பண் :

பாடல் எண் : 80

இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை ஆண்டு
கொண்ட நின்னதாட்
கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க
லந்து போகவும்
நெருப்பு முண்டு யானு முண்டி ருந்த
துண்ட தாயினும்
விருப்பு முண்டு நின்கண் என்கண் என்ப
தென்ன விச்சையே.
 

பொழிப்புரை :

இரும்பு போலும் வன் மனத்தையுடைய நான், என்னை ஆண்டருளின உன் திருவடியைப் பிரிந்தும், தீப்பாய்ந்து மடிந்திலேன். இத்தன்மையேனாகிய என்னிடத்தில், உனக்குச் செய்ய வேண்டிய அன்பிருக்கின்றது என்பது என்ன மாய வித்தை?

குறிப்புரை :

ஆனந்தத்தழுந்தல்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

`நின` என்பது, விரித்தல்பெற்றது. ``தாள்`` என்றது, அதன்கண் எழும் இன்பத்தைக் குறித்தது. கருப்பு மட்டு - கருப்பஞ் சாறு. எனைக் கலந்து - என்னை அடைந்து; `எனக்குக் கிடைத்து` என்றபடி. `எனைக் கலந்து வாய்மடுத்து` என மாற்றி, `கலந்தமையால் யான் வாய்மடுத்த பின், நீங்கிப் போகவும்` என உரைக்க. `போகவும் இருந்தது` என இயையும். ``நெருப்பும் உண்டு` என்றதன்பின்னும், ``யானும் உண்டு`` என்றதன் பின்னும், `ஆக` என்பது வருவிக்க. `உண்டு` என்பது மூவிடத்திற்கும் பொதுவாய் வருதல், பிற்கால வழக்கு. இருந்தது - நெருப்பில் வீழாது உயிர்வாழ்ந்திருந்தது. அதாயினும் - அந்நிலை உண்டாய பின்னும். `அஃதாயினும்` எனப்பாடம் ஓதுதல் பொருந்தும். `என்கண் நின்கண் விருப்பும் உண்டு` என மாறுக. விருப்பு - அன்பு. `உயிர்வாழ்தலோடு இதுவும் உண்டு` எனப் பொருள் தருதலின், ``விருப்பும்`` என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சம். என்ன விச்சை - என்ன மாய வித்தை. ஒருவரது அன்பிற்குரிய பொருள் நீங்கியபின் அவர் உயிர்வாழ்தலும், ஒருபொருள் நீங்கியபின்னும் உயிர்வாழ்வார் அப்பொருள்மேல் அன்புடையர் எனப்படுதலும் இயல்வன அல்ல ஆகலின், ``நின்ன தாள் கருப்புமட்டுப் போகவும் யான் இருந்ததுண்டு; அதாயினும் என்கண் நின்கண் விருப்பும் உண்டு என்பது என்ன விச்சை`` என்றார். ``நெருப்பும் உண்டு; யானும் உண்டு`` என்றது, `யான் நெருப்பில் வீழாமைக்கு நின்பால் அன்பின்மையே காரணம்; பிறிதொரு காரணம் இல்லை` என்பதனை வலியுறுத்தவாறு. `என் அவிச்சை` எனப் பிரித்து, `உன்பால் எனக்கு அன்பு உண்டு என்பது என் அறியாமையே` என்று உரைப்பாரும் உளர்.

திருச்சதகம்


பண் :

பாடல் எண் : 81

விச்சுக் கேடுபொய்க் காகா தென்றிங்
கெனைவைத்தாய்
இச்சைக் கானா ரெல்லாரும் வந்துன்
தாள்சேர்ந்தார்
அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன்
ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்னான் செய்கேன்
பேசாயே. 

பொழிப்புரை :

இறைவனே! பொய்க்கு வேறொரு இடம் இல்லை என்று என்னை இங்கு வைத்தாய். உன் மெய்யன்பர் யாவரும் உன் திருவடியை அடைந்தார்கள். நான் பிறவி அச்சமாகிய கடலில் மூழ்குதலன்றி வேறு என்ன செய்யக் கடவேன்?

