திருவாசகம்-திருத்தசாங்கம்


பண் :

பாடல் எண் : 1

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று. 

பொழிப்புரை :

அழகு பொருந்திய இளமையான கிளியே! எம்முடைய திருப்பெருந்துறை மன்னனது சிறப்புப் பொருந்திய திருப்பெயரைத் தூய தாமரை மலர் மேலிருக்கும் பிரமன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால், ஆகியோர் சொல்வதுபோல, திரு ஆரூரன்; சிவந்த திருமேனியையுடையவன்; எம்பிரான்; தேவர் பெருமான் என்று ஆராய்ந்து சொல்வாயாக.

குறிப்புரை :

தசாங்கத்துள் இது பெயர் கூறுகின்றது. தலைவனது பிரிவினால் ஆற்றாளாய தலைவி தலைவனது பெயர் முதலியவற்றைப் பிறர் சொல்லக்கேட்பினும் அவனைக்கூடி மகிழ்ந்தாற் போலும் இன்பம் உண்டாகும் என்னும் நினைவினளாய், அது கிடைக்கப் பெறாமையின், கிளியை நோக்கி அவற்றைக் கூறுமாறு வேண்டிக் கொள்கின்றாள். இவ்வாறே,
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவன்; மொய்பவளத் தொடுதரளம்
துறையாரும் கடல்தோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயோ.
-தி.1 ப.60 பா.10
என்றாற்போல தேவாரத் திருமுறைகளிலும் வருவன காண்க. ஏர் ஆர் - அழகு பொருந்திய. நாமம் - பெயர். ஆரூரன் - திருவாரூரில் எழுந்தருளியிருப்பவன். செம்பெருமான் - சிவந்த நிறத்தையுடைய பெருமான். வெண்மை, இங்கு, தூய்மைமேல் நின்றது. `கிளியே, மலரானும், பாற்கடலானும் செப்புவபோல நீ, பெருந்துறைக்கோனது திருநாமங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, ஆரூரன், செம்பெருமான், எம்பெருமான், தேவர்பிரான் என்று உரையாய்` என வினை முடிக்க. இங்ஙனம் பல பெயர்களைக் கூறினாராயினும், `தேவர்பிரான்` என்பதே முதன்மைப் பெயர் என்றல் திருவுள்ளமாதலை, `தேவதேவன் திருப்பெயராகவும்`` (தி.8 கீர்த்தி. 122) என முன்னே அருளிச்செய்தமையான் அறிக.

பண் :

பாடல் எண் : 2

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்
கன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி.

பொழிப்புரை :

குற்றமில்லாத இனிய சொல்லையுடைய மரகதம் போன்ற பச்சைக் கிளியே! தன்மீது அன்புள்ளவர்க்கு, அன்பினால் ஆட்கொண்டு, பிறவிக்கு மீண்டு வாராதபடி அருள் செய்வோனாகிய பெருமானது நாடாவது, எப்பொழுதும் தென்பாண்டி நாடேயாம்; இதனை நீ அறிவாயாக; அறிந்து ஏழுலகுக்கும் தலைவனும் நம்மை அடிமையாக வுடையவனுமாகிய அவனது நாட்டைச் சொல்வாயாக.

குறிப்புரை :

ஏதம் - குற்றம். `குற்றம் இல்லாத சொல்` என்க. ``மரகதம்`` என்றது உவமையாகுபெயராய்க் கிளியை உணர்த்திற்று. பொழில் - உலகம். `காதலவர்க்கு அருள்புரிவான்` என இயையும். `அன்பால் ஆண்டு` என மூன்றாம் உருபு விரிக்க. `நாடு உரையாய்; அங்ஙனம் உரைத்தற்கு அவன் நாடு யாதெனின்` என்று எடுத்துக்கொண்டு, `அவன் நாடு தென்பாண்டி நாடே` என முடிக்க. இது பின்வருவனவற்றிற்கும் பொருந்தும். ``தென்பாண்டி நாடு`` என்றதனை, `தென்குமரி` என்பதுபோலக் கொள்க. ``பாண்டி நாடே பழம்பதியாகவும்`` (தி.8 கீர்த்தி - 118) என்று முன்னரும் அருளினார்.

பண் :

பாடல் எண் : 3

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதிஎன் - கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை ஊர்.

பொழிப்புரை :

மகரந்தம் பொருந்திய பூக்களையுடைய சோலையிலுள்ள கிளியே! நம்மை ஆண்டருள்கின்ற, உமாதேவி அமர்ந்த பாகத்தையுடையவன், வாழ்கின்ற ஊர் பூமியின்மேல் பத்தர் எல்லோரும் சீராட்டிச் சிவநகர் போலப் புகழ்ந்து போற்றும் திருவுத்தரகோச மங்கையாகிய ஊர் என்று சொல்வாயாக.

