பண் :

பாடல் எண் : 10

புகவே தகேன்உனக் கன்பருள் யான்என்பொல்
லாமணியே
தகவே எனைஉனக் காட்கொண்ட தன்மைஎப்
புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண்
ணாஅமுதே
நகவே தகும்எம் பிரான்என்னை நீசெய்த
நாடகமே. 

பொழிப்புரை :

என் தொளைக்காத மாணிக்கமே! நான் உன் அடியார்களுக்கு இடையே வாழவும், தகுதி உடையவன் அல்லன். அங்ஙனமாக அடியேனை உனக்கு ஆளாக்கிக் கொண்ட தன்மை யானது தகுதியோ? எவ்வகைப் புன்மையோரையும் மிகவும் உயர்வித்துத் தேவர்களைப் பணியச் செய்கிறாய். கிடைக்கலாகாத அமிர்தமே! எம்பிரானே! என்னை நீ செய்த கூத்து நகைப்பதற்கு உரியதே ஆகும்.

குறிப்புரை :

மெய்யுணர்தல்
கட்டளைக் கலித்துறை

பொருள்கோள்:- `என் பொல்லா மணியே, அண்ணா அமுதே, எம்பிரான், யான் உனக்கு அன்பருள் புகவே தகேன்; அங்ஙனமாக என்னை உனக்கு ஆளாகக் கொண்ட தன்மை தகவே? சிலபோது, நீ, எப்புன்மையரை மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; ஆதலின், என்னை நீ செய்த நாடகம் நகவே தகும்`. ஏகாரங்களுள் ``தகவே`` என்பது வினாப்பொருளிலும், ``நகவே`` என்பது பிரிநிலைப் பொருளிலும் வந்தன. ``புகவே, மிகவே`` என்பன, தேற்றப் பொருள. பொல்லா - பொள்ளா; துளை யிடாத. ``தோளா முத்தச் சுடரே`` என முன்னருங் கூறினார். (தி.8 போற்றித்- 197). எப் புன்மையர் - எத்துணைக் கீழானோரையும்; உம்மை, தொகுத்தல். பணித்தி - தாழ்விப்பாய். செய்த - இவ்வாறு ஆக்கிய. ``நாடகம்`` என்றது, இங்கு வினோதக் கூத்தைக் குறித்தது.

திருச்சதகம்


பண் :

பாடல் எண் : 11

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே. 

பொழிப்புரை :

நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

இவ்விரண்டாம் பத்து, சிலவற்றை இறைவனிடமும், சிலவற்றை நெஞ்சினிடமும் கூறுவதாக அமைந்திருத்தலின், இதற்கு, `அறிவுறுத்தல்` எனக் குறிப்புரைத்தனர்போலும் முன்னோர்! `தரவு கொச்சகம்` என்பன தொல்காப்பியத்தும் காணப்படும். நடுவே - அவர்களுக்கு இடையில். ``வீடகத்து`` என்றது, `உனது இல்லத்தினுள்` என்ற நயத்தினையும் தோற்றுவித்தது. தக்கார் பலர் குழுமிப்புகும் ஓரிடத்து அவர்போல நடிப்பவனும் அவர்கட் கிடையே அங்குப்புக மிக விரைந்து செல்லுதல் உலகியல்பு. அவ் வியல்புபற்றிக் கூறியவதனால், அடிகளுக்கு வீடடைதற்கண் உள்ள விரைவு எத்துணையது என்பது புலனாகும். எய்த வந்திலாதார் எரியிற் பாய்ந்தமை(தி.8 கீர்த்தி - 132) முதலியவற்றைச் செய்ததுபோலத் தாம் செய்யாமை பற்றித் தமது செயலை நாடகம் என்று அருளினார். ஆடகச் சீர் மணி - பொன்னின்கண் பொருந்திய மணி. சீர்த்தல் - பொருந்துதல். உனக்கு - உன் பொருட்டு. ``ஊடகத்தே`` என்பதனை, `அகத்தூடே` என மாற்றிக்கொள்க. அகம் - மனம். நின்று - நிற்க. `அதனால் அஃது உருக` என்க. ``உருக`` என்ற செயவெனெச்சம், தொழிற்பெயர்ப் பொருளைத் தந்து நின்றது. `எம்மை உடையானே` என, இரண்டாவது விரிக்க. `உடையான்` தலைவன் எனக்கொண்டு, நான்காவது விரித்தலுமாம்.

