திருவாசகம்-குயிற்பத்து


பண் :

பாடல் எண் : 1

கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில்
பாதாள மேழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற்
சொல்லிறந் துநின்ற தொன்மை
ஆதி குணமொன்று மில்லான
அந்தமி லான்வரக் கூவாய். 

பொழிப்புரை :

இசை இனிமையாய் உள்ள குயிலே! எம் பெருமான் திருவடி இரண்டும் எங்குள்ளன? எனக் கேட்டால், அவை கீழுலகம் ஏழினுக்கும் அப்பால் உள்ளன எனலாம். அவனது ஒளி பொருந்திய அழகிய திருமுடி எங்குளது? என்று சொல்லப்புகின், அது சொல்லின் அளவைக் கடந்து நின்ற பழமையுடையது எனப்படும். இவைகளைக் கேட்டாயாயின் முதலும் குணமும் இல்லாதவனும், முடிவு இல்லாதவனுமாகிய அவனை நீ இங்கு வரும்படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

``கேட்டியேல்`` என்றதனை, ``நின்ற`` என்றதன் பின்னரும், ``ஆதி`` என்றதனை, ``அந்தம்`` என்றதன் முன்னரும் கூட்டுக. கீதம் - இசை. ``இனிய`` என்ற பெயரெச்சக் குறிப்பு, இடப் பெயர் கொண்டது. கேட்டியேல் - இவற்றைக் கேட்டுணர்ந்தாயாயின் (அவன் வரக்கூவாய் என்க). `இரண்டு, முடி` என்றவை, அவற்றின் அளவைக் குறித்தன. பாதாளம், `பாதலம்` என்பதன் மரூஉ; `கீழுலகம்` என்பது பொருள். `அப்பாலும், இறந்தும்` என உம்மை விரித்து, அவற்றை, ``நின்ற`` என்றதனோடு முடிக்க. மணி - அழகு. தொன்மை- அனாதி. இஃது, ஒரு பெயர்த் தன்மைப்பட்டு நின்ற, ``ஆதிகுணம் ஒன்றும் இல்லான் அந்தம் இல்லான்,`` என்றதனோடு, இரண்டாவதன் பொருள்படத் தொக்கது. `தொன்மை ஆதி` என்றே இயைத்து, `அதனையே வேறொரு பெயராகக்கொண்டு உணர்த்தலுமாம். குணம், மாயையின் காரியமாகிய குணம். ``ஒன்றும்`` என்றது, `ஒன்றேனும்` என்ற இழிவு சிறப்பு. எனவே, `சாத்துவிகம்` இராசதம், தாமதம்` என்னும் முக்குணங்களுள் ஒன்றேனும் இல்லாதவன் என்றதாம். முக் குணங்களுள் ஒன்றேனும் இல்லாதவன் என்றற்கே முதல்வனை, `நிற் குணன்` என்றதன்றி, அறுகுணம் அல்லது எண் குணம் எனப்படும் அருட்குணமும் இல்லாதவன் என்றற்கு அன்று. இஃதறியாதார் `நிற்குணம்` என்பது பற்றி, முதற்பொருட்கு குணகுணித்தன்மையால் வேறுபாடு கூறுதல் தானும் குற்றமாம்` எனவும், அதனால் அங்ஙனங் கூறுவோர் சகுணோபாசனையாகிய கீழ்நிலையில் நிற்பவர் எனவும் கூறித் தமது ஞானத்தின் தன்மையைப் புலப்படுப்பர்.

பண் :

பாடல் எண் : 2

ஏர்தரும் ஏழுல கேத்த
எவ்வுரு வுந்தன் னுருவாம்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை
அழகமர் வண்டோ தரிக்குப்
பேரரு ளின்ப மளித்த
பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே
தென்பாண்டி நாடனைக் கூவாய். 

பொழிப்புரை :

குயிலே! அழகுடன் விளங்கும் ஏழுலகத்தாரும் வணங்க எவ்வகை உருவங்களும், தன் உருவமாகவே உடைய வனாய், நிறைந்த முழக்கமுடைய கடல் சூழ்ந்த தென்னிலங்கையில், அழகு பொருந்திய இராவணன் மனைவியாகிய மண்டோதரிக்குப் பெருங்கருணையால் இன்பத்தைக் கொடுத்த, திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள பெருமானைத் தென்பாண்டி நாட்டையுடைய வனைச் சிறந்த உன் வாயினால் கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

