பண் :

பாடல் எண் : 40

வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும்
அதுதனை நினையாதே
மான்நி லாவிய நோக்கியர் படிறிடை
மத்திடு தயிராகித்
தேன்நி லாவிய திருவருள் புரிந்தஎன்
சிவன்நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும்
உண்டுடுத் திருந்தேனே. 

பொழிப்புரை :

மாதர் மயக்கத்தில் சிக்கி, உழன்ற என்னை ஆட் கொண்டருளின இறைவனது சிவபுரத்தை அடையாமல், உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் பொருட்டு இன்னமும் உண்டும் உடுத்தும் இருந்தேன். என்னே என் நிலை?

குறிப்புரை :

ஆத்துமசுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வேனில் வேள் - மன்மதன். மதி - சந்திரன். படிறு - வஞ்சனை, என்றது அன்னதாகிய பார்வையை என்பது, `நோக்கியர்` என்றதனால் பெறப்பட்டது. ``படிறிடை`` என்றதன்பின், `பட்டு` என ஒருசொல் வருவித்து, அதனையே ``நினையாது`` என்ற எச்சத்திற்கு முடிபாக்குக. `மகளிரது கடைக்கண் நோக்கில் அகப்படின், வேள் கணை கிழிக்கவும், மதிசுடவும் துயருறும் நிலை உண்டாம் என்பதனை நோக்காது அகப்பட்டேன்` என்றதாம். `மத்திடு தயிராகியதனால்` போகேனாய் இன்னும் இருந்தேன்` என்க.
மேல் ``உடையான் அடிநாயேனைத் தினையின் பாகமும் பிறிவது திருக் குறிப்பன்று`` (பாட்டு-41) என்றதனால், இறைவன் அடிகளை, ``கோலமார்தரு பொதுவினில் வருக`` என ஈங்கே நிறுத்தி, ஏனையடியார்களை மட்டில் அழைத்துச் சென்றதற்குக் காரணம், தமது கருத்து வகையேயன்றி, இறைவனது திருவுளப்பாங்கு அன்று என்பதை அருளிச்செய்தார். இதனுள் அக்கருத்து இன்னதென்பதை எடுத்தோதியருளினார். ``மான் நிலாவிய நோக்கியர்`` எனப் பொதுமையிற் கூறினாரேனும், அஃது அடிகள்மாட்டுப் பேரன்புடையராய் அவரையின்றியமையாராகிய ஒருவரையே குறிக்கும். அவரை அடிகள் தம் மனைவியார் என்றலே பொருந்துவதன்றிப் பிறவாறு கோடல் பொருந்தாது. அவரும் இறைவன் அடிகளை ஆட்கொள்வதற்கு அண்மைக் காலத்தே மணந்தவராதல் வேண்டும். அடிகளை அவர் இன்றியமையாதிருந் தமையையும், அந்நிலையை அடிகள் நினைந்து அவர் அறியாதே இறைவனோடு செல்லமாட்டாராயினமையையும் வருத்த மிகுதியால் காமம் காரணமாக அமைந்தனபோலத் தாம் அருளிச்செய்தாராயினும், அன்பினால் அமைந்தன என்றே கொள்ளப்படும். படவே, அடிகள் பாண்டியனை விட்டு நீங்கியபின்னும் இறைவன் `தில்லையில் வருக` என்று பணித்த பின்னும் சிறிது காலம் அவ்வம்மையாரோடு திருவாத வூரில் இருந்து, பின்னர் இறைவன் திருவருட்பேற்றின் பெருமையை அவர்க்கும் அறிவுறுத்தித் தில்லைக்குப் புறப்பட்டார் என்பதும் அவ் வம்மையாரும் வருத்தமின்றி, அடிகளையும் இறைவனையும் வழி பட்டிருந்து இறைவன் திருவடியை அடைந்தார் என்பதும் உய்த் துணர்ந்து கொள்ளற்பாலன.
அடிகள் தாம் இறைவனோடு செல்லாது நின்ற காரணத்தை, இனிவரும், ``முடித்தவாறும்`` என்ற திருப் பாடலிலும் அருளுவர், சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னரும் மனைவியார் இருவருடன் வாழ்ந்திருந்தமை நன்கறியப்பட்டதாகலின், அன்னதொரு நிலை அடிகட்கும் இருந்ததெனக் கொள்ளுதல் எவ்வாற்றானும் தவறுடைத்தாகாமையே யன்றி, இன்னோரன்ன அருட்டிரு மொழிகளை, மனம் உலகப் பற்றினாலும், பிறவாற்றாலும் சிறிதும் துயருறாதிருக்கவும், உற்றது போல, `மாதர் வலையில் அகப்பட்டு வருந்துகின்றேன்; ஆக்கைக்கு இரைதேடி அலைவதிலே காலம் கழிக்கின்றேன்` என்றெல்லாம் பாடுவார் சிலரது பாடல்களோடு ஒப்பவைத்துப் பொருள் செய்தல் குற்றமாதலும் அறிந்துகொள்க.
இங்ஙனம், சிறுபற்றுக் காரணமாக அடிகள் உலகில் நின்றபின், மீள இறைவன் திருவடி கூடுங்காலம் சிறிது நீட்டித்தமையின், அந் நீட்டிப்பைப்பொறாமையால், அடிகள், தம்மைத் தாமே பலகாலும் நொந்து பல பாடல்களை அருளிச்செய்தார்; அவ்வருளிச்செயல் உல கிற்குப் பேருபகாரமாய் முடிந்தது எனக் கொள்க.

