பண் :

பாடல் எண் : 60

புகுவேன் எனதே நின்பாதம்
போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி
நாண மில்லா நாயினேன்
நெகும்அன் பில்லை நினைக்காண
நீஆண் டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே
எந்தாய் அந்தோ தரியேனே. 

பொழிப்புரை :

இறைவனே! உன் திருவடிகளில் சரண் புகுவேன். உன் அடியார் நடுவில் கூடியிருந்து நகைத்தல் ஒன்றுமே செய்வேன். ஆனால் சரியான அன்பிலேன். இத்தகையோனான என்னை நீ ஆண்டருளல் தகுதியாமோ?

குறிப்புரை :

அநுபோக சுத்தி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`எந்தாய், நின் பாதத்தில் யான் புகுவேன்; (அதற்கு) அஃது என்னுடையதோ! (நீ கொடுக்க அன்றே பெறற்பாலது!) அதனை நீ கொடுத்து ஆண்டருள (ஏனைய அடியார்போல) அடியேனும் தகுவனோ? (தகேன்; ஏனெனில்,) நாணமில்லா நாயினேன், பண்டு, போற்றும் அடியாருள் நின்று நின் தோள்களை நோக்கி மகிழ்வேனாயினும், (இன்று எனக்கு) நினைக்காண நெகும் அன்பில்லை; அந்தோ, என் தன்மையை (யான்) தரியேன்` எனப் பொருள் கொள்க. இறைவன் திருப்பெருந்துறையில் ஆசான் மூர்த்தியாய் எழுந்தருளியிருந்த கோலம், அடியார் உள்ளத்தைக் கவருந் தன்மையதாய், இருந்தமையின் தம் உள்ளமும் அதனால் ஈர்ப்புண்டது என்பதை, ``பண்டு தோள்நோக்கி நகுவேன்`` என்றார். ``சிவனவன் திரள்தோள்மேல் - நீறு நின்றது கண்டனையாயினும் நெக்கிலை`` என முன்னரும் (தி. 8. திருச்சதகம் பா. 37) அருளினார். ``நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் - பேணாமை பேதை தொழில்`` (குறள்-833) என்பவாகலின், ``நாணமில்லா நாயினேன்`` என்றது, `பேதையேன்` என்னும் பொருளதாதலும், பெற்ற திருவருளைப் பேணுந்தன்மை இன்மையால், `பேதையேன்` என்றார் என்பதும் பெறப்படும். `பேணாது நின்றே பயன்பெற விழைகின்றேன்; அஃது இயல்வதோ` என்பார், `புகுவேன் எனதே நின்பாதம்` என்றார்.

திருச்சதகம்


பண் :

பாடல் எண் : 61

தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி. 

பொழிப்புரை :

கடவுளே! சங்கரனே! விருத்தனே! ஒப்பில்லாத தலைவனே! தேவர் தலைவனே! வணக்கம். இந்த உடம்போடு கூடி வாழும் வாழ்க்கையைச் சகித்திலேன். ஆதலால் இதனை ஒழித்து உன் திருவடியை அடைவிக்க வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இப்பகுதிக்கு, `காருணியத்திரங்கல்` என முன்னோர் உரைத்த குறிப்பு, `இறைவன் தனது கருணைத் தன்மையால் திருவுளம் இரங்குதலைக் குறித்தது` என்றே பொருள் கொள்ளற்பாற்று; என்னையெனின், இதனுள் அடிகள், `தரிக்கிலேன் காய வாழ்க்கை` என்று எடுத்துக் கொண்டு `உடல் இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்தருளு,ஒழித்திடு இவ்வாழ்வு, வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும்` என்றாற்போலப் பன்முறையும் வேண்டுகின்றா ராகலின். இதனானே, இதனுள், `போற்றி` என வருவன பலவும், அங்ஙனம் இரங்குமாறு வேண்டிக்கொள்ளும் வணக்கவுரையாதல் பெறப்படும்.
தரிக்கிலேன் - பொறுக்கமாட்டேன். `காய வாழ்க்கை தரிக்கிலேன்` என்க. வானம் - பரலோகம். `அதன்கண் உள்ள` என்க. நீ எவ்வாறும் ஆவாய் என்பார், `எங்கள் விருத்தனே, விடலையே` என்றார். விருத்தன் - முதியோன். விடலை- இளையோன். ``தம்பிரான்`` என்றதில் தம், சாரியை. பிரான் - தலைவன்.

