திருவாசகம்-திருக்கோத்தும்பி


பண் :

பாடல் எண் : 1

பூவேறு கோனும்
புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.

பொழிப்புரை :

அரசவண்டே! நீ, பிரமன், இந்திரன், சரசுவதி, திருமால், நான்கு வேதங்கள், முச்சுடர்கள், மற்றைத் தேவர்கள், ஆகிய எல்லாரும் அறியவொண்ணாத இடபவாகனனாகிய சிவபெருமானது திருவடியிற் போய் ஊதுவாயாக.

குறிப்புரை :

எல்லா இடத்தும், ``கோத்தும்பீ`` என வருவதனை முதலிற் கொள்க.
பூ ஏறு கோன் - தாமரை மலர்மேல் ஏறி வீற்றிருக்கும் தலைவன்; பிரமதேவன். பொற்பு - அழகு. நா ஏறு செல்வி - எல்லார் நாவிலும் சென்று தங்கும் அரசி; கலைமகள். மா - பெருமை. `ஏற்றுச் சோதி` எனற்பாலது, எதுகை நோக்கி, ``ஏறு சோதி`` என நின்றது; `இடபத்தினை உடைய ஒளி வடிவினன்; உருத்திரன்` என்பது இதன் பொருள். சே ஏறு சேவடி - இடபத்தின்கண் ஏறும் செவ்விய திருவடி. சேவடிக்கு - சேவடிக்கண்; உருபுமயக்கம். ஏகாரம் பிரிநிலை. பின்வருவனவற்றிற்கும் இவை பொருந்தும். `குணமூர்த்தியாகிய உருத்திரனுக்கும், நிற்குணமூர்த்தியாகிய பரமசிவனுக்கும் வடிவு, பெயர் முதலியன ஒருவகையினவாயினும், உருத்திரன் ஆன்ம வருக்கத்தினன் எனவும், பரமசிவன் யாவர்க்கும் பதியாகிய முதற் கடவுள் எனவும் பகுத்துணர்ந்து கோடல் வேண்டும் என்பது உணர்த்துதற்கு இருவர்க்கும் இடப வாகனம் உண்மையை விதந் தோதியருளினார். வானவரோடு உடன் வைத்து எண்ணினமை யானும், ``அறியா`` என்றதனானும், ``மா ஏறு சோதி`` உருத்திரன் என்பதும், `ஒருவரும் அறியாச் சேவடி` என்றமையால், அவை பரமசிவனுடையன என்பதும் இனிது விளங்கின.
வண்டினைப் பரமசிவன் பால் சென்று ஊது என ஏவுகின்றவள், ஏனையோரை அப்பெருமான் என எண்ணி மயங்காமைப் பொருட்டு, எல்லார் அடையாளங்களையும் தெரித்துக் கூறினாள். `அவ்வடையாளங்களுள், வானவரோடு ஒருங்கு நிற்றலும், அவர் அனைவரும் வணங்க அவர்கட்கு மேல் நிற்றலும் உருத்திரனோடு பரமசிவனிடையுள்ள வேற்றுமை` என்பதை உடம்பொடு புணர்த்திக் கூறினாள். இவற்றிடையே, `வானவரும் நாவேறு செவ்வியும், நான்மறையும் இசையைத் தந்து நிற்றல் உண்டாக்கலின், இசையில் விருப்புடைய நீ அவ்விடத்தும் மயங்கி யொழியற்க` என்பதையும் கூறினாள் என்க. சேவடி, செங்கமல மலர்போல்வன ஆகலின் அது வண்டிற்கு மிகவும் இன்பம் செய்யும் என்பது கருதி, `அவற்றின்கண் சென்று ஊது` என்றாள். இதனானே, `ஆன்மாக்களாகிய வண்டுகட்கு அச்சேவடி அறிவாகிய மணத்தினையும், ஆனந்தமாகிய தேனினை யும் அளித்துப் பிறிதொன்றனையும் அறியாது இன்பம் ஒன்றையே துய்த்துத் தம்மிடத்தே கிடக்கச்செய்யும்` என்பதும் போதரும்.
தும்பி சென்று ஊதும் பொழுதே அதனது நறுமணத்தாலும், பிறவற்றாலும் அது தன்னிடத்துத் தும்பி என்பதனை உணர்ந்து, தன்னை நினைந்து வருவான் என்னும் துணிவினளாதலின், `இன்னது சொல்` எனக் கூறாமல், ஊதுதலால் தும்பிக்கு உளதாகும் பயனை மட்டுமே குறித்து, ``ஊதாய்`` என்று ஒழிந்தாள். ஊதுதல் - ஒலித்தல்.

