பண் :

பாடல் எண் : 20

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே
வல்வினைப்பட்
டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை
ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன்
பல்காலும்
வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய
வெள்ளத்தே. 

பொழிப்புரை :

நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழி படுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்?

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

``வாழாத நெஞ்சமே`` என்றதனை முதலில்வைத்து `இறைவனை அடைந்து வாழமாட்டாத மனமே` என உரைக்க, ``வாழ்கின்றாய்`` என்றது, வாழ்தலையோ செய்கின்றாய்` எனப் பொருள் தருதலை எடுத்தலோசையாற் கூறிக்காண்க. அங்ஙனம் பொருள் படவே; `இல்லை` என்பது அதன்பின் வருவிக்கப்படுவ தாம். ``உனக்கு`` என்றது முன்னரும் சென்று, `ஏத்தாதே உனக்குக் கேடு சூழ்கின்றாய்` என இயையும். `உனக்குப் பல்காலும் சொல்கின்றேன்` என மாற்றியுரைக்க, ``சொல்கின்றேன்` எனத் தொடங்கியதனையே, ஈற்றடியிற் சொல்லி முடித்தார். எனவே, ``உய்யப் பார்` என அறி வுறுத்தியவாறாயிற்று. அவலக் கடலாய வெள்ளம் - `துன்பக் கடல்` எனப் பெயர்பெற்ற வெள்ளம்.

திருச்சதகம்


பண் :

பாடல் எண் : 21

வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையு மரமாம்தீ வினையி னேற்கே.

பொழிப்புரை :

கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே யாம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இம் மூன்றாம் பத்துள் முதல் திருப்பாட்டில் பேரன்பின் நிலையையும், எட்டாம் திருப்பாட்டில் இறைவன் தமக்கு வியாபக உணர்வு அளித்தமையையும், ஒன்பதாம் திருப்பாட்டில் இறைவனது பெருநிலையையும் குறித்திருத்தல் பற்றி இதற்கு, `சுட்டறுத்தல்` எனக் குறிப்புரைத்தனர்போலும் முன்னோர். சுட்டு - சுட்டுணர்வு. அஃது, ஒருகாலத்துப் பலவற்றை உணராது ஒன்றனை மட்டுமே உணர்தல். இஃது, `ஏகதேச உணர்வு` எனவும் படும். ஒருகாலத்தில் பலவற்றையும் ஒருங்குணர்தல், `வியாபக உணர்வாகும்`. உணர்வை, `ஞானம்` என்ப. இவையே, `சிற்றறிவு, முற்றறிவு` எனப்படுவனவாம். என - என்றுதுதிப்பவர் துதிக்க. வேட்ட - (உன்னைக் காண) அவாவிய. நெஞ்சு - நெஞ்சினர்; ஆகுபெயர். பள்ளம்தாழ் - பள்ளத்தின்கண் வீழ்கின்ற. உறுபுனலின் - மிகுந்த நீர்போல. `உறு புனலின் பதைத்து` என இயையும். ``கீழ்`` என்றது, கீழ் நிற்பனவாகிய கால்களை. பதைத்து - விரைந்து; ஓடி. ஓடுதல், இறைவன் வெளிப்படும் இடத்தை நாடியாம். அவர் - அத்தகைய பேரன்பர். ``நிற்க`` என்றது, உன்னைக் காணாது நிற்க எனவும், ``ஆண்டாய்`` என்றது, `எதிர் வந்து ஆண்டாய்` எனவும் பொருள்தந்தன, ஆண்டாய்க்கு - ஆண்ட உன்பொருட்டு. உடம்பு `முழுதும் நெஞ்சேயாய் உருக வேண்டியிருக்க, உள்ள நெஞ்சும் உருகவில்லை; உடம்பு முழுதும் கண்களேயாய் நீர்சொரிய வேண்டுவதாக, உள்ள கண்களும் சிறிதும் நீரைச் சிந்தவில்லை; இங்ஙனமாகவே, என் நெஞ்சு கல்லே; என் கண்கள் மரத்தின்கண் உள்ள கண்களே` என்ற படி. ``மரம்`` என்றது அதன் கண்களை. மரத்தின்கண் உள்ள துளைகட்கு, `கண்` என்னும் பெயருண்மை பற்றி, இகழப்படும் கண்களை, அவைகளாகக் கூறும் வழக்கினை, ``மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்`` என்னும் முத்தொள்ளாயிரச் செய்யுளால் உணர்க. `அண்ணால்` என்பது ``அண்ணா` என மருவிற்று.

