திருவாசகம்-திருச்சாழல்


பண் :

பாடல் எண் : 1

பூசுவதும் வெண்ணீறு
பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும்
இயல்பானான் சாழலோ. 

பொழிப்புரை :

பூசுவது வெண்ணீறு; அணிவது பாம்பு; பேசுவது வேதம்; உங்கள் தெய்வத்தின் தன்மையிருந்தபடி என்னேடி? என்று புத்தன் வினாவ, பூசுவது, பூண்பது, பேசுவது என்னும் இவற்றைக் கொண்டு உனக்காகுங் காரியம் ஒன்றுமில்லை; அந்த பரமசிவன் எல்லா உயிர்களுக்கும் தக்க பயன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

இதனுள் எல்லா இடத்தும், ``ஏடீ`` என்றதனை முதலிற் கொள்க.
``பூண்பது`` என்றது, இனம் பற்றி ஒருமை. இயற்பழிக் கின்றாள் கூற்றாகலின், ``திருவாய்`` என்றது, பழித்தலை உட்கொண்ட தாம். மறை - பொருள் விளங்காத சொல். `வேதம்` என்பது, உண்மைப் பொருள். காண், முன்னிலை அசை. `ஏடி` என்பது தோழி முன்னிலைப் பெயர். கொண்டு - பற்றி. `இயல்பாய்` என ஆக்கம் வருவித்து, `அவன் இயல்பாய் எவ்வுயிர்க்கும் ஈசன் ஆனான்` என்க. ஈசன் - தலைவன், ``இயல்பாய்`` என்றது`அத்தலைமை அவனுக்குப் பிறர்தர வந்ததன்றி, தன்னோடு அவற்றிடை இயல்பாய் உள்ள ஏற்றத் தாழ்வுகளால் தானே அமைந்தது` என்றதாம். எனவே, பிறரது தலைமைபோல அவனது தலைமையை, பூசுவது, பூண்பது முதலியன கொண்டு அறியவேண்டு வது இல்லை என்றதாயிற்று.
`சிவன் சாந்தாகப் பூசுவதும் சாம்பல்; அணியாக அணிவதும் பாம்பு; சொல்வதும் பொருள் விளங்காத சொல் என்றால், அவன் உயர்ந்தோனாதல் எவ்வாறு?` என்பது இதனுள் எழுப்பப்பட்ட தடை,
`எல்லா உயிர்க்கும் அவனே தலைவன் என்பது யாவராலும் நன்கறியப்பட்டதானபொழுது, அவன் பூசுவது முதலியனபற்றி ஐயுற வேண்டுவது என்` என்பது மேல் நிகழ்த்தப்பட்ட தடைக்கு விடை.

பண் :

பாடல் எண் : 2

என்னப்பன் எம்பிரான்
எல்லார்க்குந் தான்ஈசன்
துன்னம்பெய் கோவணமாக்
கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள்
மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச்
சாத்தினன்காண் சாழலோ.

பொழிப்புரை :

என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தலைவன், அப்படிப் பட்டவன் தைத்த துணியைக் கோவணமாகக் கொண்ட தற்குக் காரணம் யாது? என்று புத்தன் வினவ, கலைகளையும், வேதங் களையும் சரடாகக் கொண்டமைந்த பொருளாகிய கோவணத்தைச் சாத்திக் கொண்டான் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

``தான்`` என்றதன்பின் தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரத்தை விரிக்க, `அப்பனும், பிரானும், ஈசனுமாகிய, அவன்` என்க. இது தோழி கூறியதைத் தலைவி கொண்டு கூறியது, `அப்பன்` என்றது, `அன்பினால் அப்பன்போல்பவன்` என்றபடி. துன்னம் பெய் கோவணம் - கீளொடு பொருந்தத் தைத்த கோவணம். `கோவணமாகக் கொள்ளும் அது, என்றது, `கோவணத்தையே உடையாகக் கொள்ளு கின்ற அத்தன்மை` என்னும் பொருளது. மன்னுகலை துன்னுபொருள் மறை - நிலை பெற்ற நூல்களில் பொருந்திய பொருள்களையுடைய வேதம். இது, வேதத்தின் பொருளையே மற்றைய நூல்கொண்டு நிற் கின்றன என்றதாம். சரடு - கயிறு. அஃது இங்கு துறவர் கட்டும் கீளினைக் குறித்தல், ``வான் சரடு`` எனச் சிறப்பித்ததனால் பெறப் படும். தன்னையே - அப்பொருளையே. மறை பற்றுக்கோடும், பொருள் அதனைப் பற்றி நிற்பதும் ஆதல்பற்றி, அவை முறையே சரடும், கோவணமும் ஆயின.
`பூசுவது, பூண்பது முதலியன எவ்வாறாயினும், ஆடை இன்றி யமையாததன்றோ? அதுவும் இல்லாதவன் யாவர்க்கும் தலைவனாதல் எவ்வாறு` என்பது இதன்கண் நிகழ்த்திய தடை.
`அவனது சாங்க உபாங்கம் முதலியன பலவும் பிறர்போல அவன் தனக்கெனக் கொண்டனவன்றி, உயிர்கள் பொருட்டுக் கொண்டனவாகலின், அவை ஏற்ற பெற்றியான் எவ்வாறும் ஆம்` என்பது அதற்குக் கூறப்பட்ட விடை.

பண் :

பாடல் எண் : 3

கோயில் சுடுகாடு
கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங்
கற்பொடிகாண் சாழலோ.

பொழிப்புரை :

சுடுகாட்டைக் கோயிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்டான். அன்றியும் அவனுக்குத் தாய் தந்தை யரும் இல்லை; இத்தன்மையனோ உங்கள் கடவுள்? என்று புத்தன் வினாவ, எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தையர் இல்லாவிடினும், அவன் சினந்தால் உலகம் முழுவதும் கற்பொடியாய் விடும் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

கோயில் - அரண்மனை; நல்லாடை - உயர்ந்த உடை. இதன்பின் `ஆகுக` என்பது வருவிக்க. ``தந்தை`` என்றவிடத்து எச்ச வும்மை தொகுத்தலாயிற்று. ``தாயும் இலி தந்தையும் இலி தான் தனியன்`` என்றது, ஒருவரும் துணையில்லாத தனிமையன்` என்று இகழ்ந்ததாம். காயில் - வெகுண்டால்.
`உன்னாற் புகழப்பட்ட தலைவனுக்குச் சுடுகாடே அரண் மனையும், புலித்தோலே பொன்னாடையுமாதல் ஒருபால் நிற்க; அவன், துணையற்ற தனியனாய் இருத்தல் பொருந்துமோ` என்பது தடை.
`அவன் வெகுண்டவழி முன்னிற்பது ஒன்றுமில்லையாதலின், அவனுக்குத் துணை வேண்டுவது எற்றுக்கு` என்பது விடை.
``தாயும் இலி தந்தை இலி`` என்றதனால் `பிறப்பற்றவன்` என் பது கூறப்பட்டது. ``தந்தையாரொடு தாயிலர்`` (தி.3 ப.54 பா.3) என்று அருளிச்செய்தார் ஞானசம்பந்தர். இதன் மூன்றாம் அடி, மடக்காய் வந்தது, இவ்வாறு இனி வரும் பாட்டுக்களினும் வருதல் காண்க.

பண் :

பாடல் எண் : 4

அயனை அநங்கனை
அந்தகனைச் சந்திரனை
வயனங்கண் மாயா
வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய
நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத்
தாழ்குழலாய் சாழலோ. 

