திருப்பனையூர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

மாட மாளிகை கோபு ரத்தொடு
மண்ட பம்வள ரும்வ ளர்பொழில்
பாடல் வண்டறையும் பழ னத்திருப் பனையூர்த்
தோடு பெய்தொரு காதி னிற்குழை
தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்
றாடு மாறுவல்லா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

உயர்ந்த மேல்மாடங்களும் , சிறந்த மாளிகைகளும் , கோபுரங்களும் , மண்டபங்களும் நாளும் நாளும் பெருகுகின்ற , ஓங்கி வளர்கின்ற சோலைகளில் இசைபாடுதலை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற , நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளி யிருக்கின்ற , ஒருகாதிற் குழை தூங்க , மற்றொரு காதினில் தோட்டினை இட்டு , அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடுமாறு வல்லாராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையவர் .

குறிப்புரை :

` ஒடு ` எண்ணிடைச் சொல் . ` வளரும் , அறையும் ` என்ற பெயரெச்சங்கள் அடுக்கி , ` திருப்பனையூர் ` என்ற ஒரு பெயர் கொண்டன . ` பழனம் ` என்ற விதப்பால் , ` நல்லன ` என்பது பெறப் பட்டது . ` ஆடுமாறு வல்லார் ` என்பது ஒருபெயர்த் தன்மைத்தாய் , ` திருப்பனையூர் ` என்றதனோடு , ஏழாம் வேற்றுமைத் தொகைபடத் தொக்கது . வருகின்ற திருப்பாடல்களினும் இவ்வாறே கொள்க . ` யாவரினும் மிக்க ` என்பது இசையெச்சம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

நாறு செங்கழு நீர்ம லர்
நல்ல மல்லிகை சண்ப கத்தொடு
சேறுசெய் கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
நீறு பூசிநெய் யாடித் தம்மை
நினைப்பவர் தம்ம னத்த ராகிநின்
றாறு சூடவல்லா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

மணம் வீசுகின்ற செங்கழுநீர் மலரையும் , நல்ல மல்லிகை மலரையும் , சண்பக மலரையும் , சேறு செய்யப்பட்ட கழனி யாகிய வயல்களையும் உடைய திருப்பனையூரில் எழுந்தருளி யிருக்கின்ற , நீற்றைப் பூசி நெய்யில் மூழ்கி , தம்மை நினைப்பவரது மனத்தில் உறைபவராய் நிற்பவரும் , நீரை முடியில் தாங்குகின்றவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

மலர் என்றதன் ஈற்றுக் குற்றொற்றசையே , இசை வகையாற் சீராயிற்று . செங்கழுநீர் மலர் , முதலியன , அவற்றையுடைய கொடி முதலியவற்றைக் குறித்தலின் ஒடுக்கொடுத்துப் பிரித்தருளி னார் . ` சேறு செய் கழனி ` என்றது , பழனத்தின் பொதுமை நீக்கிற்று . ` நெய்யாடி தன்னை ` என்பதும் , ` மனத்தனாகி ` என்பதும் பாடம் அல்ல .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

செங்கண் மேதிகள் சேடெ றிந்து
தடம்ப டிதலிற் சேலி னத்தொடு
பைங்கண் வாளைகள்பாய் பழ னத்தி ருப்பனையூர்த்
திங்கள் சூடிய செல்வ னாரடி
யார்தம் மேல்வினை தீர்ப்ப ராய்விடில்
அங்கிருந் துறைவா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய எருமைகள் , வயலைச் சேறாக்கிக் குளங்களில் சென்று வீழ்தலினால் , அங்குள்ள கயல்மீனின் கூட்டமும் , பசிய கண்களையுடைய வாளை மீன்களும் துள்ளி வீழ்கின்ற வயல்களை யுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக் கின்ற , சந்திரனைச் சூடிய செல்வனார் , தம் அடியார் மேல் வருகின்ற வினையைத் தீர்க்கின்றவராகிவிடுவாராயின் , அத்தலத்தில் நீங்காது தங்கி வாழ்கின்ற அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

` தீர்ப்பராய் விடில் ` என்ற செயினென் எச்சம் , ` நீரின்றமையா துலகெனின் ` ( குறள் -20) என்றாற்போல , தெளிவுப் பொருட்கண் வந்தது . இறைவரது திருமேனி யழகினை வியந்தருளிச் செய்வார் , இடையே , அவரது திருவருள் அழகினையும் வியந்தருளிச் செய்தார் என்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

வாளை பாய மலங்கி ளங்கயல்
வரிவ ராலுக ளுங்க ழனியுள்
பாளை ஒண்கமுகம் புடை சூழ்தி ருப்பனையூர்த்
தோளும் ஆகமும் தோன்ற நட்டமிட்
டாடு வாரடித் தொண்டர் தங்களை
ஆளு மாறுவல்லா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