ஏர் தரும் - அழகைப் புலப்படுத்துகின்ற. எவ்வுருவும் தன் உருவாய் நிற்றலாவது, எப்பொருளிலும் தான் அவையேயாய்க் கலந்திருத்தல், ``உருவாய்`` என்ற வினையெச்சம், எண்ணின்கண் வந்தது, `உருவாம்` என்பதும் பாடம். ஆர்கலி - கடல். வண்டோதரி, இராவணன் மனைவி. தசக்கிரீவன் சிவபெருமானது கயிலாய மலையைப் பெயர்த்து அப்பெருமானால் ஒறுக்கப்பட்டுப் பின்னர்ச் சாமகானம் பாடி வாளொடுநாளும், `இராவணன்` என்னும் பெயரும் பெற்று மீண்டபின், இலங்கையில் சிவபூசையை விடாது செய்து வந்தமை, புராணங்களினும், இதிகாசங்களிலும் இனிது விளங்கிக் கிடப்பது. இராவணன் சிவபத்தன் ஆயினமையின், அவன் மனைவி மக்கள் முதலிய சுற்றத்தாரும், பிறரும் எல்லாம் சிவவழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை பெறப்படும். `அவ்வாற்றால் சிவபெருமானிடத்து அன்பு கொண்டிருந்த, இராவணன் மனைவி மண்டோதரி, அப் பெருமானைக் குழந்தை வடிவில் எடுத்தணைத்து இன்புற வேண்டி னாள்` எனவும், `அவ்வாறே ஒருநாள் சிவபெருமான் அவளுக்குக் குழந்தை வடிவில் காட்சியளிக்க, மண்டோதரி எடுத்தணைத்து இன்புற் றிருக்கும்பொழுது இராவணன் வர, அவனிடமும் சிவபெருமானது திருவருட் செயலைக்கூறிக் குழந்தையைக் கொடுக்க அவனும் எடுத் தணைத்து மகிழ்கையில் சிவபெருமான் மறைந்தருளினார்` எனவும் சொல்லப்படும் பழைய வரலாறு பற்றி, ``மண்டோதரிக்குப் பேரருள் இன்பம் அளித்தபிரான்`` என்று அருளிச்செய்தார். அடிகள் திரு மொழியுள்ளே இது காணப்படுதல் பற்றி, இவ்வரலாறு திருவுத்தரகோச மங்கைத்தலத்தோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகிறதுபோலும்! `சிவபெருமான் மண்டோதரிக்குக் குழந்தையாகத் தோன்றி அவளது குறையை நிரப்பி இன்பம் அடையச் செய்தார்` என்னும் இதனைப் புறச்சமயிகள், `காமாதுரராய் அவள் பாற்சென்று, இராவணன் வந்தபொழுது மறைந்தார்` எனத் திரித்துக் கூறுவர். திரி புரத்தவர்போலாது இராவணன் தான் சாங்காறும் சிவவழிபாடுடைய னாய் இருந்தனன் என்பதையும் அவர் நினைந்திலர் போலும்! அற நெறியிற் பிழைத்தவனை அழித்தமையால் புண்ணியம் ஒருபால் எய்திற்றாயினும், சிவவழிபாடுடையவனை அழித்தமையால் உளதாய பாதகமும் ஒருபால் வந்து பற்ற, அதனை நீக்கிக் கொள்ளுதற் பொருட்டு அத்தென்கடற் கரையிற்றானே, இராமன் தன் மனைவி முதலாயினாரோடும் சிவபிரானை வழிபட்டு நலம் பெற்றான் என யாண்டும் பெருவார்த்தையாய் விளங்கிவரும் வரலாற்றினை உடம் படமாட்டாது பிணங்குகின்ற அவர், இன்னோரன்னவற்றைப் படைத்துக் கொண்டு மொழிதல் வியப்பன்று. சிவபெருமான் காமனை எரித்தவர் என்பதையும், காமனுக்கு அத்தொழிலும் அப்பெருமானால் அளிக்கப்பட்டது என்பதையும் அவர் அறியார். ஈண்டு அடிகள், சிவ பெருமான் அளித்த இன்பத்தை, ``பேரின்பம்`` எனவும், ``அருள் இன்பம்`` எனவும் விதந்தருளிச் செய்தமையானும், திருவார்த்தைப் பகுதி இரண்டாம் திருப்பாட்டினுள், ``பந்தணை மெல்விரலாட்கு அருளும் பரிசு`` என்றே அருளிப் போதலானும் புறச் சமயிகளது கூற்றுப்பற்றி மயங்குதற்கு இடனின்மை அறிந்து கொள்க. அன்றியும், இது சிவபிரான் புகழ்ப்பாடலேயன்றி, வேறாகாமையும் நோக்கி யுணர்க.

