பண் :

பாடல் எண் : 30

தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத் தெந்தை
யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான்
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியார் அடியா ரோடும்
மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே. 

பொழிப்புரை :

தேவர்களால் அறியப் பெறாதவனும் மூவர் களுக்கும் மேலானவனும் ஆகிய இறைவன் தானே எழுந்தருளி என் சிறுமை கருதாது என்னைத் தடுத்தாட் கொண்டமையால், இனி நாம் யார்க்கும் குடிகளல்லோம்; எதற்கும் அஞ்சோம்; அவன் அடியார்க்கு அடியாரோடு சேர்ந்தோம். மேன்மேலும் ஆனந்தக் கடலில் குடைந் தாடுவோம்.

குறிப்புரை :

சுட்டறுத்தல்
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேவர் கோ - இந்திரன். பொழில்கள் - உலகங்கள். பயந்து - பெற்று; படைத்து. மற்றை - தன்னின் வேறாகிய, மூவர்: அயன், அரி, அரன். `இவர்கள் குணமூர்த்திகளாதலின், நிற்குண னாகிய பரமசிவனின் வேறே` எனவும், `அன்னராயினும், அவனது அதிகார சத்தியைப் பெறுதற்கு உரிமையுடையராயினமையின், ஏனைத் தேவரின் மேம்பட்டவர்` எனவும் உணர்த்தற்கு, ``மற்றை`` என்றார். இதனானே, மூவருள் ஒருவனாகிய உருத்திரன் பரமசிவனின் வேறென்பதும், பரமசிவனாகிய சிவபெருமான் இம் மூவரின் வேறாய நான்காவது பொருள் என்பதும் தெற்றென விளங்கும். மாண்டூக்யம் (1-7) என்ற உபநிடத வாக்கியத்தையும் நோக்குக. மூர்த்தி - மூவர் முதலிய பலரையும் தனது வடிவாக உடையவன். வாயிலை (அதிட்டானத்தை) வடிவு என்று பாற்படுத்துக் கூறுதல் மரபு. மூதாதை - பாட்டன்; என்றது, இம் மூவர்க்கும் மேற்பட்ட வித்தியேசுரர் முதலியோர்க்கும் முன்னோ னாதல்பற்றி. மாது ஆளும் பாகத்து - உமையம்மையால் ஆளப்படும் கூற்றினையுடைய. `யாவர்க்கும்` என்னும் குவ்வுருபும் உம்மையும் தொகுத்தலாயின. குடி - அடிமை. குடைந்து ஆடி - அவ்வின்பத்தில் மூழ்கி விளையாடி. ஆடுவோம் - களித்தாடுவோம். ``நாமார்க்குங் குடியல்லோம்`` என்னும் திருத் தாண்டகத்தை (தி.6.ப.98.பா.1) இதனுடன் ஒருங்குவைத்துக் காண்க.

திருச்சதகம்


பண் :

பாடல் எண் : 31

ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
கன்பிலை என்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே. 

பொழிப்புரை :