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

இப்பகுதியில் அடிகள், ஏனைய அடியார்கள் பெற்ற பெரும்பேற்றை நினைந்து தமக்கு அதுவாயாமைக்கு வருந்தி, அதனைத் தந்தருளுமாறு பல்லாற்றானும் வேண்டுகின்றார். இவ் வருத்தத்தினையே, `ஆனந்த பரவசம்` என்றனர் போலும் முன்னோர்!
விச்சு, `வித்து` என்பதன் போலி. கேடு - அழிவு. `பொய்ம்மைக்கு விதைக்கேடு உண்டாதல் கூடாது என்னும் கருத்தினால் என்னை இவ்வுலகத்தில் வைத்தாய்` என்க. எனவே, `பொய்ம்மைக்கு விதை தாமல்லது பிறரில்லை` என்றவாறாயிற்று. ``என்னை வகுத்திலை யேல்இடும் பைக்கிடம் யாது சொல்லே`` என்ற திருநாவுக்கரசர் திருமொழியையும் (தி.4.ப.105.பா.2) காண்க. பொய்ம்மையாவது, பிறவி. பிறக்கும் உயிர்கள் பல உளவேனும், அப் பிறவி நீங்கும் வாயிலைப் பெற்றபின்னும் அதன்வழியே பிறவியை ஒழிக்கக் கருதாது மீளப் பிறவிக்கு வாயிலைப் பற்றி நிற்பதோர் உயிரில்லை என்னும் கருத்தால், இவ்வாறு கூறினார். கூறவே, `அவ்வாயிலைப் பெற்ற ஏனைய அடியவர் பலரும் பிறவா நெறியை அடைந்தனர்; யான் அதனை அடைந்திலேன்` என்பது போதரலின், அதனையே இரண்டாம் அடியில் கிளந்தோதினர் என்க. இச்சைக்கு ஆனார் - உன் விருப்பத்திற்கு உடன்பட்டவர்கள்; என்றதனால், அடிகள் அதற்கு உடம்பட்டிலாமை பெறப்பட்டது. அச்சம், பிறவிபற்றியது. `இஃது இப்பொழுது உள்ள எனது நிலை` என்றபடி. `யான் செய்யத் தக்கதைச் சொல்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 82

பேசப் பட்டேன் நின்னடி யாரில்
திருநீறே
பூசப் பட்டேன் பூதல ரால்உன்
அடியானென்று
ஏசப் பட்டேன் இனிப்படு கின்ற
தமையாதால்
ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன்
அடியேனே. 

பொழிப்புரை :

உன் அடியாருள் ஒருவனாகச் சொல்லப்பட்டேன். திருவெண்ணீற்றால் பூசப்பட்டேன். இறைவனே! உன் அடியவன் என்று உலகத்தோரால் இகழப்பட்டேன். இவ்வளவும் போதாது என்று மேலும் உனக்கு ஆசைப்பட்டேன். அடிமைப்பட்டேன்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

பொருள்கோள்: `திருநீறே (உன்னால்) பூசப்பட்டேன்; அதனால், பூதலரால் (முன்) உன் அடியாரில் (வைத்துப்) பேசப் பட்டேன்; (இப்பொழுது அவர்களால்) உன் அடியான் (படுகின்ற துன்பம் இது) என்று ஏசப்பட்டேன்; இனி (இத் துன்பத்தைப்) படுகின்றது (உன் அடியான் என்ற நிலைமைக்குப்) பொருந்தாது; (ஆதலின்) உனக்கு ஆட்பட்டேனாகிய உன் அடியேன், அவ்வடி யார்க்கு உரிய அந்நிலையைப் பெற ஆசைப்பட்டேன்.`
``திருநீறே பூசப்பட்டேன்`` என்றதில் உள்ள ஏகாரம், ஏனைய அடியார்கள்போல உடன்வரும் நிலைமையை அருளாமையைப் பிரித்து நின்றது. `அடியான்` என்னும் சொல், பிறிதொரு சொற் குறிப்பானன்றித் தானே இழிவுணர்த்தாமையின், இது தன்னையே இகழுரையாக உரைத்தல் பொருந்தாமையறிக. `ஏசப்பட்டேன்` என்றமையால், ``இனிப்படுகின்றது`` என்றது, துன்பத்தை என்பதும், ``உன் அடியேன்`` என்றதனால் ஆசைப்பட்டது அதற்கேற்ற நிலையை என்பதும் பெறப்பட்டன. `அதனைத் தந்தருள்` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 83

அடியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை
கொல்லோ
அடியா ரானா ரெல்லாரும் வந்துன்
தாள்சேர்ந்தார்
செடிசேர் உடலம்இது நீக்க மாட்டேன் எங்கள்
சிவலோகா
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு
காணேனே. 