பண் :

பாடல் எண் : 3

நீல உருவிற் குயிலே
நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகிற் றிகழுங்
கொடிமங்கை உள்ளுறை கோயிற்
சீலம் பெரிதும் இனிய
திருவுத் தரகோச மங்கை
ஞாலம் விளங்க இருந்த
நாயக னைவரக் கூவாய். 

பொழிப்புரை :

நீல நிறத்தை உடைய குயிலே! நீள் மணிகள் பதித்த பெரிய மாடங்கள் விளங்குவதும், நல்லொழுக்கத்தால் மிக இனியது மான, திருவுத்தரகோச மங்கையில் பொருந்தியுள்ள திருக்கோயிலில் அழகிய வடிவில் விளங்கும் பூங்கொடி போன்ற உமாதேவியுடன் உலகத்திற்கு விளக்கம் உண்டாகும்படி வீற்றிருந்த தலைவனை வரும் படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

`நிலாவும் கோயில், உள்ளுறை கோயில், எனத் தனித் தனி முடிக்க. கோல அழகின் - அழகிய கோலத்துடன். கொடி மங்கை - பூங்கொடிபோலும் உமையம்மை. `அவள் உள்ளிடத்தே உறையும் கோயிலையுடைய உத்தரகோச மங்கைக்கண் இருந்த நாயகன்` என்க. இங்ஙனங் கூறவே, `அவ்வம்மை உடனாக இருந்தவன்` என்பது பெறப்பட்டது, இத்தலத்தில் நல்லொழுக்கம் சிறந்து விளங்குதலின், `சீலம் பெரிதும் இனிய திருவுத்தரகோச மங்கை`` என்று அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 4

தேன்பழச் சோலை பயிலுஞ்
சிறுகுயி லேஇது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து
மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென்
உணர்வது வாய ஒருத்தன்
மான்பழித் தாண்டமென் னோக்கி
மணாளனை நீவரக் கூவாய்.

பொழிப்புரை :

தேன் நிறைந்த பழங்களையுடைய சோலைகளில் வசிக்கின்ற சிறிய குயிலே! நீ இதனைக் கேட்பாயாக! விண்ணுலகத்தை விட்டு நீங்கி இம்மண்ணுலகத்து எழுந்தருளி, மக்களை அடிமை கொண்ட அருளாளனும் என் உடம்பினை இகழ்ந்து என் நெஞ்சினுள் புகுந்து, என் உணர்வில் கலந்த ஒப்பற்றவனும், மானினது பார்வையை இகழ்வதாயும், ஆளும் தன்மையுடையதாயும், இனிமையுடையதாயு முள்ள பார்வையையுடைய உமாதேவிக்கு நாயகனுமாகிய இறை வனை வரும்படி நீ கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

தேன்பழம், உம்மைத் தொகை. ``சோலை பயிலும்`` என ஏழாவதன் தொகைக்கண் வல்லினம் மிகாதாயிற்று. தேவர்களை ஆட்கொள்ளாமையால், ``வான்பழித்து`` என்று அருளினார். ஊன் பழித்து - உடம்பினை இழிந்தது எனச் சொல்லி. என் உணர்வு அது ஆய - என் அறிவாகிய அப்பொருளேயாய்க் கலந்துநின்ற. மான் பழித்து ஆண்ட - மானை வென்று அடிமைகொண்ட. மென்மை, இங்கு, தண்மை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 5

சுந்தரத் தின்பக் குயிலே
சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங்
கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு
மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச்
சேவக னைவரக் கூவாய்.

பொழிப்புரை :

அழகிய இன்பக் குயிலே! சூழ்ந்த கிரணங்களை யுடைய சூரியனைப் போல ஆகாயத்தினின்றும் இறங்கி இம் மண்ணுலகிலுள்ள அடியார்களுடைய பற்றுக்களை ஒழிப்பவனும் உலகத்திற்கு முதலும் இடையும் இறுதியும் ஆகியவனும் பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் அறியமுடியாத செஞ்சாந்து போன்ற சிவந்த திருவடியை உடையவனும் வீரனுமாகிய பெருமானை வரும்படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

சுந்தரம் - அழகு, வருமொழி பெயராய இரண்டாவதன் தொகைக்கண், `சுந்தரத்து` என அத்துச்சாரியை பெற்றது. சூழ் சுடர் ஞாயிறு - சுற்றிலும் பரவுகின்ற கதிர்களையுடைய கதிரவன். ஆசை யறுத்தல், பாசத்தை நீக்குமுகத்தான் என்க. முந்து முதலிய மூன்றும் உலகத்தினுடையன. அவற்றைச் செய்யும் பிரமன் முதலிய மூவரையும் அவையேயாக அருளினார். சிந்துரம் - செஞ்சாந்து. `அதுபோலும் செவ்விய வாய அடிகளை உடையவன்` என்க. சேவகன் - பாசங்களை அழிக்கும் வீரன்.

