திருவாசகம்-திருத்தெள்ளேணம்


பண் :

பாடல் எண் : 1

திருமாலும் பன்றியாய்ச்
சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம்
ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.

பொழிப்புரை :

திருமாலும் வராகவுருவங் கொண்டு நிலத்தைப் பிளந்து சென்றும் அறியாத திருவடியை யாம் அறிந்துய்யும்படி ஒரு அந்தணனாய் எழுந்தருளி எம்மை ஆண்டு கொண்டவனும், திரு நாமங்கள், வடிவங்கள் இல்லாதவனுமாகிய சிவபெருமானுக்கு ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

``திருவடியை உரு அறிய`` என்றதில் ஐயுருபு, `குடும் பத்தைக் குற்றம் மறைப்பான்` (குறள் - 1029) என்பதிற்போல வந்தது. `திருவடியை அறிய` என்று கூறாது, ``உருவறிய`` என்றார். `நன்குணரப் பெற்றேம்` என்பது உணர்த்துதற்கு. நாமம் - பெயர். உருவம் - வடிவம். இவை இரண்டையுங் கூறவே, அவற்றிற்குரிய தொழிலும் உடன் கொள்ளப்படும். ஒன்றும் - சிறிதும். இறைவன், யாதொரு வடிவும், பெயரும், தொழிலும் இன்றி நிற்றல், உலகத்தை நோக்காது தன்னியல்பில் நிற்கும் நிலையிலாம். இதுவே அவனது `உண்மை இயல்பு - சொரூபலக்கணம்` எனப்படுவது. இவ்வியல்பில் நிற்பவன் உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலையில் அளவற்ற வடிவும், பெயரும், தொழிலும் உடையவனாய் நிற்றலின், `அவ னுக்கே ஆயிரம் திருநாமம்பாடி` என்றார். இது, `பொதுவியல்பு` எனப் படும் தடத்தலக்கணம். நாமம் கூறவே, ஏனைய வடிவும், தொழிலும் தாமே பெறப்பட்டன. `கொட்டுவாம்` என்பதில் முதனிலையீற்று உகர மும், இடைநிலை வகரமும் தொகுத்தலாயின. ஓகாரம், அசைநிலை. இவை, பின்னர் வருகின்ற `ஆடாமோ` என்றதற்கும் ஒக்கும். இவற் றிற்கு இவ்வாறே நன்னூற் காண்டிகையுரையுள் இலக்கணங் கூறினார் நாவலர். ஓகாரத்தை எதிர்மறை எனக் கொண்டு, `கொட்டாம், ஆடாம்` என்னும் எதிர்மறை வினைகள், பின்னர் வந்த ஓகாரத்தொடு கூடி உடன்பாட்டுப் பொருளைத் தந்தன எனக் கொள்ளின், அவ்வாறு வருதல் தேற்றத்தின்கணாதலானும், ஈண்டு ஐயமின்மையின் தேற்றுதல் வேண்டாமையானும் அவ்வாறுரைத்தல் பொருந்தாதாம்.

பண் :

பாடல் எண் : 2

திருவார் பெருந்துறை
மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின்
யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும்
ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறையில் எழுந்தருளின சிவ பெருமான் என் பிறவியை வேரறுத்தபின், யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை. அருவாகியும் உருவாகியும் நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

கரு - முதல், பிறவிக்கு முதல் - பாசம். `அதனை வேரோடு அறுத்தான்` என்க. கண்டது - பொருளாக அறிந்தது ``அரு`` என்றது, `அகளம்` என்னும் பொருளிலும், ``உரு`` என்றது, `சகளம்` என்னும் பொருளிலும் வந்தன. அவை முறையே அவனது உண்மை இயல்பு, பொதுவியல்புகளை உணர்த்தும். அகளமாய் உள்ளவன், சகளமாய் வருதல் அருள்காரணத்தினாலாம். ஓர் இடத்திருந்து பாடுங்கால், முன்பு தாம் கண்டு வணங்கிய இடத்தும், வணங்க நினைக்கும் இடத்தும் உள்ள பெருமானது கோலத்தை நினைந்து பாடுதல் அடியவர்க்கு யாண்டும் இயல்பாதல், தேவாரத் திருமுறை களால் நன்கறியக் கிடத்தலின், ஈண்டும் அவ்வாறே, `திருவாரூர் பாடி` என்று அருளினார். திருக்கோவையுள்ளும் இவ்வாறு பல தலங்களும் கூறப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 3

அரிக்கும் பிரமற்கும்
அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்தன்றி
நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும்
என்பதுகேட் டுலகமெல்லாம்
சிரிக்குந் திறம்பாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