பொழிப்புரை :

நான் உன் அடியனல்லேனோ? நீ என்னை ஆட்கொண்டது இல்லையோ? உன் அடியார் எல்லோரும் உன் திருவடியை அடையவும் நான் இந்த உடம்பை ஒழியாதிருக்கிறேன். கொடியேன் உன்னைக் காணும் வழி கண்டிலேன்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

முதலடியை ஈற்றில் வைத்து உரைக்க. ``கடியேன்`` என்றதனை, ``சேர்ந்தார்`` என்றதன்பின்னர்க் கூட்டுக. செடி - துன்பம். காணுமாறு - காணும் வாயிலை. ``காணேன்`` என்றதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. ஆட்கொள்ளப்பட்டு அடியராயினார் பெற்ற பயன் தமக்கு எய்தாமையின், `இறைவன் தம்மை ஆட் கொண்டதாக நினைப்பது மயக்கமோ` என்று ஐயுறுவார்போல அருளி னார். பாவினங்களின் அடிகட்கும் பிற்காலத்தார் சீர்வரையறுத்தாரா யினும், அவற்றுள் சில அடிகள் சீர்மிக்கு வருதலும் முன்னைய வழக் கென்பது சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலியவற்றாலும் அறியப்படும்.
அவ்வாற்றானே இத்திருப்பாட்டுள் இரண்டாமடி யொழிந்தவை அறுசீரடியாயின. மேல் வருவனவற்றுள்ளும் சில பாடலிற் சிலவும், பலவும் இவ்வாறு வருதல் காண்க. பத்துத் திருப் பாடலையும் ஓரினச் செய்யுளாகவே செய்யப் புகுந்தமையின், நான்கடியும் அறுசீராயினவும் ஈண்டு, `கலித்துறை` என்றே கொள்ளப் படும்.

பண் :

பாடல் எண் : 84

காணு மாறு காணேன் உன்னை
அந்நாட்கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப் படுத்ததென்ன
பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆரமுதே அத்தாசெத்தே
போயினேன்
ஏணா ணில்லா நாயினேன் என்கொண்டெழுகேன்
எம்மானே. 

பொழிப்புரை :

பரஞ்சோதியே! ஆணே! பெண்ணே! ஆர் அமுதே! அத்தா! எம்மானே! உன்னை அடையும் மார்க்கத்தை நான் கண்டிலேன். அன்று உன்னைக் கண்டபின் நான் வீண்பேச்சுப் பேசி ஒரு நலனையும் அடைந்திலேன். செத்துப்போன நிலையில் இப்போது இருக்கிறேன். என் கீழ்மையைக் குறித்து நான் வெட்கப்பட வில்லை. மேல்நிலை அடைவதற்கான ஆற்றல் என்னிடத்து இல்லை. நான் எப்படி உய்வேன்?

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

`கண்டேனேனும்` என்பது `கண்டேனும்` எனத் தொகுத்தலாயிற்று. பாண் - பாணர் மொழி; இன்சொல். `உன்னை யான் அந் நாட்கண்டேனேனும் இன்று காணுமாற்றைக் காணேன்; அதனால், என்னை அன்று இன்சொற் பேசி உன்பாற் படுத்தது என் கருதி` என உரைக்க. `உனது காட்சியை முன்போல வழங்கி, ஏனையோர் போல என்னையும் அழைத்துச் செல்லவேண்டும்` என்பது கருத்து. இறைவன், `ஆண், பெண்` என்னும் இருவகைப் பிறப்பினையுடைய எல்லா உயிர்களிலும் கலந்துள்ளமை பற்றி, `ஆணே பெண்ணே` எனவும், `அருளாதொழியின் நான் அழிந் தொழிதல் திண்ணம்` என்றற்கு, ``செத்தேபோயினேன்`` எனவும் அருளினார். ஏண் - வலிமை. ``நாண்`` என்றதன்பின், `இரண்டும்` என்பது தொகுத்தலாயிற்று. என் கொண்டு - எதனைத் துணையாகக் கொண்டு. எழுகேன் - கரையேறுவேன்.