பண் :

பாடல் எண் : 2

நானார்என் உள்ளமார் ஞானங்க
ளாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை
ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில்
உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! தேவர் பெருமானாகிய இறைவன் வலிய வந்து என்னை ஆண்டருளாவிடின், நான் யார்? என் மனம் யார்? ஞானங்கள் யார்? என்னையறிவார் யார்? ஒன்றுமில்லையாய் முடியும். ஆதலால், நீ பிரம கபாலத்தில் உணவேற்கின்ற அம்பல வாணனது திருவடிக்கண்ணே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``வானோர் பிரான் மதிமயங்கி என்னை ஆண்டில னேல், நான் ஆர்.....யாரறிவார்`` என்க. ``ஆர்`` என்றது, `யார்` என்னும் வினா வினைக் குறிப்பின் மரூஉ. இஃது, உயர்திணை முப்பாற்கும் பொதுவாய் `எத்தன்மையன், எத்தன்மையள், எத் தன்மையர்` என்னும் மூன்று பொருள்களுள் ஒன்றை இடத்துக்கேற்பத் தந்துநிற்கும். இஃது இங்கு `நான் ஆர்` எனத் தன்மையில் வந்தது இட வழுவமைதி.
``ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்தெங்
கோதைகூட் டுண்ணிய தான்யார்மன் - போதெல்லாம்
தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன்
தூதொடு வாராத வண்டு``
(தொல். சொல். சேனாவரையம் - 210.) என்றாற்போல அஃறிணைக் கண் வருதல் திணைவழுவமைதி. அவ்வாற்றான் இங்கு ``என்உள்ளம் ஆர்``, ``ஞானங்கள் ஆர்`` என வந்தது. இவையெல்லாம் பிற்கால வழக்கு. இவ்வாற்றால், ``நான் ஆர்`` என்றது, `நான் எத்தன்மை யேனாய் இருப்பேன்` எனவும், ``என் உள்ளம் ஆர்`` என்றது, என் மனம் எத்தன்மையதாய் இருக்கும்` எனவும், ``ஞானங்கள் ஆர்`` என்றது, `என் அறிவுகள் எத்தன்மையனவாய் இருக்கும்` எனவும் பொருள் தருமாறு அறிக. என்னை யார் அறிவார் - என்னை ஒரு மகனாக இவ்வுலகில் யாவர் அறிந்து நிற்பார். `ஆண்டிலனாயின் இவ்வாறு ஆம்` எனவே, `ஆண்டதனால் இப்பொழுது நான் இறை வனுக்குப் பேரன்பனாயினேன்; என் உள்ளம் அவனையே நினைந்து உருகுகின்றது; என் அறிவுகள் எல்லாம் அவனையே பொருளாக அறிந்து நிற்கின்றன; என்னை எல்லாரும் சிவனடியான் என்று அறிந்து நிற்கின்றனர்` என்பது தானே பெறப்பட்டது. தலைவி கூற்றில் இவை, தலைவனால் தமக்கு முதுக் குறைவுண்டாயிற்றாக ஊரெல்லாம் சொல்லப்படுதலைக் குறிக்கும். அறிவு ஒன்றேயாயினும், அறியப் பட்ட பொருள்பற்றி வேறுவேறாய்த் தோன்றலின், ``ஞானங்கள்`` எனப் பன்மையாற் கூறினார்.
இம் முதலடி ஐஞ்சீருடையதாய்க் கொச்சகக் கலிப்பாவின் கண் மயங்கி வந்தது, அஃது யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையதாகலின் (தொல்.செய்.452.).
``வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும்
ஐஞ்சீ ரடியும் உளஎன மொழிப``
(தொல். பொருள்.369) என்றதனைக் கலிப்பாவின் இலக்கணமாகவே கொண்டார் பேராசிரியர்.
``அருகிக் கலியில் அகவன் மருங்கின்ஐஞ் சீரடியும்
வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர்``
(யாப்பருங்கலக்காரிகை)
எனப் பிற்காலத்தாரும், கலிப்பாவின்கண் சிறுபான்மை ஐஞ்சீரடி மயங்கிவரும் எனக் கூறினமை காண்க. சீர் மிகுதியாக வந்தமையின் இடையே வெண்டளையாதல், கலித்தளையாதல் வருதலின்றி ஆசிரியத்தளை வந்தது. பின்னரும் இக் கொச்சகக் கலிப்பாவில் ஐஞ்சீரடி வருவன உள; அவற்றை அறிந்துகொள்க.
``மதிமயங்கி`` என்றது, அருளது மிகுதியைக் குறித்தவாறு. இதனானே, இறைவற்கு மயக்கம் உண்மை கூறிய குற்றம் எய்தாதாயிற்று. இங்ஙனமாகவும், `மயங்கி` என்றதனைப் பெயர் எனக் கொண்டு அதனைப் பிரமனுக்கு ஆக்கி, பின்வரும், `ஊனார் உடைதலை` என்றதனை, `அத்தலை பிரமன் தலை` என விதந்த வாறாக உரைப்பாரும் உளர். புணர்ச்சிப் பத்தின் ஒன்பதாம் திருப் பாட்டுள், ``நாயேன்றனை ஆண்டபேதாய்`` என வருவதற்கு அவரும் வேறுரையாது, `அன்பினால் கூறியது` என்றே போதலின், ஈண்டும் அவ்வாறு உரைத்துப் போதலே தக்கது என்க. ``மதிமயங்கி, பேதை`` என்றாற் போல்வன சொல்வகையால் இறைவனை இகழ்ந்துரைப்பன போலத் தோன்றினும், கருத்துவகையால், `அவன் நம்மை ஆட் கொள்ளுதற்குரிய தகுதி ஒன்றேனும் நம்மிடத்தில்லா தொழியினும், தனது பேரருள் ஒன்றானே நம்மை ஆட்கொண்டருளினான்` என அவனது கருணையின் பெருமையைப் பெரிதும் புகழ்ந்துரைப்பனவே யாதலின். அவை குற்றமாதல் யாண்டையது என்க. இன்னோரன்ன வற்றைக் குற்றமெனின், தேவாரத் திருமுறையுள் இறைவனைப் ``பித்தா`` என்றும். ``மதியுடையவர் செய்கை செய்யீர்`` என்றும் (தி.7. ப.1.பா.1;ப.5.பா.3.) பிறவாறும் வந்தனவும், இங்கும்,
``வெங்கரியின் - உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்
சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
எரிப்பிச்சன்`` (தி.8 நீத்தல் விண்ணப்பம்.49)
என வந்தனவும், பிறவும் எல்லாம் குற்றமாயொழியும். அவை யெல்லாம் சிறிதே கடுமையுடையன; இஃது அன்னதன்றெனின், `இறைவனிடம் சிறு குற்றங்களைச் செய்தல் பிழையன்று` என்பது பட்டு முறைமையன்றாமென்றொழிக.
`என்னை இங்ஙனம் முதுக்குறைவு எய்தினாளாக ஊரவர் பலரும் சொல்லுமாறு வந்து கலந்த தலைவனை மீட்டும் அவ்வாறேயாக வருமாறு சென்று ஊது` என்கின்றாளாகலின், ``நானார்`` என்றது முதலியவை, `சென்று ஊதாய்`` என்பதனோடு இயைந்து நிற்றல் அறிக.
`ஊன் ஆர் தலை, உடை தலை` என்க. உடைதல் - சிதைதல். தலை ஓடு சிதைவில் வழி, பலிப்பாத்திரமாதற்கு ஏலாமை உணர்க. ``கமலம்`` என்றது, உருவக வகையால், திருவடியை உணர்த்திற்று. `கமலத்தே` என்னும் சாரியை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 3

