திருவீழிமிழலை


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

நம்பி னார்க்கருள் செய்யும் அந்தணர்
நான்ம றைக்கிட மாய வேள்வியுள்
செம்பொ னேர்மடவா ரணி பெற்ற திருமிழலை
உம்ப ரார்தொழு தேத்த மாமலை
யாளொ டும்முட னேயு றைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

பொழிப்புரை :

அந்தணர்களது நான்கு வேதங்களுக்கு இடமாகிய வேள்வியினுள் உம்மை விரும்பி வழிபடுவோர்க்கு அருள் செய்கின்ற வரே , செம் பொன்னால் இயன்ற பாவைபோலும் மகளிர் அழகுபெற்று விளங்குகின்ற திருமிழலையுள் , நீர் உயர்ந்த மலைமகளோடு உடனாகித் தேவர்கள் தொழுது துதிக்க உறைகின்ற இடத்தை , அழகிய பொன்போலச் சிறந்த வீழி மரத்தின் நிழலாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் .

குறிப்புரை :

` நம்புதல் ` என்றது . நம்பி வழிபடுதலைக் குறித்தது , ` அருள் செய்யும் ` என்ற எச்சம் , ` கொண்டீர் ` என்ற வினைப் பெயரொடு முடிதலின் , அதற்குக் கருத்து நோக்கி , இவ்வாறுரைக்கப் பட்டது . ` வேள்வியுள் நம்பினார்க்கு ` என முன்னே கூட்டுக . ` உள் ` என்றது ஏழாம் வேற்றுமைப் பொருளைத் தரும் இடைச் சொல் . ` செம்பொன் `, கருவியாகுபெயர் . செல்வம் உடை யாரது செல்வச் சிறப்பு இனிது விளங்குதல் அவர்தம் மகளிரிடத்தே யாகலின் , மிழலை நகரத்துச் செல்வச் சிறப்பை இனிது விளக்குதற்கு , மடவாரது அழகினை விதந்தருளிச் செய்தார் . வீழி மரத்திற்குப் பொன் உவமையாயது , ` பொன்போற் பொதிந்து ` ( குறள் 159.) என்றாற் போலச் சிறப்புப் பற்றி . ` வீழி ` என்றது அதன் நிழலை . ` நிழல் ` என்பதும் , அஃது , உள்ள இடத்தையேயாம் . வீழி மரமே இத்தலத்தின் மரமாதலும் , அதனானே இது ` வீழிமிழலை ` எனப்படுவதும் அறிக . ` அடியேற் கும் ` என்ற உம்மை எச்சத்தோடு இழிவு சிறப்பு .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

விடங்கொள் மாமிடற் றீர்வெள் ளைச்சுருள்
ஒன்றிட்டு விட்ட காதி னீர்என்று
திடங்கொள் சிந்தையினார் கலி காக்கும் திருமிழலை
மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை
வந்தி ழிச்சிய வான நாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

`நஞ்சினை உண்ட கரிய கண்டத்தை உடையவரே , வெண்மையான சங்கக் குழை ஒன்றினை இட்டுத் தூங்கவிட்ட காதினை உடையவரே ` என்று போற்றி , உறுதி கொண்ட உள்ளத்தையுடைய அந்தணர்கள் , உலகிற்கு வறுமை வாராமல் காக்கின்ற திருமிழலையுள் சிங்கங்கள் தாங்குகின்ற விமானம் ஒன்றை , உம்பொருட்டு மண்மேல் வந்து இறங்கச் செய்த வானுலகத்தையும் தன்கீழ் அடக்குதலையுடைய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் ,

குறிப்புரை :

` வெள்ளை `, விடாத ஆகுபெயர் . ` சுருள் ` என்றது குழையை , ` கலிகாக்கும் ` என்றதனால் , ` சிந்தையினார் `, ` அந்தணர் ` என்பது பெறப்பட்டது . ` கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் ` ( தி .1 ப .80 பா .1) என்ற திருஞானசம்பந்தரது திருமொழியையுங் காண்க . இத் தலத்திருக்கோயிலில் உள்ள விமானம் , திருமாலால் கொண்டுவரப் பட்டு , ` விண்ணிழி விமானம் ` எனப் பெயர்பெற்றுவிளங்குதலை அறிந்து கொள்க . திருமாலை அவரது உலகமாகப் பாற்படுத்தருளிச் செய்தார் , ஒரு நயம்பற்றி , ` வந்து ` என்னும் வினையெச்சம் , ` இழிச்சிய ` என்பதனுள் , இழிதல் வினையைக் கொண்டது , ` அடக்கல் ` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது , அடக்குதல் , மேலோங்குதலும் , தன்கீழ்ப் பணியச்செய்தலும் , இதுவே , மேற்சொல்லிய நயம் என்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