பண் :

பாடல் எண் : 22

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை
ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை
அனையநான் பாடேன்நின் றாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோநான் ஆன வாறு
முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே. 

பொழிப்புரை :

தோற்றத்துக்கும் முடிவுக்கும் காரணமானவனே! வினைப் பாசத்தில் அகப்பட்டுக் கிடந்த என்பால் வலிய எதிர்ப்பட்டு வந்து நின்று, நீ வா, நான் வினையை ஒழிக்க வல்லேன் என்று கூறுவாய் போல, ``நான் இத்தன்மையன்`` என்று உன்னியல்பை எனக்கு அறி வுறுத்தியருளி, என்னை அடிமை கொண்டு, எமக்குத் தலைவனாய் நின்ற உன் பொருட்டு, இருப்பினாற் செய்த பதுமை போன்ற நான், நின்று கூத்தாட மாட்டேன்; முதல்வனே! நான் இவ்வாறாய முறையின் முடிவு என்ன என்று அறிய மாட்டேன்; இது முறையாகுமோ?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புகுந்து- எதிர்வந்து. போது - வா. வினைக் கேடன் - வினைகட்கு அழிவைச் செய்பவன். இனையன் - இன்னான்; உருகுந் தன்மை இல்லாமை பற்றித் தம்மை இருப்புப் பாவையோடு ஒப்பித்தார். உலறுதல் - வற்றுதல்; மெலிதல். சோர்தல் - நீங்குதல், முனைவன் - முன் (முதற்கண்) நிற்பவன். `நான் இங்ஙனம் ஆனவாறு முறையாகுமோ` என்க. முடிவு - (இவ்வாறு இருப்பதன்) விளைவு. ``கிடந்தேனை உன்னை அறிவித்து`` என்றது, ``களித்தானைக் காரணங்காட்டுதல்`` (குறள் 929) என்றதுபோல நின்றது.

பண் :

பாடல் எண் : 23

ஆயநான் மறையவனும் நீயே யாதல்
அறிந்தியான் யாவரினுங் கடைய னாய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர்
பேயனேன் இதுதான்நின் பெருமை யன்றே
எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே. 

பொழிப்புரை :

நான்கு வேதப் பொருளாய் இருப்பவன் நீ என்பதையும் எல்லாரினும் இழிந்தவன் நான் என்பதையும் அறிந்து உனக்கு நானும் ஓரடியான் என்றேன். ஆதலால், ஆண்டு கொண்டனை. அத்தனையே அன்றி, உனக்கு அடியார் இல்லாத குறையினால் அன்று, உன் பெருங்குணத்தைக் குறித்து நான் என்ன சொல்லிப் புகழ்வேன்?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆய - பெருகிய. நான்மறையவனும் - நான்கு வேதங்களையும் அருளினவனும்; என்றது, ஒழுக்க நெறிகள் பலவற்றையும், உலகிற்கு நன்கு உணர்த்தியவன்` என்றவாறு. ``நீயே`` என்ற ஏகாரம், பிரிநிலை. ``கடையன்`` என்றது. ``ஒழுக்க நெறிகளுள் ஒன்றிலும் நில்லாதவன்` என்றதாம். ``நோக்கி`` என்றது முன்னர், ``அறிந்து`` என்றதனோடு இயைய வைத்து எண்ணப்பட்டது. கண்டு- பின், உண்மையை உணர்ந்து. உண்மையாவது, `சிறியோர்க்கு இரங்குதல் பெரியோர்க்கு இயல்பு` என்பது. ``நாதனே, எம் பெருமான்`` என்ற இரண்டையும் முதலில் கூட்டுக. `நானும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. அன்பன் - அன்பனாதற்கு உரியவன். என்பேனாயினேன் - என்று எண்ணும் இயல்புடை யேனாயினேன். ஆதலால் - ஒழுக்க நெறிகளால் சான்றோனாகா விடினும், இவ்வாறு உன் பெருமையைச் சிறிதேனும் உணரப் பெற்றமையால். இதனால், இறைவன் குருவாகி வந்து ஆட் கொள்வதற்கு முன்பே அடிகள் இறைவன் திருவருளில் நாட்டமுற்று நின்றமை பெறப்படும். ``அடியார் தாம் இல்லையே`` என்றது, `உனக்கு அடியவர் இல்லையாயின் குறையோ` என்னும் பொருளது. ஏகாரம், வினா. ``அன்றி`` என்றதனை, இதற்கு முன்னே கூட்டுக. பெருமை - பெரியோரது தன்மை; அது, சிறியோரை இகழாது, குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டல். `ஓர் பேயனேன் மற்று என் சொல்லிப் பேசுகேன்` என இயையும். பேசுதல், இங்கு, `விளக்குதல்` என்னும் பொருட்டு. விளக்குதல், தம்மை ஆட்கொண்ட காரணத்தை என்க.

