திருவாசகம்-செத்திலாப்பத்து


பண் :

பாடல் எண் : 1

பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும்
புதும லர்க்கழ லிணையடி பிரிந்துங்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்த னேஅயன் மாற்கறி யொண்ணாச்
செய்யமே னியனே செய்வகை அறியேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

தலைவனே! மன்னனே! அருளையுடைய பெரிய கடலே! தந்தையே! பிரமன்மால் அறியமுடியாத சிவந்த திருமேனியை உடையவனே! திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே! பொய்யனாகிய என்னுடைய உள்ளம் நெகிழும்படி அதன்கண் புகுந்து அருள் செய்தாய். ஆயினும் அமுதம் சுரக்கின்ற அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற, வீரக்கண்டை அணிந்த இரண்டு திருவடிகளைப் பிரிந்தும், சிறியேனாகிய நான் இன்னும் சாகாமல் இருக்கிறேன். ஐயோ! கண் விழித்திருந்தும், மனத்தில் உள்ள நினைவை இழந்து விட்டேன். இனி செய்வது இன்னது என்று அறியேன்.

குறிப்புரை :

பொய்யனேன் - உண்மை அன்பு (நிரம்பிய அன்பு) இல்லாதவன். புகுந்ததும், அமுதம் ஊறுவதுபோல ஊறியதும் அகத்தே யாம். கையனேன் - சிறியனேன்; `வஞ்சன்` எனப்பொருள் தரும் திசைச்சொல் வேறு. `விழித்திருந்தும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. ``கருத்து`` என்றது, கருதப்பட்ட பொருள்மேல் நின்றது. `தூங்குவோர் தாம் விரும்பிய பொருளை இழந்து ஏமாறுதல் இயல்பு. நான் அவ்வாறின்றி விழித்திருந்தே இழந்தேன்` எனத் தம் ஊழ் வலியை நினைந்து நொந்துகொண்டவாறு. `தூங்குதல், விழித்தல்` என்பன, ஞானம்பெறாமையையும், பெற்றமையையும் குறித்து நின்றன. `இனி அதனைப் பெறுதற்குச் செய்யும் வகையை அறிந் திலேன்` என்க.

பண் :

பாடல் எண் : 2

புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறையில் இருக்கும் பெருமானே! தேவரும், மற்றையோரும் தங்கள் உடம்பின்மேல் புற்று வளரப் பெற்றும் மரம் வளரப் பெற்றும், நீரும் காற்றுமே உணவாக அமைய மெலிந்து வாழும் அவருள் ஒருவரும் உன் தாமரை மலர் போலும் திருவடிகளைக் காணமுடியாத அரசனே! அடியேனை ஒரு சொல்லில் அகப்படுத்தி ஆட்கொண்டாய். இருந்தும், நெஞ்சம் துடிக்கமாட்டேன்; மனம் மிகவும் உருகமாட்டேன்; உன்னிடம் அன்பு செய்யமாட்டேன்; இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

குறிப்புரை :