வாளை மீன்கள் துள்ள , மலங்கும் , இளமையான கயலும் , வரிகளையுடைய வராலும் ஆகிய மீன்கள் பிறழ்கின்ற கழனிகளில் பக்கம் எங்கும் , பாளையையுடைய கமுக மரங்கள் சூழ்ந் துள்ள திருப்பனையூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற , திரண்ட தோள் களும் , அகன்ற மார்பும் பொலிவுற நடனத்தை அமைத்து ஆடுபவரும் , தம் அடிக்குத் தொண்டராயுள்ளாரை ஆளுமாறு வல்லவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

` கமுகம் ` என்றதில் , அம் அல்வழிக்கண் வந்த சாரியை . ` தோளும் ஆகமும் தோன்ற ` என்ற விதப்பு , ` திரண்ட தோள் ` ` அகன்ற ஆகம் ` என்பவற்றைத் தோற்றுவித்தது . நட்டம் இட்டு ஆடுதல் , நடன முறைப்படி ஆடுதல் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கொங்கை யார்பல ருங்கு டைந்ந்
தாட நீர்க்குவ ளைம லர்தரப்
பங்க யம்மலரும் பழ னத்தி ருப்பனையூர்
மங்கை பாகமும் மாலொர் பாகமுந்
தாமுடையவர் மான்ம ழுவினொ
டங்கைத் தீயுகப்பா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

மகளிர் பலரும் மூழ்கி விளையாடுதலினால் , குளத்து நீரில் குவளைப் பூக்கள் மலர , அவற்றிற்கு எதிராகத் தாமரை மலர்கள் மலர்கின்ற வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளி இருக்கின்ற , உமையையுடைய ஒரு பாகத்தையும் , திருமாலை உடைய ஒரு பாகத்தையும் உடையவரும் , அகங்கையில் , ` மான் , மழு , தீ ` என்னும் இவற்றை விரும்பி ஏந்துபவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

` கொங்கையார் ` என்றது , ` மகளிர் ` என்றவாறு . ` குளம் ` என்பது , ஆற்றலான் வந்தது . ` ஓர் ` என்றதனை , ` மங்கை ` என்றதன் பின்னுங் கூட்டுக . மங்கை ஓர் பாகம் உடைமையும் , மால் ஓர்பாகம் உடைமையும் வேறு வேறு நிலைகளாதலின் , அவற்றை ஏற்ற பெற்றியான் உடையவர் எனக்கொள்க . மங்கையும் , மாலும் இருத்தல் இடப்பாகம் ஒன்றிலே என்பதும் உணர்க . ` குடைந்ந் தாட `, என , ஒற்றளபெடை கொள்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

காவி ரிபுடை சூழ்சோ ணாட்டவர்
தாம்ப ரவிய கருணை யங்கடற்
பாவி ரிபுலவர் பயி லுந்தி ருப்பனையூர்
மாவிரிமட நோக்கி அஞ்ச
மதக ரியுரி போர்த்து கந்தவர்
ஆவி லைந்துகப்பா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

பக்கம் எங்கும் காவிரி நதி சூழ்ந்த சோழநாட்டில் உள்ளவர்கள் துதிக்கின்ற கருணைக் கடலாய் , பாக்களை விரித்துப் பாடுகின்ற புலவர்கள் பலகாலும் சொல்லும் திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , மான் தோல்வியுறுகின்ற பார்வையை யுடையவளாகிய உமாதேவி அஞ்சுமாறு , மதம் பொருந்திய யானை யினது தோலை விரும்பிப் போர்த்தவரும் , பசுவிற் றோன்றுகின்ற ஐந்தினை விரும்பி மூழ்குகின்றவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையார் .

குறிப்புரை :

` கடல் ` என்றதன் பின்னர் , ` ஆய் ` என்பது வருவிக்க . ` கருணைக் கடலாய் ` என்பதன் கருத்து , ` கடல்போலும் கருணையை உடையவராய் ` என்பதாதல் வெளிப்படை . ` கருணையங்கடலப் - பாவிரி ` என்பது பாடம் அன்று . ` பரவிய ` என்றதற்குப்பின் உள்ள இப்பகுதி , சில பதிப்புக்களில் காணப்படவேயில்லை ; அவைகளில் முதலடி , ` பரவிய ` என்றே முடிகின்றது . ` மா இரி ` எனப் பிரிக்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

மரங்கள் மேல்மயி லால மண்டப
மாடமா ளிகை கோபு ரத்தின்மேல்
திரங்கல் வன்முகவன் புகப் பாய்தி ருப்பனையூர்த்
துரங்கன் வாய்பிளந் தானுந் தூமலர்த்
தோன்ற லும்மறி யாமை தோன்றிநின்
றரங்கி லாடவல்லா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

மரக்கிளைகளின்மேல் நின்று மயில்கள் ஆட , மண்டபம் , மாடம் , மாளிகை , கோபுரம் இவைகளின்மேல் , தோல் சுருங்கிய முகத்தையுடைய குரங்குகள் தாவுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , குதிரை உருவங்கொண்டு வந்த , ` கேசி ` என்னும் அசுரனது வாயைப் பிளந்து அழித்த திருமாலும் , தூய மலரின்கண் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அறியாதபடி விளங்கி நின்று , மன்றில் நடனம் ஆட வல்லாராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

