திருநன்னிலத்துப் பெருங்கோயில்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

தண்ணியல் வெம்மையினான் தலை
யிற்கடை தோறும்பலி
பண்ணியன் மென்மொழியா ரிடங்
கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறை
யாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

புண்ணியத்தைச் செய்கின்ற , நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள் , முறைப்படி தனது , திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடும்படி , பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத் தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தண்ணிய இயல்பினையும் , வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன் ; வாயில்கள்தோறும் சென்று , பண்போலும் இயல் பினையுடைய இனிய மொழியையுடைய மகளிரிடம் தலையோட்டில் பிச்சை யேற்றுத்திரிகின்ற ` பாண்டரங்கம் ` என்னும் கூத்தினை யுடையவன் .

குறிப்புரை :

இறைவனிடத்து அறமாய்க் காணப்படுவதும் , மறமாய்க் காணப்படுவதும் கருணை ஒன்றே யாதலின் , ` தண்மையை யும் , வெம்மையையும் ஒருங்குடையவன் ` என்று அருளினார் . மாறுபட்ட இருதன்மைகள் ஒரு பொருளிற் காணப்படுவது உலகில் இல்லாததோர் அற்புதம் என்றவாறு . ` மொழியாரிடக் கொண்டு ` என்பதும் பாடம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

வலங்கிளர் மாதவஞ்செய் மலை
மங்கையொர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங்கச் சடை
யொன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில்தண் பனி
வெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

பயன் மிகுந்த , பசிய சோலைகள் , குளிர்ந்த , வெள்ளிய சந்திரனைத் தடவுதலால் அழகு மிகுகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , வெற்றி மிக்க , பெரிய தவத்தைச் செய்த மலைமகளை ஒருபாகத்தில் உடையவனாய் , வெள்ளம் மிகுந்த கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றிலே தங்கும்படி தடுத்து வைத்துள்ளான் .

குறிப்புரை :

மலைமகள் தவம்செய்து இறைவன் மணக்கப் பெற்றமையைக் கந்தபுராணத்துட் காண்க . ` உலகமெல்லாம் அழியு மாறு வந்த கங்கையின் பெருக்கம் முழுவதும் சடை ஒன்றில் புல்நுனி மேல் நீர்போல் அடங்கச் செய்தவன் ` என , அவனது பேராற்றலை விதந்தருளிச் செய்தவாறு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கச்சியன் இன்கருப்பூர் விருப்
பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சையுண்ணி உல
கங்களெல் லாமுடையான்
நொச்சியம் பச்சிலையான் நுரை
தீர்புன லால்தொழுவார்
நச்சிய நன்னிலத்துப்
பெருங் கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

நொச்சியின் பச்சிலையும் , நுரை இல்லாத தூய நீரும் கொண்டு வழிபடுவோர் விரும்புகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் . கச்சிப் பதியில் எழுந்தருளியிருப்பவன் ; இனிய கரும்பின்கண் செல்லுகின்ற விருப்பம்போலும் விருப்பம் செல்லுதற்கு இடமானவன் ; தன்னை நினைந்து உருகுபவரது தலைமேல் இருப்பவன் ; பிச்சையேற்று உண்பவன் ; உலகங்கள் எல்லாவற்றையும் உடையவன் .

குறிப்புரை :

சிறப்புடைத் தலங்களுள் ஒன்றாதல் பற்றிக் கச்சியை விதந்தோதினார் . இன்பமே வடிவினனாகலின் , இன்பத்தை விரும்பும் இயல்பினவாய உயிர்கள் பலவற்றின் விருப்பத்திற்கும் இடம் இறைவனே என்க . ` பிச்சை உண்ணி ; உலகங்கள் எல்லாம் உடையன் ` என்றது , அவனது ஒன்றொடொன்றொவ்வா நிலைகளைக் குறித் தருளியவாறு . நுரையுடைய நீர் வழிபாட்டிற்கு ஆகாமையை அறிந்து கொள்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பாடிய நான்மறையான் படு
பல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத்தான் அடி
போற்றியென் றன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலர்
தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

தலைமேற் குவித்த கையை உடைய பலர் , மிக்க அன்புடையவர்களாய் , ` திருவடி போற்றி ` என்று , பொருந்திய தோத்திரங்களைச் சொல்லி அடைகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இறைவன் , தன்னால் பாடப்பட்ட நான்கு வேதங்களை யுடையவன் ; இறந்த பல பிணங்களையுடைய காடே அரங்கமாக ஆடுகின்ற , சிறந்த நடனத்தையுடையவன் .