திருமால் பிரமன் முதலியோர்க்கும் இன்னபடி யென்று தெரிவிக்கலாகாமல் நின்ற பரமசிவமே எழுந்தருளி நம்மை மனமுருகப் பண்ணி ஆண்டுகொள்ளும் என்னும் செய்தியைக் கேட்டு உலகத்தாரெல்லாரும் நகைக்கும் விதத்தைப்பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

தெரித்தல் - முற்றும் உணர வகுத்துக் கூறுதல். `இது கூடாது` எனவே, ஒரு சிறிதுணர்தல் பெறப்பட்டது. படி - நிலைமை. படித்து - நிலைமையையுடையது. ``சிவம்`` என்றது, `சிவமுதற் பொருள்` என்றவாறு. `நம்மை` என்பது, இசையெச்சத்தால், `ஒன்றற் கும் பற்றாத நம்மை` எனப் பொருள் தந்தது. `உருக்கிற்று, பணி கொண்டது` என இறந்த காலத்தாற் கூறற்பாலவற்றை, ``உருக்கும், பணிகொள்ளும்`` என எதிர்காலத்தால் அருளினார், அவை அச் செயலளவில் நில்லாது, `இன்னோரன்னவும் அம்முதற்பொருட்கு இயல்பாம்` என அதனது தன்மை உணர்த்தி நிற்றற்கு. எனவே, உலகமெல்லாம் சிரித்தல், `அப்பெரும்பொருட்கு இஃது இயல்பாமோ` எனக் கருதி என்பதாயிற்று. பரம்பொருளினது பேரருள் தன்மையை உலகர் உணராராகலின், இங்ஙனம் கருதிச் சிரிப்பாராயினர் என்க. இதனானே, `பரம்பொருளால் ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்ம னோர்க்கு இயல்வதோ என அயர்த்தொழியாது, அந்நிலையைப் பெறும் தவத்தின்கண் உறைத்து நிற்றல் வேண்டும்` என்பதும் பெறப் பட்டது. இவ்வுண்மையே, திருநாவுக்கரசரது திருக்கயிலை யாத்திரை யுள் இறைவன் முனிவர் வடிவிற் போந்து, ``கயிலை மால்வரையாவது காசினி மருங்கு - பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற் கெளிதோ``, ``மீளும் அத்தனை உமக்கினிக் கடன்`` என அயர்ப்பித்த வழியும் நாவுக்கரசர் அயராது, ``ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண் டல்லால் - மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்`` என மறுத்தவிடத்து இனிது விளங்கிநிற்கின்றது. புராண இதிகாசங்களிலும் இதுபோலும் நிகழ்ச்சிகள் கூறப்படுதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 4

அவமாய தேவர்
அவகதியில் அழுந்தாமே
பவமாயங் காத்தென்னை
ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர்
நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமான வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

பிறவியை ஒழித்து என்னை ஆண்டருளின சிவபெருமான் தனது புதுமையாகிய ஒளியை எனக்குக் காட்டியருளு தலும், நாம் பயனற்ற தேவர்களுடைய துர்க்கதிகளில் அழுந்தாமல் சிவரூபமான விதத்தைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

அவம் - பயன் இன்மை. பிறவி நீங்கப் பெறுதலே, பயன்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த பயனாகலானும், சிவபெருமானை யன்றிப் பிற தேவராதல், அவர்தம் பதவியாதல் அதனை நீக்க மாட்டாமையானும் தேவரையும் அவர்தம் பதவியையும், ``அவமாய தேவர்` என்றும் ``அவகதி`` என்றும் அருளிச்செய்தார். பவம் - பிறப்பு. மாயம் - நிலையற்ற நிலைமை; சுழற்சி என்றபடி. காத்து - அஃது அணுகாவகை தடுத்து. நவமாய செஞ்சுடர் - புதிதாகிய செவ்விய ஒளி; என்றது சிவஞானத்தை. ``நாம்`` என்றதும், `நாம்` என்னும் உணர்வை; இதுவே, `செருக்கு` என்றும், `தன் முனைப்பு` என்றும் சொல்லப்படுவது. சிவமாயினமை, சிவத்தினது எண் குணங்களும் தம்மாட்டு விளங்கப் பெற்றமை. ``அடுத்தது காட்டும் பளிங்குபோல்`` (குறள் - 706.) என்றபடி, அடுத்து நிற்கின்ற பொருளின் தன்மையே தன் தன்மையாகக் கொண்டு காட்டுதல் பளிங்கிற்கு இயல்பாதல்போல, அடுத்த பொருளின் இயல்பே தன் இயல்பாகக்கொண்டு நிற்றல் ஆன்மாவிற்கு உள்ள இயல்பு. அதனால், அனாதியே பாசத்தின் தன்மையை எய்திப் பாசமாகியே கிடந்த உயிர், பாசம் நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தினது எண் குணங்களும் தன்னிடத்து இனிது விளங்கப்பெற்றுச் சிவமாகியே விளங்கும் என்க.

