திருவாசகம்-அடைக்கலப்பத்து


பண் :

பாடல் எண் : 1

செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந்
தமைந்த
பழுத்தமனத் தடியர்உடன் போயினர்யான்
பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி
ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன்
அடைக்கலமே.

பொழிப்புரை :

இறைவனே! தாமரை மலர் போன்ற உன் திருவடியைச் சேர்ந்த அடியார் உன்னோடு சென்றார்கள். புழுக்கள் வாழ்தற்கு இடமாகிய இழிந்த உடலுடன் கல்வியும் ஞானமும் இல்லாத பொல்லா அழுக்கு மனத்தை உடைய பாவியேனாகிய நானும் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

இம் முதல் திருப்பாட்டு, நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா.
`செழுங்கமலம்` என்பது, எதுகை நோக்கி வலிந்து நின்றது. செழுங்கமலம் - செங்கமலம். `அடியார் போயினர்` என இயையும். உடன் - விரைவாக. போயினர் - சிவலோகம் சென்றனர். புழுக்கண் உடை - புழுக்கள் வாழ்வதற்கு இடத்தைக் கொண்டுள்ள. குரம்பை - குடில்போலும் உடம்பு. `குரம்பையை உடைய, பொல்லாத, அழுக்கு மனத்தை உடைய அடியேன்` என்க.

பண் :

பாடல் எண் : 2

வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின்
பெருமையினால்
பொறுப்பவ னேஅராப் பூண்பவ னேபொங்கு
கங்கைசடைச்
செறுப்பவ னேநின் திருவரு ளால்என்
பிறவியைவேர்
அறுப்பவ னேஉடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! தீமைகளையே செய்கின்ற என் இழிவை உன் பெருங்குணத்தால் பொறுப்பவனே! பாம்பைப் பூண்டிருப்பவனே! கங்கைச் சடையோனே; உன் திருவருள் என்னும் வாளால் என் பிறவியை வேரறுப்பவனே! அடியேன் உன் அடைக் கலமே!.

குறிப்புரை :

இவ்விரண்டாம் திருப்பாட்டு, முதலடி சிறிதே வேறுபடவந்த கட்டளைக் கலித்துறை. இங்ஙனம் சிறுபான்மை வேறுபட வரும் யாப்புக்களை, `ஒப்பியல்` என வழங்குவர். அவ் வாற்றான் இஃது, ஒப்பியற் கட்டளைக் கலித்துறையாம்.
சிறுமை - குற்றம். பெருமை - பிறர் குற்றத்தை உளங் கொள்ளாமை. கங்கை சடைச் செறுப்பவன் - கங்கை நீரைச் சடையில் தடுத்து நிறுத்துபவன்.

பண் :

பாடல் எண் : 3

பெரும்பெரு மான்என் பிறவியை வேரறுத்
துப்பெரும்பிச்சுத்
தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என்
மனத்தினுள்ளே
வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி
யாமல்நின்ற
அரும்பெரு மான்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! பெரிய பெருமானும், என் பிறவியை வேரறுத்து எனக்குப் பெரும் பித்தேற்றும் பெருமானும்; சதுரப் பெருமானும்; என் மனத்தில் எழுந்தருளும் பெருமானும்; பிரம விட்டுணுக்கள் அறியவொண்ணாமல் நின்ற அரும்பெருமானும் ஆகிய தலைவனே! அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

இதுவும் முன்னைத் திருப்பாட்டுப் போன்றது.
``பெரும்பெருமான்`` என்றதில், ``பெருமான்`` என்றது, `கடவுள்` என்னும் பொருட்டாய், `பெருமை` என்னும் அடைபெற்று, `முதற் கடவுள்` எனப் பொருள் தந்தது. பிச்சு - பித்து. சதுர் - திறல். ``பெருமான்`` என வந்தன பலவும் விளிகளே.