குறிப்புரை :

` பல தோத்திரம் ` என்பதும் பாடம் . ` வாய்த்த ` என்றது வினைப்பெயர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பிலந்தரு வாயினொடு
பெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு
பிள வாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள்கோன்
நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , பிலம் போன்ற வாயையும் , பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்த ராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை , முன்பு , மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன் .

குறிப்புரை :

` நிலந்தரு ` என்றதனை , ` மக்களுக்கு நிலம் முதலிய செல்வத்தைத் தருகின்ற மாமகள் ` என திருமகளுக்கு ஆக்கி உரைத்தலுமாம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

வெண்பொடி மேனியினான் கரு
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிர
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின்
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

நல்ல பண்பினையுடைய நான்கு வேதங்களை உணர்ந்தவர்களாகிய அந்தணர்கள் , பல மந்திரங்களையும் நன்கு பயின்று , பன்முறை துதித்து வணங்கும் , நட்பாம் தன்மையுடைய திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக் கின்ற பெருமான் , வெண்பொடியைப் பூசிய மேனியை உடையவன் ; நீல மணிபோலும் கரிய கண்டத்தை யுடைவன் ; கங்கையாகிய பெண் பொருந்தியுள்ள சடையை உடையவன் ; பிரமதேவனது தலையை , பெருமை கெட அறுத்தவன் .

குறிப்புரை :

` சிரம் பீடழித்தான் ` என்றதனை , ` யானையைக் கோட்டைக் குறைத்தான் ` என்பதுபோலக் கொள்க . நட்பாந்தன்மை - பலராலும் விரும்பப்படும் தன்மை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

தொடைமலி கொன்றைதுன்றுஞ் சடை
யன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய்யிற் பகட்
டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கமலம் மலர்
மேன்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

இளமையான அன்னப் பறவைகள் , நீர்மடைகளில் நிறைந்துள்ள , வளவிய தாமரை மலர்மேல் தங்கிப் பின் அப்பாற் சென்று நடத்தல் நிறைந்த திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , மாலையாக நிறைந்த கொன்றைமலர் பொருந்திய சடையை உடையவன் ; ஒளிவீசுகின்ற வெள்ளிய மழுவாகிய ஆளும் படைக்கலம் நிறைந்த கையை உடைய வன் ; திருமேனியில் யானையினது உரித்த தோலாகிய போர்வையை உடையவன் .

குறிப்புரை :

மழு நிறைதலாவது , அவனது அகங்கைக்கு ஏற்புடைய தாய் இருத்தல் . இனி அழகு நிறைந்திருத்தல் என்றுமாம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

குளிர்தரு திங்கள்கங்கை குர
வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமேல் உடை
யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங்கை தட
மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

நறுமணம் பொருந்திய , தளிர்களைத் தருகின்ற கோங்கு , வேங்கை , வளைவையுடைய குருக்கத்தி , சண்பகம் முதலிய பூமர வகைகள் பலவும் குளிர்ச்சியைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , தனது ஒளிவீசுகின்ற , புல்லிய சடையின்மேல் , குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரன் , கங்கை , பாம்பு , குராமலர் , கூவிள இலை முதலிய இவைகளை உடையவன் ; இடபத்தை ஊர்கின்றவன் ;

குறிப்புரை :

