திருவெண்பாக்கம்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

பிழையுளன பொறுத்திடுவர்
என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
கோயிலுளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந்
துளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

` குழை பொருந்திய , தூங்குங்காதினை உடையவனே , நம்மாட்டுப் பிழை உளவாவனவற்றை நம் பெருமானார் பொறுத்துக்கொள்வார் என்னும் துணிவினால் அடியேன் பிழை செய்தால் , அதனைப் பொறாததனால் உனக்கு உளதாகும் பழியை நினையாமலே நீ என் கண்ணைப் படலத்தால் மறைத்து விட்டாய் ; இதுபோது இக்கோயிலினுள்ளே இருக்கின்றாயோ ?` என்று யான் வினாவ , மானை ஏந்திய அவன் , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

ஈற்றில் வருவித்து உரைத்தது , குறிப்பெச்சம் . இத்திருப் பதிகத்தை , ` முன்னின்று முறைப்பாடு போல்மொழிந்த மொழிமாலை ` ( தி .12 ஏ . கோ . புரா . 281) எனச் சேக்கிழார் அருளினமையின் , இவற்றையெல்லாம் , முன்னின்ற அடியவர் பலரிடத்தும் சொல்லி முறையிட்டவாறாக உரைக்க . இன்னும் , ` முறைப்பாடு போல் ` என்ற அதனால் , வெளிப்படைப் பொருளில் , ` இதுவோ அவனது கண்ணோட்டம் ` என்று முறை யிடுவார் போல அருளினாராயினும் , ` இதுவும் எனக்குத் தக்கதே போலும் ` என இரங்கினார் என்றே கொள்க . ` உலகியலால் நோக்கின் பிழையாகின்ற அவை , அருள்நெறியால் நோக்கின் செவ்வியவே யாதலின் , பொறுப்பர் எனத் துணிந்தேன் ` எனவும் , ` அன்னது அறிந்தும் அவற்றைப் பொறாது ஒறுத்தாயாயின் , நின் அருள்நெறியை நீயே அழித்தாய் என்னும் பழியையன்றோ நீ பூண்பாய் !` எனவும் , ` என் கண்களை மறைப்பித்தபின் யான் பாடிய பாடல்களுக்குப் பின்னும் நீ , எங்கும் யாதொன்றும் செய்யவும் இல்லை ; சொல்லவும் இல்லை ; ஆதலின் , எங்கே இருக்கின்றாய் ?` எனவும் வினவிய வாறாம் . இங்ஙனம் வினாவிய பின்னும் , ` தான் செய்த ஒறுப்பு தனக்குப் பழியாவதில்லை ; புகழேயாம் ` என்பதைக் குறிப்பால் அருளியதன்றி , இனிது விளங்க அருளிச்செய்து ` எனக்கு இரங்கிலனே ` என்பார் , ` உளோம் போகீர் என்றானே ` என்று அருளினார் . தாம் செய்தது உலகியலால் மட்டுமன்றி அருள் நெறியாலும் பிழையாதலை , அஃதாவது சங்கிலியாராகிய பேரடி யார்க்கு இழைத்த குற்றம் ஆதலைக் கண் மறைந்த பின்னர் அறிந்தாரே யாயினும் , அஃது இனிது துணியப்படாமையின் , இவ்வாறு அருளிச் செய்தார் என்க . நாவலூரர் தம் பிழையது வன்மையை முன்பே உணர்ந்தமையை , இதற்கு முன்னர் அருளிச்செய்த திருப்பதிகங்களுள் உள்ள குறிப்புக்களால் உணர்க . ` படலத்தால் ` என உருபு விரிக்க . படலம் , கண்ணில் படர்ந்து ஒளியை மறைப்பதொன்று . ` மறைப் பித்தாய் ` என்றது , ` மறைவித்தாய் ` எனப் பொருள் தந்தது . ` உளாயே ` என்ற ஏகாரம் , வினா . ஏகாரம் பிறிது பொருள் உடைய தாயின் , இறைவர் , ` உளோம் போகீர் ` என்னார் என்க . ` உள்ளிருந்து ` என்றது ` வெளிநில்லாது ` என்றவாறாம் . ` போகீர் ` என்றது இறைவர் அருளிச்செய்த சொல்லை அவ்வாறே நாவலூரர் கொண்டு கூறியதாம் . ஆகவே , இறைவர் நாவலூரரைப் பன்மைச் சொல்லாற் குறித்தது , புறக்கணிப்புக் காரணமாக என்பது போதரும் . ` உளோம் ; போகீர் ` என்றது , ` யாம் கோயிலினுள் இல்லாமலில்லை ; இருக்கின்றோம் ; நீர் உம் வழியிற் சென்மின் ` என்றதாம் . ` என்றானே ` என்ற ஏகாரம் , தேற்றம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