பண் :

பாடல் எண் : 4

பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத் தில்நின்
கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான்
இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச்
சுறவெறிய
அழிகின் றனன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! துன்பப் பெருக்கில் உன் திருவடி யாகிய துணையைப் பற்றிக் கொண்டிறங்கின அன்பர் வானேறினர்; நான் துன்பப் பெருக்கின் சுழியில் அகப்பட்டு, மாதராகிய அலை மோத, காமமாகிய மகரமீன் எறிய அழிய நின்றேன். அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

இதுமுதல் மூன்று திருப்பாட்டுக்கள் கட்டளைக் கலித்துறை இலக்கணம் நிரம்பின.
`துன்பப் புயல் பொழிகின்ற வெள்ளம்` என்க. துன்பப் புயல்- துன்பத்தைச் சொரிகின்ற மேகம்; இஃது இல்பொருள் பற்றிவந்த உருவகமாய் நின்றது. `துன்பத்தைச் சொரிகின்ற மேகம்` எனவே, `அதன் பொழிவால் உளதாகும் வெள்ளம் துன்ப வெள்ளமே` என்பது சொல்ல வேண்டாவாயிற்று. `வெள்ளத்தில் இழிகின்ற அன்பர்கள், நின் கழற்புணை கொண்டு வான் ஏறினர்` என்க. `இழிகின்ற அன்பர்கள்` என்னோடு ஒருங்கிருந்த அடியார்கள் என்னும் பொருளது. இதனுள் வானைக் கரையாக உருவகம் செய்யாமையின், இது வியநிலை உருவகத்தின் பாற்படும். `இடர்க்கடல்` என்பது, `அவ்வெள்ளம்` என்னும் பொருட்டாய் நின்றது. ``மாதர்`` என்றது ஆகுபெயராய் அவர் மேல் உள்ள ஆசையைக் குறித்து அஃறிணையாய் நின்றமையின், தகர ஒற்று மிக்கது,
தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு.
(தி.8 திருச்சதகம். பா-27.) என முன்னர் வந்ததனை நோக்குக.

பண் :

பாடல் எண் : 5

சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன்
திறம்மறந்திங்
கிருள்புரி யாக்கையி லேகிடந் தெய்த்தனன்
மைத்தடங்கண்
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்கவிண்
ணோர்பெருமான்
அருள்புரி யாய்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! மாதர் வஞ்சனையால் சிக்கி உன்னை மறந்து இவ்வுடம்பில் கிடந்து இளைத்தேன். வெருட்சி கொள்ளும் மான் போன்ற கண்ணிமைகளையுடைய உமையம்மையின் பங்கனே! விண்ணோர் பெருமானே! இனியாயினும் அருள் செய்யவேண்டும்.

குறிப்புரை :

சுருள் புரி - சுருளைச் செய்யும். கூழை - கூந்தல். இருள் - அறியாமை; மயக்கம். ``பெருமான்``, விளி.

பண் :

பாடல் எண் : 6

மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்
திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்
தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்நாள் வணங்குவன்
வல்வினையேன்
ஆழியப் பாஉடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! மாதர் மத்திட்டுக் கடையச் சிதறி மிடாவில் பரவிச் சுழல்கின்ற தயிர்போலச் சுழன்று தளர்ந்தேன். இனி எக்காலம் வந்து உன் திருவடியை வணங்குவேன். நின் திருவடி வாழ்க. யாவரினும் மேலானவனே அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

`மாழைக் கண், மை பாவு கண்` என்க. மாழை - மா வடு. ``மைப் பாவிய`` என்னும் பகரமெய், விரித்தல். `கண்ணியரது ஆசை யாகிய மத்து` என்றபடி. ``வாழி``, அசை. ஆழி அப்பன் - ஆழ்ந் திருக்கின்ற இறைவன். `பெரியோன்` என்றபடி. `பெரியோனாதலின், அடைக்கலம் என்று வந்தேனைக் கைவிடமாட்டாய்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 7

மின்கணினார் நுடங்கும்இடையார் வெகுளிவலையில்
அகப்பட்டுப்
புன்கண னாய்ப் புரள்வேனைப் புரளாமற்
புகுந்தருளி
என்கணிலே அமுதூறித் தித்தித்தென்
பிழைக்கிரங்கும்
அங்கணனே உடையாய் அடியேன்உன்
அடைக்கலமே.