பண் :

பாடல் எண் : 12

யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்
கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான்
மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேஎம்
பெருமான்எம்
மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே
வருந்துவனே.

பொழிப்புரை :

நான் பிறவித் துன்பத்துக்கு அஞ்ச மாட்டேன். இறப்புத் துன்பத்துக்கு அஞ்சுகின்றிலேன். மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஆளவிரும்பேன். உன் திருவருளுக்கு உரியே னாகுங் காலம், எக்காலமோ என்று வருந்துவேன். ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

என் கடவேன் - என்ன கடப்பாடு உடையேன்; ஒன்றுமில்லை. எனவே, `இறப்பைப் பற்றியும் கவலையுறுகின்றிலேன்` என்றவாறு. ``வானேயும்`` என்றதில் ஏகாரமும், உம்மையுமாகிய இரண்டு இடைச் சொற்கள் ஒருங்குவந்தன. ஏகாரம் தேற்றமும், உம்மை உயர்வு சிறப்புமாய் நின்றன. தேன் ஏயும் - தேன் பொருந்திய. `மலர்க் கொன்றை` என்றதனை. `கொன்றை மலர்` என மாற்றி யுரைக்க. `பெருமான், மான்` என்றவற்றுள் ஒன்றற்கு, `தலைவன்` எனவும், மற்றொன்றற்கு, `பெரியோன்` எனவும் பொருள் உரைக்க. `பிறப்பு` இறப்புக்களாகிய துன்பங்களை நீக்கிக் கொள்வது எவ்வாறு என்றோ, சுவர்க்கபோகமும், இவ்வுலகத்தை ஆளும் செல்வமும் ஆகிய இன்பத்தைப் பெறுவது எவ்வாறு என்றோ யான் கவலையுறு கின்றேனல்லேன்; உன் அருளைப் பெறுவது எந்நாள் என்ற அவ் வொன்றை நினைந்தே நான் கவலையுறுகின்றேன்` என்றவாறு. `அருள்` என்றது, இவ்வுடம்பின் நீக்கித் தன்னோடு உடனாகச் செய்தலை.

பண் :

பாடல் எண் : 13

வருந்துவன்நின் மலர்ப்பாத மவைகாண்பான்
நாயடியேன்
இருந்துநல மலர்புனையேன் ஏத்தேன்நாத்
தழும்பேறப்
பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம்
புரியாயேல்
வருந்துவனத் தமியேன்மற் றென்னேநான்
ஆமாறே. 

பொழிப்புரை :

நான் உன் திருடியைக் காணும் பொருட்டு மலர் சூட்டேன்; நாத்தழும்பு உண்டாகத் துதியேன்; இவை காரணமாக நீ உன் அருளாகிய அமிர்தத்தைத் தந்தருளாயானால், நான் வருந்துதலே யன்றி உனக்காளாகும் விதம் யாது?

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

`வருந்துவன் நின் மலர்ப்பாதமவை காண்பான்` என மேற்போந்ததனையே மறித்துங் கூறினார், `அங்ஙனம் வருந்துலன்றி, அதற்கு ஆவனவற்றுள் ஒன்றும் செய்திலேன்` எனத் தமது ஏழைமையை விண்ணப்பித்தற்பொருட்டு. ``புனையேன்`` என்றதற்கு, `சாத்தி வழிபடேன்` என்றாயினும், `மாலை முதலியனவாகத் தொடேன்` என்றாயினும் உரைக்க. இவ்விரண்டும் இருந்து செய்யற் பாலனவாதல் அறிக. அதனைக் கிளந்தோதியது, `எனது உலகியல் நாட்டம் என்னை இவற்றின்கண் விடுகின்றிலது` என்பதைத் தெரிவித்தற் பொருட்டு. `நத் தமியேன்` எனப் பிரித்து, `மிகவும் தமியேனாகிய யான்` எனப் பொருள் உரைக்க. `ந` என்னும் இடைச் சொல் சிறப்புணர்த்தியும் வருமாகலின், அது, பின் வரும் தனிமையின் மிகுதியை உணர்த்திற்று. `அதுவன்றி நான் ஆமாறு மற்று என்` என்க. ஆமாறு - அடையும் நிலை.

பண் :

பாடல் எண் : 14

ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன்
அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன்
புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன்
கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே
சார்வானே.

