திருவாசகம்-கோயில் திருப்பதிகம்


பண் :

பாடல் எண் : 1

மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடைய அன்பே. 

பொழிப்புரை :

தேனின் தெளிவானவனே! சிவபிரானே! திருப் பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவனே! அளவு இல்லாத பதவிகள் எல்லாவற்றையும் கடந்து நின்ற ஆனந்தமே! என்னுடைய அன்பு உருவமே! பகைத்து, என்னை மயக்கச் செய்யும் வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களின், வாயில்களையும் அடைத்து அமுதமே சுரந்து நின்று என்னகத்தே தோன்றுகின்ற ஒளியே! உன்னை நான் உள்ளவாறு காணும்படி வந்தருள்வாயாக.

குறிப்புரை :

மாறிநின்று - தம்முள் ஒன்றோடு மற்றொன்று மாறுபட்டு நின்று; என்றது, `ஒன்று வந்து பற்றும்பொழுது, மற்றொன்று அதனை விலக்கி வந்து இவ்வாறு இடையறாது சூழ்ந்து` என்றபடி. இதற்கு இவ் வாறன்றி, `என்னோடு பகைத்து நின்று` என உரைப்பின், ``மயக்கிடும்`` எனவும் ``வஞ்சம்`` எனவும் வருவனவற்றாற் பெறப்படுவதற்கு வேறாய்ப் பெறப்படுவது ஒன்று இன்மை அறிக. வஞ்சம், அற்றம் பார்த்து வருதல். ``ஒருவனை வஞ்சிப்பதோரும் அவா`` (குறள்-366) என்றதும் காண்க. ``வழி`` என்றது, பொறிகளை; ``பொறிவாயில் ஐந்து`` என்றது காண்க (குறள்-6). ``அமுது`` என்றது, அதன் இன்பம் போலும் இன்பத்தை. ``அமுதே`` என்ற ஏகாரம், பிரிநிலை. ``ஊறி நின்று`` என்றதனை, `ஊறி நிற்க` எனத் திரிக்க. எழுதல் - தோன்றி வளர்தல். ஆசான் மூர்த்தியாய் வந்து ஆட்கொண்ட கோலம், இறைவனது இயற்கைக் கோலம் அன்றாதலின், இயற்கைக் கோலத்தில் காணுதலை, ``உள்ளவா காணுதல்`` என்றார். இக்காட்சி, சிவலோகத்தே காணப்படும்.
`சிவலோகம் அல்லது சிவபுரம்` என்பது, சுத்த தத்துவ புவனங்கள், அனைத்திற்கும் பெயர். இப்புவனங்கள் ஏனைய அசுத்த தத்துவ புவனங்கட்கு உள்ளீடாய் அவற்றோடு உடன் நிற்பனவும், அவை அனைத்திற்கும் மேலாய் அவற்றைக் கடந்து நிற்பனவும் என இரு கூறுபட்டு நிற்கும். அவ் இருகூற்றுள், அசுத்த தத்துவ புவனங் களோடு உடனாய் நிற்கும் சிவலோகம், `பதமுத்தித் தானம்` என்றும், அவற்றிக்கு அப்பாற்பட்டு நிற்கும் சிவலோகம், `அபரமுத்தித் தானம்` என்றும் சொல்லப்படும். அவற்றுள் பதமுத்தித்தானம், `சரியை, கிரியை, யோகம்` என்னும் மூன்று நிலைகளின் நின்றோர் சென்று அடையும் இடமும், அபரமுத்தித்தானம், ஞானத்தில், `கேட்டல், சிந்தித்தல், தெளிதல்` என்னும் நிலைகளில் நின்றோர் சென்று அடையும் இடமுமாம். நிட்டையை அடைந்து மீளாது நின்றோர், இவை அனைத்தையும் கடந்து சிவனோடு இரண்டறக் கலப்பர்.
நிட்டையிலே நிலைத்து நில்லாது மீட்சி எய்துவோர், அபரமுத்தித் தானத்திற் சென்று தடத்த சிவனை அடைந்து, அவனது அருள் வழியே பின்னர்ச் சொரூப சிவனை அடைவர், பதமுத்தித் தானத்தை அடைந்தோர் தாம் செய்த சரியை முதலியவாகிய தவத்தின் வன்மை மென்மைகட்கு ஏற்ப அங்கு நின்றே ஞானத்தை அடைந்து, அபரமுத்தி, பரமுத்திகளில் ஏற்ற பெற்றியாற் செல்லுதலும், மீள இந்நிலவுலகிற் பிறந்து ஞானத்தை அடைந்து, கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பவற்றால் பின்னர் அபரமுத்தி, பரமுத்தி களை அவ்வாற்றான், அடைதலும் உடையராவர். அபரமுத்தித் தானத்தை அடைந்தோருள் அசுத்தவுலகை நோக்குவோர் அரியராக லின், அவர்க்குப் பிறப்பு உண்டாதல் மிகச் சிறுபான்மையே. `அபர முத்தர்க்குப் பிறப்பில்லை` என்பதும் பெரும்பான்மை பற்றியேயாம். ஆயினும் நிட்டை கூடாதவழி, அசுத்த உலகை நோக்கும் நோக்கு ஒழியாது ஆகலானும், அந்நோக்கினை, கேட்டல் முதலிய மூன்று ஞானங்களும் மெலிவித்தலும், கெடுத்தலும் பெரும்பான்மை யாயினும், சிறுபான்மை அது தப்புதலும் கூடுமாகலின், பிறத்தல் அவர்க்கும் சிறுபான்மை உளதேயாம்.
`காண அருளாய்` என இயையும். வந்து - மீளத் தோன்றி, தேறல் - தேன். தெளிவு - வடித்தெடுத்து. ஈறிலாப் பதங்கள் - அள வில்லாத உலகங்கள். ``ஈறிலா`` என்றதனை, இன்பத்திற்கு அடை யாக்குவாரும் உளர். ``யாவையும்`` என்றதனால், அபர முத்தித் தானமாகிய சுத்த மாயா புவனங்களும் அடங்கின. `இவை அனைத்தை யும் கடந்த இன்பம்` என்றதனால், அது பரமுத்தி இன்பமாதல் வெளிப்படை. இவ்வின்பத்தைப் பயக்கும் அன்பு, `காண்பான், காட்சி, காட்சிப்பொருள்` என்னும் வேற்றுமை தோன்றாது காட்சிப் பொருளாகிய சிவம் ஒன்றே தோன்ற நிற்கும் அதீத நிலைக்கண்ண தாகிய பேரன்பாகலின், அதனை இறைவனின் வேறாக அருளாது. ``என்னுடைய அன்பே`` என, ஒன்றாகவே அருளிச்செய்தார். எனவே,
அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவதும் ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
(தி.10 திருமந்திரம் - 270.) என்றருளிய அன்பும் இதுவேயாதல் பெறப்பட்டது.
அடிகள் இறைவனை இவ்வாறு விளித்தமையால் அவர் விரும்பியது பரமுத்தி இன்பத்தையன்றி வேறொன்றையன்று என்பது தெள்ளிதாதலின், அவர் பலவிடத்தும் தமக்குத் தருமாறு வேண்டும். சிவலோகம் அல்லது சிவபுரம் என்பது, அபரமுத்தித்தானத்தையன்றிப் பதமுத்தித் தானத்தையன்றென்பது இனிது விளங்கும். அன்னதா யினும், அடிகள் பரமுத்தியை வேண்டாது, அபர முத்தியையே வேண்டுதல் என்னையெனின், திருப்பெருந்துறையில் தம்மோடு உடன் இருந்து அருள்பெற்ற அடியார்கள் பலரும் அடைந்தது அபர முத்தியே என்னும் கருத்தினால், தமக்கும் அதுவே தரற்பாலது என்னும் உணர்வினாற்போலும் என்க. அபரமுத்தித் தானத்தில் அடை யும் நிலைகள் வாளா, `சாலோகம், சாமீபம், சாரூபம்` எனக் கூறப் படாது, `சுத்த சாலோகம், சுத்த சாமீபம், சுத்த சாரூபம்` என வேறு வைத்துக் கூறப்படும்; அந்நிலையே அடிகளால் குறிப்பிடப்படுவது என்க. அதனை அடிகள் வேண்டுவதும் அவற்றில் உள்ள விருப் பத்தால் அன்று; அதனையடைந்துவிடின், பின்னர்ப் பிறப்பில்லையாய் ஒழியும் என்னும் துணிவினாலேயாம் என்க.