குறிப்புரை :

தாது ஆடு - மகரந்தம் நிறைந்த, தத்தை - கிளி. பதி - ஊர். என் - எது; இது, `மெய்யவற்குக் காட்டல்` என்னும் வினா. `உத்தரகோச மங்கையே அவனது ஊர்` என்க. அதனை அறிந்து சொல், என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 4

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநம் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காண்உடையான் ஆறு. 

பொழிப்புரை :

சிவந்த வாயினையும், பசுமையான சிறகினையும் உடைய செல்வியே! பெண்ணே! மேன்மை பொருந்திய சிந்தையிலே யுள்ள குற்றங்களைப் போக்க வந்து இறங்குகின்ற ஆனந்தமே, எம்மை ஆளாகவுடையவனது ஆறாகும். சிந்தையைச் சேர்ந்த தந்தையாகிய திருப்பெருந்துறையையுடைய அவனது அந்த ஆற்றினை உரைப் பாயாக.

குறிப்புரை :

``சிறகின்`` என, வருமொழி பெயராதலின், சாரியை நிற்க இரண்டாம் உருபு தொக்கது. ``செல்வி`` என்னும் பெயரின் இறுதி இகரம், விளியேற்றற்கண் நீண்டது, ``செல்வீ, தையலாய்`` என்றவை உயர்த்தற்கண் அஃறிணை உயர்திணையாயவாறு. வான் - உயர்வு. `உயர்வு வரப்பெற்ற சிந்தை` என்றது, ஞானம் கைவரப்பெற்ற உள்ளத்தை. `சிந்தையது மலத்தை` என்க. கழுவுதல் - பற்றறக் களைதல். ``ஆனந்தம்மே ஆறா`` (தி.8 கீர்த்தி. 106) என்றே முன்னரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 5

கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்
திருளகல வாள்வீசி இன்பமரு முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.

பொழிப்புரை :

முருக்கம்பூப் போலச் சிவந்த வாயினையுடைய அழகிய கிளியே! அழிதல் இல்லாத திருப்பெருந்துறை மன்னனாகிய மேகம் போல்பவன், தங்கியிருக்கின்ற மலை, மனத்திலேயுள்ள அறியாமையாகிய இருள் நீங்க ஞானமாகிய ஒளியை வீசி இன்பம் நிலைத்திருக்கும் வீடுபேற்றினை அளிக்கின்ற அருளாகிய மலை என்பதை ஆராய்ந்து சொல்வாயாக.

குறிப்புரை :

கிஞ்சுகம் - முள்முருக்கு; அஃது ஆகுபெயராய், அதன் பூவைக் குறித்தது. அம் சுகம் - அழகிய கிளி. மஞ்சன், `மைந்தன்` என்பதன் போலி; `வலிமையுடையவன்` என்பது பொருள். வாள் - ஒளி. `இருள், ஒளி` என்பன முறையே, அஞ்ஞானத்தையும், ஞானத்தையும் உணர்த்தி நின்றன. ``அருளும்`` என்னும் பெய ரெச்சத்திற்கு முடிபாகிய `அருள்` என்பது தொகுத்தலாயிற்று. ``இருள் கடிந் தருளிய இன்ப ஊர்தி - அருளிய பெருமை அருள் மலையாக வும்`` (தி.8 கீர்த்தி. 123, 124) என்று முன்னர் அருளியவாறு அறிக. `அருளே, அறிவரால் ஆராய்ந்து மலை எனப்படுவது` என்க. ``காண்`` என்றதனை ஈண்டு அசையாக்காது, `மலை என்பதனை ஆய்ந்து காண்` என முடிப்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 6

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி ஊரும் மகிழ்ந்து.

பொழிப்புரை :

எனது கிளியே! கூட்டில் புகாதே! உவமையில்லாத சிறப்பையுடைய பெருமான் ஊர்தியாகக் கொள்வது எது எனில், எக்காலத்தும் தெய்வப் பெண்கள் தேன்போலும் இனிய சிந்தனையை யுடையவராய், துதிபாட மகிழ்ச்சி கொண்டு பெருமையுடைய வேத மாகிய குதிரையை ஏறி அவன் வருவான். இவ்விடத்தே வந்து அதனைச் சொல்வாயாக.

குறிப்புரை :

இப்பாடு - இவ்விடம். ``இப்பாடே வந்து இயம்பு`` என்றதனை இறுதியிற் கூட்டுக. கூடுபுகல் - கூட்டினுள் புகுந்து விடாதே. ஒப்பு ஆடா - உவமை சொல்ல ஒண்ணாத. ஆடுதல், சொல்லாடுதல். சீர் - புகழ். ``தேன்புரையும் சிந்தை`` என்றது, `இன்பத்தையுடைய மனம்` என்றவாறு. `பெண்கள்` என்பதன் இறுதிநிலை தொகுக்கப்பட்டது. `புரவியை வானத்து ஊரும்` என்க. வானத்து ஊர்தல், வானகதியாகச் செலுத்துதல். அதனானே தெய்வ மகளிர் இன்புற்று ஏத்துவர் என்க. ``பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்`` (தி.8 கீர்த்தி. 116) என முன்னரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 7

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில்பெருந்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படைபகராய் - ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை. 

