திருவாசகம்-திருவம்மானை


பண் :

பாடல் எண் : 1

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.

பொழிப்புரை :

திருமாலும் காண்பதற்கரிதாகிய திருவடி இந்தப் பூமியில் படும்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளி, எம்மையும் எம்மினத்தையும் ஆட்கொண்டு எமக்கு முத்தி நெறியையும் அருள் செய்தமையால் அந்த இறைவனது கருணையையும், திருவடியின் பெருமையையும் யாம் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

இப்பகுதியில், அடிகள் தமக்கு இறைவன் செய்த திருவருளின் பெருமையையே பாடிப் பரவசம் எய்துகின்றாராகலின், இதற்கு, `ஆனந்தக் களிப்பு` எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். ஆனந்தக் களிப்பு - இன்பத்தால் எழுந்த பெருமகிழ்ச்சி. இன்பம், இங்குப் பேரின்பம்.
பொருள்கோள்: `பெருந்துறையான், அங்கணன் அந்தணனாய், பாதம் பூதலத்தே போந்தருளி, அறைகூவி ஆட்கொண்டு, பிறப்பறுத் திட்டு வீடருளும் கருணை வார்கழலே அம்மானாய்ப் பாடுதும்`. ``போந்தருளி`` என்றதை, `போந்தருள` எனத் திரிக்க.
``சென்று இடந்தும்`` என்றதனை `இடந்து சென்றும்` என மாறுக. இடத்தல் - நிலத்தைக் கிண்டுதல். `பொங்கு பாதம்` என இயையும். பொங்கு - ஒளிமிகுகின்ற. தரம் - நிலை. ``ஆட்கொண்டு`` என்றது, இங்கு, `ஏற்றுக்கொண்டு` என்னும் பொருளதாய்நின்றது. தெங்கு - தென்னைமரம். `தென்னன்` என்பது, இங்கு, `தென் நன்` எனப் பிரித்து, `அழகிய நல்ல` எனப் பொருளுரைத்தலன்றிப் பிறவாறு உரைத்தற்கு ஏலாமை அறிக. அறை கூவி - வலிய அழைத்து. தாம் வேண்டாதமுன்பே வந்து அருள்செய்தான்` என்றபடி. காண், முன்னிலையசை. `அம்மானையாய்` என்பது, ``அம்மானாய்`` எனத் தொகுத்தலாயிற்று.
அம்மானை - அம்மானைப் பாட்டு. ``ஆய்`` என்றதனை, `ஆக` எனத் திரித்துக்கொள்க. ``அம்மானையாகப் பாடுதும்`` என இயையும். ``அம்மானாய்`` என்றது, `அம்மானை` என்றது விளியேற்று வந்தது எனக் கொண்டு, `விளித்தது முன்னின்றார்களை` எனவும், அம்மானைக் காயை எனவும் பலவாறு உரைப்பர்.

பண் :

பாடல் எண் : 2

பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

மண்ணுலகத்தார் விண்ணுலகத்தவர் முதலிய எல்லாராலும் காண்பதற்கரியனானவனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னைப் பித்தனாக்கினவனும், முத்தி வழியை அறிவித்தவனும், வலை வீசுதல் முதலிய திருவிளையாடல்களைச் செய்தவனும் கருணைக் கடலும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

`பார், விசும்பு, பாதாளம்` என்றது இவ்வண்டத்தைக் குறித்தும். `புறம்` என்றது, பிற அண்டங்களைக் குறித்துமாம். பேராளன் - புகழுடையவன். `பெருமையுடையவன்` என்பாரும் உளர். பித்து, `பிச்சு` என வந்தது. `ஏற்றி` என்றது, `ஏற்றியவன்` எனப் பெயர்; வினையெச்சமாகக்கொண்டு உரைத்தலும் ஆம்.
வாரா வழி - வீட்டு நெறி. ``மீன்`` என்றதில் நான்கனுருபு தொகுத்தல். விசுறுதற்கு, `வலை` என்னும் செயப்படுபொருள் எஞ்சிநின்றது. `ஆசை` என்பது, இங்கு, கருணையின்மேல் நின்றது. வாரியன் - கடலாய் உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 3

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

இந்திரன் முதலான தேவர்களும் முனிவர் முதலானோரும் விண்ணிலே நிற்க, எங்களை ஆட்கொள்ளும் பொருட்டுப் பூவுலகில் எழுந்தருளி, எங்கள் மனத்தை உருகச் செய்த திருப்பெருந்துறையான், எமக்கு அருள் செய்த முடிவற்ற இன்பத்தைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

`அந்தரத்தே` எனற்பாலதாகிய சாரியை சிறுபான்மை வாராதொழிதலும், ``புலம் புக்கனனே`` (புறம் - 258) என்றதனோடு ஒப்பக் கொள்ளப்படும். அந்தரம் - வானுலகம்; `நிலையின்றி வருந்த` என்பது நயம். `தோட்கொண்ட நீறு உள்ளத்தைக் கவர்தலுடையது` என்பது, மேலே உரைக்கப்பட்டது. (தி.8 திருச்சதகம் - 33.) `நீற்றனாய் வந்து சிந்தனையை உருக்கும்` என்க. பந்தம் பறிய - பாசம் நீங்குதலால். `பறியத் தந்த` என இயையும். ``பரிமேற்கொண்டான் தந்த ஆனந்தம்`, என்றது, அடிகள் பொருட்டே. இறைவன் குதிரைகொணர்ந் தனன் என்பதை இனிது விளக்கும். இதுபற்றியே, ``பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயன்`` (திருக்களிற்றுப் படியார் - 73) என்றது.

