திருவாரூர்ப் பரவையுண் மண்டளி


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயா கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
காவாஎன் பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

தூய்தாகிய வாயினையுடையவனே , திருப்பரவை யுண் மண்டளியில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , உனக்குத் தொண்டு செய்பவர்கள் படுகின்ற துன்பங்களை நீக்கமாட்டாயோ ! ஐவர்கள் என்னை எப்போதும் குறிக்கொண்டு நோக்கி , உன்னை அடையவொட்டாமல் தடுப்பினும் , நாவையுடைய வாயால் , உன்னையே , நல்லவற்றைச் சொல்லிப் புகழ்வேனாகிய எனக்கு , ` ஆவா ` என்று இரங்கி , அச்சந் தீர்த்தருள் .

குறிப்புரை :

` தூவாய் ` என்றது , வேதத்தைச் சொல்லும் வாய் ` என்றவாறு . இங்ஙனம் வாயைச் சிறப்பித்தருளியது , ` அதனால் அஞ்சேல் என்று சொல் ` என்றற்காம் . ` காவாயா ` என்றது ` காப்பவ னல்லையோ ` என்றபடி . ` காவாயே ` எனவும் பாடம் ஓதுவர் . ` கண்டு கொண்டார் `, முற்றெச்சம் . ஐவர் - ஐம்புலன்கள் . ` நாவாய் ` என விதந்தோதியது , அவையிரண்டும் பிறிதொன்றைச் சொல்ல முயலாமையை விளக்குதற் பொருட்டு நல்லன , பலருக்குச் செய்த திருவருட் செயல்கள் . ` சொல்லுதல் ` என்றது , ` சொல்லிப் புகழ்தல் ` எனப் பொருள் தந்தது . ` என் ` என்றது , தன் காரியத்தின்மேல் நின்றது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி
மின்னானே செக்கர்வா னத்திள ஞாயி
றன்னானே பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

பொன்போலச் சிறந்தவனே , தன்னாலே தன்னைப் புகழ்கின்ற , தானே விளங்குவதோர் ஒளியானவனே , ஒரோவொரு கால் தோன்றி மறைதலால் மின்னலொடு ஒப்பவனே , செக்கர் வானத்தில் தோன்றும் இளஞ்சூரியன் போலும் திருமேனியை உடையவனே , திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே , நின் புகழை எடுத்துரைத்தல் , ஞானியர்க்கு இயல்வதாம் ,

குறிப்புரை :

` ஆம் ` என்றது , ` சிறிதேனும் இயல்வதாம் , என்றபடி . ` தன்னானே தன்னைப் புகழ்ந்திடும் சோதி ` என்றது , ` புகழ்வோனும் நீயே ; புகழப்படுபவனும் நீயே ` என்றவாறு . இறைவனையின்றி யாதொரு பொருளும் இல்லையாகலின் . அவன் புகழ்வோனாகியும் நிற்குமாறு அறிக , இவ்வுண்மை உணர்ந்தவர்கட்கே , ` நான் ` என்னும் தற்போதம் நீங்குவதாம் , இதன் பொருட்டே , சிவபூசையின் முடிவில் செபம் , கன்மம் முதலியவற்றைச் சிவபெருமானுக்குத் தானம் செய்யும் மந்திரத்துள் , ` கொடுப்பவனும் சிவனே ` அனுபவிப்பவனும் சிவனே ` என்பன முதலியவற்றோடு , ` வழிபடுபவனும் சிவனே ` எனக் கூறப் படுகின்றது . அதனையே , ` பூசையும் பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யும் நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும் ஈசனும் ஆகிப் பூசை யான்செய்தேன் எனும்என் போத வாசனை யதுவு மான மறைமுத லடிகள் போற்றி - திருவி . புரா . இந்திரன் பழிபடலம் - பா .90 எனத் திருவிளையாடற் புராண முடையார் கூறினார் , முன்னர் வேறொன்றாக வைத்து விளக்கி , பின்னர் , அதுவாய் உள்ளவனே என்றமையின் , ` தன்னானே தன்னை ` என்றதில் , இடவழுவின்மை உணர்க . இனி இவ்வாறன்றி , ` ஆம் ` என்றதனைப் பெயரெச்சமாக்கி , ` தன்மையானே ` என்பது , ` தன்னானே ` என நின்றது எனக் கொண்டு , ` புலவர்க்கு நின்புகழ் போற்றலாமளவே புகழ்ந்திடும் சோதி ` என்றுரைத்தலுமாம் . இதற்கு , மேலைத் திருப்பாடலில் உள்ள , ` ஆவா என் ` என்பது இறுதியின் இயைத்துரைக்கப்படும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா புண்ணிய மானானே
பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க்
காமாறென் பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