பண் :

பாடல் எண் : 2

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யான்இதற் கிலன்ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரைசே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் முன்னுமாய், பின்னுமாய் முழுதுமாய் வியாபித்த மலமற்றவனே! எல்லையற்ற பரம்பொருளே! அழகிய திருப்பெருந்துறையை உடையவனே! சிவபிரானே! சிறப்புப் பொருந்திய சிவபுரத்துக்கு அரசனே! அன்பின் மிகுதியால் அடியேனை உயிரோடு உடம்பும் இன்ப வெள்ளமாய்க் கசிந்து உருகும்படி என் நிலைக்குத் தகுதி இல்லாத இனிய அருளைப் புரிந்தாய். இந்தப் பேருதவிக்கு நான் உனக்குத் திரும்பச் செய்யக் கூடிய உதவி இல்லாதவனாய் இருக்கிறேன்.

குறிப்புரை :

ஆக்கை (உடம்பு) உயிரின் வழியே நிற்பதாகலின், அதனை, ``ஆவியோடு`` என, உயிரொடு சார்த்திக் கூறினார். பரம் - தரம்; தகுதி. ``முன்பு, பின்பு`` என்றவை, காலப் பெயராய், அவற்றின் கண்ணவாகிய பொருளைக் குறித்தன. ``பின்பும்`` என்றதன்பின்னும், `ஆய்` என்பது விரிக்க. இனி `முன்பும் பின்புமாய்` என மாறிக் கூட்ட லும் ஒன்று. ``முழுதும்`` என்றது, இடம்பற்றி. ``முன்புமாய்`` முதலிய வற்றை முதற்கண் கூட்டி உரைக்க.

பண் :

பாடல் எண் : 3

அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 

பொழிப்புரை :

அடியார்களுக்கு இறைவனே! அடியேனுடைய தந்தையே! உயிரோடு உடம்பும் அடுக்குத்தோறும் நெகிழ்ச்சி யுண்டாகும்படி உள்ளத்தே புகுந்து நின்று உருகச்செய்து, பொய்யாகிய அஞ்ஞானத்தைப் போக்கிய உண்மை ஞானமே! அலை மோதாது நிலையான அமுதமாகிய தெளிந்த கடலே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! வாக்கும் மனமும் கடந்து நின்று திருவருளால் உணரும்படி நான் உன்னைப் புகழ்ந்து உரைக்கின்ற வழியை உணர்த்துவாயாக.