பண் :

பாடல் எண் : 24

பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்றென்றே பேசிப் பேசிப்
பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசிப்
போற்றியெம் பெருமானே என்று பின்றா
நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே. 

பொழிப்புரை :

இறைவனே, பேசும் பொழுதும் உன் திருப் பெயரைப் பேசியும் பூசும்பொழுதும் திருநீற்றையே நிறையப் பூசும் நல் அன்பரை ஆண்டருளும் இயல்பினை உடைய நீ, அன்பில்லாத என்னை ஆண்டருளினது வியக்கத் தக்கதாயிருக்கின்றது.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`தாம் பேசின்`. `தாம் பூசின்` என மாற்றுக. `பேசின், பூசின்` என்றவை, பேசுதல், பூசுதல் இவற்றின் அருமையைக் குறியாது, `பேசும் பொழுதெல்லாம், பூசும்பொழுதெல்லாம்` எனப் பொருள் தந்தன. பின்றா நேசம் - சலியாத அன்பு. கடந்தார் - கடந்தவராவார்; இது, துணிவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாக வந்ததாம். துணிவு, தகுதி பற்றி வந்தது. `பின்றா நேசத்தாரை ஆண்டானே, நீ, அவா வெள்ளக் கள்வனேனை ஆட்கொண்ட வண்ணந்தான் என்னை` என வியந்தவாறு காண்க.

பண் :

பாடல் எண் : 25

வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்று
அநேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்கு
எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமா றறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே. 

பொழிப்புரை :

தேவர்கள் உன் திறம் முதலானவற்றையும் உள் உருவம் ஒன்றா? பலவா? என்பதனையும் அறியாமல் தடுமாறி நிற்க, என்னைத் தடுத்து உன் வண்ணம்காட்டி, திருவடி காட்டி, வடிவு காட்டி என்னை ஆட்கொண்டனையே! உன்னைக் குறித்து என்னவென்று புகழ்வேன்?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``வண்ணம்``என்றதற்கு முன், `உன்` என்பதும் ``அனேகன்`` என்றதற்குமுன், `நீ` என்பதும் வருவித்து, அனேகன் முதலிய நான்கின்பின்னும் `அல்லை` என்பதைத் தனித்தனி விரித்தும் உரைக்க, ``சேயது, வெளிது`` என்றவை பண்பின்மேல் நின்றன. அணு-சிறியாய்; ஆகுபெயர். அணுவில் இறந்தாய் - பெரியாய், அங்கு-அறியப்புகும் அக்காலத்து. எண்ணம் - கொள்கை. தடு மாற்றம், அநுபவமாகாமையால் வந்தது. காட்டி - அநுபவமாகக் காணும்படி காட்டி. இப்பகுதியை, ``அதுபழச் சுவையென`` என்ற திருப்பாட்டின் (தி.8 திருப்பள்ளி.7) பகுதியோடு ஒருங்குவைத்துக் காண்க. வழி - உய்யும் வழி. `திண்ணமாக` என ஆக்கம் வருவிக்க. திண்ணமாவது, பிறவாமையே. ``தான்`` என வந்தன பலவும் அசை நிலைகள். சிந்திக்கேன் - நினைப்பேன். ``என்`` என்றதனை, ``சிந்திக்கேன்`` என்றதற்குங் கூட்டுக, `எச்சொல்லால் சொல்லி, எந் நினைவால் நினைப்பேன்! சொல்லுக்கும், நினைவுக்கும் அடங்காத தாய் உள்ளது உனது திருவருட் பெருமை` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 26

சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.