புண்ணியத்தின் பயனாயும் , புண்ணியமாயும் உள்ளவனே , திருப்பரவையுண்மண்டளியுள் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , நீ அருளாதுவிடின் , நாப்பிறழாது உன்னையே நல்லன வற்றாற் புகழ்கின்றவர்கள் போவது எவ்வாறு ? பேய்கள் நீங்காத , பிணத்தை இடுகின்ற காட்டில் விரும்பி ஆடுகின்ற உனக்கு அடிய வராதல் எவ்வாறு ?

குறிப்புரை :

` நீ அருளாதுவிடின் ` என்பது , ` போமாறென் , ஆமாறென் ` என்ற குறிப்பால் விளங்கும் ,

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்
காக்கின்றார் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத்
தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , ஐவர் என்னை நல்லனவற்றை நோக்காது குறிக்கொண்டு காக்கின்றார் . அவ்வாறு காத்து நிற்பினும் , சொல் லென்னும் மாலையால் , உன்னை என் மனத்தில் இருத்துகின்றேன் ; உன்னையே நினைக்கின்றேன் .

குறிப்புரை :

` என்னை இவ்வாறு வருத்துதல் முறையோ ` என்பது குறிப்பெச்சம் . ` நோக்காமைக் காக்கின்றாய் ` என்பதும் பாடம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பஞ்சேரும் மெல்லடி யாளையொர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே
நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேலென் பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

செம்பஞ்சு காணப்படும் மெல்லிய அடிகளை யுடையவளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு , நஞ்சு காணப்படும் , நல்ல நீலமணி போலும் கண்டத்தை உடையவனே , திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , உன்னை நெஞ்சில் விளங்கும்படி அழுந்தி நினைக்கின்ற அடியார் களை , ` அஞ்சேல் ` என்று சொல்லிக் காத்தருள் .

குறிப்புரை :

ஏர்தல் - எழுதல் , அழுந்தி நினைத்தல் - மறவாது நினைத்தல் . ` நினைவார் ` என , தம்மையே பிறர்போல அருளினார் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

யாவர்க்கும் தலைவனே , ஆகம ஒழுக்கத்தை உடையவர்கட்கு , உனது திருவருளைத் தருகின்ற பெரியோனே , திருப்பிடவூரில் உறையும் பேரருளாளனுக்குத் தலைவனே , தண்ணிய தமிழால் இயன்ற நூல்களை வல்ல புலமை வாழ்க்கை உடையவர்க்கு , ஒப்பற்ற முதல்வனே , திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனே , உன்னை மறவாது நினைக்கின்ற அடியார் களை . ` அஞ்சேல் ` என்று சொல்லிக் காத்தருள் .

குறிப்புரை :