தவம் செய்யுமிடத்துத் தம் உடம்பின் மேல் வளரும் புற்றுக்களுள்ளும், மரங்களுள்ளும் தம் உடம்பு மறைந்து கிடத்தல் பற்றி, அவரையே புற்றும், மரமும் ஆயினார்போலக் கூறினார். உம்மை, சிறப்பு. கால் - காற்று, ``உண்டியாய்`` என, செயப்படு பொருளின் தொழில் வினைமுதல்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. இவ்வாறன்றி, ``ஆய்`` என்றவற்றை எல்லாம் `ஆக` எனத் திரிப்பினு மாம். வற்றி - உடல் மெலிந்து. `வற்றியும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தல். ஓர் வார்த்தை - ஒரு தொடர்மொழி. அது, திருவைந் தெழுத்து மந்திரம். அதன் கருத்து, `நீ என் அடியவன்` என்பது. `நம்பியாரூரர் திருமணத்தில் வல்வழக்கிட்டுச் சென்றபொழுது இறைவன் கூறியதும் அந்த வார்த்தையே என்பது, ``என் அடியான் - இந்நாவல்நகர் ஊரன்`` எனவும், அது முற்றிலும் பொருள் பொதிந்த மெய்ம்மொழியே என்பது,
``தேவரையும் மாலயன் முதல்திருவின் மிக்கார்
யாவரையும் வேறடிமை யாஉடைய எம்மான்``
(தி.12.தடுத்.பா.37) எனவும் அருளிய சேக்கிழார் திருமொழிகளால் நன்கு தெளிவாதல் காண்க. ``ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து`` எனச் சிவஞான போதமும், (சூ. 8) இதனையே குறிப்பிடுதலை அறிக. `இங்ஙனம் உணர்த்தாதமுன்னர் பதைத்தலும், உருகலும் போல்வன இல்லாமை குற்றமன்று; உணர்த்திய பின்னரும், அவை இல்லா திருக்கின்றேன்` என இரங்கியவாறு. பரிதல் - அன்பு மிகுதல். பரியா உடல் - அன்பிற்குரிய மெய்ப்பாடுகள் இல்லா

பண் :

பாடல் எண் : 3

புலைய னேனையும் பொருளென நினைந்துன்
அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையி னால்நடந் தேன்விடைப் பாகா
சங்க ராஎண்ணில் வானவர்க் கெல்லாம்
நிலைய னேஅலை நீர்விட முண்ட
நித்த னேஅடை யார்புர மெரித்த
சிலைய னேஎனைச் செத்திடப் பணியாய்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

இடபவாகனனே! சங்கரனே! எண்ணிறந்த தேவர் கட்கு எல்லாம், ஆதாரமானவனே! அலைகளை உடைய கடலில் தோன்றிய நஞ்சினை அருந்திய அழியாதவனே! பகைவரது திரி புரத்தை நீறாக்கின வில்லை உடையவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற பெருமானே! புல்லறிவாளனாகிய என்னையும் ஒரு பொருளாக எண்ணி உன்னுடைய திருவருளை அளித்தனை. அவ்வாறு கருணை காட்டிலும் தலையினால் நடப்பது போலச் செருக் குற்றேன். அடியேனை உடம்பினின்றும் நீங்கும்படி அருள்வாய்.

குறிப்புரை :

``தலையினால் நடந்தேன்`` என்றது, அன்னதொரு செயலைச் செய்தமையைக் குறித்து, ஒப்புமை பற்றிவந்த இலக்கணைச் சொல். இதனை, `தலைகால் தெரியாமல் களிக்கின்றான்` என்பர் உலகோர். ``அருள்புரிந்தனை புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன்`` என்று அடிகள் அருளிச் செய்தமையால், அவர், `தாம் விரும்புங் காலத்துத் தம்மை இறைவன் தன்பால் வருவித்துக் கொள்வான்` என்னும் துணிவினராய் இருந்தமையும், அதற்கு மாறாக அது நிகழ்தற்குக் காலம் பெரிதும் நீட்டித்தமையும் பெறப்படும். மேல் `தருக்கித் தலையால் நடந்த வினைத்துணையேன்` (தி.8 நீத்தல் விண்ணப்பம் - பா- 39.) என்றது, வேறொரு கருத்துப் பற்றி என்க. நிலையன் - நிலைபேற்றைத் தருபவன்; பற்றுக் கோடாய் இருப்பவன்.

பண் :

பாடல் எண் : 4

அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்
அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
என்ப ராய்நினை வார்எ னைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
வன்ப ராய்முரு டொக்கும்என் சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பொழிப்புரை :

அழகிய திருப்பராய்த்துறை என்னும் பதியை உடையவனே! சிவலோகனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! என் மனமானது, வலிய பராய் மரத்தின் கணுப் போன்றது. என் கண் மரத்தினால் ஆனது. என்னுடைய காது இரும்பைக் காட்டிலும் வன்மை உடையது. பிரமனும், திருமாலும், உன்னிடத்து அன்புடையவராகி, செய்தற்கு அரிய தவத்தைச் செய் கின்றனர். நெருப்பைச் சேர்ந்த மெழுகு போல உள்ளம் உருகுகின்ற வராய், எலும்பு வடிவினராய், உன்னை நினைப்பவர்கள் இன்னும் எத்தனையோ பேர் உளர். அவர் எல்லாம் இருக்க, இவ்விடத்து அடியேனை நீ எதற்காக ஆட்கொண்டருளினாய்?