பொழிப்புரை :

கடவுளே! இருமை வகை தெரியாத என் மனத்தை நின்திருவுருக்காக்கி, கண்களை நின் திருவடிகளுக்கு ஆக்கி, வழி பாட்டையும் அம்மலர் அடிகளுக்கே ஆக்கி, வாக்கினை உன் திரு வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் பயனுற என்னை அடிமை கொண்ட உனது பெருங் குணத்தை என்ன வென்று புகழ்வேன்?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சிந்தனை - நினைத்தல்; இஃது இறைவன் வடிவம் முழுவதையும் பற்றி அகத்தே நிகழவேண்டுமாதலின், ``நின்றனக்கு ஆக்கி`` என்றும், ஏனைய காட்சியும், தொழுகையும் புறத்தில் திரு வடியை நோக்கிச் செய்தலே சிறப்பாகலின், `அவற்றைத் திருவடி மலர்க்கே ஆக்கி` எனவும் அருளினார். வார்த்தை - செய்தி; இங்குப் புகழைக் குறித்தது. அடிகள் புலமைத்திறம் முழுவதையும் இறைவன் புகழுக்கே ஆக்கினமை அறிக. ``மணி`` என்றது சிறப்புப்பற்றிக் கூறப்பட்டது. இறைவன்புகழே யாவர் புகழினும் சிறந்ததாதல் அறிக. இறைவன் புகழை இங்ஙனம், ``மணிவார்த்தை`` எனக் குறிப்பிட்டமை யானே, அஃதொன்றையே பாடியருளிய அடிகள், `மாணிக்கவாசகர்`` எனப் பெயர் பெற்றார் என்ப, ``ஆக்கி`` என்னும் எச்சங்கள், ``ஆர`` என்றதனோடு முடியும். அது, சினைவினையாயினும் முதல்மேல் நின்றதாகலின் அவ்வெச்சங்கட்கு முடிபாதற்கு இழுக்கின்று. `ஐம்புலன்களும்` என்னும் உம்மை தொகுத்தல்.
``புலன்கள்`` என்றது, பொறிகளை. ஆர - நிரம்ப; என்றது, `இன்புறுமாறு` என்றபடி; இஃது எதிர்காலத்ததாய் நின்றமையின், ``ஆக்கி`` என்னும் எச்சங்களும் `உழுது வருவான்` என்பது போல, எதிர்காலத்தனவாம். என்னை?
``செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்``
என்பது தொல்காப்பியமாகலின். (தொல் - சொல் 241.)
இறைவன் ஆசிரியத் திருமேனியனாய் வந்து உடன், இருந்த காலத்தில் அடிகள் முதலியோரது ஐம்பொறிகளுள் நாப்பொறி இன்பம் எய்தியது, அவன் அளித்து உண்பித்தசுவைப் பொருள்களாலாம். இனி, ``ஐம்புலன்கள்`` என்றது பெரும்பான்மைபற்றிக் கூறிய தெனினும் இழுக்காது; `இவ்வூனக் கண்களாலே காண வந்தாய்` என்பதே கருத்து.
``உணர்வின் நேர்பெற வருஞ்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர
அருளினை``
(தி.12 பெரி. பு. ஞான. சம். 161.) என்று அருளிச்செய்தது காண்க.
வந்தனை- எதிர்வந்தாய்; இஃது எச்சப்பொருட்டாய் நின்றது. விச்சை - வித்தை. மால் - மருட்கை; வியப்பு. `விச்சையை யுடைய, வியப்பைத் தருகின்ற அமுதப்பெருங்கடலே` என்க. தருதல், `தடையின்றிச் சார்ந்து இன்புறவைத்தல். இரண்டு; இகம், பரம். அவை இல்லையாயது, அவற்றிற்கேற்ற அறிவும், ஒழுக்கமும் இன்மை யினாலாம். தனியன் - பற்றுக்கோடில்லாதவன். `ஒரு பயனும் இன்றி யொழியற்பாலனாகிய எளியேனை, மிக மேலான பயனைப் பெறச் செய்தாய்` என்றபடி. `உனது கருணையை என்னென்று புகழ்வேன்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 27

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.