பண் :

பாடல் எண் : 4

வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

சாதாரண தேவர்களும், திருமால் பிரமன் இந்திரன் முதலான பெரிய தேவர்களும், காட்டில் சென்று கடுந் தவம் செய்தும் காண்பதற்கு அரியனாகிய சிவபெருமான் தானே வலிய வந்து, அடியேனைத் தாய்போலக் கருணை செய்து, என் உடல் உயிர்கள் உருகச் செய்தமையால், அவன் திருவடியைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

வான் வந்த தேவர் - விண்ணுலகில் தோன்றிய தேவர். கான் - காடும். `தேவர்களும் நிலவுலகத்திற்போந்து தவம் புரிகின்றனர்` என்றபடி. இந்திரன் சீகாழிப்பதியில் தங்கித் தவம் புரிந்தமையைக் கந்த புராணம் விரித்துரைத்தல் காண்க. ``தான்`` என்றது ``பரிமேற்கொண்டான்`` என மேற் கூறப்பட்ட அவன்`` என்ற படி. `ஊன் உரோமங்கள் வந்து` என மாறுக. வருதல், இங்கு, மேலெழு தல்; சிலிர்த்தல். இதனை, `வர` எனத் திரிக்க. உயிர்ப்பு - உயிர்த்தல்; மூச்செறிதல்; அன்பினால் இதுவும் உளதாகும். எய்து - எய்துதற்குக் காரணமான; இது, ``கழல்`` என்றதனோடு இயையும். `அமுதின் தெளிவின் தேன்வந்து ஒளிவந்த கழல்` என்க. தேன் வந்து - இனிமை மிகுந்து. வான் வந்த கழல் - பெருமை பொருந்திய திருவடி. வார் கழல், அடையடுத்த ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 5

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

கற்றறிவு இல்லாமையால் கடையாகிய என்னையும் ஒரு பொருளாய் மதித்து ஆட்கொண்டு, கல்லை நிகர்த்த என் மனத்தைக் குழைத்துத் தன் கருணைக் கடலில் அழுந்தும் படிசெய்து என் வினையை ஒழித்தருளிய நம் சிற்றம்பலவனைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

கல்லாம் மனம் - கல்போன்ற மனம். பிச்சேற்றி - பேரன்பு கொள்ளச் செய்து. ``ஏற்றி`` என்றது, `ஏற்றியதனால்` என்ற வாறு. ``கல்லைப் பிசைந்து கனியாக்கி`` என்றது. `அன்னதொரு செயலைச் செய்து` என்றபடி; ``கல்நார் உரித்த கனியே`` (தி.8 போற்றி -97.) என முன்னரும் அருளினார். இங்ஙனம் செய்தமைபற்றி, ``வல்லாளன்`` என்றார். ``கருணை`` என்றது, கருணையால் விளை கின்ற இன்பத்தை. ``பிச்சேற்றி`` கருணை வெள்ளத்தழுத்தி`` என்றதனால், `அன்பே இன்பத்திற்குக் காரணம்` என்பது போந்தது. என்றும் இருத்தலை, `புக்கு மன்னும்` என்றது, பான்மை வழக்கு. ஒல்லை விடை - விரையச் செல்லும் இடபம்.
இவ்வைந்து திருப்பாட்டுக்களும், பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியை ஆற்றுவித்தற்பொருட்டுத் தோழி தலைவனை இயற் பழித்தவழி, தலைவி இயற்பட மொழிந்தவாறாக அருளிச்செய்யப் பட்டன. பாடாண் பாட்டில் கைக்கிளை வகையேயன்றி ஐந்திணை வகை வருதலும் உண்டென்க. கடவுள் நெறியாகிய மெய்ந்நெறிப் பொருள் காமப் பொருளாய் வருமிடத்து, இறைவன் தலைவனும், உயிர் தலைவியும், நெஞ்சு தோழியும், பிற தத்துவங்களின் கூட்டம் ஆயத்தார் முதலிய பிறரது கூட்டமுமாய் அமையும். பிறவும் இங்ஙனம் ஏற்ற பெற்றியால் அறிந்து கொள்ளப்படும். இவ்விடத்து, இயற் பழித்தல் உலகியலின் வழிநின்று கூறுதலும், இயற்படமொழிதல் அனுபவம் பற்றிக் கூறுதலுமாம்.

பண் :

பாடல் எண் : 6

கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டி
தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

தோழி! திருப்பெருந்துறையான் காட்டாதன எல்லாம் காட்டி, சிவகதியைக் காட்டி, தன் திருவடியைக் காட்டி, தன் கருணையாகிய தேனைக் காட்டி, உலகத்தார் நகைக்கவும், யாம் மேன்மையாகிய முத்தியை அடையவும் எம்மை அடிமை கொண்ட வரலாற்றைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

தோழி, ஒருவன் என்னைக் கிறி செய்தவாறு கேட்டாயோ? கேட்டிலையேல் கேள்` எனத் தோற்றுவாய் செய்துரைக்க. பிரிவிடை ஆற்றாளாய்க் கூறுதலின், ``கிறி`` என்றாள். கிறி - வஞ்சனை. இஃது இயற்பழித்தது. `ஒருவனாவான் இவன்` என்பதை, ``பெருந்துறையான்`` என்று விளக்கினாள். ``காட்டாதன வெல்லாம் காட்டி`` (தி.8 திருச்சதகம் - 28) என்றது, முன்னும் கூறப்பட்டது. ``சிவம் காட்டி``; எனப் பின்னர் வருகின்றமையின், ``எல்லாம்`` என்றது அஃதொழிந்த பிறவற்றை என்க. சிவம் - மெய்ப்பொருள், உணர்த்திய முறைமை கூறுகின்றாராதலின், மெய்ப்பொருளை வேறு போலக் கூறினார். ``தாள் தாமரை காட்டி`` என்றது, `கொம்பரில்லாக் கொடி போலப் பற்றுக்கோடின்றித் தமியளாய் அலமந்த எனக்கு அவற்றைப் பற்றுக்கோடாகத் தந்து` என்றபடி. ``கருணைத் தேன்`` என்றது, அதனால்விளைகின்ற இன்பத்தை. நாட்டார் - உலகவர். அவர் நகைப்பது, அகலிடத்தார் ஆசாரத்தை அகன்றமை (தி. 6.ப.25. பா.7.) பற்றியாம். மேலை வீடு - முடிந்த நிலையாகிய வீடுபேறு; இதனை, `பரமுத்தி` என்ப. `நமக்குளதாகும் இப்பெறற்கரும் பேற்றினை அறியாமையால் நாட்டார் நகைக்கின்றாராதலின், அதனான் நமக்கு வருவதோர் தாழ்வில்லை` என்றபடி. ``ஆட்டான்`` என்றதில் தான், அசைநிலை. `ஆண்டான்`` அவ்வாற்றைப் பாடுதும்` என்க.
ஆண்டவாறே தன்னை அவன் உடன்கொண்டு போகாது நீத்தமையின், இத்துணைத் தலையளியையும், ``கிறி`` என்றாள். எனவே, இத் திருப்பாட்டு, `தலைவர் நம்மை மறந்தொழிவாரல்லர்` எனத் தோழி வற்புறுத்தியவழி, தலைவி வன்புறை எதிரழிந்து அவனை இயற்பழித்ததாம். தோழி தூது செல்வாளாவது இதன் பயன்.

