திருச்சோற்றுத்துறை


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
உழையீர் உரியும் முடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துக்களும் , பொற்குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , நெருப்பு நீர்த் தன்மையுடையதாய் ஒழுகினாற்போலும் சடையையும் , மானையும் , யானை , புலி இவைகளை உரித்த தோலையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` நீர் ` என்றதன்பின் , ` ஆய் ` என , ஆக்கச் சொல் வருவிக்க , ` அழல் நீராய் ஒழுகியனைய ` என்றது , சடையினது நிறத்தையும் , நீண்டு தூங்குதலையும் உணர்த்தற்கு . இனி , ` நீர் அழல் ஒழுகியனைய ` எனமாற்றி , ` நீர் நெருப்பின்மேல் ஒழுகினாற்போலக் கங்கைததும்பும் சடை ` என்று உரைப்பாரும் உளர் . ` உழை ` என்றதன் பின்னும் , எண்ணுமை விரிக்க . மூங்கில் முத்துக்கள் மலையினின்றும் வந்தனவென்க . ` நீர்முத்து ` என்றதில் நீர் - நீர்மை ; சிறப்பு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் னிடமாம்
இண்டை கொண்டன் பிடைஅ றாத
தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

அன்பு , இடையில் அற்றுப்போதல் இல்லாத அடியார்கள் , இண்டை மாலை முதலியவைகளைக் கொண்டுவழி படுகின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , உயிர்கள் செய்த பழைய , வலிமையான வினைகள் நீங்குமாறு நிற்கின்ற , உலகிற்கு முதல்வனும் , தூயவனும் ஆகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` அண்டத்திற்கு முதல்வன் ` என நான்காவது விரிக்க , ` அண்டம் ` என்ற பொதுமையால் , எல்லா அண்டங்களும் கொள்ளப் படும் , இதனை , ` அகிலாண்டகோடி ` என்பர் . ` இண்டை ` என்றது , ஏனையவைகளையும் தழுவநின்ற உபலக்கணம் . ` அன்பு இடையறாத தொண்டர் ` என்பது , ` மெய்யடியார் ` என்றவாறு . யாதானும் ஒரு நிமித்தம் பற்றிச் செய்யப்படும் அன்பு , அந்நிமித்தம் நீங்க , அதனோடே அற்றொழியும் ; அவ்வாறு யாதொரு நிமித்தமும் பற்றாது நேரே செய்யப்படும் அன்பு , ஒரு ஞான்றும் கெடுவது இல்லை . இத்தகைய அன்புடையவரையே , ` மெய்யன்பர் ` என நூல்கள் , யாண்டும் உயர்த்துக்கூறும் . இம் மெய்யன்பினை , இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு . ( தி .11 அற்புதத் திருவாந்தாதி -2.) என்னும் அம்மை திருமொழியால் இனிதுணர்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

சோலைகள் , ஆடுகின்ற மயில்களையும் , சுழலுதல் உடைய வண்டுகளையும் கொண்டு காட்டுகின்ற மிக்க நீரையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , அழகிய பாம்பையும் , கொக்கின் இறகையும் , மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையை யும் முடியில் வைத்துள்ளவனாகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

சிவபெருமான் கொக்குருவம் கொண்ட அசுரனை அழித்து , அதன் அடையாளமாகக் கொக்கிறகைச் சடையில் அணிந் தமையைக் கந்தபுராணத்துட் காண்க . இனி , ` கொக்கிறகு ` என்ப தொரு மலரும் உண்டு . ` முடியில் ` என்பது ஆற்றலாற் கொள்க . கொண்டு காட்டுதலை , ` தருதல் ` என்று அருளினார் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

பளிக்குத் தாரை பவள வெற்பில்
குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம்
அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம்
துளிக்கும் சோலைச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

தேனை வண்டுகள் நிரம்ப உண்ணச்செய்து , மேலும் நிலத்திற் சிந்துகின்ற சோலைகளையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , பவளமலையின்மேல் பதிந்து ஓடுகின்ற பளிங்கு அருவிபோலும் முப்புரி நூலை அணிந்த தலைவனாகிய இறைவனுக்கு இடமாகும் .