பண் :

பாடல் எண் : 62

போற்றிஓம் நமச்சி வாய
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய
புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய
புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய
சயசய போற்றி போற்றி

பொழிப்புரை :

இறைவனே! போற்றி! போற்றி! இந்தப் பொய்யுலக வாசனையால் மயங்குகின்றேன். உன்னையன்றி எனக்கு வேறு புகலிடம் இல்லை. ஆதலால் என்னைக் கைவிடாமல் காத் தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``ஓம் நமச்சிவாய`` என்றது, `இம்மந்திரத்தின் பொருளாய் உள்ளவனே` என்றவாறு. `போற்றியோ` எனப் பிரித்து, ஓகாரத்தை, இரக்கப்பொருளது எனினுமாம். புயங்கம் - பாம்பு; `ஒரு வகை நடனம்` எனவும் கூறுப. மயங்குதல் - செய்வதறியாது திகைத்தல். `என்னைப் புறம் போக்கல்` என்க. கண்டாய், முன்னிலை அசை. சயசய - வெல்க வெல்க.

பண் :

பாடல் எண் : 63

போற்றிஎன் போலும் பொய்யர்
தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
நாதனே போற்றிபோற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்றிய மானன் வானம்
இருசுடர்க் கடவு ளானே

பொழிப்புரை :

பொய்யுடலில் ஆசை வைத்துள்ள என் போன்றவர்களுக்கு அருள் புரிவதால், நீ, வள்ளல் ஆகின்றாய். உன் கருணைக்குப் புதிய தேன் ஒப்பானது. ஐம்பெரும் பூதங்கள், சூரியன் சந்திரன், உயிர் ஆகிய எட்டு மூர்த்திகளாய் நீ இருக்கின்றாய். இப்படி யெல்லாம், இருக்கிற உனக்கு மேலும் மேலும் வணக்கம் கூறுகிறேன்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


``பொய்யர் தம்மை ஆட்கொள்ளும்`` என்றது. அருட்டிறத்தை அருளியவாறு. `கருணையாகிய புதுமது வெள்ளம்` என்றபடி. மது - தேன். புவனம் - நிலம். இயமானன் - உயிர். இருசுடர், ஞாயிறும் திங்களும். `இவ்வெட்டுமாய் நிற்கும் இறைவனே` என்றபடி. கடவுளான் - எல்லாவற்றையும் கடத்தலை உடையவன். `இறை, தெய்வம்` என்னும் தெய்வஞ்சுட்டிய பெயர்நிலைக் கிளவிகள், `இறைவன், தேவன்` என உயர்திணை மருங்கிற் பால்பிரிந்திசைத்தல் போல, `கடவுள்` என்னும் பெயரும் `கடவுளான்` எனப் பால்பிரிந்து இசைத்தது என்க (தொல். சொல் -4).