பொழிப்புரை :

இறைவனே! மாதர் வசத்தில் அகப்பட்டுத் துன்பப்படுகின்ற என்னைத் துன்பத்தை ஒழித்து ஆண்டருளியும் இடையறாது என் கண்ணிலே நின் திருவுருவைக் காட்டியருளியும் அருள் வழங்கும் இனியவனே! என் பிழைக்கு இரங்குகின்ற அருள் நோக்கம் உடையவனே! அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

இத் திருப்பாட்டு, ஒருவாற்றான் அமைந்த கொச்சகக் கலிப்பா.
மின்கண் - ஒளி வீசும் கண். ``வெகுளி`` என்றது ஊடலை. ``ஊடுதல் காமத்திற்கின்பம்`` (குறள் - 1330) ஆதலின், அஃது ஆடவரை அவரின் நீங்காது பிணிக்கும் வலையாயிற்று. புன்கண் - துன்பம். புரளுதல் - துடித்தல்; துன்புறுதல். ``அமுது`` என்றது முன்னர்க் கண்ட திருவுருவத்தின் தோற்றத்தை. இடையறாது நிற்றலை, ``ஊறுதல்`` என்றார். `இரங்கும்` என்றது, தெளிவின்கண் வந்த எதிர் காலவினை, ``இரங்கும் நமக்கம் பலக்கூத்தன்`` (தி.8 கோயில் மூத்த திருப்பதிகம் - பா.7.) என்றாற்போல.

பண் :

பாடல் எண் : 8

மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின்
மலரடிக்கே
கூவிடுவாய் கும்பிக் கேயிடு வாய்நின்
குறிப்பறியேன்
பாவிடை யாடுகுழல் போற் கரந்து
பரந்ததுள்ளம்
ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே.

பொழிப்புரை :

இறைவனே! மாவடு வகிர் போலும் கண்ணை யுடைய உமாதேவி பங்கனே! என்னை உன் திருவடிக்கீழ் சேர்த்துக் கொள்; அன்றேல் நரகுக்கு ஆளாக்கு; உன் திருவுளக்குறிப்பை நான் அறிந்திலேன்; பாவின் கண் ஆடுகின்ற குழல்போல என் மனம் அலைந்து நின்றது. அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

இதுவும், முதலடி சிறிதே சிதைந்த கட்டளைக் கலித்துறை.
``மலரடிக்கே கூவிடுவாய்; கும்பிக்கே இடுவாய்; என்ற விகற்பத் தொடர், `நீ என்னை எவ்வாறு செய்வதன்றி, நான் இன்னதே செய்க எனக் கட்டளை செய்ய உரியேனோ` என்றபடி. கூவுதல் - அழைத்தல். கும்பி - நரகம். குறிப்பு - திருவுள்ளம். பா - ஆடையாக்குதற்கண் நேரே நீண்டு கிடக்கும் இழைகளின் தொகுதி. குழல், அத் தொகுதியின் ஊடே குறுக்காக இழைகளைப் புகுத்தும் கருவி. இஃது ஒருபால் நில்லாது, ஆடை ஆக்குவோனது வலத்தினும் இடத்தினும் மாறி மாறி ஓடும். இஃது இங்ஙனம் ஓடினாலன்றி ஆடை தோன்றாதாகலின், ஆடை ஆக்குவோன் தன்னால் இயன்ற அளவில் இதனை விரைய ஓட்டுவான். அதனால், ஓரிடத்தில் நில்லாது விரைய ஓடும் இதனைத் தம் அலமரலுக்கு அடிகள் எடுத்துக்காட்டி இறைவன் பால் முறையிட்டருளினார். கரத்தலை, குழலுக்குப் பாவின் ஊடே கரந்து செல்லுதலாகவும், உள்ளத்திற்கு, மூவாசைகளின் மூழ்கிச் செல்லுதலாகவும் உரைக்க. பரத்தல் - சுழலல்.