குறிப்புரை :

` பவள வெற்பிற் குளிக்கும் பளிக்குத் தாரைபோல் நூல் ` எனக் கொண்டு கூட்டி உரைக்க . பவளமலை இறைவனது திரு மேனிக்கும் , அம்மலைமேல் உள்ள பளிங்கு அருவி அவனது மார்பிற் புரளும் முப்புரி நூலுக்கும் உவமை . இஃது இல்பொருளுவமையாம் . ` அளிக்கும் ஆத்தி ` என்னும் பாடம் சிறவாமையறிக . ` மதுவம் ` என்பதில் அம் , தவிர்வழி வந்த சாரியை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு
வதையுஞ் செய்த மைந்தன் இடமாம்
திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறும்
துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

நிலைபெற்ற மகரந்தமும் , தேனும் , வண்டும் சோலைகளில் நெருங்கியிருக்கின்ற , காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னுந் தலமே , கூற்றுவனுக்கு உதையையும் , ஒன்றற்கும் தோலாத ஊழிற்கு அழிவையும் ஈந்த வலிமை உடைய வனாகிய இறைவனுக்கு இடமாகும் .

குறிப்புரை :

விதி - ஊழ் . ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் . - குறள் -380 என்பவாகலின் , ` ஒல்கா விதி ` என்று அருளினார் . மார்க்கண்டேயரது ஊழினை அடியோடு அழித்தமையின் , இறைவனை , ` விதிக்கு வதை செய்தவன் ` என்று அருளினார் . உலையா முயற்சி களைகணா ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகறியப் பான்முளை தின்று மறலி உயிர்குடித்த கான்முளையே போலுங் கரி . - நீதிநெறிவிளக்கம் -50 என , பின்வந்தோர் கூறுதலும் காண்க . இனி ` விதி - தக்கன் ` என்பாரும் உளர் . ` திதியும் ` என்பது , எதுகை நோக்கித் திரிந்து நின்றது . இது , ` திதி ` அடியாகப் பிறந்த பெயரெச்சம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

ஓதக் கடல்நஞ் சினைஉண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனல்உண் டெரியைக் காலும்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

குளிர்ந்த நீரை உண்டு , தீயை உமிழ்கின்ற மாஞ் சோலைகள் சூழ்ந்த , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , மிக்க நீரை யுடைய கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட , அருள்மிகுந்த பெரு மான் விரும்பும் ஊராகும் .

குறிப்புரை :

பிறர்நலமே கருதுவதாகிய அன்பே ஆக ; அருளே ஆக ; அவை தமக்கு வருங் கேட்டினை அறியும் அறிவைப் போக்கு மாதலின் , அத்தன்மை புலப்படுத்தற்பொருட்டு இறைவனையும் விளைவதறி யாது நஞ்சினை உண்டானாக அருளிச்செய்தார் ; எனவே , ` பித்தன் ` முதலியபோல , ` பேதைப் பெருமான் ` என்றதும் , பழிப்பதுபோலப் புகழ் புலப்படுத்தாயிற்று . மாந்தளிர்கள் நெருப்புப் போலத் தோன்றுதலின் , ` சீதப்புனல் உண்டு எரியைக்காலும் சூதம் ` என்று அருளிச் செய்தார் ; இது விரோதவணி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

உயிர்போலச் சிறந்த மனைவி மக்களும் , ஏனைய சுற்றத்தாரும் , செல்வமும் என்று சொல்லப்பட்ட இன்னோரன்ன வற்றைத் துறந்த ஞானியர் சேர்கின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , இறந்தவரது எலும்புகளையும் ` எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு , புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் .

குறிப்புரை :

` புறங்காட்டில் ஆடினும் தூயவனே ` என்பார் , ` புறங் காட்டாடும் புனிதன் ` என்று அருளினார் . ` சுற்றம் ` என்பது சொல்லால் அஃறிணை முடிபு கொடுக்கப்பட்டது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

காமன் பொடியாக் கண்ஒன் றிமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமென் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பார் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

தேன் பொருந்திய , மெல்லிய கூந்தலையுடைய மகளிர் , தம் இருக்கையில் இட்ட நறும்புகைகள் , வானத்தில் சென்று நிறைகின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே மன்மதன் சாம்பராகுமாறு கண் ஒன்றைத் திறந்த , வேள்வியாகிய கடலையுடைய வராகிய இறைவர் விரும்பும் இடமாகும் .

குறிப்புரை :

` ஓமக் கடல் ` உருவகம் . ` வேள்விகள் எல்லாவற்றிலும் முதற்கண் வழிபடப்படும் முதல்வர் ` என்றவாறு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால் தாழுந் தவத்தோர்க் கென்றும்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே

பொழிப்புரை :

தன்னைத் தலையால் வணங்குகின்ற தவத்தினை உடையோர்க்கு , எஞ்ஞான்றும் அழியாத செல்வத்தைத் தரும் , ` திருச்சோற்றுத்துறை ` என்னுந் தலமே , இலையாலாயினும் அன்போடு துதிக்கின்ற அவர்கட்கு , நிலையாத இவ்வுலக வாழ்வை நீக்குபவ ராகிய இறைவனது இடமாகும் .