திருச்சதகம்


பண் :

பாடல் எண் : 41

இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்
கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே
வருக வென்றுப ணித்தனை வானுளோர்க்கு
ஒருவ னேகிற்றி லேன் கிற்பன் உண்ணவே. 

பொழிப்புரை :

நீ என் மனத்தில் எழுந்தருளியிருந்து நான் துன்பம் நுகர்தற்கு இரங்கி, வருக என்று கட்டளை இட்டு அருளினை; அந்தச் சுகத்தை நான் அநுபவிக்கப் பெற்றிலேன்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

இப்பகுதிக்கு, `கைம்மாறு கொடுத்தல்` எனக் குறிப் புரைத்தனர் முன்னோர். `கொடுத்தல்` என்பது `கொடுத்தல் பற்றியது` என்னும் பொருட்டாய், கொடுத்தல் இயலாமையையே குறிக்கும். இஃது இப்பகுதியில் ஒன்பதாந் திருப்பாட்டின் பொருள் பற்றி உரைக்கப்பட்டது.
பொருள்கோள்: `வானுளோர்க்கு ஒருவனே, (நீ என்னை) வருக என்று பணித்தனை; (ஆயினும் யான்) அது செய்கின்றிலேன்; (மற்று) உண்ணவே கிற்பன்; (அதனால்,) யான் இருகை யானையை ஒத்திருந்து, என் உள்ளக் கருவைக் கண்டிலேன்; கண்டது எவ்வமே`.
இருகை யானை, இல்பொருள் உவமை. விலங்கொடு தமக்கு வேற்றுமை கையுடைமை என்பது கூறுவார், யானையாகிய விலங் கிற்கு கையுண்மை கருதி, அதனின் வேறு படுத்து, ``இருகை யானை யை ஒத்து`` என்றார். கரு - உட்பொருள். உள்ளத்தின்கண் உள்ள உட் பொருளாவது, முதற் பொருள்; சிவம். `கருவை`` என்றது, `கருவாகிய நின்னை` என்னும் பொருட்டாகலின், முன்னிலைக்கண் படர்க்கை வந்த மயக்கமாம். கிற்றிலேன் - வல்லேனல்லேன். கிற்பன்- வல்லேன்.

பண் :

பாடல் எண் : 42

உண்டொர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. 

பொழிப்புரை :

மேலான பொருள் ஒன்று உண்டு என்று அறிந்தார்க்கும் அறிதற்கரிய நீ, எனக்கு உள்ளபடி எழுந்தருளிக் காட்சி தந்தருளினை. அப்படி காட்சி கொடுத்த உன்னைக் கண்டும் காணாத வன் போல மயங்குகின்றேன். இது என்ன கண்மாயம்?