பொழிப்புரை :

பிரமனையும், மன்மதனையும், யமனையும், சந்திரனையும் வடுப்படுத்தினன்; இதுதானோ உங்கள் கடவுளின் தன்மை? என்று புத்தன் வினாவ, முக்கண்ணனாகிய எமது கடவுளே தண்டித்தால், தேவர்களுக்கு அதுவும் வெற்றியன்றோ என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

வசனம், `வயனம்` என்றாயிற்று. `சொல்` என்னும் பொருட்டாகிய இது, இங்கு வசைச் சொல்லைக் குறித்து நின்றது. மாயா-கெடாத. வடு - அடையாளம். அயன் - பிரமன்; அவனை வடுச்செய்தது, அவன் தலைகளுள் ஒன்றைக் கிள்ளியது. அனங்கன் - மன்மதன்; அவனை வடுச் செய்தது, உருவிலி ஆக்கியது. `அனங்கன்` என்பதும் அதனாற் பெற்ற பெயரேயாம். அந்தகன் - கூற்றுவன். அவனை வடுச் செய்தது, காலால் உதைத்து உருட்டியது, இதனால், அவன் மார்பில் தழும்புடையனானான் என்றலுமாம். சந்திரனை வடுச்செய்தது, தக்கன் வேள்வியில் காலால் தேய்த்தது. இதுவே, அவனுக்கு மறுவாயிற்று என்றலுமாம். நயனம் - கண். ``நாயகனே`` என்ற பிரிநிலை ஏகாரம், சிறப்புணர்த்திற்று. `தன்னின் மெலியார் மாட்டு அன்பும், அருளும் இல்லாது அவரை நலிகின்றவன் தலைவனாதல் எவ்வாறு` என்பது தடை.
`தந்தை தாயர், தம் மக்களை ஒறுத்தல் அவரது நலத்தின் பொருட்டேயன்றிப் பிறிதில்லாமைபோல, சிவபெருமானும் அயன் முதலியோரை ஒறுத்தது அவர் தம் குற்றத்தின் நீங்கி உய்தி பெறற் பொருட்டேயாகலின், அஃது அவர்கட்கு நன்மை செய்ததேயாம்` என்பது விடை.
``கொன்றது வினையைக் கொன்று
நின்றஅக் குணம்என் றோரார்``
(-சிவஞானசித்தி. சூ.1.51)
எனவும்,
தந்தைதாய் பெற்ற தத்தம்
புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்
வந்திடா விடினு றுக்கி
வளாரினால் அடித்துத் தீய
பந்தமும் இடுவர்; எல்லாம்
பார்த்திடிற் பரிவே யாகும்;
இந்தநீர் முறைமை யன்றோ
ஈசனார் முனிவும் என்றும்.
-சிவஞானசித்தி. சூ.2.16
எனவும் கூறிய விளக்கங்களைக் காண்க. இவ்வாறு ஒறுக்கும் திருவருள், `மறக்கருணை` என்றும், வேண்டுவார்க்கு அவர் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கும் திருவருள், `அறக்கருணை` என்றும் சொல்லப்படும் என்க.
நெற்றிக்கண் வியாபக உணர்வாகிய ஞானத்தைக் குறிப்ப தாகலின், `அஃதுடையவன், அதனை இல்லாதவர்கட்குத் தலைவனாய் மறக்கருணை அறக்கருணைகளை அவர்கட்கு ஏற்ற பெற்றியாற் செய்து அவர்களை உய்யக்கொள்ளுதல் இயல்பு` என்பதைக் குறிப் பாற்பெற வைத்தமையின், `நயனங்கள் மூன்றுடைய நாயகன்` என்றது உடம்பொடு புணர்த்தல். நன்மையை, `வெற்றி` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 5

தக்கனையும் எச்சனையுந்
தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற்
றருளினன்காண் சாழலோ.

பொழிப்புரை :

தக்கனையும், யாகத்து அதிதேவரையும் தலை அரிந்து, கூடி வந்த தேவர்களையும் அழித்தது என்ன காரியம்? என்று புத்தன் வினாவ, தேவர்களை அழித்தாலும் மறுபடியும் அவர்களை உயிர் பெறச் செய்து, யாகத்தினை நடத்தியவனாகிய தக்கனுக்கு ஆட்டின் தலையை அருள் செய்தான் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

குறிப்புரை :

எச்சன் - வேள்வித் தேவன். இவனைத் தக்கன் வேள்வி யில் வீரபத்திரர் தலையறுத்தமை,
மணனயர் சாலையில் மகத்தின் தெய்வதம்
பிணைஎன வெருக்கொடு பெயர்ந்து போதலும்
குணமிகு வரிசிலை குனித்து வீரன் ஓர்
கணைதொடுத்து அவன்தலை களத்தின் வீட்டினான்.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.37
``இரிந்திடு கின்றதோர் எச்சன் என்பவன்
சிரந்துணி படுதலும்`` -தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.38
எனக் கந்தபுராணத்துட் கூறப்பட்டமை காண்க. பிணை - மான். `வந்தவழி` என்பது, `வந்து` எனத்திரிந்து நின்றது. அவர் - அக்கணத்தவர். வேள்வி செய்பவனையும், வேள்வித் தெய்வத்தையும் குறிப்பதாய, `எச்சன்` என்னும் பல பொருள் ஒரு சொல், ``மிகைத்தலை மற்று அருளினன்`` எனப் பின்னர் வந்த குறிப்பினால், வேள்வி செய்தவனாகிய தக்கனையே சுட்டி நின்றது. மிகைத்தலை - வேண்டாத, (நாணத்தக்க) தலை; அஃது யாட்டுத்தலை. `மிகைத்தலையாக` என ஆக்கம் வருவிக்க. மற்று - மற்றொன்று (தேவர்க்குப் பொருந்தாத ஒன்று). தக்கன் வேள்வியில் தேவர்களை வீரபத்திரர் ஒறுத்தஞான்று, தக்கன் தலையை மட்டில் தீக்கிரை ஆக்கியதையும் அதனால் பின்பு சிவபெருமான் இறந்தவரை உயிர்பெற்றெழச் செய்தபொழுது தக்கன் எழாதொழிய, வேள்வியின் பொருட்டு வெட்டப்பட்ட யாட்டின் தலைகளுள் ஒன்றை அவன் உடலிற் பொருத்தி எழச் செய்ததையும் கந்தபுராணம்,
கண்டு மற்றது வீரபத் திரன்எனும் கடவுள்
கொண்ட சீற்றமொ டேகியே தக்கனைக் குறுகி
அண்ட ரோடுநீ ஈசனை இகழ்ந்தனை அதனால்
தண்டம் ஈதென வாள்கொடே அவன்தலை தடிந்தான்.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.50
அற்ற தோர்சென்னி வீழுமுன் இறைவன் அங்கையினால்
பற்றி ஆயிடை அலமரும் பாவகற் பாராத்
திற்றி ஈதெனக் கொடுத்தனன் கொடுத்தலும் செந்தீ
மற்றொர் மாத்திரைப் போதினில் மிசைந்தது மன்னோ.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.51
எனவும்,
வித்தக வலிகொள் பூதன்
வீரபத் திரன்றன் முன்னர்
உய்த்தலும் அதன்மேல் வேள்விக்
குண்டியாம் பசுவுள் வீந்த
மைத்தலை கண்டு சேர்த்தி
எழுகென்றான் மறைகள் போற்றும்
அத்தனை இகழும் நீரர்
ஆவர்இப் பரிசே என்னா.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.163
என்றலும் உயிர்பெற் றங்கண்
எழுந்தஅத் தக்கன் முன்னம்
நின்றதோர் வீரற் கண்டு
நெஞ்சுதுண் ணென்ன அஞ்சித்
தன்தக விழந்து பெற்ற
தலைகொடு வணங்கி நாணி
அன்றிசெய் நிலைமை நாடி
அரந்தையங் கடலுட் பட்டான்.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.164
எனவும் விளக்கிற்று. மை-யாடு. அரந்தை- துன்பம்.
யாவரும் உயிர்பெற்றெழுந்த பின்னர், வேள்வித்தேவன் முதலிய தேவர் பலருடன் தக்கனும் சிவபெருமானை வணங்கி அருள் பெற்றனன் என்பதையும்,
மீத்தகு விண்ணு ளோரும்,
வேள்வியந் தேவும், மாலும்,
பூத்திகழ் கமலத் தோனும்
புதல்வனும், முனிவர் தாமும்
ஏத்தினர் வணங்கி நிற்ப
எம்மைஆ ளுடைய முக்கண்
ஆத்தன்அங் கவரை நோக்கி
இவைசில அருளிச் செய்வான்.
-தட்சகாண்டம் - யாகசங்காரம்.பா.169.
என அவ்விடத்துக் கூறப்பட்டமை அறிக. புதல்வன் - பிரமன் மகன்; தக்கன்.
தக்கனையன்றிப் பிறர் ஒருவர்க்கும் சிவபெருமான் மாற்றுத் தலை அருளாமையின், இங்கு, இறுதிக்கண் வந்த ``எச்சன்``, என்றது, பிறர் ஒருவர்க்கும் ஆகாமை அறிக.
`வடுச்செய்தது பொருந்துமாயினும், பலரைக் கொன் றொழித்தது பொருந்துமோ` என்பது தடை.
`பலரைக் கொன்றொழித்துப் போயினான் அல்லன்; மீளவும் அவரை உயிர்பெற்றெழச் செய்து அருள்வழங்கியே சென்றான்; அவருள் முன்னின்றவனையும் அழித்தொழியாது எழச்செய்து, மாற்றுத்தலையால் அவனது குற்றத்தின் முதன்மை எஞ்ஞான்றும் விளங்கச் செய்தான்; அதனால், அவர் தம்மைத் தொலைத்தது மாத்திரையே கூறிப் பழித்தல் பொருந்தாது` என்பது விடை.
தக்கன் வேள்வி நிகழ்ச்சியை இவ் இருதிருப்பாட்டுக்களில் அடிகள் எடுத்தோதி வலியுறுத்ததனானே, பின்னர் ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் தம் திருப்பதிகங்களுள் இதனை யாண்டும் பயில எடுத்து அருளிச்செய்தனர்.

