திருவாசகம்-கோயில் மூத்த திருப்பதிகம்


பண் :

பாடல் எண் : 1

உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும்
அருளைப் புரியாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே. 

பொழிப்புரை :

பொற்சபையில் ஆடுகின்ற, எம் ஈறில்லா முதல்வனே! எம்மை ஆளாகவுடைய உமையம்மை, சொரூப நிலையில் உன்னிடையே அடங்கித் தோன்றுவாள்; உடையவளாகிய உமையம்மையினிடத்தே, தடத்த நிலையில் நீ அடங்கித் தோன்றுவாய்; அடியேன் இடையே நீங்கள் இருவீரும் இருப்பது உண்மையானால், என் எண்ணம் நிறைவேறும்படி எனக்கு முன்னே நின்று, அடியேனாகிய யான், உனது அடியார் நடுவில் இருக்கின்ற திருவருளைச் செய்வாயாக.

குறிப்புரை :

உடையாள் - எல்லாவற்றையும் தனக்கு அடிமை யாகவும், உடைமையாகவும் உடையவள்; இறைவி. அகத்தை ``நடு`` என்று அருளிச்செய்தார். `அகம், புறம்` என்பன முறையே, வியாப்பிய நிலையையும், வியாபக நிலையையும் குறிக்கும். ``உடையாள் உன்றன் நடுவிருக்கும்; உடையாள் நடுவுள் நீ இருத்தி`` என்றது, `சிவமும், சத்தியும் எவ்வாற்றானும் தம்முள் வேறல்ல` என்றற்கு. இதனை எடுத்தோதியது, இறைவன் பேரருளும், பேராற்றலும் உடைய னாதலைக் குறிப்பித்தற்கு. ``அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால்`` என்றது, பதிப்பொருள் எஞ்ஞான்றும் உயிரினிடத்து நீங்காது நிற்றலைக் குறித்தபடி. இதனை எடுத்தோதியது, அத்தன்மைய னாகிய இறைவன் தமக்கு அருள்புரிதற்கு இயைபுண்மையைக் குறித்தற் பொருட்டாம். ``இருப்பது`` என்பதன்பின் தொகுக்கப்பட்ட, `மெய்ம்மை` என்பது, இவ்விருதிறனும், `மெய்ம்மையானால்` எனப், பின்னர் வருவதனை வற்புறுத்தற்கு ஏதுவாய் நின்றது. ``அடியார்`` என்றது. தமக்கு முன்னே, இறைவனை அடைந்தவர்களை. `எம் முதல்` என இயையும். `அவர்கட்கு மட்டும் அன்றி எனக்கும் நீ தலைவன் ஆதலின், என்னையும் உன்பால் வருவித்துக் கொள்ளற்பாலை` என்பார், ``எம்முதலே`` என்று அழைத்தார். முடியா - அழியாத. `என் இக் கருத்து` எனச் சுட்டு வருவித்து உரைக்க. முன்நிற்றலாவது, முடித்தலை மேற்கொண்டு நிற்றல்.
``முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள்உளதோ``
என்றருளினார், சேக்கிழார் நாயனாரும் (தி.12 பெ.புரா.மநு-47). அதனுள், `பொருள்` என்றது, செயலை. இத்திருப்பாட்டுள், முதல் மூன்று தொடர்களையும் திருவைந்தெழுத்தின் (பஞ்சாக்கரத்தின்) பேதங்களைக் குறிக்கும் குழூஉக் குறியாக ஆள்வாரும் உளர். அவற்றுள் முதல் இரண்டு தொடர்களும், திருவைந்தெழுத்துள் சிவத்தைக் குறிக்கும் சிகாரமும், சத்தியைக் குறிக்கும் வகாரமுமாகிய இரண்டெழுத்துக்களாலாகிய சொல்லைப் பலமுறை சொல்லுங்கால் அமையும் நிலையைக் குறித்தற்கும், மூன்றாவது தொடர், அவ்விரண்டு எழுத்துக்களுடன், ஆன்மாவைக் குறிக்கும் யகாரத்தையும் உடன் சேர்த்துப் பலமுறை கூறுங்கால் அமையும் முறையைக் குறித்தற்கும் ஏற்புடையவாதல் அறிக. இனி, `சிவம், சத்தி, ஆன்மா` என்னும் மூன்றையும் குறிக்கும் சிகார வகார யகாரங்கட்குப் பின்னர் முதல் இரண்டெழுத்தைப் பின்முன்னாக மாற்றி வகார சிகாரங்களாக வைத்து ஒரு தொடராகக் கூறும் முறையும் உண்டு. இது, முதலிலும், முடிவிலும் சிவத்தைக் குறிக்கும் சிகாரத்தைக் கொண்டு நிற்றலால், `இருதலை மாணிக்கம்` என்றும், அதனுள் உள்ள எழுத்துக்களை முதற்றொடங்கி இறுதிகாறும் வரச்சொல்லினும், இறுதி தொடங்கி முதல்காறும் வரச் சொல்லினும், `விகடகவி` என்பதுபோல, வேறுபடாது ஒருவகையாகவே யமைதலின், அதனை, `விகடகவி` என்றும் குறியீடாக வழங்குவர்; அம்முறை, இத்தொடர்களில் யாண்டும் அமைந்திலது என்க.

பண் :

பாடல் எண் : 2

முன்னின் றாண்டாய் எனைமுன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன்
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று
போந்தி டென்னா விடில்அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ
பொன்னம் பலக்கூத் துகந்தானே.

பொழிப்புரை :

பொற்சபையில் திருநடனம் செய்வதை விரும்பி யவனே! பெருமானே! முன்னே, என் எதிரே தோன்றி ஆட்கொண் டாய். நானும் அதன் பொருட்டாகவே முயன்று உன்வழியில் நின்று பணி செய்கின்றேன். ஆயினும் பின்னடைந்து விட்டேன். என்னை இன்று உன்பால் வரும்படி அருளி, `வா` என்று அழையாவிடில் அடிய வர் உன்னிடத்தில் நின்று, இவர் யார் என்று கேட்க மாட்டார்களோ?

குறிப்புரை :

முன்னம் - முன்பு. `முன்னம் என்னை முன்நின்று ஆண்டாய்` எனக் கூட்டுக. யானும் அதுவே முயல்வுற்று - நானும் அங்ஙனம் உனக்கு ஆளாய் இருக்கவே முயன்று. பின் நின்று - உன் வழி நின்று. ஏவல் செய்கின்றேன் - பணிபுரிந்து நிற்கின்றேன். இதன் பின், `ஆயினும்` என்பது எஞ்சிநின்றது. பிற்பட்டொழிந்தேன் - உன் அடியாரோடு உடன்செல்லாமல் பின்தங்கிவிட்டேன். இதன்பின், `ஆதலால்` என்பது வருவிக்க. என் - என்னை, `வர இன்று அருளி நின்று` என மாற்றுக. வர - உன்பால் வருமாறு. அருளிநின்று - அருள் செய்து. அடியார் - முன்பு உன்னுடன் வந்த அடியார்கள். உன் நின்று - உன்பால் நின்று. இவன் ஆர் என்னாரோ - இப்பொழுது இங்கு வருவதற்கு இவன் என்ன உரிமையுடையவன் என்று சொல்ல மாட்டார்களோ. `இந்நிலை நீ, என்னை இங்கு விட்டுச் சென்றதனால் உண்டாயது என்பது கருத்து. `ஆதலின், என்னை விரைந்து உன்பால் அழைத்துக்கொள்ளவேண்டும்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 3

உகந்தா னேஅன் புடைஅடிமைக்
குருகா உள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால்
தக்க வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார்
வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன்
பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 

பொழிப்புரை :

பொன்னம்பலத்தில் ஆடுகின்ற எங்கள் முழுமுதற் பொருளே! அன்போடு செய்யப்படும் தொண்டின் பொருட்டு, என்னை விரும்பி ஏற்றுக் கொண்டவனே! தம் உடலையே அவியாகத் தீயில் இட்டு, உன் வழியிலே வந்தவர்கள், பேரின்பத்தில் வாழும்படி எழுந்தருளி இருப்பவனே! உருகாத மனத்தையுடைய, அறிவு இல்லாத நான், உலகம் அறிய எனது துன்பத்தைச் சொல்லி முறையிட்டுக் கொண்டால், அருளாது ஒழிவது உனக்குத் தகுதி அன்று என்று உன் அடியார்கள் சொல்ல மாட்டார்களோ? அடியேனுக்கு உனது திரு முகத்தைக் காட்டாவிட்டால் யான் இறந்து படுவேன்.

குறிப்புரை :

`அன்புடை அடிமைக்கு உகந்தானே` என மாற்றி, குவ் வுருபை ஐயுருபாகத் திரிக்க. `நான், உருகா உள்ளத்து உணர்விலி யாதலின், என்னை நீ விடுத்துச் சென்றதைப் பலரிடமும் சொல்லி முறையிட்டால், அம்முறையீடு தகுதிவாய்ந்த முறையீடன்று என்று தான் சொல்வார்கள்; ஆதலின், நீயே என்னை மறித்து நோக்கி அழையாவிடில், யான், தீயில் வீழ்தல், திண்வரை பாய்தல் முதலிய வற்றைச் செய்து உயிரைப் போக்கிக் கொள்வேன்` என்பது இங்குக் கூறப்பட்டதாம். `தீயில் வீழ்தல் முதலியவற்றால் உயிரைத் துறத்தலும் ஒருவகை வேள்வியே` என்றும், `அங்ஙனம் செய்து நின்பால் வந்தாரும் சிலர் உளர்` என்றும் கூறுவார், ``மகந்தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய்`` என்று அருளினார். `எய்தவந்திலாதார் எரியிற் பாய்ந்து இறைவனை அடைந்தார்` என அடிகள் முன்னர் அருளிச்செய்தது காண்க (தி.8 கீர்த்தி. 132). முகம் தருதல் - புறங் காட்டாது திரும்பி நோக்குதல்.

பண் :

பாடல் எண் : 4

முழுமுத லேஐம் புலனுக்கும்
மூவர்க் கும்என்த னக்கும்
வழிமுத லேநின் பழவடி
யார்தி ரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க
இரங்குங் கொல்லோ என்று
அழுமது வேயன்றி மற்றென்
செய்கேன் பொன்னம் பலத்தரைசே.

பொழிப்புரை :

பொற்சபையில் ஆடுகின்ற நாதனே! எல்லா வற்றுக்கும் ஆதியான பொருளே! ஐம்புலன்களுக்கும் முத்தேவர் களுக்கும், எனக்குச் செல்லும் வழிக்கும் முதலானவனே! உன்னுடைய பழைய அடியார் கூட்டத்தோடு பெருமை மிக்க சிவலோகத்தில் கூடி சேர்ந்திருத்தலைத் திருவருளால் கொடுத்தருள இரங்குமோ என்று அழுவது அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன்?

குறிப்புரை :

மூவர் - `அயன், அரி, அரன்` என்பவர். முன் நிற்கற் பாலதாய, `மூவர்` என்பது. செய்யுள் நோக்கிப் பின் நின்றது. ``ஐம்புலன்`` என்றது, பூதம் முதலிய பிரகிருதி காரியம் அனைத்திற்கும் உபலக்கணமாய் நின்றது. ``மூவர்க்கும் ஐம்புலனுக்கும் முதல்`` என்றது, `செய்வார்க்கும், செயப்படுபொருட்கும் முதல்` என்றபடி. ``முழுமுதல்`` என்றது இரட்டுற மொழிதலாய், `பெருந் தலைவன்` எனவும். சிறந்த நிலைக்களம் (பரம ஆதாரம் - தாரகம்) எனவும், பொருள் தந்து, முறையே ``மூவர்`` என்றதனோடும், ``ஐம்புலன்`` என்றதனோடும் இயைந்தது. ``என்றனக்கும் வழி முதலே`` என்றது. `எனக்கும், வழிவழியாய் நின்ற தலைவனே` என்றபடி. ``என் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே`` (தி.8 பிடித்த பத்து 1) என்பர் பின்னரும். `திரளோடு` எனவும், `வானின்கண்` எனவும், `கெழு முதற்கு` எனவும், உருபுகள் விரிக்க. கெழுமுதல் - கூடுதல். ``தந் திருக்க`` என்றதில் இரு, அசைநிலை. ``மற்றென் செய்கேன்`` என்றது. `உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்` என்றவாறு. இத்திருப்பாட்டுள் அடியும் சீரும் வேறுவேறாய் வந்து மயங்கின.

பண் :

பாடல் எண் : 5

அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் னடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ.

பொழிப்புரை :

அரசனே! பொற்சபையில் நடிக்கின்ற அமுதே! என்று வாழ்த்தி உன் திருவருளை எதிர்பார்த்து, இரையைத் தேடுகின்ற கொக்கினைப் போன்று இரவும் பகலும் கவலைப் பட்டிருந்து இளைத் தேன். முத்திக்கரையை அடைந்த உன்னடியார் மகிழ்ந்திருப்ப, நீ காட்சி கொடுத்தருளி உன்னடியேனாகிய என்னிடத்தில், பிரை ஊற்றிய பாலில் நெய் இருப்பது போல, வெளிப்படாமல் மறைந்து இருந்தால் உலகத்தார் ஏச மாட்டார்களோ?

குறிப்புரை :

அருள் நோக்கி - அருள் வரும் என்று கருதி. ``இரை தேர் கொக்கொத்து`` என்றது, `பதைப்பின்றி அடங்கி இருந்து` என்ற படி. `கொக்கொக்க கூம்பும் பருவத்து` (குறள் - 490) என்றவாறு, பயன் கிடைக்கும் காலத்தை நோக்கியிருந்து அலுத்து விட்டேன்` என்றடி. ஏசறுதல் - வருந்துதல். வேசறுதல் - இளைத்தல். வேசறுதலை இக்காலத்தார். `வேசாறுதல்` என்ப. கரை - பிறவிக் கடலின் கரை; முத்தி. ``பிரைசேர் பால்`` என்றது, `முதிராத தயிர்` என்றபடி. இது, பிரையிட்ட உடனே காணப்படும் நிலை. பிரையிடாத பாலில் நெய் வெளிப்படும் என நோக்கப்படாமையின் வாளா, `பாலின் நெய் போல` என்னாது, இவ்வாறு அருளிச்செய்தார். ஆகவே, `பிரையிட்டு அது தோய்ந்து முதிர்ந்து வெண்ணெய் வெளிப்படும் என நோக்கியிருப்பார்முன், அஃது அங்ஙனம் முதிராது, பிரையிட்ட நிலையிலே இருப்பது போல இருக்கின்றாய்` என்றதாயிற்று. ஒன்றும் செய்யாதிருத்தலை, `பேசாதிருத்தல் - மௌனம் சாதித்தல்` என்றல் வழக்கு. `அடியராயினாருள் சிலருக்குக் காட்சி வழங்கிக் களிப்பையும், சிலருக்குப் பேசாதிருந்து துயரையும்தரின், நடுவு நிலையாளர் உன்னை ஏச மாட்டார்களோ` என்றபடி.

பண் :

பாடல் எண் : 6

ஏசா நிற்பர் என்னைஉனக்கு
அடியான் என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும்
பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந்
திருவோ லக்கம் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும்
எந்தாய் இனித்தான் இரங்காயே. 

பொழிப்புரை :

ஒளியுருவானவனே! எல்லாம் உடையவனே! பொற்சபையில் நடிக்கின்ற எந்தையே! அடியேனை மற்றவர்கள் எல்லாம் அன்பில்லாதவன் என்று இகழ்வார்கள். உன்னருளையே விரும்பி நிற்கிறேன். ஆதலின் அடியார் சூழ்ந்திருக்கின்ற, உன் திருச் சபையைக் காண்பதற்கு, இனி இரங்கி அருள்வாயாக.

குறிப்புரை :

``ஏசாநிற்பர்`` என்று, எதிர்காலத்தில் நிகழ்காலம், ``பேணா`` என்றது, `செய்யா` என்னும் வினையெச்சம். ``இனித்தான்`` என்றதில், தான், அசைநிலை. திருவோலக்கம் - கொலு. பிறர் எல்லாம் - உலகத்தார் அனைவரும். `ஏசா நிற்பர்`` என்றதற்குமுன், `ஆதலின்` என்பது வருவித்துக் கூட்டி, அத்தொடரை, இரண்டாம் அடியின் இறுதிக்கண் வைத்து உரைக்க. தேசன் - ஒளியுடையவன். `உலகத்தார் எல்லாம் என்னை உனக்கு அடியவன் என்றே சொல்லுவர்; யானும் உனது அருள் ஒன்றையே விரும்பி நிற்பேன்; ஆதலின், யான் உன்னை அடையாது அல்லல் உறின், யாவரும் இருவரையும் ஏசுவர்; அவ்வாறாகாமல் உன் திருவோலக்கம் சேவிக்க இப்பொழுதே இரங்கியருள்` என்பது இதன் திரண்டபொருள்.

பண் :

பாடல் எண் : 7

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன்
என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும்
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள்
வாழ்வே வாவென் றருளாயே.

பொழிப்புரை :

எங்களது வாழ்வாயுள்ளவனே! அம்பலத்தாடும் பெருமான் நமக்கு அருள்புரிவான் என்று, பலகால் நினைந்து இன்புற்றிருக்கும் எளியேனை, அருமையான உபதேசத்தை அருள் செய்து ஆட்கொண்டாய். அவ்வாறு இருக்க, நான் இப்போது ஆள்வாரில்லாத செல்வம் போலப் பயனற்று ஒழிவேனோ? நெருங்கிய பழவடியார்களும் நீயும் நின்று விளங்கி விளையாடுகின்ற பக்கத்திலே நெருங்கி வரும்படி என்னை `வா` என்று அழைத்து அருள் செய்வாயாக.

குறிப்புரை :

பொருள்கோள்: `எங்கள் வாழ்வே, (என்னை முன்பு) அருங்கற்பனை கற்பித்து ஆண்டாய்; (இப்பொழுது) ஆள்வார், இலிமாடு ஆவேனோ! ஏமாந்திருப்பேனை வா என்று அருளாய்`. ஏமாந்து - களிப்புக்கொண்டு. அருங் கற்பனை - அரிய போதனை; அறிதற்கரிய உண்மையை உரைத்தல். மாடு - செல்வம். செல்வம் பயன்படும் பொருளாயினும், அதற்கு உரிமையுடையவர் அருகில் இல்லாதபொழுது அது பயனில்லாதவாறுபோல, என்னை உடையவனாகிய நீ என்னைப் புறக்கணித்திருப்பின் நான் கெடுவேன்` என்றது இவ்வுவமையின் பொருள். பசுக்களை, `மாடு` என வழங்குதல் உயர்ந்தோர் வழக்கிற் காணப்படாமையின், ``மாடு`` என்றதற்கு, `பசு` என்று உரைத்தல் ஆகாது என்க. ``ஆள்வார் இலி மாடு ஆவேனோ`` என்றதில் ஆக்கம் `உவமை குறித்தது` என்பர், மாதவச் சிவஞான யோகிகள் (சிவஞானபோதம்-சூ.7, அதி.3, சிவ ஞானசித்தி - சூ.8.29.) `ஏமாத்தல், ஏமாறுதல்` என்னும் சொற்களிடை வேறுபாடு அறியாதார் `ஏமாத்தல்` என்பதற்கும், `ஏமாறுதல்` என்பதன் பொருளே பொருளாக உரைப்பர்; அது பொருந்தாமையை, சான்றோர் செய்யுட்கள் நோக்கி அறிந்துகொள்க. `ஏமாறுதல்` என்பது, `ஏமம் மாறுதல்` என்பதன் மரூஉ. எனவே, இது, பிற்கால மரூஉ மொழிகளுள் ஒன்று என்க.

பண் :

பாடல் எண் : 8

அருளா தொழிந்தால் அடியேனை
அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ.

பொழிப்புரை :

என்னை ஒரு பொருளாகக் கொண்டு வலிய வந்து ஆட்கொண்ட பொன் போன்றவனே! பொற்சபையில் நடிக்கின்ற கூத்தனே! நீ அருள் செய்யாது ஒழிந்தனையாயின், என்னை இவ் வுலகில் அஞ்சாதே என்பவர் யாருளர்? மயக்கம் பொருந்திய மனத் துடன் உன்னைவிட்டு விலகித் துன்பப்படுகின்ற என்னை `வா` என்று அழைத்து உன் தெளிவு பொருந்திய கூட்டத்தைக் காட்டாவிடில், யான் இறந்து போனால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களோ?

குறிப்புரை :

மருள் ஆர் மனம் - மயக்கம் பொருந்திய மனம். ``தெருளார்`` என்றது, `தெளிவையுடைய அடியார்` என்னும் பொருட்டாய், ``உன்`` என்றதற்கு முடிபாயிற்று. ``செத்தே போனால்`` என்று, அனுவாதமாக அருளிச்செய்ததாகலின், `காட்டாயேல் செத்தே போவேன்; அவ்வாறு போனால் சிரியாரோ` என்று உரை உரைக்கப் படும். ``செத்தே`` என்ற ஏகாரம், தேற்றம். பிராரத்த கன்ம முடிவின் கண் சூக்கும உடம்பு நீங்காது தூல உடம்பு மாத்திரை நீங்குதலே, `சாதல்` எனப்படும். இரண்டு உடம்பும் ஒருங்கு நீங்குதல், `சாதல்` எனப்படாது; என்னையெனின், முன்னது ஒருபிறப்பை விடுத்து மற்றொரு பிறப்பிற் செல்வதேயாகலானும், பின்னது பிறவியிற் செல்லாது, வீடு பெறுதலேயாகலானும் என்க. எனவே, ``சாவா வரம் பெறுதல்`` என்பதற்கும், `மீளப் பிறக்கும்நிலையில் உடம்பு நீங்கப் பெறாத வரம்` என்பதே கருத்தாவதன்றி, எப்பொழுதும் உடம்பொடு கூடியிருத்தல் என்பது கருத்தன்றாம். என்னை? அறிவுடையோர், யாதானும் ஒருகாரணம் பற்றிச் சிலநாள் மிகுதியாக உடம்பொடு நிற்க விரும்புதலன்றி, எஞ்ஞான்றும் உடம்பொடுகூடி நிற்க விரும்பா ராதலின். `உடம்பு அருவருக்கத்தக்கதன்றி விரும்பத்தக்க பொருளன்று` என்பது மேல் இனிது விளக்கப்பட்டது. இவ்வாற்றால் அடிகள், `செத்தே போவேன்` என்றது, `நீ என்னைப் புறக்கணிப்பின், மீளப் பிறவியில் வீழ்வேன்; அதுகண்டு உன் அடியார்கள், அருள் பெற்ற பின்னரும் அதனைப் பேணாது பிறவியில் வீழ்ந்தான்; என்னே இவனது அறிவிருந்தவாறு என எள்ளி நகையாடுவாரல்லரோ` என்று அருளிச்செய்தவாறாம். இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார் பின்னர்ப் பிறவியில் வீழ்தல் எஞ்ஞான்றும் இல்லையாயினும், அடி களது வீடு பேற்று அவா, அவ்வாறு அவரை அஞ்சப்பண்ணியது என்க.

பண் :

பாடல் எண் : 9

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே றிருந்துன் திருநாமந்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே.

பொழிப்புரை :

தலைவனே! பழைய அடியார்கள் சிரிப்பார்கள்; மகிழ்வார்கள்; இன்புறுவார்கள்; கூடிக்கூடி உனது திருநாமத்தைக் கூறுவார்கள்; சிலர் கேட்பார்கள்; அதனைப் பாராட்டுவார்கள்; தனித்தனியே இருந்து உனது திருப்பெயரை மனத்திலே ஊன்று வார்கள்; பொற்சபையின் கண்ணே நடிக்கின்ற இறைவா என்று துதிப் பார்கள். அவர்கள் எதிரிலே நாய் போன்றவனாகிய யான் இகழ்ச்சி யுடையவனாய் இருப்பேனோ? இனியேனும் அருள் புரிவாயாக.

குறிப்புரை :

முன்னைத் திருப்பாட்டில் வந்ததனை இத்திருப்பாட்டில் வந்த, ``உன் தெருளார்`` என்பதனை இங்கும் உய்த்து, ``திரண்டு திரண்டு`` என்றதனை முதலில் வைத்துரைக்க. தேனிப்பார் - இன்புறுவார். இதனை, `தியானிப்பு` என்பதன் மரூஉ என்பாரும் உளர். `தியானித்தல்` என்பது, `சானித்தல்` என வருவதனையே காண்கின்றோம். ``ஒண்கருட சானத்தில் தீர்விடம்போல்``, ``கோதண்டம் சானிக்கில்`` (சிவஞானபோதம். சூத்.9. அதி.2.3.). வார்த்தை - புகழ். மெச்சுவார் - பாராட்டுவார். வெவ்வேறிருந்து - தனித்தனியே இருந்து, ``நாமம்``; திருவைந் தெழுத்து. தரித்தல், நாவினும், மனத்தினும். நரிப்பாய் - துன்பம் உடையவனாய். இறை உலகத்தை அடைந்த அடியார்கள் தூய உடம்பு உடையராய் எங்கும் இயங்குவராதலின், என்னைக் கண்டு இரங்குவர் என்பார், ``அவர்முன் நரிப்பாய் இருப்பேனோ`` என்று அருளிச் செய்தார். நரிப்பு - துன்பத்தால் தாக்கப்படுதல். இது, `நெரிப்பு` என்பதன் மரூஉப் போலும்! அன்றி ஒருதேய வழக்கெனினுமாம். ஓகாரம் இரக்கப்பொருட்டு. நல்காய் - இரங்காய்.

பண் :

பாடல் எண் : 10

நல்கா தொழியான் நமக்கென்றுன்
நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
யருளாய் என்னை உடையானே. 

பொழிப்புரை :

என்னை ஆளாக உடையவனே! நமக்கு இறைவன் அருள் புரியாது போகான் என்று எண்ணி, உனது திருநாமமாகிய அஞ்செழுத்தைப் பலகால் கூறி, கண்கள் நீர் பெருகி, வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி, மனத்தினாலே எண்ணிக் கனிந்து, பலகாலும் உனது உருவத்தைத் தியானித்து பொற்சபை என்றே துதித்துத் தளர்வு உற்றிருக்கும் உயிராகிய எனக்கு இரங்கி அருள் புரிவாயாக.

குறிப்புரை :

`பொருளறிந்து நன்கு போற்றாது அறிந்த அளவில் எப்பொழுதும், எவ்விடத்தும் சொல்லுகின்றேன்` என்பார், ``பிதற்றி`` என்றார். ``மல்கா`` முதலிய நான்கும், ``செய்யா`` என்னும் வினையெச்சங்கள். பாவித்து - நினைத்து. பரவி - துதித்து. ஒல்கா நிற்கும் -மெலிகின்ற. தம்மையே தமது எளிமையும் அயன்மையும் தோன்ற, `உயிர்க்கு` எனத் திணையும், இடமும், வேறாக அருளிச் செய்தார்.
சிற்பி