நெஞ்சே! இறைவனது திருவடிக்கு அன்பு செய்கின்றிலை; அவ்வன்பின் மிகுதியால் கூத்தாடுதல் செய்கிலை; எலும்பு உருகும் வண்ணம் பாடுகின்றிலை; இவை எல்லாம் செய்ய வில்லையே என்று பதைப்பதும் செய்கிலை; திருவடி மலர்களைச் சூடவும் முயன்றிலை, சூட்டவும் முயன்றிலை; இறை புகழ் தேடலும் இல்லை; தேடித் தேடி அலையவும் இல்லை; நீ இப்படியான பின்பு, நான் செய்யும் வகை ஒன்றும் அறியவில்லை.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இதனுள், அடிகள் தம் தாழ்நிலையையே தம் நெஞ்சின் மேலும், தம்மேலும் வைத்துக் கூறியருளும் முகத்தால், அந்நிலையை நீக்கிக்கொள்ள முயலுதல்பற்றி, `ஆத்தும சுத்தி` என இதற்குக் குறிப்புரைத்தனர் போலும் முன்னோர். `பிண நெஞ்சே, உடையான் கழற்கு அன்பிலை` என் றெடுத்துக்கொண்டு, `அதனால் துணையிலி ஆகின்றாய்` `செய்வது ஒன்று அறியேன்` என முடிக்க. உடையான் - நம்மை ஆளாக உடையவன்; `அந்தணனாய் வந்து அறைகூவி ஆட்கொண்டருளியவன்` என்றபடி. இவ்வாறன்றி, `கூத்து உடையான்` என்றியைத் துரைத்தல் ஈண்டுச் சிறவாமை அறிக. ``கூத்து`` என்ற விதப்பு, `அஃது அன்பராயினார்க்கன்றிச் செய்யவாராது` என அதனது பெருமை யுணர்த்தியவாறு. பதைத்தல், செய்வதறியாமையான் வருவது. ``பாதமலர்` என்றது, முன்னும் சென்று இயையும். `அவனது பாதமலர்` எனவும், `அவனைத் தேடுகின்றிலை` எனவும் உரைக்க. ``மலர் சூடுகின்றிலை`` என்றதனால், `சென்னிமேற் கொள்கின்றிலை`` என்பது பொருளாயிற்று. சூட்டுதலுக்கு, `மலர்` என்னும் செயப்படு பொருள் வருவித்து, `அவற்றின்கண் சூட்டுகின்றதும் இலை` என்க. உம்மை, எச்சம். ``பிண நெஞ்சு``, உவமத்தொகை. உவமை, அறிவின்மை பற்றிக் கூறப்பட்டது. அவன் வந்து ஆட்கொள்வதற்கு முன்னர், அறியாமையால் அவனை நினையாதிருந்த குற்றம் பொறுக்கப்பட்டது; ஆட்கொண்ட பின்னரும் அவ்வாறிருப்பின் பொறுக்கப்படுமாறில்லை என்பார், ``செய்வதொன்றறியேன்`` என்று அருளினார்.
``தன்னை அறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழை`` (சிவஞானபோதம். சூ. 12. அதிகரணம்.4)
என்றது காண்க,
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
(குறள்-110.) என்றது பற்றி எழுந்தவாறுமாம். ``இலை`` நின்ற ஐகாரம், முன்னிலை ஒருமை விகுதி; சாரியையன்று.

பண் :

பாடல் எண் : 32

அறிவி லாதஎ னைப்புகுந் தாண்டுகொண்
டறிவதை யருளிமேல்
நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப்
பந்தனை யறுப்பானைப்
பிறிவி லாதஇன் னருள்கள்பெற் றிருந்துமா
றாடுதி பிணநெஞ்சே
கிறியெ லாம்மிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத்
தாய்என்னைக் கெடுமாறே. 

பொழிப்புரை :