பண் :

பாடல் எண் : 6

அலரவனும் மாலவனும்
அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந்
தவிரார்காண் சாழலோ.

பொழிப்புரை :

பிரம விட்டுணுக்கள் அறிய வொண்ணாமல் நெருப் புருவாய் நின்றது யாதுக்கு? என்று புத்தன் வினாவ, அப்படி எம் மிறைவன் நில்லாவிடின், அவ்விருவரும் தமது ஆங்காரத்தை விடார் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

முதல் - அடி, அண்டத்திற்கு அப்பாற்பட்டதையே அண்டம் என்றார். `நிலத்தடியின்கீழும் அண்டத்திற்கு அப்பாலும் உற`- என்க.
சலம் - மிக்க வெகுளி. `சலமுகத்தாற்செய்த` என ஒரு சொல் வருவிக்க. முகம்-வாயில்; காரணம். `அகங்காரம் ஆங்காரம்` என மரு விற்று. இஃது ஆகுபெயராய், இதனால் விளைந்த போரை உணர்த் திற்று.
`அயனும், மாலும் ஒரு பிரமகற்பத் தொடக்கத்தில் தாங்களே உலகிற்கு முதல்வர் என்று தம்முட் கலாய்த்துச் செய்த போரினால் உலகம் பெரிதும் இன்னற்படுவதை அறிந்து தேவர்கள் செய்த முறை யீட்டிற்கிரங்கிய சிவபெருமான், பாதலத்தின் கீழும் அண்ட முகட்டின் மேலும் ஊடுருவி நிற்கும் ஒரு ஒளித்தம்பமாய்த் தோன்ற, அதனைக் கண்ட அவர்கள் அஞ்சி நின்று, `இதன் அடியையும், முடியையும் காண்பவரே உலகிற்கு முதல்வர்` எனத் தம்முள் முடிவு செய்து கொண்டு, திருமால் பன்றி வடிவங்கொண்டு நிலத்தின் கீழ்ச் சென்றும், அயன் அன்ன வடிவங்கொண்டு விண்ணின் மேற் சென்றும் அடி முடிகளைக் காண இயலாது மீண்டு வந்து, அது சிவபெருமான் கொண்ட வடிவமே என்பதறிந்து, அப்பெருமானை வணங்கித் தம் செருக்கொழிந்தனர்` என்னும் புராண வரலாறு நன்கறியப்பட்ட தொன்று.
இதனை இங்கு அடிகள் அருளிச்செய்தவாறே, கந்தபுராண ஆசிரியர், யாக சங்காரப் படலத்தையடுத்து, `அடி முடிதேடு படலம்` என அமைத்துக் கூறினமை காண்க. இவ்வரலாற்றை அடிகள் திருத் தோணோக்கத்துப் பன்னிரண்டாம் திருப்பாட்டுள் இன்னும் சிறிது விளக்கமாக அருளிச்செய்வார்.
இங்ஙனம் இவர் இதனைப் பல விடத்தும் பெரிதும் அருளிச் செய்ததனானே பின்வந்த இருபேராசிரியரும் (ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும்) இதனை முன்னை வரலாற்றினும் பெரும்பான்மை யாக ஆங்காங்கு எடுத்து அருளிச்செய்து போந்தனர்,
`சிலரை வெளிப்பட்டு நின்று ஒறுத்தல் பொருந்துவதாயினும், சிலரை மறைந்து நின்று மருட்டுதல் தலைவராயினார்க்குப் பொருந் துமோ` என்பது தடை.
`நோய்க்குத் தகவே மருத்துவன் மருந்து கொடுத்தல் போல, அவரவர்க்கு ஏற்ற முறையானே அவரவரைத் திருத்துதல் வேண்டு மாகலின், மறைந்து நின்று மருட்டித் திருத்துதலும் குற்றமாகாது` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 7

மலைமகளை யொருபாகம்
வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற்
பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற்
பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து
பெருங்கேடாஞ் சாழலோ.

பொழிப்புரை :

பார்வதியை ஒரு பாகத்தில் அமைத்துக் கொள்ளு தலும், மற்றொருத்தியாகிய கங்கை நீருருவாகி அவன் சடையில் பாய் வதற்குக் காரணம் யாதென்று? புத்தன் வினாவ, `நீருருவாகி அவ் விறைவனது சடையில் பாயாவிடின், பூமி முழுதும் பாதாளத்தில் வீழ்ந்துபெருங்கேடு அடையும்` என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

மலைமகள் - உமாதேவி. மற்றொருத்தி, கங்கை. சல முகத்தால் - நீர்வடிவமாய்; `வஞ்சனையால்` என்பது நயம்.
தரணி - பூமி. பிலம் - பாதாளத்திற்குச் செல்லும் வழி. பெருங்கேடு ஆம் - பேரழிவு உண்டாகும்; உண்டாகியிருக்கும்.
பகீரதன் பொருட்டு நிலவுலகத்திற்கு வந்த கங்கையைச் சிவ பெருமான் தனது சடையில் தாங்கி நின்றமை புராண வரலாறாதல் வெளிப்படை.
`ஒருத்தியை மணந்தபின் மற்றொருத்தியை அவளறியாமல் மறைத்து வைத்திருத்தல் உயர்ந்த தலைவராவார்க்குப் பொருந்துமோ` என்பது தடை.
`மற்றொருத்தியாவாள் உண்மையில் உலகை அழிக்க வந்தவளேயாகலானும், அவளைச் சடையில் வைத்திருத்தல் உலகத்தைக் காத்தற் பொருட்டேயன்றி, கரவினால் இன்பம் நுகர்தற் பொருட்டன்றாகலானும் அஃது அவற்குப் புகழாவதன்றிக் குற்றமாதல் எவ்வாறு` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 8

கோலால மாகிக்
குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான்
அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல்
அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம்
வீடுவர்காண் சாழலோ.