பொழிப்புரை :

தனியனாய்ப் பிறவிப் பெருங்கடலில் விழுந்து, பலவகைத் துன்பங்களாகிய அலைகளால் எறியப்பட்டு, மற்றோர் உதவியும் இன்றி, மாதர் என்னும் பெருங்காற்றால் கலங்கி, காமமாகிய பெருஞ்சுறாவின் வாயிற்சிக்கி, இனிப்பிழைக்கும் வழி யாதென்று சிந்தித்து, உன் ஐந்தெழுத்தாகிய புணையைப் பற்றிக் கிடக்கின்ற என்னை முத்தியாகிய கரையில் ஏற்றி அருளினை.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இதனுள், `பிறவி, துன்பம், மகளிர், காமம்; திருவைந் தெழுத்து, பிறப்பின்மை, என்னும் இவைகளை முறையே. `கடல், அலை, சூறாவளி, சுறாமீன், புணை, கரை, என்னும் இவைகளாக முற்றுருவகம்பட வைத்து அருளிச்செய்தவாறு காண்க. மல்லல் - வளம்.
மூர்க்கன் - கொண்டது விடாதவன். `எனக்கும் உண்மையை உணர்த்தி என்னை ஆட்கொண்டாய்` என்றபடி. `உனது சதுரப்பாடு இருந்தவாறு என்` என்பது குறிப்பெச்சம். ``கல்நாருரித்த கனியே`` (தி.8 போற்றித். 97) என முன்னரும் அருளிச் செய்தார், `இனி என்னே உய்யுமாறு என்று எண்ணி, அஞ்செழுத்தைத் துணையாகப் பற்றி யிருந்த தம்மை, ``மூர்க்கனேன்`` என்றது, மாதராசை துன்பந்தருவது என்று அறிந்தும் அதனை விடாது நின்றது பற்றியாம்.
இதனாலும், அடிகள், இறைவனால் ஆட்கொள்ளப் படுவதற்கு முன்னர், `சரியை, கிரியை, யோகம் என்னும் நிலைகளில் நின்றமை பெறப்படும். தனியனேனாய்க்கிடக்கின்ற என்னை, அவ்விடத்து மூர்க்கனேற்குக் கரையைக் காட்டி ஆட்கொண்டாய்` என முடிக்க. ``தனியனேன் என்றது கேவல நிலையைக் குறித்தது`, எனக் கொண்டு, `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளும் இதனுட் கூறப்பட்டன எனக் காட்டுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 28

கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்
கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்
கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. 

பொழிப்புரை :

ஒருவராலும் கேட்டு அறியாதவனும், தனக்கு ஒரு கேடில்லாதவனும், உறவு இல்லாதவனும், கேளாமலே எல்லாம் கேட்பவனும் ஆகிய இறைவன், என் சிறுமை நோக்காது நாய்க்குத் தவிசிட்டாற் போலத் (தவிசு - இருக்கை; ஆசனம்) தன் அருகில் இருத்தி, காட்டுதற்கரிய தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எக் காலத்திலும் கேட்காத வேத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பித்து, மீட்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட் கொண்டான். இது ஒரு விந்தையாகும்.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`ஆரும் கேட்டு அறியாதான்` என மாற்றுக. ``ஆரும்`` என்றது, சத்திநிபாதர்களைச் சுட்டியன்றி, உலகரைச் சுட்டியேயாம். இவர்களை, `நாடவர்` எனவும். `நாட்டார்` எனவும் அடிகள் குறித்தலையறிக. உலகரால் கேட்டறியப் படாமை, அவர்கள் அறிவிற்கு உணரவாராமையின் தமராய்ச் சொல்லுவார் இன்மை யினாலும், அறிவர் உரைக்கும் உரைகள் அவர்கட்குப் பொருள் படாமையினாலுமாம். கேடு - அழிவு. ஒன்று - சிறிது. `கேட்டாரும் அறியாமையால், இலனால் இல்லை` என்றபடி. கேளாதே எல்லாம் கேட்டான் - பிறர் அறிவிக்க வேண்டாது, தானே எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன். இது, கிளையின்மையால் அறியப்படும் என்பார், அதனை முற்கூறினார். கிளை, இருமுதுகுரவரும், பிறதமரும். இத் தன்மையனாகலின், பிறவாமற் காத்து ஆட்கொண்டான், என்பார், இவற்றை முதற்கண் கிளந்தோதினார். ஏக்கற்றுநின்றாரை, `விழித்து நின்றார்` என்றல் வழக்கு. அடிகள்பெற்ற பேற்றினையறிந்தபின், உலகவர் தமக்கு அஃது இன்மையை நினைந்து ஏக்கற்றனர் என்க. உயர்ந்தோர்க்குச் செய்யத்தக்கன, இழிந்தோர்க்குச் செய்யின், அதனை, `நாய் மேல் தவிசிட்டவாறு` என்றல் மரபு. தவிசு - இருக்கை. இஃது, யானையேறுவார் அதன்மேல் இடுவது. ``நாய்மேல் தவிசிடு மாறு`` (பழமொழி நானூறு - 105), எனவும் ``அடுகளிற் றெருத்தின் இட்ட - வண்ணப்பூந் தவிசுதன்னை ஞமலிமேல் இட்டதொக்கும்`` (சீவகசிந்தாமணி-202) எனவும் சொல்லப் பட்டமை காண்க. ``இவ்வாறாகவே, ``இட்டு`` என்றது, இட்டது போலும் செய்கையைச் செய்து` என்றவாறு. அச்செயலாவது, ஒரு மொழியாகிய ஐந்தெழுத்தின் உண்மையை அறிவுறுத்தியதாம். ``பின்னும்`` என்றதனை இதன்பின் கூட்டுக. ``நாயினேற்கே`` என்றது, `எனக்கே` என்னும் அளவாய் நின்றது. காட்டாதன, உணர்த்தியவாறே உணரும் உணர்வு மதுகை இல்லாதார்க்கு உணர்த்தலாகாதன. அவை, பொருட் பெற்றிகள்; இவற்றை, `தத்துவம்` என்ப. கேளாதன, உணர்த்தியவாறே ஒழுகும் ஆர்வம் இல்லாதவரால் கேட்கலாகாதன; இதற்கும், `சொல்லலாகாதன` என்பதே கருத்து. அவை, சாதனங்களும், அவற்றாற் சாதிக்கும் முறைகளுமாம். ``மீட்டேயும்`` என்றதில் உள்ள தேற்றேகாரத்தைப் பிரித்து, ``பிறவாமல்`` என்றதனோடு கூட்டுக. ``விச்சைதான்`` என்ற எழுவாய்க்குப் பயனிலையாகிய, `இது` என்பது எஞ்சி நின்றது. `இவையும் உயர்ந்தோர்க்கே செய்யற்பாலன; இவற்றையும் எனக்குச் செய்தான்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 29