குறிப்புரை :

`அன்பர்க்கு அரைசனே` எனக் கூட்டுக. அரைசன் - அரசன்; போலி. `காவல் குழவி கொள்பவரின் ஓம்பும்` (புறம்-5.) அரசர்போல, இறைவன் தன் அன்பரை ஓம்புதலின், அவனை அவர்க்கு அரசன் என்று அருளினார். ``உடைய`` என்றது, ஆறாம் வேற்றுமைப் பொருள் தருவதோர் இடைச்சொல்; அஃது இங்கு நான்காவதன் பொருட்கண் மயங்கி வந்தது. புரை - உள்ளறை. அஃது, ஆக்கையிடத்து, தூலதேகத்தின்கண் உள்ள சத்த தாதுக்களையும், மற்றும், சூக்கும தேகம், பரதேகம் என்பவற்றையும், உயிரிடத்து, பாச ஞான பசுஞான பதிஞானங்களையும் குறித்தற்பொருட்டு, அடுக்கி நின்றது. கனிய - இளகும்படி. பதிஞானத்தால் இறைவனை உணரும் பொழுதன்றியும், பாசஞானங்களால் உலகினை உணரும் பொழுதும் அன்பர்கட்கு வேண்டுவது இறையன்பே. இனி, ``புரைபுரை`` என்றதனை ஆக்கை ஒன்றிற்கே கொள்ளுதலுமாம். மிகுதலின், ஆவியும் புரை புரை கனிவதாக அருளிச்செய்தார். `இருள் - அறியாமை; ஆணவ மலம்` என்பதும், `அது முத்திக் காலத்தில் சத்தி கெட்டு நிற்கும் இயல் புடையதாதலின் இல்பொருள்போல வைத்துப் பொய் எனப்பட்டது` என்பதும் சிவஞானபோதத்து ஆறாம் சூத்திர மாபாடியத் தொடக் கத்துக் கூறப்பட்டமை காண்க. மெய்ச்சுடர் - அழிவில்லாத என்றும் நிலைபெற்று நிற்கும் ஒளி. `பொராது` என்னும் எதிர்மறை வினையெச் சத்து ஈறு கெட்டது. மன்னுதல் - நிலைபெறுதல். `திரை பொரா மன்னும் அமுதத் தெண்கடல்` என்னும் இல்பொருள் உவமப் பெயர், ஆகு பெயராய் உவமிக்கப்படும் பொருளை உணர்த்திற்று. இறைவன் என்றும் ஒருபெற்றியனாய் நிற்றலைக் குறிக்க, ``திரைபொரா மன்னும்`` என்றும், இன்ப மயனாதலைக் குறிக்க, ``அமுதம்`` என்றும், அறிவு வடிவினனாதலைக் குறிக்க. ``தெள்`` என்றும் அடைபுணர்த்து அருளிச்செய்தார். எனவே, இம்மூன்று அடைகளானும் முறையே, `சத்து, ஆனந்தம், சித்து` என்னும் இயல்புகள் குறிக்கப்பட்டவாறு அறிக. இது, மெய்ச் சுடராதலைப் பிறிதோராற்றான் இனிது விளக்கிய வாறு.
`உரையுணர்வு` என்னும் உம்மைத் தொகை, ``இறந்து`` என்றதனோடு இரண்டாவதன் பொருள்படத் தொக்கது. `இறைவன் வாக்குமனாதீதன்` என்பதில் `வாக்கு` என்பது பாசஞானத்தையும், `மனம்` என்பது பசுஞானத்தையுமே குறிக்கும் என்பது சிவஞான போதத்து ஆறாம் சூத்திரத்தின் இரண்டாம் அதிகரண மாபாடியத்தான் இனிது விளங்கிக் கிடப்பது. அதனால், இங்கு, ``உரை`` என்றது பாச ஞானத்தையும், ``உணர்வு`` என்றது பசுஞானத்தையுமாதல் தெளிவு. இறத்தல் - கடத்தல். இவ்விருஞானத்தானும் இறைவன் உணரப் படானாகலின், ``உரையுணர்வு இறந்து நின்று`` எனவும். இவற்றான் உணரப்படானாயினும், பதிஞானத்தால் உணரப்படுதலின், ``உணர்வது`` எனவும், அவன் இங்ஙனம் நிற்றல், சூக்கும சித்தாய் நிற்கும் தனது தனித் தன்மையாலாதலின், ``ஓர் உணர்வே`` என்றும் அருளிச்செய்தார். ``உணர்ந்தார்க்கு உணர் வரியோன்`` (தி.8 கோவையார் - 9) என்பதில், ``உணர்ந்தார்க்கு`` என்பதற்கு, `அருள்நிலையில் நின்று வேறாக உணர்ந்தார்க்கு` என்பதும், ``உணர்வரியோன்`` என்பதற்கு, `அங்ஙனம் வேறு நில்லாது அவரைத் தன் திருவடி வியாபகத்துள் அடக்கி ஆனந்தத்துள் திளைத்திருக்கச் செய்பவன்` என்பதுமே பொருளாகலின், அஃது இதனோடு மலையாமை அறிக. இத் திருக்கோவைப் பகுதிக்குப் பேராசிரியர் உரைத்த உரைக்கும் இதுவே கருத்தாதல் அறிந்துகொள்க. ``உணர்ந்தார்க்கு`` என்பதற்குப் பிறிதொரு பொருளும் அவர் இரண்டாவதாகவே உரைப்பார். `உரையுணர்வு இறந்தவனாதலின், உன்னை உரைக்குமாறு இல்லை` என்பார், ``யான் உன்னை உரைக்குமாறு உணர்த்து`` என்று அருளினார், எனவே, `இயன்ற அளவில் உன்னைப் பாடுவேன்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 4

உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்
உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே
குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்
குறிகினேற் கினியென்ன குறையே.