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

ஒண்பொருள் - சிறந்த பொருள்; பரம்பொருள். உண்டு என்று உணர்வார் - உண்மை மாத்திரையின் உணர்வார். அவர், சிந்தனையறிவின்றிக் கேட்டலறிவு ஒன்றேயுடையார் என்க. அவர்க்கு அப்பொருளின் இயல்பு அறியவாராமையை, பெண்டிர் ஆண் அலியென்று அறிய ஒண்கிலை என்றார். எனவே ``பெண்டிர் ஆண் அலி`` என்றது, `இன்னது` என்னும் அளவாய் நின்றது. ``உள்ளவா`` என்றது, `நின் இயல்பு முழுதும் இனிது விளங்கும் வகையில்` என்றபடி. கண்டும் தோன்றியபொழுது அநுபவமாகக் கண்டும். கண்டிலேன் - பின்னர்க் காணவில்லை. `அவ்வநுபவம் நீங் காது நிற்கப் பெறுகிலேன்` என்றபடி. கண்மாயம் - கட்பொறி பற்றிய மாயம். அது நன்கு காணப்பட்ட பொருள் ஓர் இமைப் பொழுதில் விரைய மறைதல். கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரி தாதல் போல, (குறள். 377) அநுபவத்தைத் தலைப்பட்டும், நிலைக்கப் பெற்றிலேன்; இஃது ஓர் வினைப்பயன் இருந்தவாறு என்பதாம்.

பண் :

பாடல் எண் : 43

மேலை வானவ ரும்மறி யாததோர்
கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேஇவை வந்துபோம்
கால மேஉனை யென்றுகொல் காண்பதே. 

பொழிப்புரை :

மேன்மையுடைய தேவர்களும் அறிய காட்சிக்கு எட்டாத திருவுருவத்தை உடைய நடராஜப் பெருமானே! நீ என்னை ஆட்கொண்டு உள்ளாய். பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக் கும் சாட்சியாய் இருக்கும் கால சொரூபம் நீ. உன்னை நான் எப்போது காண்பேன்?

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

``மேலை`` என்றதில் ஐ சாரியை. மேலை வானவர் - மேலிடத்துள்ள தேவர். எனவே. ``வானவர்`` என்றது, வாளா பெய ராய் நின்றதாம். கோலம் - வடிவம். அஃது ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது. வானவராலும் அறியப்படாமை கோலத் திற்கு அடையாதல் அறிக. ``கூத்தன்`` என்றது தான்செய்யும் செயலால் தொடக்குண்ணாதவன் என்பது குறித்து நின்றது. மண், விண் முதலிய எல்லாவற்றிலும் அவையேயாய்க் கலந்து நிற்றல்பற்றி இறைவனை அவையாகவே ஓதினார். அதனானே, பின்னர் அவைகளை `இவை` எனச் சுட்டினார். பின்னர், `காலமே` என்றதும் அது. ஏகாரத்தை எண்ணுப்பொருள தாக்குவாரும் உளர்; அவர், பின்னர், `காலமே` என்றதற்கு வேறு கூற மாட்டாதவராவர். போம் என்ற பெயரெச்சம் காலம் என்ற ஏதுப்பெயர் கொண்டது. `காலம்` என்பது காலப் பெயரன்றோவெனின், அன்று; என்னையெனின், ``நிலனே காலம் கருவி`` (தொல். சொல் - 113.) என்றவிடத்து, `காலம்` என்றது, அவ்வவ் வினைநிகழ்ச்சிக்குரிய சிறப்புக் காலத்தையன்றி, எல்லா வற்றிற்கும் ஏதுவெனப்படும் பொதுக்காலத்தை அன்றாகலானும், ஈண்டுக் கருதியது பொதுக் காலத்தையன்றிச் சிறப்புக் காலத்தை அன்றாகலானும், இப்பொதுக்காலம், பிறபொருள்களோடு ஒப்பப் பொருள் எனப்படுமாகலானும் என்க.

பண் :

பாடல் எண் : 44

காண லாம்பர மேகட்கி றந்ததோர்
வாணி லாம்பொரு ளேஇங்கொர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாறறி யேன்புலன் போற்றியே. 