` அம்மான் ` என்பது , மூன்றிடத்தும் , குறிப்பாகவும் , வெளிப்படையாகவும் வேறு வேறு அடைமொழியோடு நிற்றலின் , கூறியது கூறல் ஆகாமை யறிக , ஆகமம் - சைவாகமம் . அதன் ஒழுக்கம் , சிவபெருமான் ஒருவனையே முதல்வனாக உணர்ந்து , ` சரியை , கிரியை , யோகம் , ஞானம் ` என்னும் , நான்கு நிலைகளில் இயன்றவகையால் அவனை வழிபடுதல் . சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலையில் இறைவன் திருமுன் கேட்பித்த ஞான வுலாவை , மாசாத்தனார் , திருப்பிடவூரில் கொணர்ந்து நிலவுலகிற்கு அளித்தமை பெரிய புராணத்தால் அறியப்படுதலால் , மாசாத்தனார் , திருப்பிடவூரில் தொன்மையாகவே கோயில் கொண்டிருந்தமை பெறப்படும் , ஆகவே , ` பேரருளாளன் பிடவூரன் ` எனச் சுவாமிகள் அருளிச் செய்தது , மாசாத்தனாரையே என்பது உணரலாகும் , அன்றி , இதற்குப் பொருந்தும் பொருள் வேறு உண்டேனும் கொள்க . இத் தொடரும் இறைவனையே குறித்து வந்த அண்மை விளிப்பெயர்களாக உரைப்பாரும் உளர் , புலவாணர் - புலமை வாழ்க்கை யுடையவர் ; புலவர் . முதனூலைச் செய்தளித்தலின் , இறைவன் அவர்கட்கு முதல்வனாயினான் என்க . இடைக்காலத்தும் , பொருளதிகாரம் ஒன்று செய்தளித்தமை பற்றிச் சேக்கிழார் , இறைவனை , ` நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானை ` ( தி .12 திருஞான . புரா . 883.) என்று அருளினார் . இன்னும் , தமிழ் ஆராயப்பட்ட சங்கங்கள் மூன்றனுள் , சிவபெருமான் முதற்சங்கத்து வீற்றிருந்தமை பற்றி அவர் , அப்பெருமானை , ` தலைச்சங்கப் புலவனார் ` என்றும் அருளிச் செய்தார் ( தி .12 திருஞான - 667.) இதனை , சுவாமிகள் எடுத்தோதியது , தாமும் அருள் நெறிப் புலவாணராயினமை பற்றி என்க , ` நின்னையே உள்கி நினைவாரை அஞ்சேலென் ` என்பதனை , மேலைத் திருப் பாடலினின்றும் கொள்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

விண்டானே மேலையார் மேலையார் மேலாய
எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாம்முன்
கண்டானே கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே
அண்டானே பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

` மேல் உள்ளார்க்கு மேல் உள்ளார்க்கு மேல் உள்ள வானம் , எண் , எழுத்து , சொல் , பொருள் மற்றும் எல்லாவற்றையும் முதலிற் படைத்தவனே , வானுலகத்தில் உள்ளவனே , திருப்பரவை யுண்மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , முன்பு என் கண்ணைக் கொண்டாய் ; இப்பொழுது அதனைக் கொடுத்து உன்னைக் காட்டியருள் .

குறிப்புரை :

` விண்தானே , எண்தானே ` என்றவற்றில் உள்ள ` தான் ` அசைநிலை . ஏகாரங்கள் , எண்ணிடைச்சொல் , மேலையார் , பிரகிருதி மாயைக்கு உட்பட்ட விண்ணவர் , அவர்கட்கு மேல் உள்ளவர் , அசுத்த மாயா புவனத்தில் உள்ளவர்கள் , அவர்கட்கு மேல் உள்ள வானம் , சுத்தமாயா புவனம் , இதனை , ` மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி ` ( தி .6. ப .57 பா .7) என்ற ஆளுடைய அரசுகள் திருமொழியோடு ஒருபுடையால் வைத்து நோக்கற் பாலது , சொல்வடிவாய உலகம் . எண்ணும் எழுத்தும் என இருவகைத்து , அவற்றுள் , ` எழுத்து ` என்னும் பகுதியை , ` எழுத்து , சொல் , பொருள் ` என மூன்றாக வகுத்தல் , தமிழ் வழக்கு . ஆதலின் , எண்ணினை , ` தானே ` என வேறு பிரித்தும் , ஏனையவற்றை ஒருங்கு வைத்தும் அருளிச் செய்தார் . சொல்லுலகத்திற்கு முதலாவது சுத்த மாயை யாகலின் , பின்னர் அவ்வுலகத்தை வகுத்தோதுவார் , முதற் கண் , அதற்கு முதலாய சுத்த மாயையை ஓதியருளினார் , ` மேலையார் மேலையார் மேலாய விண் ` என , முன்னே கூட்டுக . ` விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் புரித்தானைப் பதம்சந்திப் பொருள் உருவாம் புண்ணியனை ` ( தி .4 ப .7 பா .8) என்று அருளியவிடத்தும் தமிழ்வழக்குப்பற்றி , சொல்லுலகம் மூன்றாக வகுத்தருளிச் செய்யப்பட்டமை அறியற்பாற்று , இதனுள் , ` சந்தி ` என்றது எழுத்தினையாதல் வெளிப்படை . ` கொண்டிட்டு ` என , எச்ச மாக ஓதினாராயினும் , ` கொண்டிட்டாய் ` என முற்றாக உரைத்தலே திரு வுள்ளம் என்க . இனி , எச்சமாகவே வைத்து , ` கண்ணைக் காட்டு கின்றிலை ` என உரைத்தலுமாம் , ` அண்டம் ` என்பது நீட்டலாயிற்று .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