பொழிப்புரை :

அக்காலத்தில் பாற்கடலில் உண்டாகிய நஞ்சை யுண்டான்; அதற்குக் காரணம் யாதென்று? புத்தன் வினாவ, அந்த நஞ்சை எம்மிறைவன் உண்டிலனாயின் பிரம விட்டுணுக்கள் முதலான தேவர்கள் எல்லாரும் அன்றே மடிந்து ஒழிவார்கள் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

குறிப்புரை :

`கோலாகலம்` என்பது, `கோலாலம்` எனக் குறைந்து நின்றது, `ஆரவாரம்` என்பது பொருள். `ஆகியதன்பின்` என்பது, `ஆகி` எனத் திரிந்து நின்றது. `அமரரெல்லாம் ஆரவாரம் செய்து கடைந்தபொழுது` என்பதுபொருள்.
ஆலாலம் - நஞ்சு. ``ஆலாலம் உண்டான்`` என்றது `அமுதம் உண்ணாது நஞ்சம் உண்டான்` என்றவாறு. சதுர்- திறல். ``என்`` என்றது. `எத்தன்மைத்து` என இகழ்தற்குறிப்பாய் நின்றது. ``உள்ளிட்ட`` என்றது, `அயன், மால்` என்பவரது சிறப்புணர்த்தி நின்றது. வீடுவர் - அழிவர்; அழிந்திருப்பர்.
`கனியிருப்பக் காய்கவர்தல்போல, அமுதத்தை உண்ணாது நஞ்சினை உண்டது பித்தர் செயலாவதல்லது. அறிவுடையார் செய லாதல் எவ்வாறு` என்பது தடை.
`நஞ்சினை உண்டும் அவன் இறவாமையும், அமுதம் உண்டும் பிறர் இறத்தலும் கேட்கப்படுதலின், அச்செயல் அவன் அவர் களை முன்பே இறவாது காக்கச்செய்த அருட்செயலாதல் தெளிவு.
அதனால், அஃது அறிவும், அருளும் உடைமையாவதல்லது, பித்தாதல் யாங்ஙனம்` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 9

தென்பா லுகந்தாடுந்
தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான்
பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற்
பேதாய் இருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி
வீடுவர்காண் சாழலோ. 

பொழிப்புரை :

தென்திசை நோக்கி நடிக்கின்ற தில்லைச் சிற்றம் பலத்தான் பெண் பாகத்தை விரும்பினான், இவன் பெரும் பித்தனோ? என்று புத்தன் வினாவ, எம்மிறைவன் பெண்பாகத்தை விரும்பில னாயின், நிலவுலகத்தோர் யாவரும் யோகத்தை அடைந்து மேலுல கத்தைச் சேர்வார்கள் என்று ஊமைப்பெண் விடை கூறினாள்.

குறிப்புரை :

தென்பால் உகந்து - தென்றிசையை விரும்பி. இது, கூத்தப்பெருமான் தெற்குநோக்கி நிற்றலைக் குறித்தது. பெண் பால் உகந்தான் - ஒருத்தியைப் பக்கத்தே நீங்காது கொண்டான். உகத்தல் - விரும்புதல், அஃது எஞ்ஞான்றும் உடனாயிருக்கும் தன் காரியத்தைத் தோற்றி நின்றது, `ஆதலின் பெரும்பித்தன்` என்க. பேதாய் - பெண்ணே; `அறிவிலியே` என்பது நயம். ``விண்பால்`` என்றதன்பின், `நோக்கி` என்பது வருவிக்க. `யோகம்` என்பது, `யோகு` என நின்றது. ``நிலத்தோர்`` என்றது, `உலகிலுள்ளோர் அனைவரும்` என்றபடி.
``தவமும் தவமுடையார்க் காகும்; அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.``
(குறள் - 262.) என்றவாறு, துறவறத்திற்கு உரியரல்லாதவர் அதனை மேற்கொள்ளின் இரண்டறங்களையும் இழந்து கெடுவராதலின், ``இருநிலத்தோர், விண்பாலியோகெய்தி வீடுவர்`` என்று அருளினார். `உடலின் தொழிற்பாட்டிற்கு உயிரின் இயைபு இன்றியமையாத வாறுபோல, உயிர்களின் தொழிற்பாட்டிற்கு இறைவனது இயைபு இன்றியமையாமையின், அவன் அவரவருக்கு ஏற்றவாற்றான் இயைந்து நிற்றல் வேண்டும். அதனால், சிலர்க்குப் போகியாகியும், சிலருக்கு யோகியாகியும் நிற்பன்; இவ்வாறின்றி யோகியாயே நிற்பின், யோகத்திற்கு உரியவாகாது போகத்திற்கே உரியவாய உயிர் கள் கேடுறும்` என்பது இத்திருப்பாட்டின் கருத்து.
போகியாய் இருந்து யிர்க்குப்
போகத்தைப் புரிதல் ஓரார்;
யோகியாய் யோக முத்தி
உதவுத லதுவும் ஓரார்;
வேகியா னாற்போல் செய்த
வினையினை வீட்டல் ஓரார்;
ஊகியா மூட ரெல்லாம்
உம்பரின் ஒருவன் என்பர்.
(சிவஞானசித்தி சூ. 1,50.) என்றது காண்க.
இறைவன் போகியாய் இல்லாதொழியின் உயிர்கட்குப் போகம் அமையமாட்டாது என்பதை, `அவன் யோகியாய் இருந்து சன காதி நால்வர்க்கு ஞானத்தை அருளியபொழுது யாதோர் உயிர்க்கும் போகமில்லையாய்ப் பிரமனது படைப்புத்தொழிலும் இல்லை யாயிற்று` எனவும், `பின்னர் அவ்யோகம் நீங்கி மலைமகளை மணந்த பொழுதே உயிர்கட்குப்போகம் அமைந்தது` எனவும் வரும் கந்த புராண வரலாறு நன்கு உணர்த்தும். இன்னும், `போகத்தைப் பயப் பிக்கும் கடவுள் காமனேபோலத் தோன்றினும், உண்மையில் அவன் அதற்கு உரியவன் அல்லன்; எல்லார்க்கும் எல்லாவற்றையும் தரு பவன் சிவபெருமானே` என்பதும், அப்பெருமான் காமனை எரித் தமையைக்கூறும் அப்புராணத்தால் அறியப்படும். அதனால்,
கண்ணுதல் யோகி ருப்பக்
காமன்நின் றிடவேட் கைக்கு
விண்ணுறு தேவ ராதி
மெலிந்தமை ஓரார்; மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ
எரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப்
பேரின்பம் அளித்த தோரார்.

(சிவஞானசித்தி சூ.1.53.) என்றார் அருணந்தி சிவாசாரியார்.
`உலகவர்போல மனைவியை உடையனாய் இருப்பவன் கடவுளாவனோ` என்பது இங்கு எழுப்பப்பட்ட தடை.
`அவ்வாறிருத்தல் தன்பொருட்டன்றி உயிர்கள் பொருட்டே ஆகலானும், அங்ஙனமாகவே, அஃது இளஞ்சிறாரை மகிழ்விக்க அவரொடு விளையாட்டயரும் பெற்றோரது செயல்போல நாடக மாத்திரையான் மேற்கொள்வதாதலன்றி, உண்மையான் விரும்பிக் கொள்வதன்றாதல் இனிது விளங்குதலானும், அஃது உலகத்தை நடத்தும் இறைவற்கு இன்றியமையாததொரு செயலாவதன்றி, இறைமைத் தன்மையொடு மாறாதல் எங்ஙனம்` என்பது விடை.
இது, கடவுள் மாட்டு நயப்புற்றவளது கூற்றேயாகலின், கடவுட்டன்மைபற்றிக் கூறலும் பொருந்துவதாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 10

தானந்தம் இல்லான்
தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்
தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத்
தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர்
வான்பொருள்காண் சாழலோ. 