பண் :

பாடல் எண் : 9

பிறிவறி யாஅன்பர் நின்அருட் பெய்கழல்
தாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை
வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னை
யேஅறியும்
அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! உன்னைப் பிரியாத அன்பர் உன் திருவடிப் பேற்றோடு முத்திச் செல்வத்தையும் அடைந்தார்கள். நான் உன்னைப் புகழும் வழியறியேன். உன்னையும் அறியேன். உன்னை அறியும் அறிவுமிலேன். ஆயினும் அடியேன் உன் அடைக்கலமே.

குறிப்புரை :

இதுவும், இறுதித் திருப்பாட்டும் கட்டளைக் கலித்துறைகளே.
`பிரிவு` என்பதில் றகரம் சிறுபான்மை உறழ்ந்து வரும். ``பிறிவறியா`` என்றது, `பிரிந்திருக்க மாட்டாத` எனப் பொருள் தந்தது. `அருள் தாள், பெய்கழல் தாள்` என்க. மறிவு - மீளுதல். ``வந்து`` என்ற தனை, ``கீழ்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. முன்னர், ``அன்பர்`` என்ற மையின், ``பெற்றார்`` என்றதன்பின், `யான்` என்பது கிளந் தெடுத்துக் கூறற்பாற்று. ``நின்னையே அறியும் அறிவு`` என்றது. `பிறி தொன்றை யும் அறியாது உன்னையே அறிந்து நிற்கும் அறிவு` என்றபடி. இதனையே கேட்டல் முதலியவற்றுள் நான்காவதாகிய, `நிட்டை` என்பர்.

பண் :

பாடல் எண் : 10

வழங்குகின் றாய்க்குன் அருளா ரமுதத்தை
வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கி னேன்வினை யேன்என்
விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந்
துய்யக்கொள்ளாய்
அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

பொழிப்புரை :

இறைவனே! உன் அருளாகிய அமிர்தத்தை நீ கொடுக்க, நான் அள்ளியுண்டு நல்லூழின்மையால் விக்கி வருந்து கின்றேன். ஆதலால் எனக்குத் தேன் அன்ன உன் கருணையாகிய தண்ணீரைக் கொடுத்து உய்யக் கொண்டருள வேண்டும். அடியேன் உன் அடைக்கலமே!.

குறிப்புரை :

``வழங்குகின்றாய்க்கு`` என்ற நான்கனுருபை ஏழனுரு பாகத் திரிக்க. அருள் ஆர் அமுதம் - அருளாகிய அரிய உணவு. இறை வனது திருவருளை அடிகள் வாரிவிழுங்கியது, துன்ப மிகுதியாலாம். துன்பம், உலகியலைத் துறக்கமாட்டாத நிலையால் உண்டாயது. அதனால், ஏனை அடியார்களைப்போல உடன் செல்லாது, பின்னர் இறைவனை அடையக் கருதிய பேருரிமை எண்ணத்தையே, வாரிக்கொண்டு விழுங்கியதாகவும், தம் எண்ணத்தின்படி அடையமாட்டாது நிற்றலையே, விக்கியதாகவும் அருளிச் செய்தார். எனவே, `தண்ணீர்` என்பது, இறைவன் மீளத் தோன்றுதலையே யாயிற்று ``வழங்குகின்றாய், விழுங்குகின்றேன்`` என்றவை, இறந்த காலத்தில் நிகழ்காலம். விதி - ஊழ். `தழங்கு நீர்` என இயையும். தழங்குதல் - ஒலித்தல். அருந்தேன் - கிடைத்தற்கரிய தேன்; என்பது பெறுதும். உணவு மிடற்றுக்கிடையில் விக்கப்பெற்றவன், அதுபோழ்து கிடைக்கும் நீரை நீராக நினையாது, அரிய தேனாகவே நினைப்பான் என்பது தோன்ற, `அருந்தேன் அன்ன தண்ணீர்` என்று அருளினார். உணவு மிடற்றில் விக்கி இறவாதபடி பருகத் தண்ணீர் தந்து காப் பாற்றுதல், உண்ண உணவு இட்டவனுக்குக் கடமை என்பார், ``தண்ணீர் பருகத் தந்து உய்யக்கொள்ளாய்`` என்று அருளிச் செய்தார். இஃது, `ஒட்டு` என்னும் அணிவகையின் பாற்பட அருளியதாம்.
சிற்பி