பொழிப்புரை :

அறிஞர் அறிவுக்குப் புலப்படுவோனே! உன் திருவடிக்கு ஆளாகும் பொருட்டு மனம் உருகுதலும் அன்பு செலுத்து தலும், பூமாலை புனைந்தேத்துதலும், புகழ்ந்துரைத்தலும், திருக் கோயில் பெருக்குதலும், மெழுக்கிடுதலும் கூத்தாடுதலும் முதலியவற் றில் யாதும் செய்யேன். ஆயினும் இந்த உலக வாழ்வை நீக்கி உன் திரு வடியைப் பெற விரும்புகிறேன். உன் பெருங்கருணையால் என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

`உன் திருவடிக்கு ஆமாறு` என மாற்றுக. ஏகாரம், அசை நிலை. `அன்பினால் அகம் குழையேன்; உருகேன்` என்க. குழைதல் - இளகல். உருகல் - ஓட்டெடுத்தல். `தூகேன்` என்பதற்கு, `தூ` என்பது முதனிலை. `விளக்குதல்` என்பது இதன் பொருள். இதனை, `திருவலகிடுதல்` என்றல் மரபு. ``விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்`` (தி.4.ப.77.பா.3) என்று அருளிச் செய்தமை காண்க. `சதுராலே சாமாறே விரைகின்றேன்` எனக் கூட்டி, `உலகியல் துழனிகளால் இறப்பதற்கே விரைந்து செல்லுகின்றேன்` என உரைக்க. `விரைகின்றேன்` எனத் தம் குறிப்பின்றி நிகழ்வதனைத் தம் குறிப்பொடு நிகழ்வது போல அருளினார். சார்வானே - எல்லாப் பொருட்கும் சார்பாய் நிற்பவனே. இப்பாட்டில் மூன்றாம் அடி ஐஞ்சீரடியாய் மயங்கிற்று.

பண் :

பாடல் எண் : 15

வானாகி மண்ணாகி வளியாகி
ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்
இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக்
கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி
வாழ்த்துவனே. 

பொழிப்புரை :

ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்?

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

வளி - காற்று. ஒளி, ஞாயிறு முதலியவை. ஊன் - உடம்பு; ஆகுபெயர். `பூதங்களும், அவற்றின் காரியங்களும் ஆகி இருப்பவன்` என்றபடி. இறைவன் இப்பொருள்கள் எல்லாமாய் நிற்பது, உடலுயிர்போல வேறறக் கலந்து நிற்கும் கலப்பினாலாம். ``உண்மை, இன்மை`` என்றவை, அவற்றையுடைய பொருளைக் குறித்தன. இறைவன், அநுபவமாக உணர்வார்க்கு உள்பொருளா யும் அவ்வாறன்றி ஆய்ந்துணர்வார்க்கு இல்பொருளாயும் நிற்பான் என்க.
கோன் - எப்பொருட்கும் தலைவன். அவர் அவரை - ஒவ்வொருவரையும். ``யான் எனது என்று `` என்னும் எச்சம், ``ஆட்டு வான்`` என்னும் பிறவினையுள் தன்வினையொடு முடியும். எனவே, ``ஆட்டுவான்`` என்பது, `ஆடுமாறு செய்வான்` என இரு சொல் தன்மை எய்தி நின்றதாம். உலகியலை, `கூத்து` என்றது. நிலையற்றதாதல் கருதி, கூத்து, ஒரு கால எல்லையளவில் நிகழ்ந்து, பின் நீங்குவதாதல் அறிக. `ஒத்த சிறப்பினவாய் அளவின்றிக் கிடக்கும் உனது பெருமைகளுள் எவற்றைச் சொல்வேன்! எவற்றைச் சொல்லாது விடுவேன்!` என்பது இத்திருப்பாட்டின் தெளிபொருள்.

பண் :

பாடல் எண் : 16

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்
மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந்
தொழவேண்டிச்
சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை
நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானும்உன்னைப்
பரவுவனே. 

பொழிப்புரை :

தேவர் உன்னைத் துதிப்பது, தாம் உயர்வடைந்து தம்மை எல்லாரும் தொழ விரும்பியேயாம். வண்டுகள் மொய்த்து ஒலிக்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே! நான் அப்படி யின்றி என் பிறவித் தளையை அறுத்துக் கொள்ள விரும்பியே உன்னைத் துதிக்கின்றேன்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