ஊனை யுற்றுயி ராயி னீர்ஒளி
மூன்று மாய்த்தெளி நீரோ டானஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர் செழு மாடத் திருமிழலை
மானை மேவிய கையி னீர்மழு
வேந்தி னீர்மங்கை பாகத் தீர்விண்ணில்
ஆன வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

பொழிப்புரை :

உடம்பைப் பொருந்திய உயிரானவரே , ` ஞாயிறு , திங்கள் , தீ ` என்னும் மூன்று ஒளிகளும் ஆனவரே ` தெளிவாகிய நீரோடு ஆனஞ்சினிடைத் தேனை ஆடுதலை விரும்புபவரே , மானைப் பொருந்திய கையை யுடையவரே , மழுவை ஏந்தியவரே , மலைமகள் பாகத்தை உடையவரே , வளவிய மாடங்களையுடைய திருமிழலை யில் , வானின்கண் ஓங்கிய வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் ,

குறிப்புரை :

` ஆயினீர் ` முதலிய அனைத்தும் விளிப்பெயர்கள் , இவ்வாறன்றி , ` வீழிகொண்டீர் ` என்றது ஒன்றினையும் விளிப் பெயராக்கொண்டு , ஏனையவற்றை முன்னிலை முற்றாக்கி , அவற்றைத் தமக்கு அருளுதற்குரிய இயைபு தோன்ற எடுத்தோதிய வாறாக உரைப்பினுமாம் . அவ்வாறுரைக்குமிடத்து , அவ்வியைபுகளைத் தோன்ற உரைக்குமாறு அறிந்து கொள்க . ` உற்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` ஆனஞ்சின் ` என்றதன்பின் , ` இடை ` என்பது எஞ்சி நின்றது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

பந்தம் வீடிவை பண்ணி னீர்படி
றீர்ம திப்பிதிர்க் கண்ணி யீரென்று
சிந்தைசெய் திருக்குஞ் செங்கை யாளர் திருமிழலை
வந்து நாடகம் வான நாடியர்
ஆட மாலயன் ஏத்த நாள்தொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

` உயிர்களுக்கு , ` பந்தம் ` வீடு ` என்னும் இரண்டையும் அமைத்தவரே , அவ்வாறு அமைத்தும் அவைகட்கு ஒளித்து நிற்பவரே , நிலாத் துண்டமாகிய கண்ணியைச் சூடியவரே ,` என்று நினைந்திருக்கும் செவ்விய ஒழுக்கத்தை யுடையவர்களது திருமிழலையுள் , நாள்தோறும் வானுலகத்தில் உள்ள நாடக மகளிர்கள் வந்து நடனம் ஆடவும் , திருமாலும் பிரமனும் துதிக்கவும் , அழகிய குளிர்ந்த வீழி மரத்தின் அடியை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் .

குறிப்புரை :

பந்தமாவது , பிறப்பிறப்புக்கள் . ` செங்கையாளர் ` என்றது , அந்தணர்களை , கை , ஒழுக்கம் என்னாது , கை என்றே கொண்டு , தீயோம்புதலின் , ` செங்கை ` என்று அருளினார் என்றலு மாம் . ` செய்கையாளர் ` என்றானும் , ` செம்மையாளர் ` என்றானும் பாடம் ஓதுதல் சிறக்கும் , ` நாடியர் ` என்றது ` தோழியர் ` என்பது போலும் , பெண்பாற் பன்மைப் பெயர் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்
ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர் சிறந் தேத்துந் திருமிழலைப்
பரிசி னால்அடி போற்றும் பத்தர்கள்
பாடி யாடப் பரிந்து நல்கினீர்
அரிய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

வேதங்களாகிய குதிரைகளைப் பூண்ட தேரின் மேல் , மலையாகிய வில்லை ஏந்தி நின்று , மதில்கள் மூன்றையும் அழியும்படி வேறுபடுத்தவரே , நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள் , அறிவு மிகுந்து துதிக்கின்ற திருமிழலையுள் , அரிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , உமது திருவடியைப் போற்றுகின்ற அடியவர்கள் அன்பினால் பாடி ஆட , மனம் இரங்கி , அவர்க்கு வேண்டுவனவற்றை அளித்தீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் .