தினைத்தனை உள்ளதோர்
பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும்
பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக
ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! நீ, மிகவும் சிறிதாகிய மலர்த்தேனை உண்ணாமல், நினைத்தல், காண்டல், பேசுதல் என்னும் இவற்றைச் செய்கிற, எல்லாக் காலங்களிலும் வலிய எலும்புகளும் உருகும்படி இன்பத்தேனைப் பொழிகின்ற கூத்தப்பிரானிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``பூவினில்`` என்றதனை முதலிற் கொள்க. உள்ளது - உள்ளதாகிய. ஓர் - சிறிய. ``உண்ணாதே``, `உண்ணாதை` என்பதன் மரூஉ. ஆனந்தத் தேன், உருவகம். குனிப்பு - நடனம். `என் சொற் கேட்பின், நின் முயற்சியினும் நீ பெரும்பயன் எய்துவாய்` என்பாள் இவ்வாறு கூறினாள். இதனுள், `பூ` என்றது உலகத்தையும், `தினைத் தனை உள்ள தோர் தேன்`` என்றது, அதன்கண் உள்ள சிற்றின்பத்தை யும் குறித்து நிற்றல் காண்க. இதனானே, திருவருள் பெற்ற பின்னரும் ஆன்மபோதம் உலக இன்பத்தை வேம்பு தின்ற புழுப்போல (சிவஞானபோதம். சூ.9.அதி.3.) மீண்டும் நோக்குதல் உண்மை பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! கண்ணப்பனது அன்பு போன்ற அன்பு என்னிடத் தில்லையாதலைக் கண்டும், என்மீதுள்ள பெருங் கருணையால் வாவென்று கூவியாட்கொண்ட சிவபெருமானிடம் சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

கண்ணப்பன், கண்ணப்ப நாயனார். அவரது வரலாறு நன்கறியப்பட்டது. `அவர்` இறைவனுக்குச், செய்தனவெல்லாம் அடியராவார்க்குச் சிறிதும் ஒவ்வாதனவேயாயினும் இறைவன் அவ்வொவ்வாச் செயல்களை நோக்காது அவரை மகிழ்ந்தேற்றுக் கொண்டது, அவரது ஒப்புயர்வற்ற அன்பு கருதியேயாம்; அங்ஙன மாக, என்னிடத்து உள்ள ஒவ்வாச் செயல்களை நோக்காது என்னை அவன் ஆட்கொள்ள வேண்டுமாயின், அவரது அன்புபோலும் அன்பு என்னிடத்தில் உண்டாதல் வேண்டும்; அஃது இல்லையாகவும், என்னை அவன் ஆட்கொண்டது வியப்பினும் வியப்பே` என்பது இத் திருப்பாட்டிற் குறிக்கப்பட்டது.
`அன்பு` எனப் பின்னர் வருகின்றமையின், `கண்ணப்பன்` என்றதும், ஆகுபெயரால், அவரது அன்பினையே குறிக்கும். ``என் ஒப்பு இல் என்னையும்`` என்றது, `குற்றம் புரிதலில் எனக்கு நிகர் வேறொருவர் இல்லாத என்னையும்` என்றபடி.
``உன்னைஎப் போதும் மறந்திட்
டுனக்கினி தாயிருக்கும்
என்னைஒப் பார்உள ரோசொல்லு
வாழி இறையவனே`` (தி.4.ப.112 பா.4).
என்ற அப்பர் திருமொழியை நோக்குக.
``வண்ணம் பணித்து`` என்பது வலிந்து நின்றது; `உய்யும் வகையை அருளிச்செய்து` என்பது பொருள். எல்லாரும், `வண்ண` எனச் செயவெனெச்சமாக்கி உரைத்தார்: இஃது அங்ஙனம் என ஆமாறு இன்றென்க. ``வா என்ற`` என்றது. `என்பால் வருக என அழைத்துத் தனக்கு அடிமையாக்கிக் கொண்ட` என்றவாறு, ``வருக என்று பணித்தனை`` (தி.8 திருச்சதகம்-41) என முன்னருங் கூறினார். சுண்ண நீறு - நீற்றுச் சுண்ணம்; `திருநீற்றையே நறுமணப் பொடியாகப் பூசிக் கொள்பவன்` என்றபடி. பொன் - அழகு, தலைவி கூற்றில் இது, `முன்பு அன்புடையேனாய்த் தோன்றிய அவர்க்கு யான் இன்று அன்பில்லாதவளாய்த் தோன்றுகின்றேன்` என்னும் கருத்தினதாம்.