பொழிப்புரை :

கற்று உணர்ந்த, பெரிய முனிவரும், தேவருடன், ஏனையோரது உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் அருமையான பொருளே! ஒப்பில்லாதவனே! எல்லா உயிர்களுக்கும் உயிரானவனே! பிறப்புப் பிணியைப் போக்கி உய்விக்கின்ற மருந்து போன்றவனே! செறிந்த இருளில் தெளிவாய்க் காணப்பட்ட தூய ஒளியே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் பெருமானே! குணங்கள் இல்லாத ஆனந்தமே! உன்னை அடைந்த எனக்கு இனி என்ன குறை உள்ளது?

குறிப்புரை :

உணர்ந்த - கலைஞானத்தைப் பெற்ற. உம்பர் - தேவர். ஒழிந்தார் - ஏனையோர்; என்றது, அயன் மால் முதலியோரை. தேவர் பூதனாசரீரம் இன்றிப் பூதசார சரீரமே உடையராதலும், அயன் மால் முதலியோர் காரணக் கடவுளராதலும் பற்றி, அவர்தம் ``உணர்விற்கும் தெரிவரும் பொருளே`` என எடுத்தோதினார். இணங்கிலி - நிகரில் லாதவனே; அண்மை விளி. `இணங்கிலீ` எனப் பாடம் ஓதுதலுமாம். ``பிறப்பறுக்கும்`` என்றது, `ஆட்கொள்கின்ற` என்னும் பொருளது. பிறவி, நோயாகலின், `அதற்கு மருந்தாய் இருப்பவனே` என்றார். திணிந்தது - செறிந்தது. ஓர் இருள் - பேர் இருள். தெளிந்த - இனிது விளங்கிய. வெளி - ஒளி. இஃது உவமையாகுபெயர். எனவே, `செறிந்த இருளில் கிடந்து அலமருவோர்க்கு, அங்கு இனிது தோன்றிய ஒளிபோன்றவனே` என்பது பொருளாயிற்று. `அறியாமையில் மூழ்கி யிருந்த என்முன் நீ பொருக்கெனத் தோன்றி என்னை அறிவனாக் கினாய்` என்பதனை, இவ்வாறு அருளிச்செய்தார். குணங்கள் - முக் குணங்கள். இல்லா - கலவாத. முக் குணங்களுள் சாத்துவிகத்தால் தோன்றிப் பின் ஏனை இரண்டனாலும் வரும் துன்பத்தாலும் மயக்கத் தாலும் அழிவெய்தும் இன்பமன்றி, என்றும் நிலைபெற்று, துன்பம் மயக்கம் என்பவற்றோடு கலவாத பேரின்பமாகலின், ``குணங்கள்தாம் இல்லா இன்பமே`` என்றும் அருளினார். குறுகினேற்கு - அடைந்த எனக்கு. `என்ன` எனத் திரிந்து நின்ற, `எவன்` என்னும் வினாப் பெயர், இன்மை குறித்து நின்றது, ``கற்றதனாலாய பயனென்கொல்`` (குறள்-2.) என்புழிப்போல. பொன்மலையைச் சார்ந்த காக்கையும் பொன்னிறத்ததாவது போல, (``கனக மலையருகே - போயின காக்கையும். அன்றே படைத்தது பொன்வண்ணமே`` தி.11 பொன்வண்ணத் தந்தாதி - 100.) உன்னை அடைந்தோரும் உன்னைப்போலவே குணங்கள் தாம் இல்லா இன்ப வடிவினராவராதலின், உன்னை அடைந்த எனக்கு இனிப் பெறக்கடவதாய் எஞ்சிநிற்கும் பொருள் யாது உளது என்பார், ``உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறை`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 5

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை யென்னிரக் கேனே. 

பொழிப்புரை :

முடிவில்லாத செழிப்பான ஒளி மலையே! வேதமாகிய மறையின் பொருளாகி என்னுடைய மனத்தின்கண் வந்து, நிலை பெற்ற தலைவனே! கட்டுப்படுத்தப்படாத வெள்ளம் போல என் சித்தத்தின் கண் பாய்கின்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! ஆன்ம நாதனே! நீ இப்பிறவியிலேயே என் உடம்பையே கோயிலாகக் கொண்டாய். இனிமேல் உன்னை யான் வேண்டிக் கொள்வது என்ன இருக்கிறது?

குறிப்புரை :