பொழிப்புரை :

தான் முடிவு இல்லாதவனாயிருந்தும் தன்னை அடைந்த என்னை ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்தான், இது என்ன புதுமை? என்று புத்தன் வினாவ, ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

`தானோ` எனச் சிறப்பு ஓகாரம் விரித்து, `நாயேனை ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான்; அஃது எவ்வாறு` என இசையெச்சம் வருவித்து உரைக்க. ``தனையடைந்த`` என்றது, தலைவி தனக்கு வேட்கையுண்மையை உடம்பட்டும், அடிகள் தாம் தம்மை ஆளவந்த ஆசிரியன்வழி நின்றமையை உடம்பட்டும் கூறியதாம். உந்துதல் - செலுத்துதல்; அது. வலவன் ஏவா வான ஊர்தியை (புறம் - 27.) என்க. வான் பொருள் - எட்டாத பொருள். ஆனந்த வெள்ளத்து அழுத்துவிப்பன அவன் திருவடிகளே என்பது அனுவாத முகத்தாற் பெறவைத்துக் கூறலின், முதல்வனைப்பற்றி வினாவியவட்கு, அவனது திருவடிகளது சிறப்புக் கூறினமை விடைவழுவாகாமை அறிக. உயிர்கட்கு இன்பமாவது இறைவனது சத்தியாதலானும் திருவடியே உயிர்களை ஆனந்த வெள்ளத்து அழுத்துவிப்பனவாதல் அறிக. இத்திருப்பாட்டின் சொல்நடை ``ஆனந்த வெள்ளத் தழுந்துமொ ராருயிர்`` (தி.8 கோவையார் - 307) என்னும் பாட்டோடு ஒத்திருத்தல் அறியத்தக்கது.
``ஆதி அந்தம் இல்லாத கடவுள் மானிடப் பெண்டிர்க்கும் இன்பம் தருவானோ; தாரான் ஆதலின், எனக்குப் பேரின்பம் தந்தவன் அத்தகைய கடவுளாதல் எவ்வாறு` என்பது தலைவி கூற்றிற்கு இயைய எழுந்த தடை. `தகுதி` இல்லாதார்க்கும் வீடு தருவானோ` என்பது அடி களது அனுபவத்திற்கியைய இதன்கண் உள்ளுறையாய் அமைந்து நிற்பது.
`அவ்வாறு உனக்கு அவன் எதிர்வந்து பேரின்பம் அளித்தது அவன் கருணையாலே காண்; அக்கருணை உனது முன்னைத் தவத் தால் உனக்கு எளிதிற்கிடைத்ததாயினும், அது, வானத்திற் பறக்கும் தேவர்களுக்கும் எட்டாததொன்று` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 11

நங்காய் இதென்னதவம்
நரம்போ டெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே
காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள்
காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத்
தரித்தனன்காண் சாழலோ.

பொழிப்புரை :

நரம்போடு கூடிய எலும்புக் கூட்டினை அணிந்து முழுவெலும்பைத் தோளில் சுமந்தான். இது என்ன தவமோ? என்று புத்தன் வினாவ முழுவெலும்பு வந்த விதத்தைக் கேள். கால, கால வேற்றுமையால் பிரம விட்டுணுக்கள் இறக்க, அவர்கள் எலும்புக் கூட்டினை தரித்தான் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

``தவம்`` என்றது ஆகுபெயரால், தவக்கோலத்தை உணர்த்திற்று, ``தவமறைந்தல்லவை செய்தல்`` (குறள்.274) என்புழிப்போல. பின்னர், ``தோள்மேல்`` என வருகின்றமையின், முன்னர் `மார்பின்மேல்` என்பது வருவிக்க, எலும்பை நரம்போடு அணிந்து என்றதனால், அவை நரம்பினால் தொடுக்கப்படும் என்பது பெறுதும். ``அணிந்து`` என்றதற்கு அணிந்த தன்றியும் என உரைக்க. கங்காளம் - எலும்புக்கூடு.
`மாயோன் ஒருவனது வாழ்நாளில் பிரமர் நூற்றுவர் தோன்றி வாழ்ந்து அழிவர்` என்பதும், `அவ்வழி நூறாவது எண்ணு முறைமைக் கண் வரும் பிரமன் இறக்குங்காலத்து மாலும் இறக்க, அவ்விருவரது எலும்புக் கூட்டினையும் சிவபெருமான் தனது இரு தோள்களிலும் ஏற்று நடம்புரிவன்` என்பதும் புராண வரலாறாதல்பற்றி எழுந்தவை, இத்திருப்பாட்டின்கண் உள்ள தடை விடைகள்.
ஆமா கேள் - அவனுக்கு ஏற்புடையவாயினவாற்றைக் கேள். அந்தரம் - முடிவு. ``காலாந்தரத்து`` என்றதனை, ``தரித்தனன்`` என்ற தற்கு முன்னர்க் கூட்டுக. ``இருவர்`` என்றது, தொகைக் குறிப்பாய், `அயன், மால்` என்பவரை உணர்த்திற்று. ``காலம்`` என்றதும், அதனது முடிவை. ``செய்ய`` என்ற பொதுவினை, `காட்ட` எனச் சிறப்பு வினை யாய் நின்றது. `அவர் காலாந்தரத்துத் தரித்தனன்` எனச் சுட்டுப்பெயர் வருவித்துரைக்க.
`சடை, கல்லாடை முதலியவற்றைக் கூறின், நீ அவை தவக் கோலம் என்பாய்; அருளுக்கு மாறாய நரம்போடு எலும்புகளும் அன்னவாயொழியினும், கங்காளமும் தவக்கோலமோ` என்பது தடை.
`கங்காளம் காதலித்தது, தவக்கோலம் அன்று; அயன், மால் என்பவரும் நிலையாமையுடையரே என்பது உணர்த்துதற் பொருட் டாம்` என்பது விடை.
இதனால், `சிவபிரானது திருவேடங்கள் பலவும், பலப்பல உண்மைகளை உணர்த்து முகத்தான், உண்மை ஞானத்தைப் பயக்கும் என்பது` போந்தது. இதனை, ``மருந்துவேண்டில் இவை` என்னும் திருந்துதேவன்குடிப் பதிகத்துள், (தி.3 ப.25) ஞானசம்பந்தர்,
``வீதிபோக் காவன, வினையைவீட் டுவ்வன,
ஓதிஓர்க் கப்படாப் பொருளைஓர் விப்பன
........அடிகள்வே டங்களே. ``
``விண்ணுலா வும்நெறி, வீடுகாட் டும்நெறி
மண்ணுலா வும்நெறி, மயக்கந்தீர்க் கும்நெறி
........அடிகள்வே டங்களே``
என்றாற்போலப் பலபட விளக்கியும், `இவ்வாற்றால் இவை பழித்தற்குரியனவல்ல; பெரிதும் புகழ்தற்குரியன` என்பதை,
``பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா,
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படும்
....... .....அடிகள்வே டங்களே``
என வலியுறுத்தியும் அருளிச்செய்தல் காண்க. இங்கு அடிகள் எடுத்தோதி வலியுறுத்தருளிய இக் கங்காள வேடத்தின் வரலாற்றை,
பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும்,
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.
(தி.4 ப.112 பா.7). என அப்பரும் வலியுறுத்தருளுதல் காண்க.
அயன், மால் இருவரது காயத்தை (எலும்புக் கூட்டினை) மேலேற்றிக்கொள்ளுதல் பற்றிக் கங்காள மூர்த்தி, `காயா ரோகண மூர்த்தி` எனவும் படுவர்; அவர் சிறந்து விளங்குந்தலமும் `காயாரோகணம்` எனப்படும். காயாரோகணம் என்பதே `காரோணம்` என மருவி வழங்கும்.
அதனால், காஞ்சிப் புராணக் காயாரோகணப் படலத்துள் இவ்வரலாறு இனிது விளக்கப்படுகின்றது. அதனுள், ஈண்டைக்கு இன்றியமையாததொரு செய்யுள் வருமாறு.
இருவரும் ஒருங்கே இறவருங் காலம்
எந்தையே ஒடுக்கிஆங் கவர்தம்
உருவம்மீ தேற்றிக் கோடலால் காயா
ரோகணப் பெயர்அதற் குறுமால்;
வருமுறை இவ்வா றெண்ணிலா விரிஞ்சர்
மாயவர் காயம்மேல் தாங்கிக்
கருணையால் அங்கண் நடம்புரிந் தருளும்
காலமாய்க் காலமுங் கடந்தோன்.
-காஞ்சிப்புராணம்
இங்குக் காட்டிய சிறந்த பல மேற்கோள்களால் கங்காளத்தின் இயல்பு இனிது விளங்குதலின், `கங்காளமாவது, சிவபிரான் வாமனனை அழித்து, அவன் முதுகெலும்பைத் தண்டாகப் பற்றிய அதுவே` என்பாரது கூற்றுப் பொருந்தாமை அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 12

கானார் புலித்தோல்
உடைதலைஊண் காடுபதி
ஆனால் அவனுக்கிங்
காட்படுவார் ஆரேடீ
ஆனாலுங் கேளாய்
அயனுந் திருமாலும்
வானாடர் கோவும்
வழியடியார் சாழலோ. 