பண் :

பாடல் எண் : 5

அத்தேவர் தேவர்
அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப்
புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென்
பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.

பொழிப்புரை :

அரசவண்டே! அந்தத் தேவரே தேவர் என்று பொய்த்தேவரைப் புகழ்ந்து பேசிப் புலம்புகின்ற இவ்வுலகத்தில் என்பிறவித் தொடர்பு சிறிதும் இல்லாமல் ஒழியும்படி நான் பற்றி நிற்கின்ற மெய்த் தேவனாகிய சிவபிரானுக்கே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``தேவர், அவர்`` என்பன உயர்வின்கண் வந்த பன்மை. அத்தேவர் தேவர் - அந்தக்கடவுளே முதற்கடவுள். ``அவர்`` என்றது, முன்னர்க் கூறியவரைச் சுட்டியதன்று; வேறொருவரைச் சுட்டியதாம்; ``என்று இங்ஙன்`` என்றது, `என்று இவ்வாறு ஒரோவொரு கடவுளைச் சுட்டி` என்றவாறு. பொய்த்தேவு பேசி - பொய்யான கடவுட் டன்மையைக் கூறி. தேவு - கடவுட்டன்மை. `அவரெல்லாம் முதற் கடவுளராகாமை, வேதங்களாலும், புராணங்களாலும் இனிது விளங்கிக்கிடப்பது` என்பது திருவுள்ளம். பற்று, `பத்து` எனத்திரிந்தது. பற்று ஏதும் இல்லாது - வேறொரு துணையும் இல்லாது தான் ஒருவனுமே துணையாக. பற்றுஅற - எனது உலகப்பற்று நீங்கும் வண்ணம், `தேவர் தேவர்`` என்றது, `தேவர்க்குத் தேவர்` என்னும் பொருட்டாய், `முதற்கடவுள்` எனப்பொருள் தந்து, ``மெய்`` என்ற அடைபெற்று, `உண்மை முதற் கடவுள்` என்றவாறாயிற்று. `பலரும் பொய்த்தேவு பேசிப் பிறவிக் கடலினின்றும் ஏறமாட்டாது புலம்பு கின்ற இப்பூதலத்தே, நான் மெய்த்தேவை உணர்ந்து பற்றிக் கரை யேறும் பேறுடையனாயினேன்` என மகிழ்ந்தருளிச்செய்தவாறு, தலைவி கூற்றில் இது, வேற்று வரைவை விரும்பாமையைக் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 6

வைத்த நிதிபெண்டீர்
மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற்
பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக்
கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.

பொழிப்புரை :

அரசவண்டே! செல்வம், மாதர், மக்கள், குலம், கல்வி என்று பிதற்றித்திரிகின்ற இந்தப் பித்தவுலகில், பிறப்பு இறப்பு என்கிற மனவிகாரக் கலக்கத்தை எனக்கு ஒழித்தருளின ஞானவுரு வனாகிய இறைவனிடத்திற்சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

`அச் சித்த விகாரம்` எனச் சுட்டு வருவித்துரைக்க. விகாரம் - திரிபு; மாற்றம். `விகாரமாகிய கலக்கம்` என்க. கலக்கம் - திகைப்பு. பிறப்போடு இறப்பு என்னும் கலக்கம் - பிறப்பிற்கும், இறப் பிற்கும் காரணமாகிய கலக்கம். வித்தகம் - திறல்; இது, பிறர் இது செய்யமாட்டாமை உணரநின்றது. ``தீரா நோய் தீர்த்தருள வல்லான் றன்னை`` (தி.6.ப.54.பா.8) என்று திருநாவுக்கரசரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 7