பண் :

பாடல் எண் : 7

ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

இடைவிடாமல் நினைப்பவர்களுடைய மனத்தில் தங்கியிருப்பவனும், நினையாதவர்க்குத் தூரமாய் இருப்பவனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனும் வேதங்களை ஓதுபவனும், பெண்பாகனும், எம்மை ஆட்கொண்ட தலைவனும், தாய் போலும் மெய்யன்பு உடையவனும், உலகு ஏழிலும் தானே நிறைந்து அவற்றை ஆள்பவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

ஓயாது - மெலியாது; `சலிப்பின்றி` என்றபடி. எனவே, ஒருகாலைக்கொருகால் இன்பம் மீதூரப்பெறுதல் பெறப்பட்டது. உள்ளான் - உள்ளீடாய் இருப்பவன். ``உள்ளத்தின் உள்ளேநின்ற கருவே`` (தி.6. ப.47. பா.1.) என அருளிச்செய்தார் திருநாவுக் கரசரும். `பிறர்க்குச் சேயான்` என்க.
பாதி - பாதியுடம்பு. தாய் - எல்லாப் பொருட்கும் பிறப்பிடம். தத்துவன் - மெய்ப்பொருளாய் உள்ளவன். ஆள்வான் - யாவரையும் அடியராகக் கொள்பவன்.

பண் :

பாடல் எண் : 8

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

அன்பர் பாடும் பாடலைப் பரிசிலாகக் கொண்டருள் கின்ற பெண்பாகனும், திருப்பெருந்துறையை உடையவனும், தேவலோகத்தவரும் புகழும்படியான புகழை உடையவனும், மண்ணுலகத் தலைவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய கடவுள் கூடற் பதியில், மண் சுமந்து கொண்டு பாண்டியன் கைப்பிரம்படியால் புண் பட்ட பொன்போலும் திருமேனியைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

`பாடற்குப் படைத்தருளும்` என்க. பரிசு - பரிசில்; என்றது, `இம்மை, மறுமை, வீடு` என்னும் மூன்றனையுமாம். `இசைப் பாடலால் பாடுவோர்க்குப் பேரருள் செய்வன் இறைவன்` என்பதனை இவ்வாறு அருளினார்.

`கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை
கூடும் வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும்
ஈசன்``
(தி.3.ப.71. பா.1.) என ஆளுடைய பிள்ளையாரும்,
``அளப்பில கீதம் சொன்னார்க்
கடிகள்தாம் அருளுமாறே``
(தி. 4.ப.77. பா.3) எனத் திருநாவுக்கரசரும் அருளிச்செய்தல் காண்க.
இனி, `அடிகள் இவ்வாறு அருளிச்செய்தது, மூவர் தேவாரத் திற்கும், பாணபத்திரர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் இவர் களது இசைக்கும் இறைவன் மகிழ்ந்து அருள் புரிந்தமை பற்றி` என்று உரைப்பாரும் உளர்; அவையெல்லாம், அடிகள், அவர்தம் காலத் திற்குப் பிற்பட்டவரென்பது துணியப்பட்ட வழியே பொருந்து வனவாம்.
விண்சுமந்த கீர்த்தி - விண்ணைச் சுமந்த புகழ்; என்றது, `வானளாவிய புகழ்` என்றபடி. `கீர்த்தியை யுடைய மண்டலம்` என்க. `தலம்` என்பது வடசொல்லாதலின், `மண்` என்பதன் ஈறு இயல் பாயிற்று.
எல்லாவுலகுக்கும் தலைவனாகிய இறைவனை, நிலவுலகத் திற்கே தலைவன்போலக் கூறியது, இங்குள்ளாரையே தான் வலிய வந்து ஆட்கொள்ளுதல் பற்றி. கலி - ஆரவாரம்.

பண் :

பாடல் எண் : 9

துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

பிறைச்சந்திரனை உடையவனும், வேதப் பொருளானவனும், திருப்பெருந்துறையானும், முப்புரி நூலை உடையவனும், இடபவாகனனும், நீலகண்டனும், சிவந்த திரு மேனியையுடையவனும், திருவெண்ணீற்றை உடையவனும், பஞ்ச பூதங்களின் பலனும் ஆகிய சிவபெருமான் தன் பழவடியார்க்கு முடி வற்ற இன்பத்தைக் கொடுத்தருள்பவன். ஆதலால் அவனது பெருங் குணத்தை உலகம் எல்லாம் அதிசயிக்கும்படி புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

கோல மா - அழகிய குதிரை. அண்ட முதல் - உலகிற்கு முதல். பழவடியார் - முன்னரே ஆட்கொள்ளப்பெற்ற அடியவர். அவர், தன்னால் ஆட்கொள்ளப்பட்ட பின்னரும் பிராரத்தம் காரணமாக உலகியலைத் தழுவி நிற்பாராயின் அப்பிராரத்தவினை ஒழிவில் அவர் மீளப் பிறவியிற் செல்லாதவாறு தடுத்துத் தனது வரம்பிலின்பத்தை அவர்க்கு அளித்தருளுதலையே இதன்கண் அருளிச்செய்தார் என்க.
இறைவன் தான் தன் அடியவரை ஆட்கொள்ளும் பொழுது, `அவர்க்கு அந்தமிலா ஆனந்தத்தை அளித்தருளுதும்` என்றே ஆட் கொண்டருளுவன் ஆதலின், அதனை, `பண்டைப் பரிசு` என்று அருளினார். இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்கள் பிராரத்தம் கழிந்த பின் இங்ஙனம் அந்தமிலா ஆனந்தம் பெற்று உய்தலையே,
``காயமொழிந் தாற்சுத்த னாகி ஆன்மா
. . . . . . . . . . .
மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீழ் இருப்பன்,