பொழிப்புரை :

புலித்தோலே ஆடையும், தலைஒடே உண் கலமும், மயானமே இடமும் ஆனால், அவனுக்கு அடிமைப் படுவோர் யாவர்? என்று புத்தன் வினாவ, புலித்தோல் முதலியவற்றை உடைய வனாயினும் பிரமன், திருமால், இந்திரன் என்பவர் அவனுக்கு வழித் தொண்டர் என்று ஊமைப் பெண் கூறினாள்.

குறிப்புரை :

கான் - காடு. தலை - தலை ஓடு. `தலையில் ஊண்` என்க. ஊண் - உண்ணுதல். இனி, `இஃது ஆகுபெயராய் உண்கலத்தை உணர்த்திற்று` எனினும் அமையும். காடு - சுடுகாடு. பதி - உறைவிடம்.
`உடை முதலியன இவ்வாறாக உடையவனை அன்பினால் அடைபவர் யார்` என்பது தடை,
`அவை அவ்வாறு இருப்பவும் உயர்ந்த தேவர் பலரும் தொன்றுதொட்ட அன்பராயிருத்தல் உண்மையானபின், அவை பற்றி ஐயம் என்` என்பது விடை.
முன்னர் (தி.8 திருச்சாழல் பா.3) ``காயில் உலகனைத்தும் கற்பொடிகாண்`` எனப் பலரும் அச்சத்தால் அடங்கி நிற்றல் கூறப்பட்டமையின், இங்கு, ``ஆட்படுவார்`` என்றது, அன்பினால் ஆட்படுவாரையேயாம்.
இதனானே, புலித்தோலாடை முதலியவைபற்றி மீண்டும் கூறியது பிறிதொரு கருத்துப் பற்றியாதலும் அறிந்துகொள்க.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ``
(தி.5 ப.23 பா.9) என்றருளிச்செய்தமையின், அடியராதல் அச்சமும், அன்பும் என்னும் இருவகையானல்லது இல்லாமையறிக. பயன் கருதிச் செய்யும் அன்பும், ``அன்பு`` என்றதன்கண் அடங்கும்.

பண் :

பாடல் எண் : 13

மலையரையன் பொற்பாவை
வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான்
என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா
தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங்
கலங்கிடுங்காண் சாழலோ. 

பொழிப்புரை :

மலையரசன் மகளாகிய உமாதேவியை, உலகம் அறியத் தீ முன்னே மணம் செய்தனன் என்பது என்ன காரியம்? என்று புத்தன் வினாவ, இறைவன் உலகமறிய மணம் செய்து கொள்ளாது ஒழிந்தால் உலகம் முழுதும் சாத்திரப் பொருள்களும் நிலைமாறிவிடும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

``பாவை`` முதலிய மூன்றும் ஒருபொருள்மேல் வந்த பலபெயர்கள். பெண்திரு - பெண்ணினத்தின் செல்வம். தீ வேட்டான்- தீ முன்னர் மணந்தான். என்னும் அது என் - என்று அறிந்தோர் சொல்லும் அச்செய்திக்குக் காரணம் யாது? கலை நவின்ற பொருள்கள் - மணமுறையைக் கூறும் நூல்களில் தான் சொல்லிய பொருள்கள். கலங்கிடும் - இனிது விளங்காதொழியும்.
`சிவபெருமானும் தன் தேவியைத் தீமுன்னர்ச் சடங்கு செய்து திருமணம் புரிந்தான் எனில், அங்கியங்கடவுள் முதலானவரன்றோ அனைவர்க்கும் சான்றாய் நிற்கும் கடவுளர்` என்பது தடை.
`சிவபெருமான் அங்ஙனம் செய்தது, கற்பிப்பான் ஒருவன் தான் கற்பிக்கும் கலை, மாணாக்கர்க்கு இனிது விளங்கித் தெளி வெய்துதற் பொருட்டுத் தானே அதனைப் பயிலுதல்போலத் தான் உலகர்க்கு வகுத்த விதி இனிது விளங்குதற்பொருட்டுத் தானே மேற் கொண்டு செய்துகாட்டியதன்றி வேறில்லையாதலின், அதுபற்றி அங்கியங்கடவுள் முதலானோர் அவனின் மிக்காராதல் இல்லை` என்பது விடை.
``பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப``
(தொல். பொருள் -143.) என்றதனால், மணமுறைச் சடங்குகள் முனி வராற் கட்டப்பட்டனவே என்பது இனிது விளங்கிக் கிடப்பவும், அவற்றைச் சிவபெருமானே செய்தனவாக வைத்துத் தடை விடை களான் ஆராய்ந்ததனால், `பற்றிகல் இன்றிச் செய்வாரது செயல்களை எல்லாம் இறைவன் தன்செயலாக ஏற்றுக்கொள்வன்` என்பது நல்லாசிரியரது துணிபு என்பது பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 14

தேன்புக்க தண்பணைசூழ்
தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம்
பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம்
பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக்
கூட்டாங்காண் சாழலோ.

பொழிப்புரை :

தில்லைச் சிற்றம்பலத்தான் நடனம் செய்தற்குக் காரணம் யாது? என்று புத்தன் வினாவ, இறைவன் நடனம் செய்யாது ஒழிந்தால், உலகம் முழுதும் காளிக்கு உணவாய் விடும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

குறிப்புரை :

பணை - வயல். தான் புக்கு நட்டம் பயிலும் அது - தான் காளிமுன் ஒருநிகராய்ச் சென்று நடனம் செய்த அச்செயல். `காளிமுன்` என்பது ஆற்றலான் வந்து இயைந்தது. என் - என்ன காரணத்தால். தரணி - உலகம். ஊன் புக்க வேல் - அசுரரது புலால் பொருந்திய சூலம். ``ஊட்டு`` என்ற முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், ஊட்டப் படும் உணவைக் குறித்தது.
``தில்லைச் சிற்றம்பலவன்`` என்றதனால், `அடியார்கள் பொருட்டு ஆனந்த நடனத்தைச் செய்பவன்` என்பது போந்தது. போதரவே, `இத்தகையோன் ஒரு பெண்முன் சென்று அவளோடு நடனப் போரினை மேற்கொண்டு செய்தது ஏன்` என்பது தடையாயிற்று.
`காளி, தாரகன் என்னும் அசுரனை அழித்து அவன் உதிரத்தைக் குடித்த செருக்கினால் உலகினைத் துன்புறுத்த, சிவ பெருமான், அவள்முன் சென்று நடனப்போர் செய்து அச்செருக்கினை அடக்கினார்` என்பதே புராண வரலாறு ஆதலின், அதுவே இங்கு விடையாயினமை அறிக.
இவ்வரலாற்றைத் திருநாவுக்கரசர் தமது தசபுராணத் திருப் பதிகத்துள் (தி.4 ப.14 பா.4) எடுத்தோதுதல் காண்க. இவ்வரலாற்றை `நிசும்பன், சும்பன்` என்னும் அசுரரால் நிகழ்ந்த வரலாறாகவும் புராணங்கள் கூறும்.