பலா முதலிய பெரிய மரங்களின் கிளைகளில் நின்று மயில் ஆடுதல் உண்டு என்பதை இலக்கியங்களிலும் காணலாகும் . ` வலிமுகம் ` என்பது குரங்கின் பெயர்களில் ஒன்றாதலின் , ` வன்முகவன் ` என்றார் . ` முகவன் ` என்றதை , ` கடுவன் , அலவன் ` என்பனபோலக் கொள்க . திருமால் கண்ணனாய் இருந்த காலத்து , கேசி என்னும் அசுரனை அழித்த வரலாற்றை , பாகவதத்துட் காண்க . ` துரங்க வாய் பிளந்தானும் ` என்பதும் , ` அறியாமற்றோன்றி நின்று ` என்பதும் பாடங்கள் . ` அறியாமை ` என்றது , ` அறியாத தன்மை யுடையனாய் ` என்னும் பொருளது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

மண்ணி லாமுழ வம்ம திர்தர
மாட மாளிகை கோபு ரத்தின்மேல்
பண்ணி யாழ்முரலும் பழ னத்தி ருப்பனையூர்
வெண்ணி லாச்சடை மேவிய
விண்ண வரொடு மண்ண வர்தொழ
அண்ண லாகிநின்றா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

மாடம் , மாளிகை , கோபுரம் இவைகளில் , மண் பொருந்திய மத்தளம் அதிர , யாழ்கள் பண்களை இசைக்கின்ற , நல்ல வயல்கள் சூழ்ந்த திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , வெண்மையான சந்திரன் சடைமேல் பொருந்தப்பட்ட , விண்ணவரும் மண்ணவரும் தொழுமாறு தலைவராகி நின்றவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

மத்தளத்திற் பூசப்படுகின்ற மண்ணினை , ` மார்ச்சனை ` என்ப . ` மண்ணெலாம் ` என்பது பாடம் அன்று . ` பண்ணியாழ் ` என்பதில் உள்ள இகரம் , சாரியை . இனி , ` பண்ணி ` என வினை யெச்சமாகக்கொண்டு , ` யாழ் பண்ணப்பட்டு முரலும் ` என்றும் , ` பண்ணிய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று எனக்கொண்டு , பண்ணப்பட்ட யாழ் இசையை முரலும் , என்றும் உரைத்தலுமாம் . ` சடை ` என்றதன்பின் , ` மீது ` என்பதுபோல்வதொரு தேமாச் சீர்சொல் விடப்பட்டதுபோலும் !

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

குரக்கி னங்குதி கொள்ளத் தேனுகக்
குண்டு தன்னயற் கெண்டை பாய்தரப்
பரக்குந் தண்கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொ டைந்தலை
தோளி ருபது தாள்நெ ரிதர
அரக்கனை யடர்த்தா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

குளத்தினுள் பூக்களில் உள்ள தேன் சிந்தும்படி குரங்கின் கூட்டம் குதிக்க , அவற்றின் அருகில் கெண்டை மீன் துள்ளும் படி பரந்திருக்கின்ற , குளிர்ந்த வயல்களாகிய பழனத்தையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , இரக்கமில்லாதவராய் , அரக்கனாகிய இராவணனை அவனுடைய பத்துத் தலைகளும் , இருபது தோள்களும் நெரியும்படி , தமது காலால் நெருக்கியவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

குண்டு - ஆழம் ; அஃது அதனையுடைய குளத்தைக் குறித்தது . ` குண்டு தண்வயல் ` என்னும் பாடம் சிறவாமை அறிக . ` தாளால் ` என உருபு விரித்து , ` அடர்த்தார் ` என்றதன் முன்னர்க் கூட்டுக .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர்
மாத வர்வள ரும்வ ளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயி லுந்திருப் பனையூர்
வஞ்சி யும்வளர் நாவ லூரன்
வனப்ப கையவ ளப்பன் வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பா ரவ ரேய ழகியரே

பொழிப்புரை :

வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது பங்கை உடையவராய் , பெரிய தவத்தவர்கள் மிகுகின்ற , வளர்கின்ற சோலைகளையுடைய செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடிகளை யுடையவராகிய மகளிர் , ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , நொச்சியே யன்றி வஞ்சியும் வளர்கின்ற திருநாவலூரில் தோன்றியவனும் , வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டனது செவ்விய சொற்களாகிய பாடல்களைக் கேட்டு மகிழ்கின்றவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

குறிப்புரை :

`நொச்சி, வஞ்சி` என்பவற்றை, தம் எயிலைக் காத்தல், பிறர் நாட்டின்மேற் சேறல் என்றானும், அக்காலங்களிற் சூடுதற்குரிய பூவைத்தரும் அம்மரவகைகள் என்றானும் கொள்க. இதனால் திருநாவலூரில் உள்ளாரது ஆண்மை குறித்தருளியவாறாம். இதனையும் ஏனைத் திருப்பாடல்கள் போலவே அருளிச்செய்தாரா யினும், தமது திருப்பெயரைப் பெய்தருளிச் செய்தமையின், திருக் கடைக் காப்பெனவே கொள்க.
சிற்பி