காற்றானே கார்முகில் போல்வதொர் கண்டத்தெம்
கூற்றானே கோல்வளை யாளையொர் பாகமாய்
நீற்றானே நீள்சடை மேல்நிறை யுள்ளதோர்
ஆற்றானே பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

காற்றாய் உள்ளவனே , கரிய மேகம் போல்வதாகிய ஒப்பற்ற கண்டத்தையுடைய , எம் இனத்தவனே , கோல் தொழில் அமைந்த வளைகளை அணிந்தவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு திரு நீற்றை அணிந்தவனே , நீண்ட சடையின் மேல் நிறைவுள்ளதாகிய ஒரு நதியை உடையவனே , திருப்பரவை யுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே .

குறிப்புரை :

` கண்தனைக் கண்டாய் ` என்பதனை , மேலைத் திருப் பாடலினின்றும் வருவித்து முடிக்க , கூறு - பகுதி ; இனம் . ` வாயாரத்தன்னடியே பாடுந்தொண்டர் இனத்தகத்தான் ` ( தி .6 ப .8 பா .5)

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறும்
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
அடியேன் நான் பரவையுண் மண்டளி அம்மானே

பொழிப்புரை :

திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக் கின்ற தலைவனே , நான் குற்றமுடையேன் ; செய்யும் செயல்களை நல்லனவாகச் செய்யாத தீமையேன் ; கண்டதையெல்லாம் பெற விரும்பும் கொடியேன் ; உன் ஆணையின் வண்ணம் உன்னைப் பாடு மாற்றாற் பாடாத ஓர் அடியேன் .

குறிப்புரை :

` ஆயினும் , எனக்கு இரங்கியருள் ` என்பது குறிப் பெச்சம் . சுவாமிகள் தம் துயரமிகுதியால் இவ்வாறு கூறி இறைவரைப் பெரிதும் குரையிரந்தருளினார் , அதனானே , வினைதோறும் . ` நான் ` என்று , பன்முறை மறித்து அருளிச் செய்தார் , பணி , ` நம்மைச் சொற்றமிழ் பாடுக `( தி .12 தடுத் . புரா . 70) என்று இறைவர் பணித்தது , ` பணி ` என்றது , பணிக்கப்பட்ட நெறியைக் குறித்தது . ` பணியால் ` என , மூன்றாவது விரிக்க , ` எத்தன்மையேனாயி னும் யான் உன் அடியேனாதலின் கைவிடுதல் கூடாது ,` என்றற்கு , இறுதியில் , ` அடியேன் ` என்று அருளிச் செய்தார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே

பொழிப்புரை :

கரந்தை , வன்னி , ஊமத்தை , கூவிளை இவைகளை அணிந்த பரவிய புகழையுடைய திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனை , அன்பு நிறைந்த நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளை விருப்புற்றுப் பாடுவோர் , மேலோர்க்கு மேலோர்க்கு மேலோராவார் .

குறிப்புரை :

கரந்தை முதலியவற்றில், `இலை`, `பூ` என்பவற்றை ஏற்ற பெற்றியாற் கொள்க, `கூவிளம்` என்றதன்பின், `அணிந்த` என்பது, எஞ்சிநின்றது, இனி, `பரந்த-பரவ அணிந்த` என்று உரைத்தலும் ஆம். நிரம்பற்பாலது அன்பேயாகலின், அஃது, ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. `மேலையார் மேலையார் மேலார்` என்றதற்கு, மேல் (தி.7 ப.96 பா.7)) உரைத்தவாறுபற்றி உரைக்க, உரைக்கவே, `சிவலோகத்தில் இருப்பவராவர்` என்பது பொருளா மாறு அறிக.
சிற்பி