சட்டோ நினைக்க
மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ
கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித்
தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! மனத்துக்கு அமுதம் போலும் சிவ பெருமானை நினைத்தால் எமக்குச் சேதமுண்டாமோ? உண்டாகாது. ஆதலால், அவனை மறவேன். அவனை நினைத்தற் கிசையாத துட்டரை யாம் காணவும் அருவருப்போம். அந்தப் பெரியோனிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

`சங்கரனைச் சட்டோ நினைக்க மனத்து அமுதாம்; ஆதலின் அவனது திருவடியை மறப்பேனோ` என்க.
`சட்ட` என்பது, `சட்டோ` எனத் திரிந்து நின்றது.
``சுட்டி யுணர்வதனைச் சுட்டி அசத்தென்னச்
சட்ட இனியுளது சத்தேகாண்``
(சிவஞானபோதம் - சூ - 9. அதி - 2.) என்பதன் உரையில், ``சட்ட என்பது செப்பப் பொருட்டாயதோர் அகரவீற்றிடைச் சொல்; அது, `சட்டம்` என இழிவழக்கில் மகரவீறாய் மரீஇயிற்று` என மாபாடியம் உடையார் உரைத்தமை காண்க.
`சங்கரன்` என்பது, `இன்பத்தை செய்பவன்` என்னும் பொருளதாதலின், `உள்ளத்தில் அமுதம் ஊற்றெடுக்கச் செய்பவன்` என்பதனைக் கூறுமிடத்தில் இறைவனை அப்பெயராற் குறித் தருளினார். `கெட்டேன்` என்பது, அவலக் குறிப்பு உணர்த்துவதோர் இடைச்சொல். இதனை, ``அத்தனுக் கென்கொல் கெட்டேன் அடுத்தது`` (தி.12. பெ.புரா.கண்ணப்பர். 168.) என்றாற்போல் வனவற்றிற் காண்க. ஒட்டாத - அப்பெருமானிடத்து உள்ளம் பொருந்தாத. ``பாவி`` என்றது பன்மை யொருமை மயக்கம். தொழும்பர் - அடிமைகள். எல்லாரும் இறைவன் அடிமைகளே யாதலின், அவர் எல்லாரையும் தாங்கும் தன் கடனைச் செய்து நிற்கின்றான் இறைவன். ஆயினும், அவனது தாங்குதலைப் பெற்றும், தம் கடனாகிய பணியை (தி. 5. ப.19. பா.9.) அவனுக்குச் செய்யாது பிறதொழில்களைச் செய்தே காலம் கழிப்பவரை, ``பாவித் தொழும்பர்`` என்று அருளினார். உரு - பொருள். ``உருவாக` என ஆக்கம் வருவிக்க. அறியோம் - மதியோம். `சிட்டமாய` என்பதில், `அம்` என்பது குறைந்து நின்றது. சிட்டம் - மேன்மை. மேன்மையுடையாரை ஈண்டு, `மேன்மை` என்றதனை,
``இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்``
(குறள் - 627.) என்புழி, மேலோரை, `மேல்` என்றது போலக் கொள்க. கொள்ளவே, `சிட்டாய சிட்டன்` என்பது, `மேன்மையுடையாருள் மேன்மையுடையான்` என்றவாறாயிற்று. `பாவித் தொழும்பர்`` என்றது, தலைவி கூற்றில், இயற்பழித்தலும், தூது செல்லாமையும் உடைய தோழியைக் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 8

ஒன்றாய் முளைத்தெழுந்
தெத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை
நாய்சிவிகை ஏற்றுவித்த
என்றாதை தாதைக்கும்
எம்மனைக்கும் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! பிரபஞ்சத்திற்கு முதற்பொருளும், பிரபஞ்சரூபியும், ஒன்றுக்கும் பற்றாத சிறியேனைத் தன் அடியார் நடுவில் இருக்கச் செய்த என் தந்தையும், என் குடும்பத்திற்குத் தலைவனும், அழியாத செல்வமுடையவனுமாகிய சிவபெருமானிடத்துச் சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

`முளைத்தெழுந்து` எனவும், ``கவடுவிட்டு`` எனவும் வந்தமையின், ``ஒன்றாய்`` என்றது `ஒருமரமாய்` எனக் குறிப்புருவகமாயிற்று. இறைவன் தன்னியல்பில் ஒருவனேயாய் இருந்தும், உலகத்தைத் தொழிற்படுத்துதற்பொருட்டு அளவிறந்த வடிவும், பெயரும் உடைவனாய்த் தோன்றலின், ``ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு`` என்றார். `தம்மை ஆட்கொண்டதும் அத்துணைச் செயல்களுள் ஒன்று` என்றற்கு இதனை எடுத்துக் கூறினார். நன்று ஆக வைத்து - நன்மை உண்டாகும்படி திருத்தி. ``ஏற்று வித்த`` ``ஏற்றுவித்தது போலச் செய்வித்த`` என்னும் பொருட்டாக லின், அஃது, `என்னை` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
தாதை தாதை - தந்தைக்குத் தந்தை. அன்னையை வேறு கூறினார், அவளது குடிக்கும் பெருமானாயினமைபற்றி. ஒருவர்க்குத் தந்தைவழி, தாய்வழி இரண்டும் சிவநெறி வழியாதல் அருமை என்பதனை,
``மரபிரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையராய்``
(தி.12 திருஞான. 17.) என்ற சேக்கிழார் திருமொழியான் அறிக. குன்றாத செல்வம், அறிவும் இன்பமும்; இவற்றை `அருள்` எனினும் இழுக்காது.