இடையறியேன் தலையறியேன்
எம்பெருமான் சரணம்என் பேன்
நடையுடையன் நம்மடியான்
என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன்
வெண்ணீற்றன் புலியின்தோல்
உடையுடையான் எனையுடை யான்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

யான் யாதொரு செயலிலும் ` முதல் இன்னது ; நடு இன்னது ; முடிவு இன்னது ;` என்று அறியேன் ; ` எம் பெருமானே எனக்குப் புகலிடம் ; ஆவது ஆகுக ` என்று கவலையற்றிருப்பேன் ; அதனையறிந்திருந்தும் , இடப வாகனத்தை யுடையவனும் , விடம் பொருந்திய பாம்பை அணிந்தவனும் , வெண்மையான நீற்றைப் பூசு பவனும் , புலியின் தோலாகிய உடையை உடையவனும் , என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன் , ` இவன் நம்மையே அடைக் கலமாக அடைதலை யுடையவன் ; நமக்கு அடியவன் ` என்ற முறைமை களை நினையாமலே , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ; இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` இடை , தலை ` என்பவற்றை அருளினமையின் , முதல் ( அடி ) என்பதும் கொள்ளப்பட்டது . தலை - முடி ; முடிவு . ` அடை ` முதனிலைத் தொழிற்பெயர் . சுவாமிகளை இறைவன் எவ்வாறு புறக் கணிப்பினும் , அவர் அவனைப் பாடுதல் ஒழியாராகலின் , ` விடை யுடையான் ` என்பது முதலியவற்றாற் புகழ்ந்தோதினார் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

செய்வினையொன் றறியாதேன்
திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா
யோஎன்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

படத்தையுடைய பாம்பை அணிந்தவனே , ` உனது திருவடியே புகல் ` என்று கருதி , ` செய்யத்தக்க செயல் இது ; தகாத செயல் இது ` என்பதைச் சிறிதும் அறியாத பொய்யடியேனாகிய யான் , அறியாமையாற் பிழைசெய்தேனாயினும் , பொறுத்தல் உனக்குக் கடமையன்றோ ; அங்ஙனம் பொறுத்து எனக்கு அருள் பண்ணாமை யின் , நீ இங்கே இருக்கின்றாயோ ` என்று யான் உரிமையோடு வினாவ , எப்பொழுதும் என்மேல் அருள்கூர்ந்து , என்னை உய்யுமாறு தன் திருவருளைச் செய்ய வல்ல எம்பெருமான் , இதுபோது , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ; இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` செய்வினை ` என்றதனால் , அதன் மறுதலை வினையும் கொள்ளப்பட்டது . ஒன்று - சிறிது . ` ஒன்றும் ` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று . ` பொறுத்தி ` என்ற செயவெனெச்சம் , தொழிற்பெயர்ப் பொருள் தந்தது . வேண்டுதல் , இன்றியமையாமை யாதலின் , அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கம்பமருங் கரியுரியன்
கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன்
சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே யிருந்தாயே
என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணையெனக்கு
ளோம்போகீ ரென்றானே

பொழிப்புரை :

` நம்பியே , நீ , செவ்விய அணியினை யுடைய மலை மகளோடு உடனாயினவன் ஆதலின் , இருவீரும் இங்கே இருக்கின்றீர் களோ ` என்று நான் வினவ , அசைதல் பொருந்திய யானையினது தோலையும் கறுத்த கண்டத்தையும் , கபாலத்தையும் , செவ்விய பவளம்போலும் உருவத்தையும் உடையவனும் , தேவர்களுக்கு ஒப்பற்ற துணைவனும் ஆகிய இறைவன் , எனக்கு , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` உடனாகி ` என்றது பெயர் . அதன்பின் ` ஆதலின் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . ` இருந்தீர் ` என்ற பயனிலைக்கு , ` இருவீரும் ` என்னும் எழுவாய் , வெளிப்படாது நின்றது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

பொன்னிலங்கு நறுங்கொன்றை
புரிசடை மேற்பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள்
பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார்
தொழுதேத்த அடியேனும்
உன்னமதாய்க் கேட்டலுமே
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

