திருநாகேச்சரம்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

பிறையணி வாணுதலாள் உமை
யாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங்க நீல
மால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல்லை அளைந்
துகுளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள்சேர் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

சிறகுகளையுடைய அழகிய வண்டுகள், இன்றி யமையாத, அழகிய துளசியிலும், முல்லை மலர்களிலும் மகரந்தத்தை அளைந்து, பின்பு குருக்கத்திக் கொடியின்மேல் சேர்கின்ற திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ பிறைபோலும், அழகிய, ஒளிபொருந்திய நெற்றியை உடையவளாகிய உமையவள் மருளவும், திட்பம் பொருந்திய மனம் கலங்கவும், நீல நிறத்தை உடைய, பெரிய நஞ்சினை உண்டதற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`தேவர்களைக் காத்தற் காரணமாக எழுந்த கருணைதானோ?` என்பது குறிப்பெச்சம். வருகின்ற திருப்பாடல் களில் இவ்வாறுரைப்பனவும் அவை. கணித்தல் - எண்ணுதல், பேழ் கணித்தல் பெரிதும் எண்ணுதல். இது, கழிவிரக்கம், ஐயம், மருட்கை முதலிய பொருள்களை உணர்த்தும். குறை - இன்றியமையாமை. `கொல்லை முல்லை` என்பதும் பாடம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

அருந்தவ மாமுனிவர்க் கரு
ளாகியொர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரிதற் கியல்
பாகிய தென்னைகொலாம்
குருந்தய லேகுரவம் மர
வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மலருந் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

குருந்த மரத்தின் பக்கத்தில் குராமரம், பாம்பினது பல்லைத் தாங்கினாற்போல அரும்புகளைத் தோற்றுவிக்க, செருந்தி மரம், செம்பொன்போலும் மலரைக் கொண்டு விளங்கும் திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, அரிய தவத்தையுடைய சிறந்த முனிவர்கள்மேல் கருணை கூர்ந்து, ஓர் ஆலமரத்தின் கீழ் இருந்து அறத்தைச் சொல்ல இசைந்ததற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`உலகத்தை உய்விக்குங் கருணைதானோ?` என்பதாம். ``அருளாகி`` என, பண்பின் வினை, பண்பின்மேல் நின்றது. ``இயல் பாகியது`` என்றது, அவரது கருத்திற்கேற்ற தன்மையனாகியது என்ற வாறு. ``கொல், ஆம்`` அசைநிலைகள்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

பாலன தாருயிர்மேற் பரி
யாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத்
தாக்கிய தென்னைகொலாம்
கோல மலர்க்குவளைக் கழு
நீர்வயல் சூழ்கிடங்கில்
சேலொடு வாளைகள்பாய் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

அழகிய குவளை மலர்களையும், செங்கழுநீர் மலர்களையும் உடைய வயல்களைச் சூழ்ந்துள்ள வாய்க்கால்களில், சேல் மீன்களும், வாளை மீன்களும் துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, சிறுவன் ஒருவன்மேல் இரக்கங் கொள்ளாது பகைத்து, அவனது அரிய உயிரைக் கவர வந்த இயமனை அழிவித்து, அச்சிறுவனுக்கு அருளை வழங்கியதற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`அடைக்கலமாக அடைந்தவரைக் காக்கும் கருணை தானோ?` என்பதாம். `பதைத் தெழுந்த காலனை` என்பதும் பாடம். கருத்து - திருவுள்ளம். அதனை ஆக்கியது, மார்க்கண்டேயர்பால் என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

குன்ற மலைக்குமரி கொடி
யேரிடை யாள்வெருவ
வென்றி மதகரியின் னுரி
போர்த்ததும் என்னைகொலாம்
முன்றில் இளங்கமுகின் முது
பாளை மதுஅளைந்து
தென்றல் புகுந்துலவுந் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