நெஞ்சமே! அறிவு இல்லாத என்னைத்தானே வலிய வந்து ஆண்டருளி மேலாகிய நெறிகளை எல்லாம் எனக்குப் புலப்படுத்தினவனும்; என் பிறவித்தளையை அறுப்பவனுமாகிய இறைவனை நினையாமல் மாறுபடுகின்றனை; ஆதலால் என்னைக் கெடுத்து விட்டாய்.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறிவு - மெய்யறிவு; என்றது, உள்ளவாறு உணரும் தன்மையை. ``அறிவதை`` என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. மேல் - பின். நெறி - அறியும் முறைமை. புலமாக்குதல் - அறிவித்தல். பந்தனை அறுத்தல் - பாசத்தைப் பற்றறத் துடைத்தல். இது, பின்னர் நிகழ்தற்பாலதாதலின், எதிர்காலத்தாற் கூறினார். `அறுப்பானைப் பிறி விலாத` என இயையும். பிறிவிலாத அருள் - பிரிவில்லாமைக்கு ஏது வாய அருள். தன்னை வேண்டாது, உலகின்பத்தை வேண்டுவார்க்கு அப்பயனையும் இறைவன் அருளுதலின், அது, பிரிவுடைய அருளாம். அவ்வாறன்றித் தன்னையே தருவது, பிரிவிலாத அருள் என்க. இதனை, ``இன்னருள்`` என்றார், ஏனையது இன்னாமையையும் விளைத்தல் பற்றி. இவ்வருள்தான், அருளும் முறைமையாற் பலவாதல் பற்றி, ``அருள்கள்`` எனப் பன்மையாற் கூறினார். அவற்றையே, ``பலவிதம் ஆசான் பாச மோசனந்தான் பண்ணும் படி`` (சிவஞானசித்தி - சூ. 8.3.) என ஓராற்றான் உணரக் கூறுப.
``உரையாடுதல், சொல்லாடுதல்` என்பனபோல, `மாறாடுதல்` என்பது ஒரு சொல்; `பிணங்குதல்` என்பது பொருள். அஃதாவது, `பிரிவிலாது நிற்க விரும்புகின்ற என்னோடு ஒருப்பட்டு நில்லாது, மாறு கொண்டு நிற்கின்றாய்` என்றபடி. இந்நிலை, மலவாதனையால் வருவது. இதனானே, இறைவனை அடைந்து இன்பத்துள் நீங்காது நிற்க விரும்புதலே உயிர்க்கு இயல்பென்பதும், அவ்விருப்பத்திற்கு மாறாய் அவனை அடையவொட்டாது தடுத்து அதனைத் துன்பத்துள் வீழ்த்துவது மலம் என்பதும் பெறப்படுமாறறிக.
கிறி - பொய்; என்றது, திரிபுணர்வை. அதுதான், உணரப் படும் பொருளாற் பலவாமாகலின், ``எல்லாம்`` என்றார். மிக - மேம்பட்டுத் தோன்ற. கீழ்ப்படுத்தாய் - அவற்றின்கீழ்க் கிடக்கச் செய்தாய். `கெடுமாற்றானே கெடுத்தாய்` என்க. கெடுமாற்றானே கெடுத்தலாவது, கெடும் வழி அறிந்து அவ்வழியிலே செலுத்திக் கெடுத்தல்; நெஞ்சினை அறிவுடையதுபோலக் கூறிய பான்மைக் கூற்று. `உனது மாறாட்டத்தால், என்னைக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய்` என்க. `அருளீமேல்` என மூவசைச் சீராதலே பாடம் போலும்.

பண் :

பாடல் எண் : 33

மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையைஎம்
மதியிலி மடநெஞ்சே
தேறு கின்றிலம் இனியுனைச் சிக்கெனச்
சிவனவன் திரள்தோள்மேல்
நீறு நின்றது கண்டனை யாயினும்
நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது
கேட்கவுங் கில்லேனே. 

பொழிப்புரை :