மாறாத சிவாநுபவம் மருவிக் கொண்டே``
என்று விளக்கியது சிவஞான சித்தி (சூ.11.1.). இதனானே, அவர் தம் பிராரத்தவினையை நுகருங் காலத்து ஒருதலையாக விளைதற் பாலதாய ஆகாமிய வினையையும் அது முறுகிச் சஞ்சிதமாகாவாறு இறைவன் அழித்தொழிப்பான் என்பதும் பெறப்பட்டது. இதனையே,
``தொல்லையின் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையு ஞானத்
தழலுற வழிந்து போமே``
எனச் சிவப்பிரகாசமும் (89),
ஏன்ற வினைஉடலோ டேகும்;இடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும்.
எனத் திருவருட்பயனும் (98) கூறின.
இனி, இறை இன்பமே உயிர்க்கு இயற்கையும், அதனைத் தடுத்து நின்றது அனாதி செயற்கையாகிய ஆணவமுமாகலின், அவ்வாணவம் நீங்கியபின் அடையும் இன்பத்தை, `பண்டைப் பரிசு` என்று அருளினார் என்றலுமாம்.
இப்பொருட்கு `பழவடியாராவார், இறைவன் தந்தருளிய திருவருளை மறவாது சிந்தித்தும், தெளிந்தும் நிட்டை கூடியவர்` என்று பொருள் உரைக்கப்படும். "பரிே 2970?" என்ற ஏகாரம், தேற்றம். ``ஈந்தருளும், வியப்புறும்`` என வந்த பெயரெச்சங்கள் அடுக்கி, ``ஆறு`` என்ற ஒருபெயர் கொண்டன.
அண்டம் - புவனம்; இஃது ஆகுபெயராய், அவற்றின் உள்ளாரைக் குறித்தது. வியப்புறுதல், `அவர்செய்த பாதகமும் பணி யாயது நோக்கியாம்.` இங்ஙனம் இவையெல்லாம் பிறரிடத்து நிகழ்வனபோல அருளிச் செய்தாராயினும், தம்மியல்பு கூறுதலே அடி கட்குக் கருத்தென்க.

பண் :

பாடல் எண் : 10

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

தேவதேவனும், அரசர்க்கரசனும், திருப்பாண்டி நாட்டை உடையவனும், பெண்பாகனும், அடியேனை ஆட்கொண்ட வனும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

மன்னவர்க்கு, அவர்க்கு உண்டாகின்ற மாண்பாகி நின்றானை` என்க. மாண்பு - பெருமை; என்றது நீதியால் விளையும் பயனை. அது,
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
(குறள் - 547.) என்றபடி, செங்கோல்முறை முட்டவந்துழியும் அதற்கு இளையாது, அதனை முட்டாமற் செலுத்திய வழி, அதனான் அப்பொழுது எய்தும் தீங்கினையும் எய்தாது நீக்குதல். இது மகனை முறைசெய்த சோழன், அதனால் இழந்த மைந்தன் உயிர்த்தெழப் பெற்றமையும், தன் கையைக் குறைத்துக்கொண்ட பாண்டியன், பின்னும் முன்போலக் கைவளரப் பெற்றமையும் போல்வனவற்றால் அறியப்பட்டது.
``நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே`` (தி.6.ப.38.பா.8)
``.....நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண்`` (தி.6.ப.87.பா.6)
``மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்`` (தி.6.ப.95. பா.7)
எனத் திருநாவுக்கரசரும் அருளிச்செய்தல் காண்க.
தமிழ்ச் சங்கத்தில் தானும் ஒரு புலவனாய் இருந்து தமிழை ஆராய்ந்தமை பற்றி, ``தமிழளிக்கும்`` என்றார்.
``சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என்
சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண்
தீந்தமிழ்``
எனத் தி.8 திருக்கோவை(20)யுள்ளும் அருளிச் செய்வார். ``அளிக்கும்`` என்றது, ``நாட்டான்`` என்றதன் இறுதிநிலையோடு முடியும். ``பேணு`` என்றது, `அடியவர்கள் விரும்பிப் போற்றுகின்ற` என வந்த அடையே; `பேணு பெருந்துறை` என்னுந் தலம் இதனின் வேறு . `பெருந்துறையில் நாயேனை ஆட்கொண்ட` என்றதற்கு, பெண்கள் கூற்றில் இப்பெண் அங்ஙனம் ஆட்கொள்ளப்பட்டவளாகப் பொருள்கொள்ளப்படும். பின்னர் இவ்வாறு வருவனவற்றிற்கும் இது பொருந்தும். இப்பெண்டிர்க்கெல்லாம் இயற்பெயர் கூறாமையின், இதுவும் பொருந்துவதேயாம்.

பண் :

பாடல் எண் : 11

செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

உமாதேவிபங்கனும், திருப்பெருந்துறையானும், திருவடியை அடைந்தவரின் மனம் உருக்கும் குணத்தை உடைய வனும், பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்கினவனும், தன் திருவடி யில் மனம் வைத்த அன்பர் மனத்தில் இருப்பவனும் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