எல்லாம் - எல்லாரும். `சூழ்ந்து` என்பது வலித் தலாயிற்று. மதுகரம் - வண்டு. தாரோயை - மாலையை அணிந்த உன்னை. நாயடியேன் - நாய்போலும் அடியேன். `நாயடியேனாகிய யானும்` என, ``யானும்`` என்றதனை இதன் பின் கூட்டுக. பாழ்த்த - இன்பம் அற்ற. பரவுவன் - துதிப்பேன். `தேவர்களும் உன்னை வணங்குகின்றார்கள்; யானும் உன்னை வணங்குகின்றேன், தேவர்கள் போகத்தை வேண்டுகின்றனர்; எனக்கு அது வேண்டுவதில்லை; உனது திருவடி நிழலே வேண்டும்` என்பது கருத்து. இதனானே, `இதனை அருளுதல் உனக்கு இயல்பேயாய் இருத்தலின், எனக்கு விரைந்து அருள்புரிக` என்ற குறிப்பும் பெறப்பட்டது. இறைவன் போகத்தை வழங்குதல், உயிர்களின் இழிநிலை குறித்தன்றித் தன் விருப்பத்தினாலன்றாதலும், வீடுபேற்றைத் தருதலே அவனது கருத்தாதலும் அறிந்து கொள்க. உம்மைகள், எச்சப்பொருள.

பண் :

பாடல் எண் : 17

பரவுவார் இமையோர்கள் பாடுவன
நால்வேதம்
குரவுவார் குழல்மடவாள் கூறுடையாள்
ஒருபாகம்
விரவுவார் மெய்யன்பின் அடியார்கள்
மேன்மேல்உன்
அரவுவார் கழலிணைகள் காண்பாரோ
அரியானே.

பொழிப்புரை :

கடவுளே! உன் அருமை நோக்கித் தேவர் உன்னைப் பரவுகின்றனர். வேதங்கள் ஓதி மகிழ்கின்றன. உமாதேவி ஒரு பாகத்தை நீங்காது இருக்கின்றனள். மெய்யடியார்கள் கூடிக் காண்கின்றனர். நான் ஒன்றும் செய்திலேன். ஆயினும் என்னை உன் பெருங் கருணையால் ஆட்கொள்ள வேண்டும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

குரவு - குராமலரையணிந்த. அரவு - பாம்பை யணிந்த. ``வார்கழல்`` என்றது அடையடுத்த ஆகுபெயராய், `திருவடி` என்னும் பொருட்டாய் நின்றது. `கழலிணைகள் என்றதனை `இணையாகிய கழல்கள்` எனக்கொள்க. `உன் திருமுன்பில் தேவர்கள் உன்னைத் துதித்து நிற்பார்கள்; வேதங்கள் முழங்கும்; உமையம்மை உனது திருமேனியில் ஒரு கூறாய் விளங்குவாள்; ஆயினும், அடியார்களே மெய்யன்பினால் உன்னை அடைவார்கள்; ஆதலின், அவர்களே உனது திருவடிகளை மேன்மேலும் கண்டு இன்புறுவார்கள்போலும்` என்றவாறு. ஓகாரம் சிறப்புப் பொருட்டு. அம்மையும் இறைவனை வழிபடுதல் முதலியவற்றால் இறைவன் திருவடியைக் காண முயல்பவள்போலக் காணப்படுவதால், `தேவர், வேதங்கள்` என்னும் இவரோடு உடன் கூறினார். `அவள் இறைவனின் வேறாதலின்மை யின், கண்டு இன்புறுவாருள் ஒருத்தியாகாள்` என்றபடி. எனவே, `ஒரோவொருகாரணத்தால் இமையோர் முதலியவர் திருவடியைக் காணாராக, அடியார்களே அவற்றைக் கண்டு இன்புறுவார்` என்ற தாயிற்று. இமையவர்கட்கு மெய்யன்பு இன்மையானும், வேதம் மாயாகாரியமேயாகலானும் திருவடியைக் காணலாகாமை யறிக. அரியானே - யாவர்க்கும் காண்டற்கு அரியவனே.

பண் :

பாடல் எண் : 18

அரியானே யாவர்க்கும் அம்பரவா
அம்பலத்தெம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட
பெய்கழற்கீழ்
விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன்
நயந்துருகேன்
தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான்
சாவேனே. 