பண் :

பாடல் எண் : 64

கடவுளே போற்றி என்னைக்
கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை
ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட் டொல்லை
உம்பர்தந் தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி

பொழிப்புரை :

நான் தகவிலன் என்பதை அறிந்து என்னை ஆட்கொள். என் உள்ளத்தை உருக்கி அதை இளகச் செய். உடலை ஒதுக்கிவிட்டு விரைவில் முத்தியடையும்படி செய். கங்காதரா! உன்னை நான் மீண்டும் வணங்குகிறேன். நான் தகாதவன் எனினும் நீ சங்கரன் ஆதலால் என்னை ஆட்கொண்டருள்க.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

``கண்டுகொண்டு`` என்றதில் கொள், தற்பொருட்டுப் பொருண்மை விகுதி, `உனக்குள் நீதானே கண்டு` என்பது பொருள். `உன்னை வலிசெய்வார் ஒருவரிலர்; நீதானே இரங்குதல் வேண்டும்` என்றபடி. விட - (உலகப்பற்று) நீங்குமாறு. `என்னை உள்ளே உருக்கி ஆண்டிட வேண்டும்` என்க. உருக்கி - உருகப்பண்ணி. உம்பர் - மேலுலகம்; சிவலோகம். `அருள்` என்னும் முதனிலை, ஏவலிடத்து, உகரம் பெற்றது.

பண் :

பாடல் எண் : 65

சங்கரா போற்றி மற்றோர்
சரணிலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய்
வெண்ணகைக் கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி
மால்விடை யூர்தி போற்றி
இங்கிவாழ் வாற்ற கில்லேன்
எம்பிரான் இழித்திட் டேனே. 

பொழிப்புரை :

சங்கரனே! மங்கை பங்கனே! மால்விடை யுடையானே! வேறோர் புகலிடம் இல்லேன். இந்தப் பொய் வாழ்வைச் சகிக்கிலேன் ஆதலால், என்னைக் கைவிடல் உனக்குத் தகுதியன்று.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். சரண் - புகலிடம். பொங்கு அரா - சினம் மிகுகின்ற பாம்பு; இஃது ஆகுபெயராய் அதன் படத்தைக் குறித்தது. மால் விடை - பெரிய இடபம். `ஊர்தி` என்பதில் இகரம், செயப்படுபொருட் பொருளதாய் நின்று, `ஊரப்படுவது` எனவும், வினைமுதற் பொருளதாய் நின்று `ஊர்பவன்` என்னும் பொருளையும் தரும். இங்கு அஃது வினைமுதற் பொருளதாய் நின்றது. `இவ்வாழ்வு` என்னும் வகரம் தொகுத்தலாயிற்று. இழித் திட்டேன் - அருவருத்தேன். `ஆதலின், நீக்கியருள்` என்பது குறிப் பெச்சம்.

பண் :

பாடல் எண் : 66

இழித்தனன் என்னை யானே
எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை
ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம்
பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடிவ் வாழ்வு போற்றி
உம்பர்நாட் டெம்பி ரானே. 

பொழிப்புரை :

எம்பிரானே! என்னை நானே தாழ்த்துவது அன்றி உன்னை நிந்தித்திலேன். சிறியவர் செய்த குற்றங்களைப் பெரியவர் பொறுத்தல் கடமையாதலால் என் குற்றங்களைப் பொறுத்து, இந்தப் பொய் வாழ்க்கையை ஒழித்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


`யான் உன்னைப் பழித்திலேன்; என்னையே இழித் தனன்` என்க. இழித்தனன் - இகழ்ந்துகொண்டேன். பழித்திலேன் - பழிகூறிற்றிலேன். `என்னைப் பிரிவது உனக்குத் திருக்குறிப் பன்றாக வும், (தி.8. திருச்சதகம் பா. 41) யானே பிரிந்து நின்றேன்; சிறியோரது பிழையைப் பொறுத்து அவர்க்கு உதவுதல் பெரியோரது கடனாகலின், நீ எனது பிழையைப் பொறுத்து இவ்வாழ்வை ஒழித்திடல் வேண்டும்` என வேண்டியவாறு. உம்பர் நாடு - மேலுலகம்; `அதன்கண் உள்ள எம் பிரானே` என்க.

பண் :

பாடல் எண் : 67

எம்பிரான் போற்றி வானத்
தவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை
கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி. 