பொழிப்புரை :

இறைவா! ஊனக் கண்ணால் அன்றி, ஞானக் கண்ணாலேயே காண்பதற்குரிய பரஞ்சோதி நீ! பறவைக் குஞ்சு கூட்டை விட்டுப் பறக்க முடியாது இருப்பது போன்று பாழாய்ப் போன நான் பொய்யுடலை விட்டுப் பிரிந்து உன்னோடு பொருந்தி இருக்கும் நெறியை அறியாது இருக்கிறேன். ஐம்புலன்களில் வைத்துள்ள பற்றுதலே அதற்குக் காரணம். பொறிவாயில் ஐந்தையும் எரிந்து போனவைகளாக ஒதுக்கி வைத்துப் பழகுவேனாக!

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

காணலாம் பரமே - ஞானக்கண்ணாலன்றி ஊனக் கண்ணாலும் காணத்தக்க பரம்பொருளே; இஃது அடியவர்க்கு அநுபவமாதல் குறித்தபடி. கட்கு இறந்தது ஓர் வாள் நிலாம் பொருளே-கண்ணொளியைக் கடந்ததாகிய ஒரு பேரொளி நிலை பெற்றுள்ள பொருளே; இஃது இறைவனது திருமேனியின் சிறப்புக் கூறியவாறு. `நிலாப் பொருள்` என்பது, பாடம் ஆகாமையறிக. பார்ப்பு - பறவைக்குஞ்சு. `பாழ்நனேன்` என்பது, எதுகை நோக்கி, `பாணனேன்` எனத் திரிந்துநின்றது. `பாழ்த்த பிறப்பு`` (தி.8 திருவாசகம் - 20) என்றாற்போல, `பாழ்` என்பது வினைப் பகுதியாயும் நிற்றலின், நகர இடைநிலை பெற்றது. `பாழாகின்ற யான்` என்பது பொருள். ``புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய`` (தி.8 சிவபுராணம் அடி 55) என்றாராகலின் அவ்வஞ்சனைக்கு இடமாகிய உடம்பை, ``படிற்று ஆக்கை`` என்று அருளினார். பூணுதல் - பொருந்தக் கொள்ளுதல். போற்றி - பாதுகாத்து; என்றது, `அவற்றை விடுக்குதலின்றி நின்று` என்றபடி. `பார்ப்பெனப் படிற்றாக் கையைவிட்டு உனைப் பூணுமாறு அறிகின்றிலேன்` என்க. `குடம்பை தனித்தொழியப் புள் பறத்தல் போல், (குறள் - 338) உடம்பு தனித்துக்கிடப்ப யான் அதனினின்றும் புறப்பட்டு` என்பார், ``பார்ப்பென ஆக்கையை விட்டு`` என்றார்.

பண் :

பாடல் எண் : 45

போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்
றாற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன்
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங்
கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே. 

பொழிப்புரை :

இறைவா! உன்னை வாயால் துதித்தும் உடம்பால் அங்கப் பிரதட்சணம் செய்தும் பல விதங்களில் புகழ்ந்துரைத்தும் பத்தியில் நிலை நின்று அந்த உறுதியான பக்தியின் வலிமையைக் கொண்டு உன்னை அழைக்கின்றேன் இல்லை. மார்க்கண்டேயனைப் பிடித்தல் பொருட்டு உன்னை எதிர்த்து வந்த கூற்றுவன் உன் திருவடியை அடைந்தான். என்னுடைய போக்கும் அத்தகையதாய் இருக்கிறது.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

போற்றி என்றல் - வணக்கங் கூறுதல். புரளுதல், ஆற்றாமைபற்றி. நின்று - அன்பு நெறியிலே நின்று. ``ஆற்றமிக்க``, ஒருபொருட் பன்மொழி. `ஆற்றல் மிக்க``, என்பது பாடமாயின், உன்னை யடைவிக்கும் `ஆற்றல் மிகுந்த` என உரைக்க. ``அழைக் கின்றிலேன்`` என்றதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. ``ஏற்று வந்து எதிர்`` என்றதை, `எதிரேற்று வந்து` என மாற்றிக்கொள்க. எதி ரேற்றல் - பகையாய் ஏற்றுக்கொள்ளுதல். கூற்றம் - இயமன்; என்றது அவனது செயலை. ``கொள்கை`` என்றதும், செயலையே. `உன்னை அன்பால் அழைத்து அடையப் பெறாது ஐம்புல இன்பங்களில் திளைத்திருக்கின்ற என்னை, நீ ஒறுத்துஉன்பால் அழைக்கவே உன்னை யான் பெறுவேன்போலும்` என்பார், இறைவனை அன்பால் வழிபட்டு அவன் திருவடியைப் பெறாது, பகையாய் வந்து அதனைப்பெற்ற கூற்றுவனது செயலை உவமை கூறினார். ``காலன் அறிந்தான் அறிதற் கரியான் கழலடியே`` (தி.4.ப.113.பா.11) என்றார், ஆளுடைய அரசுகளும்.

