திருவொற்றியூர்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே

பொழிப்புரை :

உரையாற் சொல்லுதலேயன்றிப் பாட்டாலும் பாடித் துதித்து நிற்பார் செய்த வினைகளை நீக்குகின்ற இறைவரது இடம் , மக்கள் தம் பால் சேர்க்கின்ற பெரிய மரக்கலங்களையும் , சிறிய படகு களையும் கரையிற் சேர்க்கின்ற கடல் அலைகள் பொருந்திய திரு வொற்றியூரே .

குறிப்புரை :

` பாட்டும் ` என்ற உம்மை , எச்சத்தோடு , உயர்வு சிறப்பு , ` திரிவார் ` என்றது , ` பிற செயலைச் செய்யார் ` என்னும் குறிப் பினது . ஈற்றில் உள்ள ஏகாரம் , பிரிநிலை .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் மடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றி யூரே

பொழிப்புரை :

பந்தாடுதலையும் , கிளியை வளர்த்தலையும் பலகாலும் செய்கின்ற , பாவை போல்வாளாகிய உமையவளது மனத்தைக் கவர்பவரும் , சிவந்த நெருப்புப்போலும் நிறத்தையுடைய வரும் , எங்கள் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாவது , பல பொருள்களைத் தள்ளி வருகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே .

குறிப்புரை :

` பந்தும் கிளியும் ` என்றாரேனும் அவற்றின்கண் செய்கின்ற செயல்கள் என்பது கொள்க . ` போல் `, அசைநிலை ; வருகின்ற திருப்பாடலிலும் இவ்வாறு கொள்க . உந்துதலுக்குச் செயப் படுபொருள் வருவிக்க .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே

பொழிப்புரை :

பவளமும் , கனியும் போலும் இதழையுடைய , பாவை போன்றவளாகிய உமையது பாகத்தை உடையவனும் , கவளத்தை உண்கிற களிற்றி யானையினது தோலைப் போர்த்தவனும் , தவழ்ந்து பெயரும் பிறை பொருந்திய சடையையுடையவனும் ஆகிய இறைவனுக்கு இடமாவது , புரளுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே .

குறிப்புரை :

` பவளக் கனிவாய் `, பல பொருள் உவமை . கவளம் - யானை உண்ணும் உணவு . ` தவழும் ` என்றதும் , சடையின்கண்ணே யாம் . ஆகவே , ` மதியைத் தவழச் சேர்த்த சடையான் ` என்றவாறா யிற்று . நான்காம் அடியில் , உயிரெதுகை வந்தது .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

என்ன தெழிலும் நிறையும் கவர்வான்
புன்னை மலரும் புறவில் திகழும்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி யூரே

பொழிப்புரை :

முதலில் யான் நினைக்குமாறு தன்னைத் தருபவனும் , பின்பு என்னால் நினைக்கப்படுவனும் ஆகிய இறைவன் , எனது அழகையும் , மன உறுதியையும் கவர்தற்பொருட்டு , திருவொற்றி யூரில் , புன்னை மலர்கள் மலர்கின்ற கானலிடத்தே விளங்குவான் .

குறிப்புரை :

இது , சிவபிரான்மேல் காதல்கொண்டாள் ஒருத்தியது கூற்றாக அருளிச்செய்யப்பட்டது . ` என்னது ` என்பதில் னகர வொற்று , விரித்தல் , ` கவர்வான் `, வான் ஈற்று வினையெச்சம் . கடற்கரைச் சோலை . ` புறவு ` எனப்பட்டது . ` தன்னை முன்னம் நினைக்கத் தருவான் - உன்னப்படுவான் ` என்றதனை . என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன் என்னைத் தன்னடி யான்என் றறிதலும் தன்னை யானும் பிரான்என் றறிந்தேனே . ( தி .5. ப .91. பா .8.) என்று அருளிச்செய்ததனானும் அறிக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

பணங்கொள் அரவம் பற்றி பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே

பொழிப்புரை :

படத்தையுடைய பாம்பைக் கையில்பிடித்திருப் பவனும் , மேலானவனும் , பூத கணங்கள் சூழத் தலையோட்டை ஏந்திச் சென்று , துவளுகின்ற இடையினையுடைய மகளிர் இடுகின்ற சோற்றை ஏற்பவனும் ஆகிய இறைவன் திருவொற்றியூரிலே நீங்காது எழுந் தருளியிருப்பான் .