பொழிப்புரை :

கொம்புத் தேன் போன்ற இனிய மொழியையுடைய கிளியே! குற்றமில்லாத திருப்பெருந்துறைக்கு மன்னன், தனது கையில் ஏந்தும் ஆயுதம், தன்னால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடியவரது களங்கம் அடையாத மனம் உருகும்படி மும்மலங்களையும் அறுப்ப தான சூலமே. பகைவரை வெல்லுகின்ற அந்த ஆயுதத்தினைக் கூறு வாயாக.

குறிப்புரை :

கோல் தேன் - கொம்புத்தேன். ஏற்றார் - ஏற்றுக் கொள்ளப்பட்டார்; ஆட்கொள்ளப்பட்டார். `ஏற்றாரது நெஞ்சு உருக` என்க. `அவரதுருடைய மும்மலங்களின்மேல் பாயும்` என வேண்டுஞ் சொற் களை விரித்துரைக்க. கழுக்கடை - சூலம். ``கழுக்கடை தன்னைக் கொண்டருளியும்`` (தி.8 கீர்த்தி. 110) என்றே முன்னரும் அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 8

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை. 

பொழிப்புரை :

இனிய பால்போன்ற மொழியினையுடைய கிளியே! எங்கள் திருப்பெருந்துறை மன்னனது முன்பு ஒலிக்கின்ற முரசினைப் பற்றிக் கூறுவாயாக. அன்பு காரணமாக அடியவரது பிறவி யாகிய பகை கலங்கி அழிய, பேரின்ப நிலையிலே மிக்கு ஒலிக்கும் பருமைமிகுந்த நாதமே பறையாகும்.

குறிப்புரை :

பால்மொழி - பால்போலும் சொல். முன்பால் - முன்பக்கத்தில். `முற்பால்` என்பது, மெலிந்து நின்றது. `முன்பு` எனப் பிரித்து, `ஆல், அசைநிலை` என்றலுமாம். பேரின்பத்து - பேரின்பத் துடன்; என்றது, `பேரின்பம் உண்டாக` என்றபடி. ஓங்கும் - மிக ஒலிக்கின்ற. பருமையை உணர்த்தும், `பரு` என்னும் உரிச்சொல், இங்குப் பெருமைமேல் நின்றது. நாதம் - நாத தத்துவம். இஃது ஏனை எல்லாத் தத்துவங்களினும் பெரிதாதலை அறிந்துகொள்க. ``நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்`` (தி.8 கீர்த்தி - 108) என முன்னரும் அருளிச் செய்தார். இதன் ஈற்றடி எதுகையின்றி வந்தது; இதனை, `இன்னிசை வெண்பா` என்பர்.

பண் :

பாடல் எண் : 9

ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தார்என் - தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம்உவந்த தார். 

பொழிப்புரை :

இனிமை பொருந்திய மொழிகளையுடைய கிளியே! தீவினைகள் நாளும் அணுகா வண்ணம் நாயேனை ஆளாக உடையவன், விரும்பி அணிந்த மாலை அறுகம்புல் மாலையேயாம்; அதுவே, என்பும் உருகுகின்ற அன்பரிடத்துப் பொருந்துகின்ற திருப் பெருந்துறை மன்னனது உண்மையாகிய மாலை என்று சொல்வாயாக.

குறிப்புரை :

ஆய - கற்றதனால் உளதாய. அள் ஊறும் அன்பர் - மிகச் சுரக்கின்ற அன்பினை உடையவர். மெய் - திருமேனி. `அவன் உவந்த தார்` எனச் சுட்டுப் பெயர் வருவிக்க. முன்னர்க் `கழுநீர்மாலை` கூறியதற்குக் காரணம், ஆண்டு(தி.8 கீர்த்தி. 113)க் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டுங்
கோதிலா ஏறாம் கொடி. 

பொழிப்புரை :

சோலையில் வாழ்கின்ற பச்சைக் கிளியே! தூய்மையான நீர் சூழ்ந்த திருப்பெருந்துறை மன்னனது கொடியாவது, பகைவர் மிகவும் திடுக்கிட்டு அஞ்சும்படி மேலே விளங்கி, அழகைக் காட்டுகின்ற குற்றமில்லாத இடபமேயாகும். அழகு விளங்கும் அக்கொடியினைக் கூறுவாயாக.

குறிப்புரை :

ஏதிலார் - பகைவர். `சாலவும் துண்ணென்ன` என இயையும். துண்ணென் - மனம் நடுங்கல், ஏர் - அழகு. ஏறு - இடபம். `கொடி ஏறாம்` என்க. முன்னர் நீற்றுக் கொடி கூறியதற்கும் காரணம் ஆண்டு(தி.8 கீர்த்தி. 104)க் கூறப்பட்டது.
சிற்பி