பண் :

பாடல் எண் : 5

அருமந்த தேவர்
அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர்
உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக்
கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.

பொழிப்புரை :

திருமால், பிரமன் என்னும் அருமையாகிய தேவர்களுக்கும் அருமையாகிய பரமசிவம் உலகத்துள்ளோர் வியப் படையும் வண்ணம் மானுடவுருவமாய் எழுந்தருளி என்னை அடிமை கொண்டு என்பிறவிக் காடுவெந்து நீறாகும்படி கடைக்கணித்து என் மனம் புகுந்ததனால் எனக்குளதாகிய பெருஞ்செல்வத்தைப் புகழ்ந்து பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

`அருமருந்தன்ன` என்பது. ``அருமந்த`` என மருவிற்று. அருமருந்தை உண்ணும் அத்தேவர்` என்க. அருமருந்து - அமுதம். `தேவர், அயன், திருமால்` என்றது செவ்வெண்ணாகலானும், சிறப்புடையவரையே எடுத்து எண்ணினமையானும் ``திருமால்`` என்றதன்பின், `இவர்க்கும்` என, ஒரு பெயரும், சிறப்பும்மையும் விரிக்க. `உருவாய் வந்து` என ஆக்கம் வருவிக்க. உகப்பு - உயர்ச்சி. `தேவர்க்குக் கனவிலும் காண இயலாத பெருமான், மக்க ளுள்ளார்க்குத் தானே தோன்றி வந்து அருளுகின்றான்` என, அடிகள் பால் நிகழ்ந்த நிகழ்ச்சியால் மக்கள் உயர்வு படைத்தனர் என்க. இது, தலைவி கூற்றிற்குப் பெரிதும் பொருந்துவதாம். கொண்டருளி - நம்மை ஆட்கொண்டருளி. கரு - பிறப்பு, கடைக்கணித்தல் - கடைக்கண்ணால் நோக்குதல். இஃது அருளுதலைக் குறிப்பதொரு பான்மை வழக்கு. இதனை, `கடாட்சித்தல், என வடசொல்லாற் கூறுவர். புகுந்த திரு - புகுந்ததாகிய நன்மை. வந்தவாபாடி - கிடைத்த வாற்றைப்பாடி.

பண் :

பாடல் எண் : 6

அரையாடு நாகம்
அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன்
பங்கொடும்வந் தாண்டதிறம்
உரையாடஉள் ளொளியாட
ஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.

பொழிப்புரை :

திருவரையில் பாம்பைக் கச்சையாகக் கட்டின சிவபெருமான் பார்வதி தேவியாரோடும் பூமியில் எழுந்தருளி, எம்மை ஆண்டருளின விதத்தைச் சொற்கள் தடுமாறவும், அவனது பேரொளி என் மனத்தில் நிறையவும், கண்களில் நீர்ததும்பவும் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

`ஆடு நாகம் அரை அசைத்த பிரான்` எனக் கூட்டுக. அசைத்தல் - கட்டுதல். வரை ஆடு மங்கை - மலையில் விளையாடிய (வளர்ந்த) நங்கை. உரை ஆட - நம் சொற்களில் பொருந்த, உள்ளொளி ஆட - ஞானம் மிக. இதன் மூன்றாம் அடியுள், கனிச்சீர் மயங்கி வந்தது. ``உரையாடஉள்`` என்றதில் டகரம் தனித்து நிற்கு மெனின், `உள்` என்பதனைக் கூனாக்குக.

பண் :

பாடல் எண் : 7

ஆவா அரிஅயன்இந்
திரன்வானோர்க் கரியசிவன்
வாவாஎன் றென்னையும்பூ
தலத்தேவலித் தாண்டுகொண்டான்
பூவார் அடிச்சுவடென்
தலைமேற்பொ றித்தலுமே
தேவான வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

திருமால், பிரமன் முதலியோர்க்கும் அருமை யாகிய பரமசிவம், ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் வலிந்தாண்டு கொண்டு, என் தலைமேல் தன் திருவடியைப் பதித்த அளவில் என் தலைக்கு ஓர் அழகுண்டான விதத்தைப் பாடித் தெள்ளேணம் கொட்டு வோம்.

குறிப்புரை :

``ஆவா` என்றது வியப்புக் குறிப்பு. அடுக்கு, விரைவுப் பொருட்டு. ``பூதலத்தே`` என வேண்டா கூறியது, இவ்வுலகின் சிறப்புத் தோன்றுதற்கு, வலித்து - ஈர்த்து. பூ ஆர் அடி - பூப்போலப் பொருந்திய பாதம். தே ஆனவா - சிவமாயினவாற்றை, இதன் கண்ணும் இரண்டாம் அடியில் கனிச்சீர் மயங்கிற்று.