பண் :

பாடல் எண் : 46

கொள்ளுங் கொல்லெனை அன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 

பொழிப்புரை :

கொன்றை மாலையை அணிந்த இறைவனே! எள்ளும் எண்ணெயும் போல எல்லாப் பொருள்களிலும் நீக்கமின்றி நிறைந்து இருப்பவனே! உன்னை அடையும் வழியை அறியாத என்னையும் உன் அன்பரைப் போலக் கூவி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

`கொள்ளுங்கில்` என்பது பிழைப்பட்ட பாடம். `எனையும்` என்ற உம்மை தொகுத்தலாயிற்று. அன்பரின் - ஏனைய அடியார்களைப்போல. கூய் - அழைத்து; `பணி கொள்ளுங் கொல்` என இயைக்க. நள் - நடு. `நடு, கீழ், மேல்` என்பன, அவ்வவ்விடத்தை யுணர்த்தி நின்றன.

பண் :

பாடல் எண் : 47

எந்தை யாய்எம்பி ரான்மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய்தம்பி ரான்தனக் கஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவருஞ்
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.

பொழிப்புரை :

சிவன், எனக்குத் தந்தையும் தாயும் தலைவனும் ஆனவன். அவன் உயிர்கள் அனைத்துக்கும் தந்தையும் தாயும் தலைவனும் ஆகின்றான். மற்றுத் தனக்கு அம்முறை உரிமை ஒன்றும் இல்லாதவன். சொல்லால் மட்டும் அன்றி மனத்தாலும் யாராலும் அறிய முடியாத ஞானநற்செல்வத்தை உடையவன். அவனை நான் அறிதற்கு முன்பே அவன் என் உள்ளத்தில் குடிகொண்டு உள்ளான்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

``எந்தை, யாய், எம்பிரான்`` என்றது தமக்கும், ``தந்தை, தாய், தம்பிரான்`` என்றது பிறர்க்குமாம். `யாய்` என்றது, எனக்குத்தாய் என்னும் பொருளாதலை ``யாயும் ஞாயும் யாரா கியரோ`` (குறுந்தொகை-40) என்றதனானும் அறிக, அஃது - அம் முறைமை. முந்தி - தானே முற்பட்டு. ``முந்தி என்னுள் புகுந்தனன்`` என்றதை இறுதிக்கண் வைத்துரைக்க. `பிறர் முயன்றும் அடைதற் கரியவன், தானே வந்து என்னுள் புகுந்தனன்` என்றபடி. செல்வன் - எல்லாம் உடையவன்.

பண் :

பாடல் எண் : 48

செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. 

பொழிப்புரை :

செல்வர்களுக்கு இடையிலும் வறியோர்களுக்கு இடையிலும் தேவர்களுக்கு இடையிலும் புழுப்போன்ற அற்ப உயிர்களுக்கு இடையிலும் புல் போன்ற தாவரங்களுக்கு இடையிலும் சிவனருள் பாகுபாடு இன்றி நிறைந்து இருக்கிறது. அந்த அகண்ட சொரூபத்தைக் காணப்பெற்ற பின்பும் அப்பெரு நிலையினின்றும் வழுவியவன் ஆனேன். முற்றிலும் மலபரிபாகம் அடையாததே இந்தக் துன்பநிலைக்குக் காரணம் ஆகும்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