பொன்போல விளங்குகின்ற , நறுமணம் பொருந்திய கொன்றைமலர் , சடையின்மேற் பொருந்துதலால் , மேலும் பொலிவுற்று விளங்க , மின்னலினது தன்மை விளங்குகின்ற நுண்ணிய இடையினை உடையவள் ஒருபாகத்தில் இருக்க , எருதை ஏறு பவனாகிய சிவபெருமானை , இருபாலும் அடியார்கள் நெருங்கி , வணங்கித் துதிக்க , யானும் உயர்ந்த முறைமையினாலே , ` கோயிலு ளாயே ` என்று கேட்க , அவன் , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னா னன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` எருதேறி ` என்றது பெயர் . அதன்பின் இரண்டாவதன் தொகைக்கண் வல்லினம் இயற்கை மருங்கின் மிகற்கை தோன்ற லாயிற்று . ( தொல் . எழுத்து . 157) வல்லினம் மிகாமையும் பாடம் . ` எரு தேறித் தொழுதேத்த ` என இயையும் . உயர்ந்த முறைமையாற் கேட்டது , ` நீ , அடியவர் துயர் கண்டு வாளாவிராயன்றே ` என்னும் குறிப்புத் தோன்ற வினாயது . ` கேட்டலும் ` என்றது உம்மீற்று வினையெச்சம் .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

கண்ணுதலால் காமனையுங்
காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல்
தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய்
இங்கிருந்தா யோஎன்ன
ஒண்ணுதலி பெருமான்றான்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

யாவரையும் வெல்லுகின்ற காமனையும் தனது நெற்றிக்கண்ணால் எரித்த ஆற்றலையுடைய , கங்கை விளங்குகின்ற , தெள்ளிய நிலவை அணிந்த சடையின்மேல் தீயின்கண் மலர்ந்தது போலத் தோன்றுகின்ற கொன்றை மலரை உடைய பெருமானை , அடியேன் , ` என் கண்மணியை மறைப்பித்தவனே , இங்கு இருக்கின்றாயோ ?` என்று வினவ , ஒள்ளிய நெற்றியையுடைய வளாகிய உமையம்மைக்குத் தலைவன் , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` காமனையும் ` என்னும் உம்மை சிறப்பு . ` நிலவுச் சடை ` என்னும் சகர ஒற்றும் , ` கொன்றையினானை ` என்னும் இரண்டன் உருபும் , தொகுக்கும்வழித் தொகுத்தலாயின . ` தீமலர்ந்த கொன்றை ` என்றது , மருட்கை யுவமம் . ` ஒண்ணுதலி பெருமானார் ` என்பது பாடம் அன்று .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

பார்நிலவு மறையோரும்
பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச்
சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர்
ஈங்கிருந்தீ ரேஎன்ன
ஊரரவம் அரைக்கசைத்தான்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

` மாலையாகப் பொருந்திய மணம் உடைய கொன்றைப் பூவை அணிந்த சடையை உடையவரே , தாங்குதற்கரிய நஞ்சுபொருந்திய , நீலமணிபோலும் கண்டத்தையுடையவரே , நீர் , மண்ணுலகிற் பொருந்திய அந்தணர்களும் , அடியவர்களும் பணி செய்ய இங்கு இருக்கின்றீரோ ? என்று யான் வினவ , ஊர்கின்ற பாம்பை அரையிற்கட்டிய இறைவன் , ` உளோம் ; போகீர் ` என்றா னன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` சடையனார் ` அண்மை விளி . ` கார் ` என்னும் நிறப் பண்புப்பெயர் ஆகுபெயராய் , நஞ்சினை உணர்த்திற்று .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

வாரிடங்கொள் வனமுலையாள்
தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப்
பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன்
கருதுமிடந் திருவொற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

கச்சினது இடம் முழுவதையுங் கொண்ட அழகிய தனங்களை யுடையவளாகிய உமையோடு , பூதங்கள் பல சூழ , முதுகாட்டிற் பலகாலும் ஆடுகின்ற , மேலான நிலையில் உள்ளவனும் , கருமை நிறம் தனக்கு இடமாகக் கொண்ட கண்டத்தை யுடையவனும் , தான் விரும்பும் இடமாகிய திருவொற்றியூரையே தனக்கு இடமாகக் கொண்டவனும் ஆகிய இறைவன் , யான் வினவியதற்கு , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` யான் வினவியதற்கு ` என்பது , இயைபு பற்றிக் கொள்ளக்கிடந்தது . வினவிய பொருள் , மேலெல்லாம் சொல்லப் பட்டது .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