பண் :

பாடல் எண் : 8

கறங்கோலை போல்வதோர்
காயப்பிறப்போ டிறப்பென்னும்
அறம்பாவம் என்றிரண்
டச்சந் தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயுந் தன்கழல்நான்
மறவா வண்ணம் நல்கியஅத்
திறம்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.

பொழிப்புரை :

ஓலைச் சுருள் போல்வதாகிய உடம்பின் பிறப்பு, இறப்புகளால் நேரிடுகிற புண்ணிய பாவங்கள் என்கிற இரண்டு அச்சங் களையும் ஒழித்து என்னை ஆண்டு கொண்டவனாகிய சிவபெருமான் தன் திருவடியை நான் மறவாதபடி அருள் செய்த அவ்விதத்தைப்பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

கறங்கு - காற்றாடி, அதன்கண் உள்ள ஓலைகள் மாறி மாறி வருதல் விரைய நிகழ்தலின், அவை, அவ்வாறு வரும் பிறப்பிறப் பிற்கு உவமையாயின.
காயம் - உடம்பு, பிறப்பும், இறப்பும் உடற் கன்றி உயிர்க் கின்மையின், ``காயப் பிறப்போ டிறப்பு`` என்றார். அறமும் பிறப்பை விளைத்தலின், அஞ்சப்படுவதாயிற்று. ``என்று`` என்ற எண்ணிடைச் சொல் ஈற்றில் நின்று, முன்னதனோடும் இயைந்தது. இரண்டு அச்சம் - இரண்டனாலும் வரும் அச்சம். ``மறந்தேயும்`` என்றது, `சோர்ந்தும்` என்றவாறு.
``துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாடொறும்``
(தி. 3. ப.22. பா.1) எனத் திருஞானசம்பந்தரும்
``துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை``
(தி.5. ப.93. பா.8) எனத் திருநாவுக்கரசரும் அருளிச் செய்தல் காண்க. துஞ்சுதல் - உறங்குதல்; `உறங்குதல்` என்பது சுழுத்தி நிலையை ஆதலானும், சுழுத்தியில் மனம், புத்தி, அகங்காரம் என்பன இல்லையெனினும், சித்தம் உண்டு என்பது உண்மை நூல்களின் துணி பாகலானும் ஈண்டுக் கூறிய நினைவெல்லாம் சித்தத்தின் தொழிற் பாட்டினையாம். உறக்கத்தின் கண்ணும் சித்தம் தொழிற்படும் என்பது, உறங்கி எழுங்காலத்து, முன்னர்த் தெளியாதிருந்த ஒன்று தெளிவுற்று விளங்குதல் பற்றியும் அறிந்துகொள்ளப்படும். இதனானே, `பெரிதும் விரும்பப்படுகின்ற ஒன்றனைப் பற்றிய நினைவு உறக்கத்திலும் சித்தத்தைவிட்டு அகலாது நிற்கும்` என்பதும், `அதுவே, விழித் தெழுந்தவுடன் ஏனை அந்தக் கரணங்களினும் பொருந்தி விளங்கும்` என்பதும் பெறப்பட்டன. இவையெல்லாம் பற்றியே.
``தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்``
(குறள் - 55) எனவும்,
``தம்மையே - சிந்தியா எழுவார்வினை தீர்ப்பரால்``
(தி.3. ப.54.பா.3.) எனவும்,
``எந்தையார் திருநாம நமச்சி வாய
என்றெழுவார்க் கிருவிசும்பில் இருக்கலாமே``
(தி.6.ப.93.பா.10) எனவும்,
``சிந்தித்தெழு வார்க்குநெல் லிக்கனியே``
(தி.7.ப.4.பா.3) எனவும்,
``தொழுதெழுவார் வினைவளம் நீறெழ``
(தி.8 திருக்கோவை. 118) எனவும் திருவாக்குக்கள் எழுந்தன. இறைவனையன்றிப் பிறிதொன்றிற் பற்றில்லாதவர்க்கன்றித் துயிலெழுங்காலத்து இறைவனைப் பற்றிய நினைவு தோன்றுதல் கூடாமை அறிக.
நல்கிய - அருள் செய்த. ``திறம்`` என்றது, கருணை. ``பாடல் பாடி` என்றது, ``உண்ணலும் உண்ணேன்`` (கலி - பாலை - 22) என்றாற்போல நின்றது. இதன் முதல் மூன்றடிகள் ஐஞ்சீராய் மயங்கின.

