பண் :

பாடல் எண் : 50

அறிவ னேஅமு தேஅடி நாயினேன்
அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅரு ளீசனே.

பொழிப்புரை :

பேரறிவு சொரூபியே! அமிர்த சொரூபியே! அற்ப னாகிய என்னை ஒரு ஞானியாக்குதற் பொருட்டு அன்றோ, நீ, என்னை ஆட்கொண்டது. நீ ஆட்கொண்டதற்கு முன்பு நான் அறிவிலி யாய் இருந்தது வெளிப்படை. இன்று நான் ஞானியோ அல்லனோ. எனக்கு விளங்கவில்லை. என் நிலைமையைச் சற்றே கூர்ந்து தெளிவு செய்வாயாக!

குறிப்புரை :

கைம்மாறு கொடுத்தல்
கலிவிருத்தம்

பொருள்கோள்; `அறிவனே, அமுதே. ஈசனே, நீ என்னை ஆண்ட நாளில், அடிநாயினேன் அறிவனாகக் கொண்டோ ஆண்டது! (என்பால் நீ) கண்டது அறிவிலாமையன்றே! (அங்ஙனமாக, யான் என்றும்) அறிவனோ? அல்லனோ? அருள்`. இதனுள், ``அறிவு`` என வந்தன பலவற்றிற்கும், `பேரறிவு` என உரைக்க. இது, சொற்பொருட்பின் வருநிலையணி. `சிற்றறி வுடைமையே என் இயல்பாதல் அறிந்த நீ, என் பிழை கருதி என்னை விலக்கியது பொருந்துமோ`, என முறையிட்டவாறு. அருள் - சொல்லு.

திருச்சதகம்


பண் :

பாடல் எண் : 51

ஈசனே என் எம்மானே
எந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமொன்று
அல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு
நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே
செய்வ தொன்றும் அறியேனே. 

பொழிப்புரை :

இறைவா! பெருமை வாய்ந்த எம் தந்தையே! நீ பிறவி நோயைப் போக்கியுள்ளாய். சிற்றம்பலச் செழுஞ்சுடரே! உடல் உணர்ச்சியில் உழன்று கிடந்த என்னை நீ, உயர்ந்த பேறும் அடையப் பெற்றவன் ஆக்கினாய். உன்னை விட்டுப் பிழைபடுகிற மனத்தை உடைய எனக்கு, என்ன செய்வது என்று விளங்கவில்லை.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இப் பகுதிக்கு முன்னோர் கூறிய குறிப்பு, `அநுபோக சுத்தி` என்பது, `தடையில்லாச்சிவாநுபவம்` என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். அடிகள் இப் பகுதியில் அதனையே விரும்பிப் பாடுதல் காணலாம். ``ஈசனே`` என்றதன்பின் உள்ள, ``என்`` என்றதனை இறுதிக் கண் கூட்டி, வினாவாக்கி, `இதற்குக் காரணம் என்` என உரைத்து, `என்மாட்டுள்ள மலமாசே காரணம்` என்பது கருத்தாக்குக. எந்தை பெருமான் - என் தந்தையாகிய பெருமானே. நாசன் - போக்குபவன். ``யாதும் ஒன்று`` என்றதனை, `யாதொன்றும்` என மாற்றியுரைக்க. `உலகில் உள்ள பொருள்களில் யாதொன்றும் ஆகாத நீசனேன்` என்க. யாதொன்றும் ஆகாமையாவது, எப்பொருளினும் யாதேனும் ஓர் குணம் உளதாகும்; என்னிடத்தில் குணம் யாதும் உண்டாயிற்றில்லை என்றபடி. இங்ஙனங் கூறியபின், ``பொல்லா நாயான நீசனேன்`` என்றது, இத்துணை இழிந்தவரை நாயோடு ஒப்புமைப் படுத்தும் வழக்கு நோக்கி. `அதுதானும் என் மாட்டு ஒவ்வாது` என்றற்கு, பொல்லா நாய் - நன்றியறிவில்லாத நாய் என் றார். இஃது இல்பொருள் உவமை. நீசன் - இழிந்தவன். ``ஆண்டாய் க்கு`` என்றதன்பின், `கைம் மாறாக` என்பது வருவிக்க. `நினைக்கவும்` என்ற உம்மை தொகுத்த லாயிற்று. கண்டாயே - இதனை நீ கண்டாயன்றோ. செய்வது - இதை நீக்குதற்குச் செய்யும் வழி. அறியேன் - அறியாது திகைக்கின்றேன்.