பொழிப்புரை :

கடவுளே! சிறியேனை ஆட்கொண்டருளின உன் திருவடியைப் பாடுதல், மலர் தூவி மகிழ்தல், வியந்து அலறல், நயந்து உருகுதல் முதலியவற்றைச் செய்து உய்யும் வகை அறியாமல் உயிர் வாழ்கின்றேன். எனவே நான் இறப்பதே தகுதியாகும்.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

`யாவர்க்கும் அரியானே` என மாற்றுக. அம்பரம் - ஆகாயம். சிதம்பரம் - சிதாகாசம்; ஞானவெளி. அதனுள் விளங்குதல் பற்றி, `அம்பரவா` என்றார். அம்பலம் - மன்று; சபை, பெய்கழல் - கட்டப்பட்ட கழலையுடைய திருவடி, ``கீழ்`` என்றது ஏழனுருபு. அலறுதல் - கூப்பிடுதல், நயந்து - விரும்பி; அன்புகொண்டு. தரியேன்- அத்திருவடிகளை உள்ளத்துக்கொள்ளேன்; நினையேன். `ஆதலின், நான் ஆமாறு என்! நான் சாவேன்! சாவேன்!!` என்க. ``சாவேன்`` என்றது, `பயனின்றி இறப்பேன்` என்றபடி. அடுக்கு, துணிவுபற்றி வந்தது.

பண் :

பாடல் எண் : 19

வேனில்வேள் மலர்க்கணைக்கும்வெண்ணகைச்செவ்
வாய்க்கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும்
பாழ்நெஞ்சே
ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான்
இன்றுபோய்
வானுளான் காணாய்நீ மாளாவாழ்
கின்றாயே. 

பொழிப்புரை :

நெஞ்சமே! மலர்க்கணைக்கும் மாதர்க்கும் பதைத்து உருகி நின்ற நீ, இறைவனது பிரிவுக்கு ஆற்றாது உருகியிறந்து படுவாய் அல்லை; ஆதலால் நீ பயன் அடையாது ஒழிகின்றனை.

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

வேனில்வேள் - மன்மதன், அவன் வேனிற் காலத்தை உரிமையாக உடைமைபற்றி, `வேனில்வேள்` எனப்பட்டான். ``வெண்ணகைச் செவ்வாய்க்கரிய பானலார் கண்ணியர்`` என்றாரா யினும், `அவரது நகை முதலியவற்றுக்கு` என்று உரைத்தலே கருத் தென்க. குவ்வுருபுகளை ஆனுருபாகத் திரிக்க. ``இன்றுபோய், வான் உளான்`` என்றதனால், `புகுந்து ஆண்டது அன்று` என்பது பெறப் பட்டது. வான் - சிவலோகம், நீகாணாய் - அவன் பிரிந்து நிற்றற்கு ஏதுவாகிய உன் இழிநிலையை நீ நினைக்கின்றிலை; `அதனால் இறவாது உயிர் வாழ்கின்றாய்; உனது வன்மை இருந்தவாறு என்` என்க. இதன்கண் நெஞ்சினை உயிருடையது போல அருளினார்.

பண் :

பாடல் எண் : 100

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்
காட வேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீடவேண்டும்நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.

பொழிப்புரை :

இறைவனே! நான் உன்னைப் பாடுதல் வேண்டும். பாடிப்பாடி நைந்து உருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும். நான் அம்பலத்தாடும் நின் மலர்க்கழல் அடையும்படி செய்தல் வேண்டும். நீ இந்த உடம்பை ஒழித்து வீடு தந்தருளல் வேண்டும். உனக்கு வணக்கம் செய்கிறேன்.

குறிப்புரை :

ஆனந்தாதீதம்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
`நான் நின்னையே பாட வேண்டும்` எனக் கூட்டுக. பிறவும் அங்ஙனம் கூட்டற்பாலன. போது - மலர். புழுக்கூடு - புழுக்களுக்கு உறைவிடமான இடம்; உடம்பு. `புழுக்கூட்டினை நீக்கு` என்றது, `உன்பால் சேர்த்துக்கொள்` என்னும் பொருளதாதலின், ``எனை`` என்ற இரண்டாவதற்கு முடிபாயிற்று. வீடவேண்டும் - நீங்க வேண்டும். பொய் - உலகப் பற்று. மெய்யர் மெய்யன் - மெய்யன்பர்களுக்கு மெய்ப்பொருளாய் உள்ளவன். இத் திருப்பாட்டில் தம் விருப்பங்கள் பலவற்றையும் பன்முறை வணக்கங்கூறி விண்ணப்பித்துக் கொண்டார். முதல் திருப்பாட்டின் முதற் சொல்லாகிய, `மெய்` என்பதனாலே இவ்விறுதித் திருப்பாட்டு முடிந் திருத்தல் அறியத்தக்கது.
சிற்பி