குறிப்புரை :

பொருள்கோள்: `தென்பராய்த் துறையாய் ... ... சிவனே` என் சிந்தை வன்பராய் முருடொக்கும்; (என்கண்) மரக்கண்; என்செவி இரும்பினும் வலிது; (அங்ஙனமாக) அருந்தவம் முயல் வாராய அயனும் மாலும், அழலுறு மெழுகாம் என்பராய் நினைவார் மற்று எனைப் பலரும் நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்? (ஆண்டதற்குக் காரணம் உண்டெனின், அக்காரணத்தானே இன்றும் என்னை நின்பால் வந்திடப்பணி).
``அழலுறு மெழுகாம் என்பராய்`` என்றது, `எலும்பும் உருகப் பெறும் நிலையினையுடையவராய்` என்றபடி. வன் பராய் - வலிய பராய் மரம். இது சிறிதும் செம்மையின்றி எங்கும் முடங்கியும், திருகி யும் முருடுபட்டிருக்கும் என்பது அறியப்படுகின்றது. `என்கண்` என்பது எஞ்சி நின்றது. ``கண்ணிணையும் மரமாம் தீவினை யினேற்கே`` (தி.8 திருச்சதகம். பா-21) என முன்னே வந்தது காண்க. ``மரக்கண்`` என்றது மரத்தின்கண் உள்ள துளையை. பராய்த்துறை, ஒருதலம். ``பராய்த் துறை மேவிய பரனே போற்றி`` (தி.8 போற்றித். 153) என்றார் முன்னரும்.

பண் :

பாடல் எண் : 5

ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால்
ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
நாத னேஉனைப் பிரிவுறா அருளைக்
காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

தலைவனே! உலகத்தார் சொல்லுகின்ற பற்பல தேவர்களும், நாடி அடைவதற்கு அருமையான பொருளே! இறை வனே! தேவனே! கூட்டமான பல தேவர்களுக்குத் தலைவரான பெருந் தேவர் தலைவனே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உலகத்தை ஆட்டுகின்ற தேவரது கட்டளையை அறவே நீக்கி அன்பினால் எப்போது அடியேன் உன்னுடைய திருவருள் நெறியிலே நிற்பேன்? உன்னை விட்டு நீங்காத திருவருளை எனக்கு அளித்து, உன் திருவடிகளையும் கொடுத்து என் உடம்பாகிய பொய்யினைப் போக்கித் திருவருள் புரிவாயாக.

குறிப்புரை :