பொழிப்புரை :

தேவர் பிரானே! உமாதேவி பாகனே! திரு வெண்ணீறு உடையவனே! செவ்விய பெருமானே! திருச்சிற்றம் பலத்தை உடையவனே! முத்தி உலகை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! என்னைக் காத்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வானத்து அவரவர் - வானுலகில் உள்ள அவ்வவர்க்கு. ``அவரவர்`` என்றது, ஒவ்வொரு பகுதியிலும் உள்ளாரைக் குறித்து. ``ஏறு`` என்றது, ``தலைவன்` என்னும் பொருட்டாய் நின்றது.
தெய்வப் பகுதியினராவார், உலகை நடத்துதற்கண் ஒவ்வொரு தொழிற்கு உரியராய் நின்று, அவ்வவ்வளவில், `முதல்வர்` எனப்படுவராத லாலும், அம் முதன்மைகள் பலவும் `சிவபெருமானது` முழுமுதன்மை யின் ஒவ்வொரு கூறாய் நிற்பனவாதலாலும், அப்பெருமானை `வானத்து அவரவர் ஏறு` என்று அருளிச்செய்தார்.
கொம்பர் - பூங்கொம்பு. ஆர்- (அதன் தன்மை) பொருந்திய. `கொம்பர்போலப் பொருந்திய` என்று மாம், செம் பிரான் - சிவப்பு நிறக் கடவுள். பிரமனை, `பொன்னன்` என்றும், திருமாலை, `மாயோன்` என்றும் கூறுதல்போல, சிவபிரானை, ``செம்பிரான்`` என்றார். `உம்பர்` என்பதன் அடியாகத் தோன்றிய, `உம்பரான்` என்பது விளியேற்று, `உம்பரா` என நின்றது.

பண் :

பாடல் எண் : 68

ஒருவனே போற்றி ஒப்பில்
அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி
வருகஎன் றென்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்த்தே.

பொழிப்புரை :

பலவாகத் தோன்றும் பொழுதும் நீ ஒருவன்தான் இருக்கிறாய். உயிர்கள் அனைத்துக்கும் நீ சிறந்த தந்தையாய் இருக் கிறாய். தேவர்களுக்கெல்லாம் நீ மூத்தவன். உயிர்கள் உள்ளத்தில் நீ நித்திய திருவுருவத்தில் இருக்கிறாய். உனக்கும் எனக்கும் உள்ள உறவை நீ உறுதிப்படுத்து. என்னை உன் மயம் ஆக்குக. எனது உயிர் போதத்தை அகற்றி விடு. உனது மகிமையை நினைந்து நான் உன்னையே போற்றுகிறேன்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`ஒருவன்` என்பது, கடவுளைக் குறிப்பதொரு சொல். ஒப்பில் அப்பன் - `தந்தை` எனப்படுவாருள் ஒருவரும் ஒப்பில்லாத தந்தை. `குரவன்` என்பது, எதுகைநோக்கி, `குருவன்` என நின்றது. மக்களுக்கு உய்யும் நெறிகாட்டுவார் ஆசிரியராதல்போல, தேவர் கட்கு உய்யும் நெறிகாட்டுவான் சிவபெருமானே யாதல்பற்றி, `வானோர் குரவனே` என்றார்.
கோமளக் கொழுந்து - அழகின்மேல் எல்லை. சிவபிரானது அழகின் சிறு கூறுகளே ஏனைய யாவரிடத்தும், எப்பொருளிடத்தும் காணப்படும் அழகுகளாதல் தெளிவு.
இதனை, அப்பெருமான் பேரழகுடன் தோன்றிய வரலாறுகள் பல தெளிவுறுத்தும். `உடலினின்றும் பிரித்து ஏற்றுக்கொள்ளுதலை` ``வாங்கிட வேண்டும்`` என்றார். `தமியனேன் தனிமை தீர்த்து நின்பாதம் தருக` எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 69