எவ்வாற்றானும் யாதொரு பொருளையும் வேண்டுந் தன்மை இல்லாத பேரின்பமயன் என்பதை நன்கு வலியுறுத்தற் பொருட்டு, `நிறைவே` என்று போகாது, ``குறைவிலா நிறைவே`` என்று எதிர்மறை முகத்தானும் அருளினார். தீமை சிறிதும் இல்லாது நன்மையே வடிவாய பொருள் இறைவனையன்றிப் பிறிதில்லாமை அறிக. இதுபற்றியே இறைவனுக்குரிய பெயர்கள் பலவற்றுள்ளும், `சிவன்` என்னும் பெயர் தலையாயதாயிற்று. இப்பெயர் பிறர் ஒருவருக்கும் பொருந்தாமையை, ``சிவன் எனும் நாமம் தனக்கே யுடைய செம் மேனியெம்மான்`` (தி.4 ப.112 பா.9) என்று எடுத் தோதியருளினார் நாவுக்கரசர். ``குறைவிலா நிறைவே`` (தி. 7. ப.70. பா. 6.) என்னும் இவ்வரிய தொடரை ஆளுடைய நம்பிகளும் எடுத்தருளிச்செய்தல் அறிந்துகொள்ளத்தக்கது. கோது - பயன்படாத பகுதி; இஃது அமுதின்கண் இன்மையால், ``கோதிலா அமுதே`` என்றார். ஈறு - அழிவு. கொழுஞ் சுடர்க் குன்று - பேரொளியுடைய மலை; இஃது ஆகுபெயராய், ஞானமே உருவாய் உள்ள இறைவனைக் குறித்தது. ``மறை`` என்றது கலை ஞானத்தையும், ``மறையின் பொருள்`` என்றது அநுபவஞானத்தையுமாம். மன் - தலைவன். சிறை - அணை. ``நீர்`` என்றது, வெள்ளத்தை. தண்மையும் பெருமையும் பற்றிப் பேரின்ப வடிவினனாகிய இறைவனுக்கு வெள்ள நீர் உவமையாயிற்று. ``சிந்தைவாய்`` என்றதில் வாய், ஏழனுருபு. ``சிந்தை`` என்றது, தெளிவுபெற்ற சிந்தையை என்றது ஆற்றலான் விளங்கிற்று. உடல் என்றது உள்ளத்தை. ``நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற - கற்பகமே`` (தி.6 ப.95 பா.4) என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசரும். ``இனி உன்னை என் இரக்கேன்`` என்றது, `இன்பமே வடிவான நீ, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காது நின்றபின், உன்பால் யான் வேண்டிக் கொள்ளத் தக்கது யாதுளது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 6

இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆய்அவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே. 

பொழிப்புரை :

உன் திருவருளை இடைவிடாது வேண்டி உருகும் போது என்னுடைய மனத்தினுள்ளே தோன்றுகின்ற ஒளியே! தேவர்கள் தலைமீது விளங்குகின்ற தாமரைமலர் போன்ற திருவடியை உடையவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவ பெருமானே! எங்கும் நிறைந்து ஆகாசமும் நீரும் பூமியும், நெருப்பும், காற்றும் ஆகி, அவை அல்லாதவனாய் அவ்வாறு அருளாலன்றி காணப்படாத வடிவத்தை உடையவனே! இப்பொழுது உன்னைக் கண்ணாரக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

குறிப்புரை :

இரந்து இரந்து - முனைப்பு நீங்கி உன்னைப் பல்காலும் வேண்டிநின்று. உருக - அன்பு செய்ய. ``இரந்திரந்து`` என்று அடுக்கி னால், ``உருக`` என்றதனையும் அடுக்காக வைத்துரைத்தல் பெறப் பட்டது. அடுக்குக்களில் முன்னது பன்மைப் பொருளிலும், பின்னது தொறுப்பொருளிலும் வந்தன. இவற்றால் இறைவனை அனுபவமாகப் பெறுமாறு அருளிச் செய்யப்பட்டது. ``ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்-ஆரேனும் காணா அரன்`` (திருகளிற்றுப் படி-15) என்ற திருவாக்கினையும் நோக்குக. ``இமையோர் சிரந்தனிற் பொலியும் சேவடியாய்`` என்றதனால், அவர்க்கு ஒரோஒருகால் புறத்துக் காணப் படுவதன்றி, அகத்தே எஞ்ஞான்றும் நின்று நிலவும் அநுபவப் பொருளாகாமை பெறப்படும். நிரந்த - முறைப்பட்ட. இறுதிக்கண் நிற்றற்குரிய, ``ஆகாயம்`` என்பது, செய்யுள் நோக்கி முன் நின்றது, நீர், இரண்டாவதாகும், இறைவன் எல்லாப் பொருளிலும், கலப்பினால் அவையேயாயும், பொருள் தன்மையால் அவற்றின் வேறாகியும் நிற்றலின், `ஐம்பூதங்களாய் அல்லையாய்` என்றும், `இங்ஙனம் கலந்து நிற்பினும் ஒருவர்க்கும் தோன்றாதே நிற்கின்ற உன்னை நான் என் கண்ணாரக்கண்டு களித்தேன்` என்பார். ``ஆங்கே.....இன்றே`` என்றும் அருளிச்செய்தார். ஓர் உரு - ஒப்பற்ற பொருள்.

பண் :

பாடல் எண் : 7

இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே. 

பொழிப்புரை :

உன்னை அன்றி வேறு ஒரு பொருள் இல்லையாக. பிற எல்லாப் பொருளையும் விட்டுவிட்டு அணு அளவாய்க் குறுகிக் கூட்டப்படுகின்ற திருப்பெருந்துறை சிவனே! காணப்படுகின்ற ஒரு பொருளும் நீ அல்லை; உன்னை அல்லாது பிற பொருளும் இல்லை. யாவர் உன்னை அறிய வல்லவர்? இப்பொழுது எனக்கு அருள் புரிந்து அறியாமை இருளைப் போக்கி, மனத்தே தோன்றுகின்ற சூரியனே போல வெளிவந்து நின்ற உன்னுடைய இயல்பை, தற்போதத் தினையே எதிரிட்டு நினையாமல் அருள் வழியிலே நின்று நினைந்தேன்.