நெஞ்சே! நீ என்னோடு மாறுபட்டு இவ்வாறு கெடுத்த உன்னை உறுதியாகத் தெளிந்திலேன். சிவபெருமானது திரண்ட தோளின் மீதுள்ள திருவெண்ணீற்றின் அழகைக் கண்டு மகிழ்ந்தும் இனியும் உருகினாயல்லை; இந்தப் பாழுடம்பைக் கிழித் திலை; உன் தன்மையைக் கேட்கவும் சகிக்க மாட்டேன்.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`கெடுப்ப` என்பது, `கெட` எனத் தொகுத்தலாயிற்று. `கிடந்த` என்பதன் ஈற்று அகரமும் அன்னது. அனையை - அத்தன்மையை உடையை. `அனையையாகிய நெஞ்சே` என்க. `மடநெஞ்சு` என்பது, வாளா பெயராய் நின்றது. ``எம்`` என்ற பன்மை, `எனக்கேயன்றி என் குடியிலுள்ளார்க்கும் நலஞ்செய்ய அமைந்த நெஞ்சே` எனப் புகழ்தல் வாய்பாட்டால் இகழ்ந்தவாறு. `தேறுகின்றிலம்` என்றதும், தம் தமரையும் உளப்படுத்து. தேறுதல் - தெளிதல். சிக்கென - உறுதியாக. `சிக்கெனத் தேறுகின்றிலம்` என இயையும். `இனித் தேறுகின்றிலம்` என்றது முன்னர்ப் பலகாலும் தேறிக் கெட்டமை பற்றி. `கண்டனை; ஆயினும் நெக்கிலை` என இரு தொடராக்கியுரைக்க. சிவபிரான் திருமேனியில் உள்ள திருநீறு, தேவர் முதல் யாவரும், எப்பொருளும் நிலையாது ஒழிதலையும், அனைவரையும், அனைத்தையும் அவனே தாங்குபவனாதலையும் விளக்கி நிற்கும். `ஆதலின் அதனை உணர்ந்தும் அவனிடத்து அன்பு செய்கின்றாயில்லை` என்றவாறு. தாங்குதலை இனிது விளக்குதல் தோன்றத் தோள்மேல் உள்ளதை அருளினார். காயம் - உடம்பு. அதனைச் சிதைத்தல் பிரிவாற்றாமையாலாம். கெடுதற்கு ஏதுவாவதனை, ``கெடுவது`` என்றார். இது - இத்தன்மையை. கேட்கவும் கில்லேன் - ஏற்றுக்கொள்ளாமையேயன்றி, இவ்வாறானது என்று சொல்லுதலைச் செவியால் கேட்டுணரவும் பொறேன்.

பண் :

பாடல் எண் : 34

கிற்ற வாமன மேகெடு வாய்உடை
யான்அடி நாயேனை
விற்றெ லாம்மிக ஆள்வதற் குரியவன்
விரைமலர்த் திருப்பாதம்
முற்றி லாஇளந் தளிர்பிரிந் திருந்துநீ
உண்டன எல்லாம்முன்
அற்ற வாறும்நின் னறிவும்நின் பெருமையும்
அளவறுக் கில்லேனே. 

பொழிப்புரை :

மனமே! நீ கெடுவாய். இறைவனது திருவடியைப் பிரிந்து நீ அனுபவித்த விடய இன்பங்களையும், அவை அழிந்த விதத்தையும், உன் அறிவையும், உன் பெருமையையும் அளவு செய்ய வல்லேன் அல்லேன்.

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`உடையானும், உரியவனும் ஆகியவனது திருப்பாதத் தளிர்` என்க. எல்லாம் - எல்லாவற்றானும். ``பிரிந்திருந்தும் நீ உண்டன`` என்றதனால், பிரிவுபற்றி வருந்தாதிருத்தலும், ``அற்றன`` என்றதனால், அவை அறாது நிற்கும் எனக் கருதி அவற்றை அவாவின மையும் குறிக்கப்பட்டன. நிலையாதவற்றை நிலையுடையன எனக் கருதிய அறியாமையை, ``அறிவு`` என்றும் அவற்றைப் பெற்ற அளவானே மகிழ்ந்து செருக்கும் சிறுமையை, ``பெருமை`` என்றும் அருளினார், இகழ்ச்சி தோன்றுதற் பொருட்டு. அறியாமை, சிறுமை என்பவற்றை உண்டவற்றோடு ஒருங்கெண்ணி, `அளவுபடா` என்றார், இவை அவ்வுண்டவைபற்றியே அறியப்படுதலின். கிற்றவா - நீ வல்ல வாறு; `இது` எனச் சொல்லெச்சம் வருவிக்க. கெடுவாய் - இச்செய்கையால் நீ கெட்டொழிதல் திண்ணம். ``கிற்றவா, கெடுவாய்`` என்றவற்றை இறுதியில் வைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 35

அளவ றுப்பதற் கரியவன் இமையவர்க்
கடியவர்க் கெளியான்நம்
களவ றுத்துநின் றாண்டமை கருத்தினுட்
கசிந்துணர்ந் திருந்தேயும்
உளக றுத்துனை நினைந்துளம் பெருங்களன்
செய்தது மிலைநெஞ்சே
பளக றுத்துடை யான்கழல் பணிந்திலை
பரகதி புகுவானே. 