பண் :

பாடல் எண் : 9

கல்நா ருரித்தென்ன
என்னையுந்தன் கருணையினாற்
பொன்னார் கழல்பணித்
தாண்டபிரான் புகழ்பாடி
மின்னேர் நுடங்கிடைச்
செந்துவர்வாய் வெண்ணகையீர்
தென்னாதென் னாஎன்று
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

கல்லில் நார் உரித்தாற்போல என்னையும் தன் பெருங்கருணையினால் தனது பொன்போலும் அருமையாகிய திருவடியைப் பணிவித்து ஆட்கொண்ட எம்பெருமானது பெரும் புகழைப் பாடி அக்களிப்பால் தென்னா தென்னாவென்று தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

`உரித்தென்ன ஆண்டபிரான்` என இயையும். பணித்து - கொடுத்து`, `தென்னா தென்னா` என்பது, பாடற்கு இசை கூட்டும் முறை.

பண் :

பாடல் எண் : 10

கனவேயும் தேவர்கள்
காண்பரிய கனைகழலோன்
புனவே யனவளைத்
தோளியொடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட்
கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

தேவர்கள் கனவிலும் காண்பதற்கு அரிதாகிய திருவடியையுடைய இறைவன் உமாதேவியாரோடும் எழுந்தருளி நனவின் கண்ணே என்னை வலிந்து ஆட்கொண்ட விதத்தை மனத் தால் சிந்தித்து கண்களில் நீர் ததும்பத் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

கனவேயும் - கனவின்கண்ணேயும். ஏகாரம் பிரிநிலை; உம்மை, இழிவு சிறப்பு. புனம் - காடு. வேய் - மூங்கில், `வேயன தோளி` என இயையும். `நெஞ்சம் நயந்து` எனமாறுக.
நயத்தல் - விரும்புதல். சினம், வேலுக்கு அடை. பான்மை வழக்கால், உடையவரது சினத்தை வேலின்மேல் ஏற்றிக் கூறுப.

பண் :

பாடல் எண் : 11

கயல்மாண்ட கண்ணிதன்
பங்கன் எனைக்கலந் தாண்டலுமே
அயல்மாண் டருவினைச்
சுற்றமும்மாண் டவனியின்மேல்
மயல்மாண்டு மற்றுள்ள
வாசகம்மாண் டென்னுடைய
செயல்மாண்ட வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

உமாதேவி பங்கனாகிய சிவபெருமான் என்னை ஆட்கொள்ளுதலும் நான் அவனுக்கு அயலாம் தன்மை ஒழிந்து, சுற்றத்தாரை நீங்கி, பிரபஞ்ச ஆசை அற்று, மற்றுள்ள சொற்களெல்லாம் ஒழிந்து, என்னுடைய செயலற்றொழிந்த விதத்தைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

`கயல்போல மாண்ட கண்ணி` என்க. ``மாண்ட`` எனவும், ``மாண்டு`` எனவும் வந்தன பலவற்றுள், முதற்கண் நின்ற தொன்றும் `மாண்` என்பது அடியாகவும், ஏனையவை, `மாள்` என்பது அடியாகவும் வந்தன. அயல் - (இறைவனுக்கு) அயலாம் தன்மை; இஃது அறியாமையால் உளதாவது. அருவினைச் சுற்றம் - நீக்குதற் கரிய வினையால் வந்த சுற்றம். மக்களுட் பலர் தம்முட் சுற்றமாய் இயைதல் வினைகாரணமாகவன்றிப் பிறிதின்மையின், இவ்வாறு அருளினார். அவனியின்மேல் மயல் - உலகத்தின்மேல் கொள்ளும் மோகம். `மனம், மொழி, மெய்` என்னும் மூன்றனுள், மயல் மனத்தின் கண்ணதாகலின், ஏனைய மொழி மெய்களின் கண்ணவாகிய சொல்லையும், செயலையும். ``மற்றுள்ள`` என்றார். இவற்றில், பசுகரணம் நீங்கிப் பதிகரணம் பெற்றவாறு குறிக்கப்பட்டது. ``என்னுடைய`` என்பது கடைநிலைத் தீவகமாய், முன்னின்றவற் றோடும் இயையும். இதன் முதலடி ஐஞ்சீரடியாய் வந்தது.

பண் :

பாடல் எண் : 12

முத்திக் குழன்று
முனிவர்குழாம் நனிவாட
அத்திக் கருளி
அடியேனை ஆண்டுகொண்டு
பத்திக் கடலுட்
பதித்த பரஞ்சோதி
தித்திக்கு மாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

முனிவர் கூட்டம் முத்தியை விரும்பி உழன் றிருக்க, யானைக்கு அருள் செய்து அடியேனையும் ஆண்டு கொண் டருளி, என்னை, பத்தியாகிய கடலில் அழுந்துவித்த சிவபெருமான் எனக்கு இனிக்கும் விதத்தைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டு வோம்.