குறிப்புரை :

` பற்றிப் பரமன் ` என்பது பாடம் அன்று . ` ஏந்திக் கவர் வான் ` என இயையும் . வருகின்ற திருப்பாடலில் உள்ள , ` உறையும் ` என்றதனை , மேலும் , கீழும் உள்ள திருப்பாடல்களிலும் இயைத் துரைக்க .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றி யூரே

பொழிப்புரை :

படைக்கலத் தன்மை பொருந்திய மழுவையும் , பால்போலும் வெள்ளிய திருநீற்றையும் , இடபம் பொருந்திய கொடியையும் , வேதத்தை ஓதுகின்ற நாவையும் உடையவனும் , தன்னை அடைக்கலமாக அடைபவரது வினைகளை ஒழிப்பவனும் , என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன் ` திருவொற்றி யூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான் .

குறிப்புரை :

` படை ` என்றது , அதன் தன்மையை . ` படையார் மழுவொன்று பற்றிய கையன் ` ( திருமுறை -4.83.1.) என்றதனை நோக்குக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி யூரே

பொழிப்புரை :

வானத்தில் உலாவிய மதில்கள் நெருப்பில் வெந்தொழியுமாறு அவற்றை வென்ற , வேறுபட்ட தன்மையை உடைய வனும் , வினைகளைப் போக்குதற்கு மிகவும் நல்ல கடவுளும் , வெண்மையான இடபம் ஒன்றை உடையவனும் ஆகிய இறைவன் , திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான் .

குறிப்புரை :

` நன்று ` என்பது , பெரிதும் எனப் பொருள் தந்தது . ` நன்றும் ` எனப் பிரிப்பினும் ஆம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே

பொழிப்புரை :

தோகையையுடைய மயில்போலும் , வளையை அணிந்த கைகளையுடைய அழகிய மகளிர் பலரும் துதிக்கின்ற , பவளம்போலும் உருவத்தையுடையவனாகிய இறைவன் , கரையில் வந்து உலாவுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரில் இருந்தே , உலகில் உள்ளவரது வினைகளை எல்லாம் தீர்ப்பான் .

குறிப்புரை :

` கலாபம் ` என்னும் ஆரியச் சொல் , ` கலவம் ` எனத் திரிந்தது . ` போல் நல்லார் ` என்றது , வினைத்தொகை .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

பற்றி வரையை யெடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே

பொழிப்புரை :

தமது மலையைப்பற்றி அசைத்த அரக்கனாகிய இராவணனை , அவனது உறுப்புக்கள் ஒடிந்து முரியும்படி நெருக்கின வராகிய இறைவர் , கடல் நீர் சூழ்ந்த , அலைகள் பொருந்திய திரு வொற்றியூரில் இருந்தே , அடியவரைத் தாக்குகின்ற வினைகளை நீக்குவார் .

குறிப்புரை :

` இற்று முரிய ` என்பது ஒருபொருட் பன்மொழி . ஓதம் - மிக்க நீர் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

ஒற்றி யூரும் அரவும் பிறையும்
பற்றி யூரும் பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே

பொழிப்புரை :

ஒன்றை ஒன்று உராய்ந்து ஊர்கின்ற பாம்பும் , பிறையும் பற்றுக்கோடாக நின்று ஊரும் பவளம்போலும் சடையை உடைய இறைவனது திருவொற்றியூர்மேல் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை நன்கு கற்றுப்பாடினால் , வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

` அரவும் பிறையும் உராய்ந்து ஊரும் ` என்றது , அவை ` பகையின்றி நட்புக்கொண்டு வாழும் ` என்றதாம் . இதனை , ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை ஒற்றி யூரும்அப் பாம்பும் அதனையே ஒற்றி யூரஒரு சடை வைத்தவன் ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே . ( தி .5 ப .24 பா .1) என்றதனோடு வைத்து நோக்குக .
சிற்பி