குறிப்புரை :

``சென்று சென்று`` என்பது முதலிய பகுதிகளை முதலிற் கூட்டி, `சிவனே, ஒன்றும் நீயல்லை; அன்றி ஒன்றில்லை; ஆதலின், உன்னை அறியகிற்பார் யார்? ஆயினும், நீ இன்று எனக்கு அருளி என் உள்ளத்து நின்ற நின்தன்மையால், நீயலால் பிறிது இன்மையை யான் நினைப்பற நினைந்து நின்றேன்` என வினை முடிக்க.
இன்று - எனக்கு அருளும் காலம் எய்திய இந்நாளில். எனக்கு அருளி - என்மேல் கருணைகூர்ந்து. ``இருள் கடிந்து`` என்றதனை, ``நின்ற`` என்பதற்கு முன்னே கூட்டுக. ``எழுகின்ற ஞாயிறு`` என்றமையால், பொருட்கண்ணும், `எழுந்து` என்பது பெறப்படும்.
முன்னைத் திருப்பாட்டில், இறைவன் தன் அடியார்களது உள்ளத்தில் தோன்றுகின்ற முறையை விளக்கியவாற்றிற் கேற்பவே இங்கும், `ஞாயிறே` என்னாது, ``எழுகின்ற ஞாயிறே போன்று`` எனக் காலையில் முளைத்தெழுந்து மேலே செல்லுகின்ற கதிரவனையே உவமையாகக் கூறினார். ``மன்னும் இருளை மதிதுரந்தவாறு`` என்னும் சிவஞானபோதத்தையும், (சூ.11.அதி.2.) அதன் உரையையும் காண்க. `உள்ளத்து எழுந்து நின்ற` என இயையும். ``தன்மை`` என்றது செயலை. `தன்மையால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. நினைப்பு அற - கருவிகளின்வழியும், தற்போதத்தின்வழியும் உணர்தல் அற்றுப் போக. நினைந்தேன் - உனது திருவருளின் வழியே உணரப் பெற் றேன். பிறிது - வேறொருபொருள். மற்று, அசைநிலை. ``இன்மை`` என்றவிடத்து இரண்டாம் வேற்றுமை இறுதிக் கண் தொக்கது. `நீயலால் பிறிது இன்மையை உணர்ந்தேன்` என்றது, உன்னையன்றிப் பிறிதொரு பொருளும் மெய்ப்பொருளாகாமையை உணர்ந்தேன்; அஃதாவது உண்மை ஞானத்தைப் பெற்றேன்` என்றவாறு. எனவே, ``காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே`` (தி.6 ப.95 பா.3) என்றதுபோல, இதுவும், `நீ கருணை கூர்ந்து என் உள்ளத்தில் தோன்றி அறியாமையைப் போக்கி நீங்காது நிலைபெற்றமையால், யான் நினது மெய்ம்மையை உணர்ந்தேனல்லாது, வேறு எவ்வாற்றான் உணர் வேன்` என்று அருளிச்செய்ததாம், `பிறிதொருபொருள் இல்லை` எனப் பொதுப்படக் கூறப்பட்டதாயினும், ``பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும் - மருள்`` (குறள்-351.) என்புழிப்போல, `பிறிதொரு மெய்ப்பொருள்` என்று சிறப்பு வகையாகவே கொள்ளப்படும். அல்லாக்கால், ``எனக்கு அருளி`` ``இருள் கடிந்து``, ``நின்தன்மையை நான் நினைந்தேன்`` என்றற்றொடக்கத்துத் திருமொழிகள் பலவும் மாறுகொளக் கூறலாய் முடியும்.
சென்று சென்று - பாசக்கூட்டங்களினின்றும் நீங்கி நீங்கி; அடுக்கு, சிறிது சிறிதாக நீங்குதல்பற்றி வந்தது. ``யாதனின் யாதனின் நீங்கியான்`` (குறள் - 341) என்றார் திருவள்ளுவ நாயனாரும். `தேய்ந்து தேய்ந்து அணுவாய் ஒன்றாம்` என மாறிக்கூட்டுக. தேய்வதும், அணுவாவதும், ஒன்றாவதும் ஆன்மாவே என்க. ஆன்மா நித்தப்பொருளாதலின், தேய்தல் முதலியன அதன் வியாபாரமாம். முத்தி நிலையில் ஆன்மா இறைவனைத்தவிர பிறிதொரு பொருளை அறிதலும், இச்சித்தலும், அநுபவித்தலும் இன்றி, இறைவனையே அறிந்து, இறைவனையே இச்சித்து, இறைவனையே அநுபவித்து நிற்குமாதலின், அவ்விடத்து அஃது உலகை மறந்திருத்தலேயன்றித் தன்னையே தான் மறந்து நிற்கும். அதனால், அந்நிலையில் அதற்கு இறை அநுபவம் ஒன்றைத் தவிர்த்து, ஏனைய வியாபாரங்களுள் ஒன்றும் இல்லையாதல் அறிக. இந்நிலையில், ``உயிர்தானும் சிவாநுபவம் ஒன்றினுக்கும் உரித்தே`` (சிவஞானசித்தி சூ.11-10.) என்கின்றார் அருணந்தி சிவாசாரியார். இவ்வாறு ஆன்மா சிவனது திருவடி வியாபகத்துள் அடங்கித் தனித்த ஒரு முதலாய்க் காணப்படாது நிற்றலே ஆன்மா சிவத்தொடு ஒன்றாதல் அல்லது இரண்டறக் கலத்தல்` எனவும், `இவ்வாறன்றி, ஆன்மா முத்தியில்தானே பிரமமாம் என்னும் ஏகான்ம வாதம் முதலியன பொருள்படுமாறில்லை` எனவும் சித்தாந்த நூல்கள் பலவிடத்தும், பலபடியாக இனிது விளங்க விளக்குதலை அறிந்துகொள்க.
``சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்`` என்னும் தொடரை உமாபதிசிவனார், தமது சங்கற்ப நிராகரண நூலுள் சைவவாதி நிராகரணத்துள் எடுத்தோதினமையும், அதுவே, `பரம சித்தாந்தம்` எனச் சிவஞானபோதத்துப் பத்தாம் சூத்திர முதல் அதிகரண பாடியத்துள் கூறப்பட்டமையும் அவ்விடங்களிற் காண்க. இத்திருப்பாட்டுள் இங்ஙனம் பரம சித்தாந்தத்தை அருளிச் செய்தமையின், இதனை, `திருவாசகத்தின் இருதயமான பாட்டு` என்பர் அறிஞர்.
``அணு`` புலனாகாமைபற்றிக் கூறப்பட்ட உவமையாகு பெயர், சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் நிலையை, திருவைந்தெழுத்தை மூன்றெழுத்தாகவும், பின்னர் இரண்டெழுத்தாகவும், பின்னர் ஓர் எழுத்தாகவும் கணிக்கும் முறையில் வைத்து உணருமாறு அருளப்பட்டது என்பதும் அப் பாடியத்தே கூறினமை காண்க. திருவைந்தெழுத்தை ஓர் எழுத்தாகக் கணித்தல் இங்குப் பிறர்மதம் பற்றிக் கூறப்பட்டது. ``ஆம்`` என்னும் பெயரெச்சம், ``சிவன்`` என்னும் செயப்படுபொருட் பெயர் கொண்டது. `ஒன்றாதல்` என்பது, `ஒற்றித்து நின்று உணர்தல்` என்னும் பொருட்டாகலின், அதற்குச் செயப்படுபொருள் உண்மை அறிக.
எனவே, `இவ்வாற்றானன்றி வேறாய் நின்று அறியப்படு வாயல்லை` என்பதை எடுத்தோதி, `யார் உன்னை அறிய வல்லார்` என்றதாயிற்று. `யார்` என்னும் வினா. ஒருவருமிலர் எனப் பொருள் தந்ததாயினும் பெரிதும் அரியர் என்றல் திருவுள்ள மாதல் அறிக. இங்ஙனங் கூறவே, `பெரிதும் அரிய வருள் நாயேனையும் ஒருவ னாக்கிய நின் கருணையை என்னென்று புகழ்வேன்` என்பதும் பெறப் பட்டது. ``ஒன்றும் நீயல்லை, அன்றி ஒன்று இல்லை`` என்ற இரண்டிடத் தும், `ஆயினும்` என்பது வருவித்து, `நீ இவ்வுலகப் பொருள்களுள் ஒன்றும் அல்லையாயினும், நீ இல்லாத பொருளே இல்லை; ஆயினும், உன்னை காண்பவர் எவரேனும் உளரோ` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 8