தேவர் தம் விதி - தேவரை வழிபட்டு அத்தேவராம் முறை; அவை சுவர்க்கபோகத்தைப் பயக்கும் காமிய வேள்விகள். அவற்றால் அப்பதவியை அடைந்தோரது இழிவினை உணர்த்துவார், ``ஆட்டுத் தேவர்`` என்று அருளினார். ஆட்டுத் தேவர் - ஆட்டினை உண்ணும் தேவர். ஆடு, வேள்வியில் தரப்படுவது. ``முன்னாள் தக்கன் வேள்வித் தகர்தின்று`` (தி.8 திருச்சதகம்.பா.4.) என முன்னரும் அருளினார். அருள்வழி இருத்தலை, ``அன்பால்`` என்றமையின், தேவர் விதிவழிச் செல்லுதலுக்கு, ``ஆசையால்`` என்பது வருவிக்கப் படும். எனவே, `ஆசையால் கைக்கொள்ளப்படும் ஆட்டுத் தேவர் தம் விதிகளை ஒழித்து, அன்பால், உன்னையே ஐயனே - யாவர்க்கும் முதல்வனே என்று அழைத்து உன் அருள் வழியே இருப்பேனாகிய எனக்கு, முன்போலப் பிரிவுறும் அருளைக் காட்டாமல் என்றும் பிரிவுறா அருளைக் காட்டிக் காயமாயத்தைக் கழித்தருள் செய்யாய்` என வேண்டியவாறாயிற்று.
``கழலிணை காட்டி`` என்றது மீளவும் எதிர்ப்படுதலை. அதனால், அதனை, அருளைக் காட்டுதலுக்கு முற்பட வைத்துரைக்க. காய மாயம் - உடம்பாகிய இவ் அழிபொருளை. கழித்தருள் செய்யாய் - விரைவில் நீக்கியருள்,
நாட்டுத் தேவர் - நிலத் தேவர்; பூசுரர். ``மண்மேல் தேவர் என்றே இறுமாந்து`` (தி.8 திருச்சதகம்.பா.4.) என முன்னரும் கூறினார். காமியங்கருதி அவரையே தெய்வமாக மதிக்கும் உலகினர் கருத்துப் பற்றி, ``நாட்டுத் தேவரும்`` எனச் சிறப்பும்மை கொடுத்து, ஆட்டுத் தேவர் தம் விதிவழியன்றிப் பிறிதொன்றை அறியாராகிய அவர், ``ஆவ எந்தாய் என்று அவிதாவிடும் நம்மவராகிய அவரையே எம்பிரானொடும் தேவர் என, ஒருங்கு வைத்தெண்ணி உண்மை உணர்ந்தாராக இறுமாந்து ஒழிதலன்றிச் சிவபிரானைப் பொதுநீக்கி அறியும்பேறு சிறிதேனும் இலராதல் பற்றி, ``நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே`` என்றும் அருளிச் செய்தார். சேட்டைத் தேவர் - தொழிற்படும் தேவர். இவரை, ``பிரதி தேவர்`` என்பர். அவர்தம் தேவர். அதிதேவர்; இவர் தம் பிரதி தேவரைத் தொழிற்படுத்துவோர். மால் அயன் என்போரும் இவருள் அடங்குவர். சிவபெருமானை, `இவர் அனைவர்க்கும் பிரானே` என்று அழைத்து இன்புறுகின்றார் அடிகள். ``தேவர்பிரானே`` எனப் பொதுப்பட அருளிப்போகாது, ``சேட்டைத் தேவர் தம் தேவர் பிரானே`` என வகுத்தோதியருளினார், `பெருந்தேவர் எனப்படுவாரது இன்பமெல்லாம், தம்கீழ்ச் சிலரைத் தொழிற்படுத்தி அதனால் மகிழும் சிறிய இன்பமே` என்பது விளங்குதற் பொருட்டு. இவரைத்தான், `தேவர்` என எம்பிரானோடும் எண்ணித் தாமும் மயக்கத்தில் ஆழ்ந்து, பிறரையும் மயக்கத்தில் ஆழ்த்தியொழிகின்றது வேதியர் குழாம் என்றற்கே, ``நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே`` என முற்பட அருளிச் செய்தார். இத் திருப்பாட்டுள், ``தேவர்`` என வந்தன பலவற்றிற்குப் பலரும் பலப் பலவாறு உரைகாண்பர்; அவற்றையெல்லாம் அவரவர் உரையிற் காண்க.

பண் :

பாடல் எண் : 6

அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்
கார்கி லேன்திரு வருள்வகை யறியேன்
பொறுக்கி லேன்உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கி லேன்உனைப் பிரிந்தினி திருக்க
என்செய் கேன்இது செய்கஎன் றருளாய்
சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பொழிப்புரை :

போரில் வல்ல விடையை ஊர்பவனே! வரம்பி னுள்ளே, நீர் நிலை பெற்ற வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் பொருந்திய பெருமானே! வணக்கம், வணக்கம். உடம்பு துண்டாகும் படி வெட்டமாட்டேன்; தீயின்கண் புகுந்து அமைதி பெறமாட்டேன்; திருவருளின் முறையையும் அறியமாட்டேன்; உடற் சுமையையும் தாங்க மாட்டேன்; இதனை விட்டு நீங்கி அடையும் இடத்தையும் காணேன்; உன்னை விட்டு நீங்கி உயிரையும் விடவில்லை; இன்பமாய் இருக்க யான் என்ன செய்யவேண்டும்? இதனைச் செய்க என்று அருள் புரிவாயாக.