பொழிப்புரை :

நெஞ்சே! தேவர்களும் அளவு செய்தற்கு அரியவன்; அடியார்க்கு எளியவன்; அத்தன்மையனாகிய இறைவன், நம்மையோர் பொருளாக்கி நமது குற்றம் களைந்து ஆண்டருளி னமையை அறிந்திருந்தும் பரகதியடைதற் பொருட்டு அவனது திருவடியை வணங்கினாயல்லை. உன் தன்மை இருந்தவாறு என்னை?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`இமையவர்க்கு அளவறுப்பதற்கு அரியவன்` என்க. இமையவர்க்கு அருமைகூறவே, ஏனையோர்க்கு அருமைகூற வேண்டாவாயிற்று. களவு - யான் எனது என்பன. இறைவன் செய்ததை, `யான் செய்தேன்` என்றும், இறைவனுடையதை `எனது` என்றும் கருதுதலின், களவாயிற்று. `கருத்தினுள் உணர்ந்து` என இயையும். `இருந்து ` என்பது துணைவினை. `உலகு` என்பது, எதுகை நோக்கி, `உளகு` எனத் திரிந்தது. பளகு - குற்றம். இறைவன் உன்னை ஆட்கொண்ட கருணையை நீ உணர்ந்திருந்தாயாயினும், உன்னை அவன் நினைந்து, இவ்வுலகத் தொடர்பை அறுத்து, உன் உள்ளத்தைத் தான் உறையும் பெரிய இடமாகச் செய்தமை காணப்படவில்லை, அஃது ஏன்? நீ அவ்வுணர்ச்சியளவில் நில்லாது, பரகதியிற் புக விரும்பி உன் குற்றங்களைக் களைந்து அவனது திருவடிகளை வணங்கும் செயலில் நின்றிலை` என்றவாறு. இதனால், மெய்யுணர்ந்து பின்னர், அதன்கண் உறைத்து நிற்க வேண்டுதல் பெறப்பட்டது. இறைவனால் மீள நினைக்கப்படுதல் முதலிய தம், செயல்களை நெஞ்சினுடையனபோல அருளிச்செய்தார். இதனுள், இறுதியிரண்டடிக்கும் பிறவாறு உரைப்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 36

புகுவ தாவதும் போதர வில்லதும்
பொன்னகர் புகப்போதற்
குகுவ தாவதும் எந்தையெம் பிரான்என்னை
ஆண்டவன் கழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு
தேனொடு பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற்
கென்செய்கேன் வினையேனே. 

பொழிப்புரை :

சென்று அடைதற்கு உரியதும், சென்றால் மீளுத லில்லாததும் ஆகிய, சிவலோகம், புகுதற் பொருட்டுச் செல்லுவதற்குத் தடையான பற்றுக் கழல்வதும் எம் தந்தையும், எம் தலைவனும், என்னை ஆண்டருளினவனும் ஆகிய இறைவனது திருவடிக்கு அன்பினால் நெஞ்சம் உருகுதலும் நாள் தோறும், அமுதத்துடன் தேன் பால் கற்கண்டினும் மேற்பட்ட பேரின்பம் விளைவதும் இல்லை யாயின் இதற்குத் தீவினையுடையேன் யாது செய்ய வல்லேன்?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புகுவது முதலிய நான்கும் அவ்வத்தொழில்மேல் நின்றன. சிவலோகத்தைக் குறித்த. `பொன்னகர்` என்பதனை முதலிற் கூட்டுக. `ஆவது` என்பன பலவற்றிற்கும், `உண்டாதல்` எனப் பொருளுரைக்கப்படும். போதரவு - மீண்டு வருதல். `இல்லது, இன்று` என்பன அப்பண்பின்மேல் நின்றன. தாம் விரும்புவன பலவற்றையும் நினைந்து இரங்குகின்றாராகலின், புகுந்தபின் நிகழற்பாலதாகிய போதரவு இன்மையையும் அருளிச்செய்தார். உகுவது - நீங்குவது; இதற்கு, `உடம்பு` என்னும் வினைமுதல் வருவிக்க. நெகுவது - ஊறு வது. ஒடு. எண்ணிடைச்சொல். தேன் முதலிய மூன்றும் ஆகு பெய ராய், அவைபோலும் இன்பத்தைக் குறித்தன. மற்று, வினை மாற்று.