பண் :

பாடல் எண் : 85

மானேர் நோக்கி யுடையாள் பங்காமறையீ
றறியாமறையோனே
தேனே அமுதே சிந்தைக்கரியாய் சிறியேன்
பிழைபொறுக்குங்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன்
சிவமாநகர்குறுகப்
போனா ரடியார் யானும் பொய்யும்புறமே
போந்தோமே. 

பொழிப்புரை :

மான் விழி போன்ற விழிகளையுடைய உமாதேவி யாரின் பாகா! வேத வேதாந்தத்துக்கு எட்டாத மறைபொருளே! தேனே! அமிர்தமே! மனத்துக்கு எட்டாதவனே! என் குற்றத்தை மன்னித்து அருளும் அரசே! என் குறைபாட்டை நான் பரிந்து உன் னிடம் முறையிட்டேன். அதாவது உன் அடியார்கள் உனக்கு உரியவர் கள் ஆயினர். நானோ பொய்யாகிய பிரபஞ்சத்துக்கு உரியனாய், நானும் பிரபஞ்சமும் உனக்கு வேறாக இருந்து வருகிறோம்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

``கொடுமை`` என்றதில், பொருட்டுப் பொருளதாகிய குவ்வுருபு விரிக்க. பறைந்தேன் - விரைந்தேன். `கொடுமை செய்வதற்குச் சிறிதே விரைந்தேன்` என்றபடி. இறைவன் தம் முன் இருந்து மறைந்த அந்நாளில் உடன் செல்ல மாட்டாதிருந்தமையையே அடிகள், சிறிது கொடுமை செய்ய விரைந்ததாக அருளினார். அஃது இறைவன் திருக்குறிப்பிற்கு மாறாதல்பற்றி, ``கொடுமை`` என்றார். எனினும், `பிழை` என்பதே பொருளாகக் கொள்ளற்பாற்று. `நீ அடியவர் செய்யும் பிழையைப் பொறுக்கும் தலைவனாதலின் பொறுத்தருளவேண்டும்` என்பார், ``சிறியேன் பிழைபொறுக்குங் கோனே`` என விளித்தார்.
`யான் அடியவரோடு சிவமாநகர் குறுகப் போகாமல், பொய்ம்மையோடு வேறோரிடம் குறுகப் போனேன்` என்பார், ``யானும் பொய்யும் புறமே போந்தோம்`` என்றார். இங்ஙனம் பொய்ம்மையைத் தம்மோடு ஒப்பவைத்து எண்ணியது, `அது வல்லது எனக்கு நட்புப் பிறிதில்லை` எனக் கூறுமுகத்தால், அப் பொய்ம்மையால் தமக்குக் கேடு விளைந்தமையைக் குறித்தற்கு. பொய்ம்மை, இறைவன் வழியையன்றித் தம்வழியைப் பொருளாகத் துணிந்தமை. சிவமாநகர்க்குப் புறமாவது இவ்வுலகு. `நின்னிற் சிறந்த பொருள் பிறிதில்லையாகவும் உளதாக எனது பேதைமையால் நினைந்தேன்` என்றற்பொருட்டே முதற்கண் இறைவனை, `தேனே! அமுதே!` என்றற்றொடக்கத்தனவாகப் பலவற்றான் விளித்தருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 86

புறமே போந்தோம் பொய்யும் யானும்
மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம்
பெற்றேன்யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார்
மற்றொன்றறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே
நின்தாள்சேர்ந்தாரே. 

பொழிப்புரை :

ஆன்மாவாகிய நானும் உலகம் ஆகிய மாயையும் உனக்குப் புறம்பானோம். உன்பால் பத்தி பண்ணுவதற்கான உறுதி யான தெய்வீகத் தன்மை என்னிடம் இல்லை. உன்னைத் தவிர வேறு எதையும் அறியாத பரிபக்குவ உயிர்கள் தங்கள் ஆன்ம போதத்தை அகற்றி உன்பால் இரண்டறக் கலந்தன. அதற்காக அவர்கள் பத்தி மார்க்கத்தைத் தீவிரமாகக் கையாண்டனர்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