பண் :

பாடல் எண் : 6

இன்பந் தருவன் குயிலே
ஏழுல கும்முழு தாளி
அன்பன் அமுதளித் தூறும்
ஆனந்தன் வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவ டொத்த
நற்பரி மேல்வரு வானைக்
கொம்பின் மிழற்றுங் குயிலே
கோகழி நாதனைக் கூவாய். 

பொழிப்புரை :

குயிலே! மரக்கிளையில் இருந்து கூவுகின்ற குயிலே! உனக்கு இன்பத்தைச் செய்வேன். ஏழு உலகத்தையும் முற்றும் ஆள்வோனும், அன்பனும், இனிய அமுதத்தைப் பெய்து அடியார் உள்ளத்தே ஊறுகின்ற ஆனந்த வடிவானவனும், விண்ணினின்றும் எழுந்தருளிய தேவனும், உயர்ந்த பொன்னில் மாணிக்கங்களைப் பதித்தது போன்ற, நல்ல குதிரையின் மீது வந்தவனும், திருப்பெருந் துறைத் தலைவனுமாகிய பெருமானைக் கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

முதற்கண் நின்ற, ``குயிலே`` என்பதனை, `உனக்கு இன்பம் தருவன்` என்றும், இறுதிக்கண் நின்ற, ``குயிலே`` என்பதனை, ``கூவாய்`` என்றும் முடிக்க. `தருபவன் இவன்` என்பது பின்னர் வருகின்றமையின், `இன்பந் தருவன்` என்பது வாளா கூறப்பட்டது. ``ஏழுலகும்`` என்ற முற்றும்மை, அவ்வுலகங்களை எஞ்சாமல் ஆளு தலையும், `முழுது` என்றது, அவற்றுள் எல்லா இடங்களையும் எஞ்சாமல் ஆளுதலையும் குறித்தன. அன்பன் - அன்புடையவன். ``அமுது`` என்றது, இன்பப் பொருளாகிய அவனையேயாம். ஊறும் - மேன்மேல் மிகுகின்ற. ஆனந்தன் - இன்பவடிவினன். வான்வந்த தேவன் - வானத்தில் தேவர்களில் ஒருவனாயும் காணப்படுபவன். நன் பொன் மணிச்சுவடு - நல்ல பொன்னினது அழகிய உரை. இது, சிவபெருமானது திருமேனிக்கு உவமை. `அழகிய இடத்தில் இருந்து, இனிமையாகக் கூவ வல்லாய்` என்பாள், `கொம்பின் மிழற்றும் குயிலே` என மறித்துங் கூறினாள்.

பண் :

பாடல் எண் : 7

உன்னை உகப்பன் குயிலே
உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப்
புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த
வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன்
சீர்ப்புயங் கன்வரக் கூவாய்.

பொழிப்புரை :

குயிலே! உன்னை விரும்புவேன்; உனக்குத் துணை புரியும் தோழியுமாவேன்; பொன்னை வென்ற, அழகிய திருமேனியை யுடைய, புகழினால் விளங்குகின்ற, அழகனும் அரசனும் குதிரைமேல் ஏறிவந்த அருளாளனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள பாண்டியனும், சேரனும், சோழனும், சிறந்த பாம்பு அணிகளை உடையவனுமாகிய பெருமானை வரும்படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

``உகப்பன், ஆவன்`` என்றவை, தன்மை வினை முற்றுக்கள். உகத்தல் - விரும்புதல். இங்குக் குயிலாவது, பெடைக் குயிலே, யாதலின், `உனக்குத் துணையாகிய தோழியும் ஆவேன்` என்றாள். பெடைக்குயில் என்பதனை, ``செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீ`` எனப் பின் வருகின்ற பகுதியுட் (தி.8 திருத்தசாங்கம் 4) கூறுமாற்றானும் அறிக. இனிச் சேவல் என்றே கொண்டு, ``துணை`` என்றது அதன் பெடையை என வைத்து, `உன் துணைக்குரிய தோழியும் ஆவன்` என உரைத்தலுமாம். இவற்றைப் படர்க்கை வினையாகக் கொண்டு, இறைவற்கு ஆக்கியும் உரைப்ப. ``புகழின் திகழும் அழகன்`` என்றது, `புகழையே அழகாக உடையவன்` என்றபடி. ``தென்னவன், சேரலன், சோழன்`` என்றது, `தமிழகத்தைச் சிறப்பிடமாகக் கொண்டவன்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 8

வாவிங்கே நீகுயிற் பிள்ளாய்
மாலொடு நான்முகன் தேடி
ஓவி யவர் உன்னி நிற்ப
ஒண்டழல் விண்பிளந் தோங்கி
மேவிஅன் றண்டங் கடந்து
விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன்
தாழ்சடை யோன்வரக் கூவாய். 