திங்கள் முதலியனவாகவும் , கோங்கு முதலியனவாகவும் தொடர்ந்த பல்பெயர் உம்மைத் தொகைகளின் ஈற்றில் நின்ற உம்மைகள் , ஏனையவற்றையும் தழுவும் எச்ச உம்மைகள் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங்
கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்தி அருச்
சுனற்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழவில் தகு
சைவர்த வத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

உலகத்தவர் மிக்குள்ள தண்ணிய விழாக்களை யுடைய , தகுதிவாய்ந்த சைவர்களாகிய , தவத்திற் சிறந்த நம்மவர் மிக்கு வாழ்கின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , நிலப் பிளப்புக்கள் மிகுந்த கொடிய கற்சுரத்தில் , கொடிய பன்றியின்பின்னே வேடுவனாய்ச் சென்று அருச்சுனனோடு போராடுதலைப் பொருந்தி , அவனுக்குத் திருவருள் செய்த தலைவனாவான் .

குறிப்புரை :

தவத்தின் மிக்காரை , ` நமர் ` எனத் தம்மொடு படுத்து அருளினமையின் , ` தமர் ` என்றது , அயலவராகிய உலகத்தாரை யாயிற்று . அவர்கள் பயிலுகின்ற விழா , உலகியலில் உள்ள மங்கல வினைகள் . ஆகவே , தண்மை , மகிழ்ச்சியைக் குறித்ததாம் . தவமாவது இறப்பில் தவமாகிய ( சிவஞானபோதம் - சூ .8 அதி .1 வெ .2) சிவபுண்ணியமே என்பது விளங்குதற்பொருட்டு , ` சைவராகிய தவத்தவர் ` என்று அருளினார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

கருவரை போல்அரக்கன் கயி
லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லால்அடர்த்தின் னருள்
செய்த வுமாபதிதான்
திரைபொரு பொன்னிநன்னீர்த் துறை
வன்திகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே

பொழிப்புரை :

அலை மோதுகின்ற காவிரியாற்றினது நல்ல நீர்த்துறையை உடையவனும் , சோழர்கோமகனும் ஆகிய அரசன் செய்த , திருநன்னிலத்துப் பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற பெருமான் , அரக்கனாகிய இராவணன் , கயிலாய மலையின்கீழ் , கரியமலைபோலக் கிடந்து கதறும்படி ஒரு விரலால் நெருக்கிப் பின்பு அவனுக்கு அருள்புரிந்த உமை கணவனாகும் .

குறிப்புரை :

` உமாபதி ` என்றது , ஒரு பெயரளவாய் நின்றது . பொருதலுக்கு , ` கரை ` என்னும் செயப்படுபொருள் வருவிக்க . நரபதி - மக்களுக்குத் தலைவன் ; அரசன் . இங்குக் குறிக்கப்பட்ட சோழ அரசர் , கோச்செங்கணாயனார் என்பதனை , வருகின்ற திருப்பாடலுள் அறிக . இவரது வரலாற்றை , பெரிய புராணத்துட் காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

கோடுயர் வெங்களிற்றுத் திகழ்
கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங்
கோயில்ந யந்தவனைச்
சேடியல் சிங்கிதந்தை சடை
யன்திரு வாரூரன்
பாடிய பத்தும்வல்லார் புகு
வார்பர லோகத்துளே

பொழிப்புரை :

தந்தங்கள் உயர்ந்து காணப்படுகின்ற வெவ்விய யானையின்மேல் விளங்குகின்ற கோச்செங்கட்சோழ நாயனார் செய்த , யாவரும் விரும்புகின்ற , திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அழகு பொருந்திய சிங்கடிக்குத் தந்தையும் , சடையனார்க்கு மகனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள் , பரலோகத்துள் புகுவார்கள் .

குறிப்புரை :

` சிங்கடி ` என்பது , ` சிங்கி ` எனக் குறுக்கப்பட்டது . ` சடையன் ` என்றதன்பின் , ` மகன் ` என்பது எஞ்சிநின்றது .
சிற்பி