வல்லேன் - மாட்டேன்; இது, `வல்லுதல்` என்னும் தொழிலடியாகப் பிறந்த எதிர்மறைவினை; `வன்மை` என்னும் பண்படியாகப் பிறந்ததாயின், `வன்மையுடையேன்` எனப் பொருள் படும். இதன்பின், `ஆதலின்` என்பது வருவித்து, `மாட்டாமையான் அல்லாத தன்மையை (பொய்யன்பை)ப் பெற்றேன்` என உரைக்க.
`இஃது என் தன்மை, நின்னை முற்றச் சார்ந்த அடியவரே உன்னை யன்றிப் பிறிதொன்றைப் பொருளாக அறியாதவர்; அதனால், வீடு பேற்றிற்குரியவற்றையே செய்து உனது திருவடியை அடைந்தார்` என்பது பின்னிரண்டடிகளின் பொருள். அறவே - முற்றிலும். சிறவு - சிறப்பு; வீடுபேறு; இஃது இதற்கு ஏதுவாய செயல்களைக் குறித்தது.
நிரம்பிய அடிமையை உடையவரது செயல்கள் இவை எனவே, இவற்றின் மறுதலையாயவை தமது செயல்கள் என்பதும், அதனால் தாம் இறைவன்தாள் சேராராயினார் என்பதும் கூறியவாறாயிற்று. ஆகவே, `யான் இங்குக் கிடந்து அலமருதல் என் குற்றமன்றி உன் குற்றம் அன்று` என்பதும் குறித்தவாறாம். ``என்னா லறியாப் பதந்தந்தாய் யான் அதறியாதே கெட்டேன் - உன்னால் ஒன்றுங் குறைவில்லை`` (தி.8 ஆனந்த மாலை 2.) எனப் பின்னர் வெளிப்படையாகவே அருளிச்செய்வர்.

பண் :

பாடல் எண் : 87

தாராய் உடையாய் அடியேற் குன்தா
ளிணையன்பு
பேரா உலகம் புக்கா ரடியார்
புறமேபோந்தேன்யான்
ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங்
குன்தாளிணையன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல்கொண்
டழுகேனே. 

பொழிப்புரை :

இறைவனே! அடியேன் உன் திருவடிக்கு அன்பு செய்யும்படிச் செய்தருள வேண்டும். அடியார் முத்தியுலகம் புக, யான் புறம் போந்தேன். ஊர்ப் பசுக்கள் மேய்தற்கு வரக் கூடவே குருட்டுப் பசுவும் வந்ததுபோல, அன்பர் உன் திருவடிகளுக்கு அன்பு செய்ய நானும் அன்பு செய்ய விரும்பி அழுகின்றேன்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. மிலைத்தல் - கனைத்தல். `ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்து` என்றது. ஊரிலுள்ள ஏனைய பசுக்கள் மாலைக்காலத்தில் தம் இல்லத்தை அணுகியபொழுது தம் கன்றுகளைக் கனைத்து அழைக்க, குருட்டுப் பசுவும் தன் இல்லத்தை அணிமையிற் கண்டது போலத் தன் கன் றினைக் கனைத்து அழைத்தலையாம். `மிலைத்து` என்றது, `மிலைத் தது` போன்ற செயலைச் செய்து` என உவமை குறித்து நின்றது. `கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன்`, `பனிநீராற் பரவை செயப் பாவித் தேன்` (தி.4.ப.5.பா.1,4) என்றாற்போல. இதனால், `மெய்யடியார்கள் நீ பேரின்பப் பொருளாதலை உணர்ந்து உன்னை, `தேனே அமுதே கரும்பின் தெளிவே, என்று இன்புற்றுப் புகழ, அதனைக் கண்டு யானும் அவ்வாறே புகழ்கின்றேன்` எனக் குறித்தவாறாம். `மிலைத்து ஆரா` என இயையும். மிலைத்து - மிலைத்தலால். ஆரா - பொருந்தாத; ஏற்புடையேனாகாத. வருகின்ற திருப்பாட்டு, `அழுகேன்` எனத் தொடங்குதலால், இப்பாட்டின் இறுதிச் சொல்லை, `எழுகேன்` என ஓதுதல் பாடமாகாமையறிக. ``மிலைத் திங்கு`` என்ற பாடத்தை, மிலைத்தாங்கு` என ஓதி, அதனை, அன்பு வேண்டி அழு தற்கு வந்த உவமையாக்கி உரைப்பாரும் உளர். ``மயல் கொண்டு`` என்றதற்கு, ``ஆசைப்பட்டு`` எனப் பொருள் உரைப்பாரும் உளர். மோனை கருதி, `போரா உலகம்` எனப் பாடம் ஓதி, `போதா` என்பது, ``போரா`` என மருவிற்று எனக் கொள்ளுதலும் உண்டு.