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதீ.

பொழிப்புரை :

பூமியும் மேலே உள்ள பதங்களும் இவற்றை உள்ளடக்கிய பல்வேறு அண்டமும் ஆகிய எல்லாப் பொருளுமாய்த் தோன்றி விரிந்ததாகிய ஒளிப்பிழம்பே! நீரில் கலந்துள்ள நெருப்பு போன்றவனே! நினைப்பதற்கு அருமையான தூய பொருளே! உனது திருவருளாகிய வெள்ளம் பாய்கின்ற சிறப்புப் பொருந்திய சித்தத்தில் உண்டாகியதாகிய ஒப்பற்ற தேன் போன்றவனே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! எனக்கு இன்பத்தை உண்டாக்குகின்ற என்னொளியுடைய பொருளே! இவ்விடத்தில் உறவாயிருப்பவர் யார்? அயலாய் இருப்பவர் யார்?

குறிப்புரை :

பார் - பூமி, ``பதம்`` என்றது, சுவர்க்கத்தை. `தன் நிலையில் தான் ஒருவனேயாய் இருந்த இறைவன் நான் பலவாகு வேனாக எனச் சங்கற்பித்து, அனைத்தையும் உண்டாக்கி அவற்றினுள் நிறைந்து நின்றான்` என்பதே இறைவனது அருட்செயலாகச் சொல்லப் படுதலின், ``பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்த தோர் படரொளிப் பரப்பே`` என்று அருளினார்.
``தீயே`` என்றதனால், ``நீர்``, வெந்நீர் என்பது வெளிப்படை. தீ, வெந்நீரில் பொருளாய்ப் புலப்பட்டு நில்லாது, ஆற்றல் வடிவமாய்ப் புலப்படாது யாண்டும் நிறைந்து வேறற நிற்றல்போல, இறைவன் எல்லாப் பொருளிலும் புலப் பட்டு நில்லாது சத்தி வடிவமாய் யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றி, ``நீருறு தீயே`` என்றார்.
``எங்கும் எவையும் எரியுறு நீர்போல் ஏகம்
தங்குமவன் தானே தனி``
எனத் திருவருட் பயனும் (பா.8) கூறிற்று.
நினைவதேல் - நினைவது என்றால், `நின் அருள்வெள்ள மாகிய சீரிய பொருளின்கண் பொருந்திய சிந்தைக்கண் எழுந்த ஒப்பற்ற தேனே` என்க.
இங்கு - இவ்வுலகத்தில். `உறவினராதல் அயலவராதல் யார் உள்ளார்; ஒருவரும் இல்லை` எனவே, ``நீயே எனக்கு எல்லாம்`` என்பது குறிப்பெச்சமாயிற்று. ஆக்கும் - விளைக்கின்ற.

பண் :

பாடல் எண் : 9

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே. 