குறிப்புரை :

முத்திக்கு - வீடுபெறுதற்கு. உழன்று - வழிதேடி அலைந்து. ``வாட`` என்றது, `அவர்க்கு அருளாமல் வாடச் செய்து` என்றபடி, அத்தி - யானை. அடிகள், தம்மை`` இருகை யானை`` (தி.8 திருச்சதகம் - 41) எனக் கூறிக்கொள்வராகலின், `யானைக்கு அருள்செய்த வகையிலே எனக்கும் அருள்செய்தான்` என்றற்கு ``அத்திக்கருளி அடியேனை ஆண்டுகொண்டு`` என்றார். யானைக்கு அருள்செய்தது மதுரையிலும், மற்றும் திருவானைக்கா, திருக்காளத்தி என்னும் தலங்களிலும் நிகழ்ந்தமை வெளிப்படை. ``ஆண்டுகொண்டு பத்திக் கடலுட் பதித்த`` என்றதனான், இறைவனிடத்து அன்பு தோன்றுவது, அவன் அருள் வழியே` என்பதும், அதன்பின்னர், ``தித்திக்குமா பாடி`` என்றதனான். `அன்பினால் இன்பம் விளையும்` என்பதும் பெற்றாம்.

பண் :

பாடல் எண் : 13

பார்பாடும் பாதாளர்
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

மண்ணுலகம், பாதாளம், விண்ணுலகம் என்னும் மூன்றுலகத்தாரிடத்தும் வேறுள்ள எவ்வுலகத்தாரிடத்தும், யான் சென்று பிறவாமல் என்னை ஆட்கொண்டருளின சிவபெருமானது நேர்மையையும் சீர்பாடலையும் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

``பாதாளர்`` எனவும், ``விண்ணோர்`` எனவும் பின்னர் வருதலின் அவற்றோடு இயைய, `பாரோர்` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று என்க; மூவுலகத்தாரையும் கூறிய வாறாயிற்று.
பாடு-பக்கம். ஆர் பாடும் சாராவகை அருளி, ஒருவரிடத்தும் சென்று அவரை வேண்டிக்கொள்ளாதபடி அருள்செய்து. நேர் - செம்மை; என்றது வெளிப்பட்டு நின்றமையை. இங்கும், ``பாடல்பாடி`` என்றதற்கு, மேல் (தி.8 திருத்தெள்ளேணம். பா.8) உரைத்தாங்கு உரைக்க. இதன் முதலடிக்கண், `பாடும் விண்ணோர்` என்றதில் மகர ஒற்றுக் குறுக்கமாய் அலகுபெறா தொழிதலின், ``பாடு`` என்றதனை நேர்பசையாகக் கொள்ள, அச்சீர் மூவசைச் சீராதல் அறிக. இனி, ``பாதாளர்`` என்றதனை, ``பாதாளத்தார்`` எனப் பாடம் ஓதி, இவ்வடியையும் ஐஞ்சீரடியாக்குவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 14

மாலே பிரமனே
மற்றொழிந்த தேவர்களே
நூலே நுழைவரியான்
நுண்ணியனாய் வந்தடியேன்
பாலே புகுந்து
பரிந்துருக்கும் பாவகத்தாற்
சேலேர்கண் நீர்மல்கத்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

திருமால் முதலியோர்க்கும் அரியனாகிய சிவபெருமான் என்னிடத்தே எழுந்தருளி என் மனத்தை உருகப் பண்ணிய பெருங்கருணையை நினைந்து கண்களில் நீர்ததும்பத் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

ஏகாரங்கள் எண்ணுப்பொருள. `ஒழிந்த மற்றுத் தேவர்கள்` என மாற்றி, `அவர் ஒழிந்த ஏனைத் தேவர்கள்` என உரைக்க. இனி, `மற்று, அசைநிலை` எனலுமாம். அணுகமாட்டாத இயைபுபற்றி, நூலையும் உடன் எண்ணினார். நுழைவு - அணுகுதல். ``அரியான்`` என்றது பெயர். நுண்ணியன் - நுண்பொருளை உணர்த்துபவன்; ஞானாசிரியன். பரிந்து - இரங்கி. பாவகம் - நினைவு. ``பாவகத்தால்`` என்றதில் ஆல் உருபு, ஒடு உருபின் பொருளில் வந்தது. ``தூங்கு கையான் ஓங்கு நடைய`` (புறம் - 22). என்றதிற் போல.

பண் :

பாடல் எண் : 15

உருகிப் பெருகி
உளங்குளிர முகந்துகொண்டு
பருகற் கினிய
பரங்கருணைத் தடங்கடலை
மருவித் திகழ்தென்னன்
வார்கழலே நினைந்தடியோம்
திருவைப் பரவிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

உருகுதல் முதலியவற்றைச் செய்து பருகுதற் கினிதாகிய பெருங் கருணைக் கடலாகிய சிவபெருமானது திருவடியையே சிந்தித்து, சிந்தித்தற்குரிய அடியோங்களுடைய பெரும் புண்ணியத்தைத் துதித்து நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

உருகி - மனம் நெகிழ்ந்து. பெருகி - அன்பு மிகுந்து. ``உருகி, பெருகி, முகந்துகொண்டு`` என்ற எச்சங்கள், ``பருகற்கு`` என்றதனோடு முடிந்தன. ``தென்னன்`` என்றதில் ஐயுருபு தொகுத்தல். ``வார்கழலே நினைந்து`` என்றதனை ``திருவை`` என்றதன் பின்னர்க் கூட்டுக. அடியோம் திரு - அடியோங்களது செல்வம். ஐயுருபுகள், ``பரவி`` என்றதனோடு முடியும்.