இல்லங்களின் முன்னுள்ள இளைய கமுகமரத்தின் பெரிய பாளைகளில் கட்டப்பட்ட தேன் கூடுகளில் உள்ள தேனை, தென்றற் காற்றுத் துழாவி, தெருக்களில் வந்து உலவுகின்ற திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, பல குன்றுகளையுடைய இமய மலையின் மகளாகிய, கொடிபோலும் இடையையுடைய உமை அஞ்சும்படி, வெற்றியையும், மதத்தையும் உடைய யானையின் தோலை உரித்ததே யன்றி, அதனைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டதற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`உலகிற்கு இடர் தீர்த்தலேயன்றி, தீர்க்க வல்லவன் என்றும் காட்டுதல்தானோ?` என்பதாம். ``குன்று`` என்றது, சூழ உள்ள பலவற்றை, மருதநிலமாதலின், முன்றில்களில் கமுக மரங்கள் உள்ளன என்க. கமுகம் பாளைகளில் வண்டுகள் தேன்கூடு அமைத்தல் இயல்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

அரைவிரி கோவணத்தோ டர
வார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத் தன்
றுகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணியும் வரைச்
சந்தகி லோடும்உந்தித்
திரைபொரு தண்பழனத் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

மலைகள் தந்த சிறந்த மாணிக்கங்களையும், அவற்றில் உள்ள சந்தனக்கட்டை, அகிற்கட்டை என்பவைகளுடன் தள்ளிக்கொண்டு வந்து, அலைகள் மோதுகின்ற, குளிர்ந்த வயல்களை யுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ, அரையின்கண், அகன்ற கோவணத்தோடு பாம்பைக் கட்டிக்கொண்டு, ஒப்பற்ற நான்கு வேதங்களின் பொருளை, அன்று விரிவாகச் சொல்லி, அதனைக் கேட்டோரை விரும்பி, அவருக்கு அருள் செய்தற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`முதல்நூலின் உண்மைப் பொருள் பிறழாது விளங்கக் கருதியதுதானோ?` என்பதாம். சிவபிரான் வேதத்தை அருளியதே யன்றி, அதன்பொருளை உரைத்த வரலாறுகளும் சொல்லப்படுதல் அறிக. `அவ் வரை` எனச் சுட்டு வருவிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை யுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நிலைபெற்ற பெரிய தவத்தினால், வேள்வித்தீயினின்றும் தோன்றிய சிங்கமும், நீண்ட புலியும், பருத்த பெரிய யானையோடே கதறி அழியும்படி மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின்றும் உரித்த தோலைப் போர்த்த தற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்தானோ?` என்பதாம். தவம், தாருகாவன முனிவர் களுடையது என்க. அம்முனிவர்கள் செய்த வேள்வியில் புலியே யன்றி, `சிங்கம், யானை` என்பனவும் தோன்றினமையை இத்திருப் பாடலால் அறிகின்றோம். `போர்த்தல்` என்பது, `மறைத்தல்` என்னும் பொருளதாய், `உடுத்தல், போர்த்தல்` இரண்டற்கும் பொதுவாய் நின்றது. யானை யுருவங்கொண்ட அசுரனை அழித்ததன்றி, இவ்வாறு கூறும் வரலாறும் உளதென்பதும் இங்கு அறியப்படுகின்றது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

நின்றஇம் மாதவத்தை யொழிப்
பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள் பொடி
யாக விழித்தலென்னே
பங்கய மாமலர்மேல் மது
வுண்டுவண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல்சூழ் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

இப்பாடல், ஏடெழுதினோராற் பிழைபட்டதும் மிகையாகப் பிரதிகளில் சேர்ந்தது போலும்! இதனை, ஒன்பதாந் திருப்பாடல் கொண்டு உணர்க.)

குறிப்புரை :

*************

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

வரியர நாணதாக மா
மேரு வில்லதாக
அரியன முப்புரங்கள் ளவை
ஆரழல் ஊட்டல்என்னே
விரிதரு மல்லிகையும் மலர்ச்
சண்பக மும்மளைந்து
திரிதரு வண்டுபண்செய் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

சோலைகளில் திரிகின்ற வண்டுகள், மலரும் நிலையில் உள்ள மல்லிகை மலரிலும், சண்பக மலரிலும் மகரந்தத்தை அளைந்து, இசையைப் பாடுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளி யிருப்பவனே, நீ, கீற்றுப் பொருந்திய பாம்பே நாணியாகவும், மாமேரு மலையே வில்லாகவும் கொண்டு, அரியவான மூன்று ஊர்களை, அரிய தீ உண்ணும்படி செய்ததற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`நின்னை மறந்த குற்றத்தைத் தீர்த்தற்பொருட்டுத் தானோ?` என்பதாம். `மலர்` என்றதனை, `விரிதரும்` என்றதன் பின்னர்க்கூட்டி யுரைக்க. `வரிமாமேரு` என்பதொரு பாடம் காணப் படுகின்றது; அதனை, `வரை மாமேரு` என்று ஓதிக்கொள்ளுதல் சிறக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