பொழிப்புரை :

ஒளியாய்த் தோன்றும் உருவமே! உருவம் இல்லாத ஒப்பற்றவனே! வாக்கினால் சொல்லுவதற்கு அருமையான எப்பொருட்கும் முதலும் இடையும் கடையுமாய் உள்ளவனே! பிறவித் தளையை ஒழிக்கின்ற பேரின்பப் பெருங்கடலே! தீமை கலவாத நன்மையுடைய, திருவருள் மலையே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! குருவாய் எழுந்தருளி வந்து உன் திருவடியை எனக்கு அருளிய பின், நீ என்னை விட்டுப் போகின்ற வகை எங்ஙனம்? அதை எனக்குச் சொல்வாயாக.

குறிப்புரை :

இறைவன் கொள்ளுகின்ற திருமேனி ஒளிவடிவாய்த் தோன்றலின், ``சோதியாய்த் தோன்றும் உருவமே`` என்றார். அருவமே - அருவமாயும் நிற்பவனே. ``ஆதி`` முதலிய மூன்றும் ஒரு பொருள்மேற் பல பெயர்களாதலின், அவை அனைத்தும், ``அரிய`` என்றதற்கு முடிபாயின. அம்மூன்றும் அவற்றைச் செய்பவன் மேல்நின்றன. ``தீதிலா நன்மைத் திருவருட்குன்றே`` என்றது, மேல். ``குறைவிலா நிறைவே`` (தி.8 கோயில் திருப்பதிகம். பா.5), என்றாற் போல்வது. `வந்து நின் இணையடி தந்து நீ போவது ஓர்வகை யாது` எனக் கூட்டுக. இஃது, இறைவன் தம்மை இந்நிலவுலகில் விடுத்துப் போயினமை பற்றிய ஆற்றாமையால் அருளியது.

பண் :

பாடல் எண் : 10

தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே. 

பொழிப்புரை :

எனது சித்தத்தையே, திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய எம் தலைவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! எம் தந்தையே! ஈசனே! எனது உடலை இடமாகக் கொண்டவனே! சங்கரனே! எனக்கு நீ கொடுத்தது உன்னை; அதற்கு ஈடாக என்னை நீ ஏற்றுக் கொண்டாய்; யான் முடிவு இல்லாத பேரின்பத்தை அடைந்தேன். ஆயினும் நீ என்பால் பெற்றது என்ன? ஒன்றும் இல்லை. இக்கொள்ளல் கொடுத்தல்களைச் செய்த நம் இருவரில் திறமையுடையவர் யார்? இவ்வுதவிக்கு நான் ஒரு கைம்மாறும் செய்ய முடியாதவனாயினேன்.

குறிப்புரை :

இறைவன் தன் அடியார்க்குத் தன்னையே பரிசாகத் தருதலின், ``தந்தது உன்றன்னை`` என்றார். இங்ஙனம் அடியார் களுக்குத் தன்னையே தருகின்ற இறைவன், அவர்கள்மேல் வைத்த கருணை காரணமாக, `இவன் செய்தியெல்லாம் என் செய்தி` என்றும், இவனுக்குச் `செய்தது எனக்குச் செய்தது` என்றும் கொண்டு. பாதகத்தைச் செய்திடினும் அதனைப் பணியே யாக்கி (சிவஞான சித்தி. சூ.10-1.) அவர்க்கு வருவதொரு துன்பமும் இல்லாமல், அவர்தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தானே தன்னுடையனவாக ஏற்றுக்கொண்டு நிற்றலை ஈண்டு நயம்படக் கூறுதற் பொருட்டு, தன்னைத் தந்ததற்கு மாற்றாகத் தம்மைக் கொண்ட தாக அருளிச்செய்தார். இறைவன் தன் அடியார்களை இங்ஙனம் யாதொரு தொடக்கும் உறாமல் காத்தலையே, ``கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க் கல்லால் - எடுத்துச் சுமப்பானை இன்று`` என்றது திருவருட்பயன் (65). ``ஆர்கொலோ சதுரர்`` என்றதனை, ``என்பால்`` என்றதன் பின்னர் எஞ்சி நின்ற, `ஆதலின்` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``நீ`` எனவும், ``என்பால்`` எனவும் பின்னர் வருகின்றமையின், முன்னர், `யான்` என்பதும். `நின்பால்` என்பதும் வருவித்து `இப்பண்டமாற்றில் யான் நின்பால் அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; நீ என்பால் பெற்றது ஒன்று யாது? ஒன்றும் இல்லை; ஆதலின், நம்முள் சதுரர் யார்` என உரைக்கப்படுமாறு அறிக. `நெல்லைக் கொடுத்துப் பதரைப்பெற்ற பித்தன்போல் ஆயினை நீ` எனப் பழிப்பதுபோலக்கூறி, இறைவனது கைம்மாறு கருதாப் பெருங்கருணைத் திறத்தைப் போற்றியவாறு, கொல், ஓ இரண்டும் அசைநிலைகள். சதுரர் - திறல் படைத்தவர். ``சிந்தையே`` என்றதற்கு, `அடியவரது சிந்தையையே` எனவும், ``உடல் இடம் கொண்டாய்`` என்றதற்கு, `என் உடலையும் இடமாகக் கொண்டாய்` எனவும் உரைக்க. ``நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்`` (தி.5 ப.2 பா.1) எனவும். ``காலையும் மாலையும் கைதொழுவார் மனம் - ஆலையம் ஆரூர் அரனெறி யார்க்கே`` (தி.4 ப.17 பா.8) எனவும் அப்பரும் அருளிச்செய்தார். ``உடலிடங் கொண்டாய்`` என்பது பற்றி மேலே (22. தி.8 கோயில் திருப்பதிகம். பா-5.) கூறப்பட்டவைகளைக் காண்க.
சிற்பி