குறிப்புரை :

`உடலைத் துணிபட அறுக்கிலேன்` என இயைக்க. ஆர்கிலேன் - நிறைவு பெறமாட்டேன். `திருவருளுக்கு வகை அறியேன்` என உருபு விரித்துரைக்க. `உடலைப் பொறுக்கிலேன்; உடல் போக்கிடங் காணேன் என்க. போக்கு இடம் - போதற்கு வழி. சிறைக்கண் - வரம்பின்மீது.

பண் :

பாடல் எண் : 7

மாய னேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயி னேன்உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்
பேய னாகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ
சேய னாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

மாயம் செய்பவனே! அலைகள் மடங்கி வீழ்கின்ற கடலில் எழுந்த நஞ்சை உண்ட தேவனே! நீலகண்டத்தை உடைய எமது அமுதம் போன்றவனே! பிறை விளங்குகின்ற சடையுடைய தலைக்கோலமுடையவனே! திருப்பெருந்துறையில் பொருந்திய பெருமானே! தூரத்தில் உள்ளவனாகி நின்று, நான் கதறுவது முறை யாகுமோ? ஓலம். நாய் போன்ற நான் உன்னை மனத்தால் நினைக்கவும் மாட்டேன். நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தை வாயினாற் கூறி உனது திருவடியை மெய்யினால் வணக்கம் செய்யாத பேய்த்தன்மை உடையேன். எனினும், முத்தி நெறியைக் காட்டியருள்வாயாக.

குறிப்புரை :

மாயனே - மாயம் செய்ய வல்லவனே; என்றது. கண்முன் தோன்றி மறைந்தருளி மீண்டும் தோன்றாதிருந்தமைபற்றி. பெருநெறி - வீடடையும் வழி. சேயன் - தூரத்தில் உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 8

போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக்
கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் [கூட்டாய்
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
அடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ
சீத வார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

தாமரைப் பூவில் உறைகின்ற பிரமன், அலைகள் மோதுகின்ற பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால், இந்திரன் முதலிய தேவர்கள் நிற்கவும், அடியேனைச் சீராட்டி ஆட்கொண்டவனே! குளிர்ச்சி பொருந்திய நீர் நிலை பெற்ற வயல் சூழ்ந்த, திருப்பெருந் துறையைப் பொருந்திய பெருமானே! அமுதமே! யாது செய்யத்தக்கது என்று திகைத்து இருக்கிறேன். அடியேன் துன்பப்படுவதும் நல்ல தாகுமோ? உன்னுடைய ஒலிக்கின்ற வீரக் கழல் அணிந்த திரு வடியைக் காட்டி, அத்திருவடியையே குறியாகக் கொள்வாய் என்றருளி என்னை உன் தொண்டரோடு சேர்ப்பாயாக.

குறிப்புரை :

`அயன் முதலியோர் நிற்க என்னைக் கோது மாட்டியவனே` என்க. கோது மாட்டுதல் - குற்றங்களைந்து ஆட் கொள்ளுதல். `குறிக்கொள்க` என்பது, தொண்டருக்கு இடும் ஆணை.
இருந்தேன் - திகைத்திருக்கின்றேன். மருந்தே - அமுதமே. `கோது மாட்டியவனே` மருந்தே, சிவனே, யான் யாது செய்வது என்று இருந்தனன்; உன் அடியேன் இவ்வாறு இடருள் அகப்பட்டுக் கிடத்தல் உனக்கு இன்பம் தருவதோ! நின் தொண்டரிற் கூட்டாய்` என வினை முடிவு செய்க.