பண் :

பாடல் எண் : 16

புத்தன் புரந்தராதியர்
அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை
மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை
அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

புதுமையானவனும், இந்திராதியர் வணங்கும் படியாகிய பித்தனும், திருப்பெருந்துறையை உடையவனும், எமது பிறவியை ஒழித்தருளின அத்தனும், தில்லையம்பலத்தை உடையவனு மாகிய சிவபெருமானது அருவுருவமாகிய திருவடிகள் என் மனத்தில் தங்கியிருக்கும் விதத்தைப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டு வோம்.

குறிப்புரை :

`திருமால் புத்தனாய்த் திரிபுரத்தவரிடம் சென்று புத்த மதத்தைப் போதித்து, அவரது சிவபத்தியைப் போக்கியதனால் சூழ்ந்த பெரும்பாவத்தைச் சிவபூசை செய்து நீக்கிக் கொண்டான்` என்பது புராணமாகலின், அவ்வரலாற்றைக் குறிக்க, ``புத்தன்`` என வேறு கூறி, பின்னர்த், தேவர் பலராலும் வணங்கப்படுதலைக் குறிக்கும்வழி, ``மால்`` என்பதும் கூறினார். அதனால் அது, கூறியது கூறிற்றும், ஈண்டைக்கு இயைபின்மையுடையதும் ஆகாமை யறிக. இதற்குப் பிறரெல்லாம், `புதியோன்` என்றும், `ஞானம் உடையவன்` என்றும் உரைத்து, சிவபிரானுக்கே ஆக்கியுரைப்பாரும், `புத்த மதத்தின் ஆசிரியனை ஈண்டுக் கூறுதற்கு ஓர் இயைபின்று` என மறுப்பாரும் ஆயினர். `புத்த மதத்தை ஆக்கியவனும் மக்களுள் ஒருவனே` என இக் காலத்தார் கூறும் கருத்து அடிகட்கு இல்லாமை யறிக. புரந்தராதியர் - இந்திரன் முதலிய தேவர். `நம் சித்தம் புகுந்தவா` என்க. ``புகுந்தவா`` என்றதன்பின்னர், `பாடி` என்பது` எஞ்சிநின்றது.

பண் :

பாடல் எண் : 17

உவலைச் சமயங்கள்
ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல்உளனாய்க்
கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக்
கழலிணைகள் தந்தருளும்
செயலைப் பரவிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

பொய்ச்சமய சாத்திரக் கடலில் வீழ்ந்து தடுமாறுகின்ற என் துன்பத்தை ஒழித்துத் தன் திருவடியை எனக்குக் கொடுத்தருளின இறைவனது திருவருட்செயலைப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

உவலை - பொய். `உவலைச்சமயங்களது சாத்திரம்` என்க. ஒவ்வாத - பொருந்தாத. சவலை - மெலிவு. `மெலிவைத் தருகின்ற கடல்` என்க. ``கவலைக் கெடுத்து`` என்றதில் ககர ஒற்று, விரித்தல். அன்றி, `கவலுதலைக் கெடுத்து` என்றும் ஆம். இதனால், அடிகள் இறைவனால் ஆட்கொள்ளப்படுதற்கு முன்னர்ப் பல சமய சாத்திரங்களை ஆராய்ந்து, தெளிவு பெறாதிருந்தமை பெறப்படும். அவனது செயலை என எடுத்துக்கொண்டு உரைக்க.

பண் :

பாடல் எண் : 18

வான்கெட்டு மாருதம்
மாய்ந்தழல் நீர் மண்கெடினும்
தான்கெட்ட லின்றிச்
சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன்கெட் டுயிர்கெட்
டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

ஆகாயம் முதலாகிய பஞ்சபூதங்களும் அழிந்த காலத்தும் தான் அழியாதிருப்பவனாகிய சிவபெருமானைக் குறித்து, உடல், உயிர், உணர்வு என்பவை அழிந்து நான் என்பதும் அழிந்த விதத்தைப் பாடி தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

வான் - ஆகாயம், மாருதம் - காற்று. அழல் - நெருப்பு. அழிப்புக் காலத்தில் ஒன்றும் இன்றாதலை வலிவுறுத்தற்கு, கெடுதலை ஐம்பூதங்களிலும் தனித்தனி அருளிச்செய்தார். ``கெட்டலின்றி`` என்பதில் டகர ஒற்று விரித்தல். கெடுதல் - அழிதல். சலித்தல் - தளர்ச்சி யுறுதல். தன்மையனுக்கு - தன்மையன்பொருட்டு. ``உயிர்`` என்றது பிராணவாயுவை. ``கெட்டு`` என்பன, எண்ணின்கண் வந்த எச்சங்கள். ``நான்`` என்றதும், ``நாம்`` என்றதுபோல (தி.8. திருத்தெள்ளேணம். பா.4) ``நான்`` என்னும் உணர்வையேயாம்.

பண் :

பாடல் எண் : 19

விண்ணோர் முழுமுதல்
பாதாளத் தார்வித்து
மண்ணோர் மருந்தயன்
மாலுடைய வைப்படியோம்
கண்ணார வந்துநின்றான்
கருணைக் கழல்பாடித்
தென்னாதென் னாஎன்று
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

தேவர் முதலானோர்க்கு முதல்வனும் பிரம விட்டுணுக்களுக்கு நிதிபோல்பவனும் எமது கண்ணுக்குப் புலப்பட்டு நின்றவனும் ஆகிய சிவபெருமானது திருவடியைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

இறைவன் தேவர்கட்கு ஒவ்வொரு தலைமையை வழங்கி அவர்கள் அனைவர்க்கும் தலைவனாய் இருத்தலின், ``விண் ணோர் முழுமுதல்`` என்றும், பாதல உலகத்தார் தம் பாவங்காரணமாக அவ்விடத்துக் கிடப்பராதலானும், அவரை அப்பாவத்தினின்று நீக்கி நல்வினையால் மேல் ஏறி இன்பம் பெறச் செய்தல் பற்றி, ``பாதாளத் தார் வித்து`` என்றும், மனிதரை ஆணவமலமாகிய மிருத்துவைக் கடந்து வீடுபெற்று என்றும் ஒரு பெற்றியராய் வாழுமாறு செய்தலின், ``மண்ணோர் மருந்து`` என்றும், (மருந்து - அமுதம்) அயன், மால் இருவரையும் அணுக்கராகக் கொண்டு, தானும் அவருள் ஒருவனாய், காரணக் கடவுளராகும் பெருந்தலைமையைத் தந்து மிக்க இன்பத்தைப் பயத்தலின், `அயன் மாலுடைய வைப்பு` என்றும், (வைப்பு - சேமநிதி) `இவ்வாறு அவரவர் தகுதிக்கேற்ப வேறுவேறுவகையாக அருள் புரிகின்ற அவன், யாதொரு தகுதியும் இல்லாத நமக்கு இவ்வூனக் கண்ணாலும் நிரம்பக் கண்டு இன்புறும்படி வந்து தங்கி அருள் புரிந்தான்` என்பார், ``அடியோம் கண்ணார வந்து நின்றான்`` என்றும், `அத்தகைய பேரருள் திறத்தை எஞ்ஞான்றும் மறவாது போற்றுவதன்றி நாம் அவனுக்குச் செய்யும் கைம்மாறு யாது` என்பார், ``கருணைக் கழல்பாடி....தெள்ளேணம் கொட்டாமோ`` என்றும் அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 20

குலம்பாடிக் கொக்கிற
கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட
வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ. 

பொழிப்புரை :

இறைவனது மேன்மையையும் குதிரைச் சேவகனாய் வந்த சிறப்பையும் உமாதேவியினது நன்மையையும் பாடி, இறைவன் நஞ்சுண்ட செய்தியைப் பாடி, தில்லையம்பலத்தில் நடிக்கின்ற திருவடிச்சிலம்பினது வெற்றியைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

குறிப்புரை :

`குலம் - சிவபெருமானை வணங்கும் தேவர் கூட்ட மும், அடியார் கூட்டமும். கொக்கிறகு - கொக்குருவங்கொண்ட அசுரனை அழித்து, அதன் அடையாளமாகச் சிவபெருமான் தன் தலையில் அணிந்தது. இவ்வசுரனை, `குரண்டாசுரன்` எனக் குறிப்பிட்டு, இவ் வரலாற்றைக் கந்த புராணமும், உபதேச காண்டமும் கூறுதல் காண்க. இனி, `கொக்கிறகு` என்பது, `கொக்கு மந்தாரை` என்பதொரு மலரே என்பாரும் உளர். கோல்வளையாள் நலம் - உமையம்மையது திருமேனியழகு. ``நாள்தோறும் பாடி`` என முன்னே சென்று இயையும். ``நாள்தோறும் கொட்டாமோ`` என்றியைத்தலுமாம். அலம்பு ஆர் புனல் - ஒலித்தல் பொருந்திய நீர். `ஆடுகின்ற ஆடல்` என இயையும். சிலம்போடு கூடிய ஆடல்.
சிற்பி