பண் :

பாடல் எண் : 37

வினைஎன் போல் உடை யார்பிறர் ஆர்உடை
யான்அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்
பன்றுமற் றதனாலே
முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்துநான்
முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை இரும்புகல் மனம்செவி
இன்னதென் றறியேனே.

பொழிப்புரை :

என்னைப் போலத் தீவினை உடையவர், பிறர் யாருளர்? என் முதல்வன் நாய் போன்ற அடியேனைத் தினையளவும், நீங்கியிருப்பது அவனது திருக்குறிப்பு அன்று; ஆதலால் இறைவனது திருவடியாகிய நல்ல மலரை, நானே நீங்கியிருந்தும் தலையைக் கல் முதலியவற்றில் முட்டிக் கொள்கிலேன்; பிளந்து கொள்ளேன்; இத் தன்மையேனாகிய என்னுடைய பாவனை இரும்பாகும்; மனமானது கல்லாகும்; காது இன்ன பொருள் என்று அறியேன்?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`உடையானுக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்த லாயிற்று. ``தினையின் பாகம்`` என்றது, `மிகச் சிறிது` என்னும் பொருட்டாய், அவ்வளவிற்றாகிய காலத்தை உணர்த்திற்று. மற்று அசைநிலை. `நான் பிரிந்து` என மாற்றி, `நானே` எனப் பிரிநிலை ஏகாரம் விரித்துரைக்க. ``அதனால்`` என்றது, இக்கூற்றிற்கே ஏது உணர்த்திநின்றது. `இருந்து` என்றே ஒழியாது, `இருந்தும்` என உம்மை விரித்து ஓதுதல் பாடமாகாமை அறிந்துகொள்க. ``தலை`` என்றது, முன்னரும் சென்று இயையும். முட்டுதல், கல் முதலியவற்றினும், கீறுதல், கருவியாலும் என்க. ``இருந்து முட்டிலேன் கீறேன்`` என்றாரா யினும், `முட்டாமலும், கீறாமலும் இருக்கின்றேன்` என்றலே கருத் தென்க. ``கீறிலேன்`` என்றதன்பின்னும் `ஆகலான்` என்னும் சொல் லெச்சம் வருவிக்க. இனையன் - இத்தன்மையுடையேனது. `வேடம்` எனப்பொருள் தரும் `பாவனை` என்பது, இங்கு, உடம்பைக் குறித்தது. ``இரும்பு, கல், இன்னது`` என்றன, `அவற்றான் இயன்றது` எனப் பொருள் தந்து நின்றன.

பண் :

பாடல் எண் : 38

ஏனை யாவரும் எய்திட லுற்றுமற்
றின்னதென் றறியாத
தேனை ஆன்நெயைக் கரும்பின்இன் தேறலைச்
சிவனைஎன் சிவலோகக்
கோனை மான்அன நோக்கிதன் கூறனைக்
குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யான்இருந் தோம்புகின் றேன்கெடு
வேன்உயிர் ஓயாதே.

பொழிப்புரை :

மற்றையோர் எல்லாரும் இன்னது என்று அறியப் படாத தேன் போல்வானும், பசுவின் நெய் போல்வானும், கரும்பின் இனிமையான சாறு போல்வானும், சிவனும் எனது சிவலோகத் தரசனும், பெண்மானின் நோக்கம் போன்ற திரு நோக்கத்தை யுடையவளாகிய உமாதேவியின் ஒரு பாகத்தை உடையவனும் ஆகிய இறைவனை அணுகிலேன். நீண்ட நாள்கள் இருந்து உடம்பை வளர்க்கின்றேன். கெடுவேனாகிய எனது உயிர் ஒழியவில்லையே!