தீர்ந்தஅன் பாய அன்பர்க்
கவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும்என் பொய்ம்மை யாட்கொண்
டருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர்க்
கமுதம்ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற்
கருளிட வேண்டும் போற்றி

பொழிப்புரை :

அன்பரிடத்தில் மிகுந்த அன்பு செய்பவனே! என் பொய்ம்மை ஒழியும் வண்ணம் என்னை ஆண்டருளினவனே! விடத்தை உண்டு தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தவனே! உன் திருவடியை எனக்குத் தந்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

காருணியத்திரங்கல்
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தீர்ந்த அன்பு - முதிரவேண்டுமளவும் முதிர்ந்து முடிந்த அன்பு; `பேரன்பு` என்றவாறு. அன்பாய - அன்பே வடிவமாகிய; `அன்பு பிழம்பாய்த் திரிவார்`(தி.12 கண்ணப்பர் புரா. 154), `அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பு` (தி.12 கண்ணப்பர் புரா. 157) என்றாற்போல வருவன காண்க. ``அன்பர்`` என்றது. `அடியவர்` என்னும் அளவாய் நின்றது. ``அவரினும் அன்பன்`` என்றது, அவரது அன்பளவினன்றிப் பன்மடங்கு பெரிதாய பேரருளை அவர்கட்கு வழங்குபவன் என்றவாறு.
அவ்வருளாவது, ஊனக்கண்ணைப் பெயர்த்தளித்த அன்பர்க்குப் பரிசாக, ``என் அன்புடைத் தோன்றல்`` (நக்கீரர் திருமறம்) என விளித்தும், தனது திருக்கையாலே அவரது திருக் கையைப் பிடித்தும், தன்னைப் பயன் கருதியன்றி அன்பே காரணமாக வணங்குவார் பலரும் அவரைத் தன்னினும் மேலாக வைத்து வணங்கு மாறு, தன் வலப்பக்கத்தே அவரை என்றும் நீங்காது நிற்கச்செய்தும் உயர்த்தினமை போல்வதாம்.
இது பற்றியன்றே, ``பேறினியிதன் மேலுண்டோ`` (தி.12 கண்ணப்பர் புரா. 185) என இச்சிறப்பினைப் போற்றிக் கூறியது! ``அற்றவர்க்கு அற்ற சிவன்`` என்று அருளிச் செய்தார் ஆளுடைய பிள்ளையாரும் (தி.3.ப.120.பா.2) என்க. `பேர்த்தும்` என்பது மெலிந்து நின்றது; `மீளவும்` என்பது பொருள். தம்மை ஆட் கொள்வதைத் தம்பொய்ம்மையை ஆட்கொள்வதாக அருளினார். முன்னர் இருந்த பொய்ம்மை, மெய்ந்நெறியிற்` செல்லாது உலகியலில் இருந்தது. பின்னர் உள்ள பொய்ம்மை, இறைவனுடன் செல்லாது இவ்வுலகில் நின்றது. `பெரியோனாகலின், மீளவும் பொறுத்து அருள்புரிவான் என்று துணியலாகும்` என்னும் கருத்தினால், ``ஆட்கொண்டருளிடும் பெருமை போற்றி`` என்றார். எனவே, இஃது எதிர்காலம் நோக்கிக் கூறியதாயிற்று.
இங்ஙனம் துணிதல் கூடுமாயினும், அவனது திருக்குறிப்பை வரையறுத்தல் கூடாமையின், ``நின்பாதம் நாயேற்கு அருளிட வேண்டும்`` என்று வேண்டினார்.
அங்ஙனம் வேண்டுகின்றவர் சிறியேனது குற்றத்தை எண்ணாத அவனது திருவருளின் பெருமையைக் குறித்தற்பொருட்டு, ``நஞ்சயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல்`` என்று அருளினார். வள்ளல், விளி. வார்ந்த - ஒழுகிய. ஆர்ந்த - (இன்பம்) நிறைந்த.
சிற்பி