பொழிப்புரை :

இளங்குயிலே! நீ இவ்விடத்து வருவாயாக. திருமாலோடு பிரமனும், அடிமுடிகளைத் தேடி, தேடுவதை விட்டு அவ்விருவரும், தன்னைத் தியானித்து நிற்கும்படி அக்காலத்தில் ஒளி மிக்க அனற் பிழம்பாய், ஆகாயத்தைப் பிளந்து உயர்ந்து, பொருந்தி, விண்ணுலகங்களையும் தாண்டி, பரந்த சுடர்களை விட்டுக்கொண்டு நின்ற உண்மைப் பொருளானவனும், தாவி வருகின்ற குதிரைப் பாகனாயிருப்பவனும், நீண்ட சடையை உடையவனுமாகிய தலைவனை வரும்படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

பிள்ளைப் பறவைகளிற் குயிலும் ஒன்றாதல் பற்றி, ``குயிற் பிள்ளாய்`` என விளித்தாள். ``இங்கே வா`` என அருகில் அழைத்தது, `மறைபொருளைக் கேட்டற்குரிய நண்பினை` என்பது புலப்படவாம். தேடி ஓவி - தேடிக் காண மாட்டாது அத்தொழிலை விடுத்து, `பின்பு அவர் அன்பால் நினைந்து நிற்குமாறு` என்க. ``மேவி`` என்றதனை, `மேவ` எனத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 9

காருடைப் பொன்திகழ் மேனிக்
கடிபொழில் வாழுங் குயிலே
சீருடைச் செங்கம லத்திற்
றிகழுரு வாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப்
பாசம் அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின் மேனி
அமுதினை நீவரக் கூவாய். 

பொழிப்புரை :

கரிய நிறத்தோடு பொன்னைப் போன்று ஒளி விளங்கும் உடம்பை உடைய, மணம் நிறைந்த சோலையில் வாழ்கின்ற குயிலே! சிறப்பினையுடைய செந்தாமரை போல விளங்குகின்ற திருமேனியையுடைய செல்வனும், நிலவுலகத்தில் திருவடிகளைக் காட்டிப்பற்றுக்களை ஒழித்து என்னை ஆண்டருளிய, ஆத்தி மாலையையுடைய அழகிய பொன்போலும் மேனியையுடைய அமுதம் போல்பவனுமாகிய எம் பெருமானை வரும்படி நீ கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

கார் - கருமை நிறம். `உடைய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பொன் - அழகு. `காருடை மேனி, பொன்திகழ் மேனி` எனத் தனித்தனி முடிக்க. கடி - நறுமணம். செங்கமலத்தின் - செந்தாமரை மலர்போல; ``செந்தாமரைக்காடு அனைய மேனித் தனிச் சுடரே`` (தி.8 திருச்சதகம்-26) என்று அருளினார். ஆர் - ஆத்தி மாலை.

பண் :

பாடல் எண் : 10

கொந்தண வும்பொழிற் சோலைக்
கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண னாகிவந் திங்கே
அழகிய சேவடி காட்டி
எந்தம ராம்இவன் என்றிங்
கென்னையும் ஆட்கொண் டருளும்
செந்தழல் போல்திரு மேனித்
தேவர் பிரான்வரக் கூவாய். 

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் நெருங்கிய பெரிதாகிய சோலையில் கூவுகின்ற குயிலே! நீ இதனைக் கேட்பாயாக. இங்கே அந்தணன் ஆகி வந்து அழகிய செம்மையாகிய திருவடியைக் காட்டி, என் அன்பரில் ஒருவனாம் இவன் என்று இவ்விடத்தில் என்னையும் அடிமை கொண்டருளிய சிவந்த தீப்போலும் திருமேனியையுடைய தேவர் பெருமான் வரும்படி கூவி அழைப்பாயாக.

குறிப்புரை :

கொந்து - பூங்கொத்து. அணவும் - பொருந்திய. `கூவும்` என்னும் பெயரெச்சத்து உயிர்மெய் கெட்டது. எம்தமர் - எம் உறவினர். ``தமர்`` என்றது பன்மை யொருமை மயக்கம். என்று - என்று இரங்கி.
சிற்பி