பண் :

பாடல் எண் : 9

கரணங்கள் எல்லாங்
கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று
சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்பென்
றிவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.

பொழிப்புரை :

அரசவண்டே! கரணங்களை எல்லாம் கடந்து நின்றவனும், தன் திருவடியை அடைதலும் என் இறப்புப் பிறப்புக் களை ஒழித்தவனும், கருணைக்கடலும் ஆகிய சிவபெருமானிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``கரணங்கள் எல்லாம்`` என்றது, ஞானேந்திரியம், கன்மேந்திரியங்களாகிய புறக்கரணங்களும், மனம் முதலிய அந்தக் கரணங்களும் ஆகிய அனைத்தும் அடங்கவாம். அராகம் முதலிய உள்ளந்தக் கரணங்களையும் குறித்தல் பொருந்துவதே. ``மயக்கு`` என்றது இங்கு இளைப்பினை. ``இரண்டின் மயக்கு`` என்ற ஆறாவதன் தொகை, `வாளது தழும்பு` என்பதுபோலக் காரியக் கிழமைப் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 10

நோயுற்று மூத்துநான்
நுந்துகன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செல்வம்
நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை
ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! பிறவிப் பிணியை அடைந்து முதிர்ந்து, இங்கு இருந்து - நான் தாய்ப் பசுவால் தள்ளப்பட்ட கன்று போல இவ்வுலகத்திலிருந்து வருந்தி நின்ற என்னைத் தாய் போலக் கருணை செய்தாண்டருளின இறைவனிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``நான் நுந்து கன்றாய் இங்கிருந்து`` என்றதனை முதலிற் கூட்டுக. ``உற்று, மூத்து`` என்ற எச்சங்கள், `அறியா`` என்றதனோடு முடிந்தன. நுந்துகன்று - தாய்ப்பசுவால் உதைத்துத் தள்ளப்பட்ட கன்று. ``செல்வம்`` என்றதன் பின், `போல` என்னும் உவம உருபு விரிக்க. ``குணுங்கர்நாய் பாற்சோற்றின் - செவ்வி கொளல் தேற்றாது`` (நாலடி-322), ``பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர் - எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்`` (நாலடி-345) என்றாற்போல்வன, நாய் நல்லனவற்றை அறியாமையைக் குறித்தல் காண்க. ``நாயுற்ற செல்வம் போல`` என்றாராயினும், `செல்வம் உற்றநாய் அதன் சிறப்பை அறியாதவாறுபோல` என்பதே கருத்தாம். `நயந்து` என்றதனை, `நயப்ப` எனத் திரித்து, உவம உருபாக்குக. அறியாதது, இறைவன் செய்த திருவருள் நலத்தையாம். ``அறியா`` என்றதனை `அழியா` எனப் பாடம் ஓதுதல் பொருந்துவது போலும். ``வண்ண மெல்லாம் சென்று ஊதாய்`` என இயைக்க. தாய் - தாயது தன்மை; பேரருள். `ஒளி` எனப் பொருள்தரும், `தேயு` என்னும் வட சொல்லின் ஈற்று உகரம் தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 11

வன்னெஞ்சக் கள்வன்
மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக்
கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னந் திளைக்கும்
அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! வலிய கல்லை நிகர்த்த மனத்தை உடையவனென்று வெறுக்காமல் என் வன்மனத்தை உருக்கித் தன் கருணையினால் என்னை ஆண்டு கொண்டருளின தில்லையம்பல வாணனது பொன்போலும் திருவடியின் கண்ணே சென்று ஊது வாயாக.

குறிப்புரை :

மன வலியன் - மனத்தால் வலியன். `வலிய மனம் உடையவன்` என்பது கருத்து. `கள்வன், வலியன்` என்பன ஆண்பாற் படர்க்கைச் சொல்லாயினும், தலைவி கூற்றில் தன்மை யொருமைச் சொற்களாகக் கொள்ளப்படும். `பொய்கைகளில் அன்னப்பறவைகள் ஆடி இன்புறும் தில்லை` என்க.

பண் :

பாடல் எண் : 12

நாயேனைத் தன்னடிகள்
பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப்
பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென்
செய்பணிகள் கொண்டருளுந்
தாயான ஈசற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! நாயினேனைக் கொண்டு தன்னைப் புகழ்வித்துக் கொண்டவனும், பேயினேனது மனக் குற்றங்களைப் பொறுக்கின்ற பெருமையுடையவனும் என் பணிவிடையை இகழாமல் ஏற்றுக் கொண்டருள்கின்ற தாய் போன்றவனும் ஆகிய இறைவனிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

இறைவன் அடிகளை, `கோலமார்தரு பொதுவினில் வருக` (கீர்த்தி - 128.) என இங்கு நிறுத்திச் சென்றமை யானே அவர் அவனைப் பாடும் நிலை உண்டாயினமைபற்றி, ``நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்`` என்று அருளினார். இது தலைவி கூற்றில் வள்ளை, ஊசல் முதலியவை பாடி இரங்குதலைக் குறிக்கும்.
உள்ளப் பிழை - மனக் குற்றம்; அது, அவனது திருவருளைப் பேணாமை. தலைவி கூற்றில் குறிவழிச் செல்லாமை முதலியனவாம். இகழ்ச்சிக் குறிப்பிடைச் சொல்லாகிய `சீ` என்பது, பெயர்த்தன்மைப் பட்டு நின்றமை மேலே (தி.8 திருவெம்பாவை. பா.2.) குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நான்தனக் கன்பின்மை
நானும்தா னும்அறிவோம்
தானென்னை ஆட்கொண்ட
தெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும்
அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.