``செல்வம், நல்குரவு`` என்றவை அவற்றை யுடைவரைக் குறித்தன. ``புழு, புல்`` என்றவற்றை, `தாழ்ந்த பிறவி` என ஒருபகுதியாகக் கொள்க. ``வரம்பு`` என்றது, `பாகுபாடு` என்னும் பொருட்டாய் நின்றது. `இறைவனை அறிதல் அறியாமைகட்கு, உலக முறை பற்றிக் காணப்படும் இப்பாகுபாடுகள் காரணமல்ல; அருள்வழி நிற்றலும், நில்லாமைகளுமே காரணம்` என்பார். உலகியலை எடுத் தோதி, ``யார்க்கும் அரும்பொருள்`` என்று அருளினார். விண்ணோரது உயர்வைக் குறித்தற்குப் புழுப் புற்களை எடுத்தோதி யதன்றிப் பிறிதின்மையின், `யாவர்க்கும்` என்பது கூறாராயினார். அரும்பொருளாகிய இறைவனை, ``அரும்பொருள்`` என்றது பான்மை வழக்கு. கல் வகை மனம் - கல்லென்னும் வகை போலும் மனம். ``வகை`` என்றது, அதனையுடைய பொருள் மேல் நின்றது. ``பட்ட கட்டம்`` என்னும் எழுவாய்க்குரிய `இது` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. `இது` என்பது, `இழிக்கத் தக்கது` என்னும் குறிப்பினது.

பண் :

பாடல் எண் : 49

கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீறு
இட்ட அன்பரொ டியாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண் டும்அறி யேனையே. 

பொழிப்புரை :

எண் மூர்த்திகளின் தத்துவத்தையும் அர்த்த நாரீசுவர தத்துவத்தையும் அறிந்து கொள்ளாத எனது பாசத் தளையைக் களைந்து, என்னை ஆட்கொண்டாய். அது மட்டுமன்று. திருநீறு பூசிய உன் மெய்யன்பர்கள் கூட்டத்தில் இருக்க நான் தகுதி வாய்ந்தவன் என்று உலகம் அறியும்படி என்னை அவர்களது சபையில் சேர்த்து வைத்தாய்.

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

கட்டு - பாசம். கண் ஆர நீறிடுதல் - காண்கின்ற கண்கள் மகிழ்வுறும்படி திருநீற்றை அணிதல். பட்டி மண்டபம் - கூட்ட மண்டபம்; என்றது, கேள்வி மண்டபத்தை. அஃதாவது, அறிவார் ஒருவர் உரைக்கும் அரும் பொருள்களைப் பலர் இருந்து கேட்கும் மண்டபம். இறைவன் திருப்பெருந்துறையில் ஆசிரியக் கோலத்துடன் குருந்த மரத்தடியில் அடியவர் பலருடன் வீற்றிருந்த நிலையையே அடிகள் இங்கு, ``பட்டி மண்டபம்`` என்றார் என்க. ``எட்டினோடு`` என்பதில் ஓடு, எண்ணிடைச்சொல். எனவே, ``எட்டினோடு இரண்டும்`` என்றது, `எட்டும் இரண்டும் கூட்டியுணரத் தெரியாதவன்` என்னும் பொருட்டாய், `கல்லாதவன்` என்பதைக் குறிக்கும். யோக நெறியில், அகார உகரங்களாகிய பிரணவத்தை உணராதவன் என்பதைக் குறிக்கும். உபதேச முறையில் எட்டும் இரண்டும் கூடிய பத்தென்னும் எண்ணினைக் குறிக்கும் யகரமாகிய எழுத்தின் பொருளை - ஆன்மா இயல்பை அறியாதவன் என்பதைக் குறிக்கும். இவற்றுள் அடிகள் அருளியது யோகநெறிப் பொருள் பற்றியேயாம், ஞானோபதேசத்திற்கு முற்பட்ட நிலை அதுவே யாகலின். `தவமே புரிந்திலன்`` என மேலும் ( பா. 9) அருளிச்செய்தமை யறிக. ``ஏற்றினை`` என வந்த இரண்டனுள், பின்னையதன்பொருள், `இடபவாகனத்தையுடைய நீ` என்பது. `அறியேனைப் பட்டி மண்டபம் ஏற்றினை; இது நின் கருணை இருந்தவாறு` என்க.
சிற்பி