செப்பு - கிண்ணம். ஆர், உவம உருபு. `தப்பாமே உருக்கும்` என இயையும். தப்பாமே - நீங்கிப்போகாதபடி; `தன்னை அடைந்தவரது நெஞ்சம் பிறிதொன்றை நினையாதவாறு இன்புறச் செய்பவன்` என்றதாம். `சங்கமிருந்தது முதலியவற்றால் பலராலும் நன்கறியப்பட்டது` என்பார், `அப்பாண்டிநாடு` என்றார். அதனைச் சிவலோகம் ஆக்குவித்தது, வலை வீசுதல், குதிரை கொணர்தல், மண் சுமத்தல் முதலிய திருவிளையாடலின் பொருட்டுத் தான் பலகாலும், பலவிடத்தும் எழுந்தருளி வந்தமையாலாம். இனி, `வரகுணன்` என்னும் பாண்டியனுக்கு மதுரையையே சிவலோகமாகக் காட்டிய திருவிளையாடல் ஒன்றும் பரஞ்சோதியார் திருவிளையாடலிற் காணப்படுகின்றது. அப்பு - நீர். ``ஒப்பு`` என்றது விலையை. ``தம் நெஞ்சை விற்றற்கு விலையாகப் பெறும் பொருள் கழலே யாகும்படி` என்றவாறு. ஒப்புவித்தல் - விற்றுவிடுதல். ``ஒப்பு`` என்றதனை, `ஒற்றிக்கலம்` எனக்கொண்டு `கழற்கே` என உருபு விரித்துரைப்பாரும் உளர்; `கழற்கே` எனினும் யாப்புக் கெடாதாக, அவ்வாறோதாமை யானும் அடியவர், தம் நெஞ்சினை இறைவனுக்கு மீளா அடிமை ஆக்குதல் அன்றி ஒற்றியாக வைத்தல் இலராகலானும், `ஒப்புவித்தல்` என்னும் சொல், `ஒற்றியாக வைத்தல்` எனப் பொருள்படாதாகலானும் அது பொருந்துவதன்றாம்.
``விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி யாட்பட்டேன்`` (தி. 7.ப.95. பா.2.)
என ஆளுடைய நம்பிகள் அருளிச்செய்ததனைக் காண்க. அப்பால் - மாயைக்கு அப்பால் உள்ளது; என்றது உயிரை. உலகத்தையும், உயிரறிவையும் கடந்து நிற்பவன் இறைவன் ஆதலின், ``அப்பாலுக் கப்பால்`` என்று அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 12

மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்
இப்பிறவி ஆட்கொண் டினிப்பிறவா மேகாத்து
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம் நம்சிவனைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

திருமால் முதலியோர் தேடி நிற்க, என்னையும் தனது இனிய அருளால் இந்தப் பிறப்பில் ஆட்கொண்டு இனிமேலும் பிறவாமல் காத்தவனாய் உண்மையாகிய இடத்தில் தோற்றுபவனாய், எல்லா உயிர்களுக்கும் தானே ஒருமுதற் பொருளாய், எல்லா உயிர் களுக்கும் வீடுபேற்றுக்கு ஏதுவாய் இருக்கிறவன் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

``எப்பிறவியும் தேட`` என்றது, பெரிதும் அருமை குறித்தவாறு. `இப்பிறவிக்கண்` என உருபு விரிக்க. ``காத்து`` என்ற வினையெச்சம், ``ஆகும்`` என்பதனோடு முடியும். இவ்வெச்சம் எண்ணின்கண் வந்தமையின், `காத்தவனும், வீடாகும் அப்பொருளு மாம் நம்சிவன்` என்பதே பொருளாம்.
மெய்ப்பொருளை அறிதற்கருவியாகிய மெய்யறிவை ஆகுபெயரால், ``மெய்ப் பொருள்`` என்றார்; ``பொன்னும் மெய்ப் பொருளும் தருவானை`` (தி.7.ப.59.பா.1) என்றதும் காண்க. ``தோற்றம்`` என்றது, அவ்வாற்றால், தோன்றுதலுடைய பொருள்மேல் நின்றது. மெய் - மெய்ம்மை; ஒருவாற்றானும் திரிபின்றி, என்றும் ஒரு படித்தாயிருத்தல். வடமொழியுள், `சத்து` எனப்படுவதும் இதுவே. ``நிலைபேறு`` என்றது, அதனையுடைய தன்மையைக் குறித்தது. ஒரு பொருட்குத் தன்னியல்பு என்றும் நீங்காது நிற்குமாதலின், அதனை, ``நிலைபேறு`` என்றார். எனவே, `சத்தாதற்றன்மையைத் தனக்கு இயல்பாக உடையதாய்` என்பது பொருளாயிற்று. `தன்னியல்பு, சுபாவம், இயற்கை` என்பன ஒருபொருட் சொற்கள். இதனை, `சொரூப லக்கணம்` எனவும், `உண்மை இயல்பு` எனவும் கூறுவர். ``எப்பொருட்கும்`` என்றதன்பின், `முதல்` என்பது எஞ்சிநின்றது. முதலாவது, நிலைக்களம்; இதனை, `தாரகம்` என்ப. `யாவற்றுக்கும்` என்னும் சாரியை தொகுத்தல். ``வீடாகும்`` என்பதனால், `யாவை` என்பது, அறிவுடைப் பொருளாகிய உயிர்களையே குறித்தது, வீடுபெறுதற்குரியன அவையேயாகலின். வீடாவது, பந்தத்தினின்றும் நீங்குதல். கயிறற்றமையால் அதனினின்றும் நீங்கிய ஊசற்குப் புகலிடம் நிலமன்றி வேறில்லாமைபோல, பந்தம் மெலியப் பெற்றமையால் அதனினின்றும் நீங்கிய உயிருக்குப் புகலிடம் இறைவனன்றி வேறில்லையாதலின், அவனை, ``யாவைக்கும் வீடாகும் அப் பொருள்`` என்றார். விடுதலின்பின் எய்தற்பாலதாய பொருளை, `வீடு` என்றல், காரியவாகுபெயராம். பந்தத்தினின்றும் நீங்கிய உயிர்க்குப் புகலிடம் இறைவன் திருவடியன்றி வேறில்லை என்பதை, மெய்கண்ட தேவ நாயனார்,
``விட்டு - அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே``
(சிவஞானபோதம் சூ.8.) எனவும்,
``இனி, இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமதுமுதல் சீபாதத்தை அணையும் என்றது.``
``ஊசல் கயிறற்றால் தாய் தரையேயாந் துணையான்`` (-சிவஞானபோதம்.சூ.8.அதி.4.)
எனவும் விளக்கினார். ``தோற்றமாய்`` எனவும், ``தானேயாய்`` எனவும் வந்த செய்தெனெச்சங்கள் காரணப் பொருளவாய் நின்று, பின்னர் வந்த, ``நிலைபேறாய்`` `வீடாகும்` என்றவற்றோடு முறையே முடிந்தன. இவற்றால், பொய்யறிவின்கண் தோன்றாது, மெய் யறிவின்கண் தோன்றுதலால், மெய்ம்மையையே தனக்கியல்பாக உடையதாயும், எப்பொருட்கும் முதல் தானேயாதலால், யாவைக்கும் வீடாயும் நிற்கும் என்றவாறறிக.
`பொய்ப்பொருளால் விளங்கிப் பொய்ப்பொருளையே அறிவது பொய்யறிவு` எனவும், `மெய்ப்பொருளால் விளங்கி மெய்ப்பொருளையே அறிவது மெய்யறிவு` எனவும் உணர்க. இவற்றை முறையே `பாசஞானம்` எனவும், `பதிஞானம்` எனவும் சைவசித்தாந்த நூல்களும் கூறும். இவ்விரண்டுமின்றிப் பசுஞான மாகிய உயிரறிவு தனித்து நில்லாதாகலின், அதனைத் தனித்து நிற்பதாக அறியும் பசுஞானமும் பொய்யறிவேயாதலறிக.
`பொய், மெய்` என்பன, நிலைபெறுதலும், நிலைபெறாமையு மாகிய இயல்புகளைக் குறிப்பனவன்றி, இன்மை உண்மை மாத்திரையே குறித்தொழிவனவல்ல.
மெய்ப்பொருட்கண் தோற்றமாதல் முதலியனவே பரம்பொரு ளின் இயல்பென்பது மறைகளின் முடிபு என்பார், `இத்தன்மை களையுடைய அப்பொருள்` என முன்னர் பொதுப்படச் சுட்டி, பின்னர், `சிவபெருமானையன்றிப் பரம்பொருளாவார் பிறரில்லை` என்னும் உண்மையை விளக்குவார், சிறப்பாக, ``நம் சிவனை`` என்று அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 13

கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்
செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை
ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

செந்நிறம் உடையவனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஒருவராலும் அறிய முடியாதவனும், அன்பர்க்கு மெய்யனும், அன்பர் அல்லாதார்க்குப் பொய்யனும், அந்தணனும், திருவையாற்றில் வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

மை ஆர் - மேகம்போலும். தேன், கூந்தலில் முடித்த பூவில் உள்ளது. `சிலம்ப, ஆட, ஒலிப்ப` என்பவற்றை, `ஆடி` என, ஒருசொல் வருவித்து முடிக்க. சேர்ந்தறியாக் கை - ஒரு பொருளிலும் தோய்ந்தறியாத ஒழுக்கம்; இது, பின், `எங்கும் செறிந்தானை` என்பதனோடு முரணிநின்று, `எப்பொருளிலும் நிறைந்திருப்பினும், ஒன்றிலும் தோய்வின்றி நிற்றலை உணர்த்திற்று.` ``செய்யானை`` என்றது முதலிய மூன்றடிகளிலும், முரண்தொடை அமையவே அடிகள் அருளிச் செய்திருத்தல் அறிக.
இங்ஙனமாகவும், ``சேர்ந்தறியாக் கையானை`` என்றதற்கு, `ஒருவரைத் தொழுதறியாத கைகளை யுடையவன்` எனப் பொரு ளுரைப்பாரும் உளர்; இறைவனுக்கு அப்பொருள் சிறப்புத் தாராமை யறிக. மெய்யான் - அநுபவப் பொருளாய் உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 14

ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

யானை முதலாகிய எல்லாப் பிறவிகளிலும் பிறந்தும் இறந்தும் இளைத்த என்னை உடலுருகச் செய்து, என்வினைகளை ஒழித்து, தேன் போல எனக்கு இனிமையைத் தந்து என்னைத் தன் திருத்தொண்டுக்கு உரியனாக்கின அச்சிவபெருமானது திருவடியைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

கீடம் - புழு. ஓட்டு - ஓட்டுதல். முதனிலைத் தொழிற் பெயர். `ஓட்டுதலை உகந்து` என்க. உகந்து - விரும்பி. கன்னல் - கரும்பு; என்றது, அதன் சாற்றை. இனிய கோன், ஞானாசிரியன். அவன், பகுதிப்பொருள் விகுதி.
இறைவன் கொண்ட வேடமாகலின், `கோனவன்போல்` என்று அருளினார். எனவே, `ஆசிரியனைப் போல் வேடங்கொண்டு வந்து` என்றவாறாயிற்று. இது, பெண்கள் கூற்றில், `இனிய தலைவன் தானேயாதல் தோன்ற` எனப் பொருள்தரும்.

பண் :

பாடல் எண் : 15

சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்
தந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

சந்திரன் உடலைத் தேய்த்தும் இந்திரனின் தோளை நெரித்தும் எச்சன் என்னும் போலித் தெய்வத்தின் தலையை அரிந்தும் சூரியனின் பல்லைத் தகர்த்தும் தேவர்களை விரட்டியும் தக்கன் யாகத்தில் அவமானப்படுத்தித் தண்டித்த சிவபெருமானது மந்தார மலர் மாலையைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

``தக்கன்றன் வேள்வியினில்`` என்றதை முதலிற் கொள்க. தக்கன் செய்த வேள்வியில் வீரபத்திரரைக்கொண்டு சிவபெருமான் தேவர் பலரையும் பலவாறு ஒறுத்தமை நன்கறியப்பட்ட வரலாறு. எச்சன் - வேள்வித் தெய்வம். `அந்தரத்தே` என்னும் சாரியை தொகுத்தலாயிற்று. அந்தரம் - ஆகாயம். அலர் கதிரோன் - விரிகின்ற பல கதிர்களையுடையவன். `தேவர்களைத் திசைதிசையே சிந்தி ஓட்டுகந்த` என்க. சிந்தி - சிதறி. ``ஓட்டு`` என்ற பிறவினை `ஓடச் செய்தல்`` எனப் பொருள்படுதலின், அதனுள் நின்ற, `ஓட` என்பது. ``சிந்தி`` என்னும் வினையெச்சத்திற்கு முடிபாயிற்று. இனி, சிந்துதல், `சிதறச்செய்தல்` எனவும் பொருள்படுமாகலின், அதனை இறைவற்கு ஆக்கி உரைத்தலுமாம். செம்மை, இங்கு அழகைக் குறித்தது. தார் - பூ. மந்தாரம், விண்ணுலகத் தருக்களில் ஒன்று. இதன் பூவால் இயன்ற மாலையைச் சிவபிரானுக்குக் கூறியது, `தேவர் தலைவன்` என்பதைக் குறிப்பிட்டு. `அவனையின்றித் தேவர் தக்கன் வேள்வியில் அவி யுண்ணச் சென்றமையின் அவரை ஒறுத்துத் தனது தலைமையை நிலைநிறுத்தினான்` என்பது உணர்த்துதற்கு. இஃது, இம்மாலையைப் பெற விரும்பினாள் கூற்றாதற்குச் சிறந்தது.