பொழிப்புரை :

அரசவண்டே! இறைவனிடத்து நான் அன்புடையேன் அல்லாமை நானும் அவனும் அறிவோம். மற்றையர் அறியார். அவன் என்னை ஆட்கொண்டதை எல்லாரும் அறிவார். ஆதலால் என்னிடத்துண்டாகிய கருணையும் அவனதே. அவன் என்னை வந்து சேரும்படி நீ சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

``அறிவோம்`` என்றதன்பின், `அவ்வாறாகவும்` என்பதும் ``அறிவார்`` என்றதன்பின், `ஆகலான்` என்பதும் ``அங்கு`` என்றதன்பின், `இன்றும்` என்பதும் வருவிக்க. ஆன - அன்று உண்டான. ``ஆன கருணையும்`` என்ற உம்மை சிறப்பு. அங்கு - அவ்வாறு. ``தான்`` என்றது அசைநிலை. `கோன் அவனே` என மாற்றிப் பொருள்கொள்க.

பண் :

பாடல் எண் : 14

கருவாய் உலகினுக்
கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல்
மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில்
அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! உலகத்துக்குப் பிறப்பிடமாய், அப்பாலாய், இவ்விடத்து எம்பெருமாட்டியோடும் எழுந்தருளி அருவாய் அந்தணனாகி, என்னை அடிமைகொண்ட அழகிய சிவ பெருமானிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

கரு - முதல். ``உலகினுக்கு`` என்றது தாப்பிசையாய், முன்னும் சென்றியையும். இப்புறம் - இவ்விடம்; நிலவுலகு. மாதி னொடும் வந்தாளுதல்பற்றி மேலே (தி. 8. திருவண்டப்பகுதி. அடி 63-65. உரை) கூறப்பட்டது. அரு வாய் மறை - அரிய, உண்மையான வேதம். திரு ஆன தேவன் - மங்கலம். என்றும் நீங்காது பொருந்தி யுள்ள இறைவன்; `சிவன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 15

நானும்என் சிந்தையும்
நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலும்
தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும்
மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! சிவபெருமான் தானும் எம் பிராட்டியுமாக எழுந்தருளி என்னை ஆட்கொள்ளாவிடின், நானும் என் மனமும் இறைவனுக்கு உரியராதல் இயலாது. ஆதலால் ஆகாயம் முதலிய எல்லாப் பொருள்களும் தானேயாகிய சிவபெருமானது திருவடிக்கண்ணே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

எவ்விடத்தோம் - எத்துணைச் சேய்மையில் இருப் போம். அவ்வாறின்றித் தன் கருணை காரணமாக மிக அணியராம் வகை என்னை ஆண்டு கொண்ட அப்பெருமானது சேவடிக்கே சென்று ஊதாய்` என்க. சிந்தை-மனம். அதனை வேறுபோல அருளினார், தம் வழிப்படாது தன்வழியே செல்லுதலும் உடைமை பற்றி. இது தலைவி கூற்றிற்கும் பொருந்தும், ``பிரான்`` என்றதற்கு, `அப் பிரான்` எனச் சுட்டு வருவித்துரைக்க. தேன் உந்து - தேனைச் சொரிகின்ற; என்றது குறிப்புருவகம்.

பண் :

பாடல் எண் : 16

உள்ளப் படாத
திருவுருவை உள்ளுதலும்
கள்ளப் படாத
களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்எம்
பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! ஒருவராலும் நினைத்தறியப்படாத தன் திருவுருவத்தை நான் நினைத்தலும், கருணை வெள்ளமாகிய சிவபிரான் என்னைத் தனித்தடிமை கொண்டானாதலால், அந்த உபகாரியிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

உள்ளப்படாத - நினைக்கவாராது மறைந்து நிற்கின்ற. இது, தன்முனைப்பின்வழி நினைக்குமிடத்தாம். உள்ளுதல், அருள்வழி நின்று நினைத்தலாம். அவ்விடத்து அவன் கள்ளந்தீர்ந்து வெளிப்பட்டு இன்பம் தருதலை, ``கள்ளப்படாத களிவந்த வான் கருணை வெள்ளப் பிரான்`` என்று அருளினார். வேறே - தனியே; என்றது, தவம் முயலாதிருக்கும் பொழுதும் தானாகவே வந்து ஆண்டமையை. `கொள் அப்பிரான்` என்க.