பண் :

பாடல் எண் : 52

செய்வ தறியாச் சிறுநாயேன்
செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும்
பெறுதற் குரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம்
மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங்
கிருப்ப தானேன் போரேறே. 

பொழிப்புரை :

செய்ய வேண்டுவது இது என்று அறியாத நாயினேன் உன் திருவடியைக் காணாத பொய்யர் பெறும் பேறெல்லாம் பெறுதற்குரியேனாகி, உன் மெய்யன்பர் உன் திருவடியை அடையக் கண்டும் கேட்டும் அதனை அடைய முயலாமல் பொய்யனாய் உண்டும் உடுத்தும் காலம் கழிக்கின்றேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``செய்வது`` என்றது, அருள் பெற்றபின் செயற் பாலதனை. இது, அவ்வருட்கு முதல்வனாகிய இறைவனையன்றிப் பிறிதொன்றனை நாடாமையாம். `அதனை அறிந்திலேன்` என்றது, பின்னும் இவ்வுலகத்தை நாடினமைபற்றி. அதனானே, ``சிறுநாயேன்`` என வருந்தியுரைத்தார். சிறுமை, நாய்க்கு அடை. `அருள் பெற்றபின் செயற்பாலதனைச் செய்யாதொழிந்தமையின், அருள் பெறாதவரது நிலையையே நான் எய்தற்குரியனாயினேன்` என்பார், `பாதமலர் காணாப் பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்` என்றார். இதன் பின்னர், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, ``இருப்பதானேன்`` என்றதனோடு இயைத்து, `இஃதொரு வினையிருந்தவாறு` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. ``செம்பொற் பாதமலர், மலர்ப்பாதம்`` என்றவற்றிற்குமுன், `நின்` என்பது எஞ்சிநின்றது. பொய்யர் பெறும் இழப்பினை, `பேறு` என்றது இகழ்ச்சி பற்றி. வெறி - வாசனை. பொய் - உலகியல். மெய்- வீட்டு நெறி. மெய்யர் பாதம் மேவலை அடிகள் கேட்டது, கண்ணப்பர் முதலியோரது வரலாற்றில் என்க. `அக் கேள்வி யறிவேயும் அமையும், யான் இவ்வுலகியலைத் துறத்தற்கு` என்பார், அதனையும் உடன் கூறினார். இக் காட்சியறிவு கேள்வியறிவுகளாலும் என் உள்ளம் திருந்திற்றில்லை என்பார், ``உண்டு உடுத்து இருப்பதானேன்`` என்று அருளினார். உண்டலையும், உடுத்தலையும் எடுத்தோதியது, அவற்றைப் பெற்றதனோடு மகிழ்ந்து, பிறிது நாட்டமின்றியிருக்கின் றேன் என்றற்கு. ஏறு - சிங்க ஏறு, என்பது, `போர்` என்னும் அடை யாற் பெறுதும். தேவரின் மிக்கானாதல் கருதிச் சிவபெருமான், `சிங் கம்` எனப்படுதலை, ``மூவாச் சிங்கமே``` (தி.6.ப.99.பா.2), ``சிவனே தேவர் சிங்கமே`` (தி.7.ப.52.பா.1) என்றாற்போலுந் திருமொழி பற்றி அறிந்து கொள்க. ஏறு போல்வானை, ``ஏறு`` என்றது, உவமை யாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 53

போரே றேநின் பொன்னகர்வாய்
நீபோந் தருளி யிருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளோ
டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதஞ்
சேரக் கண்டுங் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனோ
கொடியேன் உயிர்தான் உலவாதே. 