பண் :

பாடல் எண் : 9

ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய்
கங்கை யாய்அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 

பொழிப்புரை :

இயமனது அரிய உயிரைக் கவர்ந்த தாமரைப் பூப்போன்ற திருவடியையுடையவனே! கங்கையைச் சடையில் தரித்தவனே! நெருப்பை ஏந்திய கையை உடையவனே! கெண்டை மீன் களும், நீல நிறமுடைய பூக்களும் பொருந்திய வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் பொருந்திய பெருமானே! உலகத்தவரும், தேவர் கோனும், பிரமனும், தேவரும், உன்னருளைப் பெற நிற்கவும், என்னை விரும்பி இனிமையாக ஆட்கொண்டருளினாய். திருமாலும் முறையிட்டுக் கதறுவதற்குரிய அப்பாதமலர்க்கே, மரக்கண் போன்ற கண்ணை உடைய என்னையும் வந்து சேரும்படி அருள் செய்வாயாக.

குறிப்புரை :

ஞாலம் - நிலவுலகத்துப் பெரியோர். `எனை நயந்தினி தாண்டாய்; ஆதலின், மாலும் ஓலம் இட்டு அலறும் அத்தகைய நின்மலர் போலும் திருவடி நிழற்கண்ணே, மரத்தினது கண்போன்று அன்பு நீர் மல்காத கண்களையுடைய என்னையும் வருமாறு பணித் தருள்: (விட்டிடாதே)` என முடிக்க.
நீலம் - நீலப் பூ; குவளை மலர்.

பண் :

பாடல் எண் : 10

வளைக்கை யானொடு மலரவன் அறியா
வான வாமலை மாதொரு பாகா
களிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன்
கயிலை மாமலை மேவிய கடலே
அளித்து வந்தெனக் காவஎன் றருளி
அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில்
திளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

பொழிப்புரை :

திருப்பெருந்துறையில் பொருந்திய சிவனே! சங்கேந்திய கையினையுடைய திருமாலோடு பிரமனும், அறிய முடியாத தேவனே! மலைமகளை ஒரு பாகத்திலுடையவனே! பெரிய கயிலாய மலையின்கண் எழுந்தருளிய கருணைக்கடலே! அடி யேனுக்குக் கருணை செய்ய வந்து, ஐயோ என்றிரங்கியருளி என் அச்சத்தைப் போக்கிய உன்னருளாகிய பெரிய கடலினிடத்து மூழ்கி மகிழ்ந்தும், நிரம்ப இன்புற்றும் குடித்தும் மனம் உருகமாட்டேன். மகிழ்ச்சி முழுவதும் நீங்க அதிகமாகக் கலங்கப் பெற்றவனாகின்றேன்.

குறிப்புரை :

அளித்து - என்மேல் இரக்கங்கொண்டு, `ஆவ` என்னும் இரக்கச்சொல், `அஞ்சேல்` என அபயமளித்தலைக் குறித்தது. திளைத் தல் - மூழ்கி ஆடுதல். தேக்குதல் - உண்டு தேக்கெறிதல். உருகுதல், இங்கு, `இன்புறுதல்` என்னும் பொருளது. `நீ இரங்கிவந்து அருள் செய்தும், உனது பேரின்பத்தினை வேண்டியவாறு நுகரும் பேறு பெற்றிலேன்` என்றபடி. இத்தொடரைச் சிறப்பாகக் கொண்டே, இப்பகுதிக்கு, `சிவானந்தம் அளவறுக்கொணாமை` என்ற குறிப் பினைக் கூறினர் முன்னோர் என்க. வளை - சங்கு. ``களிப்பெலாம்`` என்ற எழுவாய்க்கு, `கெட` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. களிப்பு, இறைவன் கடிதே தம்மைத் தன் திருவடிக் கீழ்ச் சேர்த்துக் கொள்வான் என்னும் துணிவினால் நிகழ்ந்தது.
சிற்பி