பண் :

பாடல் எண் : 16

ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழிஎமக்குத் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.

பொழிப்புரை :

உடல், உயிர், உணர்வு, உருவங்களாகி, எம் முள்ளே கலந்திருந்து, தேன் போல இனிமை தந்து முத்தி நெறியை எமக்கு உணர்த்தியருளிய சிவபெருமான், அளவற்ற பல உயிர் களுக்கும் தலைவனாய் நின்ற விதத்தைப் புகழ்ந்து பேசுவோம்.

குறிப்புரை :

ஊன் - உடம்பு; ஆகுபெயர். சேவகன் - வீரன்; உயர்வுப்பன்மையாக, ``சேவகனார்`` என்றார். சீர் - சிறப்பு. ஒளி - விளக்கம். ஆனா - நீங்காத. `சீரொளிசேர் அறிவு, ஆனா அறிவு` எனத் தனித்தனி முடிக்க, இவ்வாறு முடியக் கூறினாரேனும், `சீரொளிசேர் அறிவாய் ஆனாது` என்றலே கருத்து எனக்கொண்டு, அத்தொடரை முதற்கண்ணே கூட்டியுரைக்க. இப்பத்துத் திருப்பாட்டுக்களும், முதல் ஐந்து திருப்பாட்டுக்கள் போல இயற்பட மொழிந்தனவேயாம்.

பண் :

பாடல் எண் : 17

சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்று
ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்து மலர்வேன் அனலேந்தி
ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்.

பொழிப்புரை :

கொன்றைமலர் மாலையைச் சூடிச் சிவபெருமான் திருத்தோள்களைக் கூடித் தழுவி மயங்கி நின்று பிணங்குவேன்; அவனது செவ்வாயின் பொருட்டு உருகுவேன்; மனமுருகி அவன் திருவடியைத் தேடிச் சிந்திப்பேன்; வாடுவேன்; மகிழ்வேன். இங்ஙன மெல்லாம் செய்து நாம் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

இதனுட் கூறப்படுவனவெல்லாம், சிவபெருமானைக் காணப்பெறின் நிகழும் என்னும் கருத்தினவாகலின், முதற்கண், `சிவன் வரின்` என்பதனை வருவித்து, `அவன் பூங்கொன்றை சூடுவேன்`, `அவன் திரள்தோள் கூடுவேன்` என்றாற்போல உரைக்க. ``ஆடுவான்`` என்றதற்கும், `ஆடுவானாகிய அப்பெருமானது` என்றே உரைக்க. ``முயங்கி`` என மறித்துங்கூறியது. `கவவுக்கை நெகிழாது நின்று` என்றபடி. மயங்குதல் - வசமழிதல். ``நின்று`` என்றதன் பின்னர், `பின்னொருகால்` என்பது எஞ்சிநின்றது. தலைவி ஊடுவது புறத்தேயாகலின், செவ்வாய்க்கு உருகுதல், அது போழ்து நெஞ்சி னுள்ளே நிகழ்வதாம். தேடுதல், தலைவி ஊடல் தனியாளாய் நின்ற பொழுது தலைவன் மறைந்தமையாலாம். கழலைச் சிந்தித்தல், அதற்குப் பணி செய்தற்கு உரியளாகத் தான் கொள்ளப்படவேண்டும் என்று கருதியாம். வாடுதல், `தன்னை அவன் இனி நோக்கான்` என்னும் கருத்தினாலும், மலர்தல், `அவன் தன்னைக் கைவிடான்` என்னும் துணிவினாலுமாம். ``மலர்வேன்`` என்றதன்பின், ``ஆதலின்`` என்பது வருவிக்க. அங்ஙனம் வருவித்துரைக்கவே, `அவனது சேவடியைப் பாடின் சிறிது ஆற்றுவேன்` என்பது கருத்தாம்.
இத் திருப்பாட்டினைக் காமப்பொருள் பற்றியே அருளிச் செய்தார், வரிப்பாட்டிற்கு அஃது இயல்பென்பது தோன்றுதற்கு. எனவே, இக்கூற்றினை நிகழ்த்தினாள், `சிவபெருமான்மேற் கொண்ட காதல் மீதூரப்பெற்றாள் ஒருத்தி` என்க. இங்ஙனம் இப்பொருளே பயப்ப அருளிச்செய்தாராயினும், அடிகள் தமக்கு இறைவன் மீளத் தோன்றி அருள்புரியின், அவனது திருவடியின்பத்தைச் சிறிதும் தடை யின்றி வேண்டியவாறே நுகர்தல் உளதாகும் என்னும் தம் விருப்பத் தினையே உள்ளுறுத்து அருளினார் என்க. எனவே, `கவவுக்கை நெகிழாது நின்று` என்றது, `இறைவனது திருவடி நிழலினின்றும் சிறிதும் மீளாது உறைத்து நின்று` என்றபடியாம். திருவடி நிழலிலிருந்து மீளுதலாவது, இறைவனை உணர்தல் ஒழிந்து, தன்னையும், பிற வற்றையும் உணர்தல். அங்ஙனம் உணரச் செய்வது மலத்தின் வாதனை. அஃது உண்டாயவிடத்து உளதாவது துன்பமே. `அதனால், எவ்வாற்றானும் திருவடியினின்றும் சிறிதும் பிரிதல் கூடாது` என்ப தனையே, ``முயங்கி`` என்பதனால் குறித்தருளினார். இதனானே, திருவள்ளுவ நாயனார், காமத்துப்பாலில்,
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். (-குறள்.1238)
எனவும்,
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். (-குறள்.1239)
``கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு`` -குறள்.1240
எனவும் ஓதியது, இம்மெய்ந்நெறியின் நுண்பொருளையும் அவை பற்றி உய்த்துணர்ந்துகொள்ளுதற் பொருட்டேயாம் என்பது பெறப் படும். அவற்றுள், `தண்வளி போழ - சிறுகாற்று ஊடறுக்க` என்றது, மலவாதனை சிறிதே புகுந்து உயிரைத் திருவடி நிழலினின்று பிரித் தலையும், கண் பசந்தன என்றது அப்பிரிவு நிகழ்ந்தவழி ஆன்ம அறிவு துன்புற்று மெலிதலையும் உணர்த்தும். இஃது `ஆற்றுவல்` என்றது.

