திருநொடித்தான் மலை


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

தானெனை முன்படைத்தான் அத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் , தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித் தருளினான் ; தோற்றுவித்த அத்திருக் குறிப்பினையுணர்ந்து அவனது பொன்போலும் திருவடிகளுக்கு , அந்தோ , நான் எவ்வளவில் பாடல்கள் செய்தேன் ! செய்யாதொழியவும் , அப்புன்மை நோக்கி ஒழியாது , என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்தெண்ணி , வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு , பெரியதோர் யானை யூர்தியை எனக்கு அளித்து , எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம் . ` அது அறிந்து ` என்றதனால் , தோற்றுவித்தது , பாடுதற்பொருட்டு என்ற தாயிற்று . ` அடிக்கு ` என்பது வேற்றுமை மயக்கம் . நொடித்தல் அழித்தல் . எனவே , ` நொடித்தான் மலை ` என்றது , ` அழித்தற் கடவுளது மலை ` என்னும் பொருளதாய் , திருக்கயிலை மலைக்குப் பெயரா யிற்று . ` நொடித்தான் ` என இறந்த காலத்தால் அருளிச் செய்தது , நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவன் ஈச னொருவனே . ( தி . 5 ப .100 பா .3) என்றருளிச் செய்தவாறு , எண்ணில்லாத தேவர் யாவரையும் ஈறுசெய்து , தான் ஈறின்றியே நிற்கும் முதன்மையினை விளக்குதற் பொருட்டு . இதனானே , என்றும் அவ்வாறு நிற்றல் இனிது பெறப்படும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

ஆனை உரித்தபகை அடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ்
செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

யான் , கருவி கரணங்களை அறிவினால் அடக்கி , அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன் ; அவ்வளவிற்கே , திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந் தருளும் அம் முதல்வன் , வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு , ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான் ; அஃது , அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியே னால் நீங்கச்செய்து , அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ !

குறிப்புரை :

ஓடு , ஆன் உருபின் பொருளில் வந்தது . ` கொல் ` ஐயமாகலின் , அதற்குரியது வருவித்துரைக்கப்பட்டது . ஓகாரம் , அசை நிலை . ` மதித்த ` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

மந்திரம் ஒன்றறியேன் மனை
வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரி
சேசெயுந் தொண்டன்எனை
அந்தர மால்விசும்பில் அழ
கானை யருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

நெஞ்சே , அடியேன் , மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி , அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது , அழகைத் தரும் வேடங்களைப் புனைந்துகொண்டு , இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன் ; எனக்கு , திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் , வெளியாகிய பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ !

குறிப்புரை :

அந்தரம் - வெளி . ` என்னை ` என்பது வேற்றுமை மயக்கம் . ` தரம் ` உடையதனைத் ` தரம் ` என்று அருளினார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

வாழ்வை உகந்தநெஞ்சே மட
வார் தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென்னை அது
மாற்றி அமரரெல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்ட
னேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

உலக இன்பத்தை விரும்பிய மனமே , பெண்டிரால் உண்டாகும் வலிய வினையாகிய குழியில் விழுந்துஅழுந்திக் கிடந்த என்னை , திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் , அந்நிலையினின்றும் நீக்கி , தேவரெல்லாரும் சூழ்ந்து அழைத்து வருமாறு ஆணையிட்டு , என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்டதாகிய ஓர் யானை யூர்தியை அருளித்தருளினான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

ஆழ முகத்தல் - அழுந்துதல் . ` ஆழத்தை விரும்பிய ` என்றும் ஆம் . ` ஆழ வுகந்த ` என்பது பாடம் போலும் !

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

மண்ணுல கிற்பிறந்து நும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல் தொண்ட
னேன்இன்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர்கள் விரும்
பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

` மண்ணுலகில் மக்களாய்ப் பிறந்து நும்மைப் பாடுகின்ற பழவடியார் , பின்பு பொன்னுலகத்தைப் பெறுதலாகிய உரை யளவைப் பொருளை , அடியேன் இன்று நேரிற்கண்டேன் ` என்று தன்பால் வந்து சொல்லுமாறு , திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந் தருளும் முதல்வன் , தேவரும் கண்டு விருப்பங்கொள்ள , என் உடம்பை வெள்ளை யானையின்மேல் காணச் செய்தான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