குறிப்புரை :

` இலை ` என்றது அதனைத் தூவுதலைக் குறித்தது . ` இலையால் ` என்றவிடத்து , ` ஆயினும் ` என்பது எஞ்சி நின்றது ; அதனால் , ` பூவைத் தூவித் துதித்தலே செய்யத்தக்கது ` என்பது பெறப் படும் . ` என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையுமெல்லாம் அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே ` ( தி .4 ப .92 பா .10) ` போதும் பெறாவிடிற் பச்சிலை யுண்டு புனலுண்டெங்கும் ஏதும் பெறாவிடில் நெஞ்சுண் டன்றே ` ( தி .11 திருக்கழுமல மும்மணிக்கோவை -12) என்றாற்போலும் திருமொழிகளால் , பூக்கொண்டு வழிபடுதலே சிறந்ததாதல் அறியப்படுமாறு உணர்க . ` போதும் ` என்றதில் உள்ள உம்மை , ` அரியவனாய இறைவனை மலரால் எளியவனாகப் பெறலாம் ` என்பதை விளக்குவதாம் . ` நொச்சி யாயினுங் கரந்தை யாயினும் பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர் ` ( தி .11 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை -19) என்றதும் , பச்சிலையாதற்கண் சிறந்தன சிலவற்றை அருளியவாறே யாம் என்க . ` நிலையா வாழ்வை நீத்தார் ` என்றது , நிலைத்த வாழ்வை அளித்தார் ` என்னும் கருத்துடையதாம் . ` தாழும் ` என்ற பெயரெச்சம் , ` தவத்தோர் ` என்றதில் உள்ள , ` தவம் ` என்பதனோடு முடிந்தது . தாழுதலையே , ` தவம் ` என்றாராகலின் , பெயரெச்சம் , தொழிற்பெயர் கொண்டு முடிந்ததாம் . ` செல்வச் சோற்றுத்துறை ` என்ற , இரண்டா வதன் பெயர்த் தொகையை , இவ்விடத்திற்கு ஏற்ற பெற்றியான் விரிக்க . முன்னர் , ` நிலையாவாழ்வை நீத்தார் இடம் ` என்றதனால் , பின்னர் , ` தொலையாச் செல்வம் ` என்றது , உலகச் செல்வத்தை யேயாம் . ஆகவே , திருச்சோற்றுத்துறையை அடைந்தவர் , இருவகைச் செல்வத்தையும் பெறுதல் பெறப்பட்டது . ` சோற்றுத்துறை ` என்னும் பெயரும் குறிக்கொளத்தக்கது . ` சோறு ` என்பது , வீடுபேறும் ஆதலை . ` பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் ` ( தி .8 திருவா . திருத்தோ .7) என்பதனாலும் அறிக . இறைவனது ஆணையால் தலங்களும் தம்மை அடைந்தோர்க்குப் பயன்தரும் என்க . ` தவத்தோர் என்றும் தொலையா ` என்பதும் பாடம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்
தற்றார் அடியார் அடிநாய் ஊரன்
சொற்றான் இவைகற் றார்துன் பிலரே

பொழிப்புரை :

பற்றற்றவராகிய அடியார்களது அடிக்கு நாய் போலும் நம்பியாரூரன் , சுற்றிலும் , நிறைந்த நீரையுடைய திருச் சோற்றுத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற , இளமையான சந்திரனைச் சூடிய முதல்வனது திருவடிக்கண் இப்பாடல்களைப் பாடினான் ; இவைகளைக் கற்றவராவார் , யாதொரு துன்பமும் இல்லாதவராவர் .

குறிப்புரை :

` சேர்முதல்வன் `, பிறவினை வினைத்தொகை . தன்வினையெனினும் இழுக்காது . ` இவை ` என்றது தாப்பிசையாய் , ` சொற்றான் ` என்றதற்கு முன்னும் சென்று இயையும் . இவ்வாறன்றி , ` சொல் தான் ` எனப் பிரித்து , ` பாதத்து ` என்புழி , ` சொற்ற ` என்பதனை வருவித்து , ` தான் ` என்றதனை அசைநிலையாக்கி உரைத்தலுமாம் . இவ்வுரைக்கு , ` சொல் ` என்பது , சொல்லுதற் கருவியாகிய , ` வாக்கு ` என்னும் பொருளதாய் , ஆகுபெயரால் , பாடல்களைக் குறித்தது எனப்படும் . ` கற்றார் ` என்றது , எதிர் காலத்துக்கண் வந்த இறந்த காலம் . இறந்த காலமும் , எதிர்காலமும் இங்ஙனம் மயங்கி வருதலை , ` நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான் ; பின் நீ என் செய்வை ` என்றாற்போலும் எடுத்துக்காட்டுக்களான் அறிக .
சிற்பி