பண் :

பாடல் எண் : 18

கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை
வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ
அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

கிளிமொழியாளாகிய உமாதேவி பாகனும், மால், அயன் என்போர் காண்பதற்கு அரிதாகிய அறிவுருவனும், அன்பர்க்குத் தெளிந்த தேன்போல்பவனும், திருப்பெருந்துறையில் எளிதில் வந்து எனக்கு அருள் செய்த அந்தணனும் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

குறிப்புரை :

கிளிவந்த - கிளியினது தன்மை வந்த. `மென் மொழியாளது கேழ்` என்க. கேழ் - நிறம். கிளரும் - விளங்கும். பாதி - பாதி உருவம். வெளிவந்த - `காண்போம்` என்று புறப்பட்ட. தெளி வந்த தேறல் - தெளிவு உண்டாகியதேன்; `வடித்தெடுத்ததேன்` என்ற படி. `இன்னருளால் எளிவந்து பெருந்துறையில் இருந்து என் உள்ளத் தின் ஒளி வந்து உள்ளே ஒளிதிகழ இரங்கி அளிவந்த அந்தணன்` எனக் கூட்டியுரைக்க. ஒளி இரண்டனுள், முன்னது, `தூய்மை` என்னும் பொருளையும், பின்னது `ஞானம்` என்னும் பொருளையும் குறித்தன. ``ஒளிவந்து`` என்றது, ஒளி வருதலால் எனக் காரணப் பொருட்டாய் நின்றது. அளிவந்த - அளித்தல் (ஆட்கொள்ளுதல்) பொருந்திய. அந்தணன் - அந்தணக்கோலம் உடையவன்.

பண் :

பாடல் எண் : 19

முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பொழிப்புரை :

மூவர்க்கும் முதல்வனும், எல்லாம் தானேயான வனும், அவை அழிந்த பின்னே இருப்பவனும், திருப்பெருந்துறையில் நிலைபெற்றவனும், பெண்பாகனும், திருவானைக்காவில் எழுந்தருளி இருப்பவனும், பாண்டி நாட்டை உடையவனும், என் காளை போல் பவனும், என்னப்பன் என்று புகழ்வோர்க்கு இனிய அமிர்தம் போல் பவனும், எம் தந்தையும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடு வோம்.

குறிப்புரை :

`மூவர்க்கும் முன்னானை` என மாற்றிக் கொள்க. மூவரும் ஆதி மூர்த்திகள் (தி.8 கீர்த்தி - 121.) ஆதலின், `அவர்க்கு முன்னோன்` என்றது, `அநாதிமூர்த்தி` என்றவாறு. ``முற்றுக்கும் பின்னான்`` என்றதும், `அவர்கள் ஒடுங்கிய பின்னும் நிற்பவன்` என, இதனையே வேறோராற்றான் விளக்கியவாறு. இதனையே,
``அறுதியில் அரனே எல்லாம்
அழித்தலால் அவனால் இன்னும்
பெறுதும்நாம் ஆக்கம் நோக்கம்
பேரதி கரணத் தாலே``
எனச் சிவஞான சித்தி (சூ. 1-35) விளக்கிற்று. முற்றும் - தோற்றம் நிலை இறுதிகளையுடைய பொருள்கள் முழுதும். `மன்னனை` என்பது, நீட்டலாயிற்று. `மன்னானவனை` என்பது தொகுத்தலாயிற்று எனினுமாம். `என் ஆனை என் அப்பன்` என்பன, காதல்பற்றியெழும் சொற்கள். அன்னான் - ஒத்தவன். இனி, `இன்னமுதை` என்றதனை வேறு தொடராக்கி. `அன்னான் - `அன்னபெருமைகளையுடையவன்` என்று உரைத்தலுமாம். அன்ன பெருமைகள், மேற்கூறியனவாம்.

பண் :

பாடல் எண் : 20

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றிஇப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 

பொழிப்புரை :

தன் அடியார்க்கு அன்றித் தன் குணங்களை அள விடற்குப் பிறர்க்கரியனாகிய திருப்பெருந்துறையானும், குதிரைச் சேவகனாய் எழுந்தருளித் தன் அடியார் குற்றங்களை ஒழித்துக் குணத்தை ஏற்றுக் கொண்டு எம்மைச் சீராட்டி, சுற்றத்தவர் தொடர்பை விடுவித்தவனுமாகிய சிவபெருமானது புகழையே பற்றி, இப்பாசப் பற்றறும்படி நாம் பற்றின பேரின்பத்தைப் புகழ்ந்து பாடி இன்பம் அடைவோம்.

குறிப்புரை :

பெற்றி - தனது தன்மை. ``அடியார்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``பிறர்க்கு`` என்றார். `கோதாட்டுதல்` என்பதுதானே, `திருத்துதல்` எனப் பொருள் தருமாதலின், ``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு`` என்றது, `கோதாட்டுமாறு இவ்வாறு` என்பதனை விதந்தவாறாம். `மிகப்பெரிய சுற்றம்` என்பார். ``சுற்றிய சுற்றம்` என்றார். தொடர்வு - தொடர்பு; பற்று. ``அறுப்பான்`` என வேறொருவன் போலக் கூறினாராயினும், `அறுப்பானாகிய தனது` எனப் பொருள் உரைக்க. பற்றி - துணையாகப் பற்றி. `பற்றறச் செய்ய` என ஒரு சொல் வருவிக்க. அன்றி, ``பாசத்தை`` என்ற ஐகாரத்தை, `சாரியை` என்றலுமாம், நாம் பற்றுவான் - நம்மால் பற்றப்படுபவன். பற்றிய பேரானந்தம் - நம்மைப் பற்றியதனால் விளைந்த பேரின் பத்தை. இவையும் இயற்பட மொழிதல்.
சிற்பி