` கண்டொழிந்தேன் ` என்புழி , ` என ` என்பதொரு சொல் வருவிக்க . ` நும்மை ` என்பதனை , ` தன்னை ` எனப் பாட மோதுதலே சிறக்கும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அஞ்சினை ஒன்றிநின்று அலர்
கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மனமே வைகி
வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட
னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் , ஐம்புலன்களைப் பொருந்தி நின்று , பூக்களைக் கொண்டு தனது திருவடியை அணுக அறியாத வஞ்சனையை யுடைத்தாகிய என்மனத்தின்கண்ணே வீற்றிருந்து , எனக்கு இறப்பை நீக்கி , தேவர் களது கண்முன்னே , என் நிலைக்குப் பெரிதும் மேம்பட்ட , வெவ்விய சினத்தையுடைய யானையூர்தியை அளித்தருளினான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

` நின்று ` என்ற வினையெச்சம் , எண்ணின்கண் வந்தது . ` வெஞ்சினம் ` இனஅடை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

நிலைகெட விண்ணதிர நிலம்
எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் , விண்ணுலகம் தனது நிலைகெடுமாறு அதிரவும் , நிலவுலகம் முழுதும் அதிரவும் மலையிடைத்திரியும் யானை மீது ஏறி , தனது திரு மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே , அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணன் , பூக்களைக் கொண்டு , யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு , உடல் அழியாதே உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

` மலையிடை ` என்பது இன அடை . ` கடலால் ` என்றது , ` கடலுக்கு ` என வேற்றுமை மயக்கம் . ` உலையணையாத வண்ணம் ` என்புழி , ` செய்தான் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

அரவொலி ஆகமங்கள் அறி
வார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

` அரகர ` என்னும் ஒலியும் , ஆகமங்களின் ஒலியும் , அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும் , பல்வேறு வகையாகப் பொருந்திய வேதங்களின் ஒலியும் ஆகாயம் முழுதும் நிறைந்துவந்து எதிரே ஒலிக்கவும் , மேன்மை நிறைந்த , ` வாணன் ` என்னும் கணத்தலைவன் வந்து , முன்னே வழிகாட்டிச் செல்லவும் , ஏறத்தக்கதொரு முதன்மை நிறைந்த யானையை , திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன் எனக்கு அளித்தருளினான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

` வழிதர ` என்பது , ` வழிதந்து ` எனத் திரிந்து நின்றது . ` சிரம் ` என்றது , தலையாய தன்மையை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

இந்திரன் மால்பிரமன் னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
தான்மலை உத்தமனே

பொழிப்புரை :

திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான் , இந்திரன் , திருமால் , பிரமன் , எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு , எனக்கு யானை யூர்தியை அளித்தருளி , அங்கு , மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் , ` இவன் யார் ` என்று வினவ , ` இவன் நம் தோழன் ; ` ஆரூரன் ` என்னும் பெயரினன் ` என்று திருவாய் மலர்ந்தருளினான் ; அவனது திருவருள் இருந்தவாறு என் !

குறிப்புரை :

` நந் தமன் ` என்பதே பாடம் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

ஊழிதொ றூழிமுற்றும் உயர்
பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும்பின் சுவை
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமிழால் இசைந்
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சை
யப்பர்க் கறிவிப்பதே

பொழிப்புரை :

ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே ! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும் , பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை , திரு நாவலூரில் தோன்றியவனாகிய யான் , இசை நூலிற் சொல்லப்பட்ட , ஏழாகிய இசையினையுடைய , இனிய தமிழால் , மிக்க புகழை யுடையனவாகவும் , கரும்பின் சுவை போலும் சுவையினை யுடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப் பத்துப் பாடல்களையும் , திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு , நீ அறிவித்தல் வேண்டும் .

குறிப்புரை :

` திருக்கயிலை மலை , உலகமெல்லாம் அழிகின்ற ஒவ்வோர் ஊழியிலும் ஓங்கி உயர்வது ` என்பது , இத்திருப்பாடலில் குறிக்கப்பட்டிருத்தல் அறியத்தக்கது . ` நாவல ` என்ற அகரம் சாரியை . ` அறிவிப்பது ` என்பது , தொழிற்பெயர் . அதன்பின் , ` வேண்டும் ` என்பது சொல்லெச்சமாயிற்று . இதனால் , இத்திருப்பதிகம் நில வுலகத்தில் மலைநாட்டில் உள்ள திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கு உரித்தாதல் அறிக . சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் ஏழாம் திருமுறை மூலமும் - உரையும் நிறைவுற்றது .
சிற்பி