பண் :

பாடல் எண் : 88

அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய்
அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார் பொன்னார்
கழல்கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந்
தொடராதே
பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப்
பணிகேனே.

பொழிப்புரை :

உன்னிடத்து மெய்யன்பு உடையவராய் ஒளி பொருந்திய பொன் போன்ற உன் திருவடிகளைக் கண்டு தீயில் இட்ட மெழுகை ஒத்தவராய் உன் அன்பர்கள் தொழுது உன்னைப் பின் பற்றினர். அவர்களைப் பின்பற்றாமல் நான் புன்மைக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன். எம்முறையைக் கையாண்டு நான் உன்னை வழுத்துவது என்று எனக்கு விளங்கவில்லை.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

`அழல்சேர்ந்த மெழுகே அன்னாராகிய தொடர்ந்தார்` என்க. `மெழுகே அன்னார் தொடர்ந்தார்; அவரோடும்` என ஓதற் பாலதனை இங்ஙனம் சுருங்க ஓதினார். பழுது - குற்றம். `பிறந்தேன்` என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. என்கொண்டு - என்ன முறைமையைக் கொண்டு. ``பணிகேன்`` என்றது, `பணிந்து இரக்கேன்` என்னும் பொருளதாய் நின்றது. இரத்தல், பேரா உலகத்தையாம். அன்பாம் மனத்தோடு அழுதல் உண்மையே; ஆயினும், உன்னைத் தொடர்ந்தாரோடு கூடி உன்னைத் தொடராது நின்ற யான் இப்பொழுது என்ன முறைமைபற்றி என்னை உன்பால் அழைத்துக் கொள்ளும்படி உன்னை வேண்டுவேன்` என்றவாறு. ``பிறந்தேன்,`` வினையாலணையும் பெயர்.

பண் :

பாடல் எண் : 89

பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய
அடியார்க்குன்
அணியார் பாதங் கொடுத்தி அதுவும்
அரிதென்றால்
திணியார் மூங்கி லனையேன் வினையைப்
பொடியாக்கித்
தணியார் பாதம் வந்தொல்லை தாராய்
பொய்தீர்மெய்யானே. 

பொழிப்புரை :

இறைவனே! அடியவர்க்குப் பிறவிப் பிணியை நீக்கியருளி உன் திருவடியைத் தந்தருள்வது அருமையானால், மனக் கோட்டத்தை உடையவனாகிய என் வினைகளை நீறாக்கி உன் திருவடியை எனக்குத் தந்தருள்வது அருமையே. ஆயினும் எனக்கு உன்னை அன்றி வேறு புகலிடம் இல்லாமையால் என்னைத் திருத்தி ஆட்கொண்டு உன் திருவடியைத் தந்தருளல் வேண்டும்.

குறிப்புரை :

ஆனந்த பரவசம்
கலிநிலைத்துறை

``பணிவார்`` என்றது முற்று. ``பழைய அடியார்`` எனப் பின்னர் வருகின்றமையின் வாளா, ``பணிவார்`` என்றார். எனவே, `பழைய அடியார் உன்னையே பணிவார்; அவர்க்குப் பிணி தீர்த்தருளி உன்பாதங் கொடுத்தி` என உரைத்தல் உரையாயிற்று. புனல் காலே உண்டியாக, கானின்று வற்றியும் புற்றெழுந்து செய்யும் தவங்களினும் இறைவனை வணங்குதல் எளிதிற் செயற்பாலதாகலின், ``அதுவும் அரிதென்றால்`` என்றார். ``யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை`` (தி.10 திருமந்திரம்-252) என்று அருளியதும் காண்க.
``வினையைப் பொடியாக்கி`` என்றதனால், `அதனையும் எனக்கு அரிதாகச் செய்தது என்வினை என்றால், அவ்வினையை முதற்கண் நீக்கி உன்னைப் பணியச்செய்து, பின்பு வந்து உன் பாதம் தாராய்` என்பது பொருளாயிற்று. ``ஒல்லை`` என்றதனை, ``பொடியாக்கி`` என்றதற்கு முன்னே கூட்டுக. பொய்தீர் மெய்யானே - பொய்யை நீக்கியருளுகின்ற மெய்ப்பொருளாய் உள்ளவனே.
சிற்பி