குறிப்புரை :

` ஏந்தி ` என்றதன்பின் ` நின்று ` என்பது எஞ்சி நின்றது . ` திரி ` முதனிலைத் தொழிற்பெயர் . திரிதல் - வேறுபடுதல் . செய்தல் - ஆக்குதல் ` வேறுபடுதலை ஆக்கிய ` என்பது , ` வேறுபடுத்திய ` என்னும் பொருளதாய் , ` மூன்றையும் ` என்ற இரண்டாவதற்கு முடிபாயிற்று . ` செய் ` என்றது , ` வீழிகொண்டீர் ` என்றதனோடு இயையும் , பரிசு - தன்மை ; ஈண்டு , அன்பு .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன்
ஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர்
செறிந்த பூம்பொழில்தேன் துளிவீசுந் திருமிழலை
நிறைந்த அந்தணர் நித்த நாள்தொறும்
நேசத்தால் உமைப் பூசிக் கும்மிடம்
அறிந்து வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

பொழிப்புரை :

மரங்கள் நெருங்கிய பூஞ்சோலைகள் , தம்மிடத்து வருவோர்க்குத் தேன் துளிகளை வழங்குகின்ற திருமிழலையுள் , நிறைந்துள்ள அந்தணர் பலரும் நாள்தோறும் நிலையாக அன்பினால் உம்மை வழிபடும் இடத்தை அறிந்து , வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , தந்தையது தாளை எறிந்த சண்டேசுர நாயனார் , தமது கண்ணைப் பெயர்த்து அப்பிய கண்ணப்ப நாயனார் முதலாக , உம்மை வழிபட்ட அடியவர் பலர்க்கு உயர்கதியைத் தந்தருளினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் ,

குறிப்புரை :

` எறிந்த , இடந்த ` என்றவற்றிற்குச் செயப்படுபொருள் வருவிக்க , வீசுதல் - வழங்குதல் , ` பொழிறேன் ` என்பதன்றி ` பொழிற் றேன் ` என்பது பாடமாயின் , ` பொழிலின் கண் தேன்துளி வீசப்படும் ` என உரைக்க , ` நித்தமாக ` என , ஆக்கச் சொல் வருவிக்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

பணிந்த பார்த்தன் பகீர தன்பல
பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
திணிந்த மாடந்தொறுஞ் செல்வம் மல்கு திருமிழலைத்
தணிந்த அந்தணர் சந்தி நாடொறும்
அந்தி வானிடு பூச்சி றப்பவை
அணிந்து வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

நெருங்கிய மாடங்கள்தோறும் செல்வம் நிறைந்த திருமிழலையுள் , சினம் தவிர்ந்த அந்தணர்கள் , காலை , நடுப்பகல் இவற்றிலும் , அந்திக் காலத்திலும் உயர்வாக இடுகின்ற பூக்களின் ஒப்பனையை அணிந்துகொண்டு , வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , உம்மை வணங்கிய அருச்சுனன் , பகீரதன் , பல அடியவர் , சித்தர் முதலியோர்க்கு முற்காலத்தில் அருள் பண்ணினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் .

குறிப்புரை :

அந்தியை வேறோதினார் , அஃது ஒப்பனைக்குச் சிறந்த காலமாதல் பற்றி . வான் - உயர்வு .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பரந்த பாரிடம் ஊரி டைப்பலி
பற்றிப் பாத்துணுஞ் சுற்ற மாயினீர்
தெரிந்த நான்மறையோர்க் கிட மாய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடி சைகேட்கும்
இச்சை யாற்காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

மிக்க பூத கணங்களை , ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே , ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலை யுள் , அரிய , குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே , நீர் , இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால் , அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள் செய்யீர் .

குறிப்புரை :

` உண்ணும் ` என்ற பெயரெச்சம் , ` சுற்றம் ` என்னும் ஏதுப்பெயர் கொண்டது . இத்தலத்தில் இறைவர் ; இசைத் தமிழைப் பாடியோர்க்கு நித்தல் காசு நல்கியது , திருஞானசம்பந்தர்க்கும் , திருநாவுக்கரசர்க்கும் என்பது நன்கறியப்பட்டது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

தூய நீரமு தாய வாறது
சொல்லு கென்றுமை கேட்கச் சொல்லினீர்
தீய றாக்குலையார் செழு மாடத் திருமிழலை
மேய நீர்பலி யேற்ற தென்னென்று
விண்ணப் பஞ்செய் பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே.