பொன்னவிலுங் கொன்றையினாய்
போய்மகிழ்க் கீழிருவென்று
சொன்னஎனைக் காணாமே
சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே
இங்கிருந்தா யோஎன்ன
ஒன்னலரைக் கண்டாற்போல்
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

` பொன்போலுங் கொன்றை மலரை அணிந்த பெருமானே , நீ , கோயிலை விட்டுப்போய் மகிழ மரத்தின் கீழ் இரு ` என்று சொன்ன என்னை , அதன் பொருட்டுக் காணாமலே , சங்கிலி யிடம் சென்று , ` சூளுறவு , மகிழ மரத்தின் கீழே ஆகுக ` என்று சொல்ல வல்ல பெருமானே , நீ , இங்கு இருக்கின்றாயோ என்று யான் வினவ , எம்பெருமான் , என்னை , பகைவரைக் கண்டாற்போல வெறுத்து , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` நவிலும் ` உவம உருபு . ` காணுதல் ` என்பது கண்டு அறிவித்தலை உணர்த்திற்று . ` ஆகுக ` என்பது சொல்லெச்சம் . ` என்ன வல்ல ` என்றது , ` இவ்வாறு கீழறுக்கவல்ல ` என உள்ளுறை நகை . ` வெறுத்து ` என்பது , உவமத்திற் பெற்றது . ` எம் பெருமான் ` என்னும் எழுவாய் , தோன்றாது நின்றது ; வருகின்ற திருப்பாடலினும் இவ்வாறு கொள்க . இங்குக் குறிக்கப்பட்ட வரலாற்றின் விரிவைப் பெரிய புராணத்துட் காண்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே

பொழிப்புரை :

` மான் போல விளங்குகின்ற சங்கிலியை எனக்கு ஈந்து , அதனால் உளவாகின்ற பயன்களெல்லாம் எனக்கு நன்கு விளங்கும்படி திருவருள் செய்து காத்தாய் ` என்று சொல்லுதற்கு , ` உலகத்தையெல்லாம் பெற்ற தந்தையே , வெண்கோயிலாகிய இவ்விடத்தில் நீ இருக்கின்றாயோ ` என்று யான் வினவ , எம் பெருமான் , ஊன்றுவதாகிய ஒருகோலை அருளி , ` உளோம் ; போகீர் ` என்றா னன்றே ! இத்துணையது தானோ அவனது கண்ணோட்டம் !

குறிப்புரை :

` அருள் செய்தளித்தாய் ` என்றதனை , கற்கறித்து , ` நன்கட்டாய் ` என்றல்போலக் கொள்க . கொள்ளவே , ` உலகமெலாம் ஈன்றவனே ` என்றதும் , நகையாயிற்று . ஆகவே , ` பயன்களெல்லாம் ` என்றது , கண்ணிழந்ததையும் , உடம்பிற் பிணியுண்டாயதையும் குறித்ததாம் . ` ஊன்றுவதோர் கோலருளி ` என்றமையால் , குறிப்பெச்சம் சிறிது வேறுபட்டது . ` என்னுடைய பிரான்அருள்இங் கித்தனைகொ லாம் என்று மன்னுபெருந் தொண்டருடன் வணங்கியே வழிக்கொள்வார் ` ( தி .12 ஏ . கோ . புரா . 281) எனச் சேக்கிழார் அருளுமாறுங் காண்க .

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

ஏராரும் பொழில்நிலவு
வெண்பாக்கம் இடங்கொண்ட
காராரும் மிடற்றானைக்
காதலித்திட் டன்பினொடும்
சீராருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க்
கடையாவல் வினைதானே

பொழிப்புரை :

புகழ் நிறைந்த திருவாரூரில் உள்ள சிவ பெருமானது திருப்பெயரைத் தலையில் வைத்துள்ள நம்பியாரூரன் , அழகு நிறைந்த சோலைகள் விளங்குகின்ற திருவெண்பாக்கத்தை இடமாகக் கொண்ட , கருமை நிறைந்த கண்டத்தை யுடையவனை மிக விரும்பி , அன்போடும் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்மேல் , வலிய வினைகள் வந்து சாராவாம் .

குறிப்புரை :

`அன்பினொடும்` என்ற உம்மை, சிறப்பு. `பாடிய` என்பது சொல்லெச்சம். `வல்லார்க்கு` என்றது உருபு மயக்கம். `தான்` என்னும் அசைநிலை, பன்மை யொருமை மயக்கமாய் வந்தது.
சிற்பி