பண் :

பாடல் எண் : 17

பொய்யாய செல்வத்தே
புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்
கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே
அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! பொய்யாகிய செல்வத்தின் கண்ணே சென்றழுந்தி அதனை மெய்யாகிய செல்வமென்று மதித்துக் கிடந்த என்னை, அடிமை கொண்ட ஐயனே! என் அரியவுயிரே! அம்பலவனே! என்று என்னால் தோத்திரம் பண்ணப்பட்ட அவனது செந்தாமரைமலர் போலும் திருவடிக்கண்ணே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

பொய்யாய - நிலையாத. ``செல்வத்தே புக்கழுந்தி`` என்றதனால், `அடிகள் பெருஞ்செல்வத்திருந்தார்` என்பது பெறப் படும். படவே, அமைச்சராயிருந்தார் என்றல் பொருந்துவதேயாயிற்று. தன் சொல்லை அவ்வாறே கூறப் பணிக்கின்றாளாதலின், ``என்னை ஆட்கொண்ட ஐயா! என் ஆருயிரே! அம்பலவா என்று ஊதாய்`` என்றாள்.

பண் :

பாடல் எண் : 18

தோலும் துகிலுங்
குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும்
பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க
வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! தோல், துகில், குழை, தோடு, நீறு, சாந்து, கிளி, சூலம், வளை என்பவற்றையுடைய இறைவனது திருக் கோலத்தை நோக்கிக் குளிர்ந்து ஊதுவாயாக.

குறிப்புரை :

இத் திருப்பாட்டு, இறைவன் மாதொரு கூறனாய் இருக்கும் நிலையை விளக்குகின்றது. தோல், குழை, வெள்ளை நீறு, சூலம் இவை வலப்பாகத்துக் காணப்படும் ஆணுருவத்தில் உள்ளவை. துகில், தோடு, சாந்து, வளை இவை இடப்பாகத்துக் காணப்படும் பெண்ணுருவில் உள்ளவை. பைங்கிளியும் அம்மை கையில் உள்ளதே. ஆதலின் அதனை, `பைங்கிளியும் தொக்கவளையும்` எனக் கூட்டி உரைக்க. தொக்க - கூடிய; `மிகுதியான` என்றபடி. இது, முதற்பொருள் சிவமும், சத்தியும் என இருதிறப்பட்டு இயைந்து நிற்கும் இயற்கை வடிவமாகலின், ``தொன்மைக் கோலம்`` என்றும், இதனைக் காணின் இன்பம் தானே பெருகும் என்றற்கு, ``குளிர்ந்து`` என்றும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 19

கள்வன் கடியன்
கலதிஇவன் என்னாதே
வள்ளல் வரவர
வந்தொழிந்தான் என்மனத்தே
உள்ளத் துறுதுயர்
ஒன்றொழியா வண்ணமெல்லாம்
தெள்ளுங் கழலுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! என்னைக் கள்வனாகிய மூதேவி என்றிகழாமல் வள்ளலாகிய சிவபெருமான் என் மனத்தின் கண்ணே எழுந்தருளினான். ஆதலால் என் மனத்துயரம் எல்லாவற்றையும் அவனது திருவடிக் கண்ணே சென்று விண்ணப்பம் செய்து ஊதுவாயாக.

குறிப்புரை :

கள்வன் - வஞ்சகன். கடியன் - கடுமையுடையவன். கலதி - முகடி (மூதேவி). இது `நற்குணம் இல்லாதவன்` என்னும் பொருட்டு. இவை இப்பொருளவாயினும். தலைவி கூற்றில், முதல் இரண்டும் தன்மைக்கண் வந்த குறிப்பு வினைப் பெயராகவும், ``இவன்`` என்றது, `ஈவன்` என்னும் தன்மை வினை முற்றின் குறுக்கமாகவும் கொள்ளப்படும். ``வர வர`` என்றது, `மெல்ல மெல்ல` என்னும் பொருளதாய் நின்றது. `எல்லாவற்றையும் தெள்ளும்` என்க. தெள்ளுதல் - ஆராய்ந்து களைதல்.

பண் :

பாடல் எண் : 20

பூமேல் அயனோடு
மாலும் புகலரிதென்
றேமாறி நிற்க
அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு
நன்றாப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ. 

பொழிப்புரை :

அரசவண்டே! பிரமவிட்டுணுக்கள் தடுமாறவும், நான் இறுமாந்திருக்கவும், நாய்க்கு ஆசனமிட்டாற்போல என்னைப் பொருள்படுத்தி அடிமை கொண்ட நெருப்புப் போலும் திருமேனியை யுடைய சிவபெருமானிடத்தே சென்று ஊதுவாயாக.

குறிப்புரை :

புகல் - கிட்டுதல். அயன் மாலும் முடியையும், அடியையும் கண்டுவிட இயலும் என்று எண்ணிய தம் எண்ணத்தை இழந்தாராகலின், ``ஏமாறி நிற்க`` என்றார். ஏமாறுதல் - எண்ணம் இழத்தல். ``நாய்மேல் தவிசிட்டு`` என்றது, `அதுபோலும் செய்கையைச் செய்து` என்றபடி. நன்றாக - பெரிதும். தீமேனி - நெருப்புப் போலும் திருமேனி.
சிற்பி