பொழிப்புரை :

` தீ வளர்த்தலை ஒழியாத கூட்டத்தவராகிய அந்தணர்களது , வளவிய மாடங்களையுடைய திருமிழலையுள் விரும்பி வீற்றிருக்கின்ற நீர் , ` பிச்சை எடுப்பது என் ` என்று வினாவு வோர்க்கு மெய்ப்பொருளாய் விளங்குகின்ற , வீழி மரத்தின் நிழலை இடமாகக் கொண்டவரே , நீர் , ` உமக்குத் தூய்மை யாகிய நீரே அமுத மாயினவாற்றினைச் சொல்லுக ` என்று உமையவள் கேட்க , அதனைச் சொல்லியருளினீர் ; அதுபோல , அடியேனுக்கும் அருள்செய்யீர் .

குறிப்புரை :

தூயநீர் அமுதாதல் , அடியவர் ஆட்ட விரும்பி ஆடுதல் ; நீராட்டி வழிபடுதலை மிகவும் விரும்புகின்றவர் , எனவே , ` எதனையும் விரும்பாத நீவிர் , வழிபாட்டினை விரும்புவது என் ` என்று உமையவள் வினாவ , அதனைச் சிவபெருமான் இனிது விளக்கி யருளினமையை எடுத்தோதியவாறாம் , சிவபிரான் உமைக்கு ஆகமங் கள் பலவற்றையும் சொல்லி , அவற்றின் முடிபாக , ` யாம் விரும்புவது பூசை ஒன்றையே ` என அருளினமையை , எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும் உண்மை யாவது பூசனை எனஉரைத் தருள அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள் பெண்ணி னல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து . ( தி .12 திருக்குறிப்பு . புரா . 51) என்ற சேக்கிழார் திருமொழியான் அறிக . இனி , இன்னதொரு வரலாறு இத்தலத்தைப் பற்றிஉளதேனும் கொள்க . ` உமைக் கேட்க ` என்றும் ` தீயராக் குலையாளர் ` என்றும் ஓதும் பாடங்களே எல்லாப் பதிப்புக்களிலும் காணப்படுகின்றன . இத் திருப்பாடல் இனிது பொருள் விளங்காமையின் , இவ்வாறு அவை பிழை பட்டனபோலும் ! பிச்சை யேற்றல் , தனக்கென யாதும் இன்மையைக் குறிப்பதாகலின் , அஃது , ` அவன் உலகிற்கு வேறானவன் ` என்பதையே உணர்த்தும் என்பார் , ` பலி ஏற்றது என் என்று வினவுவார்க்கு மெய்ப்பொருளா யினீர் ` என்று அருளினார் , வினவுதல் , ஆராய்தல் , ` இருந்தவா காணீர் , இதுஎன்ன மாயம் ! அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த் தான்நாளும் பிச்சை புகும்போலும் , தன்அடியார் வான் ஆள மண்ஆள வைத்து ` ( தி .11 கயிலைபாதி . 53) என மருட்கையுற்று ஓதியதும் , இக்கருத்துப் பற்றியாதல் உணர்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

வேத வேதியர் வேத நீதிய
தோது வார்விரி நீர்மி ழலையுள்
ஆதி வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுகென்று
நாத கீதம்வண் டோது வார்பொழில்
நாவ லூரன்வன் றொண்டன் நற்றமிழ்
பாதம் ஓதவல்லார் பர னோடு கூடுவரே.

பொழிப்புரை :

` வேதத்தை ஓதுகின்ற வேதியர்களும் , வேதத்தின் பொருளை விளக்குபவர்களும் வாழ்கின்ற , பரந்த நீரையுடைய திருமிழலையுள் , பழைதாகிய வீழி மரத்தினது நிழலை இடமாகக் கொண்டவரே , அடியேனுக்கும் அருள் செய்யீர் ` என்று பாடிய , இனிய இசையை வண்டுகள் பாடுகின்ற நீண்ட சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றினவனும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரனது இந்நல்ல தமிழ்ப்பாடல்களை . அப்பெருமான் திருவடிக்கீழ் நின்றுபாட வல்லவர் , அவனோடு இரண்டறக் கலப்பர் .

குறிப்புரை :

`நீதியது` என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. `நீதியர்` என்பது பாடம் ஆகாமை யறிக. `ஆதி` என்றது, `பழையது` என்னும் பொருளது, `என்று` என்றதன் பின், ` பாடிய` என்பது எஞ்சி நின்றது, `பரன்` எனப் பின்னர் வருகின்றமையின், `பாதம்` என, வாளா அருளினார். `பாதத்தின் கண்` என, ஏழாவது விரிக்க.
சிற்பி