பண் :

பாடல் எண் : 15

கடகரியும் பரிமாவும்
தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா
றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந்
தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான்
திருமால்காண் சாழலோ. 

பொழிப்புரை :

மதயானை குதிரை தேர் இவற்றின் மீது ஏறாமல் இடபத்தின் மீது சிவபெருமான் ஏறினதற்குக் காரணம் யாது என்று புத்தன் வினாவ, முப்புரங்களை எரித்த காலத்தில் தேரின் அச்சு முறியத் திருமால் இடப உருவாய்த் தாங்கினான் என்று ஊமைப்பெண் சொன்னாள்.

குறிப்புரை :

கட கரி - மதத்தை உடைய யானை. பரிமா - குதிரை. உகந்து - விரும்பி. திரிபுரம் எரித்த காலத்தில் திருமால் இடப உருவங் கொண்டு சிவபெருமானைத் தாங்கிய வரலாற்றினைக் கந்த புராண மும் குறிப்பிடுதல் (தட்சகாண்டம், ததீசி யுத்தரப் படலம் - 314.) காண்க.
`செல்வராவார்க்கு யானையும், குதிரையும், தேரும்போல் வனவன்றே ஊர்தியாவன? அவை இல்லாது எருதின்மேல் ஏறி வருபவன் செல்வனாவனோ` என்பது தடை.
`அஃது ஒருகாலத்து நிகழ்ந்த நிகழ்ச்சியாயினும், அக் காலத்தில் பணிபுரிந்த மாயோனுக்கு மகிழ்ச்சி உண்டாதற் பொருட்டு அதனையே தான் மேற்கொண்டான்` என்பது விடை.
இறைவனுக்கு உண்மையில் இடபமாய் இருப்பது அறக் கடவுளே. இதனையே கந்த புராணமும் விரித்துக் கூறிற்று. எனினும், இவ்வரலாற்றையே இங்கு விடையாகக் கூறியது, `அவ்வளவின் அவன் மகிழ்க` என்னும் நயம் பற்றிப் பருப்பொருளாய் எல்லார்க்கும் இனிது விளங்குதற் பொருட்டாம்.

பண் :

பாடல் எண் : 16

நன்றாக நால்வர்க்கு
நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங்
கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங்
கறமுரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண் புரமூன்றுங்
கூட்டோடே சாழலோ. 

பொழிப்புரை :

சனகர் முதலிய நால்வருக்கும் நான்கு வேதங் களின் உட்பொருள்களை ஆலமர நீழலிருந்து சொன்னான், அது என்ன? என்று புத்தன் வினாவ, அன்று ஆலநீழலிருந்து அறங்கூறினா னாயினும் முப்புரங்களை வேரோடு அழித்தான் என்று ஊமைப் பெண் சொன்னாள்.

குறிப்புரை :

நால்வராவார் சனகாதியர் என்பர். அன்று - முற் காலத்தில். ஆல் - கல்லால மரம். `அறமாக` என ஆக்கம் வருவித்து உரைக்க. கொன்றான் - அழித்தான். கூட்டு - கூட்டம்; அசுரக் குழாம்.
`நால்வர் முனிவர்கட்கு ஆலின்கீழ் இருந்து அறம் கூறுவானா யினமையின், அவன் துறவோர்க்குத் துணையாய் வீடுதருதலல்லது, இல்வாழ்வார்க்குத் துணையாய்ப் பொருள் இன்பங்களைத் தாரான்; ஆதலின், இல்வாழ்வார், பிற தேவரையே அடைதல் வேண்டும்` என்பது தடை.
`அவன் அஃது ஒன்றே செய்தொழியாது, முப்புரத்தை அழித்துத் தேவர்கட்கு வாழ்வளித்தலையும் செய்தானாதலின், இல் வாழ்வார்க்கும் பொருள் இன்பங்களைத் தருபவனேகாண்` என்பது விடை.
`பொருள் இன்பங்களைத் தருவாராகப் பிறர் கூறும் தேவர் கட்கும் முப்புரத்தவராகிய பகையை அழித்து வாழ்வருளிய பெருமான் அவனேயாகலின், போகம். மோட்சம் இரண்டிற்கும் அவனையன்றி முதல்வர் யாவர் உளர்` என்பது திருவுள்ளம்.
மெய்கண்ட தேவரும் இவ்வாறே, ``கல்லால் நிழல் மலைவில்லார்`` (சிவஞானபோதம் - காப்பு) என இவ்விரண் டனையும் குறிப்பிட்டு, அவனது முழு முதல் தன்மையைக் குறிப்பித்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 17

அம்பலத்தே கூத்தாடி
அமுது செயப் பலிதிரியும்
நம்பனையுந் தேவனென்று
நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள்
நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென்
றேத்தினகாண் சாழலோ. 

பொழிப்புரை :

அம்பலத்தில் கூத்தாடி, பிச்சை எடுத்துண்டு உழல் கின்ற சிவனையும் தேவனென்று அடைவது என்ன அறியாமை? என்று புத்தன் வினாவ, அவனை நான்மறைகள் அறியாதவைகளாய் எம் பெருமானே! ஈசனே! என்று துதித்தன என்று அவள் கூறினாள்.

குறிப்புரை :

அமுது செய - உணவைத் தேட. பலி - பிச்சை. `பலிக்கு` என நான்காவது விரிக்க. நம்பன் - சிவன். நண்ணுதல் - அடைதல். மூன்றாம் அடியில், ``நம்பனையும்`` என்ற உம்மையைப் பிரித்து, ``மறைகள்`` என்றதனோடு கூட்டுக.
இது சிறப்பும்மை. `நம்பனை நான் மறைகளும் தாம் அறியா; மற்று அவை ஆமாறு கேள்; எம்பெருமானே, ஈசா என்று துதித்து நிற்கும்` என உரைக்க. இஃது, ``ஈசானஸ் ஸர்வ வித்யானாம்`` என்று தொடங்கும் வேதமந்திரத்தை உட்கொண்டு அருளிச் செய்தது. ``அறியா`` என்றது, `அளவிட்டுணரமாட்டா` என்றபடி.
`பலருங் காண அம்பலத்திலே நின்று கூத்தாடி அவரை மகிழ்வித்தும், உணவின் பொருட்டுப் பிச்சைக்கு அலைந்தும் நிற்கின்ற சிவனையும் சிலர் கடவுள் என்று அடைவது என்` என்பது தடை.
`சிவனை வேதங்களும் அளவிட்டுணரமாட்டாவாய்த் துதித் தமைகின்றன என்றால், அவனை முதற் கடவுள் என்று அறிந்து அடைபவர் அறிவாற் பெரியோரேயன்றிப் பிறரல்லர் என்பது சொல்ல வேண்டுமோ` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 18

சலமுடைய சலந்தரன்றன்
உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன்
றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்தன்
நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி
அருளினன்காண் சாழலோ. 

பொழிப்புரை :

சலந்தரன் உடம்பைச் சேதித்த சக்கரத்தைத் திருமாலுக்குக் கொடுத்தற்குக் காரணம் யாது? என்று புத்தன் வினாவ, திருமால் தன் கண்ணைப் பறித்து மலராகத் திருவடியிற் சாத்தினதால் கொடுத்தான் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

குறிப்புரை :

சலம் - சினம். பிரமனது சீற்றத்திற் பிறந்த அசுரனே சலந்தராசுரன். இவனைச் சிவபெருமான் தாம் உண்டாக்கிய சக்கரப் படையால் அழியச்செய்தார்.
சலந்தராசுரனது தோற்றம் முதலிய வரலாறுகளையும், அவனை அழித்த சக்கரத்தைத் திருமால் சிவ பெருமானை வழிபட்டுப் பெற்றதையும் கந்த புராணத் ததீசி உத்தரப் படலத்துட் காண்க. நயனம்- கண். இடந்து - பெயர்த்து. அலராக - மலராக. ஆழி - சக்கரம்.
`தனக்கு வெற்றியைத் தந்த படைக்கலத்தைப் போற்றிக் கொள்ளாமல் எளிதாகப் பிறருக்கு அளித்தவனது செயல் எங்ஙனம் சிறந்ததாகும்` என்பது தடை.
`அச் செயல், தன்னை வழிபடுவார்க்கு அவர் வேண்டிய வற்றை வேண்டியவாறே கொடுக்கும் வள்ளன்மை உடையவன், தனக்கென ஒன்றையும் விரும்பாதவன் என்னும் உயர்வுகளை உணர்த்துமன்றித் தாழ்வினை உணர்த்துதல் எவ்வாறு` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 19

அம்பரமாம் புள்ளித்தோல்
ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர்
எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங்
கேதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத்
தன்மையன்காண் சாழலோ. 