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேன் முதலிய மூன்றும் ஆகுபெயராய், `அவை போல்பவன்` எனப் பொருள் தந்து, ``அறியாத`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயின. `சிவன்`` என்றது, இறைவனைச் சிறப்பு வகையாற் குறித்தவாறு. இதனை, ``கூறனை`` என்றதன் பின்னர் வைத்து, `சிவனை, ஏனை யாவரும் எய்திடலுற்றும், யான் நெடுங்காலம் குறுகிலேன், உயிர் ஓயாதே இருந்து ஊனை ஓம்புகின்றேன்; கெடு வேன்` எனக் கூட்டியுரைக்க. ஏனை யாவரும் - என்னை யொழித்து ஒழிந்த அடியவர் எல்லாரும். ``நெடுங்காலம்`` என்றதன்பின், செல்ல என்னும் பொருட்டாகிய, `ஆக` என்பதும், அதன்பின் உம்மையும் விரிக்க. கெடுவேன் என்றதன் பின்னும் இரக்கப் பொருட்டாகிய ஓகாரம் விரித்து, `இந்நிலையிற்றானே இருந்து, அழிந்தொழிவேன் போலும்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 39

ஓய்வி லாதன உவமனில் இறந்தன
ஒண்மலர்த் தாள்தந்து
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும்
என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன்
தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்
செழுங்கடல் புகுவேனே. 

பொழிப்புரை :

அழியாததும் உவமை இல்லாததும் ஆகிய தன் திருவடியை அருள் செய்து, நாயினும் இழிந்தவனாகிய என்னை நல்வழி காட்டி ஆண்டருளி, தாயினும் சிறந்த அருள் செய்த இறை வனைக் காணாத நான், தீப்பாய்தல் முதலியவற்றைச் செய்திலேன். என்மன வலியிருந்தவாறு என்னை?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஓய்வு - மெலிதல்; `உயிர்களைத் தாங்குதலில் தளர்ச்சி யில்லாத` என்றபடி. `உவமம்` என்பது, ``உவமன்`` என ஈறு திரிந்தது. ``உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை`` (தொல், பொருள் - 274) என்றாங்கு, `எவ்விடத்தும், பொருளின் உவமம் சிறந்து காட்டுதல் மர பாய் இருக்க, இவை அவ்வாறன்றி, உவமம் யாதாயினும், அதனினும் சிறந்து நிற்பன` என வியந்தருளிச் செய்தவாறு. உவமம், தாமரைமலர், பொன், தளிர் முதலியன. `இலாதனவும், இறந்தனவும் ஆகிய தாள்` என்க.
`நாய்` என்பது, அதன் பண்பின்மேலும், `குலம்` என்றது, அதனிற் பிறந்த உயிரின்மேலும் நின்றன. `நாய் என்னும் அத்தன்மை யிற் பொருந்திய குலத்திற் பிறந்த அவ்வுயிரினும் கடைப்பட்ட` என்றபடி. ``என்னை`` என்றதை, `எனக்கு` எனத் திரிக்க. தாயில் ஆகிய இன்னருள் புரிந்த - தாயினது அன்பு போலச் சுரந்த இனிய திருவருளை விரும்பிச் செய்த. `நனி` என்னும் உரிச்சொல், `காணேன்` என்பதன் முதனிலையைச் சிறப்பித்தது; `இடையறாது கண்டிருக்கும் பேற்றைப் பெற்றிலேன்` என்றபடி. இதன்பின், `அதன்பொருட்டு` என்பது வருவிக்க. ``புகுவேனே`` என்றதில் உள்ள ஏகாரம் எதிர் மறையாகலின், `தீயில் விழமாட்டாதவனும், திண்வரையினின்றும் உருளமாட்டாதவனும் ஆகிய யான், செழுமையான கடலிலே புகுவேனோ; மாட்டேன்` என உரைக்க.
சிற்பி