறன் , எங்கள் பிரானை உணராதார் ` என்று அருளிச்செய்தார் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

தண்ணார்மா மதிசூடித்
தழல்போலுந் திருமேனிக்
கெண்ணார்நாண் மலர்கொண்டங்
கிசைந்தேத்து மடியார்கள்
பண்ணார்பா டலறாத
படிறன்றன் பனங்காட்டூர்
பெண்ணாணா யபிரானைப்
பேசாதார் பேச்சென்னே

பொழிப்புரை :

குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனை முடிமேற் சூடி , கள்வனாய் , நெருப்புப்போலும் தனது திருமேனிக்கு உரியனவாக எண்ணுதல் பொருந்திய , அன்று மலர்ந்த மலர்களைக்கொண்டு , மனம் பொருந்தித் துதித்து வழிபடும் அடியார்களது பண்ணிறைந்த பாடலின் ஒலி நீங்காத , தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளி யிருக்கின்ற , பெண்ணும் ஆணும் ஆய உருவத்தினனாகிய பெரு மானைச் சொல்லாதவரது சொல்தான் என்னே !

குறிப்புரை :

` திருமேனிக்கு ` என்றதன்பின் , ` உரியனவாக ` என்பது எஞ்சி நின்றது . ` ஏத்தும் ` என்றது , ` ஏத்திவழிபடும் ` எனப் பொருள் தந்தது . சொல்லுதல் , பெயர்கூறுதலும் புகழ்தலும் முதலியனவாம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

நெற்றிக்கண் ணுடையானை
நீறேறுந் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக்
கோணாதார் மனத்தானைப்
பற்றிப்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்றே றும்பிரானைப்
பேசாதார் பேச்சென்னே

பொழிப்புரை :

நெற்றியில் கண்ணை யுடையவனும் , திருநீறு பொருந்திய திருமேனியை உடையவனும் , குற்றம் இல்லாத இயல்பை யுடையவனும் , கோடுதல் இல்லாதவரது மனத்தில் உள்ளவனும் , பாம்பைப் பிடித்து அரையிற் கட்டிய கள்வனும் ஆகிய , தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற , எருது ஒன்றின்மேல் ஏறுகின்ற கடவுளைச் சொல்லாதவரது சொல்தான் என்னே !

குறிப்புரை :

` பெற்றம் ` என்பது கடைக்குறைந்து நின்றது . ` ஒன்று ` என்றது , ` ஒற்றை எருது பயன்படாது ` என்னுங் குறிப்பினது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

உரமென்னும் பொருளானை
உருகிலுள் ளுறைவானைச்
சிரமென்னுங் கலனானைச்
செங்கண்மால் விடையானை
வரமுன்னம்அருள்செய்வான்
வன்பார்த்தான்பனங்காட்டூர்ப்
பரமன்எங் கள்பிரானைப்
பரவாதார் பரவென்னே

பொழிப்புரை :

` ஞானம் ` என்று சொல்லப்படும் பொருளாய் உள்ளவனும் , உள்ளம் அன்பால் உருகினால் , அதன் கண் நீங்காது தங்குகின்றவனும் , தலை ஓடாகிய உண்கலத்தை உடையவனும் , சிவந்த கண்களை யுடைய பெரிய இடப வாகனத்தை உடையவனும் , தன்னை வழிபடுவார் விரும்பும் வரத்தை விரைந்து அருளுபவனும் , மேலானவனும் ஆகிய , திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளி யிருக்கின்ற எங்கள் இறைவனைத் துதியாதவரது துதிதான் என்னே !

குறிப்புரை :

` உருகிலுள் உறைவானை ` என்றதனை ` உள்ளம் உருகில் உடனாவார் ` ( தி .2 ப .111 பா .3) என்பதனோடு வைத்து நோக்குக . இதனையே , ` உள்ளம் உருகில் உடனாவர் அல்லது தெள்ள அரியரென் றுந்தீபற சிற்பரச் செல்வரென் றுந்தீபற ` - திருவுந்தியார் 7 என்று மெய்ந்நூல் கூறிற்று . பரவுதல் - முன்னிலையாகத் துதித்தல் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

எயிலார்பொக் கம்மெரித்த
எண்டோள்முக் கண்ணிறைவன்
வெயிலாய்க்காற் றெனவீசி
மின்னாய்த்தீ யெனநின்றான்
மயிலார்சோ லைகள்சூழ்ந்த
வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக்கட்
பயிலாதார் பயில்வென்னே

பொழிப்புரை :

பொலிவு நிறைந்த சில மதில்களை எரித்தவனும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடைய கடவுளும் , வெயிலாய்க் காய்ந்து , காற்றாய் வீசி , மின்னாய் மின்னி , தீயாய் எரிந்து நிற்பவனும் ஆகிய , மயில்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் நீங்காதிருக்கும் பெருமானுக்குச் செய்யும் தொண்டிற் பயிலாதவரது பயிற்சிதான் என்னே !

குறிப்புரை :

` பொக்கம் ஆர் எயில் ` என மாற்றிப் பொருள் கொள்க . பொக்கம் - பொலிவு . இனி , ` ஆர் ` என்றதனைப் பலர்பால் ஈறாகவும் , ` பொக்கம் ` என்றதனை , பொய் எனவுங் கொண்டு , ` பொக்கத்தார் எயில் ` என வைத்து உரைத்தலுமாம் . ` காற்றென வீசி ` என்றதனால் , ஏனையவற்றிற்கும் அவ்வாறு உரைத்தல் திருவுள்ளமாயிற்று .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மெய்யன்வெண் பொடிபூசும்
விகிர்தன்வே தமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக்
காலன்கா லம்மறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை
அறியாதார் அறிவென்னே

பொழிப்புரை :

மெய்ப்பொருளாய் உள்ளவனும் , வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற , வேறுபட்ட இயல்பினனும் , வேதத்திற்குத் தலை வனும் , கையில் மான் மழுக்களை ஏந்துபவனும் , காலனது காலத்தை இடைமுரிவித்தவனும் , படத்தைக் கொண்ட பாம்பினை அரையின் கண் கட்டியுள்ள கள்வனும் , யாவர்க்கும் தலைவனும் ஆகிய தனது திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே !

குறிப்புரை :

` மெய்யின் வெண்பொடி பூசி ` எனப் பாடம் ஓதுதலு மாம் . ` காலன் ` என்பது , ` காலத்திற்கு முதல்வன் ` என்பதனால் வந்த காரணக்குறியாகலின் , ` காலன் காலம் அறுத்தான் ` என்றது . ` காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும் , ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வனாயினமையும் , சிவபிரானது ஆணையான் அன்றித் தானே ஆயினான் அல்லன் ` என்பதும் , ` அம்முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் ஒழுகினமையின் , இடை முரிவிக்கப் பட்டான் ` என்பதும் , ` இதனான் எல்லாவற்றையும் தன் இச்சை வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே ` என்பதும் உணர்த்தி யருளியவாறாயிற்று .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

வஞ்சமற்ற மனத்தாரை
மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச்சீ றடியாளைப்
பாகம்வைத் துகந்தானை
மஞ்சுற்ற மணிமாட
வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்தெங் கள்பிரானை
நினையாதார் நினைவென்னே

பொழிப்புரை :

வஞ்சனையற்ற தூய மனம் உடையவரை என்றும் மறவாதவனும் , பிறப்பில்லாதவனும் , செம்பஞ்சு ஊட்டிய சிறிய அடிகளை யுடையாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளவனும் ஆகிய , மேகங்கள் பொருந்திய , மணிகள் இழைத்த மாடங்களையுடைய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரிலும் , எங்கள் நெஞ்சத்திலும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நினையாதவரது நினைவுதான் என்னே !

குறிப்புரை :

` மறவாத ` என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது . ` வைத்து உகந்தானை ` என்றதனை , ` உகந்து வைத்தானை ` என மாற்றி உரைக்க . இறைவனுக்கு அண்டத்தில் இடமாவது திருக்கோயிலும் , பிண்டத்தில் இடமாவது அடியவர் நெஞ்சமும் என்பதனை , ` சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் ` ( தி .8 திருக்கோவையார் - 20) என்பதனானும் உணர்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

மழையானுந் திகழ்கின்ற
மலரோனென் றிருவர்தாம்
உழையாநின் றவருள்க
உயர்வானத் துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர்
பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற் கடிமைக்கட்
குழையாதார் குழைவென்னே

பொழிப்புரை :

மேகம்போலும் நிறத்தினனாகிய திருமாலும் , மலரில் இருப்பவனாகிய பிரமனும் என்ற இருவரும் பணி செய்கின்ற வராய் நினைந்து நிற்க , உயர்ந்த வானத்தினும் உயர்ந்து நிற்பவனும் , எல்லாரினும் பழையவனும் ஆகிய , திரு வன்பார்த்தான் பனங் காட்டூரைத் தனது ஊராகக் கொண்டு விளங்குகின்ற , குழையணிந்த காதினையுடைய பெருமானுக்குத் தொண்டுபடுதலில் மனம் நெகிழாத வரது மனநெகிழ்ச்சிதான் என்னே !

குறிப்புரை :

` உழையா நின்றவராய் ` என , எச்சமாக்குக . ` உயர் வானம் ` என்றது , வானத்தினது இயல்பை விதந்தவாறு . அதனினும் உயர்தல் , சிவலோகத்தில் விளங்குதல் . ` குழைக் காதன் ` என மிகற் பாலதாகிய ககர ஒற்று , தொகுத்தலாயிற்று .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

பாரூரும் பனங்காட்டூர்ப்
பவளத்தின் படியானைச்
சீரூருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் னடித்தொண்டன்
அடியன்சொல் அடிநாய்சொல்
ஊரூரன் உரைசெய்வார்
உயர்வானத் துயர்வாரே

பொழிப்புரை :

தனது பெயர் நிலம் முழுதும் பரவிய திரு வன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற பவளம் போலும் உருவத்தையுடைய பெருமானை , புகழ்மிக்க திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது பெயரைத் தலையில் வைத்துள்ள , அப்பெருமானுக்கு அடித்தொண்டு செய்யும் அடியவ னாகிய , அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை , அவரவர் ஊரின்கண் உரைசெய்வாரும் சிவ லோகத்தில் உயர்வு பெற்று விளங்குவர் .

குறிப்புரை :

`திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த` என்றது, `ஆரூரன்` எனப் பெயர்பெற்றதன் காரணத்தை விளக்கிய வாறு. அடியவர்தாம் பல திறத்தராகலின், `அடித்தொண்டன் அடியன்` என்று அருளினார். `நாய்` என்றது ஆகுபெயராய் உயர் திணை மேல் நின்றமையின், `நாய்ச்சொல்` எனச் சகரம் மிகாதாயிற்று. `ஊரான்` என்பது குறுகி நின்றது; அது வேற்றுமை மயக்கம். `இத் தலத்தையடைந்து பாடுவோரேயன்றி, அவரவர் இடத்திருந்தே பாடு வோரும் பயன்பெறுவர்` என்றவாறு. `உரை செய்வார்` என்றதில், இழிவு சிறப்பும்மை தொகுத்தல். `சொல்` என்னும் ஆகுபெயர் அடுத்து வந்தது.
சிற்பி