பொழிப்புரை :

புலித்தோல் ஆடையாகும்; அமுது ஆலகால விடம் ஆகும்; இது என்ன தன்மை? என்று புத்தன் வினாவ, எம் பெருமான் எதை உடுத்து எதை அமுது செய்தாலும், தன் பெருமையைத்தான் அறியாத தன்மையன் என்று ஊமைப் பெண் கூறினாள்.

குறிப்புரை :

`புள்ளித்தோல் அம்பரமாம்` என்க. ``உண்ட`` என்றது, இங்கு, `அடைந்த` என்றும், ``சதுர்`` என்றது `பெருமை` என்றும் பொருள் தந்தன. அல்லாக்கால், ``உண்ட`` என்றது, ``அம்பரம்`` என்றதனோடு இயையுமாறு இல்லை. ``தம்`` என்றது, ஒருமை பன்மை மயக்கம். `தன் பெருமை` எனின், இனவெதுகையாய்ப் பொருந்துமாதலின் அதுவே பாடம் போலும். ``அறியாமை``, இங்கு, எண்ணாமை. எனவே, `தன்பெருமையை நோக்காது எளிவந்து எதனையும் செய்வான்` என்பது பொருளாயிற்று. `எம்பெருமான் எதனை உடுத்து எதனை உண்டாலும் அவற்றாலெல்லாம் அவன் தன் பெருமையைத் தான் அறியாத அருளாளனேயாவன்` என்றபடி.
``முழுதும் தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந் தலைமை`` (மகேந்திரகாண்டம். சூரன் அமைச்சியற்படலம் -128.) என்னும் கந்தபுராண அடியின் பொருள் யாதாயினும், ஈண்டு இதற்கு இதுவே பொருள் என்க.
`காயில் உலகனைத்தும் கற்பொடி` (தி.8 திருச்சாழல். பா.3) எனவும், `அயனும் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார்` (தி.8 திருச்சாழல். பா.12) எனவும், நீ சொல்லியவாறு அவன் பேராற்றலும், பெருந்தலைமையும் உடையவனாய் இருப்பினும், புலித்தோலை உடுப்பதும், நஞ்சை உண்பதும் போன்றவை (பிச்சை எடுத்தல் முதலியவை) அவனுக்குச் சிறிதும் பொருந்தாகாண்` என்பது மீட்டும் மேலன பற்றி எழுந்த தடை.
`தம் பெருமை ஒன்றே கருதிப் பிறருக்கு உதவி செய்யாத வன்கண்மை யுடையார்க்காயின் நீ சொல்வது பொருந்தும்; சிவ பெருமான் அவ்வாறு தன் பெருமை கருதாது பிறர் நலம் ஒன்றையே கருதுதலின், அவை அவனது பேரருட்கு அழகு செய்து நிற்பனவே காண்` என்பது விடை.

பண் :

பாடல் எண் : 20

அருந்தவருக் காலின்கீழ்
அறமுதலா நான்கனையும்
இருந்தவருக் கருளுமது
எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான்
கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை
தெரியாகாண் சாழலோ.

பொழிப்புரை :

சனகாதியர்க்கு ஆல மர நீழலிருந்து அறம் முதலியவற்றை அருள் செய்த வரலாறு எற்றுக்கு? என்று புத்தன் வினாவ, அறம் முதலியவற்றை இறைவன் அருள் செய்யாவிடின் அவர்கட்கு உலக இயற்கைகள் தெரியமாட்டா என்று அப்பெண் கூறினாள்.

குறிப்புரை :

`அருந்தவருக்கு ஆலின்கீழ் இருந்து, அறம் முதலாய நான்கனையும் அவருக்கு அருளும் அது` எனக் கூட்டுக. அருந் தவருக்கு இருந்து - அரிய தவத்தோர்க்கு அருள் செய்வதற்கென்று ஆசிரியக் கோலத்துடன் எழுந்தருளியிருந்து. ``அவர்க்கு`` என்றது, ``அத்தன்மையோர்க்கு`` என்னும் பொருட்டாய் மேற்போந்த (தி.8 திருச்சாழல் பா.16) நால்வரைக் குறித்தது. திருந்து அவருக்கு - நன்னெறியில் ஒழுக விரும்புபவர்க்கு.
உலகியற்கை - உலகுயிர்களின் ஒழுக்கநெறி. அஃது, `அறவொழுக்கம், பொருளொழுக்கம், இன்பவொழுக்கம், வீட் டொழுக்கம்` என நால்வகைப்படுதலின், ``தெரியா`` எனப் பன்மை யாற் கூறினார், `முதற்கண் இறைவன் ஆசிரியனாய் எழுந்தருளி யிருந்து தக்கார்க்கு ஒழுக்க நெறியை உணர்த்த, அவர்வழியாகவே உலகத்தில் ஒழுக்க நெறிகள் உளவாயின` என்பது நல்லாசிரியர் அனைவர்க்கும் ஒத்த துணிபு என்பதனை,
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

என்னும் திருக்குறளான் (6) அறிக. இங்கு அடிகள் அருளிச் செய்த வாறே,
``அழிந்த சிந்தை அந்த ணாளர்க்
கறம்பொருளின்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி
மேயதுமுது குன்றே``
(தி.1ப.53பா.6) என்றாற்போல, மூவர் முதலிகளும் தம் திருப் பதிகங்களுள் இதனைப் பலவிடத்தும் தெளிய அருளிச் செய்தல் காண்க. `சிலருக்கு அறம் முதலியவற்றைக் கற்பிக்கும் ஆசிரியத் தொழிலுடையவன், உலகிற்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாதல் எவ்வாறு` என்பது தடை. `உலகிற்கு முதல்வனாவான் அன்றி, உலகிற்கு ஒழுக்க நெறியை உணர்த்துவோர் பிறர் யாவர்` என்பது விடை. அடிகள், சிவபுராணத்தால் இறைவனைத் துதிக்கும் முறையை வகுத்தும், கீர்த்தித் திருவகவலில் அவன் பலவிடத்தும் பலருக்கும் செய்த திருவருட் சிறப்புக்களையெல்லாம் தொகுத்தும், திருவண்டப் பகுதியில் அவனது ஏனை இயல்புகளை எல்லாம் விளக்கியும், இதனுள் புறச்சமயங்கள் பற்றியாதல், தமக்கே யாதல் நன்மக்கட்கு நிகழும் ஐயங்களைத் தடைவிடைகளால் அகற்றி, சிவபெருமானது முதன்மையை நிறுவியும், திருக்கோவையால் அகப்பொருள் வகையிலெல்லாம் சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் புகழ்ந்தும், மற்றும் பலவாற்றானும் பெரியதோர் இலக்கியக் கரு வூலத்தை அருளிச்செய்து, சிவநெறிக்குப் பெரியதோர் ஆக்கம் விளைத்தமையின், இந்நெறியின் பண்டைப் பேரருளாசிரியராய் விளங்குதலும், அவர்வழியே பின்னை ஆசிரியர்களும் சிவநெறியை நன்கு வளர்த்தமையும் ஈண்டு ஓர்ந்துணர்ந்து கொள்ளத் தக்கனவாம்.
சிற்பி