விச்சைதான் இதுவொப்ப துண்டோ கேட்கின்
மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கி
அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுதம் ஊறி
அகம்நெகவே புகுந்தாண்டான் அன்பு கூர
அச்சன்ஆண் பெண்ணலிஆ காச மாகி
ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற
செச்சைமா மலர்புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே. 

பொழிப்புரை :

ஆண், பெண், அலி என்னும் உருவங்கள் இல்லாதவனாய் ஐம்பூத உருவினனாய், அவற்றுக்குக் காரணமாகிய மூலப் பகுதியாய், அதனையும் கடந்து நின்ற சிவபெருமான், சிறியேனைத் தன் அடியவன் ஆக்கிப் பிறவித்துன்பம் நீங்கும் வண்ணம் ஆட்கொண்டருளி, என் மனம் உருகும்படி அதனுள்ளே நுழைந்து நிலைத்திருந்தான். உலகத்தில் இது போன்ற விந்தையொன்று உண்டோ?

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `அச்சன்......தேவர்கோ, (என்னை) ஆக்கி ஆட்கொண்டான்; அன்புகூர, அமுதம் ஊறி, அகம் நெகப் புகுந்து ஆண்டான்; கேட்கின், இது ஒப்பது விச்சை உண்டோ`.
கேட்டல் - ஆராய்தல். ``கேட்பான்புகில் அளவில்லை`, என் புழியும் (தி.3.ப.54பா.4) கேட்டல் என்பது, இப்பொருட்டாதல் அறிக. அச்சம், பிறவி பற்றியது. ``அமுதம்`` என்றது, இன்பத்தை. அன்பினாலும், இன்பத்தாலும் மனம் நெகிழப்பெறும் என்க. ``நெகவே`` என்னும் ஏகாரம், தேற்றம். புகுந்தது, அகத்து என்க. ``ஆண்டான்`` என்றது, `அருளினான்` என்னும் பொருட்டு. அச்சன் - தந்தை. பூதங்களுள் இரண்டைக் கூறவே, ஏனையவும் கொள்ளப் படும். அந்தத்தில் உள்ள நாத தத்துவத்தை, ``அந்தம்`` என்றார்; ஆகுபெயர். செச்சை - வெட்சி.
சிற்பி