அங்கியல் யோகுதனை யழிப்
பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணைவேள் பொடி
யாக விழித்தல்என்னே
பங்கய மாமலர்மேல் மது
வுண்டுபண் வண்டறையச்
செங்கயல் நின்றுகளுந் திரு
நாகேச் சரத்தானே.
 

பொழிப்புரை :

குளங்களில், தாமரை மலர்களின் மேல் வண்டுகள் தேனை உண்டு இசையைப்பாட, செவ்விய கயல்மீன்கள், நிலைபெற்று நின்று துள்ளுகின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, கயிலையின்கண் செய்த யோகத்தைக் கெடுத்தற்குச் சென்று சேர்ந்து, பெரிதும் சினங்கொண்ட, மலர்க்கணையை உடைய மன்மதன் சாம்பராகும்படி ஒரு கண்ணைத் திறந்ததற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`உனது காமமின்மையைக் காட்டுதற்குத் தானோ?` என்பதாம். ``அங்கு`` என்றது, பண்டறி சுட்டு. யோகு செய்த இடம் திருக்கயிலையாதலின், ``அங்கு`` என்றும், `சென்று` என்றும் அருளிச் செய்தார்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

குண்டரைக் கூறையின்றித் திரி
யுஞ்சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்டதன்மை விர
வாக்கிய தென்னைகொலோ
தொண்டிரைத் துவணங்கித் தொழில்
பூண்டடி யார்பரவும்
தெண்டிரைத் தண்வயல்சூழ் திரு
நாகேச் சரத்தானே.

பொழிப்புரை :

அடியார்கள், அடிமைத்தொழில் பூண்டு, ஆர வாரித்து வணங்கித் துதிக்கின்ற, தெளிந்த அலைகளையுடைய, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப் பவனே, மூர்க்கரும், மனவலியுடையவரும் ஆகிய, உடையின்றித் திரியும் சமணரும், புத்தரும் என்னும் பேய்போல்வாரை, அவர் கண்டதே கண்ட தன்மையைப் பொருந்தச் செய்ததற்குக் காரணம் யாது?

குறிப்புரை :

`அவர்களது வினைதானோ?` என்பதாம். `விரவாகி யது` என்பது பாடம் அன்று. ``தொழில் பூண்டு`` என்றதனை, `தொண்டு` என்றதன் பின்னர்க் கூட்டியுரைக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

கொங்கணை வண்டரற்றக் குயி
லும்மயி லும்பயிலும்
தெங்கமழ் பூம்பொழில்சூழ் திரு
நாகேச் சரத்தானை
வங்க மலிகடல்சூழ் வயல்
நாவல வூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல்லா ரவர்
தம்வினை பற்றறுமே.

பொழிப்புரை :

மகரந்தத்தை அடைந்த வண்டுகள் ஒலிக்க, குயிலும், மயிலும் பாடுதலையும், ஆடுதலையும் செய்கின்ற, தேனினது மணங் கமழ்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந் தருளியிருக்கின்ற இறைவனை, மரக்கலங்கள் நிறைந்த கடல்போலச் சூழ்ந்துள்ள வயல்களையுடைய திருநாவலூரானாகிய நம்பியாரூரன் பாடிய, குறையில்லாத இப்பாடல்களைப் பாட வல்லவர்களது வினை பற்றறக் கழியும்.

குறிப்புரை :

`கொங்கமர்` என்பதே பாடம் போலும்! `தேங்கமழ்` என்பது குறுகி நின்றது. `தெங்கணை பூம்பொழில்` என்பதும் பாடம். `கடல்சூழ்` என்றது வினையுவமம். ``நாவலவூரன்`` என்பதில் வந்த அகரம், சாரியை. `வயல் நாவலாரூரன்` என்பதும் பாடம். ``அவர்`` பகுதிப் பொருள் விகுதி.
சிற்பி