பொழிப்புரை :

இறைவனே! நீ உன் சிவபுரத்தில் நின்றும் எம் பிராட்டியோடும் இவ்விடத்து எழுந்தருளி அருள் செய்யப்பெற்ற உன் அன்பர், உன் திருவடியை அடையக் கண்டும், கண்கெட்ட ஊர் எருது போன்று இவ்வுலகத்தில் உழல்வேனோ? இத்தன்மையேனது உயிர் நீங்காதோ?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``போந்தருளி`` என்ற செய்தெனெச்சத்தை, `போந் தருள` எனத்திரித்தும், ``இருள்நீக்கி`` என்றதனை, ``உடன் வந்து`` என்றதன்பின்னர்க் கூட்டியும், `கொடியேன், உயிர் உலவாது, கண்கெட்ட ஊர் ஏறாய் இங்கு உழல்வேனோ` என மாற்றியும் பொருள் கொள்க. `நீ` என்றது, பின்னரும் சென்றியையும். `நீ நின் பொன்னகர் வாய் போந்தருளவும், அருள்பெற்ற சீரேறு அடியார் நின்பாதம் சேரவும் அவற்றைக் கண்டும் உயிர் உலவாது கொடியேன் இங்கு உழல்வேனோ` என வினைமுடிக்க.
``உடன்`` என்றதில், `உடனாய்` என ஆக்கம் வருவித் துரைக்க. திருப்பெருந்துறையில் இறைவன் ஆசான் மூர்த்தியாய் வந்த பொழுது அம்மையோடு உடனாய் இருந்திலனாயினும், அம்மை யாவாள் அருளன்றி வேறல்லளாகலானும், இறைவன் அருளன்றி யிலனாகலானும், அவளோடு உடனாய் வந்தருளியதாகப் பல விடத்தும் அருளுவர்; மேலும் அவ்வாறு அருளினமை காட்டப் பட்டது. இறைவன் அருளன்றி இலனாதலை,
``அருளுண்டா மீசற் கதுசத்தி யன்றே
அருளு மவனன்றி யில்லை - அருளின்
றவனன்றே இல்லை``
(சிவஞானபோதம் சூ-5. அதி-2) என்பதனால் அறிக. ஏறு - எருது. காட்டேற்றினின்றும் பிரித்தற்கு, ``ஊரேறு`` என்றார். ஊர் ஏறுகள் மேய்தற் பொருட்டுக் காட்டிற் செல்லுமாயினும், மேய்ந்த பின்னர் ஊரை அடையும். அவற்றுள் கண்கெட்ட, ஏறு ஒன்று இருக்குமாயின், அஃது ஏனையவற்றோடு கூடிச் செல்லமாட்டாது காட்டிலே கிடந்து தன் இனத்தையும், தலைவனையும் நினைந்து கதறி அலமருதலின், அதனை, அருளைப் பெறுதற் பொருட்டு இவ்வுலகில் வந்தவர் பலரும் அதனைப் பெற்றுச் சிவன் நகருக்குச் சென்றுவிட, அவர்களோடு செல்லாது இவ்வுலகில் நின்று அவர்களையும், இறைவனையும் நினைந்து அழுது அலமரும் தமக்கு உவமை கூறினார். `என் உயிர்` என்பது ஒற்றுமை வழக்காயினும், உறுப்புத் தற்கிழமை வழக்கோ டொத்தலின், `உலவாது` என்பது, சினைவினை முதல்மேல் நின்ற வாறு; இவ்வாறன்றி இதனை வேறு தொடராக்கி உரைத்தலுமாம்.

பண் :

பாடல் எண் : 54

உலவாக் காலந் தவமெய்தி
உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாடப்
பாவி யேனைப் பணிகொண்டாய்
மலமாக் குரம்பை இதுமாய்க்க
மாட்டேன் மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன்
என்கொண் டெழுகேன் எம்மானே. 

பொழிப்புரை :

அளவில்லாத காலம் உடலை வெறுத்துத் தவம் புரிந்த பல முனிவரும் வருந்தி நிற்க, பாவியாகிய என்னைப் பணி கொண்டனை. அங்ஙனமாகவும் இந்தமல உடம்பை ஒழிக்க முயலேன். உன்னிடத்து அன்பு இல்லாத நான் இனி எவ்வகையால் உயர்வேன்?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொருள்கோள்: `மணியே, எம்மானே` உனைக் காண்பான், பல மாமுனிவர், உறுப்பும் வெறுத்து, இங்கு உலவாக் காலம் தவம் எய்தி நனிவாட, அவர்களைப் பணிகொள்ளாமல் உன்னைக் காணும்பொருட்டு யாதும் செய்யாத பாவியேனைப் பணி கொண்டாய்; (யானோ) உடம்பை நீக்கிக் கொள்ளும் விருப்பம் இல்லேன்; உன்னைக்காண விரும்பி அலைகின்ற அன்பும் இல்லேன்; எவ்வாற்றால் உன்னைத் தொடர்வேன்`.
தவம், உண்டி சுருக்கல் முதலாயின. உடம்பினை, `அங்கம்` என்னும் வடநூல் வழக்குப்பற்றி, ``உறுப்பு`` என்றார்.
``உறுப்பொத்தல் மக்கள்ஒப் பன்றால்``
(குறள்.993) எனவும்,
``குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்போ ரனையரால் வேறு``
(குறள்.704) எனவும் வருவனபோல்வனவற்றைக் காண்க.

பண் :

பாடல் எண் : 55

மானோர் நோக்கி உமையாள்
பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின்
தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக்
கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தானேன் உடையானே. 

பொழிப்புரை :

மான்விழி போன்ற விழியினை உடைய அம்பிகையின் வலப்பாகா! சிதம்பர நாதா! நீ பரிபூரணப் பரம் பொருளாகத் தோன்றி உன் அடியார்க்கு அமிர்தம் ஆகின்றாய். உன்னை நினைவதே மானுட வாழ்க்கையின் குறிக்கோள் என்று நீ காட்டியருளியதை அறிந்து கொண்ட நின் அன்பர், உன்னையே நினைந்து உன்னை அடைந்தார். உன் உடைமையாகிய நானோ உடலையே நினைந்து நிலவுலகுக்கு உரியவன் ஆனேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கூடுவார் - பொருந்துபவர்; ஒத்து நடப்பவர். ``கூட`` என்றதன்பின், `கூடாதேனாகிய யான்` என்னும் எழுவாய் வருவிக்க. `இஃது என் வினையிருந்தவாறு` என்பது குறிப்பெச்சமாய், இறுதிக் கண் எஞ்சி நின்றது. ``உமையாள்,`` ``கரும்பின்`` என்பன மூவசை யிடத்து ஈரசை வந்த சீர் மயக்கம்.

பண் :

பாடல் எண் : 56

உடையா னேநின் றனைஉள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதஞ்
சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன்
கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங்
கிருப்ப தாக முடித்தாயே. 

பொழிப்புரை :

உயிர்கள் அனைத்தும், இறைவா! உனக்குச் சொந்தம் ஆயினும் பேரன்போடு உன்னையே நினைப்பவர் மட்டும் உன்னை அடைகின்றனர். இதை நான் கண்டிருந்தும் என் நெஞ்சம் உருகவில்லை. எனக்கு விவேகம் வரவில்லை. உள்ளக் கனிவு உண்டாகவில்லை. துர்நாற்றம் வீசும் உடலில் விருப்பம் வைத்து ஊர் நாய்க்கும் கீழ்ப்பட்டவனாக இங்கு வாழ்ந்து இருக்கிறேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`உடையாயாகிய நின் பாதம்` என்க. ``கண்டும்`` என்னும் உம்மை தொக்கது. இஃது, ``இருப்பதாக`` என்றதில், `ஆக` என்பதனோடு முடியும். ஊர் நாய் - வளர்ப்பார் இல்லாத நாய்; `அஃதா யினும் தான் செய்தற்பாலதனைச் செய்யும்; யான் அஃதில்லேன்` என்பார், ``ஊர்நாயிற் கடையானேன்`` என்றார். ஊர் நாய் செய்வது, ஊரைக் காத்தல். ``கசியாதேன்`` முதலிய எழுவாய்கள், `இருப்பது` என்னும் தொழிற்பெயரொடு முடியும். ஆக - நிகழும்படி. முடித்தாய்- வரையறுத்தாய். ஏகாரம், தேற்றம். `இதுதான் என்னை வந்திங்காட் கொண்ட கருணைக்குரிய செயலோ` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 57

முடித்த வாறும் என்றனக்கே
தக்க தேமுன் னடியாரைப்
பிடித்த வாறும் சோராமற்
சோர னேன்இங் கொருத்திவாய்
துடித்த வாறும் துகிலிறையே
சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறும் இவையுணர்ந்து
கேடென் றனக்கே சூழ்ந்தேனே. 

பொழிப்புரை :

நீ முடித்த விதம் எனக்குத் தக்கதே. நான் அடியவரைப்பற்றியிருந்தும், என்னை மாயையாகிய பெண் வருத்த வருந்தினேன். எனக்கு நானே கெடுதியுண்டாக்கிக் கொண்டேன்.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``சோரனேன்`` என்பது முதலாக இறுதிகாறும் உள்ளவற்றை, எஞ்சிநின்ற, `ஆதலின்` என்பதனோடு முதலிற் கூட்டி, ``தக்கதே`` என்றதைப் பின்னும் இயைத்து, `அவருக்கு` என்பது வருவித்து, `முடித்தவாறும் என்றனக்கே தக்கதே; அடியாரைச் சோராமல் முன் பிடித்தவாறும் அவருக்கே தக்கதே` என உரைக்க. `அவரவருக்குச் செயற்பாலதனையே செய்தாய்; ஆதலின், யான் இங்கு நின்று துன்புறுவது நின்பிழை அன்று; என் பிழையே` என்ற வாறு. முன்னைத் திருப்பாட்டில், `இறைவன் செய்தது முறையன்று` என்பதுபோல அருளினமையின், இத் திருப்பாட்டில், `அது முறையே` என்றார் என்க. கழிபடர் (மிக்க துன்பம்) உற்றோர் இங்ஙனம் பல வகையாலுங் கூறி இரங்குதல் இயல்பென்க. ``ஒருத்தி`` என்றது, தம் மனைவியாரையேயாதல் வேண்டும் என்பது மேலே (தி.8. திருச்சத கம் பா. 44) கூறப்பட்டது. வாய்துடித்தமை முதலியவாகக் கூறியன, அடிகள் பிரிந்து வருங்காலத்து, அவ்வம்மையார்பால் நிகழ்ந்த ஆற்றா மைக் குறிப்பே என்றும், அங்ஙனம் ஆற்றாமை எய்திய அவரை, `விரைந்து வருதும்` என அடிகள் தேற்றிப்பிரிந்தார் என்றும், அதனால், இறைவன் தம்மைப் பிரிந்து செல்லும்பொழுது தாம் அத்தேற்றச் சொல்லைக் கடக்கமாட்டாராயினார் என்றும் கொள்ளற்பாலன.

பண் :

பாடல் எண் : 58

தேனைப் பாலைக் கன்னலின்
தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை
உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீஎன்னை
ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே யருளலாந்
தன்மை யாம்என் தன்மையே. 

பொழிப்புரை :

மனம் தெளிந்தவர்களுக்குப் பரமானந்தத்தை ஊட்டும் ஞானப் பிரகாசன் நீ. அவர்களுக்கு ஒப்பற்ற மேலாம் பொருள் நீ. மற்றுப் பக்குவம் அடையாத நான் உனக்கு அடிமை என்றும் நீ எனக்குத் தலைவன் என்றும், சொந்தம் பாராட்டினால் ஒரு புன்சிரிப்பின் மூலம் நீ அதை மறுப்பாய். உன் அருளுக்குத் தகுதியற்ற நான் அதற்குத் தகுதியுடையவன் என்று சொல்லுவது தகாது.

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கன்னல் - கரும்பு; இஃது அதன் சாற்றைக் குறித்தது. உம்பர் - மேலிடம். உம்பரான் - மேலிடத்தில் இருப்பவன். `உம்பர் ஆனை` என இருசொல்லாக அறுத்து, `தேவர்ஆ (பசு - காமதேனு)` என்றும் உரைப்பர். என்றால் - என்று உறவு கூறினால். ``தானும் சிரித்து`` என்றது, `பிறர் சிரித்தலேயன்றி` என்னும் பொருளைத் தருத லின், உம்மை, எச்சப் பொருட்டு. சிரித்தல், `வருக என்று பணித்த போதும் வாராதொழிந்த இவன்தானோ என் அடியான்! இவனைத் தானோ நான் ஆண்டுகொண்டது! நன்றாயுள்ளது இவன் கூற்று!` என்னும் இகழ்ச்சிக் குறிப்பினாலாம். ``சிரித்தே`` என்ற ஏகாரம், தேற்றம். `அங்ஙனம் இகழினும், தனக்கு இயல்பாய அருட்டன்மை யால், முன்பு வந்து ஆண்டதுபோல, இனியும் என்னைத் தன்பால் கூவிக்கொள்வான்` என்பார், `சிரித்தே ஒழியலாம்` என்னாது, ``சிரித்தே அருளலாம்`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 59

தன்மை பிறரால் அறியாத
தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை ஆண்டையா
புறமே போக விடுவாயோ
என்னை நோக்கு வார்யாரே
என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழுந் திருமேனி
எந்தாய் எங்குப் புகுவேனே. 

பொழிப்புரை :

உன்னுடைய இயல்பு, பிறர் பலராலும் அறியப் பெறாதது. அத்தகைய இறைவனே! புன்மையுடைய என்னை ஆண்டருளிப் புறத்தே செல்ல விடுகிறாயோ? நீயே அப்படிச் செய்தால் நான் என் செய்வேன்? எவ்விடத்தில் புகுவேன்? என்னை நோக்குவோர் யார்?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பிறர் - உன்னையொழிந்த மற்றையோர். சிவாநுபூதிச் செல்வராயினும், சிவனது தன்மை முற்றும் அறியப்படாமையறிக. அறியாத - அறியப்படாத. ``பொல்லாநாய்`` என்றதற்கு மேல் (பா. 55) உரைத்தாம். ``புன்மையேனை ஆண்டு விடுவாயோ`` என்றது, `என் புன்மை நோக்காது முன்பு என்னை ஆண்டுகொண்டு, பின்பு அது நோக்கி விட்டு விடுவாயோ` என்றவாறு. `அங்ஙனம் செய்யின், அஃது ஆண்டவற்கு அழகாகாது` என்பது குறிப்பு. ஓகாரம், இரக்கப் பொருட்டு. ``விடுவாயோ`` என்றதன்பின், `விடின்` என்பது எஞ்சி நின்றது. ``நோக்குவார்`` என்றது, `நோக்கி இரங்குவார்` என்னும் பொருட்டு. ``யாரே`` என்னும் ஏகாரம், அசைநிலை. ``பொன்`` என்றது, அதன் ஒளியை, ``எங்கு`` என்றது, `